சிறை சென்றது ஏன்? -4 மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! வைகோ கடிதம் / பாகம்-1

Issues: Human Rights, Law & Order, Politics, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Mon, 15/05/2017

 

 

 

 

 

 

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-1

 

சங்கொலி, 12.05.2017

 

என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

 

நேற்றுதான் நடந்தது போல இருக்கின்றது. காலம் இறக்கை கட்டிப் பறக்கிறது என்பார்களே... எல்லாம் மனதில் தோன்றும் எண்ணம்தான்!

23 ஆண்டுகள் நம்மைக் கடந்து விட்டனவா? அல்லது நாம் கடந்தோமா?

ஆம்; 1994 மே 5 ஆம் நாள் மாலையில் தொடங்கியது நீதி கேட்டு ஆர்த்து எழுந்த சகாக்களின் ஆலோசனைக் கூட்டம். தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கில். பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறுவிய இயக்கத்தில் இருந்து கொடும் பழி சுமத்தப்பட்டு நானும் சகாக்களும் நீக்கப் பட்டபின் அடுத்த கட்டத்தை வகுக்கும் கூட்டம். நினைவில் வாழும் ஐயா தினகரன் கே.பி.கே. அவர்களும் வந்திருந்தார்கள்.

திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிமாணமாக முகிழ்த்துவிட்ட நம் அமைப்புக்கு என்ன பெயர் சூட்டுவது? இயக்கத்தின் கொடியை எப்படி வடிவமைப்பது? பங்கேற்ற அனைவருமே பேசினார்கள். நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாகச் சூட்டப்பட்ட பெயர்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

1942 இல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த அமைப்பின் பெயர் மறுமலர்ச்சி மன்றம். அவர் உருவாக்கிய இயக்கம் நீர்த்துப் போய், பாசி படிந்து தேக்கநிலை ஏற்பட்டுவிட்டதால் தேவை மறுமலர்ச்சி. ஐரோப்பிய நாடுகளில் மத்தியக் காலத்தில் சமயத்துறையில், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைத்துறை களில் ஏற்பட்டதுதான் மறுமலர்ச்சி (Renaissance).

அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சம் கவர்ந்த அண்ணன் இரா.செழியன் அவர்கள் நமது விழுப்புரம் மாநாட்டுக்கு வருகை தந்து உரை ஆற்றியபோது, “என்ன பொருத்தமான தேவையான, பொருள் பொதிந்த பெயர் அமைந்துவிட்டது உங்கள் இயக்கத்துக்கு!என்று சிலாகித்தார்.

அமைப்பின் பதாகை கறுப்பும் சிவப்பும் கொண்ட வண்ணம்தான். அதுவும் அண்ணாவின் எண்ணப்படியே வடிவமைத்தோம். காலப்போக்கில் கழகக் கொடியில் சிவப்பு வண்ணம் அதிகமாகும்என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுப் படியே, சிவப்பு நடுவில் கறுப்பு பின்னர் சிவப்பு. நமது கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும்போது அனைத்துக் கட்சிகளின் கொடிகளிலும் ஒரு தனிப் பொலிவோடு மிளிர்வதைக் காண்கின்றோம்.

மே -6 பிறந்தது.

முதல் நாள் இரவு நெடுகிலும் நடந்த ஆலோசனையின் விளைவாகப் பொதுக்குழு கூடிற்று. நமது அரசியல் இயக்கத்தின் பெயரையும், கொடியையும் பிரகடனம் செய்தோம். கோலாகலமான ஆரவாரமும் கரவொலியும் அரங்கத்தில் அதிர்ந்தன.

அப்பப்பா! நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது! எத்தனை சோதனைகள்!

நம்மை அழிக்க முனைந்தோரின் தாக்குதல்கள், பழிக் குற்றச்சாட்டுகள், துரோகங்கள், தோல்விகள் அனைத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம். காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினோம். அத்தனைச் சுழல்களையும் வெற்றிகரமாகக் கடந்தோம். இன்று திராவிட இயக்கத்தின் இலட்சிய அடர்த்தியான பரிமாணமாக நாம் செம்மாந்து தலை நிமிர்ந்து கம்பீரமாகப் புன்னகைக்கின்றோம்.

சென்னை புழல் மத்திய சிறையின் அ-2 தொகுப்பின் 18 ஆம் எண் கொட்டடியில் ஏப்ரல் 30 ஆம் நாள் இரவில் என் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன. வெப்பம் அனலாகத் தகிக்கின்றது. நெருப்பில் தானே படைக்கலன்களை வார்ப்பிக்க முடியும்?” என்னை நானே வார்ப்பித்துக் கொள்கிறேன். சோதனைகளை, மேனி படும் சிரமங்களை, போராட்டங்களை இனிமையாகக் கருதும் இயல்பு எனக்கு இயற்கையாக அமைந்தது.

அடுத்த சுற்று அரசியலுக்கு நான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறேன். மக்கள் சக்தியைத் திரட்டும் வியூமாகத் தான் அடுத்து வரும் நம் நடவடிக்கைகள் அமையும்.

இரவிலும், பகலிலும் எந்த நேரமும் கழகத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். காலம் வழங்கிய அருட்கொடையான கண்ணின்மணிகளான உங்களின் உழைப்பையும், தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.

நானும் நீங்களும் சாதிக்க முடியாததைத் தமிழக அரசியலில் வேறு யார் சாதிக்க முடியும்?

இந்த வார இதழ் ஜூனியர் விகடனில்எனது பேட்டியை நன்கு உள்வாங்கி மிக அருமையாகத் தந்துள்ளார் திரு ப.திருமாவேலன் அவர்கள். கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து இடிந்த கரையில் இந்திய வரலாறு காணாத அறப் போர்க்களம் அமைத்த திரு சுப.உதயகுமாரன் அவர்கள் தந்த இதயத்தை வருடும் பதிவினை குமுதம் ரிப்போர்ட்டர்இதழ் வெளியிட்டு இருந்தது.

நாளை பொழுது விடிந்தால் மே நாள். 1866 ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக ரத்தம் சிந்திய வைக்கோல் சந்தை சதுக்கத்தை ஈழவிடுதலை உணர்வாளர் சகோதரர் சிகாகோ விசுவநாதன் அவர்களுடன் நான் சென்று பார்த்ததும், “தூக்கிலிடப்பட்ட போராளித் தொழிலாளர்கள் ஜார்ஜ் எங்கெல், அடால்ப் பிஷர், ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்ட் ஸ்பைஸ் (George Engel, Adolph Fischer, Albert Parsons, August Spies) கல்லறையைக் கண்டதும் நினைவுக்கு வருகின்றது.

அந்தக் கல்லறையில், The day will come, when our silence will be more powerful than the voice you are throttling today என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் வரும்; அன்று எங்கள் மௌனம், இன்று நீங்கள் போடும் கூச்சலை விட வலிமையானதாக இருக்கும்.

கண்ணின் மணிகளே,

24 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து விட்டோம். கழகக் கொடிக் கம்பங்களில் புது வண்ணம் தீட்டினீர்களா? நமது கொடியைப் புதுப்பொலிவுடன் உயர்த்தி னீர்களா? செய்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

இந்த மடல் தாங்கிய சங்கொலிஉங்களில் பலருக்கு மே -6 ஆம் நாளுக்குப் பின்னர் தான் கிடைக்கும். நாம் நமது இயக்கத்தைத் தொடங்குவதற்குச் சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1974ல் இதே மே மாதம் 5ஆம் நாளன்றுதான் நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் தமிழ் இனத்தின் புகழ் முகவரி பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்இயக்கத்தை தொடங்கினார். அதுவரை புதிய புலிகள்என்ற பெயரில் அவரது இயக்கம் திகழ்ந்தது.

நேற்று ஏப்ரல் 29 காலை நாளிதழ்களில் செய்தி, “சீமைக் கருவேல மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை. என்னை மிகவும் காயப்படுத்தியது. உயர்நீதி மன்றத்தின் மாட்சிமை தங்கிய நீதிபதிகள் செல்வம் அவர்களும், பொன்.கலையரசன் அவர்களும் நன்கு ஆராய்ந்து, தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை, நிலத்தடி நீரைக் காக்க வேலிக்காத்தானை அழிக்க அகற்ற வழங்கிய ஆணை பெருமளவில் செயல்படுத்தப்பட்டு, எண்ணற்ற வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் செயல்படுத்திய நிலையில், இப்படி ஒரு தடை வழக்குத் தொடுத்தவர் சொல்லி இருக்கின்ற காரணங்கள் ஏற்கத்தக்கவையே அல்ல.

நான் கிராமத்து விவசாயி. பெரும்பாலான நாட்கள் கிராம மக்களுடன் வாழ்பவன். வேலிக் கருவேலத்தை விறகுக்குப் பயன்படுத்திய காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது சமையல் எரிவாயு தான் பெரும்பாலும். அதுமட்டும் அல்ல, நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பின்னர், சீமைக் கருவேலம் பக்கம் எவரும் போவது இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது சீமைக் கருவேல மரம். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த மரங்களால் ஏற்பட்ட நாசம் சொல்லும் தரமன்று. கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் உள்ளே வண்டல் மண் இருக்கும், மாட்டு வண்டிகளில் அவற்றை அள்ளிக் கொண்டு வந்து குப்பைக் கிடங்குகள், வயல்களில் புன்செய் நிலங்களில் உரமாகக் கொட்டு வோம்.

ஆனால் தற்போது நிலைமை என்ன? குளங்கள், ஏரிகள் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து நிறைந்து விட்டன. நீர்வரத்துக் கால்வாயில்கள் நெடுகிலும் சீமைக் கருவேல மரங்களே அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அதனால் கண்மாய்களில் நீர் தேங்குவது பெரிதும் குறைந்து விட்டது, அநேகமாக வற்றிவிட்டது.

குளங்களில் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குளம் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடப்பதால், மண் எடுக்கச் சாத்தியமே இல்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரங்களில் மற்ற இடங்களில், வேறு மரக் கன்றுகளை நட வேண்டும். அந்தப் பணி அடுத்து நடைபெற வேண்டும்.

இதற்குத் தடை கேட்ட வழக்கறிஞர் சீமைக் கருவேல மரம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டுதான் இருக்கும்என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைத்தானே நாங்களும் கூறுகின்றோம்? எனவே, ஜேசிபி கொண்டு, தூருடன் வெட்டித் தோண்டி எடுக்க வேண்டும்.

அதன்பிறகு வளர்ந்தால், “இளைதாக முள்மரம் கொள்கஎன்பது போல் நமது பிள்ளைகளே, மாணவர்களே, உடனுக்குடன் இரண்டு கைகளால் பிடுங்கி அகற்றி விடலாம். அத்தகைய விழிப்புணர்வை நாம் பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

அண்டை மாநிலங்களில் இருந்து இனி நாம் நமக்குரிய சட்டப்படியான உரிமை கொண்ட தண்ணீர் வர வழி இல்லை. இயற்கையும் வஞ்சிக்கின்றது. நிலத்தடி நீரைச் சீமைக்கருவேல மரங்கள்தான் உறிஞ்சுகின்றன.

இன்று தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள்தானே மிகுதியாக உள்ளன? மற்ற அனைத்து மரங்களையும் கூட்டிப் பார்த்தாலும்கூட 25 விழுக்காடு தேறாதே?

தமிழ்நாட்டை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது. நீதிமன்றத்தில் நீதி நிலைக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

தோழர்களே, இந்தக் கோடை வெயில் காலத்தில் மறுமலர்ச்சி தண்ணீர்ப் பந்தல்அமைக்கின்ற பணிகளில் ஈடுபடுங்கள். அங்கே பானைகளில் நல்ல தண்ணீர் வைக்க வேண்டும். பல இடங்களில் இந்தத் தண்ணீர்ப் பந்தல்களைப் பார்ப்பதுண்டு - விளம்பரம் இருக்கும்; தண்ணீர் பானை அல்லது டிரம் இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்காது. அதைத் தருவதற்கும் அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார். எனவே, பெயருக்கு அமைத்தால் மட்டும் போதாது. காலை முதல் மாலை வரை அங்கு தோழர்கள் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில்தான் இது மிகவும் தேவை. இதுகுறித்து நமது கழக அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோரிடம் கூறியுள்ளேன்.

என்னுடைய வேண்டுகோள் வெளியான அடுத்த நாளிலேயே, நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் திருமலாபுரம் இராசேந்திரன் முயற்சியால், சங்கரன்கோவிலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற தகவலையும் அறிந்தேன்.

பற்றி எரியும் காஷ்மீர்

இந்தியத் துணைக்கண்டம் குறித்து செலிக் ஹாரிசன் எழுதிய இந்தியா அபாயகரமான பத்தாண்டுகள் (India: The Dangerous Decades) என்ற நூலின் கருத்துகள்தான் இப்போது என் மனதில் எழுகின்றன. தற்போது அப்படிப்பட்ட அபாயகரமான சூழல் படர்ந்துள்ளது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என இயற்கை மகுடம் சூட்டியுள்ள ஜம்மு காஷ்மீரத்து நிலைமை மிக நெருக்கடியான காலகட்டத்தை நெருங்கியுள்ளது.

ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் 2017 ஏப்ரல் 9 ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால் வாக்குப் பதிவு நாளில் 7.14 விழுக்காடு வாக்காளர்கள்தான் வாக்கு அளித்தனர். பல வாக்குச் சாவடிகள் வெறிச் சோடிக்கிடந்தன. எனது இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா இத்தேர்தலில் வெற்றிபெற்றது எல்லையற்ற மகிழ்சசி ஊட்டியது என்றாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு எரிமலைச் சீற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றதே?

அனந்த்நாக் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12 நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் மே 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிலைமை மேலும் விபரீதம் ஆனதால், இப்போது மறு தேதி குறிப்பிடாமல் தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஹூரியட் கான்பெரன்ஸ்’ அமைப்புத் தலைவர்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறுவதை அன்று வாக்காளர்கள் ஏற்கவில்லை. 2002, 2008, 2014 சட்டமன்றத் தேர்தல்களில் சராசரி 50 விழுக்காடு வாக்குப்பதிவு ஆயிற்று. காஷ்மீர் பிரிவினை முழக்கமிடும் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் விடுத்த அறைகூவல் மட்டுமே இன்றைய நிலைக்குக் காரணம் அல்ல.

தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என அஞ்சிய காரணத்தால் வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வரவில்லை என்று அதிகாரவர்க்கம் நியாயம் கற்பிக்க முனைகின்றது. ஆனால், காரணம் அது அல்ல. இந்திய அரசு மீதும் ஆளும் அமைப்பின் மீதும், காஷ்மீரத்து இளைய தலைமுறையின் இதயங்களில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது.

2016 ஜூலையில் புர்கான் வானி படுகொலை அந்தத் தழல் மீது காற்றை வீசிற்று.

எனது நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்கள் காஷ்மீரில் கனன்று கொண்டிருக்கும் கொதி நிலையைத் தணிப்பதற்கும், அதற்கான வழிமுறைகளைக் காண்பதற்கும் அரசியல் கட்சிகளைச் சாரா மனிதநேய உணர்வு கொண்ட நெறியாளர் குழுவினருடன் இரண்டு முறை ஸ்ரீநகருக்குச் சென்றார். ஹரியட் கான்பெரன்சு தலைவர்களை, தீவிரவாதத் தலைவர்களை, அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்து நெடிய ஆலோசனைகள் நடத்தினார். அந்தக் காலகட்டத்தில், புது டில்லியை அடுத்து நொய்டாவில் அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பல மணி நேரம் உரையாடினேன். மத்திய அரசின் அணுகுமுறை மிகத் தவறாக உள்ளது. சிறப்புக் காவல்படை ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மூலமாகவே நிலைமையைக் கட்டுக்குள் அடக்கி வந்த போக்கு எதிர்மறை விளைவுகளைத் தந்துவிட்டது; விபரீத எல்லையைத் தாண்டக்கூடும்என்றார்.

