சென்னை திருவான்மியூரில், 6.5.2012 அன்று, நடைபெற்ற ம.தி.மு.க. 19 ஆம் ஆண்டுத் தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் வைகோ குற்றச்சாட்டு!
Issues: Economy, Education, Energy, Environment, Farmers, Human Rights, Law & Order, Politics, Poverty, Srilanka, Transport
Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu
Category: Articles, Headlines, Speeches
அண்டை மாநிலங்களில் இருந்து ஆற்றுநீரைப் பாதுகாக்கத் துடிக்கின்றோம்;
தமிழகத்து ஏரிகள், குளங்களையெல்லாம், அண்ணா தி.மு.க. அழிக்கின்றது!
சென்னை திருவான்மியூரில், 6.5.2012 அன்று, நடைபெற்ற
ம.தி.மு.க. 19 ஆம் ஆண்டுத் தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில்
வைகோ குற்றச்சாட்டு!
அலைகடல் ஆவேசமாக இடம் மாறி நுழைந்து விட்டதுபோல, பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெருமக்கள் திரண்டு இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 19 ஆண்டுத் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த இயக்கத்தின் வலிமையை, ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்து கொண்டு இருக்கின்ற என் ஆருயிர்ச் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்கள் நடத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை அவர்தான் மீண்டும் வெல்ல முடியும்; அவரை அவர்தான் வெல்ல முடியும் என்ற வகையில், இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கின்றார். கடந்த ஆண்டு மே 18 ஆம் நாள், சைதாப்பேட்டையில், சட்டமன்றத் தேர்தலை நாம் புறக்கணித்ததற்குப் பிறகு, மாற்றார் மலைக்கத்தக்க வகையிலே ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டினார். இன்று, பிரமிப்பூட்டுகின்ற விதத்தில் அதை வென்று காட்டி இருக்கின்றார். இயக்கத்தின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவராகத் திகழ்கின்றார்.
கழகத்தின் கரூர் மாநாட்டுக்குக் கட்டியம் கூறுகின்ற வகையில், இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை, ஜொலிக்கும் விளக்குகளில் சித்தரித்து இருக்கின்றீர்கள். நெடுஞ்சாலையின் நெடுந்தொலைவில் இருந்து பார்க்கின்றபோது, பிரமிக்கச் செய்யும் மேடை அமைப்பு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிவை, பொலிவை மீண்டும் பிரகடனம் செய்து இருக்கின்ற மாவட்டச் செயலாளருக்கு, தலைமைக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், அடிக்கடி இன்ப அதிர்ச்சிகளைத் தருவார். நான்மாடக்கூடலில் மதுரையில் அன்று அண்ணன் முத்து அவர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தங்க வாள் கொடுத்தார். நான் என் சகோதரனுக்குத் தங்க வாள் தருகிறேன் என்று, தீவுத்திடலில் ஒரு தங்கவாளை என் கையில் தந்தார். கழகத்தின் கருவூலத்துக்கு நிதிபோய்ச் சேருவதற்கு, அந்தத் தங்க வாள் பயன்பட்டது. எடைக்கு இரண்டு எடை வெள்ளிக்கட்டிகளைத் தருவேன் என்று, என்னைத் தராசில் அமர்த்தித் தந்தார். அந்த நிதியும், கழகத்தின் கருவூலத்துக்குப் போய்ச் சேர்ந்தது. தங்க மணியாரத்தை அணிவித்தார். அதுவும், கழகத்தின் நிதிக்கே போய்ச் சேர்ந்தது. இங்கே ஒரு தங்கக் கடிகாரத்தை அணிவித்து, ஒரு அன்புக்கட்டளையும் பிறப்பித்து இருக்கின்றார்: இந்தக் கடிகாரத்தை நீங்கள் அணிய வேண்டும்; இதைக் கழகத்தில் நிதியில் சேர்ப்பதாக அறிவிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார். இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்குப் பின்னர், அவருக்கு நன்றி பாராட்டிப் பொதுச் செயலாளர் பேசியதற்குப்பிறகு, அவரது மனதில் ஒரு சிறு காயத்தை இந்த இரவிலே ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால், நான் அப்படி ஒரு முடிவை இங்கே அறிவிப்பதற்கு இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காகப் பொதுக்குழுவைக் கூட்டியபோது, என் அன்புச் சகோதரனே, பத்து இலட்ச ரூபாய் வழங்கிய அந்த நாளை எண்ணிப் பார்க்கின்றேன். ஆவேசத்தோடும், உணர்ச்சியோடும் அவர் இங்கே உரை ஆற்றினார். திராவிட இயக்கத்தின் வரலாற்றில் சோதனைகளும், இன்னல்களும் சூழ்ந்து இருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், இந்த 19 ஆம் ஆண்டுத் தொடக்க விழா நிகழ்ச்சியை நாம் நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இங்கே உரை ஆற்றியவர்கள், இந்த இயக்கம் தியாக நெருப்பிலே உதித்த வரலாறைச் சொன்னார்கள்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 18 ஆண்டுகள் கடந்து விட்டன. இதோ அருகாமையில் இருக்கின்ற வங்கக் கடலில், அலைகள் ஓய்வது இல்லை; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணிகளும் ஓய்வது இல்லை. செங்கதிரோனின் வெம்மைக் கதிர்கள் தளர்வது இல்லை, வெம்மை தணிவது இல்லை; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடவடிக்கைகளும் தணிவது இல்லை. நிலவின் ஒளியில் தண்மை குறைவது இல்லை; தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும், தாயகத்துக்கும் ஆற்றுகின்ற பணிகளில் என்றைக்கு தணிவது இல்லை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
இன்றைக்குத் தமிழகத்துக்கு ஏற்பட்டு இருக்கின்ற இன்னல்களை எண்ணிப் பார்க்கின்றேன். இங்கே பேசியவர்கள், தங்களுடைய ஆசைக்கனவுகளை வெளிப்படுத்தினார்கள். கடிகாரத்தைத் தந்து இருக்கின்றீர்கள். ஒரு நிமிடத்தின் அறுபது நொடிகளில் ஒரு நொடியைக்கூட வீணாக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு பணி ஆற்றக்கூடியவனுக்குத் தோல்வி கிடையாது. அப்படி இயங்குகின்ற இயக்கம்தான் மறுமலர்ச்சி தி.மு.க.
நேற்று முன்தினம் பகலில் புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, காஞ்சி மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமுவும், நானும் இந்த இடத்துக்கு வந்தோம். அப்போது, நமது தென்சென்னை மாவட்டச் செயலாளர், தன் தோழர்களோடு இங்கே மேடை அமைக்கின்ற இடத்தைப் பார்வை இட்டு, கூட்டத்துக்கான பணிகளை வெற்றிகரமாக நடத்துவதில் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்திக்கொண்டு இருந்தார். அப்பொழுது, 155 ஆவது வட்டச் செயலாளராக இருந்து கழகத்துக்குப் பணி ஆற்றிய ஜெயபால், நோய்வாய்ப்பட்டு மிகவும் உடல் நலிந்து வீட்டில் இருக்கின்றார். அவரைக் காண்பதற்காக, மாவட்டச் செயலாளரும், கழக குமார், செல்வபாண்டியன் உள்ளிட்ட தோழர்களும், அவரது இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில், இந்தக் கடற்கரையில் ஆழிப்பேரலை தாக்கியபோது, கடற்கரையோர மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக என்னை அழைத்துச் சென்ற தொண்டன் ஜெயபால் இல்லத்துக்குச் சென்றோம். படுக்கையில் படுத்துக் கிடந்த அவரைப் பார்த்தபோது, என் மனதில் தாங்க முடியாத துக்கம். எலும்பும், தோலுமாக இருக்கின்றார். சிங்கம் போல உலவி வந்த ஜெயபால், இப்படி நோயிலே வாடி மெலிந்து போனாரே என்று நான் வேதனைப்பட்டேன். என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக மாவட்டச் செயலாளர் சொன்னார். ஜெயபால் படுத்துக் கிடந்த படுக்கையில், அவர் அருகில் அமர்ந்தேன். அவர் மிக உறுதியானவர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு நெடுங்காலம் பணி ஆற்றிய ஒரு சாதாரணத் தொண்டன். 93 ஆம் ஆண்டில் இருந்து நம்மோடு தோள் கொடுத்து வருகின்ற தூய்மையான தொண்டன்.
