மே தினம் பொது விடுமுறை அறிவிப்பு- நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுப்பு வைகோவின் சரித்திரச் சாதனை! மு.செந்திலதிபன்

Issues: Economy, Energy, Labour, National

Region: Tamil Nadu

Category: Articles, Favorites

Date: 
Tue, 01/05/2012

மே தினம் பொது விடுமுறை அறிவிப்பு
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுப்பு
வைகோவின் சரித்திரச் சாதனை!

மு.செந்திலதிபன்
அரசியல் ஆய்வு மையச் செயலாளர்

நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுக்காலம் பணி ஆற்றிய தலைவர் வைகோவின் வரலாற்றுச் சாதனைகளில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டிட ஓங்கிக் குரல் எழுப்பியது மட்டுமின்றி, அவற்றைச் சாதித்துக் காட்டியதும்தான். உலகம் முழுவதும் இன்றும் எழுச்சியோடு கொண்டாடப் படும் மே தினத்திற்கு இந்திய அரசு விடுமுறை அளித்து அங்கீகரிக்கச் செய்த பெருமை தலைவர் வைகோவுக்கு உண்டு. 1990 ஆம் ஆண்டு மே தினத்தின் நூறாவது ஆண்டின் நிறைவை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடிய நேரத்தில், தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை வழங்கக்கோரி தலைவர் வைகோ வைத்த கோரிக்கையை, அன்றைய பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஏற்றுக்கொண்டு அதற்கான உத்திரவைப் பிறப்பித்தார்.


மே நாளுக்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது எவ்வாறு என்பதை தலைவர் வைகோ அளித்த விளக்கம் மூலமாகவே நாம் அறியலாம்.


தொழிலாளர்களிடையே வாயிற் கூட்டத்தில் வைகோ..


1991, செப்டம்பர் 30 ஆம் நாள், சென்னை அசோக்லேலண்டு தொழிலகத்தின் பிரதான நுழைவுவாயிலில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களிடையே தலைவர் வைகோ அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஆற்றிய உரை வருமாறு;


“சமூக நீதிக்காகவே காலமெல்லாம் போராடிய பெரியாரின் எண்ணங்களைக் கடைபிடித்து, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று போராடியவர் அறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய கழகத்தைச் சேர்ந்தவன் நான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்கிற தகுதியைப் பெற்றிருக்கின்ற நான் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கின்ற தகுதியைப் பெற்று இருக்கின்றேன். அரசியல் சட்டத்தை அம்பேத்கர் எழுதினார் என்பதை அனைவரும் சொல்கிறார்கள்.


இன்றைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில்தான் அரசியல் சட்டத்தைப் பற்றி விவாதித்தார்கள். அந்த மைய மண்டபத்தில்தான் பல சதித்திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. பல அரசுகள் அங்கேதான் கவிழ்ந்து இருக்கின்றன. கோஷ்டி மாறும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த மைய மண்டபத்தில்தான் அரசியல் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.


மாதக்கணக்கில் நடந்திருக்கின்றன. அந்த மைய மண்டபத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் தனது அரசியல் வாதப் பிரதிவாதங்களை எடுத்துரைக்கின்றார். இவை நாடாளுமன்ற விவாதப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன.


அம்பேத்கர் படம்


இத்தகைய அரசியல் வாதப் பிரதிவாதங்களை எடுத்துரைத்த அம்பேத்கரின் படம் அந்த மைய மண்டபத்தில் இடம் பெறவில்லை. எந்த அரசியல் நிர்ணய சபையில் தனது வாதங்களை அம்பேத்கர் எடுத்துரைத்தாரோ அங்கு அவரது படம் வைக்கப்படவில்லை. 40 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர் படத்தை இடம்பெறச் செய்யவில்லை.


