சிறை சென்றது ஏன்? -5 போர்க்களத்தில் பூத்த மனிதநேயம்! பாகிஸ்தான் நடத்திய மாபாதகம் வைகோ கடிதம்

Issues: Politics, Poverty, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Mon, 22/05/2017

 

 

 

 


சிறை சென்றது ஏன்? -5

போர்க்களத்தில் பூத்த மனிதநேயம்!
பாகி
ஸ்தான் நடத்திய மாபாதகம்

வைகோ கடிதம்

 

சங்கொலி, 19.05.2017

இமைப்பொழுதும் நீங்காது

என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

காலைக் கிரணங்களின் வெளிச்ச ரேகைகள் கொட்டடி வளாகத்தில் பரவும்போதே மனம் பரவசத்தில் ஆழ்ந்தது.

இன்று மே மாதம் ஆறாம் தேதி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதித்த நாளல்லவா. 1994 மே திங்கள் ஆறாம் தேதியன்று உதயமாகி 23 வருடங்களைக் கடந்து இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த 23 ஆண்டுகளில் 2003 மே ஆறாம் நாள் தான் நான் வேலூர் மத்திய சிறையில் இருந்தேன். மற்ற 22 ஆண்டுகளின் கழகத் தொடக்க நாளில் கழகக் கொடியினை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இரவில் பொதுக்கூட்டம் பேசினேன். இன்று நமது இயக்க நிர்வாகிகள், முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் கழகக் கொடியேற்று விழாவை இந்நேரம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது காலை 9.30 மணி.

வறட்சியின் கோரப் பிடியில் தமிழகம்

தமிழகம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி பெரும் அவலத்தை அனுபவிக்கிறது. பல இடங்களில் குடிதண்ணீருக்கு வழியின்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஆடு, மாடுகளுக்குத் தீவனம் இல்லை. மேய்ச்சல் நிலங்களும் இல்லை. குடிக்கத் தண்ணீரும் இல்லை. வீடுகளின் தொழுவங்களில் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்ட மாடுகள் (பசுக்களும், எருதுகளும்) நிலைமை மிகப் பரிதாபம். வைக்கோல், நாற்றுதான் அவற்றுக்கு உணவு. வீடுகளில் எருதுகளுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டையை ஆட்டுஉரல்களில் போட்டு நன்கு அரைத்து ஊரல் எனும் உணவாக அவை வயிறு நிரம்ப உண்பதைக் கண்டு விவசாயி தன் வயிறு நிறைந்தது போல மகிழ்ந்த நிலைமையெல்லாம் போய்விட்டது. தற்போது அதற்கெல்லாம் வழி இல்லை. மாடுகள் எலும்பும், தோலுமாக நலிந்து உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

குளங்கள், ஊரணிகளில் தண்ணீர் இல்லை. எல்லாம் வரண்டு கிடக்கின்றன. இந்த நிலைமை கோடை கடந்தும் நீடித்தால் கால்நடைகள் வாடி வதங்கி மடியும் துன்பம் நிகழும். பக்கத்து மாநிலங்கள் வஞ்சகம் செய்கின்றன. காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் அணைகளைக் கர்நாடகம் கட்டிவிட்டால் மேட்டூருக்கு மழை காலத்திலும் தண்ணீர் வராது. செழித்து வளம் கண்ட தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆவதை கற்பனை செய்யும்போதே மனம் வேதனையில் துடிக்கிறது. நம் எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்ற மழைக் காலத்தில் ஆறுகளில், நதிகளில் வெள்ளம் போல் பாய்ந்து வரும் தண்ணீர் கடலில்போய் வீணாகி விடாமல், ஆங்காங்கு தடுப்பணைகள், குளம், குட்டைகள் அமைத்து தேக்கி வைக்க வேண்டும்.மழைநீர் சேகரிப்பு நல்ல திட்டம். நிபுணர்களைக் கொண்டு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

ஏரிகள், கண்மாய்கள் முறையாகத் தூர் வாரப்பட வேண்டும். குளங்களை மூடியுள்ள சீமைக் கருவேல மரங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும். நாட்டுக் கருவேல மரங்களால் கேடு கிடையாது. அவற்றை அழிக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், தன்னையும் குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்புகிற ஆராய்ச்சியாளர்களை அலட்சியம் செய்வது தான் சரியாகும்.

நமது இயக்கம் நீராதாரங்களைக் காக்கப் போராடியது. சுற்றுச் சூழல் நச்சுமயமாகவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியும், தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் பணிதான். தமிழ்நாடு தனது வளத்தை மட்டும் இழக்கவில்லை; பெருமைகளையும் இழந்து விட்டது. புரையோடிப் போன ஊழலால்சீர்கெட்டு அவமானத்தால் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

கடந்த வார சங்கொலிஇதழில் எனது மடலின் நிறைவு வாசகங்களாக இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டு அவ்வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டு, உயிரற்ற சடலங்களாக சிதைக்கப்பட்ட கொடூரத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

யுத்தக்களங்களில் பகை நாட்டு வீரர்கள் சரணடைந்தாலோ அல்லது அவர்களை வெற்றி கொண்டாலோ அந்த வீரர்களை யுத்தக் கைதிகளாக மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்என்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஜெனிவா நெறிகள்வழிப்படுத்துகின்றன. ஆனால், உலகில் தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் விதத்தில் கொடூரமான காட்சிகள் அரங்கேறுகின்றன. தீவிரவாத அமைப்புகள் தங்களிடம் பிடிபட்டவர்களை கழுத்தை அறுத்து படுகொலை செய்வதை வீடியோ காட்சியாகப் பதிவு செய்து, கோரமான அச்சம்பவத்தை உலக மக்கள் கண்டு அலறும்படிச் செய்கிறார்கள்.

தமிழர்களின் வரலாறே போர்க்களங்கள்

போர்க்களங்களில் வெற்றி பெற்ற அரசர்கள், படைத் தலைவர்கள், வென்ற நாடுகளில் தங்கள் படை வீரர்கள் பாய்ந்து சென்று பொருட்களைக் கொள்ளையடிப்பதும், பெண்களைப் பாலியல் வன்முறையில் நாசப்படுத்துவதும் முன்னர் நிகழ்ந்தது உண்டு. ஆனால் சால்பரினோ யுத்தகளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக வீரர்கள் துடிப்பதைக் கண்டு 1828 மே 8-ஆம் நாள் ஜீன் ஹென்றி டியூனாண்ட் எனும் மனிதாபிமானியால் செஞ்சிலுவைக் சங்கம் தொடங்கப்பட்டது. இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து துடிதுடித்த வீரர்களுக்கு இரவு வேளையிலும் கையில் விளக்குடன் தேடித் தேடிச் சென்று முதலுதவி செய்த பிளாரன்சு நைட்டிங்கேல் வானுலகம் அனுப்பிய தேவதையாகப் போற்றப்பட்டார்.

தொடக்க காலத்திலும், மத்திய காலத்திலும் நடைபெற்ற கோரமான யுத்தங்களில் நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்தன. தோற்ற படையினரைச் சிதைப்பது, அப்பகைவர் நாட்டுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன் நிற்காமல், அப்பாவி மக்களை கண்டந்துண்டமாக்கிப் போடுவது - பெண்களை வாரிச் சுருட்டி எடுத்து தங்கள் இச்சைக்குப் பலியாக்குவது, தூக்கிச் செல்வது என்பனவெல்லாம் வழக்கமான நடைமுறையாகிப் போயிருந்தன.

மங்கோலிய எழுச்சியில் செங்கிஸ்கானுக்குப் பின்னர் இமயமலையைக் கடந்து, டில்லி வரை வந்து வாள் முனையில் வெற்றி பெற்ற கொடியவன் தைமூர் மன்னன் கொல்லப்பட்டவர்களின் தலைகளைத் துண்டித்து மலைபோல் குவித்தான் என்கிறது சரித்திரம்.