என் முகத்தில் கவலைக்குறியைக் கண்டு, அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். அவரது மகன் சந்தானத்தை அழைத்து அறிமுகம் செய்தார். அண்மையில் தானே புயல் தாக்கியபோது அவர் வசம் இருந்த படகும் உடைந்து நொறுங்கிப் போய்விட்ட செய்தியை, மற்ற தோழர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். கட்டுமரத்தில் துடுப்பைப் போட்டுக்கொண்டு, சீறி வரும் கடலுக்குள்ளே தன்னந்தனியாகச் செல்லக்கூடியவன் ஜெயபால். அத்தகைய மனத்துணியும், உடலில் தெம்பும் வலிவும் உள்ளவன். சுறாவுக்கும், சூறைக்காற்றுக்கும் அஞ்சாமல்தானே அந்த பரதவ குல மக்கள், மீனவ சகோதரர்கள் நாள்தோறும் கடலுக்குச் சென்று வருகின்றார்கள். அதைத்தான், ஒருநாள் போவார், ஒருநாள் வருவார்; ஒவ்வொரு நாளும் துயரம் என்று பாடலாகப் பதிவு செய்தார் மக்கள் திலகம். அப்படிச் சென்று வரக்கூடிய ஜெயபால், நான் கவலையோடு இருப்பதைப் பார்த்து, ஏன் கவலைப்படுகிறீர்கள்? எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாம்தான் வெற்றி பெற்று இருக்கின்றோம். எங்கே அவரது உடலுக்கு, உயிருக்கு ஊறு நேர்ந்துவிடுமோ? என்ற கவலையோடு நான் அவர் அருகில் அமர்ந்து இருக்கிறேன். என் கண்களில் கண்ணீர்த்திரைகளைப் பார்த்து விட்டு அவர் சொல்லுகிறார். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நாட்டில் மாற்றம் வேகமாக வந்தே தீரும். இந்தத் தமிழகம், உயர்ந்த இடத்தில் உங்களை அமர வைக்கும். அந்த நாள் வரத்தான் போகிறது. மகிழ்ச்சியாக இருங்கள்” என்று அவர் சொன்னபோது, நான் என் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும்போதும், கழகத்தைப் பற்றியே நினைக்கின்றானே, வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லையே? என் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்; என் பிள்ளைக்கு ஒரு படகு வாங்கித் தாருங்கள் என்று கேட்காமல், காலம் வேகமாக மாறும், தமிழகம் நம் இயக்கத்துக்கு அரியாசனத்தைக் கொடுக்கும், உங்களை அந்த இடத்திலே வைத்துப் பார்க்கின்ற நாள் வரும் என்று சொல்கின்றானே? அதைக் கேட்டபோது, என் கண்கள், என்னை அறியாமலே விழிநீரைக் கொட்டின.
என்னுடைய அன்புக்கு உரிய தோழர்களே, அந்த ஜெயபாலின் மூச்சுக்காற்றில் கலந்து இருக்கின்றது இந்த இயக்கத்தின் உறுதி. (பலத்த கைதட்டல்). அப்படிப்பட்ட இலட்சக்கணக்கான தோழர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்களை வழிநடத்துகின்ற சேனாதிபதிகளாக, வேளச்சேரி மணிமாறனைப் போன்ற தளகர்த்தர்கள் இருக்கின்றார்கள்.
