மறக்க இயலாத ஜூலை 11

Issues: International, Politics

Region: Tamil Nadu

Category: Favorites, Letters

122 ஆண்டுகளுக்கு முன்னர், பாட்டாளிகளின் உரிமைக் குரலை ஒடுக்க, சீறிப்பாய்ந்தன துப்பாக்கிக் குண்டுகள். தொழிலாளர்களின் உயிரற்ற உடல்கள் மண்ணில் சாய்ந்தன. நீதிக்குப் போராடிய நால்வரின் குரல்வளையை மரணக்கயிறு நெரித்தது. தொழிலாளர்களின் உரிமைச் சங்கநாதம் உலகெங்கும் கேட்கவும், உரிமை மலரவும், காரணமாயிற்று அடக்குமுறை கோரத்தாண்டவம் ஆடிய அந்த நாள். அதுவே மே தினம் ஆயிற்று. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சற்றுத் தொலைவில் உள்ள பல அடுக்குமாடிக் கட்டிடத்தை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தேன்.

ஆம், சிகாகோ நகரத்தின் மையப்பகுதி. கடிகார முட்கள் மாலை 6.00 மணியைக் கடந்து கொண்டு இருந்தன. ஆகாயத்தில் சிவப்புக்கோளமாக ஆதவன் பிரகாசித்தான். இருள்போர்வைக்குள் செல்வதற்கு இன்னும் நெடுநேரம் ஆகும். அவன் பகல் பிரயாணத்தை முடிக்க இன்னும் நீண்ட நேரம் ஆகும். மாலை 6.30. நெடிது படர்ந்து இருந்த செரட்டன் ஓட்டல் வாயிலில் இறங்கினேன். மனதில் ஒரு பரபரப்பு. அந்த ஓட்டலின் இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு சிறிய அரங்கம் என்றும் சொல்ல முடியாத ஒரு பெரிய அறையில்தான் அவரைப் பார்க்கப் போகிறேன். பாதுகாப்புச் சோதனையைக் கடந்து, குறிப்பிட்ட அறைவாயிலை நெருங்கும்வரையில் ஆங்காங்கு ஓரிரு கண்காணிக்கும் அதிகாரிகள் நின்றனர். அந்த அறைக்குள் அனுமதிக்கப்பட்டபோது மனமெல்லாம் பரவசம். இன்னும் சிறிது நேரத்தில் அகிலமெங்கும் ஈர்ப்பு அலைகளை ஏற்படுத்தி உள்ள பாரக் ஒபாமா வரப்போகிறார். எப்படியும் சந்தித்து விடலாம் என்று நினைத்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி.

இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று? அதுவே ஒரு ஆச்சர்யம். அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் நேரத்தில், அப்பேரறிஞரின் இதய வேட்கை அரங்கேறும் சூழல் உருவாகி விட்டதால் என்னுள் ஏற்பட்ட தாக்கம் பாரக் ஒபாமா அவர்களைக் குறித்து, சங்கொலியில் நான் தொடர் கடிதங்களாக எழுதிடக் காரணம் ஆயிற்று. இம்மடல்களுக்கு எதிர்பாராத வரவேற்பு பல முனைகளில் ஏற்பட்டது. நான் ஒபாமா குறித்து எழுதுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவரது பார்வைக்கே அனுப்ப வேண்டும் என்று பலரும் நேரிலும் தொலைபேசியிலும் மின் அஞ்சல் மூலமும் தெரிவித்தனர்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்ந்து எடுக்கப்படுவார் என்று நான் கூறியபோதெல்லாம், எனது அமெரிக்க நண்பர்கள் சிலர் அது நடக்காது என்றனர். ஆனால், அவர் தேர்வு பெற்றபின்னர், அமெரிக்காவுக்குச் சென்று அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அங்கு உள்ள நண்பர்களிடம் வினவியபோது, ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்றனர். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணியும், ஏன் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு விலைமதிப்பு அற்றது. குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர் மேற்கொள்ள வேண்டிய பணிகளும், பயணமும் ஏராளம்,ஏராளம். ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் திரளும் கூட்டங்களில்கூட ஒரு சில நிமிடங்களே உரையாற்றி, கையசைத்துச் செல்லவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றனர். நீங்கள் அமெரிக்காவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இம்முறையாவது வாருங்கள் என்று எனது மருமகன் ஜான் புஷ்பராஜ், மகள் கண்ணகி இருவரும் தொடர்ந்து அழைத்து வந்தனர். பிரியமான பேத்திகளைப் பார்க்க என் மனதிலும் ஆசை.