முன்பெல்லாம் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் என்றால் பொதுமக்கள், இளைஞர்கள் அந்த இடங்களை நெருங்கவே மாட்டார்கள். தற்போது காவல்படையினர், இராணுவத் துருப்புகளின் துப்பாக்கிகள் சீறும் இடங் களை நோக்கி இளைஞர்கள் மட்டும் அல்ல கல்லூரி மாணவர்களும் விரைகின்றனர்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.

அழகும் வனமும் வனப்பும் மிக்க காஷ்மீர் மாணவிகள் சிறப்புப் படையினர் மீது எவ்வளவு ஆவேசமாகக் கற்களை வீசு கின்றார்கள்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (Peoples Democratic Party)யும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுச் சேர்ந்து, தற்போது மெகபூபா அம்மையார் முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றார். காஷ்மீர் மக்களின் அடிமனதில் இந்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மீதும் அதைவிட பாரதிய ஜனதா கட்சி மீதும் கசப்பும், வெறுப்பும் ஆழமாக வேரோடியுள்ளது. சுயாட்சி, தனி நாடு (ஆசாதி) என்ற முழக்கம் பள்ளத்தாக்கு முழுமையும் ஓங்கி ஒலிக்கின்றது.

காஷ்மீர் பிரச்சினை இன்று நேற்று திடீரென்று வெடித்தது அல்ல. நாடு விடுதலை பெற்ற 47 ஆம் ஆண்டிலேயே பூதாகாரமாய் புறப்பட்டதுதான் காஷ்மீர்விவகாரம்.

இந்தத் துணைக்கண்டத்தை இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித் தானிய அரசு பாகப் பிரிவினை செய்தபோது, வைஸ்ராய் மெண்ட் பேட்டன்தான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினார்.

பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பு, இன்றைய பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததே கிடையாது. காங்கிரஸ் கட்சியின் தியாகத் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறைப்பட்ட வருமான நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள், 1978 ஆம் ஆண்டு ஆற்றிய குடியரசுத் தலைவர் உரையில் (மத்திய அரசு எழுதிக் கொடுக்கும் அறிக்கையைத்தான் வாசிப்பது வழக்கம்; அதனைத் தூக்கி எறிந்துவிட்டு அவரே எழுதிய உரை அது)

அசோகர் காலத்திலும் இந்தியா ஒன்றாக இல்லை; அக்பர் காலத்திலும் ஒன்றாக இல்லை; பிரிட்டிஷ்காரனின் லத்திக் கம்பும், துப்பாக்கியும்தான் இந்தியாவை உருவாக்கிற்றுஎன்றார்.

இதனை நாடாளுமன்றத்தில் நான் மேற்கோள் காட்டிப் பேசி இருக்கின்றேன்.

காஷ்மீர்யாருடன் இணைவது? இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? அல்லது தனிநாடா? என்ற பிரச்சினையை அலசுவதற்கு முன்பு மற்ற சமஸ்தானங்களை ஆராய்வோம்.

மொத்தம் 564 சமஸ்தானங்கள். தனித் தனி ராஜ்யங்கள். தனி நாடு என்று ஹைதராபாத் நிஜாம் எழுப்பிய குரலும், ரசாக்கர்களின் துப்பாக்கிகளும் சர்தார் வல்லபாய் படேலின் போலீஸ் நடவடிக்கை முன் பஞ்சாய்ப் பறந்தது.

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-2

சங்கொலி, 12.05.2017

ஜூனாகத் வாக்கெடுப்பு

இன்னொன்று ஜூனாகத் (Junagadh). அங்கே இந்துக்கள் 90 விழுக்காடு. ஆட்சி புரிந்தவரோ நவாஸ் முகம்மது மகபத்கான். 1947 ஆகஸ்டு 15 ஆம் நாளன்று, ‘தனது சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டதுஎன்று பிரகடனம் செய்தார். ஜின்னாவின் ஆலோசனைப்படி நடந்துகொண்டார். படேல் படையெடுக்க முனைந்த போது நேரு தடுத்தார். மவுண்ட் பேட்டன் பிரபு .நா.வுக்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம்என்றார்.

ஜூனாகத் நவாப் ஏற்கனவே 47ன் தொடக்கத்தில் ஜூல்பிகர் அலி பூட்டோவின் தந்தையான ஷா நவாஸ் பூட்டோவைத் தனது அரசின் திவானாக நியமித்து இருந்தார். 1948 பிப்ரவரி 20-ஆம் தேதி பாகிஸ்தானுடனா? இந்தியாவுடனா?” என்ற பொது வாக்கெடுப்பு ஜூனாகத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 2 இலட்சத்து 01 ஆயிரத்து 457 வாக்குகள். அதில் 1 இலட்சத்து 90 ஆயிரத்து 870 வாக்குகள் பதிவாகின. அதில் பாகிஸ்தானுடன் இணைய வெறும் 91 வாக்குகளே பதிவாயின. மற்ற அனைத்து வாக்குகளும் இந்தியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்தன. அதாவது 99.95 விழுக்காடு. அந்த சமஸ்தானம் இந்தியாவின் பகுதி ஆயிற்று.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது எப்படி?

இப்போது காஷ்மீரத்துக்கு வருவோம். அங்கே ஜம்மு-காஷ்மீரின் மன்னராக ஹரிசிங் ஆட்சி புரிந்தார். 47-இல் தனது சமஸ்தானம் ஒரு தனி நாடு என்று முதலில் அறிவித்தார். ஆனால் பாகிஸ்தானில் இருந்து சிப்பாய்களும் கலகக்காரர்களும் ஆயுதபாணிகளாகப் பெருமளவில் ஊடுருவிய நிலையில், பாகிஸ்தானின் பிடிக்குள் சிக்க நேரும் என்று அஞ்சிய மன்னர் ஹரிசிங், பண்டித நேருவின் உதவியை நாடினார்.

காஷ்மீரை இந்தியாவில் இணைக்க வேண்டும் என்ற ஆர்வம் சர்தார் வல்லபாய் படேலுக்குத் தொடக்கத்தில் இல்லை என்று குல்தீப் நய்யார் தனது சுயசரிதையில் ஆதாரபூர்வமாகக் கூறுகிறார்.

1947 செப்டம்பர் 27-இல் ஜவஹர்லால் நேரு வல்லபாய் படேலுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய யூனியனுக்குள் காஷ்மீரை இணைக்க வேண்டும்; அதற்கு சேக் அப்துல்லாவின் ஒத்துழைப்பை நாட வேண்டும்என்று எழுதுகிறார்.

ஆனால், ‘காஷ்மீரை விட்டு வெளியேறுஎன்று மன்னர் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போரை ஷேக் அப்துல்லா நடத்திக் கொண்டு இருந்தார். காயிதே ஆஜம் முகமது அலி ஜின்னாவும் ஷேக் அப்துல்லாவும், 1947-க்கு முன்னர் இருமுறை லாகூரில் சந்தித்தபோது தன்னுடன் கரம் கோர்க்குமாறு ஜின்னா வேண்டுகோள் விடுத்தபோது, “இந்தியத் துணைக்கண்டம் நெடுகிலும் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் ஆங்காங்கு வாழும் போது, ‘பாகிஸ்தான்என்று இஸ்லாமிய நாட்டை அமைப்பது விபரீதத்தில் முடியும்என்றார் ஷேக் அப்துல்லா. இதே கருத்தைத்தான் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் உறுதிபடக் கூறினார்.

தற்போது மன்னர் ஹரிசிங் பதட்டத்தில் நடுங்குகிறார். நேருவின் யோசனைப்படி ஷேக் அப்துல்லாவுக்கு நேசக்கரம் நீட்டினார். இந்திய யூனியனுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்கிறேன்என்று 1947 செப்டம்பர் 30-இல் இணைப்புக் கடிதம் (Accession) தந்தார்.

1947 அக்டோபர் 20-இல் பாகிஸ்தான் இராணுவம் பழங்குடியினர்போர்வையில் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி விட்டது என்பது உறுதியாயிற்று. அக்கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஷேக் அப்துல்லா, 1947 செப்டம்பரில் விடுதலையாகி இருந்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட, மேஜர் ஜெனரல் திம்மையா டாங்கிகள் கொண்ட இந்தியப் படையை அனுப்பினார். போர் மூண்டது. இந்தியப் படையின் கை ஓங்கியது. நிலைமை மோசமானபோது 1947 நவம்பர் 26-ஆம் நாளன்று பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் டில்லிக்கு வந்து பண்டித நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் பழங்குடியினர்படையினர் யுத்தகளத்தில் இருந்து பின்வாங்கிச் செல்லுவது என்றும், இந்தியப் படையினரும் பின்வாங்கிக் கொள்வது என்றும் ஐ.நா. சபை ஒரு கமிஷனைஅமைத்து பொது வாக்கெடுப்புநடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மவுண்ட் பேட்டன் பிரபுவின் அறிவுரைப் படி இந்தியாதான் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்என்று புகார் செய்தது.

பொறியில் இந்தியா சிக்கிக் கொண்டதுஎன்று இந்தியாவின் மற்ற தலைவர்கள் பின்னர் குறை கூறினர். .நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜபருல்லாகான் மிகச் சாதுரியமாக வாதங்களை முன் வைத்ததாலும் மத்திய கிழக்கில்தனது ஆதிக்கத்தைத் தொடர்வதற்காகப் பிரிட்டன் சூழ்ச்சியாகக் காய்களை நகர்த்தியது. காஷ்மீர் ஒரு பிரச்சினைக்கு உரிய பிரதேசம்(Territory in dispute) என்றது. அமெரிக்க அரசு தொடக்கத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் பிரிட்டனின் கருத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்தியது.

.நா. தீர்மானம்

1948 ஆகஸ்டு 13-ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கூறுகள்

(1) போர் நிறுத்தம்

(2) காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடியினரை பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும்;

துருப்புக்கள் சிவில் நிர்வாகத்தின்கீழ் செயல்பட வேண்டும்

(3) இந்தியா தனது துருப்புகளைப் பின் வாங்க வேண்டும்

(4) .நா. பார்வையாளர்கள் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பர்

(5) பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் நேரு, தனது சகோதரியும் இந்தியாவின் ஐ.நா. தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கு ஆத்திரத்துடன் எழுதிய கடிதத்தில், “.நா. பாதுகாப்புச் சபை பாரபட்சமாக நடந்து கொண்டது; பிரிட்டனும் அமெரிக்காவும் மோசமாகச் செயல்பட்டனஎன்று எழுதினார்.

1950-இல் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடுவதை நேரு நிராகரித்தார். பொது வாக்கெடுப்பைத் தானும் மவுண்ட் பேட்டன் பிரபுவும் சேர்ந்து ஏற்பாடு செய்யலாம் என்ற ஜின்னாவின் யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த செஸ்டர் பௌல்ஸ் “1953-க்கு முன்னர் பொது வாக்கெடுப்பு நடைபெற்று இருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் கருத்து வெற்றி பெற்று இருக்கும்என்றார்.

காஷ்மீரின் இரண்டாவது பிரதமராக சேக் அப்துல்லா இருந்த காலத்தில் (2nd Prime Minister of Jammu and Kashmir 5 March 1948 – 9 August 1953) 1952 ஜூலையில் டில்லி ஒப்பந்தத்தை நேருவும் ஷேக் அப்துல்லாவும் ஏற்படுத்தினர். 1951-இல் ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்து எடுக்கப்பட்டது. ஐம்மு-காஷ்மீர் இந்திய யூனியனின் பகுதிதான் எனப் பிரகடனம் செய்த ஷேக் அப்துல்லா, மிக அழுத்தமாக மத்திய அரசின் நிர்வாகம், பாதுகாப்பு, வெளிவிவகாரம், இரயில்வே உள்ளிட்ட தொடர்புகள் தவிர்த்து வேறு எதிலும் மத்திய அரசு மூக்கை நீட்டக் கூடாது என்றார்.

நேரு தனது அமைச்சர்களான ரபி அகமத் கித்வாய், அபுல் கலாம் ஆசாத்தை ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியும் பலன் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் அடிமையாக இருக்க முடியாதுஎன்று முழங்கினார் காஷ் மீரத்துச் சிங்கம்.

அந்தச் சிங்கத்தின் கர்ஜனை டில்லிக்கு அதிர்ச்சி தந்தது. அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1953 ஆகஸ்டு 9-ஆம் தேதி ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டுத் தமிழகத்தில் கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு முன் 1942-இல் இதே ஆகஸ்டு 9-இல் தான் வெள்ளையனே வெளியேறு, “செய் அல்லது செத்து மடிஎன மகாத்மா காந்தி பிரகடனம் செய்தது வரலாற்று விசித்திரம்.

காலம் வேகமாக மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ஷேக் அப்துல்லா 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி விடுதலை செய்யப் பட்டார்; 1975 ஆம் ஆண்டு காஷ்மீர் முதல்வர் ஆனார். (4th Chief Minister of Jammu and Kashmir 25 February 1975–26 March 1977) Governor’s Rule (Again In office 9 July 1977–8 September 1982)

காஷ்மீர் சிங்கத்துடன் சந்திப்பு

1980-இல் எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா (அப்போது ஸ்ரீநகர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்) அவர்களின் விருந்தினராக ஸ்ரீநகரில் தங்கி இருந்தேன். அவர்களது சொந்த இல்லத்தில் மாபெரும் தலைவர் ஷேக் அப்துல்லாவைச் சந்திக்க அவரது அலுவலக அறைக்குள் நான் மட்டும் நுழைந்தவுடன், நெடிதுயர்ந்த அந்தக் கம்பீரமான தலைவர், “என் இளைய நண்பனே வருகஎன இரு கரம் நீட்டியவாறு இருக்கையை விட்டு எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது விதிர்விதிர்த்துப் போனேன். ஆனந்த உணர்ச்சி மேனியில் பாய்ந்தது. காஞ்சிபுரம் பட்டு வேட்டி, பட்டுத் துண்டை அவரது தோளில் போர்த்தினேன். 15 நிமிடம் எனக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. மிக அன்பாக அளவளாவினார். ஏர் இந்தியா சேர்மன் காத்திருப்பதாக அவரது உதவியாளர் துண்டுச் சீட்டை நீட்டியபோது, “இருக்கட்டும். எங்கள் உரையாடல் முடியும்போது சொல்கிறேன்எனக் கூறியபின் எனக்காக 40 நிமிடங்கள் செலவழித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

காங்கிரஸ் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் கிடையாதுஎன்று அம்மாமனிதர் கூறியதையும் எப்படி மறப்பேன்?

நான் போர்த்திய பட்டாடைகளைக் களையாமலே என்னை அவரது இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றவர், மகன் டாக்டர் பரூக் அப்துல்லாவையும் வரவழைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். கலிங்கப்பட்டியில் எங்கள் இல்லத்தில் அந்தப்படம் இருக்கின்றது.

காலச்சுழலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்!

காங்கிரஸ் கட்சியுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைக்க யோசித்தபோது டாக்டர் பரூக் அப்துல்லாவிடம் அவர் தந்தை கூறியதை நினைவூட்டினேன். ஆனால் சில அரசியல் அழுத்தங்களால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். பின்னர் ஒருநாள் காலையில் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக் கொண்டு இருந்தபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை அறிந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில், பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி இடம் பெற்றது. ஏன்? நமது இயக்கம் காங்கிரசுடனும், பா.. கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லையா? தவிர்க்க இயலாத தீமைகளாக நம்மை வளைத்து விடுகின்றன. நம்மை அழிக்க தி.மு.. தலைமை கங்கணம் கட்டிக் கருவி கொண்டு செயல்படுகிறதே? நல்லன்புடன் நாம் நெருங்கிச் சென்ற காலத்திலும் அவர்கள் மனதில் வக்கிரமும் உக்கிரமும் மறையவில்லையே?

காஷ்மீர் பற்றி எரிவதற்குப் பல காரணங்கள்!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய இந்துத்துவ சக்திகளின் மூர்க்கம்; அதற்கு உடன்படும் பா.. கட்சி;

இந்தியப் பன்முகத் தன்மையைச் சிதைத்து இந்து ராஷ்டிரம்அமைக்க ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் இந்துத்துவ சக்திகள்;

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம்; ஸ்லாமியர்களின் ஷரியத்தைச் சாய்ப்போம்என்ற ஓங்காரம்;

மாட்டுக் கறி சாப்பிட்டால் தண்டனை; மாடுகள், பசுக்கள் வதை என்றால் சிறை

திருமணப் பிரச்சினையில் ஷரியத்தில்கை வைப்போம்

என்ற முழக்கங்கள்தான் காஷ்மீரத்து இளம் தலைமுறையினரின் நெஞ்சில் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறது.

