சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் -3 நினைவூட்டும் இரத்த்த் துளிகள்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Fri, 05/05/2017

 

 

 

 


சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் -3

நினைவூட்டும் இரத்த்த் துளிகள்

 

இமைப்பொழுதும் நீங்காது

என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

 

 

மிழகமெங்கும் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டு விட்டார்கள்; டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆவேசத்துடன் போராடுகின்றனர். சில இடங்களில் நம் வீர மங்கையர் டாஸ்மாக் கடைக்கதவுகளை உடைத்து, மதுப்புட்டிகளை சாலையில் உடைத்து நொறுக்குகின்ற காட்சிகளை ஏடுகளில் படங்களாகப் பார்க்கின்றேன். நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டு இருந்த சாராயக்கடைகளை அகற்றிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினால், வேறு இடங்களைத் தேடி அமைக்க அரசு முனைகின்றது. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அதிகாரிகள் முனையும்போதே தாய்மார்களும், மாணவர்களும் திரண்டு எழுந்து முற்றுகையிட்டுத் துரத்துகின்ற காட்சிகள் தமிழகம் எங்கும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. மாணவர்களும் களம் புகுந்துவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் மதுக்கடையை அகற்றக்கோரி 7 வயது சிறுவன் ஆகாஷ், “குடியை விடு; படிக்க விடுஎன்ற பதாகையை தாங்கியவாறு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றதோடு, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய செய்தி என் நம்பிக்கையைக் கூட்டுகிறது.

எவ்வளவு பெருமையாக இருக்கிறது நமக்கு! பெருமிதத்தால் நெஞ்சம் பூரிக்கிறது; புளகாங்கிதம் கொள்கின்றது!

இதை தானே சொன்னேன் 2015 ஆகஸ்டு இரண்டாம் நாள் கலிங்கப்பட்டியில் வெடித்த அறப்போர்க்களத்தில்....

தாய்மார்களே, புறநானூற்று வீராங்கனைகளே புறப்படுங்கள்! டாஸ்மாக் கடை களை முற்றுகையிடுங்கள்! மாணவர்களே, உடைத்து நொறுக்குங்கள் மதுபாட்டில்களைஎன்று முழங்கினேன். 

ஏடுகள் என் போர்ப் பிரகடனத்தை வெளியிட்டன. ஏன்? சில ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னைக் கடுமையாக விமர்சித்தன. கலவரத்தைத் தூண்டுகிறார் என்றன.

ஆம்; தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க தாய்மார்களும், மாணவர்களும்தான் கிளர்ந்து எழ வேண்டும் என்றேன். என் மீதும் என் தம்பி வை.ரவிச்சந்திரன் மீதும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 53 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவாயிற்று.

திடீரென்று ஒரு நாள் இப்படி அறைகூவல் விடுக்கவில்லை.

2004 இல் 1200 கி.மீ., தொலைவு, 2012 இறுதியிலும் 2013 தொடக்கத்திலும் கோடை வெயிலிலும் 1300 கி.மீ., தொலைவு வெயிலிலும், மழையிலும் தொண்டர் படை, இளைஞர் அணி, மாணவர் அணியினருடன் சேர்ந்து, “மதுவைஒழிப்பது ஒன்றே தமிழகத்தைக் காப்பாற்றும் எனக்  கால்கடுக்க நடந்தேனே!

வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், குறிப்பாக ஏழைத் தாய்மார்கள்  என்னை வரவேற்று,

ஐயா, உங்களுக்குப் புண்ணியமாகப் போகும், இந்த டாஸ்மாக் கடைகளை மூடுங்கய்யா. சாராயக்கடைகளை விரட்டுங்கய்யா. எங்கள் பிள்ளைகளும் குடிச்சுக் கெட்டுப்போகுது. புருசன் குடிச்சிட்டு வந்து அடிக்கிறான். சம்பாத்தியம் எல்லாம் டாஸ்மாக் கடைக்குத்தான் போகுது. எங்க பொம்பளப் புள்ளைங்க பத்திரமா எங்கேயும் போயிட்டு வர முடியலைங்கய்யா, வீட்டிலே கூட பாதுகாப்பா இளம்பெண்கள் இருக்க முடியலையா என்று கதறி அழுதனரே! பல இடங்களில் சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளை, சிறுமிகளை மது அருந்திய மிருகங்கள் நாசமாக்கிக் கொலை செய்யும் செய்திகள் நம் நெஞ்சையே நடுங்கச் செய்தனவே..

13 ஆண்டுகள் இடைவிடாது போராடி வந்துள்ளோம்.

மது ஒழிப்பு மாரத்தான்

மாணவர்கள் மத்தியில் மது ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த, “மாணவர் மாரத்தான் ஓட்டப் பந்தயங்களை நமது இளைஞர் அணிச் செயலாளர் ஆருயிர் இளவல் பொறியாளர் ஈஸ்வரன் திட்ட மிட்டு நடத்தியபோது அதில் பங்கு கொண்டேன்.

கோவை மாநகரில் 24,000 மாணவ, மாணவிகளும், திருச்சி மாநகரில் 42,000 மாணவ, மாணவிகளும், தலைநகர் சென்னையில் 59,500 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். முறைப்படி பள்ளிகள், கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கொடுத்ததால் அவர்கள் திரண்டு வந்து  பங்கேற்றனர்.

இவையெல்லாம் தமிழகத்தில் நம் இயக்கத்தைத் தவிர வேறு எவரும் செய்யாதவை!

மதுக்கடைகள் மூடப்படும்போது என் வீரத்தாய் மாரியம்மாள் நினைவுதான் என் இதயத்தில் எழுகின்றது. இந்த அறப் போரில் ஈடுபட்டதால் உடல் நலிந்து அறுபதாம் நாள் உயிர் நீத்த வீராங்கனையன்றோ என்னைப் பெற்ற அன்னை!

கலிங்கப்பட்டி அறப்போர் குறித்து ஊராட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அதன் தீர்ப்பு, எதிர்த்த தமிழக அரசின் மூக்கை உடைத்த உச்ச நீதிமன்றம். இந்த விபரங்களை எல்லாம் இம்மடலின் பிற்பகுதியில் எழுதுகிறேன்.

