இருதயம் உறைந்தது !

Issues: Human Rights, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Favorites, Letters, Headlines

Date: 
Fri, 22/05/2009

இருதயம் உறைந்தது !

தமிழ் இனத்தைக் காரிருள் சூழ்ந்துவிட்டது. இந்த இருள் எப்போது விலகும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆனால், என்றேனும் ஓர் நாள், இந்த அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வருவோம்.

அதுதான் வரலாற்றின் பாடம்; இதுவரை புலனான இயற்கையின் நியதி!

கடந்துபோன பல்லாயிரம் ஆண்டுகளில், மனித குலத்தையே திகைக்கச் செய்த மாவீரர்கள், இப்புவியின் பல பகுதிகளில் தோன்றினர். கற்பனை செய்ய முடியாத வீரசாகசங்களை நிகழ்த்தினர். உயிரால் மாய்ந்தாலும், உடலால் மறைந்தாலும், மரணத்தை வென்ற புகழால், உலக வரலாற்றில், மனித மனங்களில், ஏடுகளில் நிலைத்து வாழ்கின்றனர்.

மே 18 ஆம் நாள் முற்பகலில் வெளியான செய்தி, தமிழர்களின் தலையில் பேரிடியெனத் தாக்கியது. தமிழ்த்தாயின் தவப்புதல்வன், தமிழ்த் தேசிய இனத்தின் ஒளி வீசும் அணையா விளக்கு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இணையற்ற தலைவர், நான் உயிரினும் மேலாகப் போற்றிடும் மேதகு பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டமாத்திரத்தில், இருதயம் அதிர்ச்சியில் உறைந்தது. என் மனதுக்குள் நான் கட்டி எழுப்பிய உலகம் சுக்கல்சுக்கலாய் நொறுங்கியது. பெருந் துன்பம் தாக்கும்போது, கண்களில் நீர் பொங்குவது இல்லை. ஏனெனில், அதுவும் துயரத்தால் உறைந்து விடுகிறது.

பதறித் தவித்த சகோதரர்கள், நீண்ட தொலைவில், தூர தேசங்களில் இருந்து, தொலைபேசியில் கதறியவாறு பேசினர். 17 ஆம் தேதி நடு யாமத்தில், அப்படிப் பேசிய ஒரு சகோதரன் தெரிவித்ததில், இரவு முழுவதும் நான் துன்பத்தில் துடித்தேன். ‘‘புலிப்படைத் தளபதிகள், முன்னணி வீரர்களுடன் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, பிரபாகரன் உட்பட அனைவருமே உடல் கருகி மடிந்தார்கள்; எதிரியின் தோட்டா தன் மேனியில் பட்டுச் சாவதை அம்மாவீரன் விரும்பவில்லை என்றும், மடிந்தபிறகு தன்னுடைய உடல், பகைவர் களின் கைகளில் சிக்கக்கூடாது என்றும், சாம்பல் துகளாகத் தாயக மண்ணில் தான் கலந்திட வேண்டும் என்றும் முடிவு எடுத்து, தங்கள் உயிர்களை முடித்துக் கொண்டனர்’’ என்றார்.

இந்தச் செய்தியால் உள்ளமும் உடலும் நடுங்கிய எனக்கு ஆறுதலாக அடுத்துக் கிடைத்த ஒரு தகவலில், அப்படி ஏதும் நடக்கவில்லை; பாதுகாப்பாக உள்ளனர் என்ற தகவல் கேட்டு, என் பதைபதைப்பு அடங்கியது. பிற்பகலில், ஆறுதல் அளித்த செய்திகளைத் தொடர்ந்து, பொழுதுசாயும் வேளையில், விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தகவல் தொடர்பாளரான செல்வராசா பத்மநாதன், ‘விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்று, லண்டனில் உள்ள ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சிக்குத் தந்த செவ்வியில் அறிவித்ததை அறிந்து, நம்பிக்கை துளிர்த்தது.

முன்னிரவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு ஏற்றேன். ‘தமிழ் இனத்தின் ஒரேயொரு நம்பிக்கைச்சுவாசம் அடங்கவில்லை; தமிழர் மானம் காக்கும் ஒளிச்சுடர் அணையவில்லை’ என அறிவித்தோம்.

19 ஆம் தேதி காலை விமானத்தில் கோவை சென்றேன். ஈழத்தமிழர்களுக்குத் தற்போது நேர்ந்து உள்ள பேரழிவுக்கு முழுமுதல் காரணமான இந்திய நடுவண் அரசு அள்ளித் தந்த ஆயுதங்கள், தரைவழி, வான்வழி, கடல் வழி இராணுவத் தாக்குதல்களுக்கு, அனைத்து முனைகளிலும் திட்டமிட்டுச் செய்திட்ட உதவி என, அந்தத் தீவின் மண்ணின் மைந்தர்களைக் கொன்று குவிக்கச் செய்திட்ட வஞ்சகத்தையும், துரோகத்தையும் எண்ணி, தன்மானத் தமிழர்களின் இதயம் எரிமலையாக ஆகிக்கொண்டு இருந்த வேளையில், மேலும் தளவாடங்களையும், ஆயுதங் களையும் இலங்கைக்கு அனுப்ப, தமிழ்நாட்டின் வீதிகளில் இராணுவ டிரக்குகள் சென்றதைத் தடுக்க முனைந்த கழகக் கண்மணிகளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் அடைக்கப்பட்டு இருந்த கோவை மத்திய சிறைக்குச் சென்றேன்.

சகோதரர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்தபின்னர், மாலையில் ஈழத்தில் களம் அமைக்க விடுதலைப்புலிகளுக்கு ஆண்டுகள் பலவாகத் தோள் கொடுத்து வரும் சகோதரர் கொளத்தூர் மணி என்னைச் சந்தித்தபோது, நீண்ட நேரம் உரையாடினோம். அப்போதுதான், புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும், காட்சியும், தமிழர்களின் நெஞ்சைப் பிளந்தன. அங்கமெல்லாம் பதறிய நான், தொலைக் காட்சியில், ‘இதுதான் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற சடலம்’ என்று காண்பிக்கப்பட்ட காட்சியைப் பார்த்தேன். கண்டமாத்திரத்திலேயே, என் மனதில், இது ஒரு ஏமாற்றுவேலை எனப்பட்டது. அம்மாவீரனின் உடல் ஆகிருதிக்கும், கிடத்தப்பட்டு இருந்த சடலத்தின் உடல் பருமனுக்கும், வேற்றுமை தெரிந்தது.

வேனில் தப்பி ஓடும்போது அவர் சுடப்பட்டு இறந்ததாக முதல்நாள் சொன்ன சிங்கள இராணுவம், இப்போது தண்ணீருக்கு உள்ளே இருந்து இச்சடலம் எடுக்கப்பட் டது எனக் கூறுகிறது.. இராணுவம் காண்பிக்கும் இந்தச் சடலத்தின் முகத்தோற்றம், சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவரது இளமைத்தோற்றம் ஆகும்.
கண்கள் திறந்தவாறு பளிச்சிடுவது என் ஐயத்தை மேலும் உறுதிப்படுத்தியது. அவரது தலையை மட்டும் இராணுவத்தினர் அசைப்பதும் நம்பும்படியாக இல்லை. மரபு அணுச் சோதனை நிகழ்த்தப்பட்டு விட்டதாக, இலங்கை இராணுவம் கூறுவதை, ஏற்க இயலாது என, இத்துறையின் தலைசிறந்த நிபுணரான சந்திரசேகரனே தெளிவுபடுத்தி விட்டார். குறைந்தது நான்கு நாள்களா வது ஆய்வுக்குத் தேவை என்றும், இந்த ஆய்வுக்கு உள்ளாகும் மனிதரின் உடலில் இருந்து ஏற்கனவே வேருடன் பிடுங்கப்பட்ட மயிர், உடம்பில் உள்ள இரத்தம், எலும்பில் உள்ள மஜ்ஜை முன்பே சோதிக்கப் பட்டு இருந்தால் தற்போது அதில் ஒப்புமை காணலாம்; அல்லது, அந்த மனிதருடைய தாய், தந்தை, பிள்ளைகள் உடம்பில் இருந்து முன்பு மேற்கூறிய ஏதேனும் ஒன்று கிடைக்குமாயின், அதைக்கொண்டு ஒப்புமை காணலாம்’ என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

பன்னாட்டு நிதி ஆணையத்திடம் இருந்து பெரும் நிதியைப் பெறத் துடிக்கும் சிங்கள அரசு, தங்கள் நாட்டில் இப்போது போர் முடிந்து விட்டது, பிரச்சினை ஏதும் இல்லை என்று நம்ப வைப்பதற்காகவே, இப்படி ஒரு மாயத்தோற்றத்தை, ஏமாற்று வேலையைச் செய்து இருக்கக்கூடும் என்ற கருத்தும் உருவாகி உள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம், களச்சாவுகளை மறைப்பது இல்லை. உயிர் நீத்த மாவீரர்களின் மரணத்தை முறைப் படி அறிவித்து, புகழ் அஞ்சலி செலுத்துவர். எனவே, உலகமகா வீரனான பிரபாகரன் அவர்கள் வீரமரணத் தைத் தழுவி இருந்தால், அதை அகிலத்துக்கு அறிவிக் கத்தானே செய்வர்? கோடானுகோடித் தமிழர்கள், கண்ணீர் சிந்த, கதறிப்புலம்ப, நெஞ்சில் பற்றி எரியும் வேதனை நெருப்பின் மீது சத்தியம் செய்து, அம்மாவீரனின் கனவுகளை நனவாக்கச் சூளுரைக்கும் கடமை நிகழும் அன்றோ?

20 ஆம் தேதி காலை ஏடுகள் வெளியிட்ட படங்களும், செய்திகளும், மீண்டும் மனதில் பெரும் கவலையை, கலக்கத்தை மூட்டின. இப்படியும், அப்படியும் நடந்து இருக்குமோ? ஐயோ, அதைக் கற்பனை செய்து பார்க்கக் கூட இதயம் துணியவில்லையே? இடைவிடாது, வெளி நாடுகளில் உள்ள தமிழ் ஈழச் சகோதரர்களிடம் என் கவலைகளைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களுள் பலரும், என் போன்ற மனநிலையிலேயே உள்ளனர்.

