தொடரும் இந்தியாவின் துரோகத்தை மன்னிக்க மாட்டோம்! தமிழ் ஈழத்தை அமைக்க, தமிழகத்து இளைஞர்களே கிளர்ந்து எழுங்கள்! வைகோ அழைப்பு
Issues: Human Rights, International, National, Srilanka
Region: Tamil Nadu
Category: Articles, Headlines, Speeches
தொடரும் இந்தியாவின் துரோகத்தை மன்னிக்க மாட்டோம்!
தமிழ் ஈழத்தை அமைக்க, தமிழகத்து இளைஞர்களே
கிளர்ந்து எழுங்கள்!
வைகோ அழைப்பு
(17.5.2011 அன்று சென்னை புரசைவாக்கம் டாணா தெருவில் நடைபெற்ற, முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை)
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும்
எங்கள் கருப்பையும் ஆயுதம் ஏந்தும்
என்ற உணர்ச்சி அலைகள், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் கொந்தளித்துக் கொண்டு இருக்கின்ற முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களுக்குப் புகழ் அஞ்சலியும், தமிழ் ஈழ விடுதலைக் களத்தில் உதிரம் சிந்தி, உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கமும் செலுத்துவதற்காக நாம் இங்கே உணர்ச்சிப் பிழம்பாகத் திரண்டு இருக்கின்றோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மே 17 ஆம் நாள், நம்முடைய நெஞ்சம் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு இருந்த, தாங்க முடியாத அந்த துக்கத்தைச் சுமந்து கொண்டு இருக்கின்ற நாம், களத்திலே மாண்டவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, தமிழ் இனத்தை அழிக்க மாபாதகம் செய்த கொடியவன் இராஜபக்சே கூட்டத்தை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தித் தண்டிப்பதற்குச் சூளுரைக்கவும், தாய்த் தமிழகம் ஆர்த்து எழவும் இந்த நிகழ்ச்சியை இங்கே நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.
அண்ணன் தா. பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 16 ஆம் தேதி வெளிவந்து, 24 மணி நேரம் கடந்த நிலையில், நடக்கக்கூடாத துக்கமெல்லாம் அங்கே நடந்து விட்டதோ என்று நாம் பதறித் தவித்துக் கொண்டு இருந்தோம்.
இங்கே மின்சாரம் தடைப்பட்டு இருள் சூழ்வதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. வானத்தில் வைகாசி முழுநிலவு ஒளி வீசிக் கொண்டு இருக்கின்றது. இது புத்த பெளர்ணமி என்று, வடபுலத்தில் இருக்கின்றவர்கள் போதிசத்துவர் என்னும் ஞானம் பெற்ற புத்தரைப் பாராட்டி, அன்பை, கருணையை, அறத்தைப் போதித்த புத்தர் பெருமானுக்குப் பெருமை சேர்க்கின்ற முழுநிலவு நாள் என்று கொண்டாடுகின்றார்கள். ஆனால், அந்த புத்த மதம் இலங்கைத் தீவில் கால் எடுத்து வைத்ததோ, அசோகவர்த்தனின் பிள்ளைகள் அங்கே சென்றார்கள் என்று சொன்னார்களோ, அந்த சிங்கள இனவெறிக் கூட்டம், புத்த பிட்சுக்களை முன்னிறுத்தி, புத்த மதத்தை முன்னிறுத்தி, தமிழர்களின் இரத்தத்திலே குளியல் நடத்திக் கொண்டு இருக்கின்றது.
அங்கே, வெளிக்கடைச் சிறையில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அதற்கு முன்னால், ஒரு அடி உயரத்துக்குத் தமிழர்களின் இரத்தம் தேங்கி நின்றது. 1983 ஆம் ஆண்டு, ஜூலை 25 ஆம் நாள், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். எனக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்குப் பிறகு, என் விழிகளை, பார்வை அற்ற ஒரு தமிழனுக்குப் பொருத்துங்கள். அந்தக் கண்களின் வழியாக, மலரப் போகின்ற தமிழ் ஈழத்தை நான் தரிசிப்பேன் என்று சொன்னதற்காக, குட்டிமணியின் கண்களை பூட்ஸ் காலால் நசுக்கினார்கள்.
இந்திய இலங்கைக் கூட்டு அறிக்கை
அதேபோல, இன்றைக்குப் புத்த பெளர்ணமியைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், மேலும் ஒரு துரோகத்தை இந்திய அரசு செய்து இருக்கின்றது. நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, தொலைக்காட்சியிலே ஒரு செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக அறிந்தவுடன், உடனடியாக, வலைத்தளத்தில் இருந்து அந்த அறிக்கையைப் பெற்று, இங்கே கொண்டு வந்தேன்.
தோழர்களே, இந்திய அரசு, தன் துரோகத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. உலகத்திலே பல்வேறு நாடுகள், தமிழர்களைக் குடிமக்களாகக் கொண்டு இராத நாடுகள், தொப்புள் கொடி உறவு இல்லாத நாடுகள், இலங்கைத் தீவிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; அதை விசாரிக்க வேண்டும்; போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றன. ஐக்கிய நாடுகள் மன்றம், போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்; ஏன் அமெரிக்காவே விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டு இருக்கின்ற வேளையில், ஐ.நா. குழுவின் அறிக்கைக்கு மாறாக, இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தக் கூட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
தோழர்களே, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு, இராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்த வேண்டும்; அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. நான் எவர் கருத்தையும் விமர்சிக்க விரும்பவில்லை. வருகின்ற கரங்களையெல்லாம் பற்றிக் கொண்டு நாங்கள் களத்துக்குச் செல்ல விரும்புகின்றோமே தவிர, எந்த வேற்றுமையையும் விதைப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.
நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. நாங்கள் தேர்தல் களத்தில் பங்கு ஏற்கவில்லை. தற்காலிகமாகத்தான் தேர்தல் களத்தில் பங்கு ஏற்கவில்லையே தவிர, ஈழத்தமிழர்களின் உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னணியில் நிற்போம். (பலத்த கைதட்டல்)
குற்றவாளிகள்
இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல, இந்திய அரசுதான் குற்றவாளி. இந்திய நாடு அல்ல குற்றச்சாட்டுக்கு ஆளாவது; இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை, அதன் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது தலைமையிலான அமைச்சரவை, அந்த அமைச்சரவையில் பங்கு ஏற்ற அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், இவர்கள் எல்லோரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், ஏ இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், ரடார்கள், அள்ளிக் கொடுத்த ஆயிரம் கோடி பணம், அனுப்பி வைத்த முப்படைத் தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், நீ தந்து உதவிய நவீனக் கருவிகள், துல்லியமாக இலக்குகளைக் கண்டறிந்து குண்டு வீசுவதற்குச் செய்து தந்த ஏற்பாடுகள்தான் காரணம்.
அடர்ந்த காட்டுக்கு உள்ளே முப்படைகளை உருவாக்கி வைத்து இருந்த பிரபாகரனை, உலகம் இதுவரை கண்டும், கேட்டும் அறியாத சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய அவர்களைக் களத்திலே வெல்ல முடியாது.