மகாத்மா காந்தி, பண்டிதநேரு, மோதிலால்நேரு, இந்திராகாந்தி, கோபாலகிருஷ்ண கோகலே, சித்தரஞ்சன்தாஸ், திலகர், சரோஜினி நாயுடு ஆகியோரின் உருவப்படங்கள் நமது நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜாஜி, நேதாஜி படம் அந்த மைய மண்டபத்தில் வைக்கப்பட்டது. ஆனால், அம்பேத்கர் படம் வைக்கப்படாமலே இருந்து வந்தது.


நான் 1978 ஏப்ரல் 26 ஆம் தேதி மாநிலங்களவையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ஏறத்தாழ 14 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணி ஆற்றி உள்ளேன் (1991 வரை). 1978 ஆம் ஆண்டிலிருந்தே நான் கோரிக்கையை எழுப்பி வந்துள்ளேன். அதாவது சமூக நீதிக்குப் போராடிய சமூக நீதியின் காவலர் தந்தை பெரியாரின் படத்தையும், அரசியல் சட்டத்தை எழுதிய மேதை அம்பேத்கர் படத்தையும் அந்த மைய மண்டபத்தில் திறந்து வைக்க வேண்டுமென்று ஒவ்வொரு வாதத்திலும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.


வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு 40 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்கள் செய்யத் துணியாத காரியத்தை உடனே முடிவெடுத்து டாக்டர் அம்பேத்கர் படத்தை, வி.பி.சிங் மைய மண்டபத்தில் திறந்து வைத்தார்.


‘மே தினம்’


தொழிலாளர்கள் மத்தியில் பேசுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் தொழிலாளர் களுக்குரிய மே தினத்தை மத்திய அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று நாங்கள் நாடாளுமன்றத்தில் வற்புறுத்தியிருக்கிறோம். ஏனென்றால் உலகில் பல நாடுகளில் மே தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இங்கேயும் மே தினத்தை விடுமுறையாக அறிவிக்க தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.


கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி (1990) நாடாளுமன்றம் கூடியது; அதற்கு முதல்நாள் 29 ஆம் தேதி நான் டில்லி சென்றேன். 30 ஆம் தேதி காலையில் 10 மணி அளவில் இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவையின் தலைவருமான சங்கர்தயாள் சர்மாவை அவர் அறைக்கு வருவதற்கு முன்னரே சென்று காத்திருந்தேன். அவர் வந்த பிறகு, நான் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிதர வேண்டும் என்று கேட்டேன். என்ன தீர்மானம் என்று அவைத்தலைவர் கேட்டார். தொழிலாளர்களின் நாளான மே தினத்தை மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நான் எழுப்புவதற்கு வாய்ப்புத் தாருங்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் அனுமதி அளித்தார்.


எனக்கு அனுமதி கிடைத்ததை அறிந்தவுடன் ஜனதா தளத்தின் கமல் மொசார்க்கா அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த குருதாஸ் தாஸ் குப்தா அவர்களும் என்னுடைய தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதற்கு தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள்.


பிரதமர் வி.பி.சிங்கிடம் கோரிக்கை


கேள்வி நேரம் முடிந்த பிறகு, பிரதமர் வி.பி.சிங் அவையில் இருந்தபோது இந்தக் கோரிக்கையை எழுப்ப முயன்றேன். வி.பி.சிங் எழுந்து மக்களவைக்குச் செல்ல முயன்றபோது நான் அவர் அருகில் சென்றேன். நாங்கள் முக்கியமான கோரிக்கையை வைக்க இருக்கிறோம். நீங்கள் சிறிது நேரம் உட்கார்ந்து கேட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று வி.பி.சிங்கிடம் கூறினேன். அரசியல் பண்பாடும் நாகரிகமும் நிறைந்த வி.பி.சிங் எங்கள் கோரிக்கையை ஏற்று அமர்ந்திருந்தார்.


அப்போது எங்கள் கோரிக்கையை முன்வைத்து நான் பேசினேன். அதாவது திமுகழக அரசு பொறுப்பேற்றிருந்த 1973-1974 ஆம் ஆண்டுக்காலத்தில் மே தினத்தை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்திருக்கிறோம். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் மே தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு மே தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஆதரித்து நண்பர்கள் பேசினார்கள். என்னுடைய கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிவிட்டு வி.பி.சிங் தன் அலுவலகத்திற்குச் சென்றார்.


