முல்லைப் பெரியாறு... மூழ்கும் ஆபத்து! ஆனந்த விகடன் பேட்டி .10.03.2010. நிருபர் ப . திருமாவேலன்.
Issues: Economy, Farmers, National, Rural
Region: Dindigul, Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Sivagangai, Theni, Tamil Nadu
Category: Headlines
முல்லைப் பெரியாறு... மூழ்கும் ஆபத்து!
வைகோவின் பார்வை இப்போது கேரளாவின் பக்கம்!
முல்லைப் பெரியாறு அணையை முன்வைத்து கேரள அரசு தமிழகத்துக்கு முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்து, முண்டாசு கட்டிக் கிளம்பியிருக்கிறார் வைகோ. மே 28-ம் தேதி கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளையும் மறித்து, மிகப் பெரிய முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். மொத்தம் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையப்போகிறதாம் இந்த மறியல்.
உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் ஆகிய நான்கு சதுரங்களுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து வைகோவிடம் வைத்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், தமிழகத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதை வெளிச்சம் போடுவதாக அமைந்திருந்தது.
''தென் பாண்டி மண்டலத்தையே தண்ணீர் இல்லாத வறண்ட தீவாக மாற்றும் மறைமுகத் திட்டத்தின் முக்கியமான அத்தியாயம்தான் முல்லைப் பெரியாறு விஷயத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. கேரள அரசாங்கத்தின் சதித் திட்டமானது நிறைவேறுமானால், முல்லைப் பெரியாறு அணைக்குப் பக்கத்தில் புதிய அணை கட்டப்போகிறோம் என்ற பெயரால் ஒரு லட்சம் டன் பாறைகள் உடைக்கப்படும். இது முல்லைப் பெரியாறு அணையையே உடைப்பதற்குச் சமம். இதனால், ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசன நிலத்தை மொத்தமாக இழக்க வேண்டிவரும். மதுரை நகரில் வாழும் 65 லட்சம் மக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் போகக்கூடிய கஷ்டம் வந்துவிடும். இதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையுடன்தான் இந்தப் பிரச்னையை எடுத்திருக்கிறோம்.''
''முல்லைப் பெரியாறு அணை பலவீனமான நிலையில் இருக்கிறது. அது எப்போது வேண்டுமாலும் உடையலாம் என்று சொல்கிறதே கேரளா?''
''இது பொய். பச்சைப் பொய். 30 ஆண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லப்படும் முழுப் பொய். முல்லைப் பெரியாறு அணை பலவீனமான நிலையில் இல்லை. இந்த நூற்றாண்டின் அதிசய மாக பென்னி குக் கட்டியது இது. அந்த அணை பலவீனமாக இருப்பதாக கேரளப் பத்திரிகை ஒன்று எழுதியதை ஆதாரமாகவைத்து தமிழக, கேரள முதலமைச்சர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அப்போது அணை முன்னிலும் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு வலுவாக்கப் பட்டது.
மராமத்துப் பணிகளுக்காகத் தற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. அந்தப் பணிகள் முடிந்த பின்னால், நம் மாநிலத்தின் உரிமையான 152 அடி தண்ணீர் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கேரள அரசு, அருகில் இருந்த பேபி அணையைப் பலப்படுத்தும் கடைசிக்கட்டப் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தது. வழக்கு உச்ச நீதிமன்றத் துக்குப் போனது. அவர்கள் மிட்டல் தலைமையில் ஒரு குழுவையும் பிரார் தலைமையில் இன்னொரு குழுவையும் அமைத்தார்கள். இரண்டு குழுக் களுமே, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக அறிக்கை தந்தது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத் தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான தீர்ப்பைத்தான் தந்தது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது, கேரள அரசாங்கம் எழுப்பிய ஆட்சேபனைகளை ஏற்க முடியாது, தண்ணீர் மட்டத்தை முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது அனைத்துமே நமக்குச் சாதகமானதாகத்தான் இருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை மதிக்காமல் தனக்குச் சாதகமான சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டு கேரள அரசாங்கம் ஆட்டம் போடுகிறது.''