ஆயினும், களத்திலே அவர்கள் தோற்பதற்கு என்ன காரணம்?
என்னுடைய அருமைத் தோழர்களே, இளைஞர்கள், கட்சி எல்லைகளுக்கு உள்ளே கட்டுப்படாத வாலிபர்கள் பலர் இங்கே வந்து இருக்கின்றார்கள். அவர்களை நான் வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சியை நாம் சம்பிரதாயமாக நடத்தவில்லை. ஒப்புக்கு நடத்துகின்ற கூட்டம் அல்ல. ஈழத்தமிழர்களுக்காக நாங்களும் ஒரு கச்சேரி நடத்துகின்றோம் என்பது போன்ற கூட்டம் அல்ல. கருப்பையும் ஆயுதம் ஏந்தும் என்று சொன்னதைப்போல, எங்கள் இளைஞர்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டமும் வரும் (பலத்த கைதட்டல்).
ஈழத்தமிழ் இனத்தை அழிப்பதற்கு, இராஜபக்சேக்குத் தோள் கொடுத்துத் துணை நின்று கொண்டு, என்ன தைரியம் இருந்தால் நீ இன்றைக்கு அறிக்கை கொடுப்பாய்?
ஐ.நா. குழுவின் அறிக்கை
ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஒன்றும் தன் கடமையை முறையாகச் செய்து விடவில்லை. ஆனாலும்கூட, அனைத்து உலக நாடுகள் பல சுட்டிக் காட்டியதற்குப் பிறகு, ஒரு பெரும் போர்க்குற்றம் நிகழ்ந்துவிட்டது, இலட்சக்கணக்கான தமிழர்கள், குழந்தகைள், பெண்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற உண்மையை மூடி மறைக்க முடியாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி, மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.
ஒருவர், இந்தோனேசிய நாட்டின் முன்னாள் அட்டர்னி-ஜெனரல் மார்சுகி தரிஸ்மன்; இன்னொருவர், அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை அட்டர்னி ஜெனரல் ஸ்டீவன் ராட்னர்; இன்னொருவர் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் யாஸ்மின் சூகா அம்மையார்.
இந்த மூன்று பேரும், 2008 செப்டெம்பர் மாதம் முதல், 2009 மே மாதம் வரையிலும் இலங்கையில், சிங்கள அரசுப் படைகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போர்க்களத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மனித உரிமை மீறல்களை, மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரித்து அறிக்கை தர வேண்டும் எனப் பணிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் மூன்று பேரும் இலங்கைக்கு உள்ளே நுழையக்கூடாது என்று இலங்கை தடுத்தது. இந்தக் குழுவை அமைத்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனை இழிவுபடுத்தி, அதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை மகிந்த ராஜபக்சே அறிவித்து, ஒரு அமைச்சர் அங்கே உண்ணாவிரதம் இருந்தார். அதில், ‘பன்னாட்டு விபசாரத் தரகன்’ (International Pimp) என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனை அவமதித்து விளம்பரப் பலகை வைத்தார்கள்.
அதன்பிறகு, உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால், இந்த மூன்று பேரையும் அனுமதித்தார்கள். ஆயினும், அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகள் அனைத்துக்கும் போய்ப் பார்த்து விடவில்லை. ஆனாலும்கூட, அந்த மூன்று பெருமக்களும், உண்மையை அறிந்து, 204 பக்கங்களில் ஒரு அறிக்கை தந்து இருக்கின்றார்கள்.
அந்த அறிக்கையை, இணையதளத்தைப் பயன்படுத்துகின்ற அருமைத் தம்பிகளே, தங்கைகளே, தமிழ்ப் பிள்ளைகளே, கல்லுhரி மாணவர்களே, அதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். ட்விட்டர், ஃபேஸ் புக் இணையதளங்களின் வழியாகக் கருத்துகளைப் பரப்பி, நைல் நதிக்கரையில், எகிப்து நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி விட்டார்கள், ஆட்சியை மாற்றி விட்டார்கள். அந்தப் புரட்சியின் கனல், வளைகுடா நாடுகளிலும் பரவிக் கொண்டு இருக்கின்றது. அதைப்போலத், தமிழகத்து இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அந்த இளைஞர்களுக்குச் சொல்லுகிறேன்.
ஐ.நா. மூவர் குழு அளித்த அறிக்கையை வாசிக்கவே முடியவில்லை. அவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றான். இந்தியாவின் ஆயுதங்கள் மட்டும் அல்ல, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் என இத்தனை நாட்டு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றான்.
தமிழா உன் தலைவிதியைப் பார்த்தாயா? பாகிஸ்தானும், இந்தியாவும், நான்கு முறை களத்தில் மோதிக் கொண்டன. ஆனால், இன்றைக்குத் தமிழன் தலையிலே குண்டு போட, தமிழச்சியைக் கொல்ல, இரண்டு பேரும் சேர்ந்து ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றார்கள். ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கெடுபிடிப் போர். ஆனால், அந்த இரு நாடுகளும், தமிழனை அளிக்க ஆயுதங்கள் கொடுத்தன.
இவையெல்லாம், அணு ஆயுத வல்லரசுகள். இஸ்ரேல் ஃகைபர் ஜெட் விமானங்களில், ஈரானின் குண்டுகள். இத்தனை நாடுகளின் படைகளும் ஆயுதங்களும் சேர்ந்து, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க ஏற்பாடு செய்தார்கள். இவை அனைத்தையும் எதிர்த்து ஈடுகொடுத்து நின்றார்கள் விடுதலைப்புலிகள்.
மகாபாரதத்தில் 13 ஆம் சருக்கத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்ததைப் போல, இராமாயணத்தில் இந்திரஜித்தனை நிகும்பலையில் வளைத்ததைப் போல, இவ்வளவு படைகளும் சேர்ந்து கொண்டு தாக்கியபோதும் அவர்கள் எதிர்த்து நின்றார்கள். அவர்களை மட்டும் அல்ல, பச்சிளங்குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். அந்த மெல்லிய கரங்கள் கால்கள், உடல் உறுப்புகள், பீரங்கிகளின் தாக்குதலில் சீறி வருகின்ற கத்தி போன்ற தகடுகள், அப்படியே அறுத்துப் போட்டு விட்டன. கிழித்துப் போட்டு விட்டன.
அந்தத் துன்பத்தை நாம் எப்போது உணர முடியும் தெரியுமா? உன் மடியிலே தவழுகின்ற பிள்ளையை, உன் பேரப்பிள்ளையை, பேரக்குழந்தையை, அந்த இடத்திலே வைத்துப் பாருங்கள். அப்போதுதான், உணர முடியும்.
அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? புலிகள் அமைத்த பதுங்கு குழிகளை விட்டு, பாதுகாப்பு வலையம், பாதுகாப்பு வலையம் என்று சொல்லி அங்கே போங்கள் என்று இராணுவம் நெருக்கிக் கொண்டே போகிறது. அங்கே குண்டு போட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு நெருக்கிக் கொண்டே போனார்கள். 3,30,000 பேர், அந்தப் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே கொண்டு வந்து திணிக்கப்பட்டார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ.நா. மூவர் குழுவின் அறிக்கை சொல்லுகிறது.