தமிழகத்தின் ஆபத்து உதவிகள்

தமிழக நலன்களுக்கு ஆபத்து நேர்வதை முன் கூட்டியே சரியாகக் கணித்து எச்சரிக்கை மணி அடிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்!

அபாய அறிவிப்புக் கொடுப்பதும், மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது நாம்தான்!

கிளர்ச்சியில் ஈடுபடுவதும் நாம்தான்!

தமிழ்நாட்டின் ஆபத்து  உதவிகளே நாம்தானே!

தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தை அடியோடு நாசமாக்கி மண்ணை மலடாக்கி விவசாயத்தைச் சீர்குலைக்கும் வேலிக்காத்தான் எனப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, 2015 ஆம் ஆண்டு நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்ததும், அதன் விளைவாக மாட்சிமைதங்கிய நீதியரசர் செல்வம் அவர்களும், நீதியரசர் பொன்.கலையரசன் அவர்களும் நீதித்துறை வரலாற்றில் பொன்னேடு படைத்த தீர்ப்பைத் தந்ததும், இன்று தமிழகமெங்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் நடப்பதும், செயல்படாத துறைகள், மத்திய அரசின் இரயில்வே துறை உட்பட நீதிமன்றக் கூண்டில் ஏறி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதும், நமது கழகத் தோழர்கள் அனைத்து இடங்களிலும் இந்த தூய நற்பணியில் முழு முனைப்பாக ஈடுபட்டு இருப்பதும், நம் இயக்கத்துக்குப் பெரும் புகழை ஈட்டியுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும், அதேபோன்று யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற முனைந்து இருப்பதும் திடீரென்று ஏற்பட்ட ஞானோதயமும் அல்ல; அரசியல் லாபம் கருதிக் களம் காணும் நோக்கமும் அல்ல என்பதற்குச் சரியான ஆதாரத்தைத் தருகின்றேன்.

வேடசந்தூர் தீர்மானங்கள்

12 ஆண்டுகளுக்கு முன்னரே 2005 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நாம் நடத்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மறுமலர்ச்சி மாநாட்டை நினைவூட்டுகிறேன்.

இம்மாநாட்டில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ஒரு மணி நேரம் முழங்கினார். இம்மாநாட்டில்தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி பங்கேற்று வைகோ நாடாளுமன்றத்துக்கு இந்தக் கட்டத்தில் வந்திருந்தால் தென்னக நதிகள் இணைப்பு செயல்படுத்தப்பட்டு இருக்கும்என்று பேசியபோது கரவொலி விண்முட்ட எழுந்தது. இம்மாநாட்டின் ஐம்பது தீர்மானங்களில், இருபத்தி மூன்றாவது தீர்மானம்தான் சீமைக் கருவேலம், யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம்.

அந்தத் தீர்மான வரிகள் :-

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சீமைக் கருவேல விதைகள் ஆங்காங்கு விதைக்கப்பட்டன. காலப் போக்கில் அதன் விதைகள் நாடெங்கும் பரவி சீமைக் கருவேல மரங்கள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீமைக் கருவேலம் தன்மையை ஆய்வு செய்த நிபுணர்கள் நிலத்தடி நீரை அதிகமாக உட்கொள்ளும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளனர். அரசுக்கு சொந்த மான பொதுப்பணித்துறைக் குளங்களில் சீமைக் கருவேலம் வளர அனுமதிக்கக் கூடாது என்று அறிவித்தும் அது நடை முறைப்படுத்தப்படவில்லை. எனவே நிலத்தடி நீரின் அவசியம் கருதியும், வருங்காலத்தில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கவும் தமிழக அரசு சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றிட உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது

அடுத்த தீர்மானம்:

யூக்கலிப்டஸ் மரம் குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே வளர்க்கக் கூடிய மரம் ஆகும். நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சக் கூடியது. அந்த மரத்தைச் சமவெளிப் பகுதிகளிலும் வளர்த்ததால் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி விட்டது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே யூக்கலிப்டஸ் கன்றுகளை நடவு செய்திட விவசாயிகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்று விவசாயத்துறை அதிகாரிகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தமிழக நலன்களைக் காப்பதில் விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதில் நம்மைப் போல் செயல்பட்ட இயக்கம் தமிழ் நாட்டில் வேறு ஒன்றும் கிடையாது. பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையைக் காக்கப் பத்து ஆண்டுகள் இடைவிடாது போராடினோம். உண்ணாநிலை அறப்போர், நடைப்பயணம், முற்றுகைப் போராட்டம் ஒன்றா? இரண்டா? தியாகத் திருவிளக்கு, முல்லைப் பெரியாறைக் காக்க மரணத் தீயைத் தழுவி மறைந்த தீரன் ஜெயப் பிரகாசு நாராயணன் எனக்குக் கொடுத்த பாராட்டுப் பட்டயத்தைவிடவா இன்னொன்று வேண்டும்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு

தூத்துக்குடி மாநகரின் சுற்று வட்டாரத்தில் 40 கிலோமீட்டர் பரப்பில், பொது மக்களுக்குப் புற்றுநோய் வரக் காரணமாவதும், விவசாயத்தை அடியோடு நிர்மூலமாக்குவதும், மீனவர் வாழ்வைப் பாழாக்குவதுமாகிய நாசகார ஸ்டெர் லைட் நச்சு ஆலையை அகற்ற இருபத்தொரு ஆண்டுகளாகப் போராடி வருகின்றோம். தொடக்கத்தில் எதிர்ப்புக் காட்டிய பல கட்சிகளின் வாய்கட்டப்பட்டன. எதைக் கொண்டு என்று நான் கூற வேண்டியது இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சில கட்சிகள் கோர்ட் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பைப் பெற்றேன். என் வாழ்க்கையில் நான் சாதித்த சாதனை என மனதில் பெருமிதமும் கொண்டேன்.

