சிறை சென்றது ஏன்? -7 தன்னை உணரவும், இலக்கைக் குறிக்கவும் ஏற்ற இடம் சிறைச்சாலை வைகோ கடிதம்

Issues: Human Rights

Region: Tamil Nadu

Category: Articles, Letters, Headlines, Vaiko Answers

Date: 
Sun, 28/05/2017

 

 

 

 

 


சிறை சென்றது ஏன்? -7

தன்னை உணரவும், இலக்கைக் குறிக்கவும் ஏற்ற இடம் சிறைச்சாலை

வைகோ கடிதம்

ம்முறை சிறைவாசம் எனக்குப் பயனுள்ள அனுபவம். மோனமான இரவுகளில், என்னை நானே தன்னாய்வு செய்து கொண்டேன். எனது குறைகள், சறுக்கல்கள், பிழைகளை எண்ணிப் பார்த்தேன். குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. குறைகளை வென்றவர்கள்தான் மாமனிதர்கள். நான் ஒரு எளியவன். ஓரளவு வசதியான நிலபுலன்கள் கொண்ட வீட்டில் செல்லப்பிள்ளையாக, ஆனால் கடுமையான கண்டிப்புகள், கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். படிப்பில், பேச்சுப் போட்டிகளில் எதிலும் முதல் இடம் பெற வேண்டும் என்ற வேட்கை, இயற்கையாக என்னுள் ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என்ற வேட்கை இயற்கையாக என்னுள் ஏற்பட்டது.

என் தந்தையோ, ஆசிரியர்களோ தூண்டாமல், நானாகவே அதில் நாட்டம் கொண்டேன். மின்சாரம் கிடையாது. அரிக்கேன் லாந்தர் விளக்கு வெளிச்சம் தான். இரவு பத்து மணிக்குப் படுக்கப் போகும்போது, காலை 3 மணிக்கு என்னை எழுப்பி விட அம்மாவிடம் குரல் கொடுங்கள் என்பேன். சரியாக 3 மணிக்கு எங்கள் வீட்டுச் சுவர்க்கடிகாரம் மணி அடிக்கவும் அப்பா விழித்துக்கொண்டு குரல் கொடுப்பார். ஒருவேளை அவர் உறங்கவே மாட்டாரோ என்னவோ? அவரும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து திருக்குறள் படிக்கத் தொடங்கி விடுவார். பரிமேலழகர் உரையைத்தான் படித்தார். நான் எழுந்தவுடன் என் அன்னை சூடாகத் தேநீர் கொண்டு வந்து தருவார்.

9 ஆம் வகுப்பு படிக்கும்போது என் வழக்கத்தை மாற்றினேன். மாலை 6.30 மணிக்கே இரவு உணவை அருந்திவிட்டு, ஏழு மணிக்கு உறங்கி விடுவேன். இரவு 11 மணிக்கு எழுப்பிவிடச் சொல்லுவேன். அப்போதும் தேநீர் தயாராக இருக்கும். இரவெல்லாம் படிப்பேன். அதிகாலை ஐந்து மணிக்குத் திரும்பவும் படுத்துக் கொள்வேன். 6.30 மணி வரைதான் அந்தத் துயில் நீடிக்கும். இந்தப் பழக்கம் நான் கல்லூரி, பி.ஏ., எம்.ஏ., பின்பு பி.எல் படிக்கும் வரை தொடர்ந்தது. தேர்வு நேரங்களில் இரவில் உறங்க மாட்டேன்.  விடிவிடியப் படிப்பைத் தொடர்வேன். அப்படியே கல்லூரிக்குப் புறப்பட்டு விடுவேன்.

பள்ளி, கல்லூரியில் முதல் மாணவன். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டப் படிப்பில் தங்க மெடல் பெற்றேன். அப்போது தமிழகம் முழுமைக்கும் ஒரே பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக் கழகம்தான். மதுரைப் பல்கலைக்கழகம் கூடக்கிடையாது. பொருளாதார முதுகலை வகுப்பில், மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றேன். சவேரியார் கல்லூரி கூடைப்பந்தாட்டக் குழுவிலும், மாநிலக் கல்லூரி கைப்பந்தாட்டக் குழுவிலும் இடம் பெற்றேன்.

1964 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், சென்னை பாரிமுனை கோகலே அரங்கில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கருத்து அரங்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில் உரையாற்றி, அவர் பாராட்டைப் பெற்றது பெரும்பேறு. இங்கே என் சுயசரிதையை இதற்கு மேல் நீட்டிக்கத் தேவை இல்லை.

பொதுவாழ்வில் 53 ஆண்டுகள் கடந்து விட்டன. சக மனிதர்களின் துன்பத்தை எண்ணிக் கலங்குவதும், இயன்ற மட்டிலும் அவர் துயர் துடைக்க முனைவதும் எனது இயல்புகள். நான் நேசிப்பவர்கள் மீது கோபத்தைக் கொட்டி விட்டால் அதை எண்ணியே மனம் நொந்து போவேன். அவர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்து, அவர்கள் மனதில் சிறு உறுத்தல் கூட ஏற்படாத வாறு நடந்துகொள்வேன்.

கோபம் பொல்லாதது. திருக்குறளின் அறத்துப்பாலில் துறவறம் என்ற இயலில், 31 ஆவது அதிகாரம் வெகுளாமை. அந்தப் பத்துக் குறட்பாக்களிலும் மணி வாசகமான அறிவுரைகள். முக மலர்ச்சியையும், அக மகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவே வேறு உள்ளனவோ?

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?  - திருக்குறள் 304

ஆனால், அதே திருக்குறளின் அறத்துப் பாலில், பாயிரப் பகுதியில் மூன்றாம் அதிகாரமான நீத்தார் பெருமையில் 29 ஆவது பாடலில், நல்ல பண்புகளாகிய மலையின் மேல் ஏறி நின்ற பெரியோர், ஒருகணப்பொழுதே சினம் கொள்வர்; ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும் என்ற கருத்து சொல்லப் படுகின்றது.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது - திருக்குறள் 29.

கொடுமை கண்டு கொதித்து எழுவது கடமை ஆகும். பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா; மோதி மிதித்துவிடு பாப்பாஎன்கிறார் பாரதியார்.

ஆறுவது சினம்என்கிறது ஆத்திச்சூடி. அநீதியைக் கண்டால் ஆத்திரத்தில் கொதிப்பேன். கடமையை ஒழுங்காகச் செய்யாவிடில், உடன் இருப்போரிடம் கோபத்தைக் கொட்டுவேன். அதிலும் எனக்கு முழுநேர உதவியாக இருக்கும் என் உயிரான சகோதரர்களுக்கு என் குணம் தெரியும். அவர்களிடம்தான் அதிகமாகக் கோபிப்பேன். தாங்கும் பட்டறையாக இருப்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்களிடமே நான் கூறியது தவறான கருத்தாக இருந்தால், அதனை ஒப்புக் கொள்வேன். அதில் ஈகோ, போலி கௌரவம் பார்க்க மாட்டேன்.

யாரிடமாவது கோபத்தைக் கொட்டி விட்டால் பின்னர் அவர்கள் வீடு தேடிச் சென்று, அவர்களே அதிர்ந்து போக அன்பு மொழி பேசி வருவது வாடிக்கையாக நடக்கும். உறக்கம் இன்மை, ஓய்வு இன்றி உழைப்பது, தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் ஏற்படுகின்ற மன அழுத்தம், கோபத்திற்கு ஒரு காரணம் எனக் கூறுகின்றனர்.

இரண்டு அறிவுரைகளை நான் பின்பற்று கிறேன்.

ஒன்று, ‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை.ஒருபோதும் உன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு, கர்வம் கொள்ளாதே.

இரண்டு,

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

சில வேளைகளில், நான் கூறியதைத் திட்டமிட்டே திரித்துக்கூறி, என்னைப் பழித்துக் கடுமையாக நிந்தித்தவர்களும் உண்டு. அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை.

என்னிடம் ஒரு நல்ல குணம்; என் நண்பர்களை, நான் நேசிப்பவர்களை, நமது இயக்கத்தில் உள்ளவர்களை மட்டும் அல்ல, பிறரையும், யாராவது தவறாகச் சொன்னால், உண்மை இல்லாததைக் கூறிப் பழித்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர்களுக்காக வாதாடுவேன்; விட்டுக் கொடுக்க மாட்டேன்.

புறம் கூறி ஒருவர் மீது ஒருவர் கசப்போ, வெறுப்போ ஏற்பட ஒருபோதும் இடம் தர மாட்டேன். ஒருவரைப் பற்றி ஒருவரிடம், அவர்களுக்குள் நல்லெண்ணமும், நேசமும் ஏற்படுத்தவே முயல்வேன்.

மரபு வழியாகவே குணங்கள் அமைவதாகச் சொல்லுகிறார்கள். என் தந்தையின் தாயார் கடும் உழைப்பாளி. ஆனால், ரொம்பக் கோபப்படுவாராம். என் அப்பாவுக்குச் சமயங்களில் கடும் கோபம் வரும். என் தாயின் தந்தையார் என் தாத்தா அமைதியானவர். ஆனால் தாய்மாமன்மார் கோபக்காரர்கள். அதனால்தான் 100 பேருடன் என் தாய்மாமன்மார் ஆயுதங்களுடன் மோதியதில் எதிர்த்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு, என் தாய்மாமனார் அய்யலுசாமி வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் 16 ஆண்டுகள் அடைபட்டு இருந்தார். மண வாழ்க்கை இன்றியே வாழ்ந்து மறைந்தார்.

மரபு வழிக்குணம் என்று நியாயப்படுத்துவதும் தவறாகும். எந்த நிலையிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகள், அக்கிரமத்தால் நெஞ்சம் வெகுண்டாலும், சொற்களைக் கொட்டாமல் இருப்பது நல்லது. இப்படி எல்லாம் யோசிக்க எனக்கு இந்தச் சிறைதான் தனிமையைக் கொடுத்தது. நான் வசதிகளைத் தேடுபவன் அல்ல. சுவை அல்லாத உணவு, காட்டிலும்,  மேட்டிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கும் இயல்பு, கொளுத்தும் நெருப்பு வெயில், வாட்டும் பனி, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் இயங்குவதெல்லாம் எனக்குப் பழகிப் போனவை.

 

இம்முறை சிறைவாசத்தில் 1500 மடல்களைக் கண்மணிகளுக்கு எழுதினேன். கடுங்கோடையில், அனல் காற்றுவீசும் நெருப்பு வெய்யிலில் நான் அடைபட்டுக் கிடப்பதை எண்ணித்தான் தோழர்கள் மே-6, கழகத்தின் 24 ஆம் ஆண்டு விழாவைக் கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி இருக்கின்றார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை வரும் வரையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற பொதுப்பணியைக் கடமை உணர்வோடு செய்தனர். வெயிலின் கொடுமையால் மக்கள் படும் அவதியை எண்ணி, மறுமலர்ச்சி தண்ணீர்ப்பந்தல் அமைத்தனர். சிறைக்கு உள்ளிருந்தே இயக்கத்தை வேகமாக முடுக்கி விட முடியும் என்பதை, 19 மாத கால வேலூர் பொடா சிறைவாசத்தில்  உணர்த்தினேன்.  சங்கொலி கண்ணின் மணிகள் மடலைப் பல மணி நேரம் யோசித்து எழுத முடிகின்றது. புத்தகங்கள் படிக்க, ஆங்கிலம், தமிழ் ஏடுகளில் பயனுள்ள கட்டுரை களை ஆழ்ந்து வாசிக்க நேரம் கிடைக்கின்றது.

எதிரிகளின் அச்சம்

தம்பி நன்மாறன் சொன்னார்: ஒரு ஊடகத்தில் ஒரு செய்தியைப் பார்த்துவிட்டு நமது தோழர்கள் ஆத்திரப்படுகின்றார்கள் என்று. கூர்த்த மதியும் கொள்கை வாழ்வும் கொண்ட ஈழ வாளேந்தி கொதித்துப் போனாராம். வைகோ, அரசியலில் இருந்து விலக முடிவு என்ற செய்திதான் அவர்களைக் காயப்படுத்தி உள்ளது.

