திருப்புடைமருதூர் திருக்கோயிலில் வைகோ கடிதம்

Issues: Human Rights

Region: Tirunelveli - Urban, Tirunelveli - Rural

Category: Articles, Letters, Headlines

Date: 
Tue, 30/05/2017

 

 

 

 

 

 

திருப்புடைமருதூர் திருக்கோயிலில்

வைகோ கடிதம்

மைப்பொழுதும் நீங்காது

என் இதயத் துடிப்போடும்

இரத்தச் சுழற்சியோடும்

கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

தமிழக அரசியல் களத்தில் திடுக்கிடும் திருப்பங்களும், விறுவிறுப்பான காட்சி களும், திகைக்க வைக்கும் பரபரப்புகளும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்ற வேளையில் இந்தக் கடிதத்தை எழுது கின்றேன்.

என்ன திடீரென்று ஆன்மிகத் தலைப்பு?’ என்று நீங்கள் கேட்கலாம். அதுகுறித்து விரிவாக எழுதுவதற்கு முன்பு, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து நம் நிலையைக் கூறுகின்றேன்.

தமிழக முதல் அமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்கள், டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தபோது, துக்கமும் வேதனையும் நிறைந்த இரங்கல் செய்தியைத் தந்தேன்.

அதன்பிறகு முதல் அமைச்சர் பொறுப் புக்கு ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்து எடுக்கப் பட்டார்;

டிசம்பர் 29 ஆம் தேதி அண்ணா தி.மு.. பொதுக்குழுவில் திருமதி சசிகலா அவர்கள் பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்;

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, .பன்னீர் செல்வம் உள்ளிட்ட அண்ணா தி.மு..வின் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து திருமதி சசிகலா அவர்களை முதல் அமைச்சர் பதவிக்குத் தேர்ந்து எடுத்தனர். தனிப்பட்ட காரணங் களால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக ஆளுருக்குக் கடிதம் அனுப்பவும், ‘மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரையில் காபந்து முதல்வராக ஓ.பி.ஸ். அவர்களை நீடிக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

6 ஆம் தேதியன்று, ஆளுநர் மேதகு வித்யாசாகர்ராவ் அவர்கள், உதகையில் இருந்து சென்னை வழியாக டெல்லிக்குச் சென்றார். 7 ஆம் தேதி இரவில், சகோதரி ஜெயலலிதா நினைவு இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 40 நிமிடம் மௌனமாக அமர்ந்து இருந்தார். அதைத் தொடர்ந்து, எவரும் எதிர்பாராத வகையில், திருமதி சசிகலா தரப்பினர் என்னைக் கட்டாயப்படுத்தி, நிர்பந்தித்து ராஜினாமா செய்ய வைத்ததாகவும், எனவே, சகோதரி ஜெயலலிதா அவர்களின் ஆன்மாவின் கட்டளைப்படி தான் போராடப் போவ தாகவும் அங்கே திரண்டு இருந்த செய்தி யாளர்களிடம் அறிவித்தார்.

மறுநாள் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து, தற்போது பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்படும்என்று அறிவித்ததுடன், .தி.மு.. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளராகவும், .பி.ஸ். முதல் அமைச்சராகவும் பணியில் தொடர சகோதரி ஜெயலலிதா விரும்பினார் என்றும் சொன்னார்.

இதன் பின்னர், பல்வேறு காட்சிகள் அரங்கேறின.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஓ.பி.ஸ்.அணிக்குச் சென்றனர்; அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் ஓ.பி.ஸ். அணிக்குத் தாவினார்; அண்ணா தி.மு.. எம்.பி.க்களில் சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எவரும் எதிர்பாராத வகையில், ‘.பி.ஸ். சட்டமன்றத்தில் பெரும் பான்மை கோரினால் தி.மு.. ஆதரவு அளிக்கும்என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி சுப்புலெட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்; அதனை தி.மு..வின் செயல்தலைவர் மறுத்தார்.

தன்னை முதல் அமைச்சர் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்று திருமதி சசிகலா ஆளுநரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும், இந்தியா வில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், அனைத்துச் செய்தி ஏடுகளிலும் தலைப்புச் செய்திகள் ஆகி, உலகத்தின் பல்வேறு நாடுகளின் கவனத்தையும், தமிழ்நாடு அரசியல் களம் ஈர்த்த பின்னணியில், பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உச்சநீதி மன்றத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது.

அண்ணா தி.மு..வின் பொதுச் செயலாளரும், அன்றைய முதல் அமைச் சருமான சகோதரி ஜெயலலிதா, திருமதி சசிகலா, திருமதி இளவரசி, வி.கே. சுதாகரன் உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்து, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்கள் தலா பத்துக் கோடி ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்nல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை அடுத்து, பெங்களூரு உயர் நீதிமன்றம், நால்வருக்கும் பிணை விடுதலை மறுத்தது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பாலி நாரிமன் வாதாடி, நால்வருக்கும் பிணை விடுதலை பெற்றுத் தந்தார். கர்நாடக உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில், நீதிபதி குன்ஹா அவர்கள் தந்த தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளித்தார்.

அதனை எதிர்த்துக் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருதரப்பு வாதங்களும் முடிவுற்று, ‘தீர்ப்பு நிலுவையில் இருக் கின்றதுஎன்று நீதியரசர் பினாகி சந்திர கோஷ், நீதியரசர் அமிதவ் ராய் அமர்வு அறிவித்து இருந்தது. அதன்படி, 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பெங்களூரு உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, திருமதி சசிகலா, திருமதி இளவரசி, சுதாகரன் மூவருக்கும் நான்கு ஆண்டுக்கால சிறைத்தண்டனையும், ஒவ்வொருவரும் பத்துக் கோடி ரூபாய் அபராதம் விதித்து வழங்கிய தீர்ப்பு, அரசியல் அரங்கத்தில் பூகம்ப அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

அண்ணா தி.மு.. சட்டமன்ற உறுப் பினர்கள், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல் அமைச்சர் பொறுப்புக்குத் தேர்ந்து எடுத்து இருக்கின்றனர். பந்து தற்போது ஆளுநர் மாளிகையில் இருக்கின்றது. .பி.ஸ். அணியினர், ‘தாங்கள் வெற்றி பெற்று விட்டோம்; நாங்கள்தான் ஆட்சியை அமைப்போம்என்று உரத்த குரல் எழுப்பு கின்றனர். தமிழக அரசியல் அரங்கமே அல்லோகல்லோலப்பட்டுக் களேபரம் ஆகிக் கொண்டு இருந்த நிலையில், சந்தடி சாக்கில் விரைவில் எங்கள் ஆட்சி தான் என்று தி.மு.. தரப்பினர் வீர தீரப் பிரகடனம் செய்தனர்.

கூவத்தூர் விடுதியில் சட்டமன்ற உறுப் பினர்களுடன் இருந்த திருமதி சசிகலா அவர்கள், தீர்ப்பை அறிந்து கண்ணீர் விட்டதும், அவரைக் காவல் துறையினர் கைது செய்து, பெங்களூரு சிறைக்குக் கொண்டு செல்வதும் சட்டப் படியான நடவடிக்கைகள்.

தமிழ்நாட்டு அரசியலில் எந்தக் காலத் திலும் ஏற்படாத திடுக்கிடும் திருப்பங்கள், கடந்த சில நாள்களில் அரங்கேறியது குறித்து, விரிவாக பிறிதொரு கடிதத்தில் எழுதுகிறேன்.