உலகக் கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வால் இன்று இந்தியாவில் பல பெரும் நிறுவனங்களைக் கபளீகரம் செய்து விட்டார். ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வுக்கு வேட்டு வைப்பதும் இவர்தான். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

தொடர்ந்து  நான்கு ஆண்டுகள் நானும் வழக்கறிஞர் தேவதாசும் 37 வாய்தாகளுக்குச் சென்றோம். நான் இரண்டரை மணி நேரம் எடுத்து உரைத்த நிறைவு வாதங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெரிதாகப் பாராட்டினர். ஆனால் தீர்ப்பு அகர்வாலுக்குத்தான் சாதகம் ஆயிற்று.

இதில் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுமே ஸ்டெர்லைட்டுக்குத் துணையாய் நின்றன. கடைசியில் உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பு வைகோவுக்குச் சாதகமாக வரப்போகிறது என்ற தகவலின் பேரில், முதல் நாள் ஸ்டெர்லைட்டை மூட அதிமுக அரசு ஆணையிட்டு பின்னர் ஆலை அதிபரின் சக்திக்குத் தீர்ப்பு ஆயமும் தலை வணங்கியது. தற்போது அதன் மீது உச்சநீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த ரிட் மனு நிலுவையில் உள்ளது.

நியூட்ரினோ எதிர்ப்பு

தேனி மாவட்டத்தில் தேவாரம்  அருகே, அம்பரப்பர் மலையில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம்அமைக்க மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டடங்களை எல்லாம் எழுப்பி விட்டது.

எப்படி மீத்தேன் திட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழையப்போகிறது என்று அறிந்தவுடன், முதல் அபாய அறிவிப்புச் செய்தேனோ, அதே போன்றுதான்  நியூட்ரினோதிட்டம் வரக்கூடும் என்பதை அறிந்த  மறுநாளே அதனால் ஏற்படப் போகும் பேரபாயத்தை அறிக்கையாகத் தந்தேன்.

இந்த INO எனும் நியூட்ரினோ ஆய்வகம் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகம் ஆகும். உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் இதை வரவேற்கின்றனர். ஜப்பானில் இருப்பதை விட, அமெரிக்காவில் உள்ளதைவிட இங்கு அமையப்போகும் ஆய்வகம் பிரம்மாண்டமானது. இதனை ஆதரித்து தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த சிலர் குறிப்பாக பேராரிசியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கினர்.

பேராசிரியை இந்துமதி என்பவர், “நியூக்ளியர் ஆயுதத்திற்கும் நியூட்ரினோவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் பிதற்றல்என்று பரிகாசமும் செய்தார்.

நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி இரவில் என் கொட்டடிக்கு எதிரே வராந்தாவில் உள்ள தொலைக்காட்சியில் (பொதிகை சேனல் மட்டும் ஒளிபரப்பாகும்) 45 நிமிடம் நியூட்ரினோ ஆதரவுப் பிரச்சாரம். இயற்பியல் மேதைகள் தங்கள் பிரலாபத்தைக் கொட்டினர். நிறுவனத்தின் முக்கியப் பதவியில் உள்ள மண்டேல், ‘நியூட்ரினோ நாட்டுக்கே வரப் பிரசாதம்என்றார்.

எனக்குப் பொறுக்கவில்லை. மனம் ரணம் ஆனது. மிகக் கடுமையான கெட்டித் தன்மையுள்ள பாறை மலையில்தான் இதனை அமைக்க முடியும். உலகிலேயே கெட்டியான பாறை உள்ள மலை மேற்குத் தொடர்ச்சி மலைதான். அப்படியானால் கர்நாடகத்திலோ, மராட்டியத்திலோ, குஜராத்திலோ INOஅமைக்கலாமே? மேற்குத் தொடர்ச்சிமலை அங்கெல்லாம் இருக்கின்றதே? அனைத்து அழிவுகளையும் தமிழன் தலையில்தான் கொட்ட வேண்டுமா? இதுகுறித்துப் பலநாள்கள் படித்து, கொச்சிக்குச் சென்று, இதே துறையில் பணியாற்றிய அறிவியல் நிபுணரிடம் பல விபரங்கள் அறிந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் தமிழ்வாணன், நீதியரசி வேலுமணி அமர்வில் மூன்று மணி நேரம் வாதங்களை முன்வைத்து நான் தடை ஆணை பெற்றேன். இன்னமும் அந்தத் தடை ஆணை உள்ளது.

1500 கோடி ரூபாய் அபாயகரமான மத்திய அரசுத் திட்டத்தை இந்த எளியவன் நிறுத்தி வைத்துள்ளேன்.

மலை போல பலம் வாய்ந்த கோலியாத்தைக் கவண் கல்லால் அடித்து வீழ்த்தினான் டேவிட் என்கிறது விவிலியம்; அதுபோல முழு வெற்றி பெறத் துடிக்கின்றேன்.

இந்த INOதிட்டத்தைக் கேரளத்தின் மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தோழர் அச்சுதானந்தன் முழு மூச்சாக எதிர்க்கின்றார். 2015 பிப்ரவரி 7 ஆம் நாள் நான் கொச்சிக்குச் சென்று அவரைச் சந்தித்து INOகுறித்து விளக்க அறிக்கை தந்தேன். கடுமையாக எதிர்ப்போம். வர விடக் கூடாது என்றார்.

இந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று இன்றைய கேரள முதல்வர்  தோழர் பினராயி விஜயன் அவர்களைச் சந்தித்து, “செண்பகவல்லி தடுப்பு அணை சீரமைப்புக்கு அனுமதி கோரி மனு கொடுத்ததோடு, ‘INOஆபத்தையும் விளக்கி அதனைத் தடுக்கக் கோரிக்கை கடிதமும் தந்தேன்.

தற்போது சிறையில் இருந்தாலும், மத்திய அரசு கேரள வனத்துறையின் இசைவினைப் பெற முயற்சி செய்வதைச் சுட்டிக்காட்டி அனுமதி கொடுக்கக் கூடாது என்று வேண்டி  இருவருக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளேன்.

கூடங்குளம் அணு உலையை அகற்ற....

கூடங்குளம் அணுஉலை அமைக்க ராஜீவ் காந்தி அரசு முடிவெடுத்து, அன்றைய சோவியத் அதிபர் கோர்பசேவ் இந்தியா வந்தபோது அவருடன் ஒப்பந்தம் போட்டது.