இதற்கு நடுவில், மனிதகுலம் என்றும் மன்னிக்க முடியாத ஒரு மாபாதகச் செயலை, சிங்கள அரசும்,
இராணுவமும் செய்து உள்ளது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் ஒரு அசாதாரணமான அறிவிப்பைச் செய்தார். அதில் அவர் கூறியதாவது:

‘‘உலகளாவிய பெரும் பிரச்சினைகளில் நாம் கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கையில், மிகவும் கவலை அளிக்கக்கூடிய துயரமான பிரச்சினையைக் குறிப்பிடுகிறேன். இலங்கைத்தீவில் தமிழர்கள் கொல்லப் படுகிறார்கள். தற்போது அங்கே நடக்கும் மனித உரிமை மீறல்கள், ஒரு மனிதப் பேரழிவாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். இலங்கை அரசு இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும்.’’ என்றார்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், தங்களுடைய ஆயுதங்களை, அமெரிக்க, பிரிட்டன் அரசு அதிகாரி களின் முன்னிலையில் ஒப்படைக்கத் தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும், ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவும் அந்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாங்கள் சிங்கள இராணுவத்திடம் சரண் அடைய மாட்டோம் என்றும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில், பெருந்துயரமான முடிவு நேரும் என்றும், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் அறிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள், தங்களின் துப்பாக்கிகளின் சத்தத்தை நிறுத்திக்கொண்டோம் என்றும், உலக நாடுகள் தலையிட்டு இருதரப்புப் போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய இறுதி வேண்டுகோள் விடுத்தனர். நார்வே உள்ளிட்ட சில நாடுகள் தலையிட் டன. ஏற்கனவே, முன்னர் நடந்த போரில், கைது செய்யப்பட்ட சிங்கள இராணுவத்தினர் ஏழு பேரை முதலில் விடுவிக்குமாறு, சிங்கள இராணுவத்தின் தரப்பில் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலிகள், இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு சிங்கள இராணுவத்தினரையும் விடுதலை செய்து, பத்திரமாகப் போய்ச் சேர அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர், ‘சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் முன்னிலையில், சிங்கள இராணுவத் தளபதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் வரலாம்’ என இராணுவத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நடேசன், புலித்தேவன், ரமேஷ், பால்தாஸ் ஆகியோர், வெள்ளைக்கொடிகள் பொருத்தப் பட்ட ஆம்புலன்ஸ் வேனில் சென்றனர். அருகில் வந்தபோது, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிங்கள இராணுவத்தினர், வேனில் இருந்து இறங்கிய புலித்தேவன், ரமேஷ், பால்தாஸ் ஆகியோரை, இயந்திரத் துப்பாக்கிகளால், சரமாரியான குண்டுகளைச் செலுத்தி, சுட்டுக் கொன்றனர். நடேசன் அவர்களை மட்டும் கைது செய்து இழுத்துக்கொண்டு போய், கொடூரமாகச் சித்திரவதை செய்து, அதன்பிறகு சுட்டுக்கொன்றனர்.

உலகில் இதுவரை நடைபெற்ற எந்த யுத்தத்திலும், வெள்ளைக்கொடி பிடித்து சமாதானம் பேச வந்தவர் களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது இல்லை. ஆனால், இந்த மாபாதகச் செயலை, சிங்கள இராணுவம் செய்து உள்ளது. ஐ.நா. மன்றமும், ஜெனீவா விதி முறைகளும் வகுத்து உள்ள நெறிகளுக்கு நேர் எதிரான அராஜகத்தை சிங்கள இராணுவம் செய்து உள்ளது.

இப்படி நடத்தப்பட்ட ஏராளமான கொடூரக் கொலைக ளுக்குக் காரணமான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ப்பட்டாக வேண்டும். அவன் செய்த கொடுமைகளுக்கு, தமிழ் இனத்தைக் கொன்று குவித்த பாவங்களுக்கு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கைத்தீவில், வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து தனி அரசு அமைத்து, பழந்தமிழர் நாகரிகத்தின் பூந்தோட்டமாக ஆக்கி, ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள், தங்கள் காலனி வேட்டைக்காக அந்தப் புண்ணிய பூமியில் கால் ஊன்றிய காலங்களில், காக்கை வன்னியன் என்ற துரோகி, மாமன்னன் பண்டார வன்னியனின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தான். அத்தீவில், நூறு ஆண்டு களுக்கு மேல் ஆட்சி புரிந்த பிரித்தானியம், 1948 ஆகஸ்ட் 4 இல் தீவை விட்டு வெளியேறியபோது, சிங்களர்களின் கைகளில் ஆட்சியை வழங்கிவிட்டனர். அன்றுமுதல், ஈழத்தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகள் ஆகினர்.

உரிமைகளைக் கொஞ்சம்கொஞ்சமாக இழந்து, நாயினும் கேவலமாக நடத்தப்பட்டு நலிவு அடைந்தபோது, தமிழ்த்தலைவர்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தினர். துப்பாக்கிச்சூடும், படுகொலைகளுமே சிங்களர்கள் தந்த பரிசுகள் ஆயின.

இந்நிலையில்தான், வல்வெட்டித்துறை எனும், ஈழத்துக் கடற்கரைக் கிராமத்தில், வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பிரபாகரன். இளம்வயதில், அந்தப்பிள்ளைக்கு அதிர்ச்சி தரும் அனுபவங்கள் நேர்ந்தன. சிங்களக் காடையர் களால் கொல்லப்பட்ட கோயில் குருக்களின் மனைவி யின் கதறல், கொதிக்கும் தாரில் தூக்கி வீசப்பட்ட தமிழ்க் குழந்தைகள் மடிந்த கோரம் இவற்றைக் கண்டு அதிர்ந்த அந்தப் பிஞ்சு நெஞ்சில், ஏன் இப்படி? எதனால் இந்தக் கொடுமை? தமிழர்கள் ஏன் திருப்பி அடிக்கவில்லை? என எழுந்த கேள்விகள் விஸ்வருபம் எடுத்தன.

இதிகாசங்கள், போர்ச் சரிதங்கள், மாவீரர்களின் வரலாறுகளுமே அவரை ஈர்த்தன. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறை ஊன்றிப் படித்தார். அவரது நெஞ்சங் கவர்ந்த தலைவர் ஆனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவரது உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டிய பெயர்தான் மாவீரன் பகத்சிங். நேதாஜியின் படத்தைத் தன் மேஜை டிராயரிலும், கைப்பையிலும் எந்த நேரமும் வைத்துக்கொண்டு இருந்தார். படிப்பில் நாட்டம் இல்லை. தமிழர் தாயகத்தை, விடுதலை பெற்ற நாடாக அமைக்கச் சபதம் ஏற்றார்..

தமிழ் மாணவர் பேரவையில் இடம் பெற்றார். அந்த அமைப்பில், அனைவரிலும் வயதில் சிறியவராக இருந்த தால், ‘தம்பி’ என்று அழைத்தனர். காலப்போக்கில், எப்படி ‘அண்ணா’ என்ற பெயர், கோடானுகோடித் தமிழர்கள் பூசிக்கும் பெயராக ஆயிற்றோ, அதுபோலவே, ‘தம்பி’ என்ற சொல், இலட்சக்கணக்கான இளைஞர்களை, இளநங்கைகளை, மரணத்தைத் துச்சமாக எதிர்கொண்டு ஆயுதம் ஏந்தச் செய்யவும், கோடானுகோடித் தமிழ் மக்களின் மனதில் நம்பிக்கைப் பேரொளியாகவும் ஒளிரத் தொடங்கியது.

1972 இல், ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற அமைப்பை நிறுவினார். 1976 மே 5 ஆம் நாள், ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தைத் தோற்றுவித்தார். ‘புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்’ எனப் பிரகடனம் செய்தார். சோழ மாமன்னர்கள் ஏந்திய வெற்றிக்கொடியின் புலிச்சின்னத்தையே, இயக்கத்தின் முத்திரைச் சின்னமாக ஆக்கினார். தன் புனைப்பெயரையும், ‘கரிகாலன்’ என்றார். பழந்தமிழ் மன்னர்கள், தெற்கு ஆசிய கடல் பகுதியில் கொண்டு இருந்த கப்பல் படையைப் போல், தனி ஈழ அரசு அமைத்து, வலிமையான கப்பல் படையை நிறுவும் திட்டம், அவரது கனவுகளுள் ஒன்று ஆகும்.

உலகில் எந்தப் புரட்சி இயக்கத்திலும் இல்லாத ஒழுக்கக் கட்டுப்பாடுகளை, தனது அமைப்பின் அடிப்படையாக வகுத்தார். வரலாற்றில் நான் அறிந்தமட்டிலும், எந்தத் தனி மனித பலவீனமும், ஒழுக்கச்சிதைவும் இல்லாத மாவீரனாக, வெளிநாடுகளின் உதவி இன்றியே ஆயுதப் போராட்டம் நடத்தும் புரட்சிப்படையை அமைத்து, சாதனைகள் நிகழ்த்திய ஒருவர் உண்டு என்றால், அது பிரபாகரன் மட்டும்தான்.

எழுபதுகளின் இறுதியில், பிரபாகரன் அவர்களை முதன்முதலாக சென்னையில் நான் சந்தித்தேன். அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் பாச அரவணைப்பில், மதுரை மாநகரில் தம்பி பிரபாகரன் அவர்கள் இருந்த நாள்களில், பலமுறை சந்தித்தேன். இனம்புரியாத அன்பும், மரியாதையும், ஈடற்ற பாசமும் அவர்மீது என் நெஞ்சில் படர்ந்தன.