சென்னை மண்டல மாநாடு முடிந்தவுடன், அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்று, கடைசி நேரத்தில்தான் திட்டமிட்டேன். நமது பொருளாளர் உள்ளிட்ட முன்னணியினரிடம், மாநாட்டுக்கு முதல் நாள்தான் தெரிவித்தேன். 24 ஆம் தேதி மாலை, சிகாகோ சேர்ந்தேன். பாரக் ஒபாமா அவர்களின் அரசியல் பயணத்தில், ஆரம்பக் காலத்தில் இருந்து அவருக்கு உதவியாகப் பணி ஆற்றிய சில முக்கியமான இந்தியர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். சங்கொலி கடிதத் தொகுப்பை அவர்கள் பார்த்து வியந்தனர்; பாராட்டி மகிழ்ந்தனர். முதல் மூன்று அத்தியாயங்களை ஆங்கிலத்தில் மொழி ஆக்கமும் செய்து இருந்தேன். ஒபாமா குறித்து நான் எழுதிய நூலைப் பற்றிய தகவல்களை ஒபாமாவிடம் சேர்ப்பித்தனர். அவருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். ‘சந்திக்க வாய்ப்பு உண்டா?’ என்று கேட்டேன். ‘சாத்தியமே இல்லை’ என்றனர். அவர்கள் கூறுவது சரிதான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒபாமாவுக்கு முக்கியமானது என்பதை நானும் உணர்ந்து இருந்தேன்.

இந்நிலையில், ஜூலை ஒன்றாம் தேதிவாக்கில், நண்பர்கள் என்னிடம், ‘வருகிற ஜூலை 7 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று காலையில், நீங்கள் ஒபாமாவின் துணைவியார் மிச்செல் ஒபாமாவைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். விருப்பமா?’ என்று கேட்டார்கள். ‘நான் ஒபாமாவைப் பார்க்க விரும்புகிறேன். அவரது துணைவியாரையும் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், துணைவியாரை மட்டும் சந்திப்பது என்றால் நான் யோசித்துச் சொல்கிறேன்’ என்றேன். அதற்கு அந்த நண்பர்கள், ‘நீங்கள் முதலில் மிச்செல் ஒபாமாவைச் சந்தித்து, நீங்கள் எழுதிய புத்தகம் குறித்துப் பேசுங்கள். அதன்பின்னர் ஒபாமாவைச் சந்திக்க முடியுமா? என்று முயற்சிப்போம்’ என்றார்கள்.

என்ன செய்யலாம் என்று நான் சிந்தித்தேன். ஒருவேளை பாரக் ஒபாமாவைச் சந்திக்க முடியாமல், அவரது துணைவியாரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பினால், அது செய்தியானால், ‘பாரக் ஒபாமாவைச் சந்திக்க அமெரிக்கா வரை போனார். அந்தோ பரிதாபம்! வாய்ப்புக் கிடைக்காத நிலையில், அவரது துணைவியாரைச் சந்தித்துவிட்டு வருகிறார்’ என்பதோடு, இதுகுறித்துச் சற்று ஏளனங்களும் எழுமானால், எனக்கு ஒன்றும் இல்லை.ஆனால், கண்மணிகளே நீங்கள் வருந்த நேரிடுமே என்பதால், நான் அந்த நண்பர்களிடம், பாரக் ஒபாமாவைச் சந்திக்க முடிந்தால் பார்க்கிறேன். இல்லையானால், நவம்பர் தேர்தலுக்குப் பிறகு, அவர் அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமர்ந்ததற்குப் பின்னர், குடியரசுத்தலைவரையும், முதல் பெண்மணியையும், வெள்ளை மாளிகையில் சந்திக்கிறேன்’ என்றேன்.

இல்லினாய் மாநில ஜனநாயகக் கட்சியின் தலைவர்களிடம், எனது முயற்சியும், விருப்பமும் தெரிவிக்கப்பட்டது. அதுபற்றி அவர்களும் விவாதித்தனர். ஜூலை எட்டாம் தேதிவாக்கில் என்னிடம் சொன்னார்கள். ‘மிஸ்டர் வைகோ. நீங்கள் விரும்புவது நடந்தாலும் நடக்கும். ஜூலை 11 ஆம் தேதி, சிகாகோ நகரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு பாரக் ஒபாமா வருகிறார். அவர் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்குப் போட்டியிடப் போகிறேன் என்று 2007 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், இல்லினாய் மாநிலத்தின் தலைநகரான ஸ்பிரிங்ஃபீல்டு நகரத்தில் அறிவிப்புச் செய்தபின்னர், அவரது வெற்றிக்காக ஜனநாயகக் கட்சியில் பாடுபட்டவர்களுக்கு, அந்த இல்லினாய் மாநிலத்தில் நிதி திரட்டித் தந்தவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், ஆதரவாளர்கள் நடுவிலும் அன்று பேசப் போகிறார். இந்த நன்றிகூறும் நிகழ்ச்சியில் சுமார் 25 பேர் கலந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு, உங்களை அழைத்துச்சென்று, அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இம்மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் ஏறத்தாழ சம்மதித்து விட்டனர். எதற்கும் முதல் நாள் பத்தாம் தேதி அன்று உறுதிப்படுத்துகிறோம்’ என்றனர்.