அப்போது இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, “கோர்பசேவை வானளாவப் புகழ்ந்து விட்டு, சோவியத் ரஷ்யாவுடன் இந்திய அரசு அணுஉலை அமைக்க ஒப்பந்தம் போடுகிறது என்பதை, எந்த இடம் எனக் குறிப்பிடாமல் பூடகமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1988 நவம்பர் 21 ஆம் நாள் மாநிலங்கள் அவையில் பேசினேன்:

கூடங்குளத்தில் அணு  உலை அமைக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். அங்குள்ள மீனவ மக்களும் நாங்களும் எதிர்க்கின்றோம்என்று நான் கடுமையாகச் சாடினேன்.

அதற்கு ராஜீவ்காந்தி, “அனல்மின் நிலையத்தில் இருந்தும் கூடத்தான் கதிர்வீச்சு ஏற்படும். அது போலத்தான்என்று உளறினார்.

உலகிலேயே நமது பிரதமரைப் போன்ற விஞ்ஞானியை இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லைஎன்று நான் கூறவும், அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைப்பதைத் தடுக்கின்றார்கள் என்று அணுஉலை எதிர்ப்பாளர்களைக் கடுமையாக விமர்சிப்போர் உண்டு. என்னிடம் நேரடியாகவே சொன்னவர்களும் உண்டு.

பேரழிவு ஏற்பட்டால் தெற்குச் சீமை அழிந்து போகுமே?

இப்போது அச்சமூட்டும் செய்தி ஒன்று வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அணு உலைகளின் மீது சைபர் தாக்குதல் நடைபெறுவதற்கும், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு அணுஉலைகள் ஆளாவதற்கும் வாய்ப்புள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் தந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘உண்மைதான்என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து உலக அளவில் ஆய்வு செய்யும் நிறுவனமும் இத்தகவலை உறுதிப் படுத்தி உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வழக்கம் போல இந்தியா இதைப் போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இணையவழித் தாக்குதல்கள் என்பவை இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது. அணுஉலைகள் மீது இணைய வழித் தாக்குதல் என்பது மிகவும் ஆபத்தானவை.

இந்தியத் துணைக்கண்டத்துக்கு வடக்கில் இருந்து போர்க்காலத்தில் ஆபத்து வரக்கூடும் என்று கருதித்தான், தெற்கே விஜயநாராயணத்தில் கடற்படைத் தளம் அமைத்தார்கள். இப்போது தெற்கில் இருந்துதான் பேரபாயம் ஏற்படும். செஞ்சீனம் மிக வலுவாக இலங்கையில் கால் ஊன்றிவிட்டது. கொழும்பு நகரை விடப் பெருநகரம் ஒன்றை சீனா அங்கே உருவாக்குகின்றது. ஹம்பன் தோட்டா துறைமுகத்திலும் சீனாவே ஆளுமை செய்யும். அண்டை நாடுகள் உறவைப் பொறுத்தமட்டில் குளவிக் கூட்டைக் கலைப்பது போல் இந்திய அரசு செயல்படு கின்றது.

எங்கே போய் முடியுமோ?

திபெத்தியர்களின் மதகுரு தலாய்லாமாவை மதிக்கின்றேன். ஆனால், 1959 மார்ச் மாதம் அவரைத் திபெத்தில் இருந்து பாதுகாப்பாக இந்திய இராணுவ வீரர்கள் அழைத்து வந்ததால் ஏற்பட்ட கோபமும், சீனாவின் 1962 தாக்குதலுக்கு ஒரு காரணம் ஆயிற்று.

தற்போது சீன அரசு கடுமையான எதிர்ப்பைக் காட்டியபோதும் அருணாசலப் பிரதேசத்துக்குத் தலாய்லாமா செல்வதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்தது. அருணாசலப் பிரதேசம் இந்திய நாட்டின் அங்கம்தான். ஆனால் செஞ்சீனம் அக்கிரமமாக அங்கே உரிமை கொண்டாடுகின்றது. தலாய்லாமா சென்று திரும்பிய பின், “அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்என்று சீனா கூறியதுடன், அங்குள்ள இந்திய நாட்டின் நகரங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டி உள்ளது.

வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கால் பதிக்கின்றது. காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் நம்மிடம் இருந்து கைப்பற்றிய இடத்தில் அக்சாய்சின் பகுதியில் அங்கே வலுவாக அமர்ந்ததுடன், காரகோரம் சாலையை ஆசாத் காஷ்மீரில் நீட்டிக்கின்றது. பாகிஸ்தான் -சீனா நட்புறவு எங்கே போய் முடியும் என்று கணக்கிட முடியாது.

இலங்கையில் இரண்டு நாடுகளுமே தடம் பதித்துவிட்டன. தெற்கே இந்தியாவுக்கு என்றுமே சிங்கள அரசு நட்பாக இருக்காது என்பதைச் சரியாகக் கணித்துத்தான், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தமிழ் ஈழ ஆயுதப் போராளிகளுக்கு ஆதரவு தந்தார். தனி ஈழம்அமைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்குப் பாதுகாப்பாகவே அமையும். தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? ஈழத்தமிழர்களைப் பூண்டோட அழிக்க முயன்ற சிங்கள அரசுக்கு இந்தியா துணைபோனது மட்டும் அன்றி, இனக்கொலை கூட்டுக் குற்றவாளியாகி இருக்கின்றது.

வடகொரிய சர்வாதிகாரத் தலைமையின் அணுஆயுத மிரட்டல் எதில் போய் முடியும்? இவற்றையெல்லாம் குறித்து உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் சூழலைப் பற்றி அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதலாம் என எண்ணுகிறேன்.

வழிகாட்டும் கலிங்கப்பட்டி

கலிங்கப்பட்டி ஊராட்சி மது ஒழிப்பில் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியாயிற்றுஎன்று குறிப்பிட்டேன் அல்லவா?