இந்தியர்களே! வெளியேறுங்கள்,’ என்ற குரலே ஸ்ரீநகரிலும் சுற்றுவட்டாரத்திலும் ஓங்கி ஒலிக்கிறது ஜம்முவின் சில பகுதிகள் தவிர.

இந்நேரத்தில்தான் குளவிக் கூட்டைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. அருணாசலப் பிரதேசத்திற்குச் சொந்தம் கொண்டாடும் சீன நாகத்தைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் வழியாக திபெத்துக்குச் சென்றதால், சீனம் சீறுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரத்து வழியாகவே பொருளாதாரச் சாலைஅமைக்கிறது சீனா. செஞ்சீனமும் ரஷ்யாவும் பாகிஸ்தானுடன் கரம் கோர்த்து விட்டன. தெற்கே இலங்கையில் சீனமும் பாகிஸ்தானும் பலமாகக் கால் ஊன்றி விட்டன. இதனைச் சமாளிப்பதற்காகவே பிரதமர் மோடி ரணில் விக்கிரம சிங்கேயுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுகிறார். சேட்டிலைட் உபகாரம் வேறு சார்க் நாடுகளுக்காம். கடந்த கூட்டத்தில் பாகிஸ் தான் பங்கேற்கவே இல்லை.

பொது வாக்கெடுப்புஎன்றாலே இந்திய தேசியவாதிகளுக்குக் காய்ச்சல் வந்து விடுகிறது. ஐரோப்பாவின் பூந்தோட்டமான சுவிட்சர்லாந்தில் உண்மையான மக்கள் ஆட்சி Referendum and Initiativeமக்கள் விரும்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மக்கள் ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பதே பொது வாக்கெடுப்பு. ஆம்; ‘மக்கள் குரல் தானே மகேசன் குரல்என்றார் அண்ணா.

முத்துலிங்கத்தின் உணர்ச்சி

2017 மே திங்களுக்குரிய விகடன் தடம் மொழி செல்லும் வழி எனும் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கத் தடத்தில் பயணத்தைத் தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் ஈழ இலக்கியம்; ரயில் புறப்பட்டு விட்டதுஎன்ற மேற்கோளுடன் ஈழ எழுத்தாளர், படைப்பாளி திரு. .முத்துலிங்கம் அவர்களின் செவ்வி இடம் பெற்றுள்ளது. ஆர்வத்துடன் படித்தேன். என் மனதை ஈர்த்த வரிகளைத் தருகிறேன்.

கேள்வி : ஈழப் போரை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

திரு. முத்துலிங்கம் : தமிழர்களுக்குப் போர் என்ன புதிதா? சங்க இலக்கியம் முழுக்கப் போரும் காதலும்தானே? காரவேலன் என்ற அரசன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒடிசாவில் யானைக்குகையில் செய்தி பொறித்து வைத்து இருக்கின்றான். தொடர்ந்து தன்னுடன் போர் தொடுத்து வந்த மன்னர்களை அவன் முறியடித்ததாக.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கண்டது போர்தான். மக்கள் தம் விடுதலைக்காகப் போரிடுவதும் காலம் காலமாக நடக்கின்றது. எரித்ரியா போரிட்டு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்தது. தெற்கு சூடானும் போரிட்டு இன்று தனி நாடாக ஆகி இருக்கின்றது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் போரினால்தான். 1995-ஆம் ஆண்டு கனடாவில் கியூபெக் மாகாணம் வாக்கெடுப்பு நடத்தியது. தொடர்ந்து கனடாவின் அங்கமாக இருப்பது என்று மக்கள் தீர்மானித்தார்கள்.

இல்லாவிட்டால் இன்று கியூபெக் ஒரு தனி நாடாக இருந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் மக்கள் வாக்குப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்துபோனது எல்லோரும் அறிந்ததே. ஈழத்துப் போரை வாக்கெடுப்பின் மூலம் தடுத்து இருக்கலாம்; அது நடக்கவில்லை. போர் தொடங்கியது. ஆனால் பிரிவினை சாத்தியமாகவில்லை. (இந்திய அரசின் துரோகமும் ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்கள அரசுக்குத் தந்த ஆயுத பலமும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது.) இறுதியில் அதர்மம் தலைதூக்கியதுதான் மிகவும் கொடுமையானது. ஈழத்துப் போரில் நடந்த அழிவுகளைக் கணக்கிடவே முடியாது

இந்த பேட்டியைப் படித்தபோது படைப்பாளி முத்துலிங்கம், தன் இருதயத்தில் வடியும் இரத்தத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் சில சொற்களில் வடித்து உள்ளார்.

பொது வாக்கெடுப்பு தமிழ் ஈழத் தாயகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று, 2011 ல் பிரஸ்ஸல்ஸ் நகரில் எழுந்த முதல் குரல் வைகோவின் குரல்தான் என்பதே என் வாழ்வில் முக்கியமான தருணம். ஈழ வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

அதனை எவ்விதத்திலும் செயல்படுத்தி விட்டால் இந்தப் பிறவிப் பேற்றினை அடைந்து விடுவேன்.

அது, இயற்கை அன்னையின் கைகளிலும், காலதேவன் தரும் அனுமதியிலும் அடங்கி இருக்கின்றது.

வரலாறு அங்கீகரித்த சுயநிர்ணய உரிமை

ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசுகள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அதுவே தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை. இதுதான் உலக நியதி.

தொடக்க காலத்தில் மனிதன் காடுகளில் உலவியபோது, இயற்கையின் தாக்குதலுக்கு அஞ்சிக் குகைகளில் பதுங்கிய போது, விலங்குகளுடன் போரிட்டபோது, காலது கொண்டு மேலது தழுவி கையது கொண்டு மெய்யது போர்த்தித் தனித் தனியாக வாழ்ந்த போது, தன்னைப் போன்ற உருவங்கொண்டவர்களை மனிதர்களாகக் கண்டு கொண்டான்; தாக்க வருகின்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு அவற்றோடு போரிட்டபோது, அவர்களுக்கு இடையே உறவுகள் வளர்ந்து, தமது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மூலமாக அவர்களுடைய உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்; அந்தச் சத்தத்தின் மூலமாகச் சொற்களைப் பகிர்ந்து வாழ்ந்தார்கள்.

அப்போது, இன்னொரு பகுதியில் இருந்து வேறொரு கூட்டம் வந்தால், அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தங்களுக்குள் வலிமை உள்ள ஒருவனைத் தலைவனாக ஆக்கிக்கொண்டார்கள்; அப்படிக் கூட்டம் கூட்டமாக உருவாகி உருவாகி, வாழ்வதற்கு, வசிப்பதற்கு வீடுகள் கட்டிக் கொண்டார்கள்; பாதுகாப்பதற்கு ஆயுதங்களைத் தாங்குகின்ற படை வீரர்களை அமைத்துக் கொண்டார்கள்; படிப்படியாக வளர்ந்து அரசுகளாக உயர்ந்து, அந்த அரசுகளுக்குத் தலைவனாக மன்னன் ஒரு நிர்வாகத்தை அமைத்தான்.

மன்னன் மகன் மன்னனாக அவர்கள் அமைத்த அரசுகள் பிற அரசுகளோடு மோதுகின்ற காலங்கள் வளர்ந்து, படிப்படியாக, பல நூற்றாண்டுகளாக, மனிதகுல வரலாற்றில் புதிய அரசுகள் எழுந்தன. அந்த அரசுகள் மன்னர் ஆட்சிகளாக உருவாயின.

அந்தக் காலகட்டத்திலேயே மக்கள் தங்களுடைய தலைவனைத் தாங்க ளாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய, மக்கள் விரும்பும் கருத்தின்படிதான் ஒரு அரசன் அரசைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய அரசு அமைத்து, யூப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் மிகப்புராதனமான நாகரிகம் சுமேரிய நாகரிகமாக மலர்ந்த மெசபடோமியாவில் உருவாயிற்று என்று நான் படித்து இருக்கின்றேன்.

பழந்தமிழர்களுக்கும், மெசபடோமியா வாழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. எகிப்து, மெசபடோமியா, பழந் தமிழகம், சிந்து நதிக்கரை நாகரிகம் வரை யிலும் தொடர்புகள் உண்டு.

அதைப்போலவே கிரேக்கத்தின் நகர நாடுகள். அது ஸ்பார்ட்டா ஆகட்டும், ஏதென்ஸ் ஆகட்டும், மக்களாகக் கூடி, ஒரு தலைவனை, பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அந்த நகர நாடுகளின் நிர்வாக சபைகளை அமைத்துக் கொண்டார்கள். மக்களாட்சி மலரத் தொடங்கியது.

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-3

சங்கொலி, 12.05.2017

 

தேசிய இனத்தின் அடையாளம்

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான், காலப்போக்கில், தங்களுக்குத் தாங்களே அரசுகளை அமைத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை உண்டு என்ற கோட்பாடு தோன்றியது.

ஒரு தேசிய இனம் என்பது என்ன?

வாழும் நிலம், பேசுகின்ற மொழி, பின்பற்று கின்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, கடைப் பிடிக்கும் நாகரிகம், அதனால் ஏற்பட்ட குருதி உறவுகள், அவர்கள் அமைத்துக் கொண்ட அரசுகள், அந்தப் பகுதி மக்கள் ஒரு தேசிய இன மக்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மாமேதை லெனின் அவர்கள், 1914 ஆம் ஆண்டு, தன்னாட்சி உரிமையை, சுய நிர்ணய உரிமையைப் பற்றிக் குறிப் பிட்டார்.

இந்தப் புவியில் வாழக்கூடிய பல்வேறு தேசிய இன மக்கள், தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டு, புதிய புதிய நாடுகள் நாளும் இந்த உலகப் பூந்தோட்டத்தில் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

அந்த அடிப்படையில்தான் லெனின் சொன்னார்: மக்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு அரசை அமைத்துக் கொள்வதுதான், சுய நிர்ணய உரிமை.

இந்தத் திட்டவட்டமான கருத்தைத் தம் வாழ்நாள் நெடுகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வலியுறுத்தி வந்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. கருத்து மறுப்பு உரைகள் வந்தன. இது 2017. 114 ஆண்டுகளுக்கு முன்பு லெனின் கூறியது, இன்று அந்தச் சோவியத்து மண்ணிலேயே நிறைவேறிவிட்டது. தொலைநோக்கோடு அவர் அந்தக் கருத்தைச் சொன்னார்.

1918 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், பிப்ரவரி 11 ஆம் நாள், அவர் இன்னும் திட்டவட்டமாகச் சொன்னார்:

‘‘People are governed only by their consent.

 

மக்கள், தங்கள் விருப்பப்படிதான் அவர்களுடைய ஆட்சியை அமைத்துக் கொள்ளுகின்றார்கள்.

That is the right of self-determination. அதுதான் தன்னாட்சி உரிமை

It is not mere a a phrase;. இது வெறும் சொற்றொடர் அல்ல;

It is a compulsory imperative. இது, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றுஎன்று உட்ரோ வில்சன் அறிவித்தார்.

அடுத்து, League of Nations; உலக நாடுகள் மன்றம் வருகின்றது.

அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை அமை கின்றது. 1945 இல், இதைப்பற்றிய விவாதம் எழுகின்றது.

தன்னாட்சி உரிமை Their fundamental right to decide their own destiny ஒவ்வொரு தேசிய இன மக்களும், அவர் களது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுதல்.

1948 ஆம் ஆண்டு, (Human Rights Declaration) செய்யப்பட்டது. அந்தப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு: All the people shall have the right of self-determination என்று குறிப்பிடுகின்றது. அனைத்து மக்களும் சுய நிர்ணய உரிமைக்கான உரிமை பெற வேண்டும்.

அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1941 இல், இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது, அதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாத காலத்தில், எந்த பிரித்தானிய அரசின் ஆளுமையை உடைத்துக் கொண்டு அமெரிக்கா வெளியேறியதோ, சுய நிர்ணய உரிமையை ~பிலடெல் பியாவில் பிரகடனம் செய்ததோ, அதனுடைய குடியரசுத் தலைவர் ~பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களும், திட்டவட்டமாக அவர்கள் அறிவித்த அட்லாண்டிக் பிரகடனத்தில் (Atlantic Charter) மூன்றாவது பிரகடனம் தன்னாட்சி உரிமை (Right of self-determination). அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

1941 இல் லெனின் இறந்துவிட்டார்.

.நா. மன்றத்தில் பொதுச்சபை தீர்மானம், 1514 ஆம் எண் தீர்மானம், தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்கின்ற தீர்மானம்.

அதே தீர்மானம், 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள், 2200 ஆவது தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. International Covenant on Civil and Political Rights.

அதுபோலத்தான், சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளின் அனைத்து உலக ஒப்பந்தமாக, ‘International Covenant on Cultural Social Economic Rights.கலாச்சார, பொருளாதார, சமூக உரிமைகளாக, அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம். 1976 ஆம் ஆண்டு, மே மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்போது, அதில் பங்கு ஏற்றுக்கொண்ட நாடுகள் 167. இந்தியாவும், இலங்கையும் பங்கு ஏற்றன. ஆனால், அவற்றுள் 76 நாடுகள் மட்டுமே, அதில் கையெழுத்து இட்டன. அதில்தான், சுய நிர்ணய உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, .நா. மன்றத்தின் அனைத்து உலக ஒப்பந்தத்தின்படி, அனைத்து மக்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு. All the People have the right of self-determination.’

இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவும், இலங்கையும் கையொப்பம் இடவில்லை.

இந்த உரிமைகளை, தங்கள் சட்டப் புத்தகத்திலேயே கொண்டு வர எந்தெந்த நாடுகள் முன்வந்தன?

மாகாளி கடைக்கண் வைத்தாள்; ஆகா வென்று எழுந்தது பார் யுகப்புரட்சிஎன்றானே கவிஞன் பாரதி, அந்த போல்ஷ்விக் புரட்சி எழுந்ததற்குப் பிறகு, 1918 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத் தின் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. அதில், சோவியத் கூட்டு ஆட்சிக் குடியரசு, (Union of Soviet Socialist Republics) மொத்தம் 90 பிரிவுகள். அதில், 49 ஆவது பிரிவாக, Every State have the right to secede... பிரிந்து செல்லக்கூடிய உரிமை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு.

இதற்கு ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து, சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டம் மறு வரையறை செய்யப்பட்டது. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. அப்படி, 1936 ஆம் ஆண்டு மறு வரையறை செய்யப்பட்ட புதிய அரசியல் சட்டத்தில், முந்தைய 49 ஆவது பிரிவு, இப்போது 17 ஆவது பிரிவாக இடம் பெற்றது. ஒவ்வொரு மாநிலமும் பிரிந்து செல்லக் கூடிய உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

லெனின் மறைவுக்குப் பிறகு, அவருடைய இறுதிச் சடங்கில் பங்கு ஏற்க வேண்டிய லியன் ட்ராட்ஸ்கி விளாடிவாஸ்டாக்கில் இருக்கின்றான். நீ வருவதற்குள் இறுதிச் சடங்குகள் முடிந்து விடும்என்று தகவல் வருகின்றது. அவர் வெளிநாட்டு அமைச்சர். அவர் வருகையைத் திட்டமிட்டுத் தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால், இறுதிச் சடங்குகள் பின்னரே நடைபெற்றன. நிலைமைகள் மாறின. ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆனார். சோவியத் ஒன்றியத்துக்கு உள்ளே, ஜார்ஜியாவும், உக்ரைனும் ஒடுக்கப்பட்டன. அந்த மாநிலங்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன.