1983 ஜூலை 25 இல், ஈழத்தில் இனக்கலவரம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு ஆளாயினர். வெளிக்கடைச் சிறையில், தமிழர்களின் இரத்த வெள்ளம். ஜூலை 30,31 ஆகிய நாள்களில், இராமநாதபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட மாநாட்டில், கொதிக்கும் நெஞ்சுடன் நான் உரை ஆற்றியபோது, ‘பிரபாகரா, தமிழ்த்தாயின் தங்க மகனே, வா. தாயின் மடியாம் எங்கள் தமிழகத்துக்கு வா. உன் காயங்களில் நாங்கள் முத்தம் இடுவோம். எங்கள் கண்ணீரால் குளிப்பாட்டுவோம்’ என்று நான் குறிப்பிட்டேன்.

1983 ஆகஸ்ட் 16 ஆம் நாள் அன்று, இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள், ‘இலங்கையில் நடப்பது தமிழ் இனப் படுகொலை’ என்று அறிவித்தார்.

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு இந்திய அரசு உதவத் தொடங்கியது. விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளி அமைப்புகளுக்கு, இந்தியாவில் ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஏவுகணைகளை இயக்குவது உள்ளிட்ட, பல பயிற்சிகள் தரப்பட்டன.

தமிழ் இனத்தின் சாபக்கேடாக நடந்த சம்பவம்தான், இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் மறைவு ஆகும். 86 ஆம் ஆண்டில், இலங்கையின் ஜெயவர்த்தனா அரசின் இராணுவம், போர்முனைகளில் புலிகளிடம் அடிவாங்கி ஓடியது. நெல்லியடியில் சிங்கள இராணுவ முகாம் கரும்புலி மில்லரின் தாக்குதலில் தூள்தூளானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சிங்கள அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. 87 ஏப்ரல் 16 இல், போபர்ஸ் கனரக பீரங்கிகளை, இந்திய சுவீடன் நாட்டிடம் இருந்து வாங்கியதில், கோடிக்கணக்கான இலஞ்சப்பணம், இந்திய அரசின் பெரும்புள்ளிக்குக் கைமாறியது என்ற தகவலை, சுவீடன் தேசிய வானொலி அறிவித்தது. பரிசுத்தவானாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்த இராஜீவ் காந்தியின் மதிப்பு தரைமட்டம் ஆயிற்று.

நாடாளுமன்றத்தின் எதிர்ப்பை, அவரால் எதிர்கொள்ள இயலவில்லை.

இந்தப் பிரச்சினையில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப வழி தெரியாமல் திண்டாடிய ராஜீவ் காந்தியின் நிலையை அறிந்த ஜெயவர்த்தனாவின் நரி வேலையால், நயவஞ்சக வலையில் இந்திய அரசு சிக்கிற்று.

‘இனி, இந்திய மண்ணில் கால் எடுத்து வைக்க மாட்டேன்’ என்று பெங்களூரு சார்க் மாநாட்டுக்குப் பிறகு உறுதி எடுத்துச் சென்று இருந்த பிரபாகரன் அவர்களை, யாழ்ப்பாணத்துக்கே சென்று சந்தித்து, ஈழத்தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ள இந்தியப் பிரதமர் தயாராக இருப்பதாகவும், உதவிகள் செய்யக் காத்து இருப்பதாகவும் சொல்லி ஏமாற்றி அழைத்து வந்தனர்.

1987 ஜூலை 26 இல் புது தில்லிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான், சதித்திட்டம் அரங்கு ஏறியது. அசோகா ஓட்டலின் 518 ஆம் எண் அறையில், பிரபாகரன் சிறை வைக்கப்பட்டார். அந்த ஓட்டலின் ஐந்தாவது தளத்துக்கு உள்ளே, எவரும் நுழைந்திட கருப்புப் பூனைப் படையினர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான், நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது தடுக்கப்பட்டு அங்கே உள்ள நிலைமையை அறிந்து, அனைத்துப் பத்திரிகைகளுக்கும் உண்மையைச் சொன்னேன்.

ஜூலை 27 ஆம் தேதி காலை ஒன்பதரை மணி அளவில், பிரபாகரன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நீங்கள் என்னைச் சந்திக்க முடியாமல் போனதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து, சென்னைக்குத் தொடர்புகொண்டு, உங்கள் தொலைபேசி எண்ணைப் பெற்றுப் பேச முயன்றேன். உளவுத்துறை அதிகாரிகள் தடுத்தனர். கடுமையாக வாதிட்டபின்னரே, இந்த வாய்ப்பைப் பெற்றேன் என்று கூறியவர், 33 நிமிடங்கள் என்னிடம் பேசியதை, என் நாள்குறிப்பில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

விடுதலைப்புலிகளின் விருப்பத்துக்கு எதிராக, அவர்களின் கருத்துகளை அறிந்து கொள்ளாமலேயே தயாரித்த ஒப்பந்த நகலை, அன்றைய இலங்கைக்கான இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித், பிரபாகரன், பாலசிங்கம், யோகி, திலீபன் ஆகிய நால்வர் முன்னிலையிலும் வாசித்துக் காட்டியபோது, பிரபாகரன், ‘இதை ஏற்க முடியாது’ என்றார்.

ஹூக்கா குழாயில் புகை பிடித்துக்கொண்டு இருந்த தீட்சித், ‘இந்தப் புகை அணையும் நேரத்துக்கு உள்ளே, உங்களை நசுக்கி விடுவோம்’ என்று ஆணவமாகச் சொன்னதை, லண்டனில் நான் சந்தித்தபோது, பாலசிங்கம் என்னிடம் சொன்னார்.

விடுதலைப்புலிகளின் விருப்பத்துக்கு எதிராகவே, பிரதமர் ராஜீவ் காந்தி, கொழும்புக்குச் சென்று, இலங்கை அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதன்பின்னர், பிரபாகரன் அவர்களை, இலங்கைக்கு அழைத்துச் செல்லும் வழியில், சென்னையில் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை தான் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று பிரபாகரன் வற்புறுத்தியதால், வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது, மக்கள் திலகம் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுததாகவும், ஒப்பந்தம் தனக்கு இசைவு அல்ல, ஆனால், தன்னால் தடுக்க முடியவில்லை என்று அவர் கூறியதாக, பின்னாளில், வன்னிக்காட்டில் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்த வேளைகளில் ஒருமுறை, பிரபாகரன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார்.

அதுமட்டும் அல்ல. புலிகள் களம் காணவும், தளம் அமைக்கவும், பொன்மனச் செம்மல் செய்த உதவிகளை பிரபாகரன் பட்டியல் இட்டபோது, ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் நான் திகைத்துப் போனேன். அந்த நாள் முதல், தி.மு.கழக மேடைகளில், மக்கள் திலகத்தை விமர்சிப்பதை நான் அடியோடு கைவிட்டேன்.
இடைப்பட்ட காலத்தில், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள், கடல்வழியாக படகில் ஈழத்துக்குச் சென்றார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிறப்பு செய்யப்பட்டார்.

1987 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றும்போது, பிரபாகரன் அவர்கள், பின்வருமாறு குறிப்பிட்டார்.

‘‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். எங்கள் விருப்பத்துக்கு மாறாக இந்த ஒப்பந்தம் எங்கள் மீது திணிக்கப்பட்டு விட்டது. ஆனால், சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கிவிடும். எங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம்.’’ என்றார்.

‘அமைதிப்படை’ என்ற பெயரில், இந்தியாவின் முப்படைகளும் இலங்கையில் நுழைந்தன.

வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கூறப்பட்ட ஒப்பந்தத்தின் கருத்துக்கு எதிராக, அதிபர் ஜெயவர்த்தனா, ‘இணைப்புக்கு எதிராக நானே பிரச்சாரம் செய்வேன்’ என்று, ஒப்பந்தத்தின் மை காய்வதற்கு உள்ளாகவே கூறினார். தமிழர்களின் தாயகப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் தடுக்கப்படவில்லை.

இந்த அநீதியைத் தடுப்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டெம்பர் 15 ஆம் நாள், நல்லுhர் கந்தசாமி கோவில் திடலில் திலீபன், துளிநீரும் பருகாத உண்ணாநிலை மேற்கொண்டு, செப்டெம்பர் 26 ஆம் நாள் உயிர் நீத்தார்.

1987 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம்தான், இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் மூளக் காரணம் ஆயிற்று. விடுதலைப்புலிகளின் முக்கியத் தளபதிகளான, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர், ‘கடல் புறா’ என்னும் படகில், பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு, தமிழகம் நோக்கி வந்தபோது, இலங்கைக் கடற்படை வழிமறித்துக் கைது செய்தது. ஆயுதம் ஏதும் இல்லாத புலிப்படைத் தளபதிகள், நடந்ததை உடனே தலைமைக்குத் தெரிவித்தனர். 17 தளபதிகளும் பலாலி விமான தளத்தில் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், இந்திய இராணுவத் தளபதிகள், புலிப்படைத் தளபதிகள் மீது துரும்பு விழவும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கைக் கடற்படையைக் கடுமையாக எச்சரித்து, அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த இடத்தைச் சுற்றிலும் இந்தியப் படையின் கட்டுக்காவலை அமைத்தனர்.

ஆனால், இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித், இந்தியப் பிரதமரைத் தில்லியில் சந்தித்து, இந்தப் 17 தளபதிகளையும் சிங்கள அரசிடம் ஒப்படைத்தால்தான், பிரபாகரன் நம் வழிக்கு வருவார்; இடைக்கால நிர்வாக சபை பிரச்சினையில், சிங்கள அரசு அறிவிக்கின்ற திட்டத்தில் கையெழுத்து இடுவார்’ என்று கூறியதன் விளைவாக, அக்டோபர் 5 ஆம் தேதி அன்று, இந்திய இராணுவத்தின் கட்டுக்காவலை,தளபதிகளின்விருப்பத்துக்கு மாறாக விலக்கிக் கொள்ளுமாறு இந்திய அரசு உத்தரவு இட்டதன்பேரில், அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் சிங்கள இராணுவத்தினர் 17 புலிப்படைத் தளபதிகளை நெருங்கினார்கள். 17 பேரும் நச்சுக்குப்பிகளைக் கடித்தனர். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் அந்த இடத்திலேயே உயிர் அற்ற சடலங்களாக விழுந்தனர். மற்ற ஐவருக்கும் தனித்தனி விசக் குப்பிகள் கிடைக்காமல் அவர்கள் பகிர்ந்து கொண்டதாலும், சிங்கள இராணுவத்தினர் துப்பாக்கி முனைக் கத்திகளால் பலவந்தமாக அகற்றியதாலும், அந்த ஐவர் உயிர் பிழைத்தனர். அவர்களுள் ஒரு இளைஞனை, பின்னர் 89 இல் வன்னிக்காட்டில் நான் சந்தித்தேன். அப்படி உயிர்பிழைத்த செல்வா எனும் இன்னொரு வாலிபரை, கடந்த ஆண்டு, மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக லண்டனுக்குச் சென்றபோது, அங்கே சந்தித்தேன்.