தொலைக்காட்சி ஊடக நண்பர்களும், செய்தியாளர்களும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து என்னிடம் கருத்துக் கேட்டதற்கு எந்தக் கருத்தும் கூற விரும்ப வில்லைஎன்று சொல்லிவிட்டேன்.

இதே காலக்கட்டத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதியில் இருந்து, நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளை இதோ தருகிறேன்.

பிப்ரவரி 5ஆம் தேதி காலையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் நகர செயலாளர் திரு சம்பந்தன் அவர்களின் கோவிந்தராஜம்இல்லத்தை, நினைவில் வாழும் மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் அவர்களின் சகோதரர் உயர்திரு ஜி.ரங்க சாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தேன். ஐயா மூப்பனார் அவர்களின் இளைய சகோதரர் உயர்திரு சந்திரசேகர மூப்பனார் அவர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள். கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர் களும், என் உயிரான சகோதரர்களான தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார், விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதன்பின்னர் தஞ்சைக்கு வந்து தங்கும் விடுதியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்குப் புறப்பட இருந்தபோது தொலைக்காட்சியில், ‘அண்ணா தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக திருமதி சசிகலா அவர்களை முதல் அமைச்சர் பொறுப்புக்குத் தேர்ந்து எடுத்தனர்; உதகமண்டலத்தில் இருக்கும் தமிழக ஆளுநர் மேதகு வித்யாசாகர் ராவ் இரவிலேயே தலைநகர் சென்னை வருவார்; திருமதி சசிகலா முதல்வர் ஆவதற்கான கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் சந்திப்பார்; அதன்பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தன.

ஆனால், உதகை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு அன்று இரவிலேயே ஆளுநர் தலைநகர் டெல்லிக்கு விரைந்தார் என்ற செய்தி புதிராக அமைந்தது. பிறகு அங்கிருந்து சென்னைக்கு வராமல், மும்பைக்குச் சென்றுவிட்டார். மராட்டிய மாநிலத்தின் நிரந்தர ஆளுநரான அவர், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராகத் தற்போது செயல் படுகின்றார்.

பிப்ரவரி 7ஆம் தேதியன்று, தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஷேல் கேஸ் (பாறைப் படிம எரிவாயு) தமிழ்நாட்டில் எடுக்கவிடாமல் தடுப்பதற்காக நமது இயக்கத்தின் விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நான் வாதாடி வருவதால், அன்றைய தினம் விசாரணையில் வாதங்களை முன் வைத்துவிட்டு, பிற்பகல் 3.20 மணிக்கு விமானத்தில் மதுரைக்குச் சென்றேன். அங்கிருந்து திருநெல்வேலி வழியாக பத்தமடை, சேரன்மாதேவி, வீரவ நல்லூரைத் தாண்டி தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள சைவத் திருத் தலமான திருப்புடைமருதூர் போய்ச் சேரும்போது முன்னிரவு நேரம் 7 மணி 15 நிமிடங்கள் ஆயிற்று.

வழக்கறிஞர் தொழிலில் எனது ஆசானும், எனது அரசியல் வாழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் எனக்கு அடித்தளம் அமைத்துத் தந்த வருமான அந்நாள் தி.மு.. மாவட்டச் செயலாளரும், பின்னாளில் உச்சநீதி மன்றத்தின் போற்றுதலுக்குரிய நீதிபதி எனப் புகழ் குவித்தவருமான அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இல்லத்திற்குச் சென்றேன்.

மலரும் நினைவுகள்

52 ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன் முதலாக அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களை சந்தித்த நிகழ்வு மலரும் நினைவாக என் நெஞ்சில் எழுகிறது. 1965 மொழிப்புரட்சி நடை பெற்று முடிந்தது. அந்த ஆண்டு மே மாதம் என் கிராமத்துக்கு அருகில் உள்ள திருவேங்கடத்தில் தி.மு.. பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய அதே மேடையில் கல்லூரி மாணவனாக பேசிய என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருக்குப் பிடித்துப்போயிற்று. சில நிமிடங்களில் பேச்சை முடிக்க இருந்த என்னை தொடர்ந்து பேசச் சொன்ன தோடு, உணவு அருந்தச் சென்ற இடத் திற்கும் உடன் அழைத்துச் சென்ற தோடு, கலிங்கப்பட்டியில் இருந்து சைக் கிளில் கூட்டத்திற்கு வந்த என்னிடம், ‘சைக்கிளை வேறொருவரிடம் கொடுத்து விடுஎன்று சொல்லிவிட்டு, தனது காரில் ஏற்றிக்கொண்டு என் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, என்னிடம் அவர் விடைபெற்றுச் சென்ற அவரது உயர்ந்த பண்பாட்டை இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு மெய்சிலிர்க்கின்றது.

என்னுடைய சட்டப் படிப்பு முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, ‘நீ சட்டப் படிப்பை முடித்துக்கொண்டு என்னிடத்தில் ஜூனியர் வக்கீலாக வந்து சேர்என்று அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கூறி இருந்தார்கள். 1969 இல் அண்ணாச்சியிடம் ஜூனிய ராகச் சேர்ந்தேன். முருகன் குறிச்சியில் அவரது வழக்கறிஞர் அலுவலகம். அண்ணன் அழகியநம்பி உள்ளிட்ட 11 வழக்கறிஞர்கள் அவரிடம் ஜூனியர்களாக இருந்தோம்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத் திற்கு எதிரே அமைந்துள்ள டேனியல் தாமஸ் தெருவில் ஒரு மாடி அறையில் நானும் எனது நண்பர் சீமைச்சாமியும் தங்கி இருந்தோம்.

1960 ஆண்டில் இருந்து சவேரியார் கல்லூரியில் படித்த நாளில் இருந்து எனது நண்பரான சீமைச்சாமி மத்திய புள்ளியல் துறையில் அதிகாரியாக இருந்தார். சவேரியார் கல்லூரி ஹாக்கி விளையாட்டுக் குழு கேப்டன் ஆகவும் சிறப்புப் பெற்றவர்.

1969 இல் நெல்லை மாவட்ட மாணவர் திமுக செயலாளராக நான் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டேன். பாளையங் கோட்டை ஹைகிரவுண்டு மகராஜ நகரில் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் இல்லம் இருந்தது.

திருநெல்வேலியில் புகழ்பெற்ற குற்ற இயல் வழக்குரைஞர், தமிழகச் சட்டப் பேரவையில் முன்னாள் தலைவர் உயர்திரு செல்லப்பாண்டியன் அவர் களிடம் தொடக்க காலத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றவர்தான் அண்ணாச்சி அவர்கள். அவருக்கு உறவினரும் கூட. ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அண்ணாச்சி அவர் களிடம்தான் நான் படித்தேன்.

நெல்லை மாவட்டத் திமுக செயலாளர் தேர்தலில் பலத்த போட்டி. அதுவரை மாவட்டச் செயலாளராக இருந்த தூத்துக்குடி எம்.ஸ்.சிவசாமி அவர்களும், அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் போட்டியிட்டார்கள். அந்தத் தேர்தலில் சங்கரன்கோவில் வட்டக் கழகத்தில் கலிங்கப்பட்டி கிளைக் கழகத்தின் வட்டப் பிரதிநிதியாக நான் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தேன். திருவேங்கடத்திற்கு அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு பி.என்.செல்வம் அவர்கள் எங்கள் வட்டக் கழகத்தின் செயலாளர் ஆனார். அவர் அண்ணாச்சிக்குத்தான் ஓட்டுப் போட்டார்.

தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு மாவட்டக் கழகக் கூட்டத்திலும் தூத்துக்குடி சிவசாமி அவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் முன்னிலைப் படுத்தியே கூட்டத்தை நடத்துவார் அண்ணாச்சி. தனக்கு ஆதரவு கொடுத்தவர்களின் பரிந்துரைகளைவிட, எதிர்த் தரப்பினரின் பரிந்துரைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். அனைத்தையும் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தேன். இயக்கத்தில் சிறிய கசப்பு உணர்ச்சிகூட எந்த மட்டத்திலும் ஏற்பட்டுவிடாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற பாங்கு அறிஞர் அண்ணா ஊட்டிய குடும்பப் பாச உணர்வைப் பாதுகாத்தது.

வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது இரவில் பொதுக்கூட்டங்கள் இருக்கும். தனது காரிலேயே என்னை அழைத்துச் செல்வார். மேடையில் என்னை ஒரு மணி நேரம் பேசச்சொல்வார். இறுதியாக அவர் 15 நிமிடம் பேசுவார். கூட்டம் முடித்து விட்டுக் காரில் வரும்போதே, மறுநாள் நீதிமன்றத்தில் அவர் வாதாட இருக்கும் கொலை வழக்கின் சாட்சியங்களையும், ஆவணங்களையும் வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே வருவார். நடுநிசி நெருங்கும் நேரத்தில் வீட்டுக்குச் சென்ற பின் அந்த வழக்கு குறித்துப் படித்து முடிப்பார்.

காலையில் கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நிரம்ப வந்திருப்பார்கள். அனைவரிடத் திலும் அன்பாகப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை அமைதியாகக் கேட்டு, உடனடியாகச் செய்ய வேண்டியதை செய்து கொடுத்து விட்டு, பத்து மணிக்கு நீதிமன்றத்துக்குப் புறப் படுவார். பல நாட்கள் முற்பகலில் வழக்கு முடிந்துவிட்டால் ஜூனியர் வக்கீல்களான எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரபலமான மிலிட்டரி (அசைவம்) ஹோட்டல்களான காமாட்சி விலாஸ், நாடார் நளபாகம், சுல்தானியாவுக்கு அழைத்துச் செல்வார். எத்தனை வகை அசைவ உணவுகள் இருக்குமோ அனைத்தையும் வாங்கிக் கொடுத்துச் சாப்பிட வைப்பார். அதனால், வழக்கு முற்பகலில் என்றைக்கு முடியும் என்று ஆவலோடு காத்திருப்போம், ஒரு பிடி பிடிக்க. தூத்துக்குடி நீதிமன்றத் திற்குச் சென்றாலும் அந்நகரில் உள்ள பிரபலமான அசைவ ஓட்டலுக்கு அழைத்துச் சென்று நாங்கள் ருசித்துச் சாப்பிடுவதை மிகவும் ரசிப்பார்.

ஜூனியர் வக்கீல்களிலேயே எனக்கு மட்டும் சிறப்பிடம். நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு கொலை வழக்கு நடத்தச் சென்றால் பல சமயங்களில் அங்கேயே மூன்று நாட்கள் தொடர்ந்து தங்க வேண்டியது இருக்கும். மற்ற

ஜூனியர்கள் எல்லாம் வேறு அறைகளில் தங்கிக் கொள்வார்கள். என்னை மட்டும் தன்னுடைய அறையிலேயே தங்க வைப்பார்.

ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பதில் அண்ணாச்சிக்கு மிகுந்த ஆர்வம். நெல்லைத் திரை அரங்குகளில் ஆங்கிலப் படம் போட்டுவிட்டால் என்னை மட்டும் சினிமா பார்க்க அழைத்துச் செல்வார்.

அவருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு புதல்வி. அண்ணாச்சியின் துணைவியார் திருமதி லலிதா அம்மையார் மிக உயர்ந்த பண்பு நலன்கள் கொண்டவர். பாசம் காட்டுவதிலும், விருந்தோம்பலிலும் அவருக்கு நிகர் அவர்தான்.

அண்ணாச்சி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் படித்தார்கள். நானும் புகுமுக வகுப்பும், இளங்கலை பொருளியல் பட்டப் படிப்பும் அதே சவேரியார் கல்லூரியில்தான் படித்தேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மீது அலாதி பிரியமும் மதிப்பும் உண்டு. அண்ணன் கலைஞர் அவர்கள் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். வழக்கறிஞர் என்ற முறையிலும், அவரது சொந்தச் செல்வாக்கிலும் நாள்தோறும் சிறைச்சாலைக்குச் சென்று கலைஞர் அவர்களைச் சந்தித்து, அவருக்குத் தேவையான வற்றை செய்து கொடுத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் பாளை சிறையில் வந்து கலைஞரைச் சந்தித்த போது உடன் இருந்தார்.

1971 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் நேரம் இன்மை காரணமாகவும், பயணத் திட்டத்தை வகுத்து அழைத்து வந்தவர்கள் செய்த தவறினாலும் சேரன்மாதேவி தொகுதிக்குள் செல்லா மலே எம்.ஜி.ஆர். அவர்களை அடுத்த தொகுதிக்கு அழைத்துப் போய் விட்டார்கள். 200 ஓட்டுக்கள் வித்தி யாசத்தில் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

ஏற்படும் இன்னல்கள் இனிய பலன் களைக் கொடுக்கும்என்று சேக்ஸ்பியர் கூறியது அண்ணாச்சி அவர்கள் வாழ்க்கை யில் அப்படியே நடந்தது.

அன்றைக்கு அவர் வெற்றி பெற்று இருந்தால் அமைச்சராகி இருப்பார். அவ்வளவுதான். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அண்ணாச்சி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஆனார்கள். உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்கள். நீதித்துறையில் அனைவரும் மெச்சத்தக்க விதத்தில் புகழ் பெற்றார்கள்.

சமநீதிச் சோழன்

சேக்கிழார் பெருமான் வர்ணித்தாரே, தன் மகன் செலுத்திய தேரில் பசுங்கன்று பலியானதால், ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்ட காராம்பசுவின் கண்ணீரைக் கண்டு, தன் மகனையே தேர்க்காலில் பலி இட்டானே அந்தச் சோழ மன்னன் சிலையை அந்தக் காட்சியோடு வடிக்கச் செய்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவி, ‘சமநீதிச் சோழன்என்று கல்வெட்டில் பெயர் பொறிக்கச் செய்தவரும் அண்ணாச்சி அவர்கள்தான்.

பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்கள். அவர் வழங்கிய பல தீர்ப்புகள் நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளாக இடம்பெற்று உள்ளன.

மண்டல் கமிசன் புகழ்

திராவிட இயக்கத்தின் அடிநாதமே சமூக நீதி ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை திராவிட இயக்கத்துக்குத்தான் உண்டு. நீதிக் கட்சி ஆட்சியில் முத்தையா முதலியார் அரசாணை என்பதுதான் இட ஒதுக்கீட்டின் அடித்தளம் ஆகும். பின்னாளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியதால் அறிவாசான் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இட ஒதுக்கீட்டுக்காக எழுப்பிய போர்க்குரலின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தத்தில் இட ஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு வழங்கப் பட்டது.

இந்திய உபகண்டம் முழுவதிலும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பிற்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு, அதனுடைய தலைவராக மத்திய கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர் களை மத்திய அரசு நியமித்தது. அந்த அறிக்கை தான் மண்டல் கமிசனுடைய பரிந்துரைகளை மத்திய அரசு சட்டமாக்க வழி வகுத்தது.