பத்தாம் தேதி அன்று இரவு செய்தி வந்தது. ‘நாளை மாலை, ஆறரை மணிக்கெல்லாம் சிகாகோ செரட்டன் ஓட்டல் வரவேற்பு அரங்கத்துக்கு வாருங்கள்’ என்றனர். இதற்கு நடுவில், சங்கொலி மடல்களை இணையதளத்தில் இருந்து பிரதி எடுத்து, உயர்தரமான காகிதத்தில் அழகிய வண்ணத்தில் பதிப்பித்து, முகப்பு அட்டையில் ஆபிரகாம் லிங்கனும், பாரக் ஒபாமாவும் நின்று கொண்டு இருக்கும் படங்களைச் சித்தரித்து, முகப்பில் ‘ Yes We Can - Barack Obama ’ என்று அச்சிட்டு, சிறிய எழுத்துகளில் அதன் கீழே Vaiko என்று அச்சிட்டு இருந்தேன். இப்படி இரண்டு பிரதிகள்.

ஏழு மணி கடந்து விட்டது. ஏழு முப்பது ஆயிற்று. இல்லினாய் மாநில செனட்டர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வுபெற பாரக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட டேன் ஹைன்ஸ் என்பவரிடம் அந்த அறைக்கு உள்ளே நான் அறிமுகம் ஆனேன். என் கையில்இருந்த நூலின் முகப்பு அட்டையும், உள்ளே இருந்த படங்களும், அவரை மிகவும் கவர்ந்தன. அதை மிகவும் பாராட்டியவாறு என்னிடம் பேசினார். இரவு எட்டு மணி ஆயிற்று. இன்னமும் ஒபாமா வரவில்லை. நேரம் கடந்துகொண்டே இருப்பதால், ஒருவேளை இன்றைய நிகழ்ச்சியில் அவரிடம் நான் பேசுவதற்கே வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும் என்று நினைத்தேன். சரியாக 8.10 க்கு அந்த அறைக்கு உள்ளே, இல்லினாய் மாநில அரசுப் பொருளாளர் ஆன, அலெக்ஸி ஜெலோஸின் வந்தார். அனைவரும் அவரிடத்தில் மிகுந்த மதிப்புக் காட்டினர். அவரிடம் நான் அறிமுகம் ஆனபோது, என்னிடம் அவர் கூறிய வார்த்தைகள், எனக்குத் துhக்கிவாரிப் போட்டன. என் செவிகளையே நான் நம்ப முடியவில்லை. 'Mr.Vaiko ,I have heard much about you ,it seems you have written a very good book on Obama நான் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். நீங்கள் ஒபாமாவைப் பற்றி ஒரு மிகச்சிறந்த நூலை எழுதிஇருக்கிறீர்களாமே? என்றார். என்னுடைய அமெரிக்க நண்பர்கள், இவரிடம்தான் ஒபாமாவுடன் எனது சந்திப்புக்காகப் பெரிதும் முயன்று உள்ளனர் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.இப்போது, இந்த அறைக்கு உள்ளே மொத்தத்தில் 25 பேர் இருந்தனர். அதில் ஒருசிலர், ரகசிய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள், ஒபாமா வெற்றிக்காகப் பெரிதும் பாடுபட்ட முக்கியமானவர்கள். 8.29 ஆயிற்று. அந்த அறையின், பின்பக்கம் இருந்து, அதுவரை திரையிடப்பட்டு இருந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தார் பாரக் ஒபாமா.