''நீங்கள் சுட்டிக்காட்டுபவை, உச்ச நீதிமன்றத்தின் பழைய நிலைப்பாடு. ஆனால், இன்று அரசியல் சாசன பெஞ்ச், அணை பலமானதாக இருக்கிறதா என்று பார்க்க ஐவர் குழுவை அமைத்திருக்கிறதே. அந்த முடிவு வரை காத்திருக்க வேண்டியதுதானே என்கிறார்களே?''
''பருவத்தே பயிர் செய் என்பதுதான் பழமொழி. முடிவெடுக்க முடியாத மத்திய அரசாங்கமும், போராடிப் பெற லாயக்கற்ற மாநில அரசாங்கமும் எப்போது தண்ணீர் தருகிறதோ, அப்போது விவசாயம் பார்த்தால் பயிர்கள் முளைக்குமா? அப்போது தண்ணீர் குடித்தால் தாகம் தணியுமா?
இந்தப் பிரச்னையின் அவசர அவசியத்தை மன்மோகன் சிங் உணராமல் இருந்தால் பரவாயில்லை. கருணாநிதியும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனைக்கு உரியது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உரிமையானது தமிழகத்தின் வசம் இருக்கிறது. ஆனால், முல்லைப் பெரியாறு உள்பட 22 அணைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், தேவைப்பட்டால் உடைத்துச் செயல் இழக்கச் செய்யவும் கேரள அரசாங்கத்துக்கு உரிமை உண்டு என்று அவர்கள் போட்ட சட்டம் சொல்கிறது. இதை எதிர்த்து அன்றைய அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றம் போனது. அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்வராக வந்தார். கேரள முதல்வரும் அரசியல் தலைவர்களும் படையெடுத்து பொய்களைப் பிரதமரிடம் அடுக்கினார்கள். மத்திய அதிகாரத்தில் பாத்தியதை உள்ள கருணாநிதி, தன் தரப்பு வாதங்களைப் பிரதமரிடம் முறையாக வைக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்திலாவது நம்முடைய உரிமையை நிலைநாட்ட முயற்சித்தாரா என்றால், அதுவும் இல்லை. கேரள அரசாங்கம் இந்த மூன்று ஆண்டுகளில் 33 முறை வாய்தா வாங்கி விவகாரத்தை முடிக்க முடியாமல் இழுத்தடித்தது. எத்தனை முறை வாய்தா வாங்குவீர்கள் என்று கூறித் தடுக்கவில்லை. தீர்ப்பு வரப்போவது தெரிந்ததும் இந்தக் கோர்ட் விசாரிக்கக் கூடாது என்றார்கள். இப்போது அரசியல் சாசன பெஞ்ச், ஐந்து பேர்கொண்ட விசாரணை என்று ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர கருணாநிதி காரணமாகிவிட்டார்.''
''நீதிமன்றத்தில் பராசரன் தலைமையிலான குழு பலத்த வாதங்களை வைத்ததாகத் தான் தகவல்கள் வந்தன. ஆனால், அதையும் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களே?''
''கேரளம் புதிய அணை கட்டுவதற்கு ஆட்சேபனை உண்டா என்று நீதிபதிகள் கேட்கிறார்கள். அதற்கு எடுத்த எடுப்பில் எதிர்ப்புக் காட்டியிருக்க வேண்டிய தமிழகத் தரப்பு, 'புதிய அணை கட்டுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதன் கட்டுப்பாட்டு நிர்வாகத்தை எங்களுக்குத் தர வேண்டும்' என்று கேட்டிருக்கிறார். இது தமிழகத்துக்குச் செய்கிற நன்மையா, துரோகமா?