இதயக் கதவுகளைத் தட்டுகிறேன்

எதிர்காலத்தில், இளைய தலைமுறையினர் என்றாவது ஒருநாள், மாணவர் சமுதாயம், இந்த இனத்தினுடைய குரலை அவர்கள் பரிசீலிக்கின்ற வேளையில், அடியேனின் கருத்தையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த உணர்வோடுதான் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, குமுறிக் கொண்டு இருக்கின்ற என்னுடைய இருதயத்தின் வேதனைகளை, என் நெஞ்சில் எழுகின்ற சில துயர ஓலங்களைப் பதிவு செய்கின்றேன்.

நமக்கு அருகிலே இருக்கின்றது பரந்து பட்ட நிலப்பரப்பைக் கொண்டு இருக்கின்ற செஞ்சீனம். இன்றைக்கு உலகச் சந்தையில் அனைவரையும் வீழ்த்தி முதல் இடத்துக்கு வரத் துடித்துக்கொண்டு இருக்கின்றது. அங்கே, எண்ணற்ற மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளன. அவை குவிந்து கிடந்த காரணத்தால், பாட்டாளித் தோழர்களை மாவோ ஒன்றாக அணி திரட்டிக் கொண்டு இருந்த காலத்தில், ஆயுதம் ஏந்திக் கொண்டு இருந்த நாள்களில், நடந்தே மக்களைச் சந்தித்துக்கொண்டு இருந்த வேளைகளில், கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில், அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்த காலத்தில், கோமிண்டாங் கட்சி அரசின் கை ஓங்கி இருந்த காலத்தில், செஞ்சீனத்துக்காக அரசியல் சட்டத்தைக் கம்யூனிஸ்டுகள் வகுக்கின்ற வேளையில், “நாங்கள் அமைக்கின்ற அரசில், எந்த ஒரு இனமும், எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையைக் கொடுப்போம்என்று 1931 ஆம் ஆண்டு வரையறுத்து வெளியிட்டார்கள்.

மாவோவின் செம்படை வெற்றி பெற்று, 1949 இல், பீகிங் அரச மாளிகையில், செங்கொடியை உயர்த்தியது.

1982 ஆம் ஆண்டு, அதே சீன தேசம், அரசியல் சட்டத்தை மறு வரையறை செய்து, எந்த ஒரு மாநிலமும் எந்த ஒரு இனமும் பிரிந்து செல்லலாம் என்ற அந்தச் சட்டத்தை, அடியோடு நீக்கியது. இனி அதுபற்றிப் பேசவே கூடாது என்றது.

இதோ பக்கத்தில் இருக்கின்றது மியான்மர் (பர்மா). அங்கே ஆங் சான் கொல்லப்பட்டதற்குப் பிறகு, படைத் தலைவர்களின் பிடிக்குள் நாடு சிக்கியது. ஆங் சானின் அருமை மகள் சூகீ, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுக்கிடந்தார். அந்த பர்மாவில், 1947 இல் அமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தில், பர்மாவில் உள்ள எந்த மாநிலமும் தனியாகப் பிரிந்து செல்லுகின்ற உரிமை உண்டு என்று வகுத்தார்கள். ஆனால், 1974 இல், அந்த உரிமையை எவரும் கடைப்பிடிக்க அனுமதிக்காத பர்மிய இராணுவ ஆட்சி, அரசியல் சட்டத்தில் இருந்து அந்தப் பிரிவை அகற்றியது.

தேசத்துரோகக் குற்றச்சாட்டு

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக எவரும் பேசினால், அது தேசத்துரோகம் என்று அவர்கள் மீது நடவடிக்கை பாயும் நிலையில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவு என்கிற ஆயுதம் பாயும் என்ற நிலையில், தேசத் துரோகக் குற்றச் சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலே இருக்கக்கூடிய, கல்விக்கும் இசைக்கும் பெருந்தொண்டு புரிந்த அண்ணாமலை அரசர் குடும்பத்தினர் அமைத்துத் தந்து இருக்கக்கூடிய அண்ணாமலை மன்றத்தில், ஈழத்தில் நடப்பது என்ன? என்று, பேசியதற்காக, என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

நான் கூண்டில் நிறுத்தப்பட்டேன். ஆனால், நான் கூறிய கருத்தை மறுக்கவில்லை. அப்படி நான் பேசவில்லை என்றோ, நான் பேசிய கருத்து தவறுதான் என்றோ, அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றோ கூறவே இல்லை. அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.

இப்போது, குற்றம் சாட்டுகிறேன் என்ற இந்த வழக்கிலும் என் உரையில் எதையும் நான் மறுக்கப் போவது இல்லை.

இந்த 124 ஏ பிரிவு எப்போது வந்தது?

1806 ஆம் ஆண்டு உதித்தது. மெக்காலே தயாரித்துக் கொடுத்து, 1870 வரையிலே நடைமுறையில் இருந்த சட்டத்தில், இந்தத் தேசத்துரோகம், ‘seditionஎன்ற பிரிவு கிடையாது. பின்னர்தான் பிரித்தானிய அரசு 124 ஏ பிரிவை இணைத்தது.

அதற்குப் பிறகுதான், நாட்டுக்குத் துரோகம், தேசத்துரோகம் என்ற பிரிவு வருகின்றது.

வங்கக் கடல் அலைகளில் எங்கள் கரிகாலன் கலம் செலுத்தினான்; எங்கள் ராஜராஜன், புலிக்கொடி பறந்த கடற்படையை, கீழை நாடுகளுக்கு எல்லாம் கொண்டு சென்று வெற்றிக்கொடி நாட்டினான். பல தீவுகளை வென்றான். அங்கெல்லாம் எங்கள் கொடி, புலிக் கொடியாகப் பறந்தது. அந்த அலை கடலில், தமிழர்களின் நாவாய்கள், கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும், எகிப்து, மெசபடோமியாவுக்கும் சென்று வந்த பண்டைய நாள்களை நினைவூட்டுகின்ற வகையில், அலைகடலை அடக்கி ஆள்வது பிரித்தானியம் Britannia rules the waves; Britons never shall be slavesஎன்றதற்கு அறைகூவல் விடுகின்ற வகையில், இந்தியத் துணைக் கண்டத்தில், கரிகாலன் வழிவந்த நான் கலம் செலுத்துகிறேன் என்றார் ஒட்டப்பிடாரத்து வீர சிதம்பரம்.

அவருக்கு மரக்கலம் வாங்கிக் கொடுக்க, மும்பை நகரத்தில் உதவியாக இருந்து, அந்தக் கப்பல் அங்கிருந்து பயணிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தாரே லோகமான்ய பால கங்காதர திலகர், ‘சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமைஎன்று முழங்கினாரே, அவர் மீது, இந்த 124 ஏ பிரிவு பாய்ந்தது.

திலகருக்காக வாதாடிய ஜின்னா

திலகர் ஒரு தலைசிறந்த வழக்குரைஞர். அவருக்காக வாதாடியவர் முகமது அலி ஜின்னா. அந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். லண்டன் பிரிவியு கவுன்சிலுக்குப் போனார். அங்கும் தண்டிக்கப்பட்டார். பர்மாவின் மாண்டலே சிறையில், ஆறு ஆண்டுகள் இருந்தார். அங்கேதான் இரண்டரை ஆண்டுகள் நேதாஜியும் இருந்தார். ஆறு ஆண்டுகள் அங்கே சித்திரவதை அனுபவித்து இருக்கின்றார் திலகர். அவர் எழுதிய ஒரு நூல்தான் கீதா ரகசியம்.அது, அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அந்த மாண்டலே சிறையில் பட்ட துன்பங்களைப் பற்றி இன்னொரு நூலில், அங்கே ஏற்பட்ட துன்பங்களை அவர் விவரித்து இருப்பதைப் படித்தால், நம் இருதயத்தில் குருதி கொட்டும். அதை நான் உணர்ந்து இருக்கின்றேன். அவர் மீது பாய்ந்தது இந்த 124 ஏ பிரிவு.

ஆனால், நாட்டைத் துண்டாட விரும்புகிறார்கள் என்றோ, இறையாண்மைக்கு ஆபத்து வருகிறது என்றோ, அந்த அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முக்கியம். இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பது குற்றம் என்று சட்டப்படி அந்த நிலை எடுக்கப்பட வில்லை.

இந்தக் கட்டத்தில், 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சட்டம் அரங்கேறுகிறது. அதற்கான முன்வரைவிலே (Drafts), அடிப்படை உரிமைகள் 13 (2) என்ற பிரிவில், பொது அமைதி (Public order), அதற்குக் குந்தகம் விளைவித்தால், அது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தாது; அது பேச்சு உரிமை என்ற எல்லைக்குள் வராது என்ற காலம்.

மார்ச் மாதம். ரமேஷ் தாப்பர் என்பவர், மும்பையில் இருந்து நடத்துகின்ற ஒரு ஆங்கில ஏடு கிராஸ்ரோட்ஸ் (Crossroads). குறுக்குச்சாலை

எப்பக்கம் செல்வது? எந்தத் திசையில் செல்வது? என்று தெரியாமல், திக்குத் தெரியாமல் ஒரு இடத்தில் நின்று கொண்டு திகைத்து நிற்பதைத்தான் ஆங்கிலத்தில் we are at crossroadsஎன்பார்கள். அது ஒரு நாற்சந்தி.

அந்தத் தலைப்பில் ஒரு வார ஏடு வந்து கொண்டு இருந்தது. அப்போது, சென்னை மாகாண பொது அமைதி ஒழுங்கு பாதுகாப்பு என்ற சட்டத்தின் படி, (Madras Public Order Maintenance Act) இந்த ஏடு, சென்னை மாகாணத்துக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. ஆம், சென்னைதான் இதற்கு அடிப்படை.

அதே காலகட்டத்தில், டெல்லியில், பூரே பூஷண் என்பவருடைய பத்திரிகை, கிழக்குப் பஞ்சாப் சட்டத்தின் அடிப்படையில், டெல்லிக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தடை செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்தின் இந்தச் சட்டம், எழுத்து உரிமைக்குத் தடை விதிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தலைமை நீதிபதி கன்னா, புகழ் பெற்ற நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, புகழ் மிக்க நீதிபதிகள் பசல் அலி, மகாஜன், முகர்ஜி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்விலே விசாரிக்கப் படுகின்றது.

பதஞ்சலி சாஸ்திரி எழுதுகிறார். அந்தக் கருத்தைத்தான், தலைமை நீதிபதி உட்பட பசல் அலி தவிர மற்றவர்கள் அனைவருமே ஏற்கின்றார்கள். அதன்படி,

கருத்துகளைச் சொல்லுவதற்கு உரிமை உண்டு; பொது அமைதி என்று கூறி, கருத்துச் சொல்லுவதைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அரசு அமைப்புச் சட்டத்தை வகுக்கின்ற பொழுது, அதை உருவாக்கிக் கொடுத்த மாமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், அவர் உட்பட எவரும், வரைவில் இருந்த 13 (2) பிரிவை ஏற்கவில்லை. பொது அமைதி என்பது இங்கே கிடையாது. இந்தப் பொது அமைதிக்கு, ஒழுங்குக்கு ஆபத்து நேரும் என்று கருதி, பேச்சு உரிமையை, கருத்து உரிமையைத் தடுக்க முடியாது. எனவே, இது அடிப்படை உரிமைகளின் (Fundamental Rights) கீழ் வரவில்லைஎன்று அவர்கள் அறிவித்ததன் விளைவாக, சென்னை மாகாணத்தின் பத்திரிகைத் தடைச்சட்டம் செல்லாது என்று அவர்கள் தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

ஆனால், நீதிபதி பசல் அலி மட்டும் அதற்கு மாறாக, பொது அமைதிக்கு ஒழுங்குக்கு ஊறுநேர்ந்தால், அது அடிப்படை உரிமை என்று அனுமதிக்கக் கூடாது; இது நாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது என்று தீர்ப்பு எழுதினார்.

1951 இல் முதலாவது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. அதில் 19 ஆவது பிரிவு, அடிப்படை உரிமை; பேச்சு உரிமை, கருத்து உரிமை. அதன் 2 ஆவது உட்பிரிவில், பொது அமைதிக்கு ஊறு நேர்ந்தால், சட்டப்படி அது குற்றமாகத்தான் கருதப்படும் என்ற விதத்தில், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாட்கள் சென்றன. திராவிட நாடுஎன்ற தனிநாடு கோரிக்கை வலுத்தது. காரணம், அன்றைய சென்னை மாகாணத்துக்கு உள்ளே, கர்நாடகத்தின் பகுதிகள் இருந்தன; ஆந்திரத்தின் பகுதிகள் இருந்தன; கேரளத்தின் பகுதிகள் இருந்தன. உலகத்தின் தொன்மைத் தமிழ் மொழியின் உதிரத்தில் இருந்துதான், இந்த மொழிகள் உதித்து எழுந்தன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கூறியது மட்டும் அல்ல, மேற்கு நாடுகளின் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அது நிறுவப்பட்டது.

அந்த அடிப்படையில் தந்தை பெரியார் எழுப்பிய குரல், ‘தமிழ்நாடு தமிழருக்கே; தனித்தமிழ்நாடுஎன்ற குரலை, 1937 இல் வைத்து இருந்தாலும், இந்தத் திராவிட நாடு என்ற தனிநாட்டுக் கோரிக்கையை பின்னர் அவர்கள் வைத்த காலகட்டத்தில், இந்தக் குரலை எப்படி அடக்குவது என்று கருதிய தில்லி அரசு, 1961 ஆம் ஆண்டு, இந்தியக் குற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது (Criminal Act Amemendment).

அதன்படி, தனிநாடு கோரிக்கையைத் தடுப்பதற்கு, பொது அமைதிக்கு ஒழுங்குக்குக் கேடு நேருகின்ற கருத்தைத் தடுப்பதற்கு, மாநிலங்கள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று கொண்டு வந்தார்கள். அத்தோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. 1963 பிறந்தது. அரசியல் சட்டத்துக்கு 6 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதில், அடிப்படை உரிமைகள் பிரிவான 19 ஆவது பிரிவின், 2,3,4 ஆகிய உட்பிரிவுகளில், Sovereignty and integrity என்ற சொற்களைச் சேர்த்தார்கள்.

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-4

சங்கொலி, 12.05.2017

மாநிலங்களவையில் அண்ணா

அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பேசுவதற்கு, பேச்சு உரிமைகளில் இடம் இல்லை. Reasonable restrictsions என்ற வரையறைக்குள் இது வந்து விடும். இதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று திருத்தம் கொண்டு வந்தார்கள்.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினர். 1963 ஜனவரி 25 ஆம் நாள் சபை கூடுகிறது. எந்த அன்னைத் தமிழ் மொழிக்காக, சரியாக ஓராண்டு கழித்து மலைக்கோட்டைத் திருநகராம் திருச்சிராப்பள்ளியில், கீழப்பழுவூர் சின்னச்சாமி, தணலின் நாக்குகளுக்குத் தன் உயிரைத் தாரை வார்த்துக் கொடுத்தானோ, அதே ஜனவரி 25 ஆம் நாளில்; 1963 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் பேசுகிறார். அவையின் துணைத் தலைவரான சகோதரி மார்கரெட் ஆல்வா பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து இருக்கின்றார்.

அறிவுக்கடல் அல்லவா அண்ணா? ஆகாயம் போன்ற அவரது சிந்தனை ஓட்டத்தை நான் அந்த உரையில் பார்க்கிறேன். அதில் முதல் வாக்கியத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

அவர் உருவாக்கிய பாசறையில் இருந்து வந்தவன் நான். அதில் வார்ப்பிக்கப் பட்டவன். பேரறிஞர் அண்ணா அவர்களைக் காலம் விரைவாகக் கொத்திக் கொண்டு போனதால் ஏற்பட்ட துன்பங்களை எண்ணி, இன்று வரையிலும் கலங்கு கின்றவன்.

ஆக்கிரமிப்பாளனை அழைத்துப் பேசுகின்றீர்கள்: அமைதி வழியில் கேட்டால், புறக்கணிக்கின்றீர்களே?