ஆனால், கேடு கெட்ட இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றத்தில் 2009 பிப்ரவரி 18 ஆம் நாள், 70,000 பேர்கள்தான் பாதுகாப்பு வலையத்துக்கு உள்ளே இருப்பதாகச் சொன்னாய். இலங்கையில் ராஜபக்சே சொன்னதை, மூன்று நாள்களுக்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி இங்கே சொன்னார். கலைஞர் கருணாநிதியும் அதையே சொன்னார்.
வேறு என்ன சான்று வேண்டும்?
அங்கே குண்டு வீசினான். புது மத்தளான் மருத்துவமனையில், முள்ளிவாய்க்கால், வன்னி என எல்லா மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசினான். அது மருத்துவமனைகள் என்று தெரிந்து கொண்டுதான் குண்டுகளை வீசினான். காயப்பட்டுக் கிடந்தவர்களைக் கொன்றான். அதனால், காயப்பட்டவர்களை மரத்தடிகளில் கொண்டு வந்து வைத்து இருந்தார்கள். அங்கே இருந்த மருத்துவர்கள் அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள். அங்கே மருந்துகள் இல்லை. மயக்க மருந்து இல்லாமல், அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்கள். சுத்தப்படுத்தப்பட்ட கருவிகள் இல்லை. எனவே, கசாப்புக் கடைகளில் பயன்படுத்துகின்ற வெட்டுக் கத்திகளை வைத்து, காயப்பட்ட உறுப்புகளை வெட்டி எடுத்து இருக்கின்றார்கள். இதையும் நான் சொல்லவில்லை, ஐ.நா. குழு சொல்லுகிறது.
இரத்தம் இல்லை யாரிடமும். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளியின் ரத்தத்தையே எடுத்து, பிளாஸ்டிக் பைகளில் வைத்து, மீண்டும் ஏற்றியதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இனப்படுகொலை என்பதற்கு, இதைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும்?
நாஜிகள் கூட இந்தக் கொடுமையைச் செய்யவில்லையே?
பதுங்கு குழிகளில் பதுங்கிக் கிடந்த பிள்ளைகள் பதறிக் கொண்டே இருந்தார்கள். அங்கே வெள்ளைக் கொடிகளை ஏற்றி, இங்கே குழந்தைகள் இருக்கின்றார்கள் என்று சொன்னார்களாம். உடனே, அங்கே போய் குண்டுகளைப் போட்டுக் கொன்றான். நீண்ட நேரம் பதுங்கு குழியில் இருக்க முடியாமல் வெளியே வந்த குழந்தைகள் குண்டு வீச்சுக்குப் பலியானார்கள். உணவு வழங்குகின்ற மையங்கள் மீது குண்டுகளை வீசினான். ஐ.நா. மன்றத்தின் அலுவலத்தின் மீது குண்டு வீசினான். பால் பவுடர் கொடுக்கின்ற மையங்களின் மீது குண்டுகளை வீசினான். செத்துக் கிடந்த பெண்களின் கைகளில், பால் பவுடர்கள் வாங்குவதற்கான அட்டைகள் இருந்தன என்று அறிக்கை சொல்லுகிறது.
நெஞ்சைப் பதற வைக்கின்ற, நினைத்துப் பார்க்கவே முடியாத துயரங்களுக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்திய அரசுதான். உன்னை எப்படி நாங்கள் மன்னிக்க முடியும்? பிரச்சினையைத் திசை திருப்பக் கூடாது.
எதற்காக வாழ்த்துகிறாய்?
விசாரணைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. இந்தியாவை நேசிக்கிறோம், இந்திய மக்களை நேசிக்கிறோம் என்றார் பிரபாகரன். ஆனால், இத்தாலிய சோனியா காந்தி திட்டமிட்டு, ஈழத் தமிழ் இனத்தைக் கரு அறுப்பதற்கு, மன்மோகன் சிங் அரசைப் பயன்படுத்திக் கொண்டார். எலும்புத் துண்டுகளைப் போடுவது போலச் சில மந்திரி பதவிகளைக் கருணாநிதிக்குத் துhக்கி எறிந்தார். அதையே சாசுவதம் என்று நினைத்து, இன்றைக்குத் தீராத பழியைத் தேடிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி. அவருக்காக நான் வேதனைப்படுகிறேன். அது அண்ணா உருவாக்கிய இயக்கம், இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நாங்கள் வளர்த்த இயக்கம். எல்லாவற்றையும் பாழாக்கி விட்டீர்களே? வருத்தப்படுகிறேன்.
பழிதானே மிஞ்சியது? இழிவுச் சொல்தானே மிஞ்சியது? இனத்துரோகி என்ற பட்டம்தானே மிஞ்சியது?
காரியம் முடிந்தால், கையில் காசு இருந்தாலும் கதவைச் சாத்தடி என்று சோனியா காந்தி, போயஸ் தோட்டத்துக்கு வாழ்த்துச் சொல்லுகிறாள். அன்றைக்குத் தனது பழிவாங்கும் காரியத்தை முடிக்க கருணாநிதி தேவைப்பட்டார் சோனியா காந்திக்கு.
இந்தியை எதிர்த்த மொழிப்போரில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரர்கள் உலவிய இந்தத் தமிழகத்தில், சுடுடா பார்ப்போம் என்று தி.மு.க.வின் தீரர்கள் மார்பைக் காட்டி நின்றார்கள். அந்தத் தி.மு.க. என்ன ஆயிற்று?
நாம் ஒன்றும் கிளார்க் வேலை பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே
எங்கள் வாள் வலியும் தோள்வலியும் போச்சே
என்றான் பாரதி.
தமிழர்கள், வாளோடு போராடியவர்கள், மானத்துக்காகப் போராடியவர்கள். அது தெரியும் சோனியா காந்திக்கு. அந்தத் தமிழகம் பொங்கி எழுந்து விடாமல் தடுப்பதற்காக, அன்றைக்குக் கலைஞர் கருணாநிதி தேவைப்பட்டார். தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை அடக்கக் கருணாநிதி ஒரு தீர்மானம் போட்டார். அதைத்தான் முத்துக்குமார் தன் மரண சாசனத்தில் சுட்டிக் காட்டினான்.
துரோகத்துக்கு மேல் துரோகம்.
ஜெர்மனியின் கடிதம்
2009 மே 19 ஆம் நாள், ஜெர்மனி அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தது. இலங்கையில் போர்க்குற்றம் நடந்து விட்டது. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். இதைப்பற்றி, உடனடியாக மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார்கள். வாக்கு அளிக்கும் உரிமை பெற்ற 47 நாடுகள் உள்ளன. அதில், மூன்றில் ஒரு பங்கு நாடுகள் கையெழுத்து இட்டுக் கோரிக்கை விடுத்தால், உடனே கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டம்.
ஜெர்மனியோடு மேலும் 16 நாடுகள் சேர்ந்து, மொத்தம் 17 நாடுகள் கையெழுத்துப்போட்டு, ஒரு கடிதத்தைக் கொடுத்தன. ஆகவே, மனித உரிமைகள் ஆணையத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. மே 17 இல், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்கு உள்ளாகக் கடிதம் கொடுத்தார்கள்.