ஒரு மாநில அரசின் முடிவை எதிர்த்து ஒரு உள்ளாட்சியின் தீர்மானம் வெற்றி பெறுமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இந்திய அரசியல் சட்டத்தின் நான்காம் பகுதியில் அரசின் கொள்கையை ஆணைப் படுத்தும் நெறிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பலமுறை கருத்துகள் நீதிபதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகளைவிட அரசுக் கொள்கைகளை ஆணைப்படுத்தும் நெறிகளுக்கு அதிகாரம்என்று கூட அரசுத் தரப்பு கூறியதோடு, 42 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தையும் நிறைவேற்றியது. பின்னர் ஜனதா ஆட்சியில் 42 ஆவது திருத்த விதிகள் ரத்தாயின.

அரசியல் சட்டப் பிரிவு 47 மதுவை ஒழிப்பது அரசின் கடமை எனச் சொல்கின்றது.

கலிங்கப்பட்டி ஊராட்சியில் அனைத்து சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். ஒற்றுமை நிலவுகின்றது. இந்நிலையில், கலிங்கப்பட்டியில் அரசு மதுபானக் கடை அமைக்கத் திட்டமிட்டதை அறிந்ததால், ஊராட்சிமன்றத் தலைவர் திரு வை.ரவிச்சந்திரன் அவர்கள், “கலிங்கப்பட்டி ஊராட்சியில் மதுபானக் கடை அரசு அமைக்கக் கூடாதுஎன்று 2002 ஆம் ஆண்டு மன்றக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இதனைப் புறக்கணித்துவிட்டு, 2003 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாளன்று மதுவிற்பனைக் கடையைத் தமிழக அரசு அமைத்தது. கூட்டுறவு பால் பண்ணை கட்டடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதனை அகற்ற வேண்டும் என்று மீண்டும் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று அதே மாநில அரசு நெடுஞ்சாலையின் அடுத்த தனியார் கட்டடத்தில் டாஸ்மாக் கடை மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ -மாணவி கள் செல்ல வேண்டும்.

நெஞ்சில் ஒரு முள்

தமிழகம் எங்கும் நடந்தே சென்று டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்கின்றோம். ஆனால், நமது சொந்த ஊரிலேயே அகற்றவில்லையே? என்ற எண்ணம் என் இதயத்தில் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தது.

2014 ஆம் ஆண்டு ஒரு நாள் பிற்பகல் 3 மணிக்கு அந்த வழியாக காரில் சென்று கொண்டு இருந்தேன். சீருடை அணிந்த பள்ளி மாணவன் டாஸ்மாக் கடையில் மதுப்புட்டி வாங்கியது கண்ணில் பட்டது. சற்றுதூரம் சென்றுவிட்ட காரை நிறுத்திவிட்டு, டாஸ்மாக் கடைக்கு விரைந்தேன். அதற்குள் அந்த மாணவன் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

டாஸ்மாக் ஊழியர்களிடம், மாணவன் எதற்காக இங்கு வந்தான்? எனக் கேட்டேன். சில்லறை மாற்ற வந்தான்என்றனர்.

ஏன் பொய் சொல்கிறீர்கள்? மாணவர்களுக்கு நீங்கள் மது பாட்டில் விற்றால் நடப்பது வேறு என எச்சரித்துவிட்டு மனச் சுமையுடன் வீடு சென்றேன். கவலையாகவே இருந்தது.

மாணவர்கள் முன்னேற்றத்திற்காக...

கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆண்டுதோறும் பல உதவிகள் செய்கிறேன். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி ஆக்கினேன். இறுதி வகுப்புத் தேர்வு மையமாக திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி இருந்தது. விதிவிலக்குப் பெற்று கலிங்கப்பட்டி பள்ளியையும் தேர்வு மையம் ஆக்கினேன். பத்தாம் வகுப்புக்கும் இங்கேயே தேர்வு மையம் ஏற்படக் காரணம் ஆனேன். மாணவர்கள் அமர்வதற்கு மேசை நாற்காலிகள் இல்லை. என் சொந்த ஏற்பாட்டில் செய்து கொடுத்தேன். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக இருந்த என் நண்பர்களின் நிதி பெற்று, சுற்றுச் சுவர், புதிய வகுப்பறைக் கட்டடங்கள், கலை மண்டபம், அமைத்துக் கொடுத்தேன். பள்ளி வளாகத்துக்குள் வேப்பமரக் கன்றுகள் ஊன்றி இன்று நிழல்தரும் மரங்களாக ஆகிவிட்டன.

ஊராட்சித் தலைவர் தம்பி ரவியின் மூலம் நபார்டு நிறுவன மேலதிகாரிகளை அணுகி ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடங்கள், ரசாயன ஆய்வுக் கூடம் அமைக்கக் காரணம் ஆனேன்.

ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழாவை தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்களும் சிறப்பாக நடத்துகின்றனர். தவறாமல் கலந்துகொள்கின்றேன். பள்ளி நாட்களில் 100 விழுக்காடு தவறாது பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள், ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிக விலை மதிப்புள்ள பரிசுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் தக்க பரிசுகள் என் சொந்தப் பணத்தில் தருகின்றேன். இறுதித் தேர்வில்,  மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுள் இரண்டு ஆண்டுகளாக முதல் இடம், இரண்டாவது இடம் பெற்றது எங்கள் ஊர்ப் பள்ளி.

மாணவிகளுக்குப் பயிற்சி பெற ஏழு தையல் எந்திரங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அரசுப் பள்ளியிலேயே முதன் முதலாகக் (கம்ப்யூட்டர்) கணினி, நகல் எடுக்கும் பொறி (Xeros Machine) ஏற்படுத்திக் கொடுத்தேன்.

ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அரசியல் துளியும் இன்றி உரையாற்றுவேன். இந்தப் பள்ளி மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வதில் எனக்கு நிம்மதி.  அதைக் கெடுக்கின்ற வகையில் அமைந்த பிசாசுக் கடையான டாஸ்மாக்கை அகற்றத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். 2015 தை பொங்கல் விழாவில் ஆண்டு தோறும் நான் ஏற்பாடு செய்து நடத்தும் திருவள்ளுவர் கழக விழாவில் ஊர் மக்கள் டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பேசினேன். கலிங்கப்பட்டி திருவள்ளுவர் கழகத்துக்கு அறுபதுகளில் நான் செயலாளர். தற்போது தலைவர்.

டாஸ்மாக் விவகாரம் என்ன?