அண்ணா பேசுகிறார், Madam Deputy Chairman; It is a painful pardaox that we are discussing today the amendment of the constitution, to give a legal weapon to the government v‹W brhšÈÉ£L, to pull down not an antagonist, but a protagonist for a cause எப்படிப்பட்ட காலகட்டத்தில், when we are meeting the Chinese aggressor, we are in the discussion table for a negotiation;

சீன ஆக்கிரமிப்பாளர்கள், இமயத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட வேளை. நம் படை வீரர்களைப் பலியாக்கியவர்கள், ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்திய அரசு அழைத்து இருக்கின்ற நேரத்தில், அப்போதுதான் போர் நிறுத்தம் வந்த நேரத்தில், பேச வாருங்கள் என்று அழைத்து இருக்கின்றபொழுது, நீங்கள் ஒரு கருத்தைத் தடுப்பதற்காக, ஒரு கொள்கையைச் சொல்லுகின்றவனுடைய கருத்தைத் தடுப்பதற்காக, அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து இங்கே விவாதிப்பது ஒரு வேதனையான, விசித்திரமாக இருக்கின்றது.

It is a painful paradox’என்று தொடங்கி, Protagonist என்ற சொல்லைப் பயன்படுத்தி அண்ணா கூறுகிறார்.

அவர் அந்தச் சொல்லை எப்படிப் பயன் படுத்தினார் என்பதை நான் எண்ணிப் பார்த்தேன். புரோட்டகானிஸ்ட் Protagonistஎன்பது ஒரு கிரேக்கச் சொல்.

ஒரு காவியத்தில் அல்லது ஒரு கவிதை நாடகத்தில், மூன்று பாத்திரங்கள் இருப் பார்கள்.

ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன், புரோட்டகானிஸ்ட் (Protagonist).

அடுத்து வருவது டியூட்ராகானிஸ்ட். (Deutragonist).

அவன் உடந்தையாகவும் இருக்கலாம்; அல்லது விலகியும் செல்லலாம். (குழப்பவாதி; சந்தர்ப்பவாதி)

அடுத்தது, டிரைடகானிஸ்ட் (Deutragonist)

அவன், துன்பங்களை, கேடுகளை விளைவிப்பவன்; இலட்சியவாதிக்கு எதிரான நிலை எடுப்பவன்.

இந்த மூவரும் சேர்ந்ததுதான் கிரேக்கத்தில் ஒரு காவியம், ஒரு இலக்கியம்!

அண்ணா அழகாக அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

நான் ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்லுகிறேன். கிரேக்கத்தின் காவியங்களில் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன் புரோட்டகானிஸ்ட்என்று சொல்லப்பட்டான்; அப்படிப்பட்ட கருத்தை நான் இங்கே முன் வைப்பதைத் தடுப்பதற்கு, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றீர்களே?

சீன ஆக்கிரமிப்பாளனை அழைத்து, ஒரு மேசையில் அமர வைத்துப் பேச முற்பட்டு விட்ட இந்த அரசு, எங்களை ஏன் அழைத்துப் பேச முற்படவில்லை?

நான் திராவிட நாடு கேட்டேன். நாகர்களுக்குத் தனிநாடு கேட்ட பிஜோவைப் போல என்று, வரலாறு தெரியாதவர்கள் சொல்லுகின்றார்கள். நாங்கள் பிஜோவைப் பார்த்துக் கேட்கவில்லை.

நாங்கள் தனிநாடு கேட்கிறோம். எங்களை ஏன் அழைத்துப் பேசவில்லை? தேசிய ஒருமைப் பாட்டுக்குழு (National Integration Committee) ஒன்றை அமைத்து இருக்கின்றீர்கள். அதற்குத் தலைவராக யாரைப் போட்டு இருக்கின்றீர்கள்? ஒரு வலிமையான மனிதரை. தேசிய ஒருமைப்பாட்டில் உறுதியான, திறமையான ஒரு மனிதரை. அந்தக் கொள்கைக்காகவே இருக்கின்ற சர் சி.பி. இராமசாமி அய்யரை அல்லவா அதற்குத் தலைவராக அறிவித்து இருக்கின்றீர்கள்? அவர் யார்?

அவர்தான், 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா விடுதலை பெற்ற நாளில், திருவிதாங்கூர் திவானாக இருந்து கொண்டு, ‘இனி திருவிதாங்கூர் சமஸ்தானம் தனிநாடுஎன்று மன்னரைப் பிரகடனம் செய்ய வைத்து, பாகிஸ்தானோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர். இன்று, அவரைத் தான், இந்திய தேசிய ஒருமைப் பாட்டுக் குழுவுக்குத் தலைவராக நியமித்து இருக்கின்றீர்கள்.

நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கருத்துகளைக் கேட்பதற்காக, ஒருமைப் பாட்டுக் குழுவினர் பயணித்தார்களே, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏன் அழைத்துப் பேசவில்லை? எங்களை ஏன் சந்திக்கவில்லை? என்னை ஏன் சந்திக்கவில்லை? என்று நான் கேட்கவில்லை.

ஏனென்றால், நாங்கள் அரசாங்கத்தின் விருந்தாளிகளாக வேலூர் சிறைக்குள் இருந்தோம். சின்னச் சின்னக் கொட்டடிகளுக்கு உள்ளே அடைக்கப்பட்டு இருந்தோம்.

ஆனால், எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் வெளியில் இருந்தாரே? அவர்களை அழைத்துப் பேசி இருக்கலாமே?

சி.பி.இராமசாமி அய்யர் சிறைக்கு வந்து என்னைப் பார்க்கவில்லை என்று நான் கூற மாட்டேன். நான் மிகச் சாதாரணமானவன். அவர் பெரிய மனிதர். அவர் பிறரைச் சிறைக்கு உள்ளே அடைத்துத்தான் பழக்கப்பட்டவரே தவிர, சிறைக்கு உள்ளே போய்ப் பார்த்துப் பழக்கப்பட்டவர் அல்ல.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஏன் தயக்கம்? தமிழ்நாட்டில் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றது. நாங்கள் 35 இலட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கின்றோம். காலம் சீராகச் செல்லுமானால், அடுத்த தேர்தலுக்குப் பிறகு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருக்கும்.

எங்கள் கருத்து தவறு என்றால் திருத்துங்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கே இடம் கிடையாதா? ஒரு கருத்தை நசுக்குவதற்காக இப்படி ஒரு சட்டமா? நாங்கள் சொல்லுகின்ற கருத்து தவறாக இருந்தால், எங்களைத் திருத்துங்கள். உங்களிடம் நல்ல ஆழமான, ஆணித்தரமான கருத்து இருந்தால், அதைக் கொண்டு, எங்கள் கருத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆனால், எங்களை வற்புறுத்தாதீர்கள். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இப்படியெல்லாம் அருமையாக அவர் கருத்துகளை எடுத்து வைத்த வாதம், அரசியல் சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தின்போது நடந்தது.

அப்போதுதான், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதை ஏற்க முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அதற்குப் பிறகுதான், 1967 இல், Ulnawful Activities Prevention Act சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அது பின்னர் புதிய புதிய வடிவங்களை எடுக்கின்றது.

Maintenance of Internal Security Act -MISA என்றார்கள். Prevention of Terrorism Act-POTA என்று ஒரு வடிவத்தை எடுக்கிறது. அதே பிரிவுகளைக் கொண்டுதான் இன்றைக்கும் Ulnawful Activities Prevention Act சட்டம் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் ஒரு இயக்கம் தடை செய்யப்படுகின்றது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது.

அந்தத் தடை தவறானது என்று நான் தீர்ப்பு ஆயத்திலும், உயர்நீதி மன்றத்திலும் வாதாடுகின்ற பொழுது,

அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எவ்விதத்தில் கேடு விளைவிக்கின்றது? அது எப்படி ஆபத்தானது? அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழத்தில், தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூடக் கேட்கவில்லை. தந்தை செல்வாவோ, மாவீரர் திலகம் பிரபாகரனோ கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தமிழ் ஈழம் அமைக்கப் போவதாக, பொய்யாக, மத்திய அரசு வகுத்து இருக்கின்ற, அபாண்டங்கள் நிறைந்த வழக்குகள் மூலமாக, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து இருக்கின்றார்கள். அது செல்லாது; அதை நீக்க வேண்டும்என்று என் வாதங்களை எடுத்து வைத்து இருக்கின்றேன்.

வடக்கு எல்லைக்குச் செல்வோம்.

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும், பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்புகின்றார். எங்களைப் பாதுகாக்க வாருங்கள்; இந்தியப் படைகளை அனுப்புங்கள். இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகின்றேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன் என்கிறார்.

அப்போது, இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம், இந்திய யூனியனோடு இணைந்து கொண்டு இருந்த காலம். அதுபோல, எங்கள் காஷ்மீரமும் இணையும் என்று, அக்டோபர் 26 ஆம் தேதி, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தகவல் தருகின்றார்.

நேருவின் உறுதிமொழிகள்

அன்றைக்கே, இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு, 1947 அக்டோபர் 26 ஆம் தேதியே, இந்தியப் பிரதமர் நேரு கடிதம் எழுதுகின்றார்.

காஷ்மீருக்கு உள்ளே நாங்கள் படையை அனுப்ப நேர்ந்தது. ஆனால், காஷ்மீர் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். They have to decide their destiny.

இந்தியாவோடு இருப்பதா? விலகுவதா? தனிநாடாக ஆவதா? என்பது, காஷ்மீர் மக்களுடைய முடிவு. They have to give their consent.

அதை, பொது வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றுவோம். We will decide it a by a plebiscite.

இவ்வாறு கடிதம் எழுதிய நேரு, நவம்பர் 2 ஆம் தேதி, அனைத்து இந்திய வானொலியில் உரை ஆற்றியபோதும், இதே கருத்தைச் சொல்லுகின்றார். காஷ்மீரத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு, காஷ்மீர் மக்களுக்குத்தான் உண்டு. அது, வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறும்என்று வானொலியில் அறிவித்து விட்டு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு, ‘நாங்கள், வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்என்று கடிதமும் அனுப்புகிறார். மறுநாள், நவம்பர் மாதம் 3 ஆம் தேதியும் வானொலியில் பேசுகிறார். அதனையே வலியுறுத்துகிறார்.

1948 மார்ச் 5 அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly)யில் நேரு பேசு கின்றார்.

We have given a promise, not only to the union, but to the United Nations, to the whole world, that the fate of the Kashmir will be dcided by the people of Kashmir; That will be decided by a plebiscite.

 

நாம் ஒரு வாக்குக் கொடுத்து விட்டோம். We stood by it; we stand by it and we will stand by it.

இந்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக இருப்போம்

என்கிறார்.

1951 இல், லண்டனுக்குப் போகின்றார். ஜனவரி 16. செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவர்கள் கேட்கிறார்கள். அப்போது சொல்லுகின்றார்: We have made a commitment for a plebiscite in Kashmir. காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நடக்கும். அதன்படி, அந்த மக்கள் முடிவு செய்வார்கள்.

மீண்டும், 1952 மார்ச் 26, ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில், இந்திய நாடாளுமன்றத்தில் உரை ஆற்றும்போதும், இதையே குறிப்பிடுகின்றார்.

நாம் வாக்குக் கொடுத்து விட்டோம். ஒருவேளை, காஷ்மீர் நம்மை விட்டு விலகிச் செல்வதாக முடிவு எடுத்தால், நம் இருதயங்கள் காயப்படலாம்; ஆனால், உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றித் தீர வேண்டும். என்கிறார். 1954 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் பேசும்போதும், அதே கருத்தை மீண்டும் பேசி பதிவு செய்கின்றார்.

நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும்தான் இங்கே பதிவு செய்கின்றேன்.

பத்து ஆண்டுகள் கழிகின்றன. 1964. முகமது கரீம் சாக்ளா, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, இந்தியாவின் கல்வி அமைச்சராக, .நா. சபையில் பேசுகின்றார்.

1947 முதல் 1954 வரையிலும், பண்டித நேரு, உலகத்துக்கும், .நா. மன்றத்துக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் தெரிவித்த கருத்து, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு.

எது பொது வாக்கெடுப்பு?

இப்போது, 64 இல் சாக்ளா பேசுகின்றார்.

பொது வாக்கெடுப்பா? காஷ்மீரில் தான் நாங்கள் மூன்று பொதுத் தேர்தல்களை நடத்தி விட்டோமே? அதுதான், பொது வாக்கெடுப்பு. அதைத் தவிர வேறு எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாகிஸ்தானில் பலூச் மக்கள் கேட்கின்றார்கள்; பக்டூனிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; பட்டாணியர்கள் கேட்கின்றார்கள்; கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; அங்கெல்லாம் நீங்கள் பொது வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்று கேட்கின்றார்.

இப்படி இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டது.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; சீன அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது; பர்மா சட்டத்தில் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது. இந்தியாவில், காஷ்மீரத்தில் பொது வாக்கெடுப்பு குறித்து மேற்கொள்ளப் பட்ட நிலைப்பாடு, பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டது.

பொது வாக்கெடுப்பின் வகைகள்

ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எப்பொழுது வருகின்றது?

ஒரு தேசிய இன மக்கள், தங்களுடைய சுய நிர்ணய உரிமையை, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிக் கொள்ள பொது வாக்கெடுப்பு வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில், ஒரு குறிப்பிட்ட மக்கள், இதுகுறித்து வாக்கெடுப்பு வேண்டும் என்று, அவர்கள் கையெழுத்து இட்டுக் கோரிக்கை வைத்தால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பொது வாக்கெடுப்பு என்பது, இரண்டு விதமாக அமையலாம். ஒரு நாட்டின் எல்லைகளைத் தீர்மானிக்க; ஒரு நாடு, இன்னொரு நாட்டின் பகுதியாகச் சேருவதற்கு அல்லது பிரிந்து செல்லுவதற்கு; அல்லது, பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க அல்லது மறுக்க. இது ஒருவிதமான பொது வாக்கெடுப்பு.

ஒரு நாட்டுக்கு உள்ளேயே பொது வாக்கெடுப்பு நடத்தலாம். (Domestic Referendum) ஓரு குறிப்பிட்ட பிரச்சினையை ஏற்க அல்லது மறுக்க; எடுத்துக் காட்டு, மதுவிலக்கு. மது வேண்டுமா? வேண்டாமா? என்று கூட ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

நோர்வேயின் தோற்றம்

இந்த அடிப்படையில், தேசிய இனங்கள், தங்கள் சுதந்திரத்தைத் தேடிக் கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, 1905 ஆகஸ்ட் 13 இல், அதுவரை ஒன்றாக இருந்த ஸ்வீடனில் இருந்து பிரிந்து செல்வதற்காக, நோர்வே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இத்தனைக்கும், நோர்வே மக்களை, சுவீடன்காரர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. நோர்வீஜியப் பெண்களுக்குப் பாலியல் கொடுமைகளை விளைவிக்கவில்லை. நோர்வீஜியர்களின் வழிபாட்டுத் தலங்களை, ஸ்வீடன்காரர்கள் அழிக்கவில்லை. இராணுவத்திலோ, அரசுப் பணிகளிலோ, நோர் வீஜியர்களுக்கு இடம் இல்லாமல் செய்ய வில்லை. இருவரும், சம அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தார்கள். சம உரிமை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

ஆனாலும்கூட, நாங்கள் தனி இனம்; தனித்து வாழ்வோம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 100 விழுக்காடு நோர்வீஜியர்களும், சுவீடனில் இருந்து பிரிந்து செல்வோம் என்று முடிவு எடுத்தார்கள்.

ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், தெற்கு ஆசிய பிராந்திய அமைதி மாநாட்டில் நான் பேசினேன்.

உலகம் தமிழர்களை அநாதைகளாகக் கைவிட்ட வேளையில், ஆண்டன் பாலசிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், மரணத்தின் வாசலில் இருந்த அவரை அழைத்துக் கொண்டு வந்து, பழுதுபட்ட இரு சிறு நீரகங்களையும் மாற்றி, மாற்றுச் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த நோர்வே நாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று நான் பேசினேன்.

இரண்டாவது நாள் அமர்வுக்கு, ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு சகோதரி தலைமை தாங்கினார்.அமர்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது, எனக்கும், சிங்கள நாட்டில் இருந்து வந்த பௌத்த பிட்சுகளுக்கும் வாக்குவாதம் வந்தது. மோதல் ஒன்றும் இல்லை.