ஜெர்மனி என்ன தமிழனின் தொப்புள் கொடி உறவா? ஜெர்மானியிலே, தமிழர்கள் கோடிக்கணக்கில் வசிக்கின்றார்களா? அவன் கொடுத்தான் தீர்மானம். எனவே, கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதை அறிந்து கொலைகாரப் பயல் ராஜபக்சே அரசு, இந்தியாவை உடனே அணுகியது. இவர்களும் யோசனை சொன்னாக்ள் நீ ஒரு தீர்மானத்தை எழுதிக் கொண்டு வா என்று.
ஜூன் 25 ஆம் நாள் கூட்டம் கூடியது. உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? போர்க்காலத்தை மிகச் சாதுர்யமாகச் சமாளித்து, சாதாரண மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வெற்றிகரமாக நடத்தி, அமைதியை நிலைநாட்டியதற்காக இலங்கை அரசைப் பாராட்டுவதாக ஒரு தீர்மானம்.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போட வைப்பதற்கு, இந்திய அரசு, கச்சை கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. அதனால், 29 நாடுகள் அதை ஆதரித்து வாக்கு அளித்தன. அப்படி எந்தெந்த நாடுகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு எதிராக, சிங்களக் கொலைபாதகனுக்கு ஆதரவாக வாக்கு அளித்தன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், மாவோ உலவிய சீனா, லெனின் உலவிய ரஷ்யா, கியூபா, விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்காமல் வீறு கொண்டு வெடிக்கும் என்று புரட்சி பூபாளம் இசைத்த ஃபிடல் கேஸ்ட்ரோ உலவுகின்ற கியூபா, அர்ஜெண்டைனாவில் பிறந்து, பொலிவியக் காடுகளில் மடிந்த சேகுவேரா கைகளில் துப்பாக்கி ஹவானா வீதிகளில் வலம் வந்தானே, அந்த கியூபா, எங்கள் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்துப் போட்டது.
அடுத்தது, அங்கோலா, அசர்பெய்ஜன், பàரைன், பங்களாதேஷ், பொலிவியா, பிரேசில், பர்கினோ ஃபசோ, கேமரூன், ஈஜிப்ட், கானா, இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மடகாஸ்கர், நிகரகுவா, நைஜீரியா, ஃபிலிப்பைன்ஸ், கட்டார், செளதி அரேபியா, செனகல். மிகுந்த வேதனை என்ன தெரியுமா? அண்ணல் காந்தியார் அறப்போர் நடத்தினாரே, நாங்கள் நெஞ்சிலே போற்றுகின்ற நெல்சன் மண்டேலா இன்றும் உலவுகின்ற தென்னாப்பிரிக்கா. இத்துடன், முதலில் 17 நாடுகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்ட உருகுவே, பின்னர் யூதாசாக மாறி இலங்கையை ஆதரித்தும் கையெழுத்துப் போட்டு விட்டான். அடுத்தது ஜாம்பியா.
ஆனால், என்னுடைய அன்புத் தமிழ்ப் பெருமக்களே, இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்கின்ற வகையில்,இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை எதிர்த்து வாக்கு அளித்த நாடுகள் எவை தெரியுமா? அதில், விடுதலைப் புலிகளைத் தடை செய்து உள்ள நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும், போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று வாக்கு அளித்து இருக்கிறார்கள்.
கிரேட் பிரிட்டன், வடக்கு அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, சுலோவேனியா, சுலோவேக்கியா, நெதர்லாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சிலி, கனடா, போஸ்னியா ஹெர்சகோவினா. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்.
அர்ஜென்டைனா, கேபோன், ஜப்பான், மொரீஷியஸ், தென் கொரியா ஆகிய நாடுகள், இரண்டு பக்கமும் வாக்கு அளிக்கவில்லை.
இலங்கை அரசு வெற்றிகரமாக நிலைமையைச் சமாளித்து விட்டது என்று பாராட்டுத் தீர்மானம் அது.
இன்றைக்கு, மார்சுகி தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவின் கடைசிப் பரிந்துரை என்ன தெரியுமா? மிக முக்கியமானது.
அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை, ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள்.
அது மட்டும் அல்ல. ஐ.நா. மன்றம் தன் கடமையில் தவறி விட்டது; ஆகவே, ஐ.நா. மன்றம், இந்தப் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு உரிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
ராஜபக்சே தப்பிக்க முடியாது
இப்போது, அனைத்து உலக நாடுகளின் முன்பு உள்ள பிரச்சினை என்ன? 1946 இல் நுhரெம்பர்க் நீதிமன்றத்தில் நாஜிகள் நிறுத்தப்பட்டதைப் போல. போர்க்குற்றம் செய்த மகிந்த ராஜபக்சே, கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அன்றைக்கு 12 நாஜித் தளபதிகள் துhக்கில் இடப்பட்டார்கள். அடால்ப் பிட்ஸ்மென் என்ற ஒருவன் தப்பித்து ஓடி விட்டான். அர்ஜென்டைனாவுக்குச் சென்று, வேறு பெயரில் ஒளிந்து இருந்தான். பல தளபதிகள், பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அர்ஜென்டைனாவில் இருந்தவனைத் தேடிப்பிடித்து, 1960 ஆண்டு கைது செய்து, இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தித் தூக்கில் இட்டார்கள்.
1948 இல் டோக்யோ விசாரணை மன்றத்தில், 7 தளபதிகளை போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்துத் தூக்கில் இட்டார்கள்.
செர்பிய இனப்பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட மிலோசெவிக், சிறையில் அடைக்கப்பட்டு, மாரடைப்பால் செத்துப் போனான். இப்படி எத்தனையோ எடுத்துச் சொல்லலாம். இப்போது, சூடான் நாட்டு அதிபர் அல் பசீர் மீது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறான். அதுபோல, பெண்கள்,குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே எப்படித் தப்பிக்க முடியும்?
முள்ளிவாய்க்கால் சோகம்
அது மட்டுமா? இந்த அறிக்கையில் மேலும் சொல்கிறார்கள், இளைஞர்களை எல்லாம் தனியாகக் காட்டுக்கு உள்ளே கொண்டு சென்று, சுட்டுக் கொன்றார்கள். இதையெல்லாம் நாம் அப்போதே சொன்னோமே? அதைப் பல பேர் நம்பவில்லை. இன்றைக்கு ஐ.நா. குழு சொல்லுகிறது. பெண்களை அம்மணமாக்கி இழுத்து வந்தார்கள். அவர்களை அடைத்து வைத்த இடங்களில், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றபோதும், சிங்களச் சிப்பாய்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். குளிப்பதற்கோ, கழிப்பறை வசதிகளோ கிடையாது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகின்ற நம் சகோதரிகளின் நிலைமையப் பார்த்தீர்களா?
உங்கள் பிள்ளைகள் பட்டினி கிடக்கின்றார்களே, எங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்தால் உணவு தருகிறோம் என்று சிங்களச் சிப்பாய்கள் சொன்னதையும், ஐ.நா. அறிக்கை சொல்லுகிறது. உலகத்தில் எங்கும் நடக்காத கொடுமைகள். தமிழச்சியாகப் பிறந்தது பாவம், தமிழனாகப் பிறந்தது பாவம். இதைத்தவிர வேறு என்ன பாவம் செய்தோம்?