சரி, டாஸ்மாக் விவகாரத்துக்கு வருவோம். 2015 ஜூலை 30 ஆம் நாள் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகள் ராமேஸ்வரத்தில் நடந்த போது, அங்கு வந்திருந்த காந்தியவாதி சசிப்பெருமாள் அவர்கள் மறுநாள் காலை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடையில் அலைபேசி கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற அறப்போர் நடத்தியதில் சாகடிக்கப் பட்டார் என்பதை ஏடுகள், ஊடகங்களுக்கு மருத்துவமனையின் பிண அறை வாசலில் நின்று குற்றம் சாட்டினேன். அன்று இரவே சென்னைக்கு வந்து விட்டேன்.

ஆகஸ்டு ஒன்றாம் நாள் காலையில் திருவள்ளூர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். நண்பகல் 12 மணி அளவில் ஆகஸ்டு 4 ஆம் நாள் சசிபெருமாள் உயிர் நீத்ததைக் கருதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியினர் ஒப்புதலுடன் அறிக்கை வெளியிட்டேன்.

பகல் 2 மணி அளவில் எனக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. ஆகஸ்டு 1ஆம் தேதி காலை 8 மணி முதல் எனது அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்கள் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமத்துத் தாய்மார்கள் பொது மக்களுடன் உண்ணாநிலை அறப்போர் நடத்துகின்றார் என்ற செய்தி தான் அது.

முன்பு போல் வேகமாக நடக்க முடியாததால், நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, அறப்போர்க் களத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

அதைக் கேட்டு என் கவலை அதிகமாயிற்று. நான் நெஞ்சில் பூஜிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன் இளந்தளிர் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நம் நெஞ்சை உலுக்கியது. இப் படுகொலையைக் கண்டித்து நாம் அறப்போர் தொடுத்தோம். விடுதலைப் புலிகள் என்னை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியதை எண்ணியெண்ணி, காயப்பட்ட புலிகளை எங்கள் வீட்டில் பராமரித்து உணவு வழங்கியவர் அல்லவா என் தாயார்?

பொடா கைதியாக நான் வேலூர் சிறையில் இருந்தபோது, கலிங்கப்பட்டியில் என் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். என் இல்லத்தின் நடுக்கூடத்தில் இருந்த தலைவர் பிரபாகரன் படத்தைக் காவலர்கள் அகற்றியபோது அதுவும் என் பிள்ளைதான்; அப்படத்தை அகற்றாதீர்கள்என வாதிட்ட வீராங்கனை ஆயிற்றே என் அன்னை மாரியம்மாள்!

எனவே எனக்கோ, தம்பி ரவிக்கோ தெரிவிக்காமல் ஊர் மக்களை, குறிப்பாக தாய்மார்களைத் திரட்டி பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து உண்ணா நிலை அறப்போராட்டத்தை கலிங்கப் பட்டியில் நடத்தினார்கள். அன்று காலை 8 மணிக்கு அமர்ந்தவர், முன்னிரவு 7 மணி வரை அறப்போர் நடத்தினாராம்.

மனக்கலக்கம்

உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்றவர்கள் தண்ணீர் அருந்தலாம். ஆனால் நான் உண்ணாநிலை அறப்போரில் துளிநீரும் பருக மாட்டேன். இதனைத் தெரிந்த என் அன்புத் தாயாரும், “ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதன் விளைவு விபரீதம் ஆகியது. தனது 94 வயதில், சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும்  இருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் நடத்தியதால் அவர் உடல் நலிந்தது. சென்னைக்கு அழைத்து வந்தேன். மூன்றாம் நாள் இரவு 11 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நான் என் அன்னையின் அறையை எட்டிப் பார்த்தேன். பேச முடியாமல் என்னை சைகையால் அழைத்தார்கள். தனது முடிவு நேரம் நெருங்கி விட்டது என எண்ணினார் போலும். இலேசாக வாந்தி எடுத்தார்கள். என் அங்க மெல்லாம் பதறி நானும் என் துணைவியாரும் காரில் தூக்கிக் கொண்டு போய் பின் இருக்கையில் படுக்க வைத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தோம். மருத்துவர்கள் தக்க சிகிச்சை தந்ததால் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார். இரண்டாம் நாளே குதூகலமாய் பேசினார். மருத்துவப் பெண்களிடம் பரிவுடன் பேசினார். இனிமேல் இத்தகைய விஷப் பரீட்சையில் உங்கள் அன்னை ஈடுபடக் கூடாது. உண்ணாவிரதம் இருக்கக் கூடாது,” என்று மருத்துவர்கள் கண்டிப்பாகச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்படி ஒரு ஆபத்தைத் தேடிக் கொண்டாரே என்ற கவலையில் நான் கலிங்கப்பட்டி போய் சேரும்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். என் அன்னையிடம் நான் கோபிக்கவில்லை. ஆறுதலாகப் பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.

கலிங்கப்பட்டிப் போர்க்களம்

ஆகஸ்ட் 2 விடிந்தது, கலவர நாளாக!

காலை 9 மணிக்கு கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. முந்நூறுக்கும் அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டனர். ஊர் மக்கள் ஆவேசத்துடன் என் இல்ல முற்றத்தில் திரண்டனர். கடையை மூடா விட்டால் நமக்கு மரியாதையே இல்லைஎனக் குமுறினார்கள். நான் அனைத்தையும் தீர்க்கமாக யோசனை செய்தேன்.

கடையை மூட முயலும்போது காவல்துறை தாக்குதல் நடத்தும்; நமது வாலிபர்கள்  எதிர்கொள்வர்; பின்வாங்கி ஓடவும் முடியாது; உயிர்ச் சேதம் ஏற்படலாம். ஆனால் இக்கடையை மூடாவிட்டால், “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளந்து வைகுந்தத்தைக் காட்டுவானாம் - சொந்த ஊரிலேயே டாஸ்மாக் கடையை மூட முடியவில்லை. தமிழ்நாட்டுக்கே போதிக்கின்றானாம்!என்று நம்மை வெறுப்பவர்கள் ஏளனம் செய்வது பற்றிக் கவலை இல்லை; என் மனசாட்சிக்கே அமைதி இருக்காதே?