அதாவது, பொது வாழ்வில் இருந்து நான் அகற்றப்பட வேண்டும் என்ற வக்கிர புத்திக்காரர்களின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடுதான் இந்தப் புனைவு.

பேரறிஞர் அண்ணா மிக அழகாகச் சொன்னார்: 1967 பொதுத் தேர்தலுக்குச் சிறிது காலத்திற்கு முன்பு ஒருநாள் இரவு பத்து மணிக்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, உங்களுக்குச் செய்தி தெரியுமா? உங்கள் அண்ணாத்துரை தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப்போனாராமே? என்று. அதைக் கேட்டு எப்படி இருந்திருக்கும் நாவலருக்கு?

ஆயினும் ஆட்சிக்கு வந்தபின்பு, அந்த அதிகாரி மீது எந்த வெறுப்பையும் காட்டவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார ஏட்டின் முகப்பு அட்டையில் வைகோ தற்கொலைஎன்று எழுதினார்களே?

அவர்கள் இப்படிப் பதிவு செய்கிறார்கள் என்றால், நம்மைப் பற்றிய கோபமும், திகிலும் அவர்களுக்கு இருக்கின்றது என்பதுதான் பொருள்.

என்ன தோல்வி ஏற்பட்டாலும் இவர்களை ஒன்றும் பாதிக்கவில்லையே? எப்படி வேகமாக இயங்க முடிகின்றது இவர்களால்? என்ற எரிச்சல்தான் காரணம்.

நம் இயக்கம், இலட்சியவாதிகளின் போர்ப் பாசறை. தன்னலம் கருதாத கொள்கையாளர்களின் கூடாரம். சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பாசமலர்த் தோட்டம். பேரறிஞர் அண்ணாவின் கொள்கை, இலட்சியம், தமிழர் மேன்மை, தமிழர் உரிமை, சமதர்மக் கோட்பாடு, ஈழத்தமிழருக்குத் தனி ஈழ விடியல், ஊழல் அற்ற தமிழகம், வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் தாயகம், உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு அரசு நிர்வாகத்தில், கல்வி நிலையங்களில், நீதிமன்றங்களில் உரிய இடம், தமிழ் தேசிய  இனத்தின் தனித் தன்மை காப்பு என இந்த இலக்குகளை அடையப் பாடுபடும் அரசியல் இயக்கம். இவற்றோடு எனது வாழ்வு, எனது பேச்சு மூச்சு என் சிந்தனை செயல் இரண்டறக் கலந்தவை.

சக மனிதனை நேசி; அவன் கண்ணீரைத் துடைக்கப் பாடுபடு; இதுவே என் இதயத் துடிப்பு.

நான் ஓய்வு எடுக்கவில்லை; உலைக் களத்தில் மேலும் என்னைக் கூர்மைப் படுத்திக் கொள்கின்றேன்.

நான் சாதிக்கப் பிறந்தவன் என்று என் உள் மனதில் எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்பவன்.

இதைக்கூட எழுதி இருக்க மாட்டேன். ஆனால், என் கண்மணிகளிடம் மனம் விட்டுச் சொல்வது ஒன்றும் தற்பெருமை ஆகாது. நம் குடும்பத்திற்குள்தானே கூறுகிறேன்?

நமது தலைமை நிர்வாகிகள் சிறையில் என்னைச் சந்தித்தபோது, இரண்டு மணி நேரம் உரையாடினோம்.  கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மனதிற்குத் தெவிட்டாத தேனாக இனித்தது. ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்போம்.

கண்மணிகளே,

அரசியலில் எனக்கு ஓய்வு ஒருபோதும் இல்லை. இந்த உயிர் ஓய்ந்து உடல் மண்ணில் சாயும்வரை, பொதுவாழ்வுதான். நான் போராடப் பிறந்தவன். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தங்கள் நாசியில் சுவாசம் அடங்கும் வரை மக்களுக்காகவே சிந்தித்துச் செயல் பட்டவர்கள்.

தற்காலத்தில் முகநூல், டுவிட்டர், மின்னஞ்சல் பதிவுகள் இவற்றில் இளைய தலைமுறையினர் ஈடுபடுகின்றனர். பலருக்கு அது பிடித்தமான வேலை. சிலருக்குப் பொழுதுபோக்கு, கேலி, கிண்டல், நையாண்டி, மின்னல் வேக மீம்ஸ், இவை எல்லாம் என்னை அதிகமாகச் சாடினால், அவர்கள் கவனத்தை ஈர்த்து இருக்கின்றோம் என்பது பொருள். அவர்களுள் சிலரது தாக்குதல் எல்லை மீறிய தனிப்பட்ட வசைபடலமாக இருந்தாலும், பதிலுக்குப் பதில் என்று அதே கோணத்தில் நீங்கள் செயல்பட வேண்டாம். அவர்களுக்கு நிதானமாக, ஆதாரங்களோடு விளக்கம் தந்து விவாதிப்பதுதான் சரியானது. இந்த அணுகு முறை நல்ல பயன் தருகின்றது என்று தம்பிமார்கள் என்னிடம் கூறினார்கள்.

விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தி வருகின்றேன். ஆனால் அபாண்டமான பொய்ப்பழியைப் பொறுத்துக் கொண்டால், அதனை ஒப்புக் கொண்டதாகி விடுகிறது என்ற நம்மவர்களின் வாதமும் உண்மைதான். சட்டமன்றத் தேர்தலின்போது கொடிய அபாண்டப் பழியை என் மீது ஒரு மனிதர் பதிவாகப் போட்டு, அதனை ஒரு தொலைக்காட்சி செவ்விக்கு வந்தவர் என்னிடம் வினாவாகத் தொடுத்தபோது அதிர்ச்சியுற்ற நான், இதற்கு எந்த பதிலைச் சொன்னாலும், அது தொலைக்காட்சியில் விவாதப் பொருள் ஆகும் என்று கருதித்தான் அமைதியாக என் அறையில் இருந்து வெளியேறினேன். தொலைக்காட்சி நெறிப்படி அந்த நண்பர் அதனை வெளியிட மாட்டார் என்று எண்ணினேன். ஆனால், அது திட்டமிட்ட வேலை என்பது பொழுது புலரும்போதே தெரிந்து விட்டது. அதுவும் கேள்வி கேட்ட தொலைக்காட்சி மட்டும் அல்லாது, வேறு பிரபலமான தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானபோது.

அன்று மாலையில் திருச்சியில் நடை பெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் விளக்கம் தந்தேன்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்பு வேண்டும் என்று பொருட்பாலில் இறை மாட்சி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியது, அரசுப் பொறுப்பில் இருப்போருக்கு மட்டும் அல்லாது, பொது வாழ்வில் இருப்போர் அனைவருக்கும் இன்றியமையாத குணநலன் ஆகும்.

நட்புச் செல்வம்

நான் வாழ்வில் ஈட்டிய செல்வம் என்பது நட்புச் செல்வம்தான். என் இதயம் எனும் நட்பு அரங்கத்திற்குள் வந்தவர்கள் வெளியே செல்ல முடியாது. ஒருவழிப்பாதைதான். திருக்குறளில் நட்பு குறித்துத்தான் அதிகமான குறட்பாக்கள் உள்ளது. நேருக்கு நேர் சந்திக்காமலேயே நேசம் கொண்டனரே கோப்பெருஞ் சோழனும், பிசிராந்தையாரும்! இதற்கு ஈடான செய்தி உலக இலக்கியங்களில் எனக்குத் தெரிய இல்லை.

ஊடக உலகில் என் நெஞ்சம் கவர்ந்தோர் பலர் உள்ளனர், நண்பர்களாக. அதனால்தான் சகோதரன் மை.பா. நாராயணன் அவர்களுடன் தாமிரபரணி ஆற்றில் நாங்கள் நீந்தி நீராடியபோதும், மதுவை எதிர்த்து நெருப்பு வெயில் சேர்ந்து நடந்தபோதும், கார் பயணங்களில் நான் நெடுநேரம் மனம்விட்டுப் பேசும்போதும், எனது கருத்தை அவர் மறுக்கும்போதும், என் உரைகளைத் தொலைவில் இருந்தாவது அவர் கேட்கும்போதும், நட்பு எனும் தென்றல் மனதை வருடும். என்னைப் பாராட்டி அவர் தீட்டிய கட்டுரைகளும் ஒன்றா? இரண்டா?

அதுபோன்ற ஒருவர்தான் தம்பி ப.திருமாவேலன் அவர்களும். அவரது தந்தையார் தமிழ் அறிஞர் படிக்கராமு அவர்களை, அறுபதுகளில் என் ஊர் திருவள்ளுவர் கழகத்தில் உரை நிகழ்த்தச் செய்தேன். திருமாவேலன் அவர்கள் கல்லூரி மாணவராக இருந்த நாட்களில்தான் நான் ஈழம் சென்று திரும்பிய காலம். பெரும்பாலான நாட்கள் என் இல்லத்திற்கு வந்து உரையாடுவார். இன்று சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்து இருக்கின்றார். அவர் எழுதிய பெரியோர்களே, தாய்மார்களேநூல் அதற்குச் சான்று. விருப்பு வெறுப்பு இன்றி, தயவு தாட்சண்யம் இன்றி அவரது எழுதுகோல் பாயும். 2011 சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்பது இல்லை என்ற முடிவினை அதிகாலையில் அறிவித்தவுடன் அவர் எடுத்த செவ்வியும், சாஞ்சிப் பயணத்தில் தம்பி மகா.பிரபாகரன் எடுத்த படங்களுடன் அந்த சாஞ்சிப் பரணியை மக்களுக்குத் தெரிவிக்க உதவியதும், அப்படி எத்தனையெத்தனை செவ்விகள்? மை.பா.வும், திருமாவும், 2005 ஆம் ஆண்டு திண்டுக்கல் தி.மு.க. மாநாட்டில் என் உரையை, தி.மு.க. மாநாட்டைத் திருடிய வைகோ எனத் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படச் செய்தியாக ஆக்கியதும், மறக்கக்கூடியவையா?

2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் மேற் கொண்ட அணுகுமுறை, எடுத்த முடிவுகள் சரியாகப்பட்டாலும்,  நம்மவர்களிலேயே பலருக்கு மனவருத்தம் ஏற்பட்டது. என் நலம் விரும்பிகள் பலர் பலத்த அதிர்ச்சிக்கு ஆட்பட்டுக் கடுமையாக என்னிடம் பேசினார்கள். அதே உணர்வில் தான் தம்பி திருமாவேலன் ஆனந்த விகடன் அட்டைப் படத் தலைப்புச் செய்தியாக்கி விமர்சித்தார். அதற்கு நானும் எனது உயிரான சகாக்களும் ஆத்திரம் அடைந்தோம். நான் ஆற அமர யோசித்தேன். அவரிடத்தில் நான் இருந்திருந்தால், நானும் கடுமையாகத்தான் நிந்திந்திருப்பேன். நான் எந்த நண்பனையும் என் அன்பு வளையத்தில் இருந்து விலகச் சம்மதிக்க மாட்டேன். இம்முறை, புழல் மத்தியச் சிறையில் இருந்து நான் ஜூனியர் விகடன் இதழுக்காக திருமாவேலன் வழக்கறிஞர் நன்மாறன் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை, வரி பிறழாமல் வெளியிட்டு இருந்தார். சங்கொலி 12.05.2017 தேதியிட்ட இதழில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

புழல் சிறையில் இருந்து கண்ணின் மணிகளுக்கு நான் எழுதுகின்ற ஏழாவது மடல் இது. எனது 18 ஆம் எண் கொட்டடி இருக்கும் தொகுப்பு ’ (A). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 15 பேர் உணவு வேளைகள் தவிர மற்ற நேரம் முழுமையும் இக்கொட்டடியிலேயே இருப்பார்கள். அமைதியாகவே இருக்கின்றார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு நேர்காணல்கள் காண பெற்றோர், உற்றார் உறவினர்கள் எவருமே வருவது இல்லை. நல்ல உடைகளும் இல்லை. என்னைச் சந்திக்க வருபவர்கள் தருகின்ற பழங்கள், ரொட்டிகள், பிஸ்கெட்டுகள் அனைத்தையும் ஒருநாளைக்கு இருமுறையாவது தம்பி அமிர்தராஜ் மூலம் கொடுத்து விடுவேன். அதுபோன்ற இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற சிறைவாசிகளுக்கும் கொடுத்து விடுவேன்.