தமிழர்களின் வரலாறே போர்க்களங்களின் வரலாறுதான் என்பதை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரின் தென்னாட்டுப் போர்க்களங்கள்விவரிக்கும். இடைவிடாது வாளும், அம்பும், ஈட்டியும் கொண்டு போரிட்டனர் தமிழர்கள். ஆனால், போர் முடிவுக்குப் பின்னர் தோற்றுப்போன நாடுகளில் பயிர் பச்சைகளை அழித்ததாகவோ, நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்று குவித்ததாகவோ ஒரு சான்றும் எங்கும் இல்லை.

போர்க்களத்துக்குச் செல்வதைப் பெருமையாகக் கருதினார்; மார்பில் வேல் பாய்ந்து மடிவதைப் புகழ் எனக் கொண்டனர். தமிழக வீரத் தாய்மார்களின் மறக் குணத்தைப் போற்றும் மூன்று பாடல்கள்:-

புறநானூற்றின் 279 ஆம் பாடல். பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.

அந்த வீரத்தாய்க்கு ஒரே மகன். நடக்கின்ற யுத்தத்தில் இவளது தந்தை யானையை வீழ்த்தி அப்போரில் காயமுற்று மடிந்தான். இவளது வீரக் கணவன் செருக்களம் சென்றான். தன்நாட்டு ஆநிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்றுவிடாமல் காத்தான். பின்னர் உயிர் நீத்தான். இன்றும் போர் முரசு ஒலிக்கிறது. தன் குடும்பமும் அப்போரில் பங்கேற்க முனைந்தாள். ஒரே பிள்ளையான தன் சிறு வயது மகனின் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, உடையும் உடுத்தச் செய்து, கையில் வேலைஎடுத்துக் கொடுத்து போர்முனை செல்கஎன அனுப்புகிறாள். என்னே இவளது துணிச்சல்! நினைக்கவே நடுக்கமாக உள்ளதே! மூதின் மகள் அல்லவா?”

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே!

களம்புகுந்த தன்மைந்தன் புறமுதுகிட்டு ஓடிவிட்டான் என்ற செய்தி அவளது செவிகளில் செந்தீயாய் எரித்தது. இதுகுறித்த பாடல் புறம் 278. பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார்.

அத்தாயின் மேனி நரம்புகள் புடைத்துத் தோன்றுகின்றன. வற்றி உலர்ந்த தோள்கள், “உன் மகன் படைக்களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடினான்என்று உண்மை அறியாதார் கூறிய செய்தியால் எரிமலையானாள். அவனுக்குப் பாலூட்டி வளர்த்த என் முலையையே அறுத்து எறிவேன்என்று வஞ்சினம் கூறி போர்க்களம் சென்றாள். சபதப்படி தன் மார்பை அறுத்தெறிய கையில் வாளுடன் பிணக்குவியலைத் தேடுகிறான். பிணங்களைப் புரட்டிப் பார்க்கிறாள். அப்போது அக்களத்தில் அங்கங்கள் சிதைந்து துண்டங்களாகக் கிடந்த தனது மகனின் உடலைக் கண்டாள். பத்து மாதம் சுமந்து அம்மகனை ஈன்றெடுத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்வு கொண்டாள்.

நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூ உ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே.   -புறம் 278

இதே கருத்தினை பூங்கணுத்திரையார் புறம் 277 ஆம் பாடலில் கூறுகிறார். அவள் வயது முதிர்ந்திருந்த தாய். மீன்களை உண்ணுகின்ற வெள்ளைக் கொக்கின் வெண்மையான சிறகுகளைப் போல் வெள்ளிய நரைத்த கூந்தலை உடையவள்.

அவளது வீரப் புதல்வன் போர்க்களத்தில் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று தானும் அப்போரில் காயமுற்று மடிந்தான் என்ற செய்தியறிந்தபோது அவனைப் பெற்ற போது ஏற்பட்ட உவகையைவிடப் பேருவகை கொண்டாள். அவள் விழிகளிலிருந்து நீர்த்துளிகள் சிந்தின. வெதிர மலையில் மூங்கில்காட்டில் மழை பெய்யும்போது அம்மூங்கில்களில் இருந்து கொட்டுகின்ற நீர்த்துளிகளைவிட அந்த வீராங்கனையின் கண்ணீர்த்துளிகள் அதிகமாக இருந்தன.

மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

இந்தப் புறநானூற்றுப் பாடல்களை நினைக்கும்போது, அவற்றை எழுதும்போது என் மனக் கண்ணின் முன்னால் லாகூர் சிறைச்சாலை தெரிகிறது. தூக்குக்கயிற்றின் நிழலில் சிறைக் கொட்டடியில் இருக்கும் பகத்சிங்தெரிகிறார். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னைய கடைசி நேர்காணலில் பகத்சிங்கின்வீரத்தாய் அவரது தலையைக் கோதியவாறு, “மகனே தூக்குமேடைக்குச் செல்லும்போதும் நீ கலங்க மாட்டாய் - எனக்குத் தெரியும் - அந்த மாவீரத்தை நிலைநாட்டி மரணத்தைத் தழுவுவாய்எனக் கூறும்போதே அத்தாயின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பகத்சிங் சிரசில் விழுந்தன.

 

புறநானூற்றுத் தாயே வீரத்தாய்

தனது சிறைக் குறிப்புகளில் பகத்சிங்எழுதுகிறார், வீரத்தாய் என்பவர் யார் என்று தானே கேள்வி எழுப்பி, அவரே பதிலையும் தருகிறார். கிரேக்கத்து நகர நாடுகளில் ஒன்றான ஸ்பார்ட்டா - யுத்த களத்தில் பகை கொண்ட நாட்டுடன் மோதுகிற போரின் முடிவு என்ன ஆகுமோ? என்று ஸ்பார்ட்டா மக்கள் காத்திருக்கின்றனர். ஒரு வீரத்தாய் தனது ஐந்து புதல்வர்களையும் யுத்தகளத்துக்கு அனுப்பி வைத்தவள். அவளை நோக்கி ஓடி வருகிறான் ஒரு ஸ்பார்ட்டன். உனக்கு செய்தி தெரியுமா?”  எனக் கேட்கிறான். அவள் திகைக்கிறாள். உன் வீரப்பிள்ளைகள் ஐந்து பேரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்என்கிறான். அட முட்டாளே, அதனையா நான் அறிய விரும்புகிறேன். களத்தின் முடிவு என்னவாயிற்று?” என்று கேட்கிறாள். ஸ்பார்ட்டா படை வென்றதுஎன்றான் அவன். அதைச் சொல்லடா. இப்பொழுதே நான் தேவதைக்கு பூசை செய்யப் புறப்படுகிறேன் என்றாள். அவள்தான் வீரத்தாய்என்று எழுதுகிறார் மாவீரன் பகத்சிங்.

என் மனதில் என்ன தோன்றுகிறது தெரியுமா? கிரேக்கர்களின் யுத்த களங்களோ, ஸ்பார்ட்டாவின் தெர்மாபிளே போர்க்களம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால் ஆங்கிலத்தில் அதனைப் படித்ததால், பகத்சிங் வீரத்தாய்க்கு இலக்கணம் காட்டுகிறார். நமது புறநானூற்றுப் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, அப்பாஞ்சால வீரன் படித்திருந்தால் புறநானூற்றுத் தாயைவீரத்தாய் என வர்ணித்திருப்பார். அண்மையில் தித்திக்கும் செய்தி கண்டேன்.