‘நண்பர்களே, தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பேசுவதற்கு அதிக நேரம் இல்லை’ என்று கூறியவாறு, ஒவ்வொருவரிடமும் நெருங்கி கைகுலுக்கி, தோள் சேர்ந்து அணைத்துப் பேசி, நன்றி சொன்னவாறு வந்தார். அவருடைய நடை, உடை, பாவனை அனைத்தும் மிகவும் வசீகரித்தன. என்னை அழைத்துச் சென்ற நண்பர், சற்று முன்னர்தான் என்னிடம் கூறி இருந்தார். நீங்கள் அவரோடு கை குலுக்கலாம். பேச வாய்ப்பு இல்லை. வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று ஓரிரு நொடிகளில் சொல்லலாம்’ என்றார். ‘சரி’ என்றேன். ஆனால், என் மனதுக்கு உள்ளே ஒரு நம்பிக்கை. அரை நிமிடத்தில் நான் சொல்லும் வார்த்தைகள் ஒபாமாவை ஈர்க்கலாம். அதன்மூலம், அவரிடத்தில் மேலும் பேச, வாய்ப்புக் கிட்டலாம் என்ற நம்பிக்கை இருக்கவே செய்தது.

இதோ நெருங்கி விட்டார். நான் என் வலது காலை ஓரடி முன்வைத்து, வலது கையை நீட்டி, அவரது வலக் கரத்தைப் பற்றினேன். ‘செனட்டர் ஒபாமா அவர்களே, நான் வைகோ. மகாத்மா காந்தியின் மண்ணில் இருந்து, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்து வருகிறேன். உங்களைச் சந்திக்கும் இந்த வாய்ப்பினால், எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றேன். ‘எந்தப் பகுதியில் இருந்து?’ என்று ஒபாமா கேட்டார். ‘பழமையான நாகரிகத்தின் தொட்டில் பூமியான தமிழ்நாடு எனும் இந்தியாவின் தென்கோடி மாநிலத்தில் இருந்து’ என்று சொன்னேன்.

கையில் இருந்த புத்தகத்தை அவரிடம் காட்டினேன். முதல் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த சால்வை அணிந்த என்னுடய சிறிய படத்தைப் பார்த்துவிட்டு, ‘யார் இவர்?’ என்று பாரக் ஒபாமா கேட்டார். ‘அது நான்தான்’ என்று சொன்னேன். இந்தப் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறீர்கள்? என்று பாரக் ஒபாமா கேட்டார். ‘உங்களைப் பற்றித்தான் எழுதி இருக்கிறேன். நான் எழுதியதை இதில் தொகுத்து இருக்கிறேன். இனி, இது சிறந்த புத்தகமாக தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிட்டு வெளியிடப்பட இருக்கிறது. எந்தக் கொள்கைகளுக்காக துணிச்சலோடும், உறுதியோடும் நீங்கள் ஒரு மாணவனாக, சமூக அமைப்பாளராக, செனட் சபை உறுப்பினராகப் போராடினீர்களோ, அதை விவரித்து இருக்கிறேன். கொடிய அடக்குமுறைக்கும் துயரங்களுக்கும் கருப்பர்களான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஆளாக்கப்பட்டார்களோ, அதைச் சொல்லி இருக்கிறேன்’ என்றேன்.

‘டாம் மாமா குடில்’ எழுதிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அம்மையாரின் கனவுகள், ரோசா பார்க் அம்மையாரின் கனவுகள், ஆபிரகாம் லிங்கனின் கனவுகள், மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகள் அனைத்தும் நனவாகும் நாள்தான் நீங்கள் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்கும் நாள் ஆகும். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக நீங்கள் பொறுப்பு ஏற்றதும், அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மாற்றம் வரும் என்றும், உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு ஒரு புதிய விடியல் உதயமாகும் என்றும் நான் நம்புகிறேன். உங்களுடைய வசீகரமும், இயங்கும் வேகமும், காந்த சக்தியும், கண்டங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்களின் இதயங்களையும் கவர்ந்து உள்ளது. உங்களின் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் மகத்தான வெற்றி பெற அருள் பொழிய வேண்டி இயற்கைத்தாயை நான் இறைஞ்சுகிறன்’ என்றேன்.

அதற்கு பாரக் ஒபாமா, ‘வைகோ அவர்களே, உங்களுக்கு நன்றி’ என்றார். கையொப்பம் இட்டு Yes We Can என்று எழுதியிருந்தார். இன்னொரு பிரதியை அவரிடம் தந்தேன். ‘பிறகு புத்தகத்தில் ஒரு கையெழுத்துப் போடுங்கள்’ என்றேன். புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். சங்கொலியில் எழுதியதை அமெரிக்காவில் ஆர்ட் பேப்பரில் ஸ்கேன் செய்து, கலரில் படங்களைப் போட்டு, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததை உள்ளே வைத்து, ‘தலைப்பு ‘ஆம்; நம்மால் முடியும்’ என்று வைத்து, அதற்குக் கீழே ‘பாரக் ஒபாமா’ என்று போட்டுகீழே வைகோ என போட்டு புத்தகத்தை தயார் செய்து கொடுத்தேன். அவர் முதல் பக்கத்தைப் பார்த்தார். முதல் பக்கத்தில் ஆபிரகாம் லிங்கனும் பாரக் ஒபாமாவும் சமமாக இருப்பதாகப் போட்டு, நடுவில் வட்டத்தில் ஸ்டாம்ப் சைஸில் சால்வையைப் போட்டு நான் இருப்பதாக அருணகிரி வைத்துவிட்டார்.