புயல்வேக நடவடிக்கை


எங்கள் கோரிக்கையை 30 ஆம் தேதி பகல் 11 மணிக்கு வைக்கிறோம். அன்று பகல் 1 மணிக்கு மே தின விடுமுறை அறிக்கை வெளி வர வேண்டும். அதற்காக நானும் நண்பர்களும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்கிறோம். நாங்கள் உடனே பிரதமரைச் சந்திக்க வேண்டுமென்று பிரதமரின் செயலாளரைக் கேட்டோம். அதற்கு அவர் பிரதமர் ஜப்பான் நாட்டுக் குழுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் அதன்பிறகு குடியரசுத் தலைவரைச் சந்திக்க அவர் மாளிகைக்குச் செல்ல இருக்கிறார் என்றும், நீங்கள் பிரதமரைச் சந்திக்க முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் எங்களிடம் கூறினார்.


பிரதமருக்கு அனுப்பிய துண்டுச்சீட்டு


நாங்கள் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதை பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று செயலாளரிடம் கூறினோம். அந்தத் துண்டுச் சீட்டு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது. பத்து நிமிட நேரங்கழித்து பிரதமருடைய அறைக்குள் எங்களை அழைத்தார்கள்.


உள்ளே சென்ற எங்களை மந்தகாசப் புன்னகையுடன் பிரதமர் வி.பி.சிங் எழுந்து நின்று வரவேற்று உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பொது விடுமுறை நாளாக, மே தினம் அறிவிக்கப்படும் என்று சொன்னார்.


இதை நான் எதற்கு சுட்டிக்காட்டுகிறேன் என்றால், மே தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டப் பெருமை கழகத்தைச் சேரும்”.


இவ்வாறு தலைவர் வைகோ, அசோக்லேலண்டு வாயிற் கூட்டத்தில் மே தினம் பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எவ்வாறு என்பதை விளக்கிக் கூறினார்.


தினமணி நாளேடு பாராட்டியது


மே தின பொதுவிடுமுறை அறிவிக்கச் செய்த வைகோவைப் பாராட்டி 14.51990 இல் தினமணி நாளேடு ஒரு சிறப்புச் செய்தியை வை.கோபால்சாமியின் அதிவேக நடவடிக்கை என்று தலைப்பிட்டு, அதன் டில்லி செய்தியாளர் ராஜகோபாலன் வெளியிட்டிருந்தார். அந்த ச்செய்தியின் மூலம், நாடாளுமன்றத்தின் தலைவர் வைகோவின் செயல்திறன் மிக்கப் பணிகள் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதோ அந்தச் செய்தி;


நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசு ஒன்று கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது. அவைக்குத் தவறாமல் வருவதற்காகவும், அவை நடவடிக்கைகளில் காட்டும் அக்கறைக்காகவும் பரிசு பெற இருக்கிறார்களாம் அவர்கள். அவர்களில் மூத்தவர் மக்களவையின் இ.காங்கிரஸ் உறுப்பினர் என்.ஜி.ரங்கா. இன்னொருவர் இளையவர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் வை.கோபால்சாமி.


வை.கோபால்சாமியைப் பொறுத்தவரை, அவர் சார்ந்திருக்கும் இயக்கம் எது என்பதைக் கூட மறந்து விட்டு அவரது நாடாளுமன்றப் பணியை அனத்துக் கட்சி எம்.பிக்களுமே பாராட்டுவது உண்டு. அண்மையில், அவரது கோரிக்கை ஒன்றை எல்லா எம்.பிக்களும் ஆதரிக்கவே, உடனடியாக அதை ஏற்றுக்கொண்டது மைய அரசு. மே ஒன்றாம் தேதியை (தொழிலாளர் தினம்) தேசிய விடுமுறை தினமாக அறிவிப்பது சம்பந்தமான கோரிக்கை அது.