அக்டோபர் 5 ஆம் தேதி நடந்த சம்பவத்தை செல்வா விவரித்தபோது, நான் அடைந்த மனவேதனைக்கு அளவே இல்லை.

தமிழ் ஈழம் கொதித்து எழுந்தது. கலவரம் மூண்டது. ஆனால், இந்திய இராணுவம் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று, விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி நிறுவனமான ‘நிதர்சனம்’ அலுவலகத்தை, வெடி வைத்துத் தகர்த்தது. ‘ஈழ முரசு’ உள்ளிட்ட புலிகளின் ஆதரவு ஏடுகளின் அலுவலகங்களை, இந்திய இராணுவம் குண்டுவைத்துத் தகர்த்தது.

உயிர்ப்பலியான 12 தளபதிகளுள், யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த குமரப்பாவுக்கு, அதற்கு முப்பது நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து இருந்தது. அவர் உள்ளிட்ட 12 தளபதிகளின் உடல்கள் தீர்வில் என்ற மைதானத்தில், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், கதறி அழுதனர். துயரம் நிறைந்த மனதுடன் அங்கு வந்த பிரபாகரன், மாவீரர்களின் உடல்களுக்கு, மலர்மாலைகள் சூட்டினார். அன்றுதான் மீண்டும் தன் இடுப்பில் பிஸ்டலைச் செருகினார்.

‘அநீதியாக நம்மை அழிக்கத் தாக்கும் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிவோம்’ என அறிவித்தார். அக்டோபர் 10 ஆம் தேதி, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமளிப்படைக்கும் போர் மூண்டது. இந்திய இராணுவத்தின் 14 டாங்குகள் தூள்தூளாக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரிக்கு அருகில், ஒரு வீட்டில் தங்கி இருந்த பிரபாகரனைக் கொல்வதற்கு, சிறப்புக் கமாண்டோக்கள் படை ஹெலிகாப்டரில் சென்று, பாராசூட்டில் குதித்தது. புலிகள் வீரச்சமர் புரிந்தனர். கமாண்டோக்களில் ஒருவன்கூட உயிர்தப்பவில்லை. அந்தச் சண்டையில் வயிற்றில் குண்டுக்காயம்பட்ட பொட்டு அம்மான், நீண்ட சிகிச்சைக்குப் பின்னர்தான் நலம் பெற்றார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம் ஆகும். இந்தப் போர் மூளுவதற்கு முன்னர், இந்தியத் தளபதிகளும், பிரபாகரனும் நட்பும் நேசமும் கொண்டு இருந்த காலத்தில், ஒருநாள், இந்திய அமைதிப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவர்களை, பிரபாகரன் சந்தித்துப் பேச ஏற்பாடு ஆகி இருந்தது.

வடக்கு கிழக்கு மாகாணங்களான தமிழரின் பூர்வீகத் தாயகத்தில், இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க, இந்திய அரசுத் தரப்பினரும், விடுதலைப்புலிகளும் சந்தித்துப் பேசுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. பலாலியில் இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவர்களின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு ஆயிற்று. 1987, செப்டெம்பர் மாதம் 16 ஆம் தேதி நள்ளிரவில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், 14 ஆம் தேதி நள்ளிரவில், இந்தியத் துhதர் ஜே.என். தீட்சித், தொலைபேசியில் அழைத்து, பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விடும்படிக் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த ஹர்கிரத் சிங், தனக்கு உயர் தளபதியான லெப்டினண்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் அவர்களிடம் அதைக் கூறினார். அதற்கு அவர், ‘இந்திய இராணுவம் பாரம்பரிய மரபு கொண்ட இராணுவம் என்றும், வெள்ளைக்கொடி ஏந்தியவர்களை முதுகில் சுடும் துரோகத்தை ஒருபோதும் செய்யாது என்றும் தீட்சித்துக்குக் கூறி விடுமாறு தெரிவித்தார்.

அதன்பின் கொழும்பில் இருந்த தீட்சித்திடம், ‘அவரது உத்தரவுக்குத் தான் பணிய முடியாது’ என்று ஹர்கிரத் சிங் கூறினாராம்.

அதற்கு, ‘இந்த ஆணை என்னுடையது அல்ல. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தரவு ஆகும். இந்திய இராணுவம் இதைச் செய்யாமல் நழுவினால், நீங்கள்தான் இதற்குப் பொறுப்பாளி ஆவீர்கள்’ என்று தீட்சித் சொன்னாராம்.

இவை அனைத்தையும், மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ‘இலங்கையில் தலையீடு: இந்திய அமைதிப்படையின் அனுபவம்’ எனும் தலைப்பிட்ட புத்தகத்தில் எழுதி பதிவு செய்து உள்ளார்.

மோதல் மூளாத காலத்திலேயே பிரபாகரனைச் சுட்டுக்கொன்று விடுமாறு ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார் என்ற மன்னிக்க முடியாத அக்கிரமத்தைத் தமிழக மக்கள் இதுவரை அறியவில்லையே?

இப்போது, வெள்ளைக்கொடி ஏந்தி பேச்சுவார்த்தைக்கு வந்த நடேசனையும், புலிப்படைத் தளபதிகளையும் சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றதற்கு, இந்திய அரசின் ஆலோசனையும் இருந்தது என்று கிடைத்து உள்ள செய்தியையும், கவனத்தில் கொள்வோம்.

இதற்குப் பிறகு, இந்திய அமைதிப்படையுடன் தற்காப்புப் போர் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான பிரபாகரன், ‘சமாதானத்துக்குத் தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாகவும், போர்நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, 5 கடிதங்கள் எழுதினார். 1987 அக்டோபர் 14, 25, நவம்பர் 9, 1988 ஜனவரி 12, மார்ச் 9, 1989 அக்டோபர் 10 ஆகிய நாள்களில் இந்தக் கடிதங்களை அவர் எழுதி, அனுப்பினார்.

ஆனால், இந்தியப் பிரதமர் ராஜவ் காந்தி, அந்த வேண்டுகோள்களைத் துச்சமாகக் கருதித் துhக்கி எறிந்தார். 1988 ஆம் ஆண்டு, எவ்விதத்திலும் பிரபாகரனைக் கொன்றுவிட வேண்டும் என்று இந்திய இராணுவம் முடிவு எடுத்து, தடுப்பு நிலை அதிரடி நடவடிக்கை 1, நடவடிக்கை 2, என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியையும் பரப்பியது.

அது உண்மை அல்ல என்று அறிந்த நான், அப்போது தினகரன் ஐயா கே.பி.கே. அவர்களிடம் கூறினேன். ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று தினகரன் எட்டுக்காலச் செய்தி வெளியிட்டது.

தொண்ணுhறுகளின் பிற்பகுதியில், இந்திய அரசின் உளவுத்துறைப் பிரிவான ‘ரா’ அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியச் சிறையில் இருந்த கிருபன், என்ஜினியர் என்னும் இருவரும் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டு, விடுதலைப்புலிகளின் முன்னணித் தளபதியான மாத்தையாவுக்கு ஆசைவார்த்தை காட்டி, அவரைத் தலைவராக ஆக்குகிறோம் என்று கூறித் துரோகி ஆக்கி, பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது. பிரபாகரன் பயணிக்கும் வாகனத்தைக் குண்டு வைத்துத் தகர்ப்பது; அல்லது அவரது படுக்கை அறையில் குண்டு வைத்துக் கொல்வது; அல்லது அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சுட்டுக் கொல்வது ’ என அத்திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால், துரோகிகளின் நடமாட்டத்தைச் சந்தேகித்த பொட்டு அம்மானின் சாதுர்யத்தால், சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு, நேர இருந்த விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் மோதல் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில், பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதற்கு, சென்னையில் இருந்த முன்னாள் யாழ்ப்பாணப் புலிப்படைத் தளபதி ஜானி அனுப்பி வைக்கப்பட்டார். சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, நிராயுதபாணியாக வந்த ஜானி, தான் இந்திய அரசால் அனுப்பப்பட்டவன் என்று கூறியும், இந்திய இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு, ஜானியின் உடலைச் சல்லடைக் கண்களாக ஆக்கினர். துhதராக ஒருவரை அனுப்பிவைத்து, அவரைக் கொலைசெய்த கொடுமை, சரித்திரத்திலும் நடந்தது இல்லை, எந்த இதிகாசத்திலும் சொல்லப்படவில்லை.

1992 ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் நாள், பன்னாட்டுக் கடல் பரப்பில், கப்பலில் வந்துகொண்டு இருந்த புலிப்படைத்தளபதி கிட்டு அவர்களை, இந்தியக் கடற்படை, சட்டவிரோதமாகவும், அக்கிரமமாகவும் கைது செய்ய முற்பட்டதில், கிட்டுவும், அவருடன் இருந்தவர்களும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர். அந்தத் துயர மரணங்களுக்கும், இந்திய அரசின் துரோகமே காரணம் ஆகும்.