திராவிட இயக்கத்தின் வார்ப்புத்தானே அண்ணாச்சி அவர்கள். நாடெங்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அண்ணாச்சி செய்த சேவை வரலாற்றுப் புகழ் ஆயிற்று. அண்ணாச்சி அவர்களின் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைகளை நான் நாடாளுமன்றத்தில் மூன்று முறை பதிவு செய்திருக்கிறேன்.

அண்ணாச்சியின் தியாகம்

சோழ நாட்டு வரலாற்றில் தனக்கு வந்த மணிமகுடத்தைப் பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மர், சித்தப்பா மதுராந்தகத் தேவருக்குச் சூட்டி மகிழ்ந்து, தியாகச் சிகரமாகப் போற்றப்பட்டார். அதுபோலவே உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகக் கூடிய வாய்ப்பு அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்குக் கிடைக்க இருந்தது. நீதித்துறையும், மத்திய அரசும் அந்த முடிவை எடுத்து இருந்தன. தன்னைவிடச் சில நாட்கள் சீனியராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வெங்கடாசலையா அவர் களுக்கே தலைமை நீதிபதி பதவியைக் கொடுங்கள் என்று எழுத்து மூலமாகவே எழுதிக் கொடுத்த அண்ணாச்சி அவர் களின் தியாக உணர்வும், பண்பாடும் இன்றைக்கும் சீனியர் வழக்கறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப்படுகின்றது.

தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பாக வழக்காடும் மூத்த வழக்கறிஞர் உயர்திரு மாசிலாமணி அவர்கள் 1960 களில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரிய மான குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த மாசிலாமணி அவர்கள், இந்தச் செய்தியைச் சொல்லி அண்ணாச்சியை வானளாவப் புகழ்ந்தபோது என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இரத்த பூமியில் ரத்தினவேல் பாண்டியன்

இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் காஷ்மீர் மாநிலத்தில் சட்சங்போரா என்னும் இடத்தில் 35 சீக்கியர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப் பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிய சீக்கியர்களை அனந்தநாக் மாவட்டத்தில், பரக்போரா என்னும் இடத்தில் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதுகுறித்து மத்திய அரசு அமைத்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது. “நீங்கள் காஷ்மீருக்கு போக வேண்டாம். தனி நபர் கமிஷனை ஏற்க வேண்டாம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பல நண்பர்களும், அதிகாரிகளும் வந்து கூறியபோது, என் உயிரே போனாலும் போகட்டும். நீதியை நிலைநாட்டவே அங்கு செல்கிறேன்எனக் கூறிச் சென்றார்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அனந்தநாக் மாவட்டத்தில் பொது மக்களும், கல்லூரி மாணவர்களும் வாழ்த்து முழக்கத்துடன் அண்ணாச்சியை வரவேற்றார்கள். அதுமட்டுமல்ல, அந்த மக்கள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் எங்களுக்கு மீட்பராக (அநளளயைh) வந்தார். தீவிரவாதிகள் சுட்டதாக ராணும் கூறியது உண்மை அல்லஎன்று அறிக்கையில் பதிவு செய்தார். அதனால் காஷ்மீர் மக்களின் இதயங்களில் மீட்பராக இடம் பெற்று விட்டார்.

2000ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பிரசுரமான ஜூனியர் விகடன் இதழ் இரத்த பூமியில் ரத்தினவேல் பாண்டியன்என்று புகழாரம் சூட்டியது.

இதில் மிகவும் தேனைக்குரிய செய்தி என்னவென்றால், பராக்போரா துப்பாக்கிச் சூடு குறித்து அண்ணாச்சி நீதிபதி தந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று வரை வைக்கப்படவில்லை. அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் தற்போது உறுப்பினராக உள்ள முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான துளசி அவர்கள், நீதிஅரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் காஷ்மீர் துப்பாக்கிச் சூடு குறித்து பதிவு செய்த கருத்தை மிகவும் பாராட்டி புகழ்ந்து பேசினார்.

ஐந்தாவது மத்திய ஊதிய கமிசன் தலைவர்

மத்திய அரசு, ஐந்தாவது ஊதியக் கமிசன் தலைராக அண்ணாச்சி நீதி அரசர் அவர்களை நியமித்தது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பெறும் ஊதியம், அதில் உள்ள முரண் பாடுகள், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து அற்புதமான அறிக்கையை அண்ணாச்சி சமர்ப்பித்தார்.

1997 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரசுரமான இந்து ஆங்கில நாளேட்டில் முரளிதர் என்பவர் எழுதிய கட்டுரையில் ஐந்தாவது ஊதியக் கமிசனின் தலை வரான நீதி அரசர் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பெயர் கடந்த வாரம் இந்திய நாடு முழுவதிலும் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கும் பெயராகிவிட்டதுஎன்று பாராட்டி எழுதி இருந்தார்.

தெற்குச் சீமை வளம் பெற வழி என்ன?

அண்ணாச்சியின் தொலைநோக்கு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சமூகப் பொருளாதார உயர்வு, வளர்ச்சி குறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கை தருவதற்காக ஓய்வு பெற்ற ஐ..ஸ். அதிகாரிகள் மூன்று பேர் உறுப்பினர் களாகக் கொண்ட ஆணையத்துக்கு அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள தென் மாவட்ட மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த தொலை நோக்கு சிந்தனையுடன் அறிக்கை தந்தார் அண்ணாச்சி அவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சலில் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்று தொலை நோக்குடன் பரிந்துரை செய்தார். 1997 இல் அமைக்கப்பட்ட இந்த ஆணை யத்தின் அறிக்கை 1998 மே 16 இல் வெளியானது.

குருவும் சீடனும்

இதைவிட இன்னும் ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்ன தெரியுமா? தமிழகத்தை பாழாக்கிக் கொண்டு இருக்கின்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று, தற்போது சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலை போர்க்கால வேகத்தில் தமிழம் முழுவதும் நடக்க வேண்டும் என்று நீதிஅரசர் செல்வம் அறிவித்தார் அல்லவா? 20 ஆண்டுகளுக்கு முன்பே 1997 இல் அண்ணாச்சி அவர்கள் வெளியிட்ட தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் சீமைக் கருவேல மரங்கள் விவசாயத்தையும் அழித்து, நிலத்தடி நீரையும் உறிஞ்சி சுற்றுச் சூழலையும் நாசமாக்குகிறது என்பதால் அவற்றை முற்றாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றே எவ்வளவு தொலைநோக்கோடு பரிந்துரை செய்து உள்ளார்!

தெற்கு சீமை மண்ணின் மைந்தன் அல்லவா அவர். அந்த குருநாதரின் சீடன் அல்லவா நான். எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

இயற்கையின் எழிலில்...

இப்போது திருப்புடைமருதூருக்குச் செல்வோம்.

அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்குத் தனது ஊரான திருப்புடை மருதூர் மீது எல்லையில்லாத பற்று, பாசம், காதல் என்றும் சொல்லலாம். வீர மார்த்தாண்டேஸ்வரர் எனும் பாண்டிய மன்னர் கட்டிய கோயில்தான் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நாறும்பூநாதசாமி திருக்கோயில் ஆகும்.

முழு நிலவுக்கு இரண்டு நாள் முன்னதாக திருப்புடைமருதூருக்குச் சென்றேன். எனது உயிர் நண்பர் குட்டி என்ற சண்முக சிதம்பரம், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் உடன் வந்தனர்.