சென்ற ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது. வை.கோபால்சாமி பெயரிலான ‘சிறப்புக் குறிப்பு’ ஒன்றுதான் முதலில் எடுத்துக் கொள்ளப்படும் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.


கோபால்சாமியின் சிறப்புக் குறிப்பில் ஒரே வரிதான் இடம் பெற்றிருந்தது. ‘மே ஒன்றாம் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்’ என்பதே அது.


வை.கோபால்சாமி தமது சிறப்புக் குறிப்பை அவையில் படித்தபோது, கம்யூனிஸ்டுகள் ஆதரவுக்குரல் எழுப்பினர். இந்த ஆண்டு கொண்டாடப்படுவது ‘நூறாவது மே தினம்’ என்பதைக் குறிப்பிட்டு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளை வலியுறுத்தினார்கள் அவர்கள்.


இ.காங்கிரஸ் எம்.பி, என்.கே.பி.சல்வேயும் கோபால்சாமியின் தரப்பை ஆதரித்துப் பேசினார். அமைச்சர்கள் பி.உபேந்திரா, அருண்நேரு எம்.எஸ்.குருபாதசாமி மூவரும் தங்களுக்குள் கூடிப் பேசினர். கடைசியில், ‘இது குறித்த முடிவை அரசு இன்றே எடுக்கும்’ என்று அறிவித்தார். குருபாதசாமி.


குருபாதசாமியின் அறிக்கை கோபால்சாமி குழுவினருக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. அவரும், ஜனதாதளம் உறுப்பினர் கமல் மொசர்க்கா, இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் தாஸ்குப்தா ஆகிய மூவரும் பிரதமரைச் சந்திக்கப் பறந்தனர். பகல் 12 மணி அளவில் ‘செளத் பிளாக்’ போய்ச் சேர்ந்தார்கள். பிரதமருக்கு கோபால்சாமி கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு ஒன்று அனுப்பப்பட்டது.
கோபால்சாமி அனுப்பிய துண்டுச்சீட்டில், ‘தேசிய முன்னணி வாக்களித்தபடி, மே ஒன்றாம் தேதி தேசிய விடுமுறைதினமாக அறிவிக்கப்படுமா? என்று எழுதப்பட்டிருந்தது. அந்தச் சீட்டிலேயே “நிச்சயமாக” என்று எழுதி, அதை கோபால்சாமியிடம் திருப்பிக் கொடுத்தார் வி.பி.சிங். அத்துடன் நில்லாது, தமது முதன்மைச் செயலாளர் பி.ஜி.தேஷ்முக்கைத் தொலைபேசியில் அழைத்து, தேவையான ஆணைகளைப் பிறப்பித்தார். உடனடியாக, மே ஒன்றாம் தேதியை ‘நெகோஷியபுள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ சட்டத்தின் கீழ் விடுமுறை தினமாக அறிவிக்க பிரதமர் ஆணையிட்டிருக்கிறார்” என்ற கடிதம் பி.ஜி.தேஷ்முக்கின் கையெழுத்தோடு, 12.45 மணிக்கு உள்துறைக்குப் பறந்தது.


தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதோடு, கோபால்சாமி குழுவினர் திருப்தி அடைந்துவிடவில்லை. இந்த விஷயம் மாநிலங்களவையில் தான் முதலில் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அதனாலேயே, பகல் உணவு இடைவேளைக்கு முன்பே மாநிலங்களவைக்குத் திரும்ப முயன்றார்கள். கடைசியில், மாநிலங்களவையில் இந்தத் தகவலை, நாடாளுமன்ற விவகாரத்துறை துணை அமைச்சர் சத்யபால் மாலிக் வெளியிட்டார். இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட, வை.கோபால்சாமியின் வேகத்தைக் கண்டு வியந்து, அவரைப் பாராட்டினர்.