சிறை மருத்துவமனையில் பெரும்பாலும் அறுபது பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்கும் பழங்கள் பொருட்களைத் தந்து விடுவேன். சிறைவாசிகளிடம் அன்பாகப் பழகுவேன். மொத்த சிறைச்சாலையும் நான் தங்குகின்ற வீடாகவே நினைத்து அனைவரிடமும் பழகுகின்றேன். சிறை அதிகாரிகளும், வார்டர்களும் என்னிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொள்கின்றனர்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி; உணர்ந்து பார்த்து நிம்மதி நாடு என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளை அடிக்கடி மனதில் அசைபோடுவேன். அதனால்தான் நமது சட்டத்துறைச் செயலாளர் சகோதரர் தேவதாஸ் அவர்கள், ‘வைகோவுக்கு மிகவும் பிடித்தமான இடம் சிறைச்சாலைஎன்று கூறுவார். கழக அவைத்தலைவர் அவர்கள் இரு முறை என்னைச் சிறையில் சந்தித்துப் பேசினார்கள். தலைமை நிர்வாகிகள் ஒருமுறை நீண்ட நேரம் உரையாடியதை ஏற்கனவே கூறியுள்ளேன். மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னணியினர் அனைவரின் விருப்பத்தையும், தனது எண்ணத்தையும் அவைத்தலைவர் அவர்கள் என்னிடம் விளக்கினார்கள். அதை நான் எப்படிப் புறக்கணிக்க முடியும்?

வேலூர் மத்தியச் சிறையில் இருந்து சங்கொலியில் கண்ணின்மணிகளுக்கு எழுதிய கடிதங்களை, சிறையில் விரிந்த மடல்கள் என்ற தலைப்பில் நூலாக ஆக்கினோம். ஆங்கிலத்தில் From the Portals of a Prison என்ற தலைப்பில் வெளிவந்தது. அதற்குத் தம்பி அருணகிரிநாதனும், பேராசிரியர் அண்ணன் முனுசாமி அவர்களும் எடுத்துக்கொண்ட சிரமங்கள் மிக அதிகம்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துப் படைப்புகள், தம்பிக்குக் கடிதங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள், நாடாளுமன்ற மாநிலங்கள் அவை சட்டமன்ற உரைகள், பொதுக்கூட்ட உரைகளை முழுமையாகப் படித்து, ஒளி மலர... இருள் அகல.. எனும் தலைப்பில் ஏழு வாரங்கள், சங்கொலியில் கடிதங்களாகத் தந்தது, இந்த ஏழாவது கடிதத்தை எழுதும்போது நினைவுக்கு வருகின்றது.

குல்பூசண் ஜாதவ் வழக்கு

கடந்த சில நாட்களாக ஏடுகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் மிக முக்கிய இடம் பெற்ற செய்தி, இந்தியக் கடற் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி குல்பூசண் ஜாதவ். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உளவாளியாக வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்குப் பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் 2017 ஏப்ரல் பத்தாம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கு மர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள செய்திதான். இந்தியக் கடற்படை அதிகாரியான ஜாதவ், இந்திய உளவு அமைப்பான RAW ரா அமைப்புக்காக வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டியது பாகிஸ் தான் அரசு. ஜாதவ் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், ஈரான் நாட்டில் வணிகப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் அவரைக் கைது செய்து பாகிஸ்தானுக்குக் கடத்தியதாகச் சொல்லப்படுகின்றது.

அனைத்துலக நாடுகளின் நீதிமன்றம் (International Court of Justice-ICJ) நெதர்லாந்து நாட்டில் ஹேக் (Hague) நகரில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் இயங்கும் கட்டடம், அமைதி மாளிகை (Peace Palace) என்று அழைக்கப்படு கின்றது.

இந்தியாவின் குல்பூசண் ஜாதவுக்கு, ‘ஹூசேன் முபாரக் படேல்என்ற பெயரில் போலியான பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருந்ததாகப் பாகிஸ்தான் கூறுகின்றது. இந்திய அரசு இந்த மரண தண்டனையைத் தடுக்க, தூதரக வழிகளில் பாகிஸ்தானோடு தொடர்பு கொண்டபோது, மரண தண்டனையை நிறைவேற்றியே தீர்வோம் எனக் கூறி விட்டது. இதனால் பதட்டம், பரபரப்பு. எனவே, இந்திய அரசு முறையாக சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்திய அரசின் தரப்பில் வெளிவிவகார அமைச்சக இணைச் செயலாளர் முனைவர் தீபக் மிட்டலும், சிறந்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயும் (எனது நண்பரும், காங்கிரஸ் மத்திய அமைச்சருமான மறைந்த என்.கே.பி. சால்வே அவர்களின் மகன்), ஹேக் நீதிமன்றத்தில் பங்கேற்றனர்.

வியன்னாவில் உலக நாடுகள் புகுத்திய நெறிமுறை விதிகளின்படி பிரிவு 36 விதியின்படி இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படும்போது, தூதரகத் தொடர்புகள் மூலம் தீர்வு காண முயல வேண்டும் என்ற உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையொப்பம் இட்டிருந்ததும், ‘உளவாளிகள் இந்த விதிக்கு உட்பட மாட்டார்கள்என்ற வாதத்தை பாகிஸ்தான் முன்வைத்ததை சர்வதேச நீதிமன்றம் ஏற்கவில்லை.

மே 9 ஆம் தேதியன்று தங்கள் நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும்வரை, மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, இடைக்கால ஆணை பிறப்பித்தது. பின்னர் இருதரப்பு விவாதங்களைக் கேட்ட பின்னர், மே 18 ஆம் நாளன்று சர்வதேச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரோன்னி ஆபிரகாம், ‘இந்தப் பிரச்சினையில் இறுதித் தீர்ப்பு வழங்கும்வரை,  ஜாதவ் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாதுஎனத் தீர்ப்பு அளித்தார்.

குல்பூசண் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பாகிஸ்தான் அரசு எடுத்த எடுப்பிலேயே நிராகரித்தது. ஜாதவுக்கு எதிரான ஆதாரங்களையும், ஆவணங்களையும் தர மறுத்தும் விட்டது. இந்திய அரசு தரப்பில் சட்ட உதவிகள் தரவும் அனுமதிக்கவில்லை.

தற்போது, மே 18 ஆம் தேதி தீர்ப்புக் குறித்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி கக்கேடோ டிரின்டேட் (Caccado Trinoade) இதுபற்றிக் குறிப்பிடுகையில், சர்வதேசச் சட்டத்தை மனித நேயமாக்கும் இலக்குக்கான நகர்வு எனச் சொல்லி உள்ளார்.

இந்தப் பின்னணியில் பாகிஸ்தான் அரசு மீது ஐக்கிய நாடுகள் மன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது. மே இரண்டாவது வாரத்தில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. மன்றக் குழு, ‘பாகிஸ்தான் அரசு தனது இராணுவ நீதிமன்றங்களின் மூலம் பயங்கரவாதத் தடுப்பு என்ற போர்வையில் மனித உரிமைகளைப் புதைக்கின்றது; நீதிக்கே இடம் இல்லைஎன்று பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இத்தனைக்குப் பிறகும், பாகிஸ்தான் அரசு தனது அக்கிரமப் போக்கைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. சர்வதேச நீதி மன்றத்திற்கு இதில் அதிகாரம் இல்லை என்ற கருத்தை ஏடுகளில் உலவ விட்டுள்ளது. ஜாதவைத் தூக்கில் இட மாட்டோம் என்று எந்த வாக்குறுதியையும் அந்த நீதிமன்றத்தில் தரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் முகம்மது ஆசிப், ‘இது எங்கள் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை; சமரசத்திற்கு இடம் இல்லை; தண்டனை தண்டனை தான்என்று, தீர்ப்புக்கு மறுநாள் தொலைக்காட்சி களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

ஹேக் சர்வதேச நீதிமன்றம் தருகின்ற தீர்ப்பினை, ,நா, செயல்படுத்துவதற்காக அதிகாரம் தரப்படவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை (Security council)க்குத்தான் செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனினும், இத்தகைய தீர்ப்புகள் தார்மீக அடிப்படையில் கட்டுப்படுத்தும் என்பதும், மீறினால் உலக நாடுகளின் கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என்பதால், ஆகஸ்டு திங்களில் இறுதி விசாரணைக்கு முன் பாகிஸ்தான் ஜாதவ் உயிரைப் பறிக்கும் கொடுமையில் ஈடுபடாது என்றே கருத வேண்டியுள்ளது.

அமெரிக்க அரசியல் குழப்பம்

அமெரிக்க அரசியலில் ஒரு அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று அதிபரான டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக, அவர் வெற்றி பெறும் வகையில் ரஷ்ய அரசு செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு தேர்தல் நேரத்திலேயே எழுந்தது. அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், அமெரிக்காவின் தலையாய புலனாய்வுக் காவல் நிறுவனமான எப்பிஐ (Federal Bureau of Investigation) அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கோமியை நேரில் அழைத்து, ருஷ்ய விவகார விசாரணையைக் கைவிடுமாறு கூறியதாகவும், முகத்துக்கு நேராகவே ஜேம்ஸ் கோமி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பதவி ஏற்ற நூறு நாட்களுக்கு உள்ளாகவே அதிரடி அறிவிப்புகளுக்கும், சொன்னதை மறந்து எதிராகச் சொல்லும் குட்டிக் கரணங்களுக்கும் நாயகராகி விட்ட ட்ரம்ப் FBI இயக்குநர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் கோமியை நீக்கினார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் எடுத்துள்ளது. அமெரிக்காவின் நீதித் துறை, எப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லரை, ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்கும், ருஷ்ய அதிபருக்கும் இடையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தொடர்புகள் குறித்து, விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து விட்டது. அதற்குப் பின்னர் தான் வெள்ளை மாளிகை அதிபர் ட்ரம்புக்கே தெரிய வந்ததாம். மனிதர் ரொம்பவே ஆடிப்போனதாகச் சொல்லு கிறார்கள்.

அமெரிக்காவின் செனட் சபை அமைத்து உள்ள செனட் புலன் விசாரணைக் குழுவுக்கு, வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிச்சர்டு பர் தலைமை ஏற்றுள்ளார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ருஷ்யத் தலையீடு இருந்ததா என்பது குறித்து எப்பிஐ ஆணையராக இருந்த ஜேம்ஸ் கோமி, சாட்சியம் அளிக்கஉள்ளார். அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யத் தரப்பினரிடம், இப்பிரச்சினையில் தன்மீது அழுத்துகின்ற பாரத்தில் இருந்து விடுபடவே ஜேம்ஸ் கோமியை நீக்கியதாகக் கூறிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

தேர்தல் பிரச்சார காலத்தில் ரஷ்யர்களுடன் ரகசிய தொடர்பு கொண்டு இருந்ததற்கு ஆதாரமாக தற்போது வெள்ளை மாளிகையில் அதிகாரியாகி விட்ட அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னர் என்று தெரிய வந்துள்ளதாம். அதிபர் பொறுப்பு ஏற்றவுடன் ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்த மைக்கேல் பிளின்னைப் பற்றி, அதிபர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே பாரக் ஒபாமா அவர்கள் எச்சரித்ததாகவும், ரஷ்யர்களுடன் கொண்டு இருந்தவர் பிளின் என்று கூறியதையும் பொருட்படுத்தாது நியமித்தார். பிரச்சினை வெடித்தபின் மைக்கேல் பிளின் நீக்கப்பட்டார்.