முதல்நாளே அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும், அவர்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்க்கையின் பாக்கியம் என்று கருதுகிற வழக்கறிஞர் தம்பி ராஜா அவர்களும் திருப்புடைமருதூர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அண்ணாச்சி அவர்களின் தம்பி நீதிபதி சுப்பிரமணியம் அவர்களும், அமெரிக்காவில் பணியாற்றும் அவரது மகன் மோகனும், அண்ணாச்சி அவர்களின் மகன் அமெரிக்காவில் இருக்கும் சேகரும் அங்கு வந்திருந் தார்கள்.

மாமரங்களும், கனி மரங்களும் நிறைந்த அழகான தோட்டத்துக்கு நடுவில் அண்ணாச்சி அவர்களின் இல்லம் அமைந்து இருக்கின்றது. ஊர் மக்கள் திரண்டு இருந்து என்னை வரவேற் றார்கள்.

கேரள மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் எல்லைக்கோடாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் அமைந் துள்ள ஒரு அழகிய திருத்தலம்தான் திருப்புடைமருதூர் ஆகும். இடைப் பட்ட பகுதியில் பல இடங்களில் ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்த்தியாக வளர்ந்த செடிகளுக்கு இடையில், காட்டு விலங்குகளும், வண்ணப்பறவைகளும் தங்கள் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டு உள்ளன. இன்றைக்கும், ஸ்திரேலி யாவில் இருந்தும் மற்ற பல நாடுகளில் இருந்தும் வருகின்ற பறவைகள் திருப்புடை மருதூருக்கு வந்து, நதிக்கரை யோரத்து மரங்களில் சில காலம் தங்கிச் செல் கின்றன.

திருப்புடை மருதூருக்கு மேற்குப் பக்கத்தில் ஒடி வருகின்ற வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், கடனா நதி உள்ளிட்ட பல சிற்றாறுகள் வந்து இணைகின்றன. தென்புறத்தில் இருந்து வருகின்ற மணிமுத்தாறு ஆறும் அங்கே பொருநையோடு கலக்கின்றது. இது வரையிலும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து வருகின்ற தாமிரபரணி, திருப்புடைமருதூருக்கு வட மேற்கு

மூலையில்தான் கிழக்கு நோக்கித் திரும்பு கின்றது. அப்படிப் பொருநை நதியின் மேற்குக் கரையும் வடக்குக் கரையும் இணைகின்ற இடத்தில்தான் இந்த அழகிய நல்லூர் அமைந்து இருக்கின்றது.

திருப்புடைமருதூர் திருக்கோயில்

இந்த எழில் கொஞ்சும் நிலத்தில்தான், அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை திரு நாறும்பூநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடு களுடன் கூடிய அழகான ஐந்து அடுக்குக் கோபுரம் பாங்குடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றது. இங்குள்ள கல் மண்டபங்கள் வனப்பு வாய்ந்தவை. பல்வேறு காட்சிகள் அங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆயுதம் ஏந்திய படைவீரர்களின் அணி வகுப்பு, பாயும் சிறுத்தையை ஈட்டியால் குத்திக் கொல்லும் வீரன், யானையை மடக்கிப் பிடித்துக் கொண்டு செல்லும் சிலை; காளை மாடுகள் மோதிப் போரிடும் காட்சி, குதிரை வீரனும் தரைப்படைச் சிப்பாயும் பொருதுகின்ற சிலை; வாள் வீரனின் சிலை உள்ளிட்ட எண்ணற்ற பல சிலைகள் கலைநயத்துடன் அமைந்து உள்ளன.

பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான கருவூர்ச் சித்தர், தாமிரபரணியின் வட கரையில் நின்று கொண்டு, இந்த ஆலயத்திற்கு வர முனைந்த போது, நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்தது. அதைக் கடந்து வர முடியாத நிலையில், கருவூர்ச் சித்தர் குரல் எழுப்புகின்றார். ‘வண்ண மலர்களின் இனிய நறுமணம் பரப்புகின்ற நாதா, நாறும்பூ நாதாஎன அவர் அழைத்தவுடன், நாறும்பூ நாத சுவாமி, கொஞ்சம் இடப்பக்கம் சாய்ந்து செவி மடுத்ததாகவும், அப்போது மோசசுக்கு செங்கடல் பிளந்தது போல, பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணித் தண்ணீர் இரண்டாகப் பிளந்து வழி விட்டதாகவும், அவர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டதாகவும் தல வரலாறு கூறுகின்றது.

நான் உற்றுக் கவனித்தேன். நாறும்பூ நாதருடைய சிலையின் முகம் சற்றே இடது பக்கம் சாய்ந்து இருப்பது போலவே காட்சி அளிக்கின்றது.

இங்கு அமைந்துள்ள சிற்பங்களுள் ஒரு சிற்பம் குறித்துக் கூறியாக வேண்டும். அது, வெள்ள எச்சரிக்கை தரும் வானரச் சிற்பம் (குரங்கு).

இது கோவிலின் தைப்பூச மண்டபத்தில் இருக்கின்றது. ஒரு குரங்கு தண்ணீரில் குதிப்பது போலக் காட்சி அளிக்கும். அதாவது தாமிரபரணித் தண்ணீர் உயர்ந்து கொண்டே வந்து, குரங்கின் வாயை நெருங்கினால் வெள்ளம் ஊரைச் சூழ்ந்து விடும் என்ற எச்சரிக்கையை உணர்த்துகின்ற வகையில் அந்தச் சிலையை வடித்துள்ளனர். அந்த நிலையில், ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, ஊரை விடப் பதினைந்து அடி உயரமான அந்த மண்டபத்திற்கு ஆடு மாடுகள் பொருள்களோடு வந்து பாதுகாப்பாகத் தங்கிக் கொள்வார்களாம்.

இத்தகைய காட்சியை வடித்த நம் முன்னோர்களுடைய நுண் அறிவு, வருமுன் காக்கும் மதிநுட்பம், வாழ் வியல் சிறப்புகளை எண்ணுகையில், இந்த மண்ணில் பிறந்தோமே என்ற பெரு மிதத்தில் மகிழ்ச்சி சிறகடித்து விண்ணில் பறக்கின்றது.

ஆலயத்திற்குள் நுழைகின்ற இடத்தில், மாமன்னர் வீர உதய மார்த்தாண்டவர்மர் சிலை இருக்கின்றது. இறைவன் இருக்கும் திசை நோக்கி, மார்த்தாண்டவர்மன் இருகரம் கூப்புகின்றபோது, சிறிது கூட வளையாமல் நிமிர்ந்து நின்றவாறே வணங்குகிறான். பரம்பொருளை வணங்கும் போது கூடத் தமிழன் தலை குனிவது இல்லை என்பதை உணர்த்து வதுதான் இந்தச் சிலை.

ஆனால் இன்றைக்கோ அரசியல் தலைவர் களைக் கண்டமாத்திரத்தில், அர்ச்சுனன் ஏந்திய காண்டீபம் போல வில்லாக மேனியை வளைந்து, நெடுஞ்சாண்கிடை யாக வீழ்ந்து பணிகின்ற பரிதாபத்தைப் பார்க்கின்றோம். சிலர் தங்கள் முதுகு எலும்பையே கழற்றி வைத்து விட்டார்கள். இப்போது ஒரு தலைவருக்குப் புதிய ஞானோதயம் வந்திருக்கின்றது. திடீர் இட்லி, திடீர் சாம்பார் என்பது போலக் காலில் விழக்கூடாது என்று ஒரு திடீர் அறிவிப்பு. அதற்கு முதல்நாள் வரையிலும் முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் தன் காலில் விழுந்து கிடப்பதைக் கண்டு ரசித்து ஆனந்தம் அடைந்து கர்வத்தில் திளைத்தவர்களுக்கு, சில உபதேசிகள் சொல்லி இருக்கின்றார்கள். ‘காலில் விழக் கூடாது; கட் அவுட் வைக்கக் கூடாது என்று சொன்னால் நமக்கு ஒரு மதிப்பு ஏற்படும்என்று.