கூட்டம் கூட்டமாகச் செத்துக் கிடந்தார்கள். அவர்களைப் புதைக்கவும் முடியவில்லை, எரிக்கவும் முடியவில்லை. அந்த உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிரப்பியது என்கிறார்கள். இங்கே நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம். இந்தக் கூட்டம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பினாலும், அங்கே உங்களுக்குச் சோறு போட, உங்கள் தாய் இருப்பாள், தங்கை இருப்பாள், இல்லத்து அரசி இருப்பாள். ஆனால், காடுகளில், மரக்கிளைகளுக்குக் கீழே கிடந்த அந்த மக்கள், உணவு இல்லாமல், பட்டினியால் செத்தார்கள். மருந்துகள் இல்லாமல் செத்தார்கள். அவர்களைக் காப்பாற்ற செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வந்தது. அங்கே குண்டு வீசினான் என்று அறிக்கை சொல்லுகிறது. அந்தக் கப்பலை நோக்கி வந்த மக்கள் மீது, கடற்கரையில் குண்டு வீசினான். தப்பிச் செல்ல முயன்றவர்களைக் கொன்று குவித்தான்.
நயவஞ்சகம்
தா.பா. சொன்னதைப் போல, செய்தியாளர்களை, ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவே இல்லை. எங்கள் ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்ததற்குப் பிறகு, 2009 மே 18 ஆம் நாள் அதிகாலையில், உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொள்ளலாம்; எந்த ஆபத்தும் கிடையாது என்று ஐ.நா. மன்ற அதிகாரிகள் மூலம் தகவல் சொல்லி அனுப்பி, பிரிட்டன், நோர்வே, அமெரிக்காவுக்குத் தகவல் சொல்லி, அதற்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் பூலித்தேவன், கர்னல் ரமேஷ் போன்றவர்களுக்குத் தகவல் கொடுத்து, வாருங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று வஞ்சகமாக வரவழைத்தனர். நடுவராக, இன்னொரு நாட்டின் பிரதிநிதி வரவேண்டும் என்று அவர்கள் கேட்டதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
மகிந்த ராஜபக்சே, கொத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மற்றும் அதிகாரிகள், நீங்கள் இந்தப் பாதை வழியாக வரலாம்; வெள்ளைக் கொடி பிடித்து வாருங்கள் என்று வரவழைத்து இருக்கின்றார்கள். அதேபோல, ஒரு வெள்ளைக் கொடி பிடித்து குடும்பத்தோடு மொத்தம் 300 பேர் வந்தனர். எல்லோரையும் சுட்டுக் கொன்று விட்டான். நடேசனைச் சித்திரவதை செய்து கொன்று இருக்கிறான். படங்கள் இருக்கின்றன.
உலகில் இதுபோல எங்காவது நடந்தது உண்டா? நயவஞ்சகமாக வரவழைத்துக் கொன்று இருக்கிறான். இதுதான் போர்க்குற்றம். எனவே, ஜெனீவா விதிகளின்படி இதை விசாரிக்க வேண்டும். சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளை, ஆதாரமாக இந்த அறிக்கை சொல்லுகிறது.
எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக இழுத்து வந்தார்கள். அவர்களுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டி இருந்தார்கள். கண்களைக் கட்டி இருந்தார்கள். அவர்களை மண்டியிடச் சொல்லி மிதித்தான். ஒவ்வொருவராகப் பிடறியில் சுட்டான், ரத்தம் சிதறி அடித்தது. துடிதுடித்துச் செத்தான். அதை இந்த அறிக்கை சொல்லுகிறது. இது பழைய படமாகத் தெரிகிறது என்று கலைஞர் கருணாநிதி சொன்னார். ஆனால், அது உண்மைச் சம்பவம் என்று ஐ.நா. குழு சொல்லுகிறது.
உலகத்தில் காட்டுமிராண்டியா வாழ்ந்தவர்களுக்கும், ஆடை அணியும் கலையைக் கற்றுக் கொடுத்த தமிழனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா?
அதைவிடக்கொடுமை, 2010 டிசம்பர் 2 ஆம் நாள் இன்னொரு காணொளியை ஒளிபரப்பியது சேனல் 4 தொலைக்காட்சி. அதைப் பார்க்க முடியாது. நான் ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் என்று வெளியிட்ட குறுந்தகட்டிலே அரை நிமிடம் காட்டியதற்கே நான் துடித்துப் போனேன். பிறந்த மேனியோடு சிதைக்கப்பட்டுக் கிடக்கிறாள் இசைப்பிரியா. யாழ் வாசிப்பதிலே வல்லபி. அந்த அழகான பெண், அகல் என்ற பெயர் கொண்ட தன்னுடைய நான்கு மாதக் கைக்குழந்தையைக் குண்டுவீச்சிலே பறிகொடுத்த அந்தத் தங்கை இசைப்பிரியாவை, சிங்கள வெறிநாய்கள் கூட்டமாகக் கற்பழித்துக் கொன்று இருக்கின்றார்கள். அதைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம், செல்போன்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வளவு கொடுமைகளையும் செய்த இராஜபக்சே கூட்டத்தைக் கூண்டிலே நிறுத்த வேண்டும் என்று உலகம் சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது, முன்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அவனுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டிக் கொடுத்த இந்தியா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் போட்டபோது, அவனுக்கு எல்லாப் பொருளாதார உதவிகளையும் செய்தது இந்தியா. அதுமட்டும் அல்ல, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினனாக அவனை அழைத்துக் கொண்டு வந்து, திருப்பதியில் பூரண கும்ப வரவேற்பும் கொடுத்தார்கள் என்றால், ஏழு கோடித் தமிழர்கள் குடிமக்களாக உள்ள இந்தியா நாடே ராஜபக்சேயை வரவேற்கிறது, அப்படியானால், அங்கே போர்க்குற்றம் எதுவுமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்குக் காட்டுவதற்காக இந்தியா செய்த துரோகம் இது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
இன்னமும் சொல்கிறேன், இந்தியா அரசுதான் இந்தப் போரைத் திட்டமிட்டு இயக்கியது. வாஜ்பாய் அரசு இருந்தவரையில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கத் துணை நின்றது. ஆனால், இவர்கள் அழிப்பதற்குத் திட்டம் போட்டார்கள்.
அறிவுரை சொல்வது எளிது
இன்றைக்குச் சிலர், அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லுகிறார்கள். அப்படி அறிவுரை சொல்லுவது எளிது. கஷ்டப்பட்டால்தான் தெரியும். நாங்கள் என்ன பிழைப்புக்காக அரசியல் நடத்துகின்றோமா? இந்த மண்ணில் பிறந்த கடமைக்காகத் தமிழ் இனத்தைக் காக்கப் பொதுவாழ்க்கைக்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றோம். (பலத்த கைதட்டல்)
ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியப் பிரதமரிடம் கெஞ்சி இருக்கின்றோம், மன்றாடி இருக்கின்றோம், போராடி இருக்கின்றோம் தெரியுமா?