புத்த பிட்சு சொன்னார்: Eelam is a day dream. It is a mirage; ஈழம் பகல் கனவு; அது கானல் நீர் என்று சொன்னார்.

நான் உடனே எழுந்து சொன்னேன்:

Sometime back, an independent Norway was considered as a day dream. But, Independent Norway has become a reality. Likethat, a day will come; Tamil Eelam will usher as a separate nation.

.

நோர்வே என்ற தனி நாடு அமைவது ஒரு பகல் கனவு என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கருதினார்கள். ஆனால், அங்கே பொது வாக்கெடுப்பு நடந்தது. தனி நாடாக மலர்ந்து விட்டது. அதுபோல, தமிழ் ஈழமும் ஒரு தனி நாடாக அமையும் என்று நான் சொன்னேன்.இன்று, நோர்வே ஒரு தனி நாடாக மலர்ந்து விட்டது. இன்று நான் நோர்வேயில் இருந்து பேசுகிறேன் என்றேன்.

பிரிவுக்கு வாழ்த்துச் சொன்ன மன்னர்

1944 மே 22,23 ஆகிய நாள்களில், டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபடுவதற்காக, ஐஸ்லாந்திலே பொது வாக்கெடுப்பு நடந்தது. 95 விழுக்காடு மக்கள் வாக்குப்பதிவில் பங்கு ஏற்றார்கள். அவர்களுள், 98 விழுக்காடு ஐஸ்லாந்து மக்கள், தங்கள் நாடு டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபட்டு, தனி நாடாக ஆக வேண்டும் என்று ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.

இந்த முடிவை, டென்மார்க் நாட்டு மக்கள் ஏற்கவில்லை. வேதனை அடைந்தார்கள். காரணம் என்ன தெரியுமா? அப்போது டென்மார்க் நாடே நாஜி ஜெர்மனியின் பிடியில் இருந்தது. அங்கே ஸ்வஸ்திக் கொடி பறந்து கொண்டு இருந்தது. நாங்களே அடால்~ப் ஹிட்லரின் பிடிக்குள் சிக்கி இருக்கின்றோம். இந்த நேரத்திலா நீங்கள் வெளியேறுகின்றீர்கள்? இப்பொழுதா, எங்களை விட்டுப் பிரிந்து செல்லுகிறீர்கள்? நாஜிகளின் அடிமைப் பிடியில் இருக்கின்ற எங்களுக்கே இது துக்கமான நேரம் அல்லவா? என்று மனம் குமுறினார்கள்.

ஆனால், டென்மார்க் மன்னர் 10 ஆவது கிறிஸ்டியன்சன் என்ன செய்தார் தெரியுமா? “தனிநாடாகப் பிரிந்து செல்ல ஐஸ்லாந்து முடிவு எடுத்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று அறிவித்தார். வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

வரலாறு விசித்திரங்களைச் சந்திக்கின்றது. அதே டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து, ~பரா என்ற ஒரு தீவு தனியாகப் பிரிந்து செல்ல முடிவு எடுத்து, அவர்களும் பொது வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக இப்படி அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கின்றானே? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்று நினைப்பவர்களுக்காக, இந்த வாதத்தை வைக்கின்றேன். இந்த ~பரா தீவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 11 ஆயிரத்து 146 பேர்தான். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 1946 ஆம் ஆண்டு மே மாதம். முடிவு என்ன தெரியுமா?

5656 பேர் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்கு அளிக்கின்றார்கள். 5490 பேர், பிரிந்து செல்லக் கூடாது, டென்மார்க்கோடுதான் இருக்க வேண்டும் என்ற வாக்கு அளிக்கின்றார்கள். அதாவது, 49.75 விழுக்காட்டினர் டென்மார்க்கோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். 50.25 விழுக்காட்டினர், தனிநாடாக வேண்டும் என்கிறார்கள்.

இந்த முடிவையும் டென்மார்க் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. இன்றைக்கு அந்த ~பரா தீவுகள் ஒரு தனி நாடாக ஆகி விட்டது.

இந்த நிகழ்வுகளை நீங்கள் வரிசைப் படுத்திப் பார்க்கின்றபோது, இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்த இந்தக் காலகட்டத்தில், சோவியத் மண்டலமும் உடைகின்றது.

ரஷ்யாவின் நிலைமை

சோவியத் ஒன்றியத்தில் இருக்கின்ற நாடுகள் விரும்பினால் தனியாகப் பிரிந்து செல்லலாம் என்று அரசியல் சட்டம் வகுத்த ரஷ்யா, பின்னர் அதை மறந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன் ஆதிக்கப்பிடிக்குள் கொண்டு வந்து ஒடுக்க முயன்றது. யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தார். அந்த வேளையில், ஹங்கேரி நாட்டில் ஒரு புரட்சிக் குரல் எழுந்தது. அவரும், கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து உருவான ஒரு தலைவர்தான். ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்தான். அவரது பெயர் இம்ரினாகி. எங்கள் ஹங்கேரி நாடு, சுயேச்சையாகத்தான் முடிவு எடுக்கும்; சோவியத் ரஷ்யாவின் கட்டளைகளை, இனிமேல் நாங்கள் ஏற்கமாட்டோம்என்று அவர் தன்மானக் கொடியை உயர்த்தியபோது, ரஷ்யாவின் டாங்குகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன.

அப்பொழுது அவர் மக்களைத் திரட்டினார். ஒரு மாலை வேளையில், பனி பொழிந்து கொண்டு இருந்த மலைச்சரிவுகளில் மழையும் கொட்டிய பொழுது, அவர் பேசியதைக் கேட்பதற்காக, இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள்.

இம்ரினாகி பேசிய போது, மழை வலுத்தது. ஒவ்வொரு வரும் குடை கொண்டு வந்து இருந்தார்கள். எல்லோரும் குடைகளை விரித்துப் பிடித்துக்கொண்டார்கள். அதற்கு உள்ளே நின்றுகொண்டு, கொட்டிய மழையிலும் இம்ரினாகியின் பேச்சைக் கேட்டார்கள். அந்த மழையிலும், அவரது பேச்சு அனலைக் கொட்டியது. மக்கள் மனங்களில் வேள்வியை மூட்டியது. மக்கள் அணி திரண்டு எழுந்தார்கள். அது குடைப்புரட்சிஎன்று வரலாறு வர்ணிக் கின்றது.

சோவியத்தின் படை அணிகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன. ஹங்கேரி ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இம்ரினாகி கைது செய்யப்பட்டார். 1958 ஜூன் மாதம் 30 ஆம் தேதி, தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி, அதே நாளில், இம்ரினாகி புதைக்கப்பட்ட இடம் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, ஒரு சின்னஞ்சிறிய கல்லறையைத் தோண்டி, அந்தச் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து, குதிரைகள் பூட்டிய தேரில் வைத்து, பூக்களால் அலங்கரித்து, இலட்சக்கணக்கானவர்கள் இம்ரினாகிக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்ப, ஹங்கேரி வீதிகள் வழியாகக் கொண்டு சென்று, ஒரு எழிலார்ந்த கல்லறையை அமைத்து, அங்கே அடக்கம் செய்தார்கள்.

இது ஹங்கேரி நாட்டில்!

1968 இல், செக்கோஸ்லோவேகியா, சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்த்தது. டூப்செக் (Dubcek) தலைமை தாங்கினார். அங்கும் சோவியத் படைகள் நுழைந்தன. புரட்சியை ஒடுக்கினார்கள். ஆனால், 1990 க்குப் பிறகு, நிலைமை மாறியது. 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, திருச்சி மலைக்கோட்டை நகரில், இராணுவ மைதானத்தில், பிற்பகல் 1.45 மணிக்கு, இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றபொழுது, ஹங்கேரி குடைப் புரட்சியைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

 

சோவியத் ரஷ்யாவில், கிரெம்ளினுக்கு எதிரே குரல் கேட்கின்றது. தேசிய இனங்களின் விடுதலைக்குரல் கேட்கிறது. விண்வெளியில் ககாரினை நீந்த வைத்த சோவியத் ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி வைத்த சோவியத் ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படை அணிகளுக்கு அச்சத்தைத் தருகின்ற சோவியத் ரஷ்யா, ஹிட்லரின் நாஜிப் படைகள் லெனின்கிராடு, ஸ்டாலின் கிராடை முற்றுகை இட்டபோது விரட்டி அடித்த சோவியத் ரஷ்யா, உலகப் போரின் போக்கை மாற்றிக் காட்டிய கார்ல் மார்க்ஸ் தந்த மூலதனக் கொள்கைகளின் அடிப்படையில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய சோவியத் ரஷ்யா, பிற தேசிய இனங்களை ஒடுக்குகிறது; ஆனால், காலம் மாறும், நிலைமைகள் மாறும்; விடுதலைக் குரலை ஒடுக்க முடியாமல் போய்விடும்; சோவியத் தனித் தனி நாடுகளாக, துண்டுதுண்டாகப் போகின்ற காட்சியை வெகு சீக்கிரத்தில் காண்பீர்கள்என்றும் சொன்னேன்.

நான் ஒன்றும் ஆரூடக்காரன் அல்ல; முற்றும் உணர்ந்தவன் அல்ல; தொலை நோக்கோடு கண்டுபிடிக்கின்றவன் அல்ல; நான் வரலாறைப் படிப்பவன்; வரலாறைப் பார்ப்பவன்; வரலாறு பதிவு செய்த நிகழ்ச்சிகளைக் கண்டவன்; அதனால் சொன்னேன்.

அதுதான் நடந்தது, 91 டிசம்பரில். சோவியத் ஒன்றியத்தில் இருந்து குடியரசு கள் பிரிந்தன. 15 நாடுகள் மலர்ந்தன. ஜார்ஜியா தனி நாடு ஆயிற்று. அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாகப் பிரிந்தது. 99 விழுக்காடு ஆதரவு.

ஸ்லோவேனியா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

குரேஷியா, 91இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

அலெக்சாண்டர் பிறந்த மாசிடோனியா, 91 இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

92 இல் போஸ்னியா-ஹெர்சகோவினா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

93 இல் ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியா பொது வாக்கெடுப்பில், 98 விழுக்காடு மக்கள் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு.

94 இல், ருமேனியாவின் பிடியில் இருந்து நாங்கள் தனி நாடாகப் பிரிந்து செல்கிறோம் என்று பொதுவாக்கெடுப்பில் அறிவித்தது மால்டோவா.

99 ஆகஸ்ட் 31 இல் கிழக்குத் தைமூரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ,78.5. விழுக்காடு மக்கள், இந்தோனேசியாவின் பிடியில் இருந்து விடுபட்டுத் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு. தனிநாடு ஆயிற்று.

2006 மாண்டிநீரோ தனிநாடு. பொது வாக்கெடுப்பில் நூல் இழையில்தான் வெற்றி. 55 விழுக்காடு தேவை என்றார்கள். 55.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்து, தனிநாடு ஆயிற்று.

2011. தெற்கு சூடான். பல இலட்சம் உயிர்கள் பலியிடப்பட்ட பிறகு, குருதி கொப்பளித்து ஓடியதற்குப் பிறகு, ஆயுதப் புரட்சி நடந்ததற்குப் பிறகு, பொருளாதார அடிப்படையில், தெற்கு சூடான் ஒரு தனி நாடாக இயங்க முடியாது; வடக்கு சூடானை அண்டித்தான் பிழைக்க வேண்டும்; இவர்கள் நில அடிப்படையில் தனி நாடாக ஆக முடியாது என்ற வாதங்களை எல்லாம் உடைத்து நொறுக்கி விட்டு, தெற்கு சூடான் தனிநாடு ஆகி விட்டது.

இன்றைக்கு என்ன நிலைமை?

இப்படி, 1936 க்கும் 60 க்கும் இடையில், கிட்டத்தட்ட 60 புதிய நாடுகள் மலர்ந்து இருக்கின்றன. தன்னாட்சி உரிமையைப் பெற்று இருக்கின்றன. 1950 ஜனவரி 1 முதல், 1959 டிசம்பர் 31 வரையில், பத்து ஆண்டுக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்த நாடுகளின் எண்ணிக்கை, தன்னாட்சி உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 106.

இதில், 99 நாடுகள், மற்ற அனைத்து நாடுகளாலும், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆறு நாடுகள் அத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஒரு நாடு, முதலில் மறுக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து அறுபதுகள். அடுத்த பத்து ஆண்டுகளில், 1960 ஜனவரி 1 முதல், 1969 டிசம்பர் 31 வரையிலும், 163 நாடுகள் ஐ.நா. சபையில் பதிவு பெற்றன. அதில் 155 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிறகு, 1970 ஜனவரி 1 முதல், 1979 டிசம்பர் 31 வரையிலும், 184 நாடுகள், உறுப்பு நாடுகள் ஆயின. அவற்றுள், 169 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்கப்பட்டன.

அடுத்து, 1980 ஜனவரி 1 முதல், 1989 டிசம்பர் 31 வரையிலும், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 184 தான். அவற்றுள், 171 நாடுகள் சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-5

சங்கொலி, 12.05.2017

 

தமிழனுக்கு ஒரு நாடு இல்லையே?

இந்தக் கட்டத்தில்தான், 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற நான், .நா.மன்றத்தை முதன்முதலாகப் பார்த்தேன்.

நியூயார்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற ஐ.நா. மன்றக் கட்டடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தேன். அங்கே வரிசையாக அமைக்கப்பட்டு இருக்கின்ற கொடிக்கம்பங்களில், 171 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. இந்தத் தரணியில், தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், அன்றைக்கு 8 கோடி பேர்களாக இருந்த தமிழர்களுக்கு என்று, இந்த உலகில் ஒரு தனி நாடு இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, நியூயார்க் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்குச் சென்ற நான் அங்கிருந்து, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 690 நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களை அவர்கள் இன்னமும் பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏக்கப் பெருமூச்சோடு, கவலை நிறைந்த கனத்த இதயத்தோடு, ஏக்க விழிகளோடு, இந்த ஐ.நா. மன்றக் கட்டடத்துக்கு முன்னால் நடக்கின்றபோது, இத்தனை நாடுகளின் கொடிகளை நான் பார்க்கின்றேன்; ஆனால், இந்த உலகத்துக்கே நாகரிகத்தை, பண்பாட்டை, அரசை, நெறியை, மானத்தைக் கற்றுக் கொடுத்த, உலக நாடுகளில் எல்லாம் வணிகம் செய்த, வீரத்தால் சிறந்த, இன்றைக்கு உலகத்தின் ஒரு பகுதியில் நாதி அற்றுச் செத்துக் கொண்டு இருக்கின்ற தமிழர்களுக்கு ஒரு தனி நாடு இல்லையே? என்று நான் கவலைப்பட்டேன்.

அடுத்து, 1990 ஜனவரி 1 முதல், 1999 டிசம்பர் 31 வரை. .நா. உறுப்பு நாடுகள், 204 ஆகி விட்டன. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை, 175 ஐத் தாண்டி விட்டது.

அடுத்து, புத்தாயிரம் பிறந்து விட்டது. 2000 மலர்ந்துவிட்டது. 2009 டிசம்பர் 31 வரையிலும், 213 நாடுகளுள், ஏறத்தாழ 193 நாடுகள் இறையாண்மை பெற்ற தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

இரண்டு நாடுகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை இல்லை. வந்து அமரலாம்; வாதங்களைப் பாக்கலாம். Observer Status. ஒன்று, பாலஸ்தீனம்; மற்றொன்று, வாடிகன் நகரம். இன்னமும், 11 நாடுகள், .நா. மன்றத்தில் சுதந்திர நாடுகளாக உரிமை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன. வடக்கு சைப்ரஸ். துருக்கியின் பிடியில் இருந்து விடுபடத் துடிக்கின்றது. கொசோவாவின் விடுதலை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

சோமாலியா லாண்ட், தைவான், தெற்கு ஒசேட்டியா ஆகியவை அந்த வரிசையில் வருகின்றன. ஜார்ஜியாவில் இருந்து, சின்னஞ்சிறு பகுதியான தெற்கு ஒசேட்டியா, நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்; தனி நாடாக ஆக வேண்டும் என்று போராடுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, அங்கே மொத்த மக்கள் தொகையே, 55 ஆயிரம் பேர்கள்தாம். 1990 ஆம் ஆண்டிலேயே, இவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துகின்றார்கள்.