அடப் பைத்தியக்காரர்களே, 23 ஆண்டு களுக்கு முன்பே இதனைக் கட்டளை களாகப் பிறப்பித்து, எழுச்சி நடை பயணத்தில் வழிநெடுகிலும் பிரச்சாரம் செய்து, இன்றுவரையிலும் கடைப்பிடித்து வருபவன் அடியேன் என்பது, ஞாபக மறதி இல்லாதவர்களுக்கு நினைவு இருக்கும்.

இதை மையமாக வைத்துத்தான், ‘மாமன் மகள்திரைப்படத்தில் புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் கழுத்தில் கருப்புத் துண்டைப் போட்டுக்கொண்டு, தன் காலில் விழுந்தவனைக் கன்னத்தில் ஓங்கி அறையும் காட்சியை அமைத்தார்கள்.

சுரங்கங்கள் சொல்லும் செய்தி என்ன?

திருப்புடை மருதூர் ஆலயத்திற்கு மற்றொரு சிறப்பு என்ன என்றால், இங்கே இரண்டு சுரங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஆலயத்திற்குள் நுழையும் இடத்தில் இருக்கின்றது. நதியையும் கடந்து களக்காடு வரையிலும் செல்வதாக ஒரு செய்தி இருக்கின்றது. எதிரிகள் படையெடுத்து வரும்போது, இந்தச் சுரங்கத்திற்கு உள்ளிருந்தவாறே தாக்கு வதற்கான வாய்ப்புகள் இருந்தன என்றும் சொல்லப்படுகின்றது. அந்தச் சுரங்கம் எவ்வளவு தொலைவுக்குப் போகின்றது என்பதை அறிய ஓர் ஆராய்ச்சி தேவை.

மற்றொரு சுரங்கம் கரு அறைக்கு அருகில் இருக்கின்றது. அதற்குள் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு இருப்ப தாகவும், ஒரு கட்டத்திற்கு அப்பால் போக முடியாமல் ஒரு கல் அடைத்து இருப்ப தாகவும் சொல்கின்றார்கள். அதையும் கடந்து உள்ளே என்ன இருக்கின்றது என்பதைத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தச் சுரங்கத்திற்கு மேற்குப் புறம், தரை மட்டத்தில் இருந்து பதினைந்து அல்லது இருபது அடிகள் உயரத்தில் ஒரு வாசல் இருக்கின்றது. அதில், உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம்; வெளியில் இருந்து உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியாது. அந்தச் சுரங்கத்திற்குள் நான்கு அறைகள் இருக்கின்றன. அதற்குள் ஏதோ ஒரு வரலாற்று உண்மை மறைந்து இருக் கின்றது.

ஆலயத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய ராஜகோபுரம் எழுப்புவதற்கு அடித்தள மாக நாட்டப்பட்ட நான்கு கல் தூண்கள் விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொன்றும் தரையில் இருந்து இருபத்து ஐந்து அடி உயரம்; தரைக்கு உள்ளே இருபது அடி ஆழத்திற்கு வேர் ஊன்றி நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை. இவ்வளவு பாரம் கொண்ட கற்களை எப்படி இங்கே கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்பதை எண்ணுகையில் வியப்பாக இருக் கின்றது. ஆனால், அந்த ராஜகோபுரம் எழுப்பப்படவில்லை.

ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர், களக்காட்டுப் பகுதியை ஆட்சி புரிந்த வீர மார்த்தாண்டவர்மனால் கட்டப்பட்ட இந்தக் கோவிலைக் கட்டிய அந்த மன்னரையே, ‘வீர மார்த்தாண்டேசுவரர்என்று மக்கள் அழைக்கின்றார்கள்.

அண்ணாச்சியின் திருப்பணி

இத்தகைய பெருமைகள் நிறைந்த இந்த ஆலயம், சரியாகப் பராமரிக்கப்படாமல், வண்ணம் குலைந்து, காலப்போக்கில் சிதிலமாகி விடுமோ என்ற அச்சத்தில் பக்தர்களும், ஊர் மக்களும் கொண்ட கவலையைப் போக்கும் அருட்கொடை யாக வாய்த்தவர் அண்ணாச்சி நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் ஆவார்கள். இந்த ஆலயத்திற்குத் திருப்பணி செய்து புத்தம் புதுப் பொலிவு பெற அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எண்ணில் அடங்காதவை. பக்தி மனம் கொண்ட பெரும் செல்வந்தர்களின் துணையை நாடி, திருப்பணியைச் சிறப் பாகச் செய்து முடித்தார்.

இந்த ஆலயத் திருப்பணியை நிறை வேற்ற என்ன செய்வது என்று திகைத்து இருந்த காலத்தில், சென்னை வழக்கறிஞர் பிச்சை என்பவர், காஞ்சி சங்கராச்சாரியார் உங்களை மடத்தில் சந்திக்க விரும்பு கிறார் என்று அழைத்தார்கள். அவர் திருப்புடை மருதூருக்கும் வந்து வழி பட்டு இருக்கின்றார். நானும் என் குடும்ப உறுப்பினர்களும் மடத்திற்குச் சென்று, பெரியவாளைச் சந்தித்தோம். ‘திருப்புடை மருதூர் ஆலயத் திருப்பணி செய்ய வேண்டும்; நான் உச்சநீதிமன்ற நீதிபதி. எனவே, நான் நிதி திரட்டுவது இயலாத காரியம் என்றேன்.

அதற்குப் பெரியவர், நீங்கள் போய்த் திருப் பணி வேலையைத் தொடங்குங்கள். நிதி தானாக வரும் என்று அவர் சொன்னார்.

அதன்படி, புகழ் வாய்ந்த தொழில் அதிபர் பிர்லா அவர்கள் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தது. பிரியம்வதா அம்மை யாரைச் சந்தித்தேன். திருப்புடை மருதூர் ஆலயத் திருப்பணிச் செலவுகளுக்கான பெருந்தொகையைத் தருவதாக அந்த அம்மையார் ஒப்புக் கொண்டார்

என்று அண்ணாச்சி எழுதி இருக்கின்றார்.

மதுரை தியாகராயர் நூற்பு ஆலையின் தலைவர் திரு கருமுத்து கண்ணன் அவர் களும், கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லூரித் தாளாளர் திரு கே. இராமசாமி அவர்களும் திருப்பணிக்குழுவில் இடம் பெற்றனர். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழக அரசில் இருந்து திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கினார். திருப்பணி முடிந்து குடமுழுக்கு விழா (மகா கும்பாபிசேகம்) 1995 ஏப்ரல் 5 ஆம் நாள் அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு ஆர் வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் சீரும் சிறப்புமாக நடை பெற்றது.

2010 ஆம் ஆண்டு, இரண்டாவது குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிச் செலவை, டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு சீனிவாசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வுக்கு அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் இரண்டாவது அன்புமகன் அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கின்ற ரவிச்சந்திரன் நிதி உதவி செய்கின்றார். அவர், அமெரிக்காவின் சிறந்த இளம் தொழில் முனைவர் விருதினை அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் அவர்களிடம் பெற்ற புகைப்படம், அண்ணாச்சி அவர்களின் விருந்தினர் மாளிகையில் இடம் பெற்று இருக்கின்றது. கோவில் குடமுழுக்கு விழாவுக்கும் ரவிச்சந்திரன் பெருநிதி தருகின்றார்.

