ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! இந்திய அரசே துணை போகாதே! வைகோ எச்சரிக்கை

Issues: Human Rights, International, Law & Order, National, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 17/03/2017

 

 

 

 

.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்!

இந்திய அரசே துணை போகாதே!

வைகோ எச்சரிக்கை

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின் 34 ஆவது அமர்வு பிப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை தற்போது நடைபெற்று வருகிறது. மனித குலத்தின் மனசாட்சியை நடுங்க வைக்கும் கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் சிங்கள இனவாத அரசு 50களில் தொடங்கி, 2009 மே திங்கள் 3ஆவது வாரத்தில் உச்சகட்டத்துக்குக் கொண்டுபோய் முடித்தது.

நாஜிகளின் கொடுமையை நேரில் அனுபவித்த ஜெர்மனி அரசு 16 நாடுகளின் துணையுடன், 2009 மே மூன்றாவது வாரத்திலேயே மனித உரிமைக் கவுன்சிலை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தது. இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டியது. ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் கியூபா அரசும், இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் கொலைகார ராஜபக்சேயின் சிங்கள அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய கொடுமை ஐ.நா. வரலாற்றிலேயே இல்லாத அக்கிரமம் ஆகும். மேலும் மேலும் தமிழர்களின் இரத்தம் வடியும் இதயத்தில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அரசுகள் நெருப்பைக் கொட்டியது. உலகெங்கும் தமிழர்கள் கொதித்து எழுந்து அறப்போர் நடத்தினர். இலண்டனுக்குள் நுழைந்த ராஜபக்சேவை அடித்து விரட்டினர்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாஞ்சிக்கு வந்த கொலைகார ராஜபக்சேவை எதிர்த்து, என்னுடைய தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் 1200 பேர் சாஞ்சிக்கே சென்று அறப்போர் நடத்தி கைதானோம்.

ஈழத்தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளியான காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து மனித உரிமைக் கவுன்சிலில் துரோகம் செய்தது. 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் மாணவர்கள் நீதிகேட்டு அறப்போர் நடத்தினர்.

2012 இல் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் கொலைகார சிங்கள அரசு தன்னைத்தானே விசாரிக்கட்டும் என்ற அநீதியான தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சேர்ந்து முன்மொழிந்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு உலகெங்கிலும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழ் இளைஞர்களும் தெரிவித்தபோதிலும், 2013 ஆம் ஆண்டிலும் அகம்பாவத்தோடு அதே நாடுகள், அதே தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்து நிறைவேற்றியது.

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே சீனாவின் பக்கம் முழுமையாகச் சென்றதால் அவரை மிரட்டுவதற்காக இருபக்கமும் போர்க்குற்ற விசாரணை என்று கூறி, மரண பூமியில் துடித்த தமிழர்களையும் குற்றவாளிகளாக்கி 2014 இல் மேற்சொன்ன நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி 2015 இல் மனித உரிமைக் கவுன்சிலில் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் ராஜபக்சே அரசு மாறி, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற்ற மைத்திரி பால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் வந்தவுடன் அந்த விசாரணை அறிக்கையை ஆறுமாத காலத்துக்குத் தள்ளி வைத்தது.

பின்னர் 2015 செப்டம்பரில் மீண்டும் கூடிய அமர்வில் அமெரிக்காவும், இலங்கையும் இணைந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அதன்படி போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் மற்றும் வழக்கு நடத்துனர்கள் கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு, இலங்கை அரசு ஏற்றுக்கொண்டபோதும் அடுத்த இரண்டு நாட்களிலேயே இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் நல்லிணக்க ஆணைக்குழு தலைவர் சந்திரிகா குமாரதுங்காவும் வெளிநாட்டு நீதிபதிகள் எவரையும் இலங்கைக்குள் நுழைய விடமாட்டோம் என்று திமிரோடு அறிவித்தனர்.