கடற்கரையில், அண்ணன் துயிலுறங்கும் இடத்தில் என்னைத் ஆரக் கட்டித் தழுவிக்கொண்ட அண்ணன் குடியரசு அவர்கள் இன்று நம்மோடு இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அந்த மகத்தான கவிஞனுக்கு, தந்தை பெரியார் அவர்கள் ஜனநாயகம் என்று பெயரிட, அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசு என்று அதை விளிக்க, எங்களுக்குத் தோள் கொடுத்து நின்ற அந்தத் தத்துவக் கவிஞன், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இயங்கினார். ஓலைக்குடிசையில் வாழ்ந்து அவர் மறைந்தபோது, அந்தக் குடும்பத்துக்கு, தியாகராய நகரில், எட்டு வீடுகளை கட்டிக் கொடுத்த இயக்கம், நன்றி மறக்காத இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
மதிப்புக்குரிய கலைஞர் அவர்களே, எனக்கொன்றும் ஆற்றாமையோ, கோபமோ இல்லை. ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை, இன்றைக்குப் பழிச்சொல்லுக்கு உள்ளாக்கி விட்டீர்களே? திராவிட இயக்கத்தையே பழிச்சொல்லுக்கு உள்ளாக்கி விட்டீர்களே? ஒட்டுமொத்தத் திராவிட இயக்கத்தின் மீது, பழியும் நிந்தனையும் வந்து பாய்வதற்கு, நீங்கள்தானே காரணமாக இருந்து விட்டீர்கள்? உங்களுடைய ஆற்றல், நினைவாற்றல், தாவிப் பாய்கின்ற அருவியின் நடையில் எழுதுகின்ற எழுத்து ஆற்றல், அனலும், புனலும் கலந்து ஓடவிடுகின்ற பேச்சு ஆற்றல், அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர் காலம் தங்கத்தாம்பாளத்தில் உங்களிடம் வழங்கிய வாய்ப்பை, தன்னலத்தால், குடும்பத்தைக் கொலு மண்டபத்தில் உட்காரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற சுயநல வெறியால், இந்த இயக்கத்துக்கும், இனத்துக்கும் தீராப் பழிச்சொல்லை நீங்கள் தேடிக் கொடுத்து விட்டீர்கள்.
இன்றைக்குத் தமிழகத்துக்குப் பல்வேறு வழிகளிலும் ஆபத்துகள் சூழ்ந்து நிற்கின்றன. தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம் போராடி வந்து இருக்கின்றது. நாம் நடந்து வந்த பாதையின் ஒவ்வொரு அடியையும் இங்கே விரித்துச் சொல்ல நேரம் இல்லை. கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க என்றாரே பாவேந்தர், அதுபோல, எங்கெல்லாம் தமிழகத்துக்கு ஆபத்து சூழ்ந்ததோ, அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்து இருக்கின்றோம். ஒவ்வொரு கட்டத்திலும், தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்காகப் போராடி இருக்கின்றோம். கடந்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் நாம் போட்டி இடவில்லை. தேர்தலைப் புறக்கணிக்கக்கூடிய துணிச்சல், மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு இருந்தது என்றால், அது தொண்டர்களாகிய உங்களுடைய தைரியத்திலேதான். தேர்தலில் போட்டி இடவில்லை என்றால், இந்த இயக்கம் சின்னாபின்னமாகி விடும் என்று சிலர் கருதினார்கள். நிலைகுலைந்து போய்விடும் என்று பலபேர் எச்சரித்தார்கள். ஆனால், இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய குருதி ஓட்டத்தில் கலந்து இருக்கின்ற உணர்ச்சியால் உருவாக்கப்பட்டது. அவர்கள்தாம், இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். அதனால்தான், அந்தத் தேர்தலுக்குப்பின்னர் வந்த அனைத்துப் பிரச்சினைகளிலும், நாம் போர்க்களத்துச் சிப்பாயாக நின்று பணி ஆற்றி இருக்கின்றோம்.