கோபால்சாமியைச் சுற்றியே அனைவரும் மொய்த்துக் கொண்டிருந்தனர். கடந்த நாற்பது ஆண்டுகளில் மே தினம் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பதே அதற்குக் காரணம்”.


தினமணி செய்தியின் மூலம், மே தினத்திற்கு தேசிய விடுமுறை அளிக்கச் செய்த தலைவர் வைகோவின் வரலாற்றுச் சாதனை நாடாளுமன்ற சரித்திர அத்தியாயத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.
தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசிக் கொண்டிருப்பது என்றால் அது 35 ஆயிரம் தொழிலாளர், ஊழியர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து, அவர்களின் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்த மாபெரும் செயலாகும்.


நெய்வேலி நிலக்கரி நிறுவனம்


நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவனம் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம். இன்று நவரத்னா தகுதியைப் பெற்றுள்ளது. என்.எல்.சி நிறுவனம் மின் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு பெரிதும் பயனுள்ளதாக, முதுகெலும்பாக உள்ள நிறுவனம். 1957 ஆம் ஆண்டு பண்டித ஜவகர்லால் நேருவும், பெருந்தலைவர் காமராஜரும் தொடங்கி வைத்த நிறுவனம். இன்னும் முன்னூறு ஆண்டுகாலம் நிலக்கரி வெட்டி எடுக்கக்கூடிய அளவுக்கு கனிமவளம் நிறைந்தது நெய்வேலி.


ஆண்டிற்கு ரூபாய் 1200 கோடி லாபம் ஈட்டும் என்.எல்.சி.நிறுவனத்தில் 20 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும் பொறியாளர்களும் 15 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். இந்நிறுவனத்தின் 51 சதவித பங்குகளை தனியாருக்கு வழங்கிட, 2002, பிப்ரவரி மாதம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவெடுத்தது. மத்திய அமைச்சரவை கூடி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்த அறிவிப்பு வெளியானதும், நெய்வேலி கந்தக பூமியானது. தொழிலாளர்களும், பொறியாளர்களும் தங்கள் தலையில் இடி விழுந்ததைப் போன்று துடித்தார்கள். என்.எல்.சி. தனியார் கைக்கு போய்விடுமானால், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும். தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் இறங்கினர். காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர்.


நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்


அன்றைக்கு 2002 இல் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் என்.எல்.சி தனியாருக்கு வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது கவலைப்படவில்லை. எந்த கருத்தும் அவர்கள் சொல்லவில்லை. துடித்துக்கொண்டிருந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிலாளர்களின் கவலையை, எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடன் நின்ற சூழலை, தலைவர் வைகோ அவர்களின் கவனத்திற்கு நெய்வேலி கழகத் தோழர்கள் கொண்டு சென்றனர். வாஜ்பாய் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலிமாறன், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் ஒதுங்கிக் கொண்டார். அவரும் அவரது வாரிசுகளும் என்.எல்.சி பங்குகளை கணிசமாக கைப்பற்றுவதில் குறியாக இருந்தனர். ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தமக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை என்பது போல் இருந்தார்.


என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் - பொறியாளர்களின் தொழிற்சங்கங்கள், 16 அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை பிரதமருக்கு அனுப்பிட தயாரிக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய தலைவர் யார்? தலைவர் வைகோவைதான் நெய்வேலி தொழிலாளி வர்க்கம் நம்பியது.


தலைவர் வைகோவிடம் பிரதமருக்கு என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டது. மக்களவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குஜராத் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அவை முழுமையாக இயங்க முடியவில்லை; எப்படியும் நாடாளுமன்றத்தில் இயல்புநிலை திரும்பியதும் என்.எல்.சி பிரச்சினையை எழுப்புகிறேன்; உறுதியாக என்.எல்.சி தனியார்மயம் ஆவதைத் தடுத்துநிறுத்த போராடுவேன்” என்று தலைவர் வைகோ தெரிவித்தார்.


2002, மார்ச் 19 ஆம் நாள், மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது சிறப்புப் பிரேரணை கொண்டு வந்து தலைவர் வைகோ என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று வாதாடினார்.


ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் என்.எல்.சி


“நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முதலீட்டுக் கலைப்புக்குழு (னுளைin எநளவஅநவே உடிஅஅளைளiடிn) பரிந்துரை செய்துள்ள செய்தி தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்துள்ளது. அனைத்துத் தொழிற் சங்கங்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, மத்திய அரசு எக்காரணத்தை முன்னிட்டும் இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன.


நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1957 இல் தொடங்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை இந்த நிறுவனத்திற்குத் தமிழக மக்கள் தந்தனர். இங்கு 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணி செய்கின்றனர். தென்னிந்தியாவுக்கே மின்சாரம் வழங்குகிறது இந்த நிறுவனம்.


தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக இந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டும் சுமார் 800 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்கலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டுமில்லாது இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் விற்க வேண்டிவரும் என்று மத்திய அரசு கூறுவதை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது;


தென்னிந்தியாவிலேயே இருக்கிற மிகப் பெரிய நிறுவனமாகும் இது. தமிழ்நாட்டுக்கே பெருமை தருகின்ற நிறுவனம். தனியாருக்கு விற்பது அநீதி; எரிமலை வெடிக்கும். என்.எல்.சியில் உற்பத்தி ஆகும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ 1.65 க்கு விற்கப்படுகிறது. தனியார் மயமாக்கினால் யூனிட்டுக்கு ரூ 5 விலை கொடுக்க வேண்டி வரும். இலாபகரமாக இயங்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைப் பெருமுதலாளிகளுக்குத் தங்கத் தாம்பாளத்தில் தாரை வார்த்துக் கொடுக்கும் அநீதியை மத்திய அரசு செய்யக்கூடாது.


இந்த முயற்சியை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தனியார் மயமாக்க மேலும் முயன்றால் போராட்டம் இன்னும் தீவிரமடையும். அது எரிமலையாக வெடிக்கும் என்பதை மத்திய அரசுக்குச் சுட்டிகாட்ட விரும்புகிறேன்.


இவ்வாறு தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்து பேசி முடித்தவுடன், வைகோவை ஆதரித்து பல்வேறு கட்சியினரும் பேச முற்பட்டபோது, அவைத்தலைவர் பி.எம்.சயீத் வேறு பிரச்சினைக்கு அனுமதி அளிக்க முற்பட்டார். வைகோ குறுக்கிட்டு, இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளுமே ஒன்றுபட்டு குரல் கொடுக்கின்றன. என் கோரிக்கையை ஆதரிக்கும் அவர்களுக்கு பேச வாய்ப்பு அளியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


பின்னர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சுரேஷ் குரூப், திமுக உறுப்பினர் ஆதிசங்கர், அதிமுக உறுப்பினர் தலித் எழில்மலை ஆகியோர் வைகோவின் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார்கள்.


நாடாளுமன்றத்தில் என்.எல்.சி நிறுவனத்தை விற்பனை செய்யக்கூடாது என்று வலியுறுத்திய தலைவர் வைகோ, மறுநாள் 20.3 2002 அன்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து, அதே கோரிக்கையை எடுத்துரைத்தார். தானும் வைகோவின் முயற்சியை ஆதரிப்பதாக பாஸ்வான் கூறினார்.


பின்னர் திட்டக்குழுத் துணைத்தலைவர் கே.சி. பந்தைச் சந்தித்து தலைவர் வைகோ, “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை விற்றுதான் பட்ஜெட் போட வேண்டுமா? பண்டித நேரு 1957-இல் நெய்வேலி சென்று என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கம் தோண்டும் பணியைத் துவக்கி வைத்தபோது, அப்போதைய மத்திய எரிசக்தித் துறை அமைச்சரும், உங்கள் தந்தையாருமான கோவிந்த வல்லப பந்த் அவர்களும் நேருவுடன் சென்றார். என்.எல்.சி. நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.