தமிழ் மொழியின் கருத்துச் செல்வம் மேம்பட மொழிபெயர்ப்பு அவசியம்

தம்பி அருணகிரி அவர்கள் சிறையில் என்னிடம் ஈழ எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களின் தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லைஎனும் நூலைத் தந்தார். அந்த எழுத்தாளர் தனது நூலில், “சமர்ப்பணம்என்று பின்வருமாறு எழுதியுள்ளார். சங்கப் பாடல் ஒன்றை  ஒரு நாள் தேடியபோது, அதன் அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அதன் நேர்த்தியும், அழகும் என்னை பெரிதும் கவர்ந்தன. மொழிபெயர்த்தவர் வைதேகி ஹெர்பர்ட். இந்திய அமெரிக்கப் பெண்மணி. கடந்த ஆறு வருடங்களாக இவர் முழு நேரப் பணியாக சங்கப் பாடல்களை மொழி பெயர்த்து வருகிறார் என்பதை அறிந்தேன். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையை, 2000 வருடங்களாக ஒருவருக்குமே தோன்றாத இந்த மேன்மையான பணியைத் தனி ஒருவராக இவர் செய்துகொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது வியப்பு ஏற்பட்டது. இவருக்கு உறுதுணையாக இருப்பவர் முனைவர் இரா.ருக்மணி அவர்கள். இன்று எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 சங்க கால நூல்களில் 12 மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. மீதியையும் விரைவில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்பது இவருடைய சங்கல்பம். இருவரையும் நான் கண்களில் கண்டது கிடையாது. ஆனால், உழைப்பு என்னை பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இந்நூல் சமர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டிலே பிறந்த அறிஞர் கிறித்துவ மதக் கருத்துக்களைப் பரப்ப முனைந்த ஜி.யு.போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்; திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் மொழியின் கருத்துச் செல்வம், மொழி மேன்மை உலகின் அனைத்து புராதன மொழிகளிலும் மேம்பட்டது.

இருண்ட கண்டமாக ஆப்பிரிக்கா பலரால் வெறுக்கப்பட்டபோது அங்கு சென்று தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த மனிதாபிமானி நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர். அவர், ‘கிழக்கின் தத்துவம்என்ற நூலில் திருக்குறளைப் பற்றிப் போற்றும் வரிகளில், “இதற்கு நிகரான அறநூல் உலகத்திலேயே கிடையாது. புத்தரின் மணிமொழிகளைவிட திருவள்ளுவரின் கருத்துக்கள் உயர்வானவைஎனப் பாராட்டுகிறார். அமெரிக்க நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்றிருந்தபோது, யேல் பல்கலைக் கழகம் அவருக்கு சப் பெல்லோகிப்விருது வழங்கி சிறப்பித்த காலத்தில் அப்பல்கலைக் கழக மாணவர்களிடம் திருக்குறள் வகுப்பு எடுத்தார். அதன் விழுமிய கோட்பாடுகளைச் சொன்னார்.

கண்ணின் மணிகளே! மீண்டும் புறநானூற்றுக்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்துவந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாடி பகுதியில் அக்கிரமமாக பிரவேசித்து, நமது இராணுவத்தினரை அதிரடியாகத் தாக்கி நமது வீரர்கள் இருவரின் தலைகளைத் துண்டித்த கோரச் சம்பவம் மனிதாபிமானிகளின் மனதை நடுங்க வைத்ததைக் குறிப்பிட்டுவிட்டு போர்க்களங்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா!

தமிழர்கள் மறக்களத்திலும் அறம் மறந்ததில்லை; நிராயுதபாணிகளைத் தாக்கியதில்லை. பெண்டிரை, பிணியுற்றோரை, அறநூல் பகர்வோரைப் பாதுகாக்கவே முனைந்தனர் என்பதற்கு சாட்சியம்தான் புறநாநூற்றின் ஒன்பதாம் பாடல்.

பாடியவர் நெட்டிமையார். பாட்டுக்குரிய மன்னர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் படையெடுத்துப் போர் தொடுக்கும் நாட்டில், வன்மை அற்ற மெலிந்தோரை, பாதுகாப்பான இடங்களில் போய் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்கிறான். மகாபாரத இதிகாசத்தில் விராட பருவத்தில்துரியோதனன் சகுனியின் யோசனையின்படி திரிகர்த்த தேசாதிபதி சுசர்மன் விராட நாட்டின் பசுக் கூட்டங்களை ஒட்டிக் கடத்துவான். போர் அப்படித்தான் மூள்கிறது. ஆநிரை கவர்தல்என்பது போர் தொடுக்கும் காரணமும் ஆகிறது. ஆனால், இங்கே பாண்டிய வேந்தன் ஆவினங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லுங்கள். அறம் கூறும் மறையோர், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர், புதல்வரைப் பெறாத பெற்றோர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். என் வில்லிலிருந்து அம்புகள் சீறிப் பாயுமுன் விலகிச் சென்று உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதோ பாடல்,

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம் அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

என்னே மனிதநேயப் பண்பு!

அதனால்தான் செந்நாப் போதார் திருவள்ளுவர் தனது அறத்துப்பாலை அன்புடைமை அதிகாரத்தில்

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
  மறத்திற்கும் அ~தே துணை

எனும் குறளை வைத்தார்.

பொருட்பாலின் முதல் அதிகாரமான இறைமாட்சியின் அரசுப் பொறுப்பில் இருப்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதற்கு தன்னைக் குற்றம் குறை சொல்வோரின் சொற்களை செவிகளில் நாரசாரமாய்ப் பாயும் கசப்பான சொற்களைப் பொறுத்துக்கொள்கிற பண்புடைய வேந்தனின் குடை நிழலே உலகைக் காக்கும்; அம்மக்களைக் காக்கும்என்கிறார்.

செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடைவேந்தன்
  கவிகைக் கீழ் தங்கும் உலகு - குறள்

இதற்குச் சான்றாக ஒரு காட்சி, போர்க்களத்தில் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக திருக்கோவவிலூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரியை களத்திலே வீழ்த்திய பின்னும் வெகுளி குறையாமல் அம்மன்னனது பிள்ளைகளை, யானையின் கால்களால் இடறச் செய்யும் அறிவற்ற பண்பற்ற செயலைப் புரிய சோழ மன்னன் கிள்ளிவளவன் முனைந்தபோது, தமிழ்ப் புலவர் இதனைக் கேள்வியுற்று விரைந்து வருகிறார். அவர்தான் கோவூர் கிழார். மன்னவனே! நீ யார் வழி வந்தவன்? தன்னை தஞ்சம் அடைந்த புறாவைக் காக்க தனது தசையை அரிந்து பருந்துக்குக் கொடுத்து புறாவின் துயர் போக்கியதுபோல், பிறரது துயர் களைந்த சோழ மரபிலே வந்தவன். இந்தப் பிள்ளைகள் யார்? கற்றோர் வறுமை அடையாதவாறு விளை பொருளைப் பகுத்து உண்ணும் குளிர்நிழல் வாழ்ந்த மரபு வந்தவர்கள். யானை வருகிறது. இப்பிள்ளைகள் அதுவரை அழுதுகொண்டிருந்த நிலை மாறி, அந்த வேழத்தைக் கண்டு வேடிக்கை பார்த்து அழுகையை மறந்துவிட்டனரே. தங்களைச் சுற்றிலும் வேற்று மனிதர்கள் நிற்பதைக் காண்பதால் வருத்தம் கொள்கின்றனர். நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். கேட்டாய். உன் விருப்பப்படி நடந்துகொள்என்றார். மன்னன் கிள்ளிவளவன் தவறு உணர்ந்து அறம் காத்து பிள்ளைகளைக் காத்தான். இடித்துக் காட்டும் புலவரே அறம் கூறும் புலவர் ஆவார்.