ஜார்ஜியா, ரஷ்யாவை விட்டு வெளியேறுகின்றது. அந்த ஜார்ஜியாவில் இருந்து இவர்கள் தனிநாடு ஆக வேண்டும் என்கிறார்கள். என்ன காரணம்? ‘நாங்கள் தனி இனம். எங்களுக்கு என்று தனி இன வரலாறு இருக்கின்றது. ஜார்ஜியாவின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க நாங்கள் விரும்பவில்லைஎன்கிறார்கள். அதற்காக ஆயுதப் புரட்சி நடத்தினார்கள். கவனிக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில், ரஷ்யா, தெற்கு ஒசேட்டியாவுக்கு ஆதரவாக நிற்கின்றது. போர் நிறுத்தம் வருகின்றது. 92 இல் அவர்கள் வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள். அதை உலக நாடுகள் ஏற்கவில்லை. இப்போது, 2008 நவம்பர் 12 இல், அதே தெற்கு ஒசேட்டியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்வையாளர்களாக 34 பேர். ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

95 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கு அளித்து, அவர்களுள் 99 விழுக் காட்டினர், தனிநாடாக ஆவதற்கு ஆதரவு அளித்தனர். இந்தப் பொது வாக்கெடுப்பை ரஷ்யா முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டது.

வெனிசூலா ஏற்றுக்கொண்டது; நிகரகுவா ஏற்றுக் கொண்டது. நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்கின்றன. பிரச்சினை அந்த அளவிலேயே இருக்கின்றது. இன்னமும், 11 நாடுகள், .நா. அங்கீகாரத்தைப் பெறக் காத்துக்கொண்டு இருக்கின்றன. 55000 மக்கள் தொகையைக் கொண்ட தெற்கு ஒசேட்டியாவும், அந்தப் பட்டியலில் இருக்கின்றது.

தோழர்களே, அயர்லாந்து நாட்டில் புரட்சி எழுந்தது. யேமன் டிவேலரா போரிட்டதும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்றதும், இரண்டாவது முறை மன்னர் பெயரால் விசுவாசப்பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதும், உடனே வெளியேறியது. பின்னர் அது தனி நாடாக மலர்ந்தது. அது ஒரு பக்கம்.

நம்பிக்கை கொள்வோம்

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் உண்டு. நம்பிக்கை இழக்கக் கூடாது. பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதைச் சிலர் விமர்சிக்கின்றார்களே, நான் சொல்லுகிறேன்; இத்தாலியின் பிடியில் இருந்து எத்தியோப்பியா விடுதலை பெற்றது. அதில் இருந்து ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியாவுக்கு, முதலில், சுயாட்சி அதிகாரம் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றினார்கள். எரித்ரியாவில் ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. எரித்ரியர்களை நசுக்குவதற்கு, சோவியத் ரஷ்யா, எத்தியோப்பியாவுக்கு ஆயுதம் கொடுத்தது. 1,20,000 எத்தியோப்பிய இராணுவத்தினர், எரித்ரிய விடுதலைப் படையை நசுக்க முயன்றார்கள். அதனால், எரித்ரிய விடுதலைப்படை பின்வாங்கியது. சில தோல்விகள் ஏற்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு அவர்கள் திரும்பத் தாக்கி, அசரியா என்ற இடத்தில், 40 விமானங்களைத் தவிடுபொடியாக ஆக்கினார்கள். அதைப்போலத்தான், கொழும்பு விமான நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த விமானங்களை, பிரபாகரனின் படை தாக்கி அழித்தது.

93 ஏப்ரலில் எரித்ரியாவில் பொது வாக்கெடுப்பு. தனி நாடாக அங்கீகரித்து விட்டது. உலகம் அதை ஏற்றுக் கொண்டது; .நா. இடம் அளித்தது.

இத்தனை நாடுகள் பிரிந்து இருக்கின்றதே, நான் கேட்கிறேன்; ஸ்லோ வேனியாவிலே பாலியல் கொடுமைகள் நடந்தனவா? குரேஷியாவில் இனப்படு கொலை நடந்ததா? மால்டோவாவில் இனப் படுகொலை நடந்ததா? நோர்வே, ஐஸ்லாந்துக்கு என்ன குறை? எதுவும் நடக்கவில்லையே? ‘நாங்கள் தனி இனம்; எனவே, நாங்கள் பிரிந்து போகிறோம்என்று போய்விட்டார்களே? புதிய புதிய நாடுகள் மலர்ந்து கொண்டே இருக்கின்றனவே?

அவற்றையெல்லாம் விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் தமிழ் ஈழத்துக்கு இருக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்களே?

கிழக்குத் தைமூரைப் பற்றிச் சொன்னேன். இந்தோனேசிய நாடு, முதலில் போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்துக்கு உள்ளே இருந்தது. பின்னர் விடுதலை பெற்றது. இந்தோனேசியாவின் ஆயிரக்கணக்கான தீவுகளுக்கு உள்ளே ஒரு தீவுதான் கிழக்குத் தைமூர். அது தனிநாடாக விரும்பியது. இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். அப்போது, முன்பு இந்தோனேசியாவை ஆண்ட போர்ச் சுகல் சொன்னது; அவர்கள் கேட்பது நியாயம். உங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தனிநாடாக ஆகட்டும் என்று, இந்தோனேசியாவோடு, போர்ச்சுகல் ஒப்பந்தம் போடவில்லையா? அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பொது வாக்கெடுப்பு நடந்தது; கிழக்குத் தைமூர் தனி நாடாக ஆனது.

இங்கிலாந்துதான் பொறுப்பு

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக்கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருக்கின்ற ஒரு அரங்கத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருந்த அந்தக் கூட்டத்தில் சொன்னேன்.

ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தனி அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். அந்தத் தீவுக்கு ஒல்லாந்தர்கள் வருவதற்கு முன்பு, போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன்பு, நீங்கள் அங்கே கால் பதிப்பதற்கு முன்பு, அவர்கள் தனி அரசு அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்கள். ஆனால், நீங்கள், உங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்கள், சிங்களர்கள் என இரண்டு தனித்தனித் தேசிய இனங்களையும், உங்கள் அதிகார நுகத்தடிக்கு உள்ளே, ஒரே அமைப்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்.

1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் நாள், இலங்கைத் தீவுக்கு விடுதலை அளித்து விட்டு வெளியேறினீர்கள். ஆனால், எங்கள் மக்களைக் காவு கொடுத்து விட்டீர்கள். சிங்களவனின் அடிமைப் பிடிக்கு உள்ளே சிக்க வைத்து விட்டீர்கள். அவன், எங்கள் தமிழர்களின் மொழி உரிமையை மறுத்தான். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றான். இந்திய வழித்தோன்றல்களான பத்து இலட்சம் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்தான். அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சென்றவர்களின் வழித்தோன்றல்கள்.

ஆனால், அந்த மண்ணிலேயே பிறந்தவர்கள். தங்கள் இரத்தத்தை, வியர்வையைக் கொட்டி, இலங்கையை வளப்படுத்தியவர்கள். அவர்களுடைய குடி உரிமையைப் பறித்தார்கள். சம உரிமை என ஈழத் தமிழர்கள் நியாயம் கேட்டார்கள். இராணுவத்தைக் கொண்டு அவர்களை நசுக்கினார்கள். கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடித்தார்கள். தமிழர்களின் மொழியை ஒடுக்கினார்கள். சம உரிமை உள்ளவர்களாக ஈழத்தமிழர்கள் அங்கே வாழ முடியவில்லை. நீதி கேட்டவர்களுக்கு, இராணுவம் துப்பாக்கித் தோட்டாக்களையே பரிசாகக் கொடுத்தது. தமிழர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அவர்களையும் கொன்று குவித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான் என்று, அவர்களிடமே சொன்னேன்.

மன்னிக்க வேண்டும் இப்படிச் சொல்லுவதற்காக, உங்களால்தான் ஏற்பட்டது இந்த நிலைமை. நீங்கள்தான் சிங்களவனிடம் ஈழத்தமிழர்களை அடிமைகளாக ஆக்கிவிட்டுப் போய்விட்டீர்கள்.

கிழக்குத் தைமூர் பிரச்சினையில் போர்ச்சுகல் நாட்டுக்குப் பொறுப்பு இருந்ததைப் போல, ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், உங்களுக்குப் பொறுப்பு இருக்கின்றது. எனவே, தமிழ் ஈழம் அமைவதற்கு, நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். தமிழர்களின் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்களவர்களை வெளியேறச் சொல்லுங்கள் என்றேன்.

ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேறியது. கேட்டால், வியப்பு அடைவீர்கள். ஆம்; ஸ்காட்லாந்து, தனியாகப் பிரிந்து செல்லுவதற்கு, பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 2014 இல் அந்தப் பொது வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தம் பதிவான வாக்குகள் 36,19,915

பிரிந்து செல்ல ஆதரவு - 16,17,989 - (44.70 விழுக்காடு)

பிரிந்து செல்ல எதிர்ப்பு - 20,01,926 (55.30 விழுக்காடு)

இத்தனைக்கும், ஸ்காட்லாந்து மக்கள் என்ன பிரித்தானியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு இருக்கின்றார்களா? அன்றைக்கு வில்லியம் வாலஸ் வாளை உருவிய காலம் வேறு. ராபர்ட் புரூஸ் படையெடுத்துத் தோல்வி கண்டு, சிலந்தி வலையின் மூலமாகப் பாடம் பெற்று, மீண்டும் படை திரட்டி, ஏழாவது முறை வென்று, ஸ்காட்லாந்து தனி அரசை நிறுவிய காலம் வேறு. ஆனால், இன்றைக்கு ஸ்காட்லாந்து மக்கள் தனி நாடாளுமன்றம் அமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

முடியரசு ஒன்றியம் (United Kingdom) என்ற அமைப்புக்கு உள்ளே, இங்கிலாந்து மக்களோடு சம உரிமை பெற்றவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு எதற்குத் தனி நாடு?

தமிழர்களுக்கு ஏன் தனிநாடு வேண்டும்? என்று கேட்கின்ற நண்பர்களுக்குச் சொல்லுகின்றேன். ஸ்காட்லாந்து மக்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவரது வெற்றியை இங்கிலாந்தும் கொண்டாடியதே!

நான் ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் சென்று கொண்டு இருந்த போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். நீங்கள் பிரிட்டிஷ்காரரா?’ என்று கேட்டேன். அதைக் கேட்டவுடன், அவருக்கு எவ்வளவு கோபம் என்று நினைக்கின்றீர்கள்? நான் கேட்டு முடிப்பதற்கு உள்ளாகவே, கன்னத்தில் அடித்தாற் போல அவர் சொன்னார்: I am not a British. I am a Scottish. நான் ஒன்றும் இங்கிலாந்துக்காரன் இல்லை, நான் ஒரு ஸ்காட்லாந்துக்காரன் என்று. அதைக் கேட்டு நான் அதிர்ந்து விட்டேன்.

ஸ்காட்லாந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை; அவர்களுடைய குழந்தைகள் கொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள், தனிநாடாக பிரிந்துசெல்லப் பொது வாக்கெடுப்பு.

மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நடக்கும் என்று ஸ்காட்லாந்து தலைவர் நிக்கோலோ ஸ்டர்ஜியான் அறிவித்து விட்டார். இம்முறை ஸ்காட்லாந்து தனி நாடாகும்.

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-6

சங்கொலி, 12.05.2017

 

 

ஈழத்தின் நியாயம்

நான் உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றேன். எங்கள் இனம் அழிக்கப்படுகின்றபோது, எங்கள் இனம் கரு அறுக்கப்படுகின்றபோது, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதற்குப்பிறகு, இலட்சக்கணக்கானவர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசிக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருந்துகள் இன்றிச் செத்ததற்குப்பிறகு, ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளைக் கொண்டு, எவராலும் வெல்ல முடியாத விடுதலைப்புலிகளின் படையைப் போரில் பின்னடையச் செய்வதற்கு ஒரு வல்லரசாகிய இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதற்குப் பிறகு, தமிழர் தாயகத்தில் சிங்களவன் குடியேற்றம் நடக்கின்ற போது, எங்கள் கோவில்களில் அவன் சிங்கள பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றபோது, எங்கள் பெயர்களை அழிக்கின்றபோது, எங்கள் கல்லறைகளை இடித்து விட்டு, சிங்களப் படை முகாம்களை அமைக்கின்றபோது, எங்கள் மொழியை அழித்து விட்டு, அவன் மொழியில் எழுதுகிறபோது, இனி எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?

எங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன், வேலும் வாளும் தாங்கி, மரக்கலங்களில் சென்று வாழ்ந்த அந்தக் காலத்துக்குப் பிறகு, தமிழனின் வீரத்தை நிலை நாட்டியவர்களின் வழித் தோன்றல்களாகிய நாங்கள் முழங்குகிறோம் தனி ஈழமே தீர்வு என்று.

இன்றைக்கு அகிலத்தின் குரல் கேட்கின்றபோது, 2 இலட்சத்து 52 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட நியூ கேலடோனியா என்ற ஒரு பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்று, பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உள்ளே இன்றைக்கும் இருக்கின்றது. அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப் போகின்றது. .நா. அறிவித்து இருக்கின்றது. 2019 க்குள், அவர்கள் சுதந்திர நாடாக இருப்பதற்காகப் பொது வாக் கெடுப்பு நடக்கப் போகின்றது.

அடுத்து போகெய்ன்வில்லா என்று ஒரு சிறு நாடு. பூக்களைத் தூவுகின்ற மரத்தின் பெயர். அது, பபுவா நியூ கினியா (Papuva New Guinea) ஆதிக்கத்துக்குள் இருக்கின்றது. மொத்த மக்கள் தொகை 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப்போகின்றது.

1975 இல், தந்தை செல்வா அவர்கள்,

எங்களுக்கு இங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றன; எனவே, எங்கள் மக்கள் இனி உங்களோடு சேர்ந்து இருக்க முடியாது; எங்களை நசுக்குகின்றீர்கள்; நாங்கள் ரோமானிய அடிமைகள் அல்ல; நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்; அதற்காக, நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை விட்டு விலகுகிறேன். சிங்களவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன்: அதே காங்கேசன்துறை தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டி இடுவேன். சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்பதையே என் மூல முழக்கமாக வைத்துப் போட்டி இடுகிறேன். மக்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் எனக்கு வாக்கு அளிக்கட்டும். இல்லை, என் கருத்து தவறு என்றால், மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும்என்றார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் அங்கே தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது சிங்கள அரசு. கடைசியில், வேறு வழி இன்றித் தேர்தலை நடத்தியது. 78 விழுக்காடு மக்கள், தந்தை செல்வாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்என்று அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் சென்றார். 14 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனம்

அனைத்துத் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தை 1976 இல் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் கூட்டினார். மே 14 ஆம் நாள். அங்கே ஒரு தீர்மானத்தை நிறை வேற்றினார். அதுதான், புகழ் பெற்ற வட்டுக்கோட்டை பிரகடனம் ஆகும்.

அந்தத் தீர்மானத்தைத் தொடங்கிய முதல் சொல்லில் இருந்து கடைசிச் சொல் வரை, ஒரு நிறுத்தற்குறி கூடக் கிடையாது; ஒரு முற்றுப்புள்ளி கிடையாது. தமிழர்கள் எவ்வளவு கூர்த்த மதி படைத்தவர்கள், அறிவு ஆற்றல் நிறைந்தவர்கள் என்பதை அந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டும். அற்புதமாக வடித்து இருக்கின்றார்கள். சுதந்திரமான இறையாண்மை உள்ள, மதச்சார்பு அற்ற, தமிழ் ஈழ சமதர்மக் குடியரசு; அதுவே எங்கள் இலக்கு என்று பிரகடனம் செய்து இருக்கின்றார்கள்.

இனி, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் என்று அறிவித்தார் தந்தை செல்வா.