முல்லைப்பெரியாறுக்கு ஆபத்து சூழ்ந்தது. கேரளத்துக்குச் செல்லும் 13 சாலைகளிலும் முற்றுகைப் போராட்டத்தை, 13 இயக்கங்களின் துணையோடு நடத்திக் காட்டினோம். கேரளத்துக்கு எச்சரிக்கை விடுத்தோம். அந்தக் களத்திலே தன்னை மாய்த்துக்கொண்டானே ஜெயப்பிரகாஷ் நாராயண், தேனி நகரில் நாம் நடத்திய உண்ணாவிரத மேடைக்கு வந்து, என் கைகளைப் பற்றிக்கொண்டு ஒருகடிதத்தைத் தந்தான். ‘தமிழரின் பாதுகாப்புக் கேடயம் நீ’ என்று எழுதி இருந்தான். எனக்கு எத்தனையோ நினைவுப் பரிசுகளை நண்பர்கள், தோழர்கள் தந்து இருக்கின்றார்கள். ஆனால், தணலில் தன்னை மாய்த்துக்கொண்ட அந்தத் தென்னாட்டுத்தொண்டன் தந்து இருக்கின்ற அந்தப் பாராட்டு வரிகளைத்தான், என்னுடைய வாழ்க்கையின் மிக உயரிய பொக்கிசமாக நான் கருதுகிறேன்.
ஒருபக்கத்திலே ஆந்திரம் குப்பத்திலே அணை கட்டுவோம்; பாலாற்றுத் தண்ணீரைத் தடுப்போம் என்கிறது. இன்னொரு பக்கத்தில், காவிரியில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகம், தென் பெண்ணை ஆற்றில் வருகின்ற தண்ணீரையும் தடுத்து நிறுத்துவதற்கு, ஒரத்தூரில் குறுக்கு அணை கட்டி, 160 ஏரிகளுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுவோம் என்கிறது. அதை எதிர்த்து, கடந்த வாரம், கிருஷ்ணகிரியில் போர்க்கொடி உயர்த்தினோம். தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, உயிர்நாடியான தண்ணீரைப் பாதுகாக்கின்ற களத்தில் நாம் நிற்கின்றோம். எதிர்காலத்தில் நாம் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக சூளுரை மேற்கொள்வதற்காக நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
மதுவின் பிடியில், இலவசங்களின் பிடியில் நாசமாகிக் கொண்டு இருக்கின்ற தமிழகத்தை மீட்பதற்கு, லஞ்சம், ஊழல் என்கின்ற விஷச் சுழலில், சதுப்பு நிலத்தில் சிக்கி நாசமாகிக் கொண்டு இருக்கின்ற இன்பத் தமிழகத்தை, மீட்பதற்குச் சூளுரை மேற்கொள்வோம். நாம் போராளிகள், நாம் இலட்சியவாதிகள். கொள்கைக்காக வாழுகின்றவர்கள். தன்னலம் அற்றவர்கள், தமிழகத்துக்காகச் சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கின்ற சிங்க ஏறுகள் உலவுகின்ற இயக்கம்தான், மறுமலர்ச்சி தி.மு.கழகம். எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையோடு களத்தில் பணி ஆற்றிக்கொண்டு இருக்கின்றோம். நடந்து முடிந்தது, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல். இந்த மேடையில் அமர்ந்து இருக்கின்ற தளகர்த்தர்களும், கழகத்தின் முன்னோடிகள் அனைவரும் அந்தக் களத்தில் பணி ஆற்றினோம். வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு அபரிமிதமானது. நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்திலே, எல்லா இடங்களிலும் வரவேற்பு.