நண்பகலில் கழக மாவட்டச் செயலாளர்களையும், தொண்டர் படையினரையும் கலிங்கப்பட்டி வாலிபர்களையும் அழைத்து என் திட்டத்தைச் சொன்னேன். வயது முதிர்ந்தோரைத் தவிர்த்து விட வேண்டும். தாய்மார்கள், பிள்ளைகளை முன்னால் நிறுத்தக் கூடாது. பிரச்சார வாகனத்தின் மீது நின்று ஒலி பெருக்கியில் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பின்னர் நான் முன்னால் செல்ல, இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். டாஸ்மாக் கடையை முற்றுகை இடுவோம்என்று திட்டமிட்டோம்.

பிற்பகல் 3 மணிக்கு என் தாயாரின் காலில் விழுந்து ஆசிபெற்றபோது பதட்டத்துடன், “பெரும் கலகம் வருமே அப்பா? எனக்குக் கவலையாக இருக்கின்றது!என்றார்கள்.

நீங்கள் அங்கு வர முயற்சிக்க வேண்டாம். தம்பி ரவி வீட்டிலேயே இருக்கட்டும். நான் மட்டும் செல்கிறேன். வருவது வரட்டும்என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன்.

ஆயிரக்கணக்கில் திரண்டனர். பிரச்சார வேன் மீது நின்றவாறு, “காவல்துறை நண்பர்களே! நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல. உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்என்று இருபது நிமிடங்கள் உருக்கமாக உரை ஆற்றி னேன்.

இதற்குள், டாஸ்மாக் கடையின் இரும்பு ஷட்டரை இழுத்து மூடிப் பெரிய பெரிய பூட்டுகளைப் போட்டுப் பூட்டி விட்டார்கள் என்பது நெருங்கியபோதுதான் தெரிந்தது. வேனை விட்டு இறங்கினேன்.

டாஸ்மாக் கடையை அகற்று! மதுவிலக்கே எங்கள் இலக்கு! போராட்டம், இது போராட்டம்! தமிழக மக்களைக் காக்கும் போராட்டம்! மாணவரைக் காக்கும் போராட்டம்! தாய்மார்களைக் காக்கும் போராட்டம்! அஞ்ச மாட்டோம்; அஞ்ச மாட்டோம்! அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

என இடிமுழக்கங்களை எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை நெருங்கினோம். காவலர்கள் அரண் அமைத்து நின்றனர். அவர்களை நெருங்கியபோது லத்திக் கம்புகளைச் சுழற்றினார்கள். எங்கள் மீது தாக்குதல். என் மீது அடி விழக்கூடாது என்று இளைஞர்கள் என்னைச் சுற்றிலும் நின்று தங்கள் கைகளால் என்னை மறைத்துக்கொண்டு, விழுந்த அடிகளை அவர்கள் தாங்கிக் கொண்டனர். இதில் தான் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் கை ஒடிந்தது. வீட்டிலேயே இருஎன்று ஆணையிட்டு வந்தேனல்லவா என் தம்பி ரவியை. அவன் எப்படி வீட்டில் இருப்பான்? எனக்கு முன்னே அங்கிருந்தான். அவனுக்குத் தான் தோளிலும் தலையிலும் அடி.

தொலைவில் இருந்த தாய்மார்கள் நான் அடிபட்டு விட்டேன் என்று எண்ணிப் பலத்த கூக்குரல் எழுப்பினார்கள். நமது வீர வாலிபர்கள் போலீசின் லத்திக் கம்புகளைச் சட்டை செய்யவில்லை. குண்டுகள் பாய்ந்து இருந்தாலும் பின் வாங்கியிருக்க மாட்டார்கள். டாஸ்மாக் கடை பூட்டுகளைப் பெரிய கல்லைப் போட்டு நிமிட நேரத்தில் உடைத்தார்கள். வீரர்களின் வீர ஆவேசம் கண்டு போலீசார் பின்வாங்கினார்கள். மகளிர் காவலர்களைப் பத்திரமாக அனுப்பி வைக்கச் செய்தேன். டாஸ்மாக் கடையுள் நுழைந்தனர். ஆயிரக்கணக்கான மது பாட்டில்களைச் சாலையில் போட்டு உடைத்தார்கள். மது வெள்ளமாக ஓடிற்று. எல்லாம் பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது.

காவல்துறை தடிகளைச் சுழற்றும் முன்பே கழகக் கண்மணி கணபதிபட்டி ராமலிங்கம் அலைபேசி கோபுரத்தின் உச்சியில் போய் நின்று கொண்டு கீழே குதிப்பேன் என்றான். காவல்துறையின் ஒரு பகுதியினர் கோபுரத்தை நோக்கி ஓடினர். அதேநேரம் இங்கே லத்தி சார்ஜ். தம்பி, கீழே இறங்குகிறாயா இல்லையா?” என பலத்த சப்தம் போட்டேன். கீழே வந்தான். இப்போது அவன் பெயரே டவர் ராமலிங்கம்என்றாகி விட்டது.

காவல்துறையினர் 300 அடி தூரத்தில் நின்றனர். அறப்போராட்டக்காரர்களைச் சாலையில் அமரச் சொல்லி, மீண்டும் பிரச்சார வேனின் மீது ஏறி ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு இருக்கும் போதே நீலச்சட்டை அணிந்து இருந்த ஓர் இளைஞன் காவல்துறையை நோக்கிக் கல் வீசுவதைக் கண்டு, “அடே, அதை நிறுத்து. தோழர்களே! நீலச்சட்டைக்காரனைப் பிடித்து என்னிடம் இழுத்து வாருங்கள்என்றேன். அவன் ஓடியே போய்விட்டான். அமைதி நிலவியது. திடீரென்று போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியவாறு எங்களை நோக்கி வந்தார்கள். வரும்போதே கண்ணீர்புகைக் குண்டுகளை என்னை நோக்கி வீசினார்கள்.

நான் பிரச்சார வேனின் மீது ஏறி தனியாக நிற்கின்றேன். ஒரு காவல்துறை அதிகாரி என்னை சுட்டிக்காட்டி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசச் சொல்கின்றார். பாய்ந்து பாய்ந்து வந்து என்னை நோக்கியே வீசுகிறார்கள்.