புறம் பாடல் 46 இதோ

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே
நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது

இதே மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன்னிடம் பரிசில் பெற்றுச் செல்லும் புலவர் ஆலத்தூர் கிழாரை பார்த்து மீண்டும் என்னை நினைத்து இங்கு வருவீர்களா?” எனக் கேட்கிறான்.

அதற்கு அப்புலவர், “நன்றி மறந்தோர்க்கு உய்வே கிடையாது”. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்குஎனும் குறள் நெறிக் கருத்தையே பாடல் வரிகளாக தருகிறார். பசுவின் மடியினை அறுத்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. மங்கல மங்கையின் கருவினைச் சிதைத்த பாவிக்கும் கழுவாய் ஏற்படலாம், அறிவூட்டும் ஆசானையே பழித்துக் கொடுமை செய்தோர்க்கும் கழுவாய் கிட்டிடலாம். ஆனால் இந்த உலகமே புவி மண்டலமே தலைகீழாகப் புரண்டாலும் ஒருவர்  செய்த உதவியை மறந்த நன்றி கொன்ற பாவிகளுக்கு உய்வே கிடையாதுஎன்றார்.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ! - புறம் 34

நன்றி கொன்றோர் போன்ற பாவிகள் உலகிலேயே கிடையாதுஎன்கிறது தமிழர்களின் அறம் - புறநானூற்றுப் பாடல்களை எல்லாம் ஊன்றிப் பயிலும்போது - மறமும் அறமும் தமிழர்களின் விழிகள் என்பதை உணர முடியும்.

 

புறநானூற்று உணவு வகைகள்

பண்டைத் தமிழகத்து வளம், மருத நிலச் செழுமை, குறிஞ்சியில், முல்லையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள். நெய்தலில் கிடைத்த மீன்கள், ஆயமகளிர் தரும் தயிர்; அதில் கிடைக்கும் நெய், செந்நெல் அரிசி, வரகரிசி, தேன், பசும்பால் இவற்றையெல்லாம் விதவிதமாகச் சமைத்து விருந்து படைத்து உண்டு மகிழ்ந்த தமிழர்களின் வாழ்வுச் சிறப்பை எண்ணினால் ஏக்கப் பெருமூச்சே மேலிடுகிறது. புது நெல்லின் வெண் சோற்றுடன் வாளை மீனை வகையாகச் சமைத்து உண்கின்றனர். அயிரை மீன் குழம்பு வைத்து சோற்றுருண்டைகளைச் சுவைக்கின்றனர். முள்ளிப்பூ மாலை சூடிய பரதவ மகளிர் பனை நுங்கின் நீரும், கருப்பஞ்சாறும் இளநீருடன் கலந்து உண்டு, பின் கடல் நீரில் நீந்தி ஆடி மகிழ்வர். புன்செய் வரகு தானியத்தைப் பால் பெய்து சமைத்து, தேனுடன் கலந்து, கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்து உண்பர். காட்டுவழி வேட்டையாடும் வேடன், மானின் தசையை வட்டிலிலே கொண்டு வந்து உழவர் வீட்டில் கொடுப்பான். ஆயமகளிர் பானையிலே தயிரைக் கொண்டு வந்து தருவர். வெண்ணிற அரிசி தரும் நெல்லைப் பெண்கள் கொண்டு வருவர். ஆயமகளுக்கும் வேட்டுவனுக்கும் நெல்லை முகந்து தருவர். அங்கு கூடும் விருந்தினருக்கும் படைவீரர்களுக்கும் அற்புதமான பிரியாணி தருகிறார்கள். நான் நண்பகல் 1 மணிக்கு எழுதுகிறேன். சோறும் சாம்பாரும் ஒரு கூட்டும்காத்திருக்கின்றன. புறநானூற்று பாட்டைப் படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

மெல்லிய அரிசியைப் பக்குவமாக பொங்கும்போதே இறைச்சித் துண்டுகளை அத்துடன் சேர்த்துப் பொங்குகின்றனர். அது எப்படி இருக்கிறது தெரியுமா? நமது மங்கல மங்கையர் மாலை தொடுக்கும்போது பூ மொட்டுக்களுக்கிடையே தளிர் இலைகளை ஆங்காங்கு வைத்து மாலையாகக் கட்டுவர். அதுபோல அரிசிச் சோற்றில் இறைச்சித் துண்டுகள் கலந்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் நாகரிகத்தில் எவ்வளவு உயர்ந்துள்ளனர். பச்சை மாமிசத்தையும் பச்சைக் காய்கறிகளையும் உலகின் பல பாகங்களில் மக்கள் உண்டு வாழ்ந்தபோது எவ்வளவு உன்னதமான வாழ்வை தமிழர்கள் நடத்தியுள்ளனர் என்பதை எண்ணும்போதே எவ்வளவு பெருமையாக உள்ளது.

புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
  மலரா மாலைப் பந்துகண் டன்ன
  ஊன்சோற்ற மலை பான் கடும்பு அருத்தும்
- புறநானூறு 33

 

இவ்வளவு போதும். இனி நான் கூற வந்த பிரச்சினைக்கு வருவோம். யுத்தகளத்தில் படைக்கலன்கள்  பாய்வதால் மரணமும் ஒரு தரப்புத் தோல்வியும், பிரிதொரு தரப்பு வெற்றியும் ஏற்படுவது உண்டு. நான் சமர்க்களங்களைப் பற்றி காவியங்களிலும், இதிகாசங்களிலும், வரலாற்று நூல்களிலும் மிகவும் விரும்பிப் படிப்பவன் மட்டும் அல்ல; அந்தக் களங்களிலேயே மானசீகமாக உலவுகின்றவன்.

செருக்களத்தில் கொல்லப்பட்ட பகைவனின் உடலைச் சிதைக்கும் கொடூரம் வரலாறு நெடுகிலும் நடந்தது உண்டு. ஆனால், மனிதநேயத்துடன் வீரத்துடன் பொருது வீழ்ந்த பகைவனின் நெஞ்சுரத்தை வியந்து அவனது உயிரற்ற சடலத்தை முறையாக கௌரவித்து அடக்கம் செய்விக்கும் மனிதநேயமும் உண்டு.

இலியட் காவியம்

மைசூர்ப்புலி என வரலாறு போற்றும் மாவீரன் திப்புசுல்தான் போர்க்களத்தில் கொல்லப்பட்ட ஆங்கிலேய வெள்ளைப் படையினருக்குக் கல்லறைகள் கட்டுவித்தான். என் மனம் கவர்ந்த வீர காவியமான கிரேக்கத்து ஹோமர் தீட்டிய இலியட்இதுபோன்ற ஒரு அற்புதக் காட்சியைச் சித்தரிக்கிறது.