கேரள அரசு புதிய அணை கட்ட முயல்வதே 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமை உள்ள முல்லைப் பெரியாறு அணையைச் சேதப்படுத்துவதற்காகத்தான். நம்முடைய அணையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்கு அப்பால் அவர்கள் புதிய அணை கட்டினால், நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், முல்லைப் பெரியாறுக்குப் பக்கத்தில்தான் அவர்கள் கட்டுவார்கள்.
புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை இன்றைய மத்திய அரசாங்கம் கேரளாவுக்குக் கொடுத்துவிட்டது. அப்படி அனுமதி தரவில்லை என்று கருணாநிதி முதலில் மறுத்தார். அனுமதி கொடுத்த அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அதை ஒப்புக்கொண்ட பிறகு, அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் பேசப்போவதாகச் சொன்னார். யார் மிரட்டியதோ, கேரள அரசாங்கத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் என்று மாற்றினார். கடைசியில், அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை. யாரை ஏமாற்ற இந்த நாடகங்கள்? வாக்களித்த மக்களுக்கு உண்மையான நிலையை மறைப்பதன் மூலம் தன்னுடைய மாநிலத்துக்குத்தானே துரோகம் செய்கிறார் கருணாநிதி.''
''உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் ஐவர் குழுவில் இடம்பெற மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்து உள்ளாரே?''
''கேரள அரசாங்கத்தின் அநீதியான முயற்சிகளை எதிர்க்காமல், ஓரவஞ்சனையாகச் செயல்படும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் செயல்பட்டு, இன்றையப் பின்னடைவுகளுக்குக் காரணமாகிவிட்டதால், பொதுமக்களின் பழிக்கு ஆளாகாமல் தடுக்கும் தந்திரமாக ஐவர் குழுவில் பங்கேற்க மாட்டோம் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இது கண்துடைப்பு நடவடிக்கையே!''
''கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டதா?''
''புதிய அணை கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்துள்ளார்கள். முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தைவிட, அது பள்ளத்தில் இருக்கிறது. எனவே, அங்கே இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரவே முடியாது. ஆய்வு என்கிற பெயரால் குழிகள் வெட்டியும், மரங்களை வெட்டியும் வேலைகளை ஆரம்பித்துவிட்டது கேரள அரசு. அணையை உடைப்போம் என்று அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த மக்களையும் அனுமதிக்கிறது அரசு. எனவேதான், உதவாது இனி தாமதம் என்று நாங்கள் திரண்டு இருக்கிறோம். இது அரசியல் பிரச்னை அல்ல; தமிழனின் வாழ்வுப் பிரச்னை. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னை. வாக்குகள் வாங்கிய காங்கிரசும் தி.மு.க-வும் இதன் உண்மை நிலையை முடிந்த அளவுக்கு மறைக்கவே பார்க்கின்றன. பிரச்னையை மறைப்பதன் மூலமாக அந்தப் பிரச்னை இன்னும் அதிகமாகும் என்பதை கருணாநிதி உணரவில்லை. நான் போகும் இடங்களில் சந்திக்கும் மக்கள் தங்கள் கவலைகளைத் தெரிவிக்கிறார் கள். தென் மாவட்டத்து விவசாயிகள் முகம் இன்னும் இருள ஆரம்பித்திருக்கிறது. அந்தக் கவலையை வெளிச்சத்துக்குக் காட்டுவதற்குத்தான் கேரளாவுக்குச் செல்லும் பாதைகளை மறிக்கப்போகிறோம்.
'நீங்கள் ஏன் இவ்வளவு அணு ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள்? காந்தி பிறந்த தேசத்துக்கு இது அழகா?' என்று கேட்டபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய், 'வரப்போகிற ஆபத்தைத் தடுக்கிற சக்தி இவை' என்று சொன்னார். அதைப்போலத்தான் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டினால், தமிழகத்துக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் சக்தியாக இந்த முற்றுகை மறியல் அமையும். தென் தமிழகத்தைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!''
நன்றி : ஆனந்த விகடன். 10.03.2010.