அமெரிக்காவில் பரபரப்பாகச் சுழலும மீம்ஸ், சவூதி அரேபியாவில் இருந்து திரும்பி வரும்போது ட்ரம்ப் குடியரசுத் தலைவராக வருவாரா? அல்லது ராஜினாமா செய்து விடுவாரா? தலைக் குற்றச்சாட்டு எப்போதும் வரலாம் என்று பரபரப்பாகின்றன. நிக்சன் திரும்பி வந்து விட்டார்என வலைதளங்களில் மற்றொரு பரபரப்புச் செய்தி. வாட்டர்கேட் ஊழல் வெடித்தபோது. திசை திருப்ப நிக்சன் மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்றார், திரும்பினார், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். வாட்டர்கேட் ஊழலை வெளிக்கொண்டு வந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் இருவருள் ஒருவரான கார்ல் பெர்ன்ஸ் டைன். வாட்டர்கேட் ஊழலை விட, ட்ரம்ப்-ரஷ்யா உறவு ஆபத்தானது என்று தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

2016 ஏப்ரல் மாதத்திற்கும், நவம்பர் மாதத்திற்கும் இடையில், ட்ரம்ப் பிரச்சாரத் தரப்பினரும், ருஷ்யத் தூதரகமும் 18 முறை தொலைபேசியிலும் மின்அஞ்சல்களிலும் தொடர்புகொண்டு உரையாடி உள்ளனர் என்ற உண்மையும், குறிப்பாக மைக்கேல் பிளின்னும், ரஷ்யத் தூதர் கிஸ்ல்வாக் நான்குமுறை சந்தித்தனர் என்றும், தேர்தல் முடிவு வந்தபின் நவம்பர் 8 ஆம் தேதி இனி ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின், இருவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் வராமலே தொடர்பு கொள்வதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்ட உண்மையும் வெளிவந்து விட்டன.

அதிரடி மன்னன் ட்ரம்ப், அதிரடியாகவே பதவி இழக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டுப் போரில், பிரிந்து போவதற்காகப் போர் தொடுத்த தென் மாநிலங்களின் தலைமைத் தளபதி இராபர்ட் லீயின் சிலையை, கிரேன்களைக் கொண்டு அப்புறப்படுத்தி உள்ளனர். கெட்டிஸ்பர்க் போர் நடைபெற்ற களங்களை நான் நேரில் பார்த்தேன். அங்கே இராபர்ட் லீயின் சிலைதான் மிகுந்த உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. அமெரிக்க ஒன்றியத்தின் சார்பில் போரிட்ட தளபதி மீட் சிலை, மிகச் சிறியது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் தரைத்தளத்தில் 100 சிலைகள் உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு சிலைகள். வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தவர் இராபர்ட் லீ. அவரது சிலையை அங்கு நிறுவுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அவ்வளவுதான். வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜ் வாஷிங்டன் சிலையையும் நாங்கள் எடுத்துக் கொண்டு போய்விடுவோம் என்று வர்ஜீனியா மிரட்டல் விடுத்தது. வேறு வழி இன்றி, இராபர்ட் லீயின் சிலையும் அங்கே இடம் பெற்றுள்ளது.

வாட்டர்கேட் ஊழலும், நிக்சன் விலகலும்

1961 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜான் கென்னடியிடம் தோற்றுப்போன குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்சன், பின்னர் 1969 தேர்தலில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1972 தேர்தலில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார். (20 January 1969 – 9 August 1974) செஞ்சீனத்துக்கு நேரில் சென்ற அமெரிக்க அதிபர் என்ற பெயரும் பெற்றார்.

ஆனால் வாட்டர்கேட் என்ற இடத்தில் இயங்கி வந்த, ஜனநாயக தேசியக் குழு (Democratic National Committee (DNC) அலுவலகத்தில் நடைபெற்ற உரையாடல்களை, தொலைபேசித் தொடர்புகளை ரகசியமாகப் பதிவு செய்து நிக்சன் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினையில், வெள்ளை மாளிகையின் தொடர்புகளை அம்பலப் படுத்தியவர்கள் கார்ல் பெர்ன்ஸ்டைன், பாப் உட்வேர்டு ஆகிய, வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுடின் இரண்டு செய்தியாளர்கள்தாம். (The White House’s involvement was unearthed through a combination of government investigations into the break-in and investigative reporting by the Washington Post’s Carl Bernstein and Bob Woodward.) (இந்த இரு எழுத்தாளர்கள்தான் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at Midnight) நூல் எழுதியவர்கள்.)

இதன் விளைவாக, அமெரிக்க நாடாளு மன்றத்தில் நிக்சன் மீது தலைக்குற்றச் சாட்டு (Impeachment) எழுப்பப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு முன்பாகவே, 1974 ஆகஸ்ட் 9 ஆம் நாள் அவர் தாமாகவே பதவி விலகினார். அப்போது அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.  நாட்டு நலன் கருதித் தாம் பதவி விலகுவதாகவும், புதிய அதிபர் ஜெரால்டு போர்டுக்கு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். புதிய அதிபர் ஜெரால்டு போர்டு, நிக்சனுக்கு மன்னிப்பு அளித்தார்.

உள்நாட்டுக்கு உள்ளேயே, தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் பேச்சை ஒட்டுக் கேட்டதற்கே அமெரிக்க அதிபர் பதவி இழந்தார். அவரது குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரை ஆதரிக்கவில்லை. எனவே, டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ருஷ்யத் தொடர்புகள் உறுதி செய்யப்படுமானால், நிக்சனுக்கு ஏற்பட்ட அதே கதி ட்ரம்புக்கும் ஏற்படலாம். தனது பதவிக்காலத்தை ட்ரம்ப் முழுக்காலமும் தக்க வைப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.

நாகர்கள் கிளர்ச்சி

நாகர்கள் கிளர்ச்சி குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்குக் கடிதங்களில் குறிப்பிட்டதைக் கடந்த கடிதத்தில் கூறினேன் அல்லவா? எத்தகைய தொலை நோக்குப் பார்வை அண்ணாவிடம்!

1955 நவம்பர் 13 ஆம் நாளிட்ட திராவிட நாடு இதழில், தனது 26 ஆவது கடிதத்தில் குன்றெல்லாம் கேட்கிறது நாக நாட்டு விடுதலைக்குரல் என்ற தலைப்பில் பின் வருமாறு எழுதி உள்ளார்:

நாகநாடு - விடுதலைக் கிளர்ச்சித் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும் இடம். குற்றேவல் புரிந்து கிடந்திடும் வர்க்கம் அல்ல நாங்கள். நத்திப் பிழைத்திட மாட்டோம். கோடி கொட்டிக் கொடுத்தாலும் மாற்றானிடம் மண்டியிட மாட்டோம், தனி அரசு வேண்டும் என்று கூறிடும் வீரர்கள், அசாம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டுக் கிடக்கும் குன்றுகள் சூழ்ந்த நாக நாட்டிலே உள்ளனர். அவர்களின் விடுதலைக் கிளர்ச்சி நாளும் வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. பதவிக்குப் பல் இளிக்கும் போக்கும், அடக்கு முறைக்கு அஞ்சிடும் தன்மையும், மலைக்காற்றினை உண்டு வளம் பெற்றுத் திகழும் அந்த மக்களிடம் எழ முடியாது அல்லவா? தங்கத்தால் செய்த கூண்டு எனினும், தத்தை சிறையை விரும்புவது இல்லையே? இரும்பை ஒடித்திடும் ஆற்றல் இல்லை என்பதையும் அறியாமல் சிறகடித்த வண்ணமல்லவா இருக்கின்றது?

நாகநாடு நாகர்களுக்கே என்கிறார்கள். தில்லியோ புன்னகை காட்டுகிறது. பொன்னை வீசுகிறது. நாக நாடு ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றது. நாகர்களின் தலைவன் பிசோ மீது டில்லி வகை வகையான கணைகளை வீசிப் பார்த்தது. பாராளுமன்றத்தின் பளபளப்பு, இராஜ பவனச் சிறப்பு, பதவிப்பசை எதனாலும் இந்த மாவீரனை மயக்க முடியவில்லை. வெளிநாட்டினரின் கையாள்என்று பழி சுமத்தினர்.  வெற்றுரை என்று கூறி எள்ளி நகையாடினர் நாகர்கள்.

பிசோ, நாகர்களை மலைச்சாரல்கள், அடர்ந்த காடுகளில், சிற்றூர்களில் திரட்டினான். தாயக விடுதலை ஆர்வத்தை ஊட்டினான். பிரிட்டிசாரின் பிரித்தாளும் திட்டத்தைக் கையாண்டு, நாகர் தேசியக் கழகம் எனப்படும் பாசறையில் பிளவு ஏற்படுத்தி, அதன் பயனாக விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கலாம் என்று முனைந்தது டில்லி. பத்துத் தலைவர்கள் கிடைத்தனர் என்று துள்ளியது. அவர்களைத் துரோகிகள், தூர்த்தர்கள் என நாகர்கள் பழித்தனர்.

அண்ணாவின் படப்பிடிப்பைப் பார்த் தோம்.

மீண்டும் 1960 ஜூலை 10 ஆம் நாளில் 104 ஆவது கடிதத்தில், அண்ணா அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

பிசோ உயிரோடு; அல்லது பிணமாகக் கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் பரிசு தரப்படும்இந்தியத் துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகின்றது.

நாகர் தனி இனம்-நாகர்களுக்குத் தனி மொழி - நாகர்களுக்குத் தனிக் கலாச்சாரம்; ஆகவே, நாகநாடு தனி அரசாக வேண்டும என்பது நாகர்களின் விடுதலைக்கீதம்.

இந்தியப் பட்டாளம் பாய்ந்தது. மலை அரண்களைத் தூளாக்கிற்று. விமானங்கள் குண்டு வீசின. அடர்ந்த காடுகளில் இருந்து நாகர்கள் அறைகூவல் விடுத்தனர்”.

அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைத்தான் இன்று நாகர்கள் முன்வைத்துள்ளனர் இந்திய அரசுக்கு.

37 ஆண்டுகளாக நாகர்கள் தூக்கிய ஆயுதத்தைக் கீழே போடவில்லை. 20 ஆண்டுகள் பேச்சுவார்த்தை.

1975 இல் ஷில்லாங்கில் இந்திய அரசுடன் ஓர் ஒப்பந்தம். 1980 இல் உருவானது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இயக்கம். 1988 இல் இது பிளவுபட்டு, பெரும்பான்மை இயக்கமாக ஐசக் முய்வா தலைமையில் NSCN-IM எழுந்தது. 1977 இல் அந்த அமைப்புக்கும், இந்திய அரசுக்கும் சூரிச்சில் போர் நிறுத்த ஒப்பந்தம். 

பின்பு நடப்பதுதான் அதிசயம்; ஆனால் உண்மை. 2015 ஆகஸ்டில், இந்திய அரசு NSCN-IM உடன் வரைவு ஒப்பந்தம் செய்து கொண்டது. (Framework Agreement). ஒப்பந்தம்.

இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கப் பேசினான். இவன் தேசத் துரோகி. விட்டு வைப்பதா இவனை? என்று 2009 இல் அன்றைய தி.மு.க. அரசு என் மீது பதிவு செய்த வழக்கில், ஓராண்டு கழித்து தேசத் துரோகக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. அறிஞர் அண்ணா அவர்கள் கல்லறைக்கு உள்ளே இருந்து வாழ்த்துவார்கள்; அறிவாசான் தந்தை பெரியாரும் தட்டிக் கொடுப்பார்கள், சரியான வேலை செய்தாயடாஎன்று.