இதைப் பார்த்த அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நான் கோட்சூட்டில்தானே அங்கு இருந்தேன். இது யார்? என்று கேட்டார். ‘அது நான்தான்’ என்றேன். நான் என் பேனாவைக் கொடுத்தேன். அது கிளாஸ் பேப்பர் என்பதால் பேனாவில் எழுத வரவில்லை. அது எனக்குத் தோணவில்லை. வாங்கியவுடன் திருப்பிக் கொடுத்தார். அவருடன் வந்த ஒருவரைப் பார்த்து, ‘மைக்கேல் மார்க்கர் பேனா எடு’ என்றார். வாங்கியவுடன் எவ்வளவு கவனமாகக் கேட்கிறார் என்றால்,how to spell Mr.Vaiko ? உங்களது பெயரை எப்படிச் சொல்கிறீர்கள் என்றார். நான் சொன்னேன்.
அதற்குப்பிறகு, இந்த அட்டையில் உங்களது பெயரைப் போட்டு இருக்கிறீர்களா? என்றார். ‘இருக்கிறது’ என்றவுடன் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார். அதையும் ஒருமுறைப் பார்த்து விட்டு என்ன எழுதினார் தெரியுமா? To Vaiko Yes We Can ‘வைகோவுக்கு என்னாலும் முடியும் உன்னாலும் முடியும் என்று பொருள். எப்படி அமைந்து இருக்கிறது பாருங்கள். அவரது கையெழுத்து அஜெந்தாஓவியம் போல இருக்கிறது. இந்த வார சங்கொலியில் போட்டு இருக்கிறேன்.

மேலும் ஒரு சில நிமிடங்கள் அங்கே இருந்தவர்களோடு கைகுலுக்கி நன்றி தெரிவித்துவிட்டு, அவருடன் இருந்தவரிடம் என்னைக் காட்டி, ‘கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள்’ என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்துக் கை அசைத்தவாறே அறையை விட்டு வெளியேறினார்.

அறையில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார். ‘நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த அறையில் இருந்த மொத்த பதினைந்து நிமிடங்களுள் மூன்றில் ஒரு பகுதி, ஐந்து நிமிடங்கள் உங்களோடுதான் பேசி இருக்கிறார்’ என்றார். அடுத்து இருந்த விசாலமான அரங்கத்துக்குச் சென்றோம். நாடெங்கும் மாற்றம் நிகழ்கிறது என்ற பேனரின் பின்னணியில், அந்தச் சிறிய மேடையில் பாரக் ஒபாமா வந்து நின்றார். திரண்டு இருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர். மொத்தத்தில் 15 நிமிடங்கள் பேசினார். 49 மாநிலங்களில் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும். குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதற்குப் பின்னர் அலாஸ்காவுக்குச் செல்கிறேன். மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் செல்லப்போகிறேன்’ என்றார். அவரது பேச்சும், அவரது ஒவ்வொரு அசைவும் அங்கே காந்த அலைகளை ஏற்படுத்தியது. மனமெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்தவற்றைத் தாயகத்துக்குச் செய்தி ஆக்கினேன்.

அவரைச் சந்திக்க எனக்குக் கிடைத்த நிமிடங்கள் பொன்னானவை. இதோ அவர் இஸ்ரேலுக்கும், ஈராக்குக்கும் பயணமாகப் போகிறார். லெபனான் நாட்டினரும், அயர்லாந்து நாட்டினரும், எங்கள் நாட்டுக்கு வாருங்கள். ஒரு அரை மணி நேரமாவது ஒதுக்குங்கள்’ என்று எவ்வளவோ வற்புறுத்திக்கேட்டும், ‘தனக்கு நேரம் இல்லை’ என்று மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். எப்படி என்னால் மறக்க முடியும் இந்த ஜூலை 11 ஆம் நாளை?

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்
வைகோ

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

«  
  »
S M T W T F S
 
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)