1995 ஆம் ஆண்டு, மிகுந்த ஆயுதபலத்துடன் சிங்கள இராணுவம் தொடுத்த பாரிய தாக்குதலால், ஐந்து லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம் பெயர்ந்து காடுகளுக்கு உள்ளே செல்ல நேர்ந்தாலும், மிக விரைவில் தன் படை அணிகளை வலுப்படுத்தி, ஓயாத அலைகள், அக்னி அலைகள் ஆகிய தாக்குதல்களை நடத்தி, மிக விரைவில் கிளிநொச்சியும், ஆனை இறவும் மீட்கப்பட்டன. ஆனை இறவு போர்க்கள வெற்றி, உலகப் போர்க்கள வரலாற்றில் ஒரு பொன்னான நிகழ்வு ஆகும்.
கட்டுநாயகா விமான நிலையத் தாக்குதலில், எந்த ஒரு பயணிக்கும் ஊறு நேராமல், இலங்கை விமானப்படையின் 27 விமானங்களைத் தகர்த்துத் துhள்துhளாக ஆக்கியதில், இலங்கை விமானப்படை சின்னாபின்னமானது.

போரில் வெற்றிகளை ஈட்டி, தங்கள் வலிமையை நிருபித்ததற்கு ப்பின்னர்தான் விடுதலைப்புலிகள் தாங்களாகவே, 2001 டிசம்பர் 24 ஆம் தேதியன்று, 30 நாள்கள் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். ஜனவரி 24 இல் மேலும் 30 நாள்களுக்குப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாகப் புலிகள் அறிவித்தனர்.

நார்வே அரசின் முயற்சியால், வேறு வழி இன்றி, இலங்கை அரசு, தாங்களும் போர்நிறுத்தம் செய்வதாக, 2002 பிப்ரவரி 24 இல் அறிவித்தது. 2002 இறுதியில், சமாதானப் பேச்சுவார்த்தைகள், தாய்லாந்தில் தொடங்கியது. மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்தன. அப்போது, ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்தார். அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கா, அந்தப் பேச்சுவார்த்தைகளை முறித்தார்.

இந்த நிலையில், 1998 ஆம் ஆண்டு, இலங்கையில் சிங்கள இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் சொல்லொணா இன்னல்களுக்கு ஆளானபோது, அன்றைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, இலங்கை அரசுக்கு எந்த உதவிகளும் செய்வது இல்லை என்றும், ஆயுதங்களை விற்பதுகூட இல்லை என்றும், அக்கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தரப்பில், சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர். 2004 ஆம் ஆண்டு வரை, வாஜ்பாய் அந்த முடிவைச் செயல்படுத்தினார்.

அதற்குப்பின்னர்தான், ஈழத்தமிழ் இனத்தின் உயிர் குடிக்க, படம் விரித்த நாகப்பாம்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணி அரசை இயக்குகின்ற தலைமை உருவெடுத்தது. எடுத்த எடுப்பிலேயே, இந்திய-இலங்கை இராணுவ ஒப்பந்தம் போட ஏற்பாடு ஆயிற்று. நாம் தந்த கடும் எதிர்ப்பால், அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாவிடினும், உத்தேசிக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டன. கனரக ஆயுதங்களையும், ராடார்களையும், இந்திய அரசு இலங்கைக்கு வாரித் தந்தது.

இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தனர். இலங்கையின் கூலிப்படையாகவே இந்தியக் கடற்படை செயல்பட்டது. பலாலி விமானதளத்தை, இந்திய விமானப்படை பழுதுபார்த்துக் கொடுத்தது. பாகிÞதான், சீனா, ஈரான், இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களை வாங்க, இலங்கைக்கு வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அள்ளித் தந்தது. இலங்கை விமானப் படையையும், ராடார்களையும் இயக்குவதற்கு நிபுணர்களை அனுப்பி வைத்தது. சக்திவாய்ந்த நவீன சாட்டிலைட் கேமிராக்களை இந்திய அரசு வழங்கியதால், விடுதலைப்புலிகளின் பாசறைகளையும், நடமாட்டத்தையும் துல்லியமாக இலங்கை இராணுவம் அறிய, இந்திய அரசு உதவியது.

இத்தனை நாடுகளின் சக்திவாய்ந்த ஆயுதபலத்தால், நாலாபுறங்களில் இருந்தும் தாக்கப்பட்டபோதும், பிரபாகரனின் புலிப்படை அஞ்சாது போரிட்டது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு ஆளாயினர். உணவு இல்லை, காயங்களுக்கு மருந்து இல்லை. ஒருநாளைக்கு, ஒரு குவளைக் கஞ்சியைக் குடித்துக்கொண்டு, யுத்தகளத்திலும் போரிட வேண்டிய அவலத்துக்கு ஆளானார்கள் விடுதலைப்புலிகள்.

தமிழ்நாடு சட்டமன்றம் போர்நிறுத்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய 48 மணி நேரத்துக்குள், ‘அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை’ என்று, இந்தியப் பிரதமரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு கொக்கரித்தான் கொடியவன் இராஜபக்சே.

ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும் இனக்கொலை யுத்தத்தை இந்திய அரசு நடத்துவதை நன்றாக அறிந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் குடும்பத்தினர் மத்திய அரசுப் பதவிகளால் உலகக் கோடீஸ்வரர்களாகக் கொழுக்க வைப்பதற்காகவும், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற அவரது உள்மனதின் நச்சு எண்ணம் காரணமாகவும், மத்திய அரசுக்கு உடந்தையாக ஒருபக்கத்தில் செயல்பட்டுக்கொண்டே, தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் கொந்தளிப்பாக எழுந்துவிடாமல் தடுக்க, மயக்கும் வார்த்தைகளில் எழுதியும், பேசியும், வஞ்சனை புரிந்து, பித்தலாட்டம் செய்து, ஈழத்தமிழர் பேரழிவுக்குத் துணைநின்ற மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து முடித்தார்.

அதனால்தான், முத்துக்குமார் உள்ளிட்ட 14 வீரத்தியாகிகள் ஈழத்தமிழரைக் காக்க நெருப்பில் தீக்குளித்து, வெந்தணலில் மாண்டபோதும், அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் தெரிவிக்காதது மட்டும் அல்ல, உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு, அந்தத் தீக்குளிப்புச் சம்பவங்களைக் கொச்சைப்படுத்தி அறிக்கை விடச் செய்தார்.
இன்றோ, ஈழம் எரிகின்றது; தமிழர் நெஞ்சமெல்லாம் எரிகின்றது. அழுது கதறித் துடிக்கின்றனர் தமிழர்கள் தரணியெங்கும்.

ஆனால், வக்கிரபுத்தி படைத்த கலைஞர் கருணாநிதி, ‘ஒரு வீட்டில் பிணம் விழுந்தால், இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்கத்தான் செய்கிறது’ என்று இயற்கை நியதிக்காக சங்கப்புலவன் எழுதிய பாட்டை, இப்போது உடன்பிறப்புக்கு மடலாக எழுதி, தன் புத்திர சிகாமணிகளுக்கு மந்திரி பதவிகள் பெற, ஈழத்தமிழரின் கொலைக்களம் அமைத்த இத்தாலியப் பெண்மணிக்குப் பூங்கொத்தும், பொன்னாடையும் தந்து, பூரித்துச் சிரித்துக் கொண்டாடி மகிழ்கிறார்.

ஐயகோ, தமிழ் இனமே, இதுதான் உன் தலைவிதியா?

அறிஞர் அண்ணா அவர்களே, நீங்கள் கல்லறைக்கு உள்ளே அழும் சத்தம், ஈழ மக்களின் கதறல் ஒலியோடு சேர்ந்து கடலின் ஓசையில் கலந்து விட்டதா?

என் ஆருயிர்க் கண்மணிகளே,

என் தந்தை மறைந்தபோது, என் இரண்டு சகோதரிகளின் கணவர்கள் திடீரென இறந்தபோது, எத்தனையோ துயரங்கள் என்னைச் சூழ்ந்தபோது ஏற்படாத துன்பமும், துயரமும், தாங்க இயலாத வேதனையும், என் இதயத்தைப் பிழிந்து எடுக்கின்றன.

எப்படி மறப்பேன் நான் அந்த வீரத்தலைவனை, தமிழ்த்தாயின் தவப்புதல்வனை.

இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு இந்தத் தமிழ் இனம் பெற முடியாத, மாவீரர்களுக்கெல்லாம் மாவீரனான பிரபாகரனை, இதோ என் நெஞ்சை விட்டு அகலாத அந்த நினைவுகளை எப்படி மறப்பேன் நான்? சோதரர்களே இதை யாரிடத்தில் போய் உரைப்பேன், உங்களைத் தவிர?

1989 பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று இரவு, வன்னிக்காட்டை விட்டுத் தமிழகம் செல்ல மாட்டேன் என்று முடிவு எடுத்த என்னை, ‘பலத்த சண்டை மூளப்போகிறது; அதற்குள் பாதுகாப்பாக உங்களைத் தமிழகத்துக்கு நான் அனுப்பியாக வேண்டும். எங்களுடன் இருக்கக்கூடாது என்று நான் கூறுவதாக எண்ணி விடாதீர்கள். தமிழ்நாட்டுக்கு நீங்கள் போயாக வேண்டும். அக்காவின் கவலையை (என் துணைவியார்) நான் போக்க வேண்டும். வந்த வழியாகப் போக முடியாது. இந்தியன் நேவி, இரண்டு கப்பல்களை நிறுத்தி இருக்கிறான். காட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும். முட்கள் கொஞ்சம் உடலைக் கிழிக்கும். சமாளித்துக்கொள்ளுங்கள் அண்ணே’ என்று, அந்த நிலவறையின் ஒரு படியில் ஒரு காலையும், மற்றொரு படியிலும் சாய்ந்து நின்றுகொண்டு, இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவர் சொன்னதை எப்படி நான் மறப்பேன்?

என்னை வழி அனுப்பும் பிரியாவிடைக் கூட்டம் நடந்தது. ஜெனரேட்டர் வைத்து, விளக்கு வெளிச்சம் அமைக்கப்பட்டு இருந்தது. நான் உரை ஆற்றிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று பக்கத்தில் குண்டுகள் விழும் சத்தம் கேட்டது. விளக்குகளை அணைத்து விட்டு, அத்துடன் அந்தக் கூட்டம் முடிந்தது. பூமிக்கு அடியில் இருந்த நிலவறையில், பிரபாகரன் அவர்களின் அறையில், நானும், அவரும் அமர்ந்தோம்.