பழமையான நாகரிகங்களில் ஒன்றுதான் கிரேக்க நாகரிகம். கிரேக்க மகாகவிஞன் ஹோமரின் காலத்துக்கு முன்னதாகவே படிப்பறிவுள்ளவர்களாகக் கிரேக்கர்கள் வாழ்ந்தனர். அவர்களின் தெய்வ வழிபாடு இறை நம்பிக்கை அவர்களுக்குள் நிகழ்ந்த யுத்தங்களுள் மிகவும் போற்றப்படுவது டிராய் யுத்தம் (Trojan War). இது நிகழ்ந்த காலம் கி.மு. 1334 என்றும், ஹெரோடோடஸ் கருத்துப்படி கி.மு. 1250-ஆம் ஆண்டு என்றும் கூறப்படுகிறது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத தேவதைகள் பற்றிய செய்திகள் இருப்பினும் டிராய் யுத்தம் அவர்களின் வரலாற்று நிகழ்வாகவே கருதப்படுகிறது. ஆசியா மைனரின் வடமேற்கு முனையில் அமைந்து இருந்தது டிராய் நகரம். எதிரிகள் ஊடுருவ முடியாத பலத்த அரண்களைக் கொண்ட கோட்டை அரண்களின் உள் அமைப்புக்களிலிருந்து குறிதவறாமல் கூர்மையான பாணங்களை வில்லில் தொடுத்துத் தாக்கும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் டிராய் வீரர்கள் - டிரோஜன்கள். டிராய் மன்னனாக பிரியம் திகழ்ந்தான். அவனது புதல்வர்களில் பெருவீரன் ஹெக்டர். இளைய மகன் எழில்மிக்க பாரிஸ் என்பான். ஸ்பார்டா நகர நாட்டிற்கு விருந்தினர்களாக இளவரசர்கள் ஹெக்டரும் பாரிசும் செல்கின்றனர். ஸ்பார்டாவின் மன்னன் மெனியலாஸ். அவன் மனைவிதான் பேரழகி ஹெலன். மெனியலாசின் அண்ணன் அகமென்னான், மைகினாய் நாட்டு அரசன். மூர்க்கமானவன். கிரேக்க அரசர்களில் தானே தலைவன் என தம்பட்டம் அடிப்பவன். பேரழகி ஹெலன் மீது மையல் கொள்கிறான் பாரிஸ். அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள். இரகசியமாக ஹெலனைக் கொண்டுபோய் விடுகிறான் கடல் மார்க்கத்தில் டிராய் நகரத்துக்கு. ஹெக்டர் தடுத்தும் பாரிஸ் கேட்கவில்லை. ஹெலனை மீட்க வேண்டும் என அகமென்னன் கிரேக்க அரசர்களின் படைகளைத் திரட்டுகிறான். ஆயிரம் போர்க் கப்பல்கள் டிராய்தீவு நகரை முற்றுகையிட்டு அழிக்கப் புறப்படுகின்றன.

It is the face that launched a thousand ships. இந்த அழகு முகம்தானா ஆயிரம் போர்க் கப்பல்களை ஏவியதுஎன்பர். இலியட் காவியம் 15603 வரிகளைக் கொண்ட கவிதைக் காவியம். 24 அத்தியாயங்களைக் கொண்டது.

இக்காவியத்தின் மையக் கதாநாயகன் ஈடில்லா பெருவீரன் அக்கிலஸ். அவனது வீரத்தாய் தெடிஸ் தன் மகன் குழந்தையாக இருந்தபோது ஸ்டிக்ஸ் ஜீவநதித் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்கிறாள். அந்த உயிர்த் தண்ணீர் அக்கிலஸ் உடல் மீது பட்ட இடங்களில் எந்த ஆயுதமும் உயிரைப் பறிக்காது. ஆனால் அக்கிலசின் ஒரு குதிங்கால் தாயின் கரத்தில் இருந்ததால் அமுதத் தண்ணீர் படவில்லை. அதுவே கடைசிப் போர்க்களத்தில் அக்கிலசின் குதிகாலில் அம்பு பாய்ந்து மடிந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இலியட்காவியத்தின் 24 அத்தியாயங்களைப் படித்தேன். என்ன விசித்திரம் எனில் இதில் டிராய் மரக்குதிரை பற்றிய குறிப்பே இல்லை. ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும் நடக்கும் மெய்சிலிர்க்கச் செய்யும் துவந்த யுத்தம் - அதன் முடிவு - அத்துடன் இலியட் முற்றுப் பெறுகிறது. அக்கிலஸ் மரணம் குறித்தும் டிராய் மரக் குதிரை பற்றியும்” ‘ஒடிஸ்ஸி’ (Odyssy) காவியத்தில்தான் குறிப்பிடப்படுகின்றன.

யுத்தகளத்திற்குச் செல்வோம். இந்தப் போரில் அகமென்னனின்ஆணவத் திமிரை எதிர்த்த அக்கிலஸ் பங்கேற்கவில்லை. பத்தாண்டுகள் டிராய் முற்றுகையும் போரும் நடக்கிறது. டிரோஜன்களின் கை ஓங்கியது. கிரேக்கர்களின் பெருவீரர்கள் ஹெக்டரால் வீழ்த்தப்பட்டனர். பெருவீரன் அஜாக்ஸ் உட்பட! அக்கிலசின் ஒன்றுவிட்ட தம்பி பெரிடோகிளஸ் பெரு வீரன். கிரேக்கர்கள் தோற்பதைச் சகிக்காத பெரிடோகிளஸ், “அக்கிலசின் தலைக்கவசத்தையும், மார்புக் கவசத்தையும் அணிந்து களம் புகுந்தபோதுஅக்கிலஸ்தான் போரிடுகிறான் என எண்ணி ஹெக்டர் நேருக்கு நேர் வாள் வீசுகிறான். பெரிடோகிளஸ் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கணத்தில் வெடிக்கும் எரிமலையானான் மாவீரன் அக்கிலஸ். தனது ரதத்தில் போர்க்களம் நுழைகிறான். டிராய் கோட்டை வாயிலில் துவந்த யுத்தம் நடக்கிறது ஹெக்டருக்கும் அக்கிலசுக்கும். ஹெக்டர் கொல்லப்பட்டான். அவனது கால்களில் கயிற்றைப் பிணைத்து தன் ரதத்தில் கட்டிக் கொண்டு டிராய் கோட்டையை சுற்றி வருகிறான். ஹெக்டர் சடலம் மண்ணில் இழுக்கப்பட்டுச் செல்கிறது. ட்ரோஜன்கள் தங்களுக்கு அழிவு சூழ்ந்து விட்டதை எண்ணிக் கதறுகின்றனர்.

1962 இல் நான் Helen of Troyதிரைப்படத்தை நெல்லை பார்வதி திரையரங்கில் பார்த்தேன். 2005 ஆம் ஆண்டில் Troyதிரைப்படத்தை சிகாகோ நகரத் திரையங்கில் பார்த்தேன். பிராட்பிட்இதில் அக்கிலசாக நடித்திருப்பார். அற்புதமான நடிப்பு கதாபாத்திரத்தை அப்படியே நம் கண்களில் நிறுத்தினார். லாரன்ஸ் ஆப் அரேபியாதிரைப்படத்தில் கதாநாயகனாக அறுபதுகளில் நடித்து ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் பீட்டர் ஒடூல் - டிராய் மன்னன் பிரியம்என்ற பாத்திரமாகவே மாறியிருப்பார். காரணம் இல்லாமல் இலியட் காவியத்தை இங்கு நான் எழுதவில்லை. காரணத்தோடுதான் இலியட்காவியத்தின் இறுதி அத்தியாயத்தின் நெஞ்சை உருக்கும் காட்சிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். ஹோமரின் வாசகங்களையே இங்கு தருகிறேன்.

இடம்மாவீரன் அக்கிலசின் பாசறை.

- இரண்டு முக்கிய மெய்க்காப்பாளர்கள் நிற்க அக்கிலஸ் அமர்ந்துள்ளான்.

- நெடிதுயர்ந்த உருவம் ஒன்று யாரும் கவனிக்காத விதத்தில் அக்கிலசின் முன்னால் நின்று அவனது முழங்கால்களைப் பற்றியவாறு அக்கிலசின் வலிமை வாய்ந்த கரங்களில் முத்தமிடுகிறது.

அக்கிலஸ் ஆச்சரியத்தின் உச்சத்தில் உற்று நோக்குகிறான்.