இந்த ஆலயம், பாண்டிய மன்னனால் கட்டப்பெற்றது; சேர மன்னர்கள் பரா மரித்து உள்ளனர்; சோழப் பெரு வேந்தன் ராஜராஜ சோழன் வந்து வழிபட்டு இருக்கின்றான். நாயக்க மன்னர்களும் திருப்பணி செய்து இருக் கின்றார்கள்.

திருப்புடைமருதூர் கிராமத்தை சுத்த மாகவும் அழகாகவும் பராமரித்து வருவதற் காக, அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோமு அவர்களுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் விருது வழங்கி உள்ளார்.

அண்ணாச்சியை வாட்டும் வேதனை

இத்தகைய சிறப்புகளைக் கொண்டு இருக்கின்ற திருப்புடை மருதூர் ஆலயத்தை, மீண்டும் புத்தம்புது ஆலய மாக ஆக்கித் தந்த பெருமைக்குரிய அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்களுடைய பூர்வீகம் இந்த ஊர்தான் என்றாலும், அவர் பிறந்தது திருவனந்த புரத்தில்தான். அவரது தந்தையார் பெயர் சுப்பையாத் தேவர் ஆகும். அண்ணாச்சி பிறந்த மூன்றாம் நாளே அவரது தாயார் இயற்கை எய்தினார். இந்த சோகம் அவருக்குள் வாழ்நாள் நெடுகிலும் ஆழ்மனதில் அடிவாரத்தில் இருந்ததால்தான், தான் தாயைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி இருக்கின்றார். அந்தக் கவிதையை இங்கே தருகிறேன்.

Amma, Amma, I was conceived in your stomach...

Amma, I took asylum in your stomach for ten months

I was freed from asylum after ten months

Amma, you did not even look at me but showed your closed eyes...

Amma, I did not even taste your saliva as you did not even put

me on your lap and kiss me...

I cried out, for breast feeding but you turned your deaf ear...

I cried out, cried out...but you were dumb bounded...

You left me as a motherless child..

You left my father as a widower...

Oh my God ! What we can do !

அண்ணாச்சி திருப்புடைமருதூரில் வளர்ந்த காலத்தில் சிலம்பம், குஸ்தி, என வீரக் கலைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். இன்றைக்கு 89 ஆம் அகவை யிலும், ஆலயத்திற்கு என்னையும் அழைத்துச் சென்று அத்தனைப் படி களிலும் ஏறி, ஆலய பிரகாரம் முழுமையும் சுற்றி நடந்து வந்தார். பிரதான வாயிலைக் கடந்தபோது நான் சொன்னேன்:

அண்ணாச்சி, 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.வி.சுப்பையா அவர்களை நீங்கள் இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்தீர்கள். அப்போது உங்க ளோடு நானும் வந்து, இதே பிரகாரத்தில் சுற்றி வந்தது நினைவு இருக்கின்றதுஎன்றேன்.

ராஜா

பத்து அடி தொலைவு நடந்து இருப்போம். அங்கே ஒரு கல்வெட்டு இருந்தது. அதில், அமைச்சர் கே.வி.சுப்பையா அவர்கள் பெயரும், அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்தது. 1969 ஏப்ரல் 15 என்று தேதியும் இருந்தது. அண்ணாச்சியுடன் வந்த வழக்கறிஞர் தம்பி சண்முகசுந்தரம் என்ற இராஜா, என் நினைவு ஆற்றலை அண்ணாச்சியிடம் சொல்லி வியந்தார். இந்த ராஜாவின் தந்தை திருநாவுக்கரசு. நான் நெல்லை மாவட்ட மாணவர் தி.மு.. செயலாளராக இருந்தபோது, இந்துக் கல்லூரி மாணவர் தி.மு..வில் இருந்தார். எனக்கு நல்ல நண்பர். அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்களைக் கண்ணுக்கு இமை போலக் கடந்த 12 ஆண்டுகளாக அருகில் இருந்து சேவை செய்யும் ராஜாவை எண்ணும்போது, பாரதியின் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. படிக்காத மேதை திரைப்படத்தில் குடும்பத் தலைவர் ரங்காராவுக்குச் சேவை செய்யும் ரங்கனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். ‘நண்பனாய், மந்திரியாய், பார்வையிலே சேவகனாய், பண்பிலே தெய்வமாய்என்ற பாரதியின் பாடல் வரிகள் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு ரங்கன்தான் இந்த ராஜா.

இரண்டாம்

வீர மார்த்தாண்டேசுவரர்

நாங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறு வதற்கு முன்பு, மன்னர் சிலைக்கு முன்னால் இரு கரம் கூப்பியவாறு, இரண்டாம் வீர மார்த்தாண்டேசுவரர்தான் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் என்று சத்தமாகச் சொன்னேன். அதைக் கேட்டு ஊர் மக்கள் குதூகலித்தார்கள். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்கள். சிகாகோவில் வசிக்கின்ற அண்ணாச்சி மகன் சேகர், அண்ணாச்சி அவர்களின் ஒன்றுவிட்ட தம்பி முன்னாள் நீதிபதி சுப்பிரமணியம் அவர்களின் மகன் மோகன் ஆகியோருடன் படம் எடுத்துக் கொண்டேன்.

1983 ஆம் ஆண்டு தி.மு..வில் நான் அமைத்த தொண்டர் படையில் இடம் பெற்று இருந்த திருப்புடை மருதூரைச் சேர்ந்த பண்பு மிக்க மூக்காண்டியைச் சந்தித்தேன். நன்கு உருண்டு திரண்ட உடல்வாகு. தெற்கத்தி மீசை. அவரைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீதிபதி அண்ணாச்சிக்கோ தாங்க முடியாத மகிழ்ச்சி.

என் நெஞ்சமெங்கும் ஆனந்த அலைகள் மோதின. அன்றைய இரவிலேயே மதுரை வந்து சேர்ந்து, காலை விமானத்தில் பறந்து சென்னை தாயகத்திற்கு வந்தேன்.

கழக அமைப்புக்கு இடைத்தேர்தல்

கழகப் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், ஆட்சிமன்றக்குழு உறுப் பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுக் களைத் திரும்பப் பெறுவதற்கான காலக் கெடு 8 ஆம் தேதி பிற்பகல் 3 மணி ஆகும்.

பொருளாளராக அ. கணேசமூர்த்தி,

துணைப் பொதுச்செயலாளராக செஞ்சி ஏ.கே. மணி,

ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், டாக்டர் சந்திரசேகரன், மதுரை பூமிநாதன், உளுந்தூர்பேட்டை ஜெயசங்கர் ஆகியோர், போட்டி ஏதும் இல்லாமல் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

உயர்நிலைக்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர் வீரபாண்டியன், வேலூர் சுப்பிரமணி ஆகியோர் புதிதாகச் சேர்க்கப் பட்டனர். அனைவருக்கும் வாழ்த்து களைத் தெரிவித்துப் படம் எடுத்துக் கொண்டேன்.

அன்று மாலையில், குரோம்பேட்டை கழகக் கண்மணி தாணுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, திராவிட இயக்கத்திற்கு அரும்பாடுபட்ட, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காயாம்பூ அவர்களின் மறைவு குறித்து, அவரது மகன் கூடுவாஞ்சேரியில் வசிக்கும் பொறியாளர் துரைமுருகன் அவர்களுடைய இல்லம் சென்று இரங்கல் தெரிவித்துவிட்டு, நடுநிசி கடந்து விக்கிர வாண்டி போய்ச் சேர்ந்தேன்.