ஆனால், முன்னைய அரசு மீது குற்றச்சாட்டு வைத்த இன்யை ஆளுங்கட்சி, கோடிகோடியாகப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டியது. ஏறத்தாழ, 70 கோடி ரூபாய்களைச் செலவழித்தார்கள். ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் இலட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தார்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? எங்கே திரட்டினீர்கள்? யார் கொடுத்தார்கள்? ஊரை அடித்து உலையில் போட்ட பணம் அது. மணல் கொள்ளையில் திரட்டிய பணம். காட்சிகள் மாறியதே தவிர, ஆட்சிக்கட்டிலில் தோற்றம் அளிக்கின்ற நபர்கள்தான் மாறி இருக்கின்றார்களே, வேறு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களேதான், இவர்கள். முன்னைய ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பால், அவர்களைத் தோற்கடித்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய திருமங்கலம் பார்முலாவை, சங்கரன்கோவில் பார்முலா உடைக்கட்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்றைக்கு அவர்கள் செய்ததைத்தானே, இன்றைக்கு நீங்களும் செய்து இருக்கின்றீர்கள்?
கங்கை வெள்ளம்போலப் பாய்ந்த பண வெள்ளத்துக்கு இடையிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மக்களைச் சந்தித்து, வாக்குகளைத் திரட்டினார்கள். நம்பிக்கையோடு இருக்கிறோம். நாங்கள் 20,000 வாக்குகள் பெற்று இருக்கிறோம் என்றால், அந்த ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்க முடியாதது. தோற்றது நாங்கள் அல்ல. பணபலம் வெற்றி பெற்று விட்டது என்று அவர்கள் கருதினால், நாங்கள்தான் வெற்றி பெற்று இருக்கின்றோம் என்று நாங்கள் கருதுகிறோம். தி.மு.க. தொடங்கிய ஊழல், அண்ணா தி.மு.க. ஆட்சியில் தொடருகிறது. இதில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும்.
கோவில்பட்டிக்குப் பக்கத்தில், சாலை ஓரத்தில் மலை போல மணலைக் குவித்து வைத்து இருக்கின்றார்கள். ஆற்றுப்படுகைகளைச் சுரண்டிக் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். தமிழகத்தின் நீராதாரங்களைக் காக்கத் துடிக்கின்றோம். காவிரி, தென்பெண்ணை, பாலாறு; புகழ் கொண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறுகள் பல ஓடி திரு மேனி செழித்த தமிழ்நாட்டின் அனைத்து ஆற்றுப்படுகைகளிலும், மணலை வாரிச் சுரண்டுகிறார்கள். இயற்கைச் செல்வத்தை எல்லாம் அழிக்கின்றார்கள். அப்படி அள்ளிக்கொண்டு வந்த மணல், ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளத்துக்குத்தான் செல்கின்றன. கேரள ஆறுகளில் ஒரு கூடை மணலைக்கூட அள்ள முடியாது. அரசாங்கம் ஒரு யூனிட்டுக்கு விதித்து இருக்கின்ற தொகையைவிட, இருபது மடங்கு, முப்பது மடங்கு விலை வைத்து விற்கின்றார்கள். ஆனால், அது அரசாங்கக் கருவூலத்துக்குப் போவது இல்லை. அது எந்த கஜானாவுக்குப் போகிறது?
நான் ஒரு கிராமத்து விவசாயி. இதுவரை நுழையாத இடங்களுக்கு உள்ளேயும், இந்த ஆட்சியில் மணல் கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்களுக்கு உள்ளே புகுந்து விட்டார்கள். கல்லணை கட்டிய கரிகாலன் காலத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் அனைத்தையும் பாழாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். கோடையில், நீர் அற்றுப்போன காலங்களில், அங்கே கிடைக்கின்ற வண்டல் மண்ணை எடுத்துக்கொண்டு வந்து நிலத்தில் பரப்பி, அதை இயற்கை உரமாக ஆக்குவார்கள் விவசாயிகள். அப்படி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, கண்மாய்க்கு உள்ளே சென்று, அந்தக் கரம்பை மணலை அள்ளிக்கொண்டு வந்து நிலத்தில் தூவியவன் நான். இன்றைக்கு என்ன நிலைமை? நம் கண் முன்னாலேயே அக்கிரமம். தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் அனைத்தையும், அண்ணா தி.மு.க.காரர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள். இதுவரை இப்படிப்பட்ட கொடுமை நடந்தது இல்லை. இதனுடைய விளைவு, விவசாயி, தன் சொந்த நிலத்தில் இருந்துகூட மண்ணை அவனது டிராக்டரில் எடுத்துக் கொண்டு, இன்னொரு இடத்துக்குப் போக முடியவில்லை. உடனே அங்கே அதிகாரிகள் ஓடிவந்து, பறித்துக்கொண்டு போகின்றார்கள். தமிழகம் முழுவதும் இந்தக் கொடுமை நடக்கிறதே, முதல் அமைச்சர் அவர்களே, இது உங்களுக்குத் தெரியாதா? இந்த நிலைமை நீடித்தால், தமிழகத்தில் விவசாயமே அழிந்து விடும்.