டிராய் மன்னன் பிரியம் பேசுகிறான்

கிரேக்கக் கடவுள்களைப் போன்ற தோன்றமுள்ள அக்கிலசே - உன் தந்தையை நான் அறிவேன். எனது வயதுதான் அவருக்கு இருக்கும். அவரது வீர மகனான நீ, போர்க்கள வெற்றி விருதுகளோடு வருவது கண்டு ஆனந்தக் களிப்படைவார். எனது தலைவிதியே தீமையாகிவிட்டது. எனக்கு 50 புதல்வர்கள். ஒரே தாய்க்கு பத்தொன்பது ஆண் பிள்ளைகள். மற்றப் பிள்ளைகள் பிற தாய்களுக்கு பிறந்தவர்கள். பலரும் களத்தில் கொல்லப்பட்டனர். என் புதல்வர்களில் வீராதி வீரனாக ஹெக்டர், தன் தாய்நாட்டைக் காக்க உன்னுடன் போர் புரிந்தான். சில நாட்களுக்கு முன் உன் வீரக் கரங்களால் கொல்லப்பட்டான்.

என் மகனின் உயிர் பறித்த அக்கரங்களை நான் முத்தமிடுகிறேன். அக்கிலசின் காலடியில் அமர்ந்தான் மன்னன் பிரியம். கதறி அழுதான். அது கண்ட அக்கிலஸ் தன் தந்தையை நினைத்தும், தம்பி பெரிடோ கிளசையும் நினைத்து அழுதான். இருவரின் விம்மலும், புலம்பலும் பாசறையில் ஒலித்தன. அக்கிலஸ் தன் கரங்களை நீட்டி பின்னர் அரவணைத்தவாறு, மன்னனின் நரைத்த தலையையும், நரைத்த தாடியையும் நோக்கி இரக்கம் நிறைந்த குரலில் ஓ! எவ்வளவு பெரிய துரதிஷ்டசாலி நீங்கள். உங்கள் உள்ளத்தில்  தாங்கொணாத துக்கம். உங்களின் புதல்வர்களைக் கொன்றவன் நான். இந்தப் பாசறைக்கு நீங்கள் வந்தது அசாதாரணமான செயல். இந்த ஆசனத்தில் அமருங்கள். உங்கள் இதயம் துணிச்சலில் இரும்பை நிகர்த்தது. துக்கத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் துயரம் மறைந்த மகனைத் திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. உங்களைத் தவிர வேறு எவராயினும் இளைஞனாயினும் என் அரண்களுக்குள்ளே நுழைந்திருக்கவே முடியாது. உங்கள் நெஞ்சுறுதி வியப்பிற்குரியது.

மன்னன் பிரியம் தழுதழுத்தக் குரலில் சொல்கிறான். பெரு வீரனே! என் மகனது சடலம் மண்ணில் கிடக்கிறது. ஹெக்டரின் சடலத்தை கேட்டு வந்துள்ளேன். அவனை உரிய மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும்.அக்கிலஸ், “உங்கள் மகன் ஹெக்டரை உங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டேன். அவனது மரணத்துக்குப் பின் உணவருந்தியிருக்க மாட்டீர்கள். உறங்கியிருக்க மாட்டீர்கள்எனக் கூறியபடி இருவரும் சேர்ந்து உணவு அருந்தினர். மன்னன் பிரியம் ஓய்வெடுக்க படுக்கை வசதி செய்யப்பட்டதுஹெக்டரின் சடலத்தை நன்கு நீராட்டி, தைலமிட்டு ஒரு ரதத்தில்பாதுகாப்பாக வைக்க அக்கிலஸ் ஏற்பாடு செய்தான். உங்கள் தீரமகன் இறுதிச் சடங்குகளுக்கு எத்தனை நாட்கள் வேண்டும். அதுவரை யுத்தத்தை நிறுத்துகிறேன் என்றான் அக்கிலஸ்.

மன்னர் பிரியம் - என் வீரப் புதல்வனின் ஈமச்சடங்குக்காக குன்றுகளில் இருந்து மரங்களை ட்ரோஜன்கள் கொண்டு வருவார்கள். ஒன்பது நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு பத்தாம் நாள் தகனம் செய்வோம். பதினோறாம் நாள் கல்லறையில் வைப்போம்என்றார். இந்தப் பதினோறு நாட்களும் போர் தொடுக்க மாட்டோம் என்றான் அக்கிலஸ். வைகறைப் பொழுதில் பாதுகாப்பாக மன்னர் பிரியத்தையும், ஹெக்டரின் சடலத்துடன் அனுப்பி வைத்தான். டிராய் மக்கள் கண்ணீர் சிந்திக் கதறினார்கள். ஈமச்சடங்களுக்காக மரங்களைவெட்டிக் கொணர்ந்தனர். பத்தாம் நாள் மரங்கள் அடுக்கப்பட்ட சிதையின் மேல் மாவீரன் ஹெக்டரின் சடலம் வைக்கப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டது. பதினோறாம் நாள் தீயாற்றல்நடந்தது. ஹெக்டரின் எலும்புகள் சேகரிக்கப்பட்டன. ஒரு தங்கப்பேழையில் எலும்புகளும், ஈமச்சாம்பலும் வைக்கப்பட்டன. பதினோறாம் நாள் காலை கதிரவனின் கிரணங்கள் புறப்பட்ட வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட புதைகுழியில் ஹெக்டரின் எலும்புகளும், ஈமச்சாம்பலும் அடங்கிய தங்கப்பேழை வைக்கப்பட்டது. கடினமான பாறைகளை அக்குழிமேல் நெருக்கமாக வைத்து மூடினார்கள்பகைவர் படைகளை சூறையாடிய பெரு வீரன் அடக்கமானான்.

இலியட் காவியம் இத்துடன் முடிவு பெறுகிறது. பெறும் பகைவன் ஆனாலும் கொல்லப்பட்ட பின் சடலத்துக்கு இறுதி மரியாதை, ஈமச்சடங்கு நடத்தும் மனித நேயம் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பதற்காகவே ஹோமரின் இலியட்டை உங்களிடம் வைத்தேன்.

கும்பகர்ணன் வதை படலம்

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிதைகளில் மனம் பறிகொடுப்பவன் நான். அதை இதிகாசமாகவே பார்க்கிறேன். யுத்த காண்டத்தில் மயிர்க்கூச் செறியும் களக் காட்சிகள் ஏராளம். இந்திரசித்து வதை படலமும், இலங்கை வேந்தனின் இறுதி யுத்தமும், கும்பகர்ணன் வதை படலமும் என் நெஞ்சை விட்டு நீங்காதவை.

நெறியில் உயர்ந்தவனும் ஈடு இணையற்ற பெரு வீரனுமாகிய கும்பகர்ணன் பாத்திரம் இக்காவியத்தில் என் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாத்திரம். போர்க்களம் வருகிறான் கும்பகர்ணன். அவனது ஒரு தோளில் இருந்து மறு தோளைப் பார்க்கவே பலகாலம் ஆகுமாம். இராமனது சைன்யத் தளகர்த்தர்கள் பலறும் கும்பர்கர்ணன் முன் தோற்று ஓடினர். அப்படித் தோற்று மூர்ச்சையடைந்த சுக்ரீவனைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குள் கும்பகர்ணன் நுழையும் வேளையில் பெரும் போர் நிகழ்கிறது. மூர்ச்சை தெளிந்த சுக்ரீவன் கும்பகர்ணனின் மூக்கைக் கடித்துத் துண்டித்துவிட்டு நழுவித் தப்பிவிட்டான். தசரதன் மூத்த மகன் இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம். வீரம் கொந்தளிக்கும் போர். தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான் கும்பகர்ணன். இராமனிடம் வேண்டுகோள் வைக்கிறான். நான் மடியப்போகிறேன். ஆனால் மூக்கில்லாத மூளியான முண்டம்என தேவர்களும், முனிவர்களும் எள்ளி நகையாடுவர். ஏளனம் புரிவர் பலறும். எனவே உன் பாணத்தைச் செலுத்தி என் கழுத்தைத் துண்டித்து எனது நெடுந்தலையை கருங்கடலின் ஆழத்தில் உன் அம்பினால் செலுத்துவாய் என்றான் கும்பகர்ணன்.

மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை
, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்
; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்

என்றான் கும்பகர்ணன். அவ்விதமே இராமனும் தனது வாளியைச் செலுத்தி நெடுங்கடலுள் கும்பகர்ணன் தலை ஆழத்தில் புதையச் செய்தான். அது இதிகாசம்.

பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்

இங்கே பாகிஸ்தான் ராணுவம் செய்தது கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இந்திய ராணுவ வீரர்களை, கட்டுப்பாட்டு பிரதேச எல்லை கடந்து வந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்று அவர்களின் தலைகளைத் துண்டித்தது மன்னிக்க இயலாத மாபாதகமாகும்.

உலகத் தொழிலாளர்களின் உரிமைக் கொண்டாட்ட தினமான மே 1 ஆம் நாளில் இந்தக் கோரச் செயலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகள் ஆணையர் நாயகம் லெப் ஜெனரல் ஏ.கே.பட் அவர்கள், (DGMO) பாகிஸ்தானில் அதே பொறுப்பில் உள்ள மேஜர் ஜெனரல் சசீர்சம்சட்டிடம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தபோது தக்க ஆதாரமும், சாட்சியமும் இன்றி குற்றம் சாட்டக் கூடாது என்றதுடன், கட்டுப்பாட்டு எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்தியா குறிவைத்தால் உரிய பதிலடி தரப்படும் என்றும் உறுமியிருக்கிறார்.

பாகிஸ்தான் நாடு உதயமான காலத்தில் இருந்து பல கட்டங்களில் ஜனநாயகம் பலியிடப்பட்டு ராணுவ சர்வாதிகாரம் அதிகார லகான்களை கைப்பற்றியது. ராணுவத் தளபதிகள், ஜெனரல் அயூப்கான், ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஜியாவுல்ஹக், ஜெனரல் பர்வீஸ் முசாரப் என ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொடுங்கோலோச்சிய காலமே அதிகம். தற்போது கிடைக்கின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ராணுவத்தினரை இழிவுபடுத்தி பேசியதாகவும், பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக தூண்டி விட்டதாகவும் எதிர்க் கட்சியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் கைய்மர் ஜேவட் பஜ்வா ஒரு ஆபத்தான நபராக கவனத்துக்குரியவர் ஆகிறார். இதன் பின்புலத்தில் நடந்ததுதான் முக்கியமாகும்.

2017 ஏப்ரல் 26 ஆம் நாள் இந்தியாவின் தனியார்துறை ஜெட் விமானம் இஸ்லாமாபாத் விமான நிலையம் போய் இறங்கியது. காபூலில் இருந்து எந்த விசா கட்டுப்பாடுகள் இன்றி அங்கு போய்ச் சேர்ந்தவர் 40 கி.மீ தொலைவில் ஒரு அழகிய குன்றின் சரிவில் உள்ள மாளிகைக்கு போனார். அந்த இல்லம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் இல்லம். அவரும் குரும்பத்தினரும் இந்த விருந்தினரை வரவேற்றனர். அவர்தான் தொழிலதிபர் சஜ்ஜன் ஜின்டால், பிரதமர் மோடியின் சமாதானத் தூதுவராகத்தான் நவாஸ் செரீப்பை சந்தித்தார். இந்த வருகை ராணுவத்தினருக்கோ, ராணுவ உளவுத்துறைக்கோ தெரிவிக்கப்படவில்லை. அதனால் ராணுவ உளவுத்துறை ஊடகங்களுக்கு செய்தியைக் கசியவிட்டது.

பிரதமர் நவாஸ் செரீபில் மகள் மரியம் ஜின்டால் நீண்ட காலமாக எங்கள் குடும்ப நண்பர். நட்பு நிமித்தமாக சந்தித்தார். இதில் அரசியல் இல்லைஎன வலைதளங்களில் பதிவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத் தளபதி தனக்குத் தெரிந்துதான் நாட்டில் அணுவும் அசைய வேண்டும் என்று செயல்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தினரிடம் கத்தியைத் தீட்டுகிறார். ஏப்ரல் 30 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் தன் ராணுவத்தினரிடம் கடுமையாக பதிலடி கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

எல்லை நடவடிக்கைப்படை (BORDER ACTION TEAM - BAT) ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட சிறப்புப்படை. எல்லைப் புறங்களில் சில நேரங்களில் தீவிரவாதிகளுடன் சேர்ந்தும் இவர்கள் ஊடுருவதும் உண்டு. தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.

கவலை தரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை

எல்லைப்புறத்தில் வெறுப்பு நெருப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விசிறிக் கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீர் நிலைமை மிகுந்த கவலையைத் தருகிறது. பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இருந்து இயக்கப்படும் தொலைக்காட்சிகளின் செய்திகளையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினர் அதிகம் காண்கின்றனர். இந்தியா மீதான வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமாக ஊடுருவுகிறது. இச்செய்தி ஊடகங்களில்,

இம் மே மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள், ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் நடத்திய தாக்குதலில் மூன்று பொதுமக்களும், ஒரு காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லைக் காப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதியான பயஸ் அகமது என்ற சீத்தா கொல்லப்பட்டான். இவன் தலைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு காஷ்மீரத்தில் குல்காம் மாவட்டத்தில் கொய்மோ பகுதியில் தீவிரவாதி சீத்தாவின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தபோது பூரண ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நால்வர், இயந்திரத் துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கி வேட்டுகளை எழுப்பி இறுதி மரியாதை செய்துள்ளனர் பகிரங்கமாக. இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

வளைகுடா நாடுகளை மட்டுமல்ல அண்மையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் பதட்டம் ஏற்படுத்தி வருகிற படு தீவிரமான அமைப்புதான் ISIS. ஈராக், சிரியா, ஸ்லாமிய அரசு குறுகிய காலத்திற்குள் தலிபான்களைவிட, அல் கொய்தாவைவிட பயங்கர வலிமை உள்ளவர்களாக ஆயுதம் பலம் கொண்டவர்களாக சிரியாவின் அதிபர் அல்பசார் ஆசாத் அரசை அகற்ற போர் தொடுத்து வருகின்றனர். உக்கிரமமான யுத்தம் நடைபெற்று வருகிறது. ருஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிரிய அதிபர் ஆசாத்துக்கு முழு ஆதரவு தந்து வருகிறார். அமெரிக்கக் கொள்கையும் இதே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தது. திடுக்கிடும் திருப்பம் நேர்ந்தது. வெள்ளை மாளிகையின் போக்கில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து அறிவுக்கு ஒவ்வாத அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

வளைகுடா நாடுகளின் பரிதாபம்

வளைகுடா நாடுகளில் ஏமன் தேச நிலைமை மிகப் பரிதாபகரமானது. இரண்டு கோடியே எழுபது லட்சம் மக்கள் தொகையில் 90 லட்சம் மக்கள் பசி, பட்டினியால் மடியும் அவலம் அவர்களை வளைத்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. 33 லட்சம் பேர், குறிப்பாக சிறுவயதினர் குழந்தைகள் நல்ல சத்துள்ள உணவு இன்றி வாடி வதங்குவதாகவும் கூறுகிறது. இஸ்லாமிய ஸ்டேட் ISIS பிடியில், அல்லது அல்கொய்தா பிடியில் ஏமன் சிக்கக் கூடும் என்று கருதி சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. ஏமனில் இருப்பதாக சந்தேகித்து அல்கொய்தா முக்கியத் தலைவரைக் கொல்ல அதிபர் டிரம்ப் ஆணைப்படி நடத்தப்பட்ட குண்டுவீச்சில், அந்த நபர் சிக்கவில்லை. அந்நாட்டிலேயே இஸ்லாமிய அப்பாவி ஏமன் மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். 8 வயது சிறுமி உட்பட -

சிரியாவில் நிலைமை விசித்திரமான அபாயம். சிரியாவில் ஸ்லாமிய அரசைஎதிர்த்து போராடும் குர்தியர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவியும் செய்கிறது.