கழக விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளர் அன்புச் சகோதரர் பாபு கோவிந்தராஜ் அவர்களுடைய அன்பு மகள் திருமணத்தில், நானும் துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா ஏ.கே. மணி மற்றும் பல மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றோம்.

தன்னம்பிக்கையின் உதயம்

இந்தத் திருமண விழாவுக்கு வந்த ஒருவரைச் சந்தித்தபோது, என் மனம் பெருமிதத்திலும் கவலையிலும் ஒரு சேர அலைமோதியது. அவரை ஏற்கனவே சங்கொலி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றேன். கடலூர் மாவட்டம் மங்களூரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே, ‘தன்னம்பிக்கையின் உதயம் சிறு வணிகம் என்று பெயர் பொறித்த ஒரு சிறிய கடை வைத்துள்ளார். அந்த விளம்பரப் பலகையில், திருடாதே! பொய் சொல்லாதே !! பிச்சை எடுக்காதே !!! என்ற வரிகளைப் பொறித்து இருக்கின்றார்.

அவர்தான், கிராம சேவகராக இருந்து ஓய்வு பெற்று உடல் மிகவும் நலிந்த நிலையிலும், கழகத்திற்கு என்று ஒரு சிறிய உண்டியலை அக்கடையில் வைத்து, ஆண்டுதோறும் அதில் சேரு கின்ற பணத்தையும், அவரது மாத ஓய்வு ஊதியத்தில் இருந்து நூறு ரூபாயும் சேர்த்து, நடமாட முடியாத நிலையிலும் கம்பு ஊன்றித் தள்ளாடி நடந்து வந்து, என்னிடம் நிதி கொடுக்கும் பெரு வள்ளல் மங்களூர் ஜெயராமன் ஆவார்.

நான் அதிக நாள்கள் வாழப் போவது இல்லை. என் இறுதி மூச்சு பிரிகின்ற வரை கழகத்திற்கு நிதி கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று சொல்லும் உத்தமர். அவர் இந்த பிப்ரவரி 9 ஆம் தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே தருகிறேன்.

பிரிய சகோதரர் அவர்களுக்கு,

மங்களூர் ஜெயராமன் எழுதிக் கொண்டது. 7.8.16 அன்று திருவண்ணாமலையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்து கொண்டு, திருவண்ணாமலை வந்து தங்களைச் சந்தித்தேன். அன்று, ஓய்வு ஊதியத்தில் இருந்து, கழக வளர்ச்சி நிதியும், பொதுமக்களிடம் இருந்து பெற்ற நிதியையும் தங்களிடம் அளித்து நிம்மதி அடைந்தேன்.

அடுத்து, 7.9.16 நெய்வேலி விருந்தினர் மாளிகைக்கு வருகின்றீர்கள் என்ற செய்தியைக் கேட்டு, நெய்வேலி வந்து, விருந்தினர் மாளிகை இருக்கும் இடம் தெரியாமல், சுமார் இரண்டரைக் கிலோ மீட்டர் நடந்து வந்து, எப்படியும் சேத்தியாத்தோப்பு செல்வதற்குள் சந்திக்க வேண்டி பயத்துடன் விருந்தினர் மாளிகையில் தங்களைச் சந்தித்து கழக வளர்ச்சி நிதி அளித்தேன்.

9.2.17 அன்று விக்கிரவாண்டி வருகின் றீர்கள் என்ற தகவலை பிரசாந்த் அவர்கள் அலைபேசியில் சொன்னவுடன், ஒன்றிய அலுவலகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகள் சரியாக எவரும் வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை யாதலால், பொதுமக்களிடம் நன்கொடை எதுவும் பெற முடியவில்லை. இருந்தாலும் எனது ஓய்வு ஊதியத்தில் இருந்து அக்டோபர் 16, நவம்பர் 16, டிசம்பர் 16, ஜனவரி 17 பிப்ரவரி 17 ஆகிய ஐந்து மாதங்களுக்கான ரூபாய் ஐநூறை அளிக்கின்றேன். அருள் கூர்ந்து பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த சந்திப்பின்போது, நன்கொடை பெற்று இன்றைய குறையை நிவர்த்தி செய்து விடுகிறேன்.

பணிவுள்ள, ஜெயராமன் - 09.02.2017

நம்முடைய இயக்கம் இத்தகைய ஜெயராமன்களால்தான் உயிர்த்துடிப் புடன் இயங்குகின்றது. அறிஞர் அண்ணா அவர்கள் கழகம் தொடங்கிய நாள்களில் கூறியதுபோல ஏழை எளியோர் பொருளா தார வசதி குறைந்த மக்கள், நடுத்தர மக்கள் இவர்களால்தான், அவர்கள் தரும் நிதியில்தான் கழகம் வளர்கிறது என்று சொன்ன வாசகங்கள், நம்முடைய இயக்கத்திற்குத்தான் மிகவும் பொருந்தி வருகின்றன. எந்தப் பதவியிலும் இல்லாத கழகக் கண்மணிகள் இலட்சோபலட்சம் பேர், தங்கள் சக்திக்கு மீறிச் செலவழித்துக் கழக நிகழ்ச்சிகளுக்கு வருவதும், நிதி உதவி செய்வதும், நம் இயக்கத்தை வாழ வைப்பதை எண்ணிப் பெருமிதம் அடை கின்றேன்.

நமது இயக்கத்தின் 25 ஆவது பொதுக் குழு வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி யன்று, கோவை மாநகரில் நடைபெற இருக்கின்றது. 1997 ஏப்ரல் 21 இல் கோவையில் நடைபெற்ற கழகத்தின் நான் காவது பொதுக்குழுவுக்குப் பின்னர் 20 ஆண்டுகள் கழித்துக் கோவை மாநகரில் கழகப் பொதுக்குழு கூடுகின்றது. முதல் நாள் காலையில் உயர்நிலைக் குழுக் கூட்டமும், மாலையில் மாவட்டச் செய லாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளன.

கடந்த பொதுக்குழுவைப் போலவே இந்தப் பொதுக்குழுவுக்கும் சிறப்பு அழைப்பு கிடையாது.

தமிழக அரசியலில் பரபரப்பான திருப் பங்கள் அரங்கேறி உள்ள நிலையில், தமிழக மக்கள் நலனையே குறிக் கோளாகக் கொண்டு, எந்தவித ஆரவாரமும் இன்றி, கருமமே கண்ணாக, தமிழகத்தின் வருங்காலத் தலைமுறை யினரின் நலனையே தொலைநோக்காகக் கொண்டு நாம் இயங்கி வருவதை அனைத்துத் தரப்பினரும் பாராட்டு கின்றனர்.

காந்தாரி தன் வயிற்றில் அம்மிக்குழவியை இடித்துக் கொண்டது போல், நமக்குக் கிடைத்து வரும் நற்பெயரைக் கண்டு எரிச்சல் அடைகின்ற காவேரி மருத்துவ மனை கலவரக் கூட்டம் ஏளன மொழி களை வீசி மீம்ஸ் போடுவது, கேலி கிண்டல் பரிகாசம் செய்வதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நம்முடைய வளர்ச்சி யாரை அச்சுறுத்து கின்றதோ, அவர்கள்தான் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றார்கள். பாவம், பரிதாபத்திற்குரியவர்கள்!

கம்பீரமாகத் தலைநிமிர்ந்து, செம்மாந்த நடை போட்டு, வீறுகொண்ட உணர் வுடன் நாம் பயணிக்கின்ற வேளையில் பொதுக்குழு கூடுகின்றது!

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,

வைகோ

சங்கொலி, 24.02.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)