இந்நிலையில், தற்போதைய கூட்டத் தொடரில் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மீதான இறுதி அறிக்கையை மனித உரிமைக் கவுன்சில் வெளியிடும் என்று நீதிக்கு ஏங்கும் தமிழர்கள் நினைத்த நேரத்தில், அவர்கள் தலையில் இடியைச் செலுத்துவது போல் அமெரிக்கா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் மிகவும் அநீதியான தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கின்றன. அதில் இலங்கை அரசுக்கு 2019 வரை மேலும் கால நீட்டிப்பு கொடுப்பது என்றும், ஏற்கனவே 2015 தீர்மானத்தில் உள்ள பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத் தரணிகள், அங்கீகாரம் அளிக்கப்பட்ட வழக்குத் தொடருனர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோர் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டு இருந்ததை இந்த புதிய வரைவுத் தீர்மானத்தில் இலங்கை அரசின் சம்மதத்துடன் என்ற ஒரு வாசகத்தை சேர்த்துள்ளார்கள். இதன் மூலம் இலங்கை அரசு சம்மதம் சொன்னால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்று இனப்படுகொலையை முற்றிலும் மூடி மறைத்து, ஈழத்தமிழர்களுக்கான நீதியை ஆயிரம் அடிக்குக் கீழே குழிதோண்டிப் புதைக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

இந்த அக்கிரமத்தைச் செய்ய முனைந்தவர்களை ஹிட்லரின் கூட்டாளிகள், முசோலினியின் கூட்டாளிகள், இடிஅமீனின் கூட்டாளிகள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

.நா.வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழுவின் 190 பக்க அறிக்கை சிங்கள அரசு செய்த தமிழ் இனப்படுகொலையை ஆணித்தரமான ஆதாரங்களோடும், சாட்சியங்களோடும் வெளியிட்டது. இலங்கை இராணுவ வீரர்கள் போர்க்குற்றமே செய்யவில்லை என்று தற்போது இலங்கை ஒரு பொய்யான ஆவணத்தைத் தயாரித்துள்ளது.

ஈழத்தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிங்கள இராணுவம் அங்கே நிலைகொண்டுவிட்டது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் சமர்ப்பிக்க உள்ள அறிக்கையின் முன்மாதிரி அறிக்கையை இந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அல்ராத் உசேன் வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கை பிப்ரவரி 10 ஆம் தேதியே இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அதிபர் சிறிசேனா மனித உரிமை ஆணையரின் அறிக்கை கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே அதனை நிராகரித்து அனுப்பிவிட்டேன்என்று பேசியிருக்கிறார்.

அதேபோல இம்மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை சட்டவல்லுநர்கள் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த சோதனையான பின்னணியில் இலங்கைக்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கொடுக்கும் தீர்மானம் ஐ.நா. சபையில் தாக்கலாகி இருக்கிறது. இதனை வரும் 22 ஆம் தேதி ஓட்டெடுப்புக்கு விட்டு நிறைவேற்றிட இலங்கை அரசு தீவிரமாக முனைந்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டால் ஈழத் தமிழ் இனப்படுகொலையை எந்தத் தடயமும் இல்லாமல் சிங்கள அரசு அழித்துவிடும்.

இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கு மாறாக இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்தால், அந்தத் துரோகத்தை தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் எவருமே மன்னிக்க மாட்டார்கள்.

முன்னைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத் தமிழர் படுகொலையின் கூட்டுக் குற்றவாளி ஆகும். இன்றைய நரேந்திர மோடியின் மத்திய அரசு இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமைக் கவுன்சிலில் வாக்களித்தால் அந்த துரோகத்தையும் வரலாறு மன்னிக்காது; தமிழ் இனம் மன்னிக்காது என எச்சரிக்கிறேன்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதே கருத்துகள் அடங்கிய கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன்.

இன்று உலகத்தில் தமிழனுக்கு நீதியும் இல்லை; நாதியும் இல்லை. ஆனால், காலம் மாறும்.

தமிழ் ஈழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் மீது ஆணை! உயிர்க்கொடை ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகள் மீது ஆணை! சிங்கள இராணுவத்தால் கொடூரக் கொலைக்கு ஆளான இசைப்பிரியாக்கள் மீது ஆணை! ஆயுதம் ஏந்தாத போதும் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் இரத்தத்தின் மீது ஆணையிட்டு நீதியை ஒருநாள் நிலைநாட்டுவோம்! என சூளுரைக்கிறேன்.

தாயகம்                                                வைகோ
சென்னை - 8                                      பொதுச்செயலாளர்
17.03.2017                                      மறுமலர்ச்சி தி.மு..

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)