ஆனால் இந்திய அரசாங்கமே, நாகர்களுடன் இறையாண்மையைப் பங்கு வைக்கப் போகின்றது. இதுவரை உலகில் எங்கும் கேள்விப்படாத ஒன்று. பாகப் பிரிவினையே செய்யப் போகிறதாம் இறையாண்மையை.

நாகர்கள் தனித் தேசிய இனம். தனிக் கலாச்சாரம். இந்தியாவுடன் உடன் படிக்கைஎன்கிறார் ஐசக் முய்வா.

70 ஆண்டுகளாக, நாகர்கள் இறையாண்மை என்றுதானே முன்வைத் தார்கள்? தற்போது அந்த இயக்கம் 5000 இளம் தொண்டர்களைத் தேர்வு செய்து உள்ளது. ஒப்பந்தம் ஆன பின்னர், இவர்கள் மத்திய ஆயுதப் போலீஸ் பிரிவில் இடம் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

2017 மே 9 ஆம் நாள் NSCN-IM  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாகர்கள் பங்கிடப்பட்ட இறையாண்மையுடன் இந்தியாவுடன் சக வாழ்வு மேற்கொள்வார்கள். நாகாலாந்தில் ஒரு சிறிய பகுதியைத்தான் பிரித்தானியர்கள் போரில் கைப்பற்றினார்கள். இந்தியா, நாகாலாந்து மீது படையெடுத்துத் தற்காலிக எல்லைகளை வரையறுத்து, நாகர்கள் ஒப்புதல் இல்லாமல் பிரிவினை செய்தார்கள். இந்தியாவில் இருந்து கலாச்சாரம் மற்றும் இன அடிப்படையில் நாகர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது. நடப்பது எல்லாம் நன்மைக்கேஎன்று நான் கருதுகிறேன்.

நாடாளுமன்ற விவாதங்களின்போது, நான் இந்தியத் துணைக்கண்டம் பல தேசிய இனங்களின் கூட்டு அமைப்பான நாடு என்று பேசியதற்குப் பல தரப்புகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்தபோதும், நான் கூறிய கருத்துகளையே ஆணித்தரமாக உறுதிப் படுத்தினேன். ஆம்; இந்தியா என்பது, பிரித்தானியர் வருகைக்கு முன்னர் ஒரு பூகோளப் பெயர்தான். ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பம் என்பதைப் போல, ஸ்காண்டிநேவிய நாடுகள் என்பதைப் போலப் பல அரசுகளின் சங்கமம் ஆக இருந்ததால், அரசியல் ஒருங்கிணைத்த நாட்டின் பெயர் அல்ல. இந்தியத் தீபகற்பம் என்பது ஒரு பூகோளப் பெயர் தான்.

யூனியன் ஜாக் கொடிதான், இந்தியாவை அறிமுகப்படுத்தியது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளில் இருந்துதான், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ள மூவண்ணக் கொடி இந்தியாவின் அடையாளம் ஆயிற்று.

சைப்ரசும், துருக்கியும் காட்டும் வழி

இந்தியத் திருநாட்டுக்கு அண்மையில் இரண்டு நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தந்து சிறப்பித்தனர். ஒருவர் சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் அனஸ்டாசயடேஸ்; மற்றொருவர் துருக்கி அதிபர் ரிசப் தயிப் எர்டோகன். இருவரும் அரசு மரியாதையை ஏற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில், நமது பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினர்.

என்னப்பா, திடீரென்று துருக்கிக்கும், சைப்ரசுக்கும் புறப்பட்டு விட்டாய்? சுற்றுலாதானா? என்று கேட்டு விடாதீர்கள். நமது இலக்கு, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம். அதனை மனதில் கொண்டுதான் சைப்ரசுக்கு உங்களை அழைக்கின்றேன்.

சைப்ரஸ் பழமையான தீவு. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவு ஆகும். இதற்கு வடக்கே துருக்கி, கிழக்கே சிரியா, லெபனான்; தென்கிழக்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம்; தெற்கில் எகிப்து; வடகிழக்கில் கிரேக்கம் என இவற்றுக்கு மையமான பகுதியில் அமைந்துள்ளது சைப்ரஸ்.

கிறிஸ்துநாதர் பிறப்பதற்கு முன், பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதி சைப்ரஸ். உலகத்தின் மிகப் பழமையான கிணறுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர் இந்தத் தீவை ஆண்டனர். அசிரியப் பேரரசு, எகிப்தியப் பேரரசு, பாரசீகப் பேரரசுகள் அடுத்தடுத்து இந்தத் தீவைக் கைப்பற்றின. பாரசீகர்களின் பிடியில் இருந்து கி.மு. 333 ஆம் ஆண்டில், மகா அலெக்சாண்டர் கைப்பற்றினார். அவருக்குப் பின் எகிப்தின் தாலமி ஆட்சி, புனித ரோமானியப் பேரரசு, பின்னர் கிழக்கு ரோமப் பேரரசு, அதன்பின்னர் அராபிய கலிபாக்கள் ஆட்சி,  பின்னர் பிரெஞ்சுக்காரர்கள், வெனீசியர்கள், 16 ஆம் நூற்றாண்டில் 1570 இல், உதுமானியப் பேரரசின் 60000 துருப்புகள் கொண்ட இராணுவம் சைப்ரசைத் தாக்கி, எண்ணற்ற கிரேக்கர்களையும் அர்மீனியர்களையும் கொன்று குவித்து, சைப்ரசைக் கைப்பற்றிக் கொண்டது.

1571-1878 ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள், உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தில் சைப்ரஸ் இடம் பெற்று உள்ளது. 1878 இல் ஏற்பட்ட சைப்ரஸ் ஒப்பந்தப்படி, பிரித்தானியப் பேரரசில் இடம்பெற்று, 1914 இல் முழுமையாகப் பிரிட்டனின் காலனி நாடாயிற்று.

சைப்ரஸ் மக்கள் தொகையில் 18 விழுக்காட்டினர் துருக்கியர்கள். வடக்கு சைப்ரசை, துருக்கி நாடாக ஆக்கிவிட, அங்கு வசிக்கின்ற துருக்கியர்களும், துருக்கி நாடும், 1950 இல் இருந்து முயல்கின்றன. துருக்கி நாட்டுடன் இணைப்பதற்கே தொடக்கத்தில் திட்ட மிட்டனர். ஆனால், சைப்ரஸ் கிரேக்கர்கள் பெரும்பான்மை என்பதாலும், பழமைவாத கிறித்துவத் தேவாலயத்தின் நோக்கத்தாலும், கிரேக்கத்துடன் இணைக்கும் நோக்கம் கிரீசுக்கும் இருந்தது. சைப்ரஸ் 1960 விடுதலை பெற்றது. 1963 இல் சைப்ரஸ் கிரேக்கர்களுக்கும், சைப்ரஸ் துருக்கியர்களுக்கும் இடையே தொடங்கிய மோதல் 11 ஆண்டுகள் நீடித்தது.

1974 ஜூலை 15 இல் சைப்ரஸ் தேசியக் கிரேக்கர்களும், கிரேக்க இராணுவத்தின் ஒரு பகுதியினரும் சேர்ந்து கலகம் செய்தனர், சைப்ரசைக் கிரேக்கத்துடன் இணைக்க. இதன் எதிர் விளைவாக, துருக்கியப் படைகள் போரிட, வடக்கு சைப்ரஸ் பிரதேசம், துருக்கிய சைப்ரசாக உருவெடுத்தது. 1,50,000 கிரேக்கர்களும், 50,000 சைப்ரஸ் துருக்கியர்களும் இடம் பெயர நேர்ந்தது. 1983 இல் துருக்கிய சைப்ரஸ்தனி நாடு என தனக்குத்தானே பிரகடனம் செய்தது. அதை, துருக்கியைத் தவிர வேறு எந்த நாடும் இன்று வரையிலும் அதனை அங்கீகரிக்கவில்லை.

சைப்ரஸ் குடியரசு அந்தத் தீவின் இறையாண்மை உள்ள நாடாக மலர்ந்தது. இத்தீவின் தெற்கிலும் மேற்கிலும், தீவின் 59 விழுக்காடு பகுதியில், குடியரசின் நேரடி ஆட்சி. வடக்கு சைப்ரசில் துருக்கியின் குடியரசு 36 விழுக்காடு நிலத்தைக் கொண்டது. 4 விழுக்காடு நிலம், மோதல் இல்லாப் பரப்பாக ஐ.நா.வின் கண்காணிப்பில் இருக்கின்றது.

சைப்ரஸ் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டது. வடக்கில் சட்டவிரோதமாக துருக்கி அரசு; சைப்ரஸ் குடியரசு, காமன் வெல்த் அமைப்பிலும், பின்னர் அணி சேரா நாடுகள் அமைப்பிலும் இடம் பெற்று உள்ளது. 2004 மே 1 ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆயிற்று.

 

சைப்ரஸ் பிரச்சினையின்போது, இந்தியப் பிரதமர் பண்டித நேரு அவர்கள் சைப்ரஸ் குடியரசையே ஆதரித்தார்.

1974 ஜூலை 15 ல் கிரேக்க இராணுவம், சைப்ரசில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, அதிபர்  மகாரியஸ் பாதிரியாரை நீக்கியது. ஐந்து நாட்கள் கழித்து, 1974 ஜூலை 20 இல் துருக்கிய இராணுவம் சைப்ரஸ் தீவு மீது படையெடுத்தது. உலக நாடுகளின் தலையீட்டால் போர்நிறுத்தம் ஏற்பட்டது.

ஆர்ச் பிஷப் மகாரியஸ், 1974 டிசம்பரில் நாடு திரும்பினார். சைப்ரசை, 1983 இல் துருக்கிய சைப்ரஸ் குடியரசு, சுதந்திர நாடாக மீண்டும் எழுந்தது. தனிநாடாக அறவிக்கப்பட்டு, துருக்கி தவிர, வேறு எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதை ஏற்கனவே கூறி உள்ளேன்.

2008 ஆம் ஆண்டில், சைப்ரஸ் குடியரசின் அதிபராக கம்யூனிஸ்ட் தலைவர் டிர்மிட்ரிஸ் கிறிஸ்டோபியாஸ் பொறுப்பு ஏற்றார். 2013 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நிகாஸ் அனஸ்டாசயடேஸ், 57.48 விழுக்காடு வாக்குகள் பெற்று குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

உதுமானியப் பேரரசின் எழுச்சி

துருக்கியின் முன்கதையைப் பார்ப்போம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது 30 ஆவது கடிதத்தில், திராவிட நாடு பொங்கல் மலர் மடலில், உதுமானிய சாம்ராஜ்யத்தின் உடைபாடு என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்:

உதுமானிய சாம்ராஜ்யத்தை விடப் பேரரசு இருந்தது இல்லை என்று கூறலாம். அந்த சாம்ராஜ்யத்திலே இருந்து இதுபோது தனிநாடாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும். அவ்வளவு நாடுகளை சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டு இருக்கின்றது.

இன்றைய துருக்கி, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, கிரீமியா, ஈஜிப்ட், சிரியா, துனீசியா, திரிபோலி (லிபியா), அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா) ஆகிய நாடுகள் அந்தப் பேரரசில் இருந்தன.

உதுமானிய சாம்ராஜ்யம் பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, அனைத்துப் படை பலமும் பாதுகாப்பதால் எம்மை எவரும் எதிர்க்க முடியாது என எக்காளமிட்டது.

இன்று என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று. மிச்சம் இருப்பது துருக்கி ஒன்றுதான். இஸ்லாமிய மதம்தான். ஆனால், இனங்கள் வேறாயிற்றே? அதனால்தான் இஸ்லாமிய நாடுகள் கூட ஒரு பேரரசின் அங்கங்களாக நீடிக்க முடிய வில்லை.