வருங்காலத்தில் ஒரு பெரிய உணவுப் பஞ்சம் உலகத்தையே சுற்றி வளைக்கக் காத்து இருக்கிறது என்றால், இந்தியாவும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆளுங்கட்சிக்குப் பணம் சேர்ப்பதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை நியமித்து விட்டார்கள். அவர்கள் ஏரி, குளங்களையெல்லாம் சுரண்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இதிலிருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டும். அந்தப் பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கடமையைச் செய்யும்.
அண்மையில் ஒரு சம்பவம். ஜார்கண்ட் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் போற்றுகின்ற வகையில் பணி ஆற்றிக்கொண்டு இருந்தார் ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன். தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்பான அந்த இளைஞர், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டு நாடே அதிர்ச்சியுற்றது. அல்லும்பகலும் நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்ட நேர்மையாளர். ஐ.ஏ.எஸ். தேர்வுகளில், தமிழையும், இலக்கியத்தையும், வரலாறையும் தேர்வு செய்து வெற்றி கண்டவர். அவர் கடத்தப்பட்டபோது, நம் நெஞ்சில் தணல் மூண்டது. அவரது உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினோம். அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்து போனார்கள். பதறித்துடித்தனர் மக்கள். அவரது சொந்த ஊரில் வள்ளியூர் சமாதானபுரத்தில் மக்கள் தேவாலயங்களில் ஜெபித்தார்கள். ஆலயங்களில் பூசை வைத்தார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை நடத்தி வேண்டினார்கள். நாடே கொந்தளித்துப் போய் இருந்தது. எல்லோர் உள்ளத்திலும் கவலை மூண்டது. அவரை ஆபத்து இல்லாமல் விடுவித்துக்கொண்டு வர வேண்டுமே என்று துடித்தோம். முதல் அமைச்சர் கடிதம் எழுதினார்.
நான் சாதாரணமானவன். ஆனால், எங்கே தமிழர்களுக்கு வேதனை என்றாலும் அதற்காகத்துடிப்பவன். அவர்களது இல்லத்துக்குச் சென்று அந்தக் குடும்பத்தாரைச் சந்தித்தேன். அவர்கள் கண்ணீரில், துயரத்தில் பங்கு ஏற்றேன். ஆனால், முதல் அமைச்சர் அவர்களே, அலெக்ஸ் பால் மேனனுடைய தந்தையார், உங்களை நேரில் சந்தித்து, தன் பிள்ளையைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வர முறையிடுவதற்காக நீங்கள் இருக்கின்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலகத்துக்கே வந்தபோது, நீங்கள் சந்தித்தீர்களா? முன்கூட்டியே அனுமதி பெறவில்லை; ஆகவே சந்திக்க முடியாது என்று திருப்பி அனுப்பினீர்களே, ஒரு முதல் அமைச்சர் என்ற முறையில், இந்த மாநிலத்தை, மக்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா? உங்களிடம் வராமல், வேறு யாரிடம் போவார்கள்? வைகோ விமர்சிக்கின்றானே என்று கோபப்படாதீர்கள். நீங்கள் நல்லது செய்தால் வரவேற்போம். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் நீங்கள் எடுத்த முடிவுகளை வரவேற்றோம். தானே புயல் அழிவின்போது, முதல் நிதியாக பத்து இலட்சம் வழங்கியது மறுமலர்ச்சி தி.மு.