இந்தியா உதவியோடுதான் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தோம் என்று இராஜபக்சேவே சொல்லி விட்டான். அவனுடைய அமைச்சர்களும் சொன்னார்கள். இந்தியாதான் இந்தப் போரை நடத்தியது.
2008 நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, போர் நிறுத்தம் வேண்டும் என்று, தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். 13 ஆம் தேதி அந்தப்பயல் டெல்லிக்கு வந்தான். போர் நிறுத்தமா? அதெல்லாம் கிடையாது என்று, பிரதமர் வீட்டு வாசலில் நின்றுகொண்டு சொல்லுகின்ற துணிச்சல் அவனுக்கு எப்படி வந்தது? என்ன கொழுப்பு அவனுக்கு? இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தப் போரை நடத்தியதால்தான் இப்போது அவனைப் பாதுகாக்கத் துடிக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலில்தான் மரண அடி கொடுத்து இருக்கின்றானே தமிழன், 58 இடங்களிலே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து இருக்கின்றானே? அதற்காக, போயஸ் தோட்டத்துக்கு வாழ்த்துச் சொல்கிறீர்களா மேடம் சோனியா? எங்களை எவனும் ஏமாற்ற முடியாது.
எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் நான் குற்றம் சொல்லவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் வளர்த்தவர்களுள் ஒருவர் அண்ணன் நெடுமாறன். அண்ணாவுக்குத் தம்பியாக இருந்தார், அவரது நெஞ்சங் கவர்ந்தவராக இருந்தார். காமராசரின் நேசத்துக்கு உரியவராக இருந்தார். எனவே, காங்கிரஸ் என்ற இயக்கத்தை நான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. இத்தாலிய சோனியா காந்தி கூட்டம்தான் காரணம். பகத்சிங் பிறந்த பஞ்சாப்பில் பிறந்த மன்மோகன் சிங்கை நாங்கள் மதித்தோமே? இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து விட்டீர்கள்?
இன்றைக்கு இரண்டு பேரும் சேர்ந்து அறிக்கை கொடுத்து இருக்கின்றார்கள். என்ன அறிக்கை தெரியுமா? அதைத் தொலைக்காட்சிகளில் எப்படி ஒளிபரப்புகிறார்கள் தெரியுமா? இலங்கை அரசு, போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, தானே விசாரிப்பதற்கு, இலங்கை அரசே ஏற்பாடு செய்யும் என்பது இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, இந்திய அரசு அதை ஏற்றுக் கொண்டது என்று தொலைக்காட்சிகளில் சொல்லுகிறார்கள்.
ஆனால், அப்படி இல்லை. ஐ.நா. தலையிட்டு ஒரு குழு அமைக்கிறது என்று சொன்னவுடன், இந்தக் கொலைகாரப் பயல், அவன் ஒரு குழுவை நியமித்தான். Lessons Learned and Reconciliation Commission. அதாவது, கற்றுக்கொண்ட பாடங்கள், நேர்ப்படுத்தும் ஆணையம். இது அவன் போட்டது. சுருக்கமாக, LLRC என்கிறான். இதற்கு, நான் எனன பெயர் வைத்தேன் தெரியுமா? Lies Launched and Renegade Commission.
அவன் சொல்வதெல்லாம் பொய். அது, ஆளுங்கட்சிக்குச் சாதகமான ஆணையம். நடுநிலையோடு விசாரிக்கவில்லை. இது ஒரு பித்தலாட்டம். இன்றைக்கு, இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து கொடுத்து இருக்கின்ற இந்த அறிக்கையில், நாங்களே எல்லாம் விசாரித்துக் கொள்வோம் என்று அந்தக் கொலைகாரப் பயல், இந்தியாவிடம் சொல்லி விட்டானாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை
இந்தியா என்ன செய்யப் போகிறது? அங்கே உள்ள மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கு சீக்கிரமாக வேலை செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்களாம். இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் சொல்லுகிறான், மனிதாபிமான முறையில், எங்களுக்கு இந்தியா உதவி செய்தது என்கிறான். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உதவியது. பலாலி விமான தளத்தை மேலும் பழுதுபார்த்துப் புதுப்பித்துக் கொடுப்பதற்கு, இந்தியா உதவி செய்கிறது. அந்தப் பலாலி விமானதளத்திலே இருந்துதானே விமானத்தை ஏவி, செஞ்சோலையில் 61 குழந்தைகளைக் குண்டு வீசிக் கொன்றான்? 17 சுனாமி மறுவாழ்வுத் தொண்டர்களைக் கொன்றான். இதையெல்லாம் இந்தியா கண்டிக்கவே இல்லை. பத்திரிகையாளர் சிவராம் தராக்கியை, நடுத்தெருவுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொன்றார்கள். வாகறை என்ற இடத்தில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கொழும்பில், ஐ.நா. மன்ற அலுவலகத்துக்கு முன்பு, நடராஜா துரைராஜ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பட்டப்பகல் 1 மணிக்கு, நடுத்தெருவில் சுட்டுக் கொன்றார்கள். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்றார்கள்.
ஜோசப் பரராஜ சிங்கம், 2005 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், தேவாலயத்தில் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டு இருந்தார். மனைவி அருகில் இருக்கின்றார். சர்ச்சுக்கு உள்ளேயே வந்து, நேருக்கு நேராகச் சுட்டுக் கொன்றார்கள்.
எங்கள் புலிப்படை வீரர்கள், எத்தனையோ சகோதரிகள், அங்கே மண்ணுக்கு உள்ளே எலும்புகளாகக் கிடக்கின்றார்கள். ஆனால், விவிலியத்தில் எசேக்கியல் என்ற பகுதியில், எலும்புகளுக்கு உள்ளே உயிர் வரட்டும் என்ற வாசகம் இருக்கின்றது. அதைப்போல, ஈழத்து மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும், தங்கள் இனத்தைக் காக்க எழும். தங்கள் தாயகத்தைத் தனி நாடாக அமைக்க உரிமை உள்ளவர்கள். அதை யாரும் தடுக்க முடியாது. ஜெனீவா உடன்படிக்கை ஒப்புக் கொண்டு இருக்கின்றது.
களவாணி, கொலைகாரன் இந்தியா
ஆனால், இங்கே சொல்லுகிறான். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்தியா உதவியது. அதைவிட, இங்கே தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை. மின்வெட்டு. நம் தலைமீது அணு உலைகளை வைத்துவிட்டு, அதில் இருந்து வருகின்ற மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எப்போது ஆபத்து வரும் என்று தெரியாது. ஆனால், இவன், இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கப் போகிறானாம். 2010 ஆம் ஆண்டு, ஒப்பந்தம் போட்டு விட்டானாம். இலங்கையில் மின் நிலையங்களை அமைப்பதற்காக அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை, இப்போது வெளியிடுகிறான்.