உதுமானியப் பேரரசின் தோற்றம் குறித்தும், துருக்கியின் வரலாறு பற்றியும், அதன் தொடக்ககால சரிதம் குறித்தும் விரிவாகவே எழுத விழைகிறேன்.

மத்திய ஆசியாவில் தாயீ என்னுமிடத்தில் வசித்த அங்கூஸ் என்ற கூட்டம் 13 ஆம் நூற்றாண்டில் தங்கள் பகுதியில் மழை இன்றி வாடியதால், கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களைத் தேடிப் புறப்பட்டது. வடக்கே மங்கோலியர்கள் ஆதிக்கம், தெற்கே திரும்பி அர்மீனியா வழியாகச் சென்று ஆசியா மைனரில் தங்கினார்கள். துருக்கியின் சரித்திரம் இனிதான் தொடக்கம்.

செங்கிஸ்கானின் படையெடுப்பின் விளைவாக, குரோசானில் இருந்து விரட்டப்பட்ட துருக்கியர்கள், பாரசீகத்தில் தொடர முடியாத சூழலில், அவர்களின் தலைவர் சுலைமான் ஷா தலைமையில் ஐக்கோனியத்தை நோக்கி நடந்தனர். அப்போது ரூமை, முதலாம் அலாவுதீன் ஆட்சி புரிந்து கொண்டு இருந்தார். சுலைமான் ஷா தலைமையில் ரூமுக்கு வந்து கொண்டு இருந்த 50000 நாடோடித் துருக்கியர்கள் பல ஆண்டுகள் எர்ஸிரம்  (Erzerum) மற்றும் எர்ஸின்ட்டிஜான் (Erzindijan) ஆகிய இடங்களில் திரிந்துகொண்டு இருந்தனர்.

சுலைமான் ஷா தாயகத்திற்கே திரும்ப முடிவு எடுத்தார். யூப்ரடீஸ் நதியை ஐபர் (Djaber) என்ற இடத்தில் கடக்க முயன்றபோது, நதிக்கரையில் அதிகமாக இருந்த பாறைகளின் மீது ஏறிச்சென்ற அவரது குதிரை கால் இடறிக் கீழே விழுந்தது. சுல்தான் சுலைமான் ஷா நழுவி யூப்ரடீஸ் நதியில் விழுந்து மடிந்தார். துர்க்மஜாரி என்ற இடத்தில் அவரது உடலை நதிக்கரையில் அடக்கம் செய்தனர். இச்சோக முடிவால் ஒரு பகுதியினர் அங்கேயே குடியேறினர். ஒரு பிரிவினர் துர்க்கோமானியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காடுகளுக்குள் சென்றனர். சிலர் ரூமுக்குச் சென்றனர்.

சுல்தான் சுலைமான் ஷா இறக்கும்போது, அவருக்கு நான்கு புதல்வர்கள்.

1. சொங்க்குர்ட்டிஜின் (Sonkurtijin)

2. குன்தோக்து (Gundogdu)

3. எர்தோக்ரல்  (Erthogrul)

4. தண்டார் (Dundar)

நான்கு சகோதரர்களும் ரூமுக்குத் திரும்புகையில், யூப்ரடீஸ் நதியின் தோற்றுவாயில் எர்தோக்ரலும், தண்டாரும் 400 குடும்பத் தினருடன் அங்கேயே தங்கினர். மற்ற இரண்டு சகோதரர்கள் குன்தோக்து, சொங்குர்ட்டிஜின் தாயகம் திரும்பினர்.

மாவீரனான எர்தோக்ரல், ரூமில் மீண்டும் முன்னேறி கரட்ஜடக் என்ற மலையின் அடிவாரத்தில் அங்காரா என்ற இடத்தருகே குடியேறினார். எர்தோக்ரல் அவருடைய இனத்தாருடன் ரூமுக்குச் சென்று கொண்டு இருக்கையில், ஆசியா மைனரில் சுல்தான் அலாவுதீன் தனது பகைவருடன் கடும் போரில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார். சுல்தான் அலாவுதீன் தனது பகைவர்களான தார்த்தாரியர்களிடம் (மங்கோலியர்) பலத்த அடி வாங்கித் தோற்றுக் கொண்டு இருப்பதைக் கண்டார். தன்னுடன் இருந்த படைவீரர்களிடம், சகாக்களே, நாம் இப்போது போர்க்களத்தின் அருகில் இருக்கின்றோம். வாளேந்தி நிற்கின்றோம். பேடிகளைப் போல இங்கிருந்து தப்பிச் செல்வது நம் வீரத்துக்கு உகந்தது அல்ல; இக்களத்தில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும்? வெற்றி பெறுபவர்கள், தோற்பவர்கள் இவர்களில் நமது வாளை யாருக்கு எதிராக நீட்டுவது என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.

தோற்போரை ஆதரிப்பது, உதவுவது எளிது அல்ல; இயலாது. நமது பலமும் குறைவு. வெற்றி பெறுபவர்கள் பலமாக உள்ளனர். அவர்களை ஆதரிப்போம் என்றனர்.

எர்தோக்ரல் விண்ணதிர முழங்கினான்:

நீங்கள் சொன்னது வீரர்களின் சொல் அன்று. தோற்பவர் பக்கம் நின்று வாள் வலிமையைக் காட்டுவோம். அதுவே நமக்குப் பெருமைஎன்று கூறியவாறு, உருவிய வாளுடன் களத்தை நோக்கிப் பாய்ந்தார்.

அவருடைய வீரர்களும் வாள் வீசினர். மங்கோலியர்கள், டார்டார்கள் பின்வாங்கி ஓடினர். தக்க சமயத்தில் உதவிய எர்தோக் ரலுக்கு சுல்தான் அலாவுதீன் பெருநன்றி தெரிவித்து சிறப்பு அங்கிகள் பரிசுகள் வழங்கினார். நிலங்களை மான்யமாக வழங்கினார்.

புரூஷாவுக்குத் தென்கிழக்கில் 96 கி.மீ. தொலைவில் உள்ள சுகுத் என்ற மாவட்டமும் அதில் அடங்கியது.  குரோசானை விட்டு வந்து 50 ஆண்டுகள் கழித்து, கி.பி. 1288 இல் எர்தோக்ரல் மறைந்தார். அவருக்கு 1258 இல் பிறந்த மகன்தான் உத்மான் ஆவார். சுதந்திர அரசர். அவருடைய வழித் தோன்றல்களே உதுமானியர்கள்எனப்பட்டனர். மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் எ~குத் தொப்பி போன்ற வடிவம் உடைய மலைமீது குடியேறினார்கள். எ~குத் தொப்பியின் பெயர் துர்க். எனவே, துருக்கியர்கள் எனப்பட்டனர். உதுமானியர்கள் என்ற பெயர் காலப் போக்கில் ஆட்டோமான்கள் என மருவி, உதுமானியப் பேரரசு உருவாயிற்று.

இவருக்குப் பின் பத்து தலைமுறைகளுக்கு உதுமானியப் பேரரசு விரிவு அடைந்தது. 48 ஆண்டுகள் கருங்கடலில் இருந்தும் மார்மோரா கடல் எல்லை வரையிலும் கோதாகிய வரை உதுமானியப் பேரரசு பரவியது.

முதலாம் சுலைமான் 1526 -1566 இவரது காலத்திற்குப் பிறகு, உதுமானியப் பேரரசு சரியத் தொடங்கியது. இவருக்குப் பின் 27 சுல்தான்கள் ஆட்சி. படிப்படியாகச் சரிந்து பேரரசு வீழ்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாக் கண்டத்தின் நோயாளி துருக்கிஎன்று அழைக்கப்பட்டது.  சீரழிவு, வீழ்ச்சி. இந்நிலையில், மேனாட்டுக் கல்வி பயின்ற இளைஞர்களின் கிளர்ச்சி இயக்கம் வளர்ந்தது. 1876 இல் புரட்சி. சுல்தான் அப்துல் அஜீஸ் 1876 இல் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். 1876-1909 காலத்தில் இரண்டாம் அப்துல் ஹமீத் பதவிக்கு வந்தார். பாராளுமன்றம் கூட்டப் படவில்லை. முன்னேற்ற இயக்கங்களை நசுக்க முற்பட்டார். பலர் கொல்லப்பட்டனர். இளைஞர்களின் மனதில் கொந்தளிப்பு.

முஸ்தபா கமால் பாட்சா

1880 ஆம் ஆண்டில் துருக்கியின் அதிகாரத்தில் இருந்த சாலோனிகா துறை முகத்தில் சுங்கத்துறையில் பணியாற்றிய அலிரிஜா, அவர் மனைவி ஜூபேதா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் முஸ்தபா கமால் பாட்சா. சிறுவயதில் இருந்தே மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட இயல்புகள் கொண்டவராக இருந்தார். தன்னம்பிக்கை மிக்கவர். எத் தண்டனையும் ஏற்க மாட்டார்; பொறுக்க மாட்டார்.

தந்தை மறைந்தார். மகனை மதகுருவாக்க எண்ணினார் தாயார். தாயின் உடன்பிறந்த சகோதரி இல்லத்தில் வாழ்ந்தனர். குதிரை லாயங்களைப் பராமரித்தல், மாடுகள் மேய்த்தல், ஆடு வளர்த்தல், பயிர்களைக் காத்தல். இவைதான் முஸ்தபாவின் வேலைகள்.

இராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பி, 1903 இல் மொனாஸ்டியர் இராணுவப் பள்ளயில் சேர்ந்தார். அங்கே முஸ்தபா என்ற பெயரில் பலர் இருந்தனர். இவர் கணிதத்தில் மேதையாக இருந்ததால், முஸ்தபா கெமால் எனப் பெயரிடப்பட்டார். (கெமால் என்றால் மேதை என்று பொருள்) உடன் பயின்ற மாணவர்களிடம், உங்களைப் போல் நான் சாதாரண மனிதன் அல்லன்; செயற்கரியவற்றைச் சாதிக்கப் பிறந்து இருக்கின்றேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுவாராம்.

விடுமுறைக் காலத்தில் ஸலோனிகாவில் வால்டேர், ரூசோ, ஹாப்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில் இவர்களது அரசியல் கருத்துகளைப் படித்தார். 1909 இல் சுல்தான் ஹமீது, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார்

1911 இல் திரிபோலியில் துருக்கி, இத்தாலி போர்

1912 அக்டோபர் முதல் பால்கன் போர்

1913 இரண்டாம் பால்கன் போர்

1914  ஆகஸ்ட் முதல் உலகப் போர்.

இதில் துருக்கி, ஜெர்மானியப் பேரரசர் கெய்சர் வில்லியத்துக்கு ஆதரவாகக் களம் கண்டு தோற்றது.

1915 பிப்ரவரியில் டார்டினெல்லிஸ் நீரிணையை பிரித்தானியக் கடற்படை தாக்கிக் கைப்பற்றியது.

1918 அக்டோபர் 30. நேச நாடுகளுடன் துருக்கியில் முத்ரோஸ் உடன்படிக்கை.

1919 மே 19 பொம்ஸூன் துறைமுகத்தில் முஸ்தபா கெமால் வந்து இறங்கினார்.

ஜூலை 28 இல் எர்செலீம் மாநாடு செப்டம்பர் 13 சிவாஸ் மாநாடு.

1920 ஏப்ரல் 23 இல் அங்காராவில் தேசிய சபை Grand National Assembly தொடக்கம்.

1920 ஏப்ரல் 24 முஸ்தபா கெமால் பாட்சா அச்சபையின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1923 வரை துருக்கியின் தலைநகரம் கான்ஸ்டாண்டி நோபில் - பின்னர் முஸ்தபா கமால் அங்கோராவைத் தலை நகர் ஆக்கினார்.

Peoples House மக்கள் இல்லம். பெண்களுக்கான பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன.