அவரது மகனான நீங்கள் இப்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை விற்பனை செய்யத் துடிக்கிறீர்களே நியாயமா?” என்று கேட்டார். புன்முறுவல் பூத்த கே.சி. பந்த், “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து விட்டது. அதை எப்படி இனி நிறுத்துவது? ஆனால், நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக என்.எல்.சி. நிறுவனத்தைப் பாதுகாக்கத் துடிக்கிறீர்கள். நானும் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். மத்திய அரசிடம் பேசுகிறேன்,” என்று தலைவர் வைகோவிடம் உறுதிமொழி அளித்தார்.


தனியார்மயம் தடுக்கப்பட்டது


அதே மார்ச்சு 20, 2002 இரவு பிரதமர் வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் தலைவர் வைகோ சென்று சந்தித்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவன அனைத்துத் தொழிற்சங்கங்கள், பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவைப் பிரதமர் வாஜ்பாயிடம் தலைவர் வைகோ அளித்தார். கோரிக்கை மனுவைப் பொறுமையாக முழுமையும் படித்த வாஜ்பாய் அவர்கள், “மத்திய அமைச்சரவையின் கொள்கை முடிவு இது என்றாலும், உங்களுடைய கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது,” என்று வைகோவிடம் தெரிவித்தார்.


“தாங்கள் என்னிடம் உறுதி கூறி இருப்பதைப் பத்திரிகை செய்தியாகத் தரலாமா?” என்று வைகோ பிரதமரிடம் வினவியபோது, “தாராளமாக அறிவிப்பு வெளியிடுங்கள்,” என்றார் வாஜ்பாய்.
அதன்பின்னர் பிரதமரின் உறுதிமொழி குறித்து தலைவர் வைகோ ‘இந்து’ நாளேட்டுக்குத் தகவல் கூற, மறுநாள் மார்ச்சு 21-ஆம் நாள் ‘இந்து’ முதல் பக்கத்தில் செய்தி வந்தது. மற்ற பத்திரிகைகளிலும் வெளியானது.


மத்திய பங்கு விலக்கல் துறை அமைச்சர் அருண் ஷோரிக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி அருண் ஷோரி என்.எல்.சி. பங்குகள் விற்பனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று 26.03.2002 அன்று அமைச்சர் அருண் ஷோரியைத் தலைவர் வைகோ நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


தலைவர் வைகோவின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.


இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அருண் ஷோரி அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் தலைவர் வைகோ அவர்களுக்கும் 18.04.2002 தேதியிட்ட கடிதம் ஒன்றை அமைச்சர் அருண் ஷோரி அனுப்பி வைத்தார். அதில், “19.03.2002 அன்று மக்களவையில் பூஜ்ய நேரத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து என்.எல்.சி. பங்குகளை விற்பது தொடர்பாக, பங்குகள் விற்பனை ஆணையம் கொடுத்துள்ள பரிந்துரைகள் குறித்து பிரச்சினைகள் எழுப்பினீர்கள். தற்போது மத்திய அரசு என்.எல்.சி. பங்குகள் விற்பனை குறித்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.


தான் எடுத்த காரியத்தை முடிப்பதில், இடையறாத போராட்டத்தில் வெற்றி கிட்டும் வரை உழைப்பது; சலியாமல் பாடுபடுவது என்பது தலைவர் வைகோ அவர்களின் இரத்தத்தில் ஊறிய பண்பு நலன் என்பதற்கு மே தினத்திற்கு தேசிய விடுமுறை அறிவிக்கச் செய்திடவும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுத்திடவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்ததன்மூலம் அறிய முடிகிறது.


தலைவர் வைகோவின் நாடாளுமன்றப் பணிகளின் மூலம் இவை இரண்டும் சரித்திரச் சாதனைகளாகப் புகழ் ஒளி வீசுகின்றன என்பதை மே தின நாளில் நினைவுகூர்வோம்!


தொழிலாளர் வர்க்கம், பாட்டாளிகளின் பாதுகாவலர் தலைவர் வைகோ கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கட்டும்!


- தொடரும்

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)