கழகம். ஆனால், அலெக்ஸ் பால் மேனனின் தந்தையைச் சந்திக்க மறுத்தது நியாயம்தானா? நீங்கள் அவர்கள் இருக்கின்ற இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை; இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே அதிகாரிகளை அனுப்பி, அந்தக் குடும்பத்தார் எங்கே இருக்கின்றார்கள் என்று தேடி அழைத்து வந்து நீங்கள் ஆறுதல் சொல்ல வேண்டாமா? அஞ்சாதீர்கள், கவலைப்படாதீர்கள்; தக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று சொல்ல வேண்டாமா? உங்களைத் தேடி வந்தவரைத் திருப்பி அனுப்பியது நியாயம்தானா? அல்லது அவர் வந்த தகவல், உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? அப்படிப்பட்ட ஒரு இரும்புத்திரைக் கோட்டைக்கு உள்ளேயா நீங்கள் இருக்கின்றீர்கள்? அதைக்கூடச் சொல்லுவதற்கு அஞ்சுகிறவர்கள்தான் உங்களோடு இருக்கின்றார்களா? அமைச்சர்கள்தான், அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி நிற்கின்றார்கள். எதையும் உங்களிடம் எடுத்துச் சொல்வதற்கு அவர்களுக்குத் துணிச்சல் இல்லை. அதிகார வர்க்கத்திலும் அப்படித்தான் இருக்கின்றார்களா?
19 வயதான இளைஞர் ஜீவாவை, 59 வயது நிரம்பிய காந்தியார், காரைக்குடியில் இருந்து மாட்டு வண்டியிலும் நடந்தும் சென்று சந்தித்தார் அண்ணல் காந்தியார். அதே ஜீவாவின் குடிசை வீட்டைத் தேடிச்சென்று சந்தித்தார் அன்றைய முதல் அமைச்சர் காமராசர். திருவள்ளுவர் படத்தை ஓவியர் வேணுகோபால சர்மா இருந்த அறைக்கே அவரைத்தேடிப்போய்ச் சந்தித்தார், முதல் அமைச்சர் அண்ணா. அத்தகைய அணுகுமுறை வேண்டாமா? உங்களைச் சந்திக்க வந்தவரையும் திருப்பி அனுப்புகின்றீர்களே? உங்களை யாரும் சந்திக்க முடியாது, எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது என்ற விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றீர்கள். இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் ஏற்கனவே அறிக்கை கொடுத்து இருக்கின்றோம். இப்போது இந்தக் கூட்டத்தில் பேசியது, உளவுத்துறையின் மூலமாக உங்களுக்குச் செய்தி வருமானால், தடுத்து நிறுத்துங்கள்; தமிழகத்தின் ஏரி, குளங்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்.
இன்றைக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வீதிகளில் மட்டும் அல்ல, வீடுகளில் இருக்கின்ற தாய்மார்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு பவுன் நகைக்காகக் கழுத்தை அறுத்துப் போட்டுவிடுகின்றார்கள். குடும்பத்தோடு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவை உடைத்து ஒட்டுமொத்தமாக வீட்டையே காலிசெய்து, அவர்கள் நிறுத்தி வைத்து இருந்த காரிலேயே எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இளைய தலைமுறை, மாணவர் சமுதாயம் அரசாங்க மதுக்கடைகளில் அணிவகுத்து நிற்கின்றார்கள். அதைத் தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலம் காலமாகப் பாதுகாத்த வந்த அறமும், நெறிகளும் அடியோடு பாழாகிக் கொண்டு இருக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். இன்றைக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியிலும் அதே நிலை தொடர்கின்றது. இந்த விஷச்சுழல் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றபோது, ஒரு கட்டத்தில் அந்த நிலைமை மாறும். மாற்றக்கூடிய உறுதியோடு இளைஞர்கள் பணி ஆற்றுவார்கள். மாற்று சக்தியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பரிணமிக்கும்; நாளைய அரசியலை வெல்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன்.