1923 அக்டோபர் 29 இல் துருக்கி குடியரசு நிறுவப்பட்டது. அதன் முதல் அதிபர் முஸ்தபா கெமால்  பாட்சா எனப்படும் முஸ்தபா அடாதுர்க். அடா என்றால் தந்தை என்று அர்த்தம். அடாதுர்க் என்றால் துருக்கியின் தந்தை என்று பொருள். எனவே அக்டோபர் 29 துருக்கியின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சக்கோரியா போர்க்களத்தில் தனது விலா எலும்பு ஒடிந்து போன  மறுநாளே போர்க்களம் நுழைந்தார் முஸ்தபா கமால்.

துருக்கியில் இஸ்லாமியப் பெண்களுக்கு உலகத்தின் கதவுகளைத் திறந்தார். துருக்கி தலைநிமிர்ந்தது.

1934 இல் மக்கள் கட்சி, குடியரசு மக்கள் கட்சி ஆயிற்று.

1935 இல் தேர்தல். விருப்பு வெறுப்பற்று கட்சி சார்பற்ற 13 பேர் தேர்வு.

17 பெண்கள் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி வரவேற்று, ‘என் வாழ்நாளின் கனவு நனவாயிற்றுஎன்றார் முஸ்தபா கமால்.

நான்கு முறை துருக்கியின் அதிபராகப் பொறுப்பு வகித்தார். அவரது கொள்கைகள்

1. குடியரசுக் கோட்பாடு

2. மதச்சார்பின்னை (Secularism)

3. கூட்டாண்மை (Populism)

4. நாட்டுப்பற்று

5. அரசுடைமை

6. சீர்திருத்தம்

அடிமைகளாக வாழ்வதைவிட உரிமைக்காகப் போராடி மடிவதே மேல். விடுதலை அல்லது வீரமரணம்என்றே முழங்கினார். எங்கள் எல்லைக்கு வெளியே ஓர் அங்குலம் கூட எங்களுக்கு வேண்டாம். ஆனால், எங்கள் எல்லைக்குள் ஓர் அங்குலத்தைக்கூட நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.

1927 அக்டோபரில் துருக்கியின் அங்காரா தேசிய நாடாளுமன்றக் கூட்டம் ஆறு நாட்கள் நடந்தன. தினமும் அதிபர் முஸ்தபா கமால் பாட்சா ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் என மொத்தம் 36 மணி 33 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த உரைக்காக, 48 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தாராம். உடன் உதவியவர் இஸ்மெத் பெவ்ஸி.

உலகில் இவ்வளவு நீண்ட சொற்பொழிவை யாருமே இதற்குமுன் செய்தது இல்லை.

அந்த உரையில் ஒரு பகுதி இதோ,

வருங்காலத் துருக்கியின் வழித்தோன்றல்களே, துருக்கியக் குடியரசையும் அதன் இறையாண்மையையும் காப்பாற்றுவது உங்கள் கடமை. அதற்குத் தேவையான வலு,  உங்களுடைய குருதியிலேயே ஊறி இருக்கின்றது. உலகத்தில் எல்லா மக்களைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டு இருக்கின்றேன். அந்த மக்களை போர்க்களங்களிலும், நெருப்பு மழையிலும், மரணத்தின் எதிரிலும் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மக்கள் கூட்டத்தின் ஒழுக்க நிலையை இது போன்ற களங்களில்தான் காண முடியும்.

எனது மக்களே! நான் சத்தியமாகச் சொல்கிறேன். துருக்கியர்களின் மன உறுதி, உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் மன உறுதியையும் விஞ்சியதாகவே இருக்கின்றது.

1938 நவம்பர் 10 ஆம் நாள் முஸ்தபா கமால் பாட்சா மறைந்தார்.

உலகில் பல நாடுகளில், தியாகத்தாலும், வீரம் செறிந்த யுத்தங்களாலும் உன்னதமான கோட்பாடுகளாலும் கட்டப்பட்டவை ஒரு கால கட்டத்திற்குப்பின் சிதைவதைக் காண்கின்றோம். ரோமானியப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் (The Rise and Fall of the Roman Empire, Gibbons) ரோமப் பேரரசின் வரலாற்றைக் கிப்பன், பல பகுதிகளாக பெரும் நூல்களாக வடித்து இருக்கின்றார்.

இன்று துருக்கியும், எர்டோகனும்

வால்கா நதிக்கரையில் எழுந்த கம்யூனிச அரசின் வெற்றி, மிகாயில் கோர்பசேவ் காலத்திற்குப் பின் வீழ்ந்து, சோவியத் கூட்டமைப்பு 15 தனித்தனி அரசுகள் ஆகிவிட்டன. மஞ்சள் நதிக்கரையில் மாவோ  எழுப்பிய கம்யூனிச அரசு இன்று, கலப்புப் பொருளாதாரத்தில் வலிவுடன் எழுந்து நிற்கின்றது. அதே போன்றுதான் துருக்கியின் நிலை.

இன்றைய எர்டோகன் அதிகாரத்தில் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்துகின்றார். துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டு வரலாற்றில் திடுக்கிடும் திருப்பமாக அரசியலில் எழுந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தெரு முனையில் எலுமிச்சைச் சாறு விற்றுக் கொண்டு இருந்தவர். படிப்படியாக வளர்ந்து மக்களைக் கவர்ந்தார். நலக் கட்சி (Welfare Party) என்று அரசியல் இயக்கத்தை நிறுவினார். தீவிர இஸ்லாமிய மதக் கோட்பாட்டை நிலை நாட்டத் துடிப்பவர். முஸ்தபா கமால் பாட்சாவின் மதச்சார்பு இன்மையை ஒழிக்கும் திட்டம் கொண்டவர்.

இந்தியா மீது நாதிர் ஷா, மன்னர் முகமது ஷாவைத் தோற்கடித்து டில்லியில் இருந்த ஒளிவீசும் முத்துக்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தை எடுத்துக் கொண்டுபோய் உதுமானிய அரசர் சுல்தான் முகம்மது (1) க்குப் பரிசாக வழங்கினான். இன்றைக்கும் இஸ்தான்புல் நகரின் டாப்கபி (TOPKAPI) அரண்மனையில் அச்சிம்மாசனத்தைக் காணலாம்.

1965 இல் TOPKAPIஎன்ற ஆங்கிலத் திரைப்படத்தை, குளோப் திரையரங்கில் பார்த்தேன். டாப்கபி அரண்மனையில், முத்துக்களும் வைரங்களும் ஜொலிக்கும் ஆபரணத்தை பலத்த பாதுகாப்பை மீறி கொள்ளையடிக்கும் கதை. மிகவும் விறுவிறுப்பான படம். பிரெஞ்சு நடிகர் ஜின்பால் பெல்மாண்டோ கதாநாயகனாக நடித்தார்.

அண்மைக் கால துருக்கியின் அரசியல் நிகழ்வுகள் மிக விறுவிறுப்பானவை. 1998 இல் எர்டோகன் இஸ்தான்புல் நகர மேயராக இருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது இஸ்லாமியக் கவிஞர் ஜியா கோல்ப்பின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியதற்காக மதவெறியைத் தூண்டுகிறார்; முஸ்தபா கமால் அமைத்த ஏற்பாட்டை சீர் குலைக்கிறார்என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, அரசியல் சட்ட நீதிமன்றத்தில் பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுக் கொட்டடியில் பூட்டப்பட்டார். அவரது நலக்கட்சியும் தடை செய்யப்பட்டது.

முடிந்தது எர்டோகனின் அரசியல்; அவர் கை கழுவப்பட்டுவிட்டார்என்றனர்.

அதற்கு நேர் மாறாக, சிறையில் இருந்து 1999 இல் விடுதலையானபின் தீவிர அரசியலில் ஈடுபட்டு, நீதி வளர்ச்சிக் கட்சி (Justice and Development Party AKP) என்ற கட்சியைத் தொடங்கினார். அவரது பழமைவாத இஸ்லாமியக் கொள்கைக்கு ஆதரவு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமர் பதவி ஏற்றார்.  2012 வரை பிரதமர் பதவியில் நீடித்த அவர், பின்னர் அதிபர் பதவி ஏற்றார். எந்த இஸ்லாமியக் கொள்கையை மேடையில் பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றாரோ, அதே கோட்பாட்டை முன்னெடுத்து 19 ஆண்டு களுக்குப் பின் அதனை அரங்கேற்ற முனைந்துவிட்டார்.

2016 ஜூலையில் எர்டோகன் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கை முறியடிக்கப் பட்டது.

அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான துருக்கியர்கள் மட்டும் அன்றி, நீதிபதிகள், கல்வியாளர்கள், ராணுவத் தளபதிகள் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். நூறு செய்தியாளர்கள் சிறையில். 15 பல்கலைக்கழகங்கள், ஆறாயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 28 தொலைக்காட்சிகள், ஊடகங்கள், 66 செய்தி ஏடுகள், 19 வார இதழ்கள் தடை செய்யப்பட்டன. 30 வானொலி நிலையங்கள் 26 புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் நிறுத்தப்பட்டன. குர்தீஸ்கட்சியின் முன்னணித் தலைவர்களும் சிறைச்சாலையில்.

பொதுவாக்கெடுப்பு (Referendum) இந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்டது. 18 முக்கிய அரசியல் திருத்தங்களை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1. 2019 தேர்தலுக்குப்பின் இரண்டு முறை அதிபராக எர்டோகன் நீடிக்கலாம். 2029 வரை.

2. அதிபர் விருப்பப்படி துணை அதிபர்களை நியமிக்கலாம்.

3. அமைச்சர்களை நியமிக்கலாம்.

4. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தம் 15 பேரில், 12 நீதிபதிகளை அதிபர் நியமிக் கலாம்.

5. பிரதமர் பதவி நீக்கப்படும்.

6. அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் படும.

7. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 600 வரை அதிகப்படுத்தலாம்.

8. வாக்கு அளிக்கும் வயது 18 ஆக நிர்ணயிக்கப்படும்.

பல்லாயிரக்கணக்கான மக்களை அரசியல் எதிரிகளை, நீதிபதிகளைச் சிறையில் அடைத்துவிட்டு, ஏடுகள், தொலைக் காட்சிகளைத் தடை செய்து இத்தனைக்குப் பிறகு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் எர்டோகனின் திட்டத்துக்கு ஆதரவாக 51.4 சதவிகிதமும், எதிர்ப்பாக 48.6 சதவிகித வாக்குகளும் பதிவாகின. நூல் இழையில் வெற்றி பெற்றுவிட்டார்.

துருக்கியில் உள்ள குர்து மக்கள், தங்கள் இனத்துக்குத் தனி நாடு கேட்கின்ற சிரியாவின் வட எல்லையில் உள்ள குர்துக்கள், அதே லட்சியத்தை முன் வைத்து ஆயுதப் போர் நடத்துகின்றனர்.

துருக்கி அதிபர் எர்டோகனின் அணுகுமுறை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதால்தான் இந்தியாவுக்கு இம்முறை வருவதற்கு முன்னர் காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடுகளும் பங்கேற்றுத் தீர்வு காண வேண்டும்என்றவர், இந்தியாவுக்கு வந்தவுடன் அக்கருத்தை மாற்றிக்கொண்டு இரு நாடுகளும் பேசித் தீர்வு காணவேண்டும் என்றார்.

ஏற்கனவே பாகிஸ்தானுடன் முன்னர் பாக்தாத் ஒப்பந்தத்தில் அணி சேர்ந்தார். பின்னர் சென்டோ (CENTO) அணி யிலும் பாகிஸ்தானுடன் துருக்கி இடம் பெற்றது. இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிலும் துருக்கி இடம்பெற்றுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு துருக்கி ஆதரவு அளிக்கவில்லை. அணு விசை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கும் துருக்கிய ஆதரவு இல்லை. அனைத்தையும்விட துருக்கியை நவீன மயமாக்கி, மதச்சார்பற்ற அரசாக இயக்கி, பெண்ணுரிமை வழங்கி, பெறும் புகழ் பெற்று நோயாளி துருக்கியைத்  தலை நிமிர வைத்த முஸ்தபா கமால் பாட்சாவின் கொள்கைகளுக்கு முரணான நிலைப்பாட்டை எர்டோகன் செயல் படுத்தி வருகின்றார்.