ஐ.நா. மன்றத்தின் குழு அறிக்கையை நாம் பேசி என்ன பயன்? என்ன இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள்? அவன்தான் குற்றவாளி. களவாணி, கொலைகாரன் இந்திய அரசிடம் என்ன வேண்டுகோள்? அது மட்டும் அல்ல.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லையாம்
அது மட்டும் அல்ல. 26 அக்டோபர் 2008 ஆம் ஆண்டு இவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டபடி, மீனவர்களின் மீதான தாக்குதல் அடியோடு குறைந்து விட்டதாம். இது இன்றைக்கு வெளியிட்ட அறிக்கை. அதற்குப்பிறகு தாக்குதலே இல்லையாம். பத்து நாள்களுக்கு முன்புதானே, கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பதற்காக, தங்கச்சி மடத்தில் எங்கள் மீனவர்கள் நான்கு பேரைக் கொன்று போட்டான்? அதற்குச்சில நாள்களுக்கு முன்புதானே புஷ்பவனம் ஜெயக்குமாரை, கழுத்தில் கயிறைக் கட்டிக் கொன்றான்? அதற்குப் பத்து நாள்களுக்கு முன்புதானே புதுக்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியனைக் கொன்றான்?
இவ்வளவு நடந்து இருக்கின்றது, இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில், மீனவர்கள் மீது தாக்குதல் நின்று போய்விட்டது என்கிறான்.
அது மட்டும் அல்ல. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டுமாம். அதற்கு இவர்கள் யோசனை சொல்லுகிறார்களாம். அமெரிக்கா புலிகளைத் தடை செய்து இருக்கிறது. ஆனால், போரை நிறுத்தச் சொன்னது. பிரிட்டன் தடை செய்து இருக்கிறது. ஆனால், போரை நிறுத்தச் சொன்னது. அந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொன்னார்கள். அதிபர் பாரக் ஒபாமாவும் சொன்னார்.
கருணாநிதியின் கீறல் ரிகார்டைத் திரும்பப் போடாதீர்கள்
இப்போது, நாங்கள் சொல்லுகிறோம், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். எந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டார்களோ, இப்போது தடையை நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதெல்லாம் முடியாது, சட்டம் ஒழுங்கு என்று பூச்சாண்டி காட்டினால், அதையெல்லாம் வருங்காலத்தில் எங்கள் இளைஞர்கள் உடைத்துக் கொண்டு வருவார்கள்.
நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. அது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. மத்திய அரசுதான் தலையிட வேண்டும் என்று சொன்னால், அது கருணாநிதியின் கீறல் விழுந்த ரிகார்டு. அதைத் திரும்பப் போடாதீர்கள்.
எது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை? அது உள்நாட்டுப் பிரச்சினையா? பங்களாதேஷ் பிரச்சினையை, உள்நாட்டுப் பிரச்சினை என்று சொன்னார்களா? அது சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை என்று இந்திரா காந்தி சொல்லவில்லையா? புபேஷ் குப்தா சொல்லவில்லையா? அன்றைக்கு இந்திய அரசியல் கட்சிகள் சொல்லவில்லையா?
பங்களாதேசிலே, டாக்காவிலே இவ்வளவு படுகொலைகளா நடந்தன? பெண்கள் குழந்தைகள் கொல்லப்பட்டார்களா? இங்கே எங்கள் இனமே அழிக்கப்பட்டு விட்டது. இது சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை. இந்திய அரசு இந்தப் போர்க்குற்றத்திலே பங்கெடுத்து இருக்கின்றது. இத்தாலிய சோனியாகாந்திதான் முழுமுதல் குற்றவாளி. ஆம். நான் குற்றம் சாட்டுகிறேன். எனக்கு எதைப்பற்றியும் பயமோ, கவலையோ துளியும் கிடையாது. (பலத்த ஆரவாரம்).
இந்த உயிர் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்? இதோ போய்விட்டான் முத்துக்குமார். புகழோடு வாழுகின்றான். வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பார்த்து விட்டேன். இலட்சியங்களுக்காக, பிறந்த பொன்னாடாம் தமிழ்நாட்டுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றேன்.
இவ்வளவு கொடுமைகளா நடந்தன நம் காலத்தில்? வரலாறு நம்மைச் சபிக்கும். கரிகாலன் வாழ்ந்த தமிழகமா? இராஜராஜன் படையெடுத்துச் சென்ற தமிழகமாக? பராந்தகன் வாழ்ந்த தமிழகமா? வடதிசைக்குச் சென்று, குயிலாலுவத்திலே வென்று, கனக விசயன் தலையில் கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவன் வாழ்ந்த தமிழகமா? எல்லாம் வெறும் பழங்கதையா? வீரம் செத்து விடாது, மானம் அழிந்து விடாது.
இளைஞர்களுக்குச் சொல்லுவேன். கொலைகாரன் ராஜபக்சே கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அது முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் இளைஞர்கள், ஒருசேர எழ வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் பொங்கி எழுந்தால் போதும். நான் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. நாங்கள் இதுவரையிலும் ஒரு சிறு வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை, ஊக்கம் அளித்ததும் இல்லை. ஆனால், நம்முடைய மக்களுக்காக போராடுகிறோம்.
எனது ஈழப்பயணம்: நடந்தது என்ன?
அண்ணன் தா. பாண்டியன் அவர்கள் ஒரு புதிர் போட்டு விட்டுப் போய்விட்டார். கலைஞர் கருணாநிதி ஒரு விடுகதை போட்டு இருக்கின்றாராம். அன்றைக்குப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுள் இரண்டு பேர் இல்லை. இரண்டு பேர் இருக்கின்றார்கள். அதாவது ராஜீவ் காந்தியும், மாறனும் இல்லை. கருணாநிதியும், வைகோவும் இருக்கின்றார்கள் என்கிறார். இப்போது இல்லாத ஆள்கள் யார் என்று பார்த்து, அவர்கள் சொன்னதாக கருணாநிதி எதையாவது சொல்லுவார். இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, இத்தனாம் தேதி நடந்தது என்றெல்லாம் சொல்லுவார். எவனும் கண்டுபிடிக்க முடியாது. கடந்த மூன்று நாள்களாகத்தான் சும்மா இருக்கிறார். (பலத்த சிரிப்பு) அவரை நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம், பாவம்.
அவர் என்ன செய்தார் தெரியுமா? 89 ஆம் ஆண்டு, இவர் முதல் அமைச்சராக ஆவதற்கு முன்னால், போரை நிறுத்த வேண்டும் என்றார். அன்று நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு இருந்த தொண்டன். ஆனால், அந்த எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் நோய்ப்படுக்கையில் இருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் மனிதர்.(பலத்த கைதட்டல்)அதனால்தான், அவரைக் கடவுளாக வைத்து இருக்கிறார்கள் ஈழத்திலே. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் களம் அமைத்துக் கொடுத்தவரே மனிதநேயராகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இதை, அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும்.
வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் சிலை வைத்து இருக்கிறார்கள். அதையும் உடைத்துப் போட்டு விட்டான். இந்திராகாந்தி படத்தை வீட்டுக்கு வீடு வைத்து இருக்கிறார்கள்.
ஏனெனில், அவர்கள் அவ்வளவு உதவி செய்தார்கள். அவருக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இன்றைக்கு, நீங்கள் பாகிஸ்தானையும், சீனாவையும் அங்கே கால் ஊன்ற வைத்து விட்டீர்களே?