‘அண்ணே, உங்கள் தலைக்குப் பின்னால் இருக்கின்ற ஜிப் பேக்கில் உள்ளதுதான், இப்போது எங்கள் கையில் இருக்கின்ற பணம். எனக்கும், மதிவதனிக்கும் எந்தத் தேவையும் இல்லை. இரண்டு உடுப்பு இருந்தால் போதும். ஒரு பொன்னகை நான் வாங்கித் தந்ததில்லை என் மனைவிக்கு’ என்றார்.

அப்போது, நான் என் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் தாருங்கள் என்று கேட்டேன். சரி என்றவர், எப்படி விளிப்பது என்று கேட்டுவிட்டு, ‘அன்பின் அண்ணா’ என்று தொடங்குகிறேன், சரிதானா? என்று கேட்டார். ‘நல்லாத்தான் இருக்கு’ என்றேன். கடிதத்தை அவர் எழுதியபோது, நான் அவரது மரக்கட்டிலில் தூங்கி விட்டேன். தலையணை, மெத்தை அவர் பயன்படுத்துவது இல்லை. விழித்துப் பார்த்தேன். தான் எழுதிய கடிதத்தை, அவரது சொந்த நோட்டிலும் எழுதி பதிவு செய்து கொண்டு இருந்தார்.

இரவு இரண்டு மணி ஆகி விட்டது. அவரது அறைக்கு அடுத்து, கிட்டுவுக்கு அமைக்கப்பட்டு இருந்த நிலவறையில் என்னைத் தங்க வைத்து இருந்தனர். கிட்டத்தட்ட பத்து மாதங்கள் இப்படி நிலவறை ஏதும் இல்லாமல், மரங்களுக்கு அடியில், கட்டாந்தரைகளில்தான் பிரபாகரனும், அவரது துணைவியாரும், பிள்ளைகளும் இருந்தனர். அதன்பின்னர்தான், வேறு இடத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தாராம்.

23 ஆம் தேதி, வைகறையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். வெந்நீர் வைத்துக் கொடுத்தார்கள். குளித்தேன். விடிந்தது. ஆறரை மணி அளவில், பிரபாகரன் அவர்களும், கிட்டுவும், நானும் காலைச் சிற்றுண்டி சாப்பிட அருகருகே அமர்ந்தோம். காட்டில் கிடைப்பதைக் கொண்டு, பிரியமாகச் சமைத்து இருந்தார்கள். ஆனால், என்னால் சாப்பிட முடியவில்லை. தலை கவிழ்ந்தவாறு இருந்தேன். என் கண்களில் இருந்து, தாரைதாரையாகக் கண்ணீர் அந்தச் சாப்பாட்டுத்தட்டில் விழுந்தது. இருவருமே எனக்கு மிக ஆறுதல் கூறினார்கள்.

நான் சொன்னேன்: ‘‘போகும் பயணத்தில் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று நான் அஞ்சவில்லை, அதற்காக அழவில்லை. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சூழ்ந்து உள்ள இந்தக் காட்டில், இனி மூளப் போகும் உக்கிரமான யுத்தத்தில், உங்கள் உயிருக்கு ஏதும் ஆபத்து நேருமோ? இனி என் வாழ்நாளில் திரும்பவும் உங்களைக் காண்பேனோ என்று நினைப்பதால், என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றேன். புறப்படத் தயாரானோம்.

அதிர்ச்சி நிறைந்த திகைப்பு எனக்கு. ஏன் தெரியுமா?

57 புலிப்படை வீரர்களை, என் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்து இருந்தார். விடுதலைப்புலிகளின் பிரதானத் தளபதிகளுள் ஏழு பேரை, பல பகுதிகளில் இருந்தும் வரவழைத்து இருந்தார். மாவீரனாகக் களங்களில் சாதனைகள் புரிந்த பிரிகேடியர் பால்ராஜ், ஆனை இறவில் பின்னாளில் புலிக்கொடியை உயர்த்திய தளபதி பானு, வல்வெட்டித்துறையில் சாதனை புரிந்த ஜேம்ஸ், தலைவரின் மெய்க்காப்பாளரான கடாஃபி, ரணகளச் சூரர்களான அஜீத், சுசீலன், பதுமன், கிரேஸி இவர்கள் இந்த எளியவனைப் பாதுகாக்கும் பொறுப்பில். இங்கிருந்து சென்ற நாங்கள் ஒன்பது பேரும், அவர்களுடன்.

அப்போதுதான், ஒரு சகோதரன் சொன்னான். நம் தலைவர், தம் மனைவியையும், பிள்ளைகளையும் அனுப்பும்போது, இரண்டே வீரர்களைத்தான் பாதுகாப்புக்கு அனுப்பினார். இன்று, புலிப்படையின் முக்கியத் தளகர்த்தர்களையே உங்களைப் பாதுகாக்க அனுப்புகிறார் என்றான்.

நான் சாமானியன். நான் மரித்துப் போனால், பெரும் பாதகம் ஒன்றும் நேர்ந்துவிடப் போவது இல்லை. அவர்களோ, இனங்காக்கும் போராளிகள். மண்ணின் மானங் காக்க ஆயுதம் ஏந்தும் மாவீரர்கள்.

இன்னும் நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது, அவர் சொன்ன வார்த்தைகள். ‘ஒரு இருபத்து இரண்டு பேர், முதல் அணியாகப் புறப்பட்டு, இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு முன்னதாகச் சென்று விட வேண்டும். இந்திய இராணுவம் வழிமறித்தால், அண்ணனோடு போகும் அணிக்குத் தெரிவித்து விடுங்கள். அண்ணன் வைகோவுக்கு முன்னும் பின்னுமாகப் போவது மட்டும் அல்ல, அவரை ஒட்டினாற்போல, வலது பக்கத்தில் இருவரும், இடது பக்கத்தில் இருவரும் நடந்து செல்லுங்கள். பக்கவாட்டிலும் குண்டுகள் சீறி வரக்கூடும்’ என்றார்.

அப்போது, நான் அந்தத் தலைவனிடம் கேட்டேன். ஒருவேளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கினால், அவர்களின் கை ஓங்கினால், நம் புலிப்படை வீரர்கள் சயனைடுக் குப்பிகளைக் கடித்துத் தங்களை மாய்த்துக் கொள்வார்கள். நான் அவர்களிடம் சிக்கினால், உங்கள் இருப்பிடத்தை அறிய என்னைச் சித்திரவதை செய்தால், அதைத் தாங்கும் சக்தி எனக்கு இருக்காது. அதனால், எனக்கும் ஒரு நஞ்சுக்குப்பி தாருங்கள்’ என்றேன்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது அண்ணே’ என்றேன். நடந்துவிட்டால் என்ன? என்று கேட்டேன். சற்று யோசித்தார். பொட்டு அம்மானை அழைத்து, ஒரு புதிய சிவப்புக் கயிறு கொண்டு வரச் செய்தார். அவர் கழுத்தில் இரண்டு நச்சுக் குப்பிகளை எப்போதும் தன் கழுத்தில் கட்டி இருப்பார். அதில் ஒன்றைப் பிரித்து எடுத்து, அந்தச் சிவப்புக் கயிற்றில் கட்டி, என்னுடைய கழுத்தில் அணிவித்தார். மெய்சிலிர்த்துப் போனேன் நான்.

26 ஆம் தேதி அன்று, சாலைத்தொடுவாய் வெளியில், பொழுது புலர்ந்த வேளையில் நாங்கள் இந்திய இராணுவத்தினரால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, தப்பி ஓடினோம். நாள் முழுக்கக் காட்டுக்கு உள்ளே ஓடிக்கொண்டே இருந்தோம். பிற்பகல், மூன்று மணிக்குக் கலங்கிய குட்டை ஒன்றில் சற்றுத் தண்ணீர் அருந்தினோம். இரவுப் பொழுதில் காட்டுக்கு உள்ளே சென்றோம். மூன்று நாள்கள் அங்கேயே இருந்தோம். மீண்டும் கிளம்பினோம். வல்வெட்டித்துறைக் கடற்கரைக்கு அருகில் நாங்கள் இறங்கியபோது, நுhற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் அங்கே எங்களைப் பாதுகாக்கக் காத்து இருந்தார்கள்.

எப்படி மறப்பேன் நான்? என் உயிரைப் பாதுகாக்கத் துடித்த அந்த வீரத்திலகத்தின் அன்பை, அக்கறையை எப்படி மறப்பேன்?

மனிதநேயத்தின் மறுவடிவம் அவர் என்பதை இந்த உலகத்தில் பலர் அறிய மாட்டார்கள். ஒரு இரவுப் பொழுதில் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார். ‘தனித்தமிழ் ஈழ தேசம் அமைகின்ற வேளையில், நான் அதிபராக மாட்டேன். மாத்தையா போன்றவர்களை அதிபராக ஆக்குவேன். போரில் கணவனை இழந்த விதவைகள், கை, கால் உடல் ஊனமுற்றவர்களைப் பராமரிக்கும் பணியைத் தலையாய வேலையாகக் கொள்வேன்’ என்றார். இப்படியெல்லாம் மாத்தையாவின் மீது அளவற்ற நம்பிக்கையும், அன்பும் கொண்டு இருந்த அந்தத் தலைவனைத்தான், படுகொலை செய்வதற்கும் தொண்ணூறுகளில் வகுக்கப்பட்ட சதித்திட்டத்துக்கு உடந்தையானான் மாத்தையா என்கிறபோது, துரோகம் எப்படியெல்லாம் மனித வாழ்வில் தலைதூக்குகிறது என்பதை உணர்கிறோம்.