நான் மேற்குறிப்பிட்ட இந்தியா குறித்து அனைத்துப் பிரச்சினைகளிலும் சைப்ரஸ் குடியரசு இந்தியாவுக்கு முழு ஆதரவாகத் திகழ் கின்றது.

பொது வாக்கெடுப்பு

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் 1915 -1916 ஆண்டுகளில் துருக்கியில் ராணுவத்தினரால் லட்சக்கணக்கான அர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அர்மீனிய இனப்படுகொலைஎன்றே வரலாறு பதிவு செய்தது.

உலகில் பல தேசிய இனங்கள் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு மூலம் தனித்தனி சுதந்திர நாடுகள் ஆகிவிட்டன. அந்த நாடுகளை எல்லாம்விட ஓர் ஆயிரம் நியாயமான காரணங்களைக் கொண்டுள்ள ஈழத்தமிழ் தேசிய இனம் சிங்களப் பேரினவாத அரசின் கொடிய அடக்குமுறைக்கும், அநீதிக்கும் ஆட்பட்டுள்ள நிலையை மாற்ற, தனித்தமிழ் ஈழத்துக்கான பொது வாக் கெடுப்பு தேவைஎன்பதை உரிய இடங்களில் அழுத்தமாக முன்வைப்போம்.

என் வாழ்வில் நான் ஏதாவது சாதித்தேன் என்றால், “சுதந்திரத் தமிழ் ஈழம் காண ஒரே வழி, ‘பொது வாக்கெடுப்புதான்என்று” 2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கத்தில் திட்டவட்டமாக அறிவித்ததுதான்.

இதில் வேறு எவரும் அதற்கு ராயல்டி கொண்டாட இயலாது. ஈழத்தமிழ் அரங்கத்திலோ, தாய்த் தமிழகத்திலோ, தரணியில் வேறு எங்கிலுமோ எவரும் அந்நாள் வரையிலும் முன் வைக்காத அறிவிப்பு தான் வைகோவின் பிரஸ்ஸல்ஸ் பிரகடனம்.

அதனைத்தான் 2012 மார்ச் 27 இல் அன்றைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடை பெறும் நிலைமையே ஏற்படுத்தியே தீருவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண்டுள்ளேன். அது நிறைவேறும்போது என் வாழ்க்கை பயனுள்ள வாழ்வு என்ற மன நிறைவு கொள்வேன்.

ஒரு நூற்றாண்டு கழித்தும்கூட அர்மீனிய இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரல் பிற நாடுகளில் எழுகிறது. அக்கோரக்கொலை புரிந்த துருக்கியை அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்த, உலகில் பல நாடுகள் குரல் கொடுக்கின்றன. குறிப்பாக ஜெர்மனிய அதிபர் ஆங்கெலா மெர்கல் அம்மையார், “நீதிக்குக் குரல் கொடுங்கள்என்கிறார். 2016 ஆம் ஆண்டு ஜெர்மனிய நாடாளுமன்றத்தில், அர்மீனிய இன்ப்படுகொலை நடத்திய துருக்கியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திடக் கருதியே படுகொலைக்குக் கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆத்திரப்பட்ட துருக்கி அதிபர் எர்டோகன் கண்டன எச்சரிக்கை தந்ததை ஜெர்மனி அலட்சியம் செய்தது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், “ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள மாபாவிகளை அனைத்துலக நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்திடத் தாய்த் தமிழகத்துத் தன்மான உணர்வு கொண்டோரும், தரணி வாழ் தமிழர்களும் ஒருமித்து முடிவு எடுத்தே ஆக வேண்டும்.

உலகின் 65 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். அகிலத்தின் பல நாடுகளில் அல்லல்படும் புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களும் இந்த இலக்கை நோக்கியே எழ வேண்டும். உலகில் எந்த தேசிய இனமாயினும் தன் உரிமைகளைக் காக்க, பூட்டப்பட்ட அடிமை விலங்குகளை உடைக்க சர்வாதிகாரக் கொடுமையை ஒழிக்க அரச பயங்கரவாதத்தை முறியடிக்க ஆயுதப் புரட்சிக்குத்தான் தள்ளப்படும்; அது தவிர்க்க இயலாதது என்று, நான் கூறவில்லை, ஐ.நா. மன்றம் கூறுகிறது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் பிரகடனத்தில் முகப்புரை திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

1948 டிசம்பர் 10 இல் செய்யப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் முகப் புரையை அப்படியே இங்கு தருகிறேன்.

Where as it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by rule of law

சர்வாதிகாரத்தையும், அடக்கு முறையையும், எதிர்த்து கடைசி முயற்சியாக புரட்சிதான் இனி ஒரே வழி என்ற முடிவுக்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமல் தடுக்க வேண்டும் என்றால், சட்டத்தின்  ஆட்சிப்படி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த முகவுரையே கொடுங்கோன்மையை எதிர்த்து புரட்சி வெடிக்கும், ஆயுதப் போராட்டம் நடக்கும்  என்று பூபாளம் பாடி விட்டது.

இதைத்தானே இலங்கைத் தீவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தேசியத்  தலைவர் பிரபாகரன் கடைப்பிடித்தார். அறவழிப் போராட்டங்களை சிங்கள இனவாத அரசு துப்பாக்கி முனையில் நசுக்க ஈழத்தமிழர்களை இரத்த வேட்டையாடியதால்தானே 1974 மே 14 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி, சுதந்திர இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசம் பிரகடனத்தை செயல்படுத்தவே தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். அப்புரட்சி வென்றது. ஆனால், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத ராணுவ வல்லரசுகள் சிங்கள அரசுக்கு முழு உதவி செய்து சமர்க்களத்தில் புலிகளைத் தோற் கடித்தனர்.

தோல்வி முடிந்த முடிவு அல்ல; புதிய பரிமாணம் பெறப்போகின்றது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்!

அப்போராட்ட அணி வகுப்பில் முழுத் தகுதியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோள் கொடுத்து முன்னேறும். தரணியில் சுதந்திரத் தமிழ் ஈழ நாடு மலரும்அது காலத்தின் தீர்ப்பு ஆகும் நாள் வந்தே தீரும்.

தன்னாய்வுக்குத் தக்க இடம் சிறைச்சாலை.

இலக்கு நோக்கிய பயணத்துக்கு இதயத்தை வார்ப்பிக்கும் இடமும் சிறைச் சாலைதான்.

இதனை எழுதி முடிக்கும் இரவு 8 மணி நேரத்தில் பொதிகைத் தொலைக்காட்சி என் படத்தைப் போட்டு செய்தி சொன்னது.

தேசத்துரோக வழக்கில் சிறைக்குச் சென்ற வைகோ பத்து ஆண்டுகள் ஆனாலும் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று கூறியவர் தன் நிலையை மாற்றிக் கொண்டு இப்போது ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்”.

செய்திகளில் உண்மைமறைக்கப்பட்டுதிரித்துச் சொல்லும் பொய் எவ்வளவு வேகமாக விண்ணலைகளில் இறக்கைகட்டிப் பறக்கிறது பார்த்தீர்களா?”

ஏப்ரல் 3 ஆம் தேதியன்று அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நான் கூறியது இதுதான்.

என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தித்  திமுக அரசு தொடுத்து வழக்கு 2009 இல் பதிவு செய்தது. ஓராண்டு கழித்து 2010 இல் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்தது. குற்றம் சாட்டுகிறேன் I Accuse நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நான் உரையாற்றியதை மறுக்கமாட்டேன். ஒரு வார்த்தையைக் கூட மாற்ற மாட்டேன். இந்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். ஏன்? ஆயுள் தண்டனையே கொடுக்கப்படலாம். அப்படித் தண்டனை வந்துவிடுமோ என்று அஞ்சி நான் பேசியதை மறுக்கப் போவது இல்லை. தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.

இன்றைக்கு நான் பிணையில் செல்ல விரும்பவில்லை. ஈழத்தமிழ் இனப்படு கொலையின் கூட்டுக் குற்றவாளியான அன்றைய திமுக அரசு, என் மீது எவ்வளவு வஞ்சம் வைத்து இப்படி ஒரு தேசத்துரோக வழக்கைத் தொடுத்தது என்பதை தாய்த்தமிழக மக்களும், ஈழத் தமிழர்களும், புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிறை செல்கிறேன் என்றேன்.

நான் ஜாமீனில் வரவே மாட்டேன் என்று கூறவேயில்லை.

தினமலர் ஏடு வைகோவை நீதிமன்றமே விடுவிக்கலாம் என்று வழக்கறிஞர்களின் கருத்துகளைப் பதிவு செய்து செய்தி வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இன்று (24.05.2017) காலை தினமலரில் ஒரு தவறான தகவலை யாரோ தந்து செய்தி ஆகி உள்ளது. நேற்று முன்தினம் எனக்குப் பிறந்தநாள் என்றும், என் மகன் துரைவையாபுரி சிறையில் என்னைச் சந்தித்து ஆசி பெற்றுக் கண்ணீர் மல்க அப்பா, சிறையை விட்டு வெளியே வாருங்கள்என்று வேண்டியதால் நான் பிணைக்கு விண்ணப்பித்தேன் என்ற செய்தி தவறானது. 

என் மகன் சிறையில் என்னைச் சந்தித்து மூன்று வாரத்திற்கு மேல் இருக்கும். சந்தித்தபோது, “இரவு பகல் ஓய்வு இன்றி அலைகின்றீர்கள். சிறையில் தனிமையும், படிக்க, எழுத நேரமும் கிடைக்கும். நெருப்பு வெயில் உங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. அக்கினி வெயிலில் பல மணி நேரம் மதுவை ஒழிக்க நடந்தீர்களே, இந்தச் சிறைவாசம் உங்களுக்கு நல்லது என்றுதான் கூறினார். அம்மாவும் (என் துணைவியார்) அப்படித்தான் நினைக்கின்றார்கள் என்றார். 

மே 22 - எனது பிறந்தநாளும் அல்ல, பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக வயதைக் கூட்டிப்போட்டு - பிறந்த தேதியை அப்படிப் பதிவு செய்தார்கள்.

எனது தம்பி வை.ரவிச்சந்திரனும் சிறையில் என்னைச் சந்தித்து சிறைவாசம் அதிக நாள் இருப்பது உங்களுக்கு பயனுள்ள தாகத்தான் இருக்கும்என்று கூறினான்.

2002 ஆம் ஆண்டு பொடாசட்டத்தின்படி நான் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டபோது மும்பையில் இருந்து பேட்டி காண வந்த டைம்ஸ் ஆப் இந்தியா நிருபரிடம் என் மகன் துரைவையாபுரி, “என் தந்தையின் சிறை வாசம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம். ஏழாண்டுகள் சிறையில் இருக்க நேரிடலாம். ஆனால் அதற்காக நாங்கள் கலங்கவும் மாட்டோம். அஞ்சவும் மாட்டோம்என்று பதில் கூறியதை டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு வெளியிட்டு இருந்தது.

என்னுடைய அரசியல் பயணத்தில் என் குடும்பத்தினர் பக்கபலமாக அரணாக இருப்பார்கள்.

தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னணியினர், தொண்டர்கள் விருப்பத்தை அவைத் தலைவர் அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் இருமுறை சிறைக்கு வந்து வற்புறுத்தியதால் தான் பிணையில் வெளிவரச் சம்மதித்தேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மற்றவர்களுக்கும் விளக்குவதற்காகவே இதனை எழுத நேர்ந்தது!

சிறை நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல வழக்கறிஞர் நன்மாறன் இம் மடலை எழுதிக் கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

சங்கொலி, 02.06.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)