சிரியாவில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள இட்லிப் மாவட்டத்தில் கான் சேக் ஹவுன் நகரில் ஏப்ரல் 2 ஆம் நாள் சிரியா அரசுப் போர் விமானம் குண்டு வீசியதாகவும். ரசாயனக் குண்டுகள் என்றும், அந்த அழிவில் குழந்தைகள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாயிற்று. அழிவுக் காட்சிகள் தத்ரூபமாக தொலைக்காட்சி ஊடகங்களில் அதிர்ச்சியூட்டின. வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் இச்சம்பவத்தைக் கண்ட அதிபர் டிரம்ப் மகள் இவென்கா பயந்து பதறியதாகவும், “தந்தையே இதற்கு நடவடிக்கை எடுங்கள்என்று கூறியதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்க ஏவுகணைகள் பாய்ந்ததாகவும் செய்திகள் உலகை உலுக்கின. சிரிய அதிபர் ஆசாத், “எங்கள் போர் விமானம் தீவிரவாதிகள் இருந்த கட்டடத்தின் மீது குண்டு வீசியதாகவும், தீவிரவாதிகள் சேகரித்து வைத்திருந்த ரசாயனக் குண்டுகள் வெடித்ததாகவும், ஐ.நா. இது குறித்து விசாரணை நடத்தட்டும் என்றார். ருஷ்ய அதிபர் புடினும் அதனையே வலியுறுத்தினார்.

இதே வேகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போடப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த குண்டு, “குண்டுகளுக்கு எல்லாம் தாய்” (Mother of Alla Bombs) என்று கொக்கரித்தார். ஆப்கன் அரசு இதனைக் கண்டனம் செய்துள்ளது. கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகனின் போப் ஆண்டவர் பிரான்சிஸ்உயிர்களை அழிக்கும் குண்டுகளைஅன்பால் உயிர்விக்கும் அன்னை என்று அதிபர் விவரித்தது அக்கிரமம் என்றார்.

நீதி சாகாது

அப்பாவிகள் கொல்லப்பட்டால், சிறு பிள்ளைகள் சாக நேர்ந்தால் அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இதே மே மாதத்தில்தானே எட்டு ஆண்டுகளுக்கு முன் சிங்கள இராணுவத்தால், விமானப்படையால் கொன்று குவிக்கப்பட்டார்களே, சின்னஞ்சிறு பிஞ்சுகள், குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்களே, உலக நாடுகளின் அதிபர்களுக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை. மனம் பதறவில்லை. இப்படுகொலைக்குக் காரணம், இந்திய அரசுதான் என்று கூறினேன். கொலைகார ராஜபக்சே. யுத்தத்தை இந்தியாவே நடத்தியது. அவர்களாகவே அனைத்து ஆயுதங்களும் தந்தனர்என அண்மையில் கூறினான். இதைச் சொன்னதனால்தானே என் மீது திமுக அரசு தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் வழக்குப் போட்டது.

2013 டிசம்பர் 12 இல் டில்லி பேருந்தில் ஒரு மருத்துக் கல்லூரி மாணவி நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறு கொடியவர்களால் கற்பு சூறையாடப்பட்டு, குரூரமான பாலியல் வன்முறையில் அந்த அபலைப் பெண் நாசமாக்கப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக சாலையில் வீசி எறியப்பட்ட கொடுமை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உயிர் நீத்தார். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் நீத்தான். குறித்த வழக்கில் மூன்று நீதிபதிகள், நீதியரசர் தீபக் மிஸ்ரா, நீதியரசி பானுமதி, நீதியரசர் அசோக்பூசன் கொடியோர் நால்வருக்கும் விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், விதித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தனர். அக்சய் குமார் சிங், வினய் சர்மா, முகேஷ், பவன் நால்வர்தான் இக்கொடுமை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மொத்தம் ஆறு பேர் இக்கொடுமை புரிந்தோர்.

ஒருவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். ஒருவன் வயது காரணமாக சிறார் சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தான். நீதியரசி பானுமதி, அவர்கள் தனது தீர்ப்பில் நிர்பயாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்துள்ளார். நிர்பயாவின் கர்ப்பகிரகமான தாய்மைக்கோவிலில் எத்தகைய கொடுமை நேர்ந்தது என்பதை அவர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்!

என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? ஈழத்து தமிழ்க்குல மகள் இசைப்பிரியாவை 16 சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படி கற்பழித்து நாசம் செய்து கொன்றனர் என்பதை சாட்சியமாகத் தந்த சேனல் 4 தொலைக்காட்சி, செய்தி வாசிப்பவர், சிங்கள ராணுவ மிருகங்கள் எப்படியெல்லாம் தாங்கள் கற்பழித்து நாசம் செய்தோம் என்று கூறியதை இங்கு வாசிக்க இயலவில்லை என்றார்.

நான் சில கொடூரக் காட்சிகளை இணையதள காட்சியாகப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்தேன். நெஞ்சம் நடுநடுங்கியது. ஈழத்தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு நிர்வாணமாய் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கற்பழித்துக் கொல்லப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்களின் சடலத்தின் கர்ப்பகிரத்தில் துப்பாக்கிகளை பேனட் கத்தியால் குரூர வெறியுடன் கெக்கலித்துக் கொண்டே சிங்கள மிருகமான சிப்பாய்கள் செய்த கொடுமையை, நான் காட்ட முயன்றபோது எனது நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்கா கண்களை மூடிக் கொண்டார்.

இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதிகள் அகமதி அவர்கள், இலங்கையில் ஒரு ஆய்வுக்கு சென்றுவிட்டு, “சிங்கள அரசிடம் நீதி இல்லைஎன்று அறிவித்துவிட்டுப் பாதியிலேயே திரும்பினார்.

உலகில் நீதியரசி பானுமதி அவர்கள் போன்ற மனித நேய நீதியரசர்கள் கவனத்துக்கு, ‘ஈழத்தமிழ் இனப்படுகொலையை சரியான சாட்சியங்களுடன் ஆவணங்களுடன் கொண்டு சென்றால் நீதி கிடைக்கும் நீதி சாகாதுஎன்ற உறுதி பிறந்தது உள்ளத்தில்.

கணிப்பொறி இல்லாத காலத்தில், இணையதளம் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தம்பிகளுக்கு தந்தார் அறிஞர் அண்ணா மடல்களாக.

ஈழம் குறித்த நமது இலட்சியம் வெல்வதற்கும், நீதி கிடைப்பதற்கும், தேவையான எண்ணங்களை இளைய தலைமுறையினருக்கு ஊட்ட உலகச் செய்திகள் ஒன்றே பயன்படும் என்று எண்ணித்தான் அதனை மையப்புள்ளியாக வைத்து அகிலத்து செய்திகளை எழுதுகிறேன்.

பிரான்சு நாட்டு அதிபர் தேர்தல் குறித்தும், வடகொரிய அதிபரின் பயங்கரம் பற்றியும், தென்கொரியாவின் புதிய அதிபர் பற்றியும். சைப்ரஸ், துருக்கி பிரச்சனை பற்றியும் அடுத்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக்கொண்டார்.

wஎழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

சங்கொலி, 19.12.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)