அவன் தாக்கினால், எங்கள் ஆவடி அல்லவா மாட்டும்? கல்பாக்கம் அல்லவா நொறுங்கும்? விஜயநாராயணம், கூடங்குளம் அல்லவா தாக்கப்படும்? எங்களுக்கு அல்லவா அழிவு நேரும்?
அன்றைக்கு, இந்தியா போரை நிறுத்த வேண்டும் என்றார் கருணாநிதி. 89 தேர்தலில் வெற்றி பெற்றார். அவரைப் பார்ப்பதற்காக, காசி ஆனந்தனும், நடேசனும் வந்தார்கள். அவர்களைச் சந்திக்க மாட்டேன் என்று சொன்னார். பிறகு, அவர்கள் எப்படியோ பார்த்தார்கள். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? ஆயுதங்களையெல்லாம் கீழே போட்டு விடுங்கள். அப்போதுதான், இந்தியா சண்டையை நிறுத்தும் என்றார். அவர்கள் தலையில் இடி விழுந்ததுபோல, எண்ணண்ணே இப்படிச் சொல்கிறார்? என்றார்கள். அப்போது, டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது. இவரிடம் பேசி விட்டு, அங்கே வந்தவர்கள், என்ன செய்வது என்றே தெரியவில்லையே? என்றார்கள். அப்போது, நான் சொன்னேன். அங்கே உள்ள நிலைமையைப் பார்க்க நானே வருகிறேன். தம்பியிடம் சொல்லுங்கள் என்றேன்.
என்ன கேலி செய்கிறீர்களா? சண்டை பலமாக நடக்கின்றது. போனால், உயிரோடு திரும்ப வர முடியாது என்றார்கள். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள். நான் வருவது என்று முடிவு செய்து விட்டேன்.
அதன்பிறகு சொன்னார்கள். அவரும் சண்டை கடுமையாக நடக்கிறது. எனவே வருவதில் ஆபத்து உள்ளது பயணம் வேண்டாம் என்றனர். இல்லை நான் கண்டிப்பாக வருவேன் என்றேன்.
அதற்குப்பிறகு வரச் சொன்னார். வெள்ளோட்டத்துக்கு ஒரு படகை அனுப்பினார். இன்றைக்கு பெளர்ணமி. அன்றைக்குத் தை அமாவாசை நாளில் நான் சென்றேன்.
போவதற்கு முன்பு, என் உயிர் நண்பர் குட்டி மூலமாக, கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். நான் அங்கே சென்று ஏதாவது ஆனாலும், இவர் மீது பழி வரவேண்டாம் என்பதற்காகக் கொடுத்து விட்டுச் சென்றேன். என் உயிரே போனாலும், உங்களையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்க மாட்டேன்; அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், என்னை நானே பலியிட்டுக் கொள்வேன் என்று எழுதி அனுப்பி விட்டேன்.
அந்தக் கடிதத்தை ஐந்தாம் தேதி இரவு என் நண்பர் குட்டியிடம் கொடுத்தேன். ஏழாம் தேதி காலை 6.30 மணிக்கு, கோபாலபுரம் வீட்டில் கொண்டு போய் கலைஞரிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டார்.
இவர், 9 ஆம் தேதிதான் டெல்லியில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அதற்குப்பிறகு வந்து சொல்கிறார். நான் ஈழத்துக்குச் சென்று இருப்பது அவருக்குத் தெரியும். ஆனால், அதை நான் எங்கேயாவது சொன்னேனா? மல்லிகையில் சொன்னேனா? எஸ்.ஐ.டி.யிடம் சொன்னேனா? இல்லை. அவருக்குத் தெரியாது என்றுதான் சொன்னேன். வைகோ, என்றைக்கும், யாருக்கும் துன்பம் இழைக்க மாட்டான். (பலத்த கைதட்டல்).
ஆனால், இவர் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் தெரியுமா? நான் போய் ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன். தம்பி மாறனும் உடன் இருந்தார். அப்போது, ராஜீவ் காந்தி என்னிடம், நீங்கள் போய் பிரபாகரனைச் சந்தித்து விட்டு வாருங்கள், கோபால்சாமியையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றார். இதைத் தெரிந்து கொண்டு, முந்திரிக்கொட்டை போல தான் மட்டும் ஈழத்துக்குச் சென்று, காரியத்தைக் கெடுத்து விட்டார் என்று சொன்னார்.
இப்படி ஒரு பொய்யை உலகத்தில் எவனுமே சொல்ல முடியாது. நான்தான் ஆறாம் தேதி மாலையிலேயே ஈழத்துக்குப் புறப்பட்டுச் சென்று விட்டேன். இவர் ராஜீவ் காந்தியைப் பார்த்ததே ஒன்பதாம் தேதிதானே? அது மட்டும் அல்ல. கடிதத்தில் இவரைப் பற்றிப் பாராட்டி நான் எழுதி இருந்ததை மட்டும் சட்டசபையில் வாசித்துப் பதிவு b சய்து விட்டு, மற்ற எதையும் அவர் சட்டமன்றத்தில் குறிப்பிடவே இல்லை.
இதையெல்லாம் நான் இங்கே பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் பாண்டியன் அவர்கள் இதைப் பற்றிப் பேசி, இவர்கள் இரண்டு பேருக்கும்தான் நடந்தது தெரியும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டதால், நான் இங்கே விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
இப்போது, கலைஞர் மிகவும் நொந்து போயிருக்கிறார். அவரை மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், அவர் செய்த துரோகங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.
அதைப்போல, சோனியா காந்தி ஈழத்தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை நாங்கள் மறந்து விட மாட்டோம். அதுவும், இன்றைக்கு இந்திய அரசு வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை மன்னிக்க முடியாதது. கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும். ஆனால், ஏழு கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே சும்மா இருக்கிறதே என்றுதான், மற்ற நாடுகள் முன்வரவில்லை. கேடே நாம்தான். அதைத்தானே நோர்வே நாட்டுக்காரர்கள் சொல்லுகிறார்கள்.
கிளர்ந்து எழுங்கள்
இப்படி ஒரு சிக்கலில் நாம் தவித்துக் கொண்டு இருந்தாலும், இதில் இருந்து மீள முடியும். அதற்காகத்தான், முத்துக்குமார் உள்பட நேற்றைய கிருஷ்ணமூர்த்தி வரை 17 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள். இந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றபோது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நிராதரவாய்த் தவித்தார்களே, பதறினார்களே, பச்சைக்குழந்தைகளைப் பறிகொடுத்தார்களே, அந்தப் பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? நாதியே இல்லையா தமிழ்ச்சாதிக்கு?
இதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்தித் தூக்கில் இட்டால்தான் தமிழன் சாப்பிட்ட சோறு செரிக்கும். தமிழ் ஈழம் மலர்வதை நாம் காணத்தான் போகிறோம். செய்த தியாகம் வீண் போகாது. சிந்திய இரத்தத்தின் மீது ஆணை. எரியும் தழல் நெருப்பின் மீது ஆணை. மாவீரர்கள் செய்த தியாகத்தின் மீது ஆணை.தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க, தமிழகத்து இளைஞர் கூட்டம் கிளர்ந்து எழ வேண்டும்.