காவல் துறையின் திட்டம் என்ன?

நான் அஞ்சவில்லை. பிரச்சார வேனுக்குள் இறங்கி பதுங்கிக் கொள்ளவில்லை. வீசப்பட்ட குண்டுகளில் இரண்டு குண்டுகள் வேனுக்கு முன்னால் நின்ற என் தம்பி ரவிச்சந்திரன் தொடையிலும் ஆடுசதையிலும் விழுந்த காயத் தழும்புகள் இப்போதும் இருக்கின்றன. அடுத்து நடந்ததுதான் போலீஸ் மேலிடத்தின் அராஜகக் கட்டளையின் அரங்கேற்றம். வானத்தைப் பார்த்து மூன்று முறை சுட்டார்கள்.

நான் சபாநாயகர் செல்லப்பாண்டியன் அவர்களிடம், அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியனிடம் ஜூனியர் வக்கீலாக இருந்தவன் அல்லவா? போலீஸ் நடைமுறை எனக்கு அத்துப்படி. நாங்கள் லத்திசார்ஜ் செய்தோம்; கூட்டம் கலையவில்லை. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினோம்; ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடவில்லை. ஆகாயத்தைப் பார்த்து மூன்று முறை எச்சரிக்கை வேட்டு எழுப்பினோம்; போராட்டக்காரர்கள் பின்வாங்க வில்லை. சட்டம் ஒழுங்கைக் காக்க வேறுவழியின்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம்; அதனால் உயிர்ச் சேதம் தவிர்க்க இயலாதது ஆயிற்று என்று சொல்லி விடுவார்கள்.

ஆகவே நம்மை துப்பாக்கியால் சுடத் தயாராகி விட்டார்கள். இனி சுடுவார்கள் என உணர்ந்தேன். என் உறுதி கூடிற்று. ஆவேசமானேன்.

வன்னிக்காட்டின் ஒரு பகுதியில் பேசாலை அருகில், சாலைத் தொடுவாய் கடற்கரை மணலில் என்னை நோக்கி இந்திய இராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததும், ஒருகணம் என் மனைவி பிள்ளைகளை மனக்கண்ணில் நிறுத்தியதும், வேதனை, வலி இன்றி நொடியில் என் உயிர் போய்விட வேண்டும் என்று என் மனம் ஏங்கித் துடித்ததும், விடுதலைப்புலிகள் என் உயிர்காத்து காட்டுக்குள் அழைத்துச் சென்றதும் நினைவுக்கு வந்தது.

அன்புச் சகோதரர் வீரபாண்டியன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் ஈழப் போரில் உங்கள் பங்களிப்பை நூலாக்க வேண்டும். உண்மைகள் உலகுக்குத் தெரிய வேண்டும். எழுதுங்கள்,” என்று வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்.

எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக் குள்ளும் இருக்கின்றது. அதற்கு உரிய வேளை வரும்; எழுதுவேன். கலிங்கப்பட்டி ஆகஸ்ட் 2 அறப்போர்க்களத்தை இச் சிறைவாசக் கடிதங்களில் சரியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்றுதான் விரிவாக எழுதுகின்றேன்.

துப்பாக்கிகள் சீறட்டும்; நீ சரியான ஆண் மகன் என்றால் சுடுஎன்று சட்டைப் பொத்தான்களை அகற்றி மார்பைக் காட்டினேன்.

பாய்ந்து சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தை. அப்போது காவல் துறை DIG (தற்போது IG) முருகன் அவர்கள்தான். 

இந்த நேரத்தில் நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் விக்கிரமன் அதிரடிப் படையுடன் ஆவேசமாக எனது பிரச்சார வேனை நோக்கி வந்தார். கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு மிரட்டினார்.

ஐயாவுக்கு ராபர்ட் கிளைவ் என்று நினைப்பு. இந்த ஜம்பம் எல்லாம் எங்களிடம் பலிக்காது. போலீசைப் பின்வாங்கச் சொல். என்னைச் சுட்டுக் கொல்ல முயன்றதே காவல்துறை?” என்று கூறினேன்.

இந்த நேரம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு. திருமாவளவன் வந்தார்; என்னைச் சமாதானப்படுத்த முயன்றார். திருமா! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. என் பாணியில் சமாளிப்பேன். நீங்கள் என் வீட்டுக்குப் போய் என் அன்னையைப் பாருங்கள்,” என்று அனுப்பி வைத்தேன். டிஐஜி முருகன் என்னிடம் வந்தார். காவல்துறையை முதலில் வெளியேற்றி விடுகிறோம்; ஊர் மக்களைப் போகச் சொல்லுங்கள்என்றார். அதன்படியே நடந்தது.

அன்று இரவு அவர்களுக்கு அதிர்ச்சி

இரவு பத்து மணி இருக்கும். முந்நூறு காவலர்கள் என் ஊருக்கு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்குளம் காளியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி இருக்கின்றனர் என்று தெரியவந்தது. நான் பத்தரை மணிக்குக் கொடி கட்டிய என் காரில் பிள்ளையார்குளம் காளியம்மன் கோவில் வளாகத்திற்குள் சென்று இறங்கினேன்.

படுத்திருந்த காவலர்கள், உட்கார்ந்து இருந்த காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் எழுந்தார்கள். எங்க ஊரில் தங்கி இருக்கின்றீர்களே! சாப்பிட்டீர்களா? வசதியாய் இருக்கா? வேறு ஏதாவது வேணுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். பிரமித்துப் போனார்கள்.

ஒவ்வொருவரும் நான் இந்த ஊர், அந்த ஊர், இன்னாருக்குச் சொந்தம், வேண்டியவன் என்று கூறினார்கள். நல்லா ஓய்வு எடுங்கள்,” என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன்.

இதுதான் என் இயல்பு!

முழு அடைப்புப் போராட்டம்

2015 ஆகஸ்டு 4-ஆம் தேதி தமிழகத்தில் நாம் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்கள் ஆதரவு கொடுத்தார். முதல்நாள் ஆகஸ்டு 3-