தாய், தந்தையரை இழந்த அநாதைச் சிறுமியர்களைப் பராமரிக்க செஞ்சோலையில் இல்லம் அமைத்தார். ஒவ்வொரு நாளும் அங்கே சென்று, அந்தச் சின்னஞ்சிறுமிகளைக் காண்பதில், பேசுவதில், அமைதி கொள்வார். இந்திய அரசு பழுதுபார்த்துக் கொடுத்த பலாலி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இÞரேலியப் போர்விமானங்கள், 2006 ஆகÞட் 16 இல் நடத்திய குண்டுவீச்சால், 61 சின்னஞ்சிறுமிகள்,உடல்கள் சிதறி, ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்ட கோரம் நிகழ்ந்தது.
உலகமே இதைக் கண்டித்தது, இந்திய அரசைத் தவிர. அதில் இருந்து 12 ஆம் நாள், ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று, ஒரு நிகழ்வு நடந்தது. இலங்கையில், பன்னாட்டுக் கண்காணிப்பு அமைப்பின் தலைவராக இருந்த சுவீடன் நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி உல்ஃப் ஹென்ரிக்சன், பணிக்காலம் முடிந்து, நாடு திரும்ப இருந்ததால், விடை பெற்றுச் செல்ல, பிரபாகரனைச் சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை வைத்தார்.

இலங்கை இராணுவத்தின் கொடிய தாக்குதல்களை நடத்திய கொப்பேகடுவ என்ற தளபதி, போர்க்கைதியாக புலிகளின் பிடியில் இருந்தார். சுவீடன் தளபதி பிரபாகரனிடம், கொப்பேகடுவாவின் குடும்பத்தினர், அவரை விடுவித்துத் தருமாறு கவலையோடு கேட்கிறார்கள். அவரை விடுவித்து விடுங்களேன்’ என்றார். எந்த மறுப்பும் கூறாமல், அந்தக் கோரிக்கையை பிரபாகரன் ஏற்றுக்கொண்டு, சிங்களத் தளபதி கொப்பேகடுவாவை விடுதலை செய்து அனுப்பி வைத்தார்.

பிரபாகரன் எனும் எரிமலையின் மறுபக்கத்தில், மனிதநேயம் எனும் குளிர் பூம்புனல் இருப்பதைப் பலர் அறிய மாட்டார்கள். கடந்த நான்கு நாள்களாக, என் மனம் வதைபடுவதற்கு இன்னொரு சம்பவமும் இருக்கிறது.

1989 பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாலையில், வன்னிக்கு அருகே, அலம்பில் காடுகளுக்குப் பக்கத்தில், நாயாறு பகுதியில், கடலில் இருந்து கரையில் நான் கால் வைத்தபோது, என்னை ஆரத்தழுவி வரவேற்றார், வீரத்தளபதி சொர்ணம். அவர்தான், அலம்பில் காடுகளின் தலைமைத்தளபதி. அவரும், ‘பாம்பு’ எனும் பட்டப்பெயரைக் கொண்ட அஜீத்தும், 30க்கும் மேற்பட்ட போராளிகளும், என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வந்து இருந்தார்கள். சொர்ணம் என்றால் சொர்ணம்தான். அவ்வளவு களையான முகம், கம்பீரமான தோற்றம். பல களங்களில் பகைவர்களை விரட்டி வீழ்த்திய வெற்றி வீரன்.

நான்கு நாள்களுக்கு முன்னர் நடந்த சண்டையில், சொர்ணம் கொல்லப்பட்டார் என்பதை அறிந்தபோது, என் கண்கள் உலர்ந்து போயிற்று. இன்னும், எத்தனையோ சம்பவங்கள். அவற்றையெல்லாம் இதுவரை நான் எழுதவில்லை. பின்னாளில் எழுதுவேன்.

மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று, வாக்குச்சாவடிகளைப் பார்வையிடச் சென்றபோது, காலை 11 மணிக்கே என்னுடன் வந்தவர்களிடம், ‘நாம் வெற்றி பெற முடியாது’ என்று கூறினேன். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய கருத்தை, மாவட்டச் செயலாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின், நான் அதை வற்புறுத்தவில்லை.

இந்நிலையில் அன்று இரவு 10.15 மணி அளவில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் அவர்களின் இல்லத்தில் நான் இருந்தபோது, முல்லைத்தீவில் இருந்து சாட்டிலைட் போனில் நடேசன் என்னை அழைத்தார். அதற்கு முன்பு, அவர், மே 7 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒருமுறையும், இரவு 8.00 மணிக்குத் திரும்பவும் என்னிடம் பேசி இருந்தார்.

இப்பொழுது, கடைசியாக அவர் என்னிடம், ‘அண்ணே நீங்கள் ஜெயிச்சிராலாம்ல’ என்று கேட்டார். கோடிகோடியாக பணத்தைச் செலவழித்து, வீடுவீடாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து விட்டார்கள். அதனால், குறைந்த ஓட்டுகளில் நான் வெற்றி பெறுவேன் என்றேன்.

தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்? என்றார். அண்ணா தி.மு.க. அணி ஜெயிக்கும் என்றேன். அகில இந்தியாவில் எப்படி இருக்கும் என்றார். இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தலைவர் நல்லா இருக்கிறாரா ? என்று கேட்டேன். ஆமாம், நல்லா இருக்கார் என்றார். அவரும் நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் என் கவலை. நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அதைத் தலைவரும் தவறாக நினைக்க மாட்டார்.
முடிவு எடுப்பது அவரது உரிமை. மிகுந்த கவலையினால் சொல்லுகிறேன். சமீபத்தில் கிடைத்த தகவல்களில், போர்முனையில் முன்னின்று அவரே சண்டை செய்து உள்ளார். பேராபத்து அவரைச் சுற்றி வளைத்ததைக் கேள்விப்பட்டேன். அவரை வைத்துத்தான் தமிழ் இனத்தின் எதிர்காலம். அவரைப் பாதுகாத்துக் கொண்டால்தான், தமிழ் ஈழ மக்களைக் காக்க முடியும். தமிழ்நாட்டில் பெரிய பதவிகளுக்கு வந்துவிட வேண்டும் என்ற எந்த ஆசைகளோ, கனவுகளோ எனக்கு எதுவும் இல்லை. தமிழ் ஈழம் மலர வேண்டும், அதற்கு என் வாழ்வும் ஒருவகையில் துரும்பளவாவது பயன்பட வேண்டும்.. என் எண்ணத்தைத் தலைவரும் அறிவார். அந்த உரிமையோடுதான் இதைக் கூறினேன் என்று சொல்லுங்கள் என்றபோது, அவசியம் சொல்றேண்ணா என்று சொல்லிவிட்டு, நாங்கள் வெல்வோமண்ணே என்றார். இதுதான் நடேசன் கூறிய கடைசி வார்த்தைகள்.

இந்த உரையாடல் முடிந்தவுடன், என்னுடன் இருந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், அடைக்கலம், திவான் மூவரிடமும், நடேசனிடம் பேசியதைக் கூறினேன்.
அந்த என் இனிய சகோதரன் நடேசனுக்கா இந்தக் கோர முடிவு? என் உள்ளம் சித்திரவதைக்கு ஆளாகி, அத்துயரத்திலேயே உறைந்து விட்டது.

தமிழ்கூறும் நல்லுலகமே உச்சிமேல் வைத்து மெச்சும் தலைவர் பிரபாகரன் அவர்கள், தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாரா? போரில் கொல்லப்பட்டாரா? அல்லது அடுத்த களம் அமைக்கத் தப்பிச் சென்றாரா? என்ற கேள்விகளால், அலைகடல் துரும்பாக என் மனம் தத்தளிக்கிறது.

வங்கத்துச் சிங்கம் நேதாஜியை தன் சின்னவயதில் மானசீகமாகப் போற்றியவர். நேதாஜியின் இறுதி முடிவு குறித்த மர்மமும், புதிரும் இன்றுவரை விலகவே இல்லை. அதுபோலவா அமைந்துவிட்டது, தலைவர் பிரபாகரனின் முடிவு? அப்படி இருக்கக் கூடாது.

தலைவர் பிரபாகரன் அவர்களும் போரில் மடிந்தாரா? அல்லது உயிருடன் இருக்கின்றாரா? என்ற கேள்வியும், அதுகுறித்த ஐயப்பாடுகளும் ஏற்படுத்தி இருக்கின்ற என் மனக்குமுறல், ஒரு எரிமலையின் கொந்தளிப்பாகவே ஏற்பட்டு விட்டது.

இம்மடலின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன் அல்லவா, 17 ஆம் தேதி நடுயாமத்தில், நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்த செய்தியைத் தந்த ஈழத்துச் சகோதரன், நம்பிக்கைக்கு உரியவர்தான். அதுமட்டும் அல்ல. இதற்கு முன்னரே, ஒரு செய்தியை அறிந்து இருந்தேன். கிழக்கு மாகாணத்தில், கருநாகத்திலும் கொடிய துரோக நஞ்சினைக் கக்கும் கருணாவை, தலைவர் பிரபாகரன் தன் மகனைப் போல அல்லவா பாசம் காட்டி இயக்கத்தில் வளர்த்தார். அவன் செய்த துரோகத்தால்தானே, கிழக்கு மாகாணத்துக்கு உள்ளே சிங்கள இராணுவம் நிலைகொண்டது, புலிகள் பின்வாங்க நேரிட்டது.

வடக்கு மாகாணத்திலும், சிங்கள இராணுவம், கால் பதிக்கத் தொடங்கிய காலத்தில், ஒருநாள், தலைவர் பிரபாகரன் அவர்கள், புலிப்படையின் முன்னணித் தளகர்த்தர்கள், முதல்நிலைப் போராளிகள் அனைவரையும் அமரவைத்து, அப்பொழுது வெளியாகி இருந்த ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் போட்டுக் காட்டினார். படத்தின் தலைப்பு ‘300 மாவீரர்கள்’. 2400 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேக்கத்தில் நடைபெற்ற ஒரு போர்க்களம். ஆம்; தெர்மாபிளே யுத்தகளம். பல இலட்சம் வீரர்களுடன், பாரசீகச் சக்கரவர்த்தி டரேயஸ், கிரேக்கத்தின் மீது படையெடுத்து வந்தபோது, ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோனிடாஸ் தலைமையில், 300 ஸ்பார்ட்டா வீரர்கள், தெர்மாபிளே என்னும் இடத்தில், ஒரு மலைக்கணவாயில், சமுத்திரம் போன்ற சேனையை எதிர்த்து நடத்திய வீரப்போர், உலகில் அதன்பின்னர் தோன்றிய அத்தனை மாவீரர்களாலும் புகழ்ந்து உரைக்கப்படும் யுத்தம் ஆகும்.

அலையலையாக வந்த பாரசீக வீரர்கள், ஸ்பார்ட்டா வீரர்களின் ஈட்டிக்கும், வாளுக்கும் பலியானார்கள். ஆறு மாதங்களாகியும், தெர்மாபிளே கணவாயை பாரசீகப் படை நெருங்க முடியவில்லை. எபியால்டஸ் எனும் துரோகி, பின்புறமாக வந்து தாக்குவதற்கு வசதியான ஒரு பாதையைக் காட்டிக் கொடுத்ததால், பின்புறத்தில் இருந்தும் பாரசீகப் படை தாக்கியது. நாற்புறத்திலும் பகைவர்கள் சூழ்ந்தனர். 300 ஸ்பார்ட்டா வீரர்களும் மடிந்தனர். இறுதி நிமிடம் வரை போரிட்டு, லியோனிடாசும், களத்தில் வீரச்சாவு எய்தினார்.

அந்தக் கணவாயில் செதுக்கப்பட்டு உள்ள கல்வெட்டில், ‘ஓ பயணியே, போய்ச் சொல்; ஸ்பார்ட்டாவுக்குப் போய்ச் சொல்; ஸ்பார்ட்டாவுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டோம். கடமையைச் செய்து விட்டு, இங்கே படுத்து இருக்கிறோம்’ என்று சொல்.

மெய்சிலிர்க்கச் செய்யும் இந்த வீரகாவியத்தை, மாவீரன் கரிபால்டி, தன் நெஞ்சில் எழுதிக் கொண்டார்.

எதிரிகளிடம் பிடிபடாமல் தப்பிக்க, தனது உண்மைப் பெயரை மறைத்துச் சொன்ன பெயர், மாவீரன் லியோனிடாசின் உடன்பிறந்த தம்பி கிளியாம்பராட்டோ எனும் பெயர் ஆகும்.

கியூபா புரட்சிகர யுத்தத்தின் முக்கியமான ஒரு களத்தில், புரட்சியாளர் சே குவேரா கூறும்போது, தெர்மாபிளே களம் கண்ட லியோனிடாசின் வீரர்களைப்போல், எதிரிகளைச் சாய்ப்போம்’ என்றார். இங்கும், தெர்மாபிளே யுத்தத்தை அற்புதமாகச் சித்தரிக்கும் இந்தத் திரைப்படத்தைத் தன் சகாக்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டு, தலைவர் பிரபாகரன் அவர்கள், ‘நம்முடைய முடிவும், கடைசியாக இப்படி அமையக்கூடும்’ என்றாராம். அவர்களுக்குள் பேசும்போது, ‘நமக்கேன் இந்த முடிவு வரும்? வென்று விடலாமே? தலைவர் ஏன் இப்படிச் சொல்லுகிறார்? என்று ஒன்றும்புரியாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்களாம்.

16 ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, விருதுநகர் தொகுதியில் நான் தோற்றுப் போனதையும், தமிழகத்தில் நமது அணி பெரும்பான்மை பெறாததையும், அகில இந்திய அளவில், காங்கிரஸ் அணியே வெற்றி பெற்றதையும் அறிந்தபோது, தமிழ் ஈழத்தைத் திட்டமிட்டு அழிக்க இனக்கொலை யுத்தத்தை இயக்கிவந்த தலைமை அல்லவா மீண்டும் இந்திய அரசின் லகான்களை இயக்கப்போகிறது என்ற மனவேதனையில், மாலை 5.30 மணி அளவில், கட்டிலில் போய்ப் படுத்தேன். என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

ஒரு விசித்திரமான கனவு. ‘தலைவர் பிரபாகரனைப் பார்க்க வாருங்கள் என்று யாரோ என்னை அழைத்துச் செல்லுகிறார்கள். ஒரு பெரிய பரந்த மண்டபம். அங்கே பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்குப் புலப்படவில்லை. அந்தப் பெரிய அரங்கத்தின் ஒரு மூலையில் திரைச்சீலைகள் தொங்குகின்றன. அதன் அருகே என்னை அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் ஒருவர் தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் சத்தம் கேட்கிறது. அந்தத் திரைச்சீலை, நடுவில் இரண்டு கைகளால் விலக்கும் வகையில் அமைந்தது. தலைவர் உள்ளே இருக்கிறார் பாருங்கள் என்றார்கள். நான் அவரிடம் பேசலாம் என்று எண்ணி, அந்தத் திரைச்சீலையை இரண்டு கைகளாலும் விலக்குகிறேன். அங்கே, ஒரு ஐந்து ஆறு அடி தூரத்தில், ஒரு மரக்கட்டிலில், தலையை இலேசாக வலதுபுறமாக சாய்த்துக்கொண்டு பிரபாகரன் அவர்கள் சீருடையில் படுத்துக் கிடக்கிறார். இடது முழங்கால் தரையைத் தொட்டவாறு இருக்கிறது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அந்தத் தோற்றத்தில் தெரிகிறார். வேறு எவரும் அங்கு இல்லை. அயர்ந்து தூங்குகிறார் போலும் என்று நான் நினைக்கிறேன்.

நம்மை வரச்சொல்லிவிட்டு, இப்படித் தூங்க மாட்டாரே என்றும் எண்ணுகிறேன். சரி. எவ்வளவோ களைப்பும், அயர்வும் இருக்கும். தூங்கட்டும் என நினைக்கிறேன். என் கனவு கலைந்துவிட்டது. விழித்துக்கொண்டேன். ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படிக் கனவு வந்தது என்று மனம் குழம்பித் தவித்தது. கடந்த இருபது ஆண்டுகளில், என் கனவுகளில் பிரபாகரன் வந்ததே இல்லை.

வெளியில் இருந்த சகோதரர் திருச்சி அடைக்கலத்தை, அறைக்கு உள்ளே அழைத்தேன்.. கனவில் கண்டதைச் சொன்னேன்.

‘என் ஊனில், உதிரத்தில், என் எண்ணத்தில், உணர்வில் பூசிக்கத்தக்கவராக இரண்டறக் கலந்துவிட்ட பிரபாகரா, ஒரு காலத்தில் நீ என் சகோதரன்.
அதற்குப்பின்னர் எப்போதோ, நீ எனக்குத் தலைவன்’ என்று மனதுக்குள் வரித்துக்கொண்டவன் நான்.

என் நெஞ்சில் ஒளிரும் சுடரே, என் கனவில் வந்த அதே நிமிடத்தில், இந்த எளியவனையும் நீ நினைத்தாயோ? என்று எண்ணுகிறபோதே, என் இதயம் வெடிக்கிறதே. நாலாபுறத்திலும், மரண பயங்கரம் சூழ்ந்த வேளையிலும்கூட, என்னையும் நீ நினைத்து இருந்தால், இந்தப் பிறவியில் அதைவிடப் பெரிய பாக்கியம் எனக்கு எதுவும் இல்லை.

நீ மடிந்து விட்டாய் என்று, என்னால் கற்பனையில்கூட நினைக்க இயலவில்லை. நீ உயிரோடு இருக்கிறாய் என்று தகவல்கள் ஒருபுறத்தில் வந்தாலும்கூட, ஸ்பார்ட்டா வீரர்களைப் போல், நீயும் உன் சகாக்களும், களத்திலே போராடி கடைசியில் உங்கள் உயிர்களை நீங்களே மாய்த்துக் கொண்டீர்களோ?

பகைவர்களின் கையில், உன் உடல் கிடைக்கக் கூடாது என்று, நீ 1988 லேயே உன் தோழர்களுக்குக் கட்டளை பிறப்பித்ததை நான் அறிவேன். ‘நான் மடிய நேரிட்டால், அக்கணத்திலேயே என் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து என்னைச் சாம்பலாக ஆக்கிவிடுங்கள்’ என்ற ஆணை அதுவாகும்.

உன்னைப்போன்ற ஒரு வீரமகனை, இனி ஆயிரம் ஆண்டுகளானாலும், தமிழ் இனம் பெறப்போவது இல்லை. உனக்கு மரணம் இல்லை. உன் சொல்லுக்கும், செயலுக்கும், உன் வீரத்துக்கும் மரணம் இல்லை. என்றுமே தமிழ் ஈழத்துக்கும், தமிழ் இனத்துக்கும் வழிகாட்டும் பேரொளிதான் நீ.

நீ உயிரோடு இருப்பதாகவே எண்ணிக்கொண்டு, தமிழ் ஈழ மக்களும், தாய்த் தமிழகத்துத் தன்மானத் தமிழரும், பயணத்தைத் தொடர்வோம். உன் நினைவு ஒன்றுமட்டுமே போதும், எங்களை இயக்கிக்கொண்டே இருக்கும். அந்த உள்ளொளியாய் என்றுமே நீ எங்களை வழிநடத்துவாய். மரணவேதனை நம் மனதைப் பற்றி எரிக்கும் இந்த நிலையிலும், இந்தக் கடிதத்தை நான் எழுதி முடிக்கிற இந்த நிமிடம் வரை, மாவீரர் திலகம் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக விடுதலைப்புலிகளின் தரப்பில் சொல்லப்படுவதால், நாமும் அந்த நம்பிக்கையோடு இயற்கைத்தாயை இறைஞ்சுவோம். தரணியில் தமிழ்க்குலம் தலைநிமிர, தமிழ் ஈழம் மலர, அவர் வாழ வேண்டும். பல்லாண்டு வாழ வேண்டும்.

இதயத்தில் கவலைகளைச் சுமந்துகொண்டே, முன்னிலும் உறுதியான வேகத்துடன் பணிகளை ஆற்றுவோம்; கடமையைச் செய்வோம். காலம் ஒருநாள் நிச்சயம் கருணை காட்டும் என்ற நம்பிக்கையுடன்.

சங்கொலியில் வைகோ கடிதம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)