முல்லைப்பெரியாறு அணை: தமிழக அரசுப் பணியாளர்களை விரட்டிய கேரளம்! வைகோ கண்டனம்!
Issues: Economy, Farmers, National, Rural
Region: Dindigul, Madurai - Urban, Madurai - Rural, Ramanathapuram, Sivagangai, Theni, Tamil Nadu
Category: Headlines, Press Releases
முல்லைப்பெரியாறு அணை: தமிழக அரசுப் பணியாளர்களை விரட்டிய கேரளம்! வைகோ கண்டனம்!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழகப் பொதுப் பணித்துறை ஊழியர்களை, கேரள அரசின் காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்து, அடித்துவிரட்டி உள்ளனர். இது மிகவும் அக்கிரமமான செயலாகும்.முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்தநாளில் இருந்தே, கேரள அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு அராஜகத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
முல்லைப் பெரியாறு அணை, பேபி அணைப் பராமரிப்பு, தமிழக அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது ஆகும். இருப்பினும் அவ்வப்பொழுது, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதும், வேலை செய்யவிடாமல் தடுப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது முல்லைப் பெரியாறு அணையிலும் பேபி அணையிலும் பெயிண்ட் அடிப்பது, மதகுகளைச் சரிபார்ப்பது ஆகிய வேலைகளில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில், வேலை செய்த ஊழியர்களைத்தான் கேரளக் காவல் துறையினர் அடித்து விரட்டி உள்ளனர்.
ஏறத்தாழ 2006 ஆம் ஆண்டு அக்டோபரிலேயே மத்திய அரசின் உளவு நிறுவனம், முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு, தமிழக அரசு தரும் ஊதியத்தில் கேரள போலீசார் ஈடுபடுத்தப்படுவது மாற்றப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனுப்பிய பரிந்துரையின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
காலம் கடந்து அண்மையில்தான் இதுகுறித்து முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று அறிவிப்பு அட்டைகளை ஏந்தியவாறு கேரளத்தினர் அடிக்கடி ஊர்வலம் நடத்துவதற்கும், கேரள அரசும் காவல்துறையும் அனுமதிப்பது மிகவும் விபரீதமான போக்கு ஆகும். தற்போது தமிழக ஊழியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கேரள அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளச்செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவிடாமல் எச்சரிக்கையும் செய்வதுடன், கேரள காவல்துறையினரின் இந்த கண்டனத்திற்கு உரிய செயல்களை மத்திய அரசின் கவனத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.