ஈழத்தில் பொது வாக்கெடுப்பு முடிந்து விட்டது

இதற்குப்பிறகு, 77 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்றது. தந்தை செல்வா வழிகாட்டிய பாதையில், சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கொள்கையை முன்வைத்துத் தமிழர் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. 19 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றனர். 90 விழுக்காடு தமிழ் மக்கள் இந்தக் கூட்டணியை ஆதரித்து வாக்கு அளித்தார்கள். இதுதான், பொது வாக்கெடுப்பு.

காஷ்மீரில் மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் வழியாக நாங்கள் நடத்தி விட்டோம்; அதுதான் பொது வாக்கெடுப்பு, என்று இந்தியப் பிரதிநிதி முகமது கரீம் சாக்ளா, .நா. சபையில் சொன்னார் அல்லவா? தேர்தலே பொது வாக்கெடுப்புதான் என்றார் அல்லவா? அதுபோல, 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலே ஒரு பொது வாக்கெடுப்புதான். 95 விழுக்காடு தமிழ் மக்கள், நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை அமைத்து வாழ விரும்புகிறோம் என்பதைப் பதிவு செய்ததே, ஒரு பொது வாக்கெடுப்புதான்.

அடுத்து, 1983 ஆம் ஆண்டு, அங்கே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கு ஏற்க வேண்டாம் என்று, விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்தனர். 99 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வில்லை. அதுவும் ஒரு பொது வாக்கெடுப்புதான்.

84 இல் (2004) இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டோம் என்று அறிவித்த தமிழர் கட்சிகள், 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 22 இடங்களில் வெற்றி பெற்றன. 95 விழுக்காடு தமிழ் மக்கள் ஆதரித்தனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

2005 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டனர். 95 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்கவில்லை. இராணுவ அடக்குமுறையால், 1.23 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாணத்தில் வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான்.

இத்தனை பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுவிட்டன. இன்றைக்கு, தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகின்றார்கள். மானத்தோடு சுதந்திரமாக வாழ்வதற்காகத் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள், இரத்தம் சிந்தினார்கள். எனவே, தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா. வின் கதவுகளைத் தட்டுகின்றோம்.

யாராவது, ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்றோ, தமிழ் ஈழக்கோரிக்கை ஒடுங்கி விட்டது என்றோ நினைத்தால், அவர்கள் வரலாறைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். ஈழத்தமிழர்கள் செய்த உயிர்த்தியாகம், சிந்திய செங்குருதி அவர்களது கோரிக்கையை வெற்றி பெறச் செய்யும்.

தமிழகம்தான் காரணம்

ஈழத்தில் இவ்வளவு துயரங்களுக்கும் யார் காரணம் தெரியுமா? இந்தத் தமிழகம்தான் காரணம். மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்களோடு பேசுகின்றபோது, அவர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை; வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. உலகத்தில் மனித உரிமைகள் அழிக்கப்பட்டால், எல்லா இன மக்களும் சேர்ந்து அவர்களை ஆதரிக்கின்றார்களே, நீங்கள் ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் வாழுகின்றீர்களே? இன அடிப்படையில், இரத்த உறவுகள் கொண்டவர்கள்தானே? நீங்கள் ஏழு கோடிப் பேர் இங்கே இருந்தும், அங்கே இவ்வளவு படுகொலைகள் எப்படி நடக்க முடிந்தது? அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நீங்கள்தானே? என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

ஒருவேளை, இந்த ஏழு கோடிப் பேர் இல்லை என்றால், அவர்களுக்கு உலகத்தின் பல நாடுகளின் ஆதரவு கிடைத்து, தமிழ் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இந்த ஏழு கோடிப் பேர் வாழுகின்ற இந்தியாவைக் கடந்து, அனைத்து உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் தலையிடாது; நீங்கள் ஏழு கோடிப் பேர் இந்தியாவில் இருப்பதால், உங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என்ற எண்ணத்தை, இந்தியா ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்கள் பிரச்சினைகளை, நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சிங்கள அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லுவோம். நாங்கள் இதுவரை எப்படித் தமிழர்களைக் கொல்லுவது என்று ஆலோசனைகள் கொடுத்து, திட்டங்களை வகுத்துக் கொடுத்து, தளபதிகளை அனுப்பி, படைகளை அனுப்பி, தளவாடங்கள் கொடுத்து நாங்கள் கொன்றோம். இனி என்ன செய்வது? என்று நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஏன் மூக்கை நீட்டுகின்றீர்கள்? என்று சொல்லுவதற்காகத்தான் என்று கொடியவன் ராஜபக்சேயை, புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

எதற்காக அழைத்து வருகின்றார்கள்?

இராஜபக்சேயை அழைத்து வந்தது நியாயம் தானா? சாஞ்சி அறப்போர்க் களத்தின்போது, இலட்சக்கணக்கான எங்கள் தமிழ் மக்களைக் கொன்றவனை, இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? என்று, வட இந்தியச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக நான் கேட்டேன்.

கொலைகாரனை புத்த கயாவுக்கு அழைத்து வருகின்றீர்களே, அவன் காலடிபட்டால், புத்தரின் எலும்புகள் கூட நடுங்குமே? தமிழர்களின் குருதி படிந்த கரங்களோடு வருகின்றானே? அவனை அழைத்து வருவது நியாயம்தானா? கேள்வி கேட்பார் இல்லையா? நாங்கள் அநாதைகளா? நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா? 500 க்கும் மேற்பட்ட எங்கள் தமிழக மீனவர்களைக் கொன்று விட்டானே, நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா?

2000 இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவன், திருகோணமலை சிவன் கோவில் தேரை, அழகாக வடித்த தச்சர்களின் மணிக்கரங்களை வெட்டிக் கொன்றவன், முருகன் கோவிலுக்குப் பக்கத்தில் பௌத்த விகாரைகளை எழுப்புகிறவன், துர்க்கை, காளி கோவில்களை உடைத்தானே, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அவனுக்கு என்ன வேலை?அவனை இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? எதற்காக அழைத்து வந்தார்கள்?

சிறை சென்றது ஏன்? -4

மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு!

வைகோ கடிதம் / பாகம்-7

சங்கொலி, 12.05.2017

 

 

கொலைகாரனே எழுதும் தீர்ப்பு

இன்றைக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் கேட்பது, சிங்கள அரசு அறிவித்த, பித்தலாட்ட மாய்மால எல்எல்ஆர்சி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Reconciliation Committee-LLRC) அது ஒரு அயோக்கியத்தனமான, வஞ்சகமான, உலகத்தை ஏமாற்றுகின்ற ஒரு ஆணையம். அவனைப் பற்றி, அவனே எழுதுவதா?

நான் இந்திய மக்களைக் குற்றம் சொல்லவில்லை. சோனியாகாந்தி தலைமையில் இயங்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கியவர் மன்மோகன்சிங், அந்த அரசில் பங்கு வகித்த தி.மு.., ஈழத்தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள். அங்கே நடந்தது, போர்க்குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை. தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்றுதான், நமது அகநானூறு, புறநானூறு, சங்கத் தமிழ் நூல்களைக் கொண்ட, 98,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை, 1981 இல் தீ வைத்து எரித்தான். வெலிக்கடைச் சிறையில், 58 தமிழர்களைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டான். குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்துக் காலில் போட்டு நசுக்கினான். நம் குழந்தைகளை, கொதிக்கும் நெருப்பில் தாரில் தூக்கி வீசினான். 1958 ஆம் ஆண்டு முதல், அங்கே நடந்தவை சாட்சியங்கள்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று, இந்திரா காந்தி அம்மையாரே சொன்னாரே?

எனவே, போர்க்குற்றம் என்று சில மேதாவிகள் குழப்புகின்றார்கள். இது முள்ளிவாய்க்காலில் மட்டும் நடந்தது அல்ல. இந்த இனப்படுகொலையை நடத்தியவனைக் கூண்டில் நிறுத்துவோம். எவனும் தப்ப முடியாது. சிரபெரெனிகாவில் ஆறு முஸ்லிம்களைக் கொன்றவன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டான்; 55 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹங்கேரியில் சாண்ட்ரா பிட்ரோ என்பவனுக்கு அப்போது 91 வயது. 1942 ஜனவரி 23 இல், ஆறு பேர்களைச் சுட்டுக் கொன்றான். அவனால் நடக்க முடியவில்லை. என்றாலும், குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப் பட்டான்.

அப்படியானால், எங்கள் தங்கை இசைப் பிரியாவை நாசம் செய்தார்களே, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார்களே? அதை, .நா. அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றார்கள். எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி இழுத்து வந்து, உச்சந் தலையில் சுட்டுக் கொன்றார்களே, அது உண்மையான காட்சி, என்று தடயவியல் அறிஞர்களே உறுதிப்படுத்தி விட்டார்கள். இவை எல்லாம் அசைக்க முடியாத சாட்சியங்கள்.

அனைத்து உலகக் குற்றவாளிக் கூண்டிலே ராஜபக்சேயைக் கொண்டு வந்து நிறுத்துவோம். இந்தக் கோரிக்கையை, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பது ஒரு கோரிக்கை. இன்னொரு கோரிக்கை, சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும்; சிங்களக் காவலர்கள், இராணுவம் அகற்றப்பட வேண்டும்; அவர்களால் பிடித்துச் செல்லப்பட்ட எங்கள் பாலகுமார் எங்கே? எங்கள் பேபி, இளங்குமரன் எங்கே? எங்கள் யோகி எங்கே? எங்கள் புதுவை இரத்தின துரை எங்கே? உயிரோடு இருக்கின்றார்களா? கொன்று விட்டீர்களா? இல்லை, அவர்களை எங்கேனும் அடைத்து வைத்து இருந்தால் விடுவிக்க வேண்டும்.

உலகத்தின் கதவுகளைத் தட்டுகின்றோம். அதற்காகத்தான், இத்தனை நாடுகளின் வரலாறை எழுதினேன். சிங்கள இராணுவம், காவல்துறை, தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு, அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் உரை ஆற்றுகின்ற பொழுது, எனக்குப் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி இருந்தார்கள். நான், 18 நிமிடங்கள் பேசி இருக்கின்றேன். விடுதலைப்புலிகள் ஏதேனும் ஒரு சிங்களப் பெண்ணுக்குப் பாலியல் கொடுமைகள் செய்ததாக ஒரு குற்றச் சாட்டு உண்டா? அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னால், அப்படி ஒரு தவறு நடந்து இருந்தால், நான் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னேன்.

சிங்கள இராணுவத்தையும், காவல் துறையையும் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். அனைத்து உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே அவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். இதற்கான, வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரினேன்.

அதே உணர்வோடுதான், நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேயை அழைத்து வந்ததால், டில்லியில் நானும் என் சகாக்களும் கருப்புக் கொடி காடடிக் கைது செய்யப்பட்டோம்.

என் வாழ்க்கையில், ஒன்றிரண்டு காரியங்கள், என் மனதுக்கு நிறைவு தருகின்றது. உலக அரங்கில், இத்தகைய கோரிக்கையை முதன் முதலாக முன் வைத்தவன் அடியேன் என்ற தகுதியோடு புழல் மத்தியச் சிறையில் என் எண்ணங்கள் சிறகு விரிகின்றன. இந்தக் கோரிக்கை சரியானது என்று, ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். அந்த இலக்கை நோக்கித்தான் செல்லுகின்றோம்.

முருகதாசன் உயில்

2009 பிப்ரவரி 12 ஆம் தேதி. முருகதாசன் என்ற 27 வயது இளைஞன், திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கை இன்பங்களை நுகராமல், முத்துக்குமாரைப் போல், ஈழத் தமிழர்களுக்காக மடிந்த தியாகிகளைப் போல், லண்டனில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன், அங்கிருந்து புறப்பட்டு, ஜெனீவாவுக்குச் சென்று, .நா. மன்றத்தின் கட்டடத்துக்கு எதிரே நின்றுகொண்டு,

என் தமிழ்ச் சமூகம் கடமை ஆற்றவில்லை, கைவிட்டுவிட்டது ஈழத்தமிழர்களை. என் உறவுகள் செத்துக் கிடக்கின்றார்கள். அங்கே இருந்து என் உறவுகள் தொலை பேசியில் சொல்லுகிறார்கள், பக்கத்தில் பிணங்கள் கிடக்கின்றன, எங்கும் பிண நாற்றம் வீசுகின்றது, தினமும் செத்து மடிந்து கொண்டு இருக்கின்றார்கள், இதற்குப் பிறகாவது இந்த உலகம் கண் விழிக்குமா? எங்கள் மக்களைக் காப்பாற்றுமா? இதற்காக, நான் தீக்குளித்து மடிகிறேன்என்று முருகதாசன் மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு, நான் கடமையைச் செய்கிறேன், தமிழ்ச்சமுதாயம் கடமையில் தவறி விட்டது என்று எழுதி வைத்து விட்டுப் போனான்.

அடுத்தது என்ன?

மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள், அங்கே 2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். முள்ளி வாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றவனுக்குப் பாராட்டுத் தீர்மானம். அதை நிறை வேற்றுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு போராடியது, இந்தியா, கியூபா, சீனா. இப்பொழுதும், இந்தியா துரோகம் இழைக்கிறது.

முன்பு சிங்களவனுக்கு ஆதரவாக நடந்ததற்குப் பதிலாக, அவன் பரிந்துரைகளையாவது நிறைவேற்றட்டும் என்கிறார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கோரிக்கை, இனக்கொலை செய்தது குறித்த விசாரணை நடக்க வேண்டும். மனித உரிமைகள் கவுன்சில் அந்த முடிவுக்கு வர வேண்டும். அது நடக்கின்ற காலம் வரும். அதற்கு, இளைஞர்களை அழைக்கின்றேன்.

இந்த மடல் இளைஞர் கூட்டத்துக்காக, மாணவச் செல்வங்களுக்காக. உங்கள் ஆயுதச்சாலையில் ஒரு அம்புறாத்தூளியில் இதை நீங்கள் ஒரு ஆயுதமாக ஆக்கிக் கொள்ளுவதற்காக. நம் பக்கம் நியாயம் இருக்கின்றது. நம் குரலில் சத்தியம் இருக்கிறது. நம் கோரிக்கையின் நீதியை, இனி உலகத்தில் எவரும் மறுக்க முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழம் என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லவில்லை. சிங்களவனுக்கு அடிமையாக ஏன் வாழ வேண்டும்?

இன்றைக்கு நாம் கடமை தவறினாலும், நாளைய வருங்கால இளைஞர்கள், இந்தத் தமிழகத்தின் சின்னஞ்சிறு பிள்ளைகள் வளருகின்றபோது, மான உணர்ச்சி உள்ளவர்களாக, கடந்த காலத்தை மறக்காதவர்களாக, அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்கள்.

எத்தனைக் குழந்தைகள், எத்தனைத் தாய்மார்கள், எத்தனை உறவுகள்? அவர்கள் எழுப்பிய மரண ஓலம். காற்றோடு கலந்து, கடல் அலைகளைக் கடந்து, நம் நெஞ்சத்தைத் தாக்க வில்லையா? இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்கட்டும்.

சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இத்தனை தேசங்கள் மலர்ந்து இருக்கின்றன என்று சொன்னேன். அந்தப் பட்டியலில், சுதந்திரத் தமிழ் ஈழம் ஒரு புதிய நாடாகப் பரிணமிக்கும் நாள் வரும். அந்த நாளையும் என் கண்களாலேயே பார்த்துவிட மனம் ஏங்குகிறது!

இந்தக் கடிதத்தை எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்ப இருந்தபோதுதான் அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட் பகுதியில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது மட்டும் அல்லாமல், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையைத் துண்டித்துக் கோர வெறியாட்டம் நடத்தியது என்பதே அந்தச் செய்தி. யுத்தகளங்களில் கூட இதுபோன்ற குரூரத்துக்கு இடம் இல்லை. இந்திய அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அடுத்த மடலில் இதுகுறித்து எழுதுகிறேன்.

(நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக் கொண்டார்.)

 

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,

வைகோ

சங்கொலி, 12.05.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)