பாராட்டு மழையில் முதல்வர்! வாடி வதங்கும் மக்கள்!! - வைகோ .

Issues: Economy, Politics, Rural

Region: Tirunelveli - Rural, Tamil Nadu

Category: Speeches

Date: 
Fri, 05/03/2010

பாராட்டு மழையில் முதல்வர்!
வாடி வதங்கும் மக்கள்!!

நெல்லை மாவட்டம் - சுரண்டையில் 01.03.2010 அன்று நடைபெற்ற
கழகப் பொதுக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

 

ஒரு நெடிய இடைவெளிக்குப் பிறகு, அரசியல் விழிப்பு உணர்வுமிக்க சுரண்டை மாநகரில் உரை ஆற்றுகின்றேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்து இருக்கின்ற மாவட்டச் செயலாளர் சரவணன், ஒன்றியச் செயலாளர் இராமகிருஷ்ணன், உறுதுணையாக இருக்கின்ற ஏ.டி.நடராசன், துரைமுருகன், மாரியப்பன் ஆகியோருக்கும், அவர்களோடு இரவுபகலாகப் பாடுபட்டு, வீதிகள் தோறும் தோரணங்கள், வழியெங்கும் காணும் இடமெல்லாம் கழகக் கொடிகள், குழல் விளக்குகள், திரும்பும் திசையெல்லாம் இருவண்ணப் பதாகைகள், அலங்கார வளைவுகள் என இத்தனைக்கும் பாடுபட்ட கழகத்தின் கண்மணிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.


இந்த இயக்கத்தின் வரலாற்றில், இது ஒரு முக்கியமான கால கட்டம். இன்றுமாலை மூன்று மணிக்கு புன்னையாபுரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகளின் நிறைவாக, நள்ளிரவு வேளையில் சுரண்டையில் அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் நிற்கிறேன்.ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். சுந்தரபாண்டியத்திலும் இதேபோன்ற பிரமாண்டமான கூட்டம். சுரண்டையில் நீங்கள் காத்து இருக்கிறீர்கள் என்பதால், அங்கெல்லாம் நீண்டநேரம் என்னால் உரை ஆற்ற முடியவில்லை. விரைந்து ஓடி வந்தேன்.


இது காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. இன்று ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் நடத்துகின்ற எந்த விழாக்களுக்கும், இலட்சக்கணக்கில் செலவழித்து, ஆள்களை அழைத்து வருகிறார்கள். ஆனால், எங்கே இருக்கிறது ம.தி.மு.க. என்று கேட்ட கலைஞர் கருணாநிதிக்குப் பதில் கூறும் வகையில் நீங்கள் அலைகடலென இங்கே திரண்டு ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மறுமலர்ச்சிக் கொடிப் பயணம் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது. திராவிட இயக்கம் நீர்த்துப் போகாது; நீர்த்துப் போக விட மாட்டோம். இது தியாகத்தால் உருவான அண்ணாவின் இயக்கத்தின் ஒரு பரிமாணம். காலத்தின் கட்டாயம், இயற்கையின் அருட்கொடை.


என்னோடு எண்ணற்ற முறைகள் சிறையில் இருந்த தளபதி செல்லத்துரை, தளபதி என்றால் உண்மையான தளபதி, களத்துக்குச் செல்லுகின்ற, பெரியாரின் பாசறையில் வளர்ந்த, அண்ணாவின் பாடி வீட்டில் உலவிய செல்லத்துரை இன்றைக்கு உயிரோடு இல்லை. அவரைப்போல, எத்தனையோ பேர் எண்ணற்ற முறை என்னோடு சிறைக்கு வந்தவர்கள், இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். எந்தக் கொள்கைகளை அண்ணா முழங்கினாரோ, அதை நாங்கள் முழங்குகிறோம். எந்தக் கொள்கைகளை அவர் வகுத்தாரோ, அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். இந்தக் கட்சியைப் பதவிக்காக நாங்கள் தொடங்கவில்லை. நாங்கள்தான் உண்மையான திராவிட முன்னேற்றக் கழகம். வரலாறு அதை உறுதி செய்யும். எங்களுக்கு நீங்கள் வாழ்த்துச் சொல்லுங்கள்.


1991 தேர்தல் களம். இந்தத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக இன்றைய தலைமைக் கழகச் செயலாளர் ஆருயிர்த்தம்பி வழக்கறிஞர் குருநாதன் அவர்கள் போட்டியிட்டார். மே 21 சற்றும் எதிர்பாராத திருபெரும்பு
தூர் சம்பவம். தமிழகம் ரணகளமானது. திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இங்கே, அண்ணா சிலை உடைக்கப்பட்டது. கே.வி.கே. சாமி மன்றம் உடைத்து எறியப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமே, இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம். சொல்லடியும், கல்லடியும் பட்டு வளர்ந்த இயக்கம்.


தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டு, கை, கால்கள் முறிக்கப்பட்ட வேளையில், யார் வந்தார்கள்? இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள், ஆலவட்டம் சுற்றுபவர்கள் யாரும் வரவில்லை. வைகோ வந்தான். ஊர்ஊராக வந்தேன், வீடுவீடாகச் சென்றேன். அப்படி நான் புறப்படுகின்றபோது, டி.ஐ.ஜி. என்னிடம் சொன்னார். நீங்கள் போகக்கூடாது, உங்களைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றார். ஆர்.டி.ஓ.வும் அதையே சொன்னார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு உங்களைத்தான் குறி வைக்கிறார்கள். நீங்கள் போனால், பெரிய கலவரம் வரும்’ என்று சொன்னார்கள்.


நெல்லை சந்திப்பில் நடைபெற்ற ஒரு உண்ணாவிரதத்தில், என் தலையை எடுக்க வேண்டும் என்று பேசினார்கள். அதற்குப் பிறகும் நான் வந்தேன். ‘என் இயக்கத்தின் தொண்டன் அடிபடுகிறான். அவன் வீடு சூறையாடப்படுகிறது. தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். கட்சித் தொண்டனின் கால்களை முறித்து விட்டார்கள். நான் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்களை நான் சந்திப்பேன். ஆறுதல் சொல்லுவேன், தைரியம் கொடுப்பேன். ஆபத்து வந்தால் தடுக்கின்ற வேலையில் என் உயிரையும் கொடுப்பேன்’ என்று அவர்களிடம் சொல்லி விட்டு வந்தேன்.


இதையெல்லாம் மேடைகளில் பேசியது இல்லை. ஆனால், உங்களுக்கு இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். திராவிட இயக்கத்தின் பழைய தோழர்களுக்காகச் சொல்லுகிறேன். மூன்று நாள்கள், இரவு பகலாக, நெல்லை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தேன். எத்தனையோ பேர், ஆயுதங்களுடன் எங்களைச் சுற்றி வளைக்கப் பார்த்தார்கள். அதையெல்லாம் தாண்டிச் சென்று, தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினேன். இதற்கெல்லாம் பரிசாகத்தான், என் மீது கொலைகாரன் என்று பழி சுமத்தினார், கலைஞர் கருணாநிதி. கட்சியில் இருந்து
தூக்கி எறிந்தார். அதைக் கண்டித்து, ஐந்து தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த நெருப்பிலே பிறந்த இயக்கம்தான் மறுமலர்ச்சி தி.மு.க.


இந்த ஊரில், என் நெஞ்சை விட்டு அகலாத அண்ணன் பி.கே. சாமி நடத்திய எத்தனையோ கூட்டங்களில் பேசி இருக்கிறேன். கழகம் அறிவித்த போராட்டக் களங்களில் பங்கு ஏற்று சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்த வேளைகளில், சொற்பொழிவாளர்களை வார்ப்பிக்கின்ற பணிகளைச் செய்தேன். அப்படி வார்ப்பிக்கப்பட்டவர்களுள் ஒருவர்தான், இன்றைக்கு நாடு அறிந்த பேச்சாளராக உலவுகின்ற ஆருயிர்த்தம்பி நாஞ்சில் சம்பத். சிறையில் இருக்கும்போது அவரிடம் சொன்னேன். நீங்கள் கழக மேடைகளில் பேச வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன், அண்ணன் சாமி அவர்களை அழைத்து நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யச் சென்னேன். புத்தொளி சம்பத் என்ற பெயரில், அவர் இங்கேதான் முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழக மேடையில் சொற்பொழிவாளராக அறிமுகம் ஆனார்.


அன்றைக்குத் தி.மு.க. சொற்பொழிவாளர்கள், இயக்கத்தின் தியாக வரலாறுகளை எடுத்துச் சொல்வார்கள். இன்றைக்கு அந்தப் பேச்சைக் கேட்கிறீர்களா? தி.மு.க. வரலாறை யாராவது சொல்லுகிறார்களா? உழைத்தவன், பாடுபட்டவன், கண்ணீர் சிந்தியவர்களைப் பற்றி யாருக்காவது தெரியுமா? எனவேதான், சில சம்பவங்களை எடுத்துச் சொன்னேன்.


இன்றைக்குத் தமிழகத்தில் ஜனநாயகத்துக்குப் பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஜனநாயகப் பயிரைக் காப்பதற்காக, நெருக்கடி நிலை காலத்தில் இரண்டு சிறைகளில் ஓராண்டு சிறைவாசம் இருந்தவன் நான். அந்த நெருக்கடி நிலை காலத்தில் கூட ஏற்படாத ஆபத்து, இன்றைக்குத் தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டு இருக்கிறது. இது, எதேச்சதிகாரத்தைவிடக் கொடுமையானது. அடக்குமுறைகளைவிடத் தீங்கானது. ஜனநாயகத்தின் மென்னியைப் பணம் என்கின்ற பேராயுதம் பாய்ந்து சிதைத்துக் கொண்டு இருக்கிறது.


இதோ, பென்னாகரத்தில் இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. அங்கே கொள்கை மோதப் போகிறதா? கருத்துகள் மோதப் போகிறதா? இல்லை. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள்? இரண்டாயிரமா? மூவாயிரமா? அல்லது ஐயாயிரமா? இதுவா ஜனநாயகம்? இப்படி ஆகிவிட்டதே தமிழகத்தின் நிலைமை.


ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலைமலை, காய்மறைவாக எங்காவது ஒரு சில தவறுகள் நடந்து இருக்கலாம். ஆனால், இப்படிப் பகிரங்கமாக ஏலம்போட்டு வாக்காளர்களை விலைக்கு வாங்குகிற அயோக்கியத்தனமான அரசியல் தமிழகத்தின் சரித்திரத்திலேயே கிடையாது.


இதன் விளைவு எங்கே கொண்டு போய் நிறுத்தும்? இது உழைத்துத் திரட்டப்பட்ட பணமா? ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்ட பணம். திருமங்கலத்தில் தொடங்கி, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தமிழகம் முழுவதும் பொதுத் தேர்தலுக்கு இணையாக பணம் செலவிடப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஊழலில் புதிய வரலாறையே படைத்து விட்டார்கள். 1200 கோடி ரூபாய்க்கு மேல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி செலவிட்டு இருக்கிறது. நான் இதற்கெல்லாம் பொதுமக்களைக் குறை சொல்ல மாட்டேன். நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன்.


இல்லாமையால், வறுமையில் தவிக்கின்ற மக்கள், பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுக்குப் பணம் இன்றி, கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், புத்தகம் வாங்க முடியாமல் தவிக்கின்ற மக்கள், அடுத்த மாதம் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டு இருப்பவர்கள், பிள்ளைகளுக்கு நல்ல சட்டை எடுத்துக் கொடுக்க முடியவில்லையே என்று வேதனைப்படுபவர்கள், கடனைத் தீர்க்க முடியாமல், கடன்காரனின் மிரட்டலுக்குப் பயந்து கிடக்கின்ற மக்களிடம் கொண்டு போய், இருபது ஆயிரம், முப்பது ஆயிரம் என்று கொடுக்கும்போது வீசியா எறிவார்கள்?


அந்தப் பணத்தை, எங்கிருந்து திரட்டினார்கள்? சுரண்டை வீதியிலே வந்து நன்கொடை கேட்டார்களா? இல்லை. அரசுத் திட்டங்களிலே கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். எண்ணுவதற்கு நேரம் இல்லாமல், மொத்த மொத்தமாக, எடை போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஐந்து ஆயிரத்தைக் கொடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு உங்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறான்.


ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்றா விட்டால், பண ஆதிக்கத்தை முறியடிக் காவிட்டால், அவர்கள் வீசுகின்ற பணத்துக்கு நாங்கள் விலைபோக மாட்டோம் என்று நீங்கள் முடிவு எடுக்கா விட்டால், எதிர்காலம் பாழாகிவிடும். மளிகைச் சாமான்களின் விலை ஏற்றத்தைத் தாங்க முடியவில்லை என்று வழிநெடுகிலும் தாய்மார்கள் குமுறுகிறார்கள்.

பணநாயகத்தை நீங்கள் தோற்கடிக்காவிட்டால், எதிர்காலத்தில் இளைஞர்கள் இப்படியே இருக்க மாட்டார்கள்.


அதனால்தான், மாவோயி
ஸ்டுகளின் துப்பாக்கிகள், சத்தீஷ்கரிலே மிரட்டிக் கொண்டு இருக்கிறது. ஒரிசாவில், பீகாரில் உயிர்களைச் சூறையாடுகிறது, வங்கத்தைக் கதி கலங்க வைக்கிறது. அது இங்கும் வந்து விடக் கூடும்.


தமிழகத்தில் ஜனநாயகம் என்பது ஒரு ஏமாற்று வேலை. ஜனநாயகத்தை உண்மையிலேயே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். இல்லையேல், வேறு கேடுகள் சூழ்ந்துவிடும்.

நம்பிக்கை இழந்தால், விரக்தி அடைந்தால், இளைஞர்கள் வேறு வழிகளைத் தேடுவார்கள்.


இன்றைக்கு ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் பதவிகள். இது என்ன மன்னர் ஆட்சிக் காலமா? மன்னர்கள்கூட நேர்மையாக, நெறியோடு ஆண்டார்கள். ஆனால்,இந்தக் குடும்பம், தங்களுக்கு உள்ளேயே ஆறு அதிகார மையங்களை வகுத்துக் கொண்டார்கள். அவர்கள்தான் எல்லாம். கட்சி பாழாகிக் கொண்டு இருக்கிறது. நாள்தோறும் விழா எடுத்துக் கொண்டாடுகிறார் முதல் அமைச்சர்? பாராட்டு விழா இல்லாத நாள் உண்டா? எத்தனையோ சாதனையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், இவருக்கு நாள்தோறும் விழாக்கள், விருதுகள், பாராட்டுகள். கணக்கே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அரைகுறை நடனக் காட்சிகளைப் பார்க்க ஏழு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.


மின்வெட்டால் தமிழகத்தின் கிராமங்கள் இருண்டு கிடக்கின்றன. இவருக்கு மின்னொளியிலே விழா. கட்டுபடியாகாத விவசாயத்தில் நொறுங்கிக் கிடக்கிறான் விவசாயி. மக்கள் வாடி வதங்குகிறபோது, இவர் பாராட்டு மழையில் நனைகிறார். அண்ணாவை மறந்து விட்டார். அவரது
நூற்றாண்டு விழாவையே இருட்டடிப்புச் செய்து விட்டார். உரிய முறையில் கொண்டாடவில்லை. கடைசியாக ஒரு விழாவை நடத்தினார். அதையும், இவரது பாராட்டு விழாவாக மாற்றிக்கொண்டு, தன்னுடைய உருவம் பொறித்த பதக்கத்தைத் தானே சூடிக் கொண்டார்.


ஆனால், முதல் அமைச்சர் அவர்களே, நீங்கள் எத்தனை பட்டங்களை வாங்கினாலும், ஒரேயொரு பட்டத்தை அழிக்கவே முடியாது. அதுதான், ‘தமிழ் இனத் துரோகி’ என்ற பட்டம். வார்த்தை கடுமையாக இருக்கிறதா? இதைவிட வேறு வார்த்தை எனக்குத் தெரியவில்லை.


நீங்கள் செய்த துரோகம்தான், ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்தது. தமிழகம் கொதித்து எழுந்தது. 17 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். உலகில் எங்கும் நடக்காத கொடுமையைத் தமிழ் இனம் சந்தித்தது. பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் கொல்லப்பட்டார்கள். இரத்தம் ஆறாக ஓடியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இத்தனைக் கொடுமைகளுக்கும் உடந்தையாக இந்தியா, சிங்களவர்களுக்குத் துணைபோனது. அந்த ஆட்சியில் பங்கு ஏற்று, பதவி சுகம் அனுபவித்தவர்தான் கலைஞர் கருணாநிதி. இந்தியா டுடே செய்தியாளர், நீங்கள் அழுத்தம் கொடுத்து இருந்தால், இந்தக் கொடுமையைத் தடுத்து இருக்கலாமே என்று கேட்டபோது, கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தால், என் ஆட்சிக்கு ஆபத்து வந்து இருக்கும்’ என்று சொன்னார். இது இந்தியா டுடே ஏட்டில் வெளிவந்து இருக்கிறது.

ஆபத்து வந்தால் என்ன? ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தது போதாதா? இப்படிப்பட்ட பாவத்தைச் செய்த கருணாநிதிக்கு மன்னிப்பே கிடையாது.


தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருவோம். ஊர் ஊராக இந்தத் துரோகத்தை எடுத்துச் சொல்லுவோம். நிலைமை மாறும். மக்கள் சக்தி திரளுகிறது. உடுமலைப் பேட்டை உண்ணாநிலை அறப்போரில் பத்து ஆயிரம் பேர் பங்கு ஏற்றார்கள். கம்பம் மறியல் அறப்போரில் 15 ஆயிரம் பேர் திரண்டார்கள். மாபெரும் எழுச்சியோடு மக்களைச் சந்திக்கிறோம். இந்த இயக்கத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. என்னுடைய இயக்கத் தோழர்கள் ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் போன்றவர்கள். உறுதியானவர்கள்.

இவர்களைக் கொண்டு சாதிக்க முடியும். சாதித்துக் காட்டுவோம். அறம் வெல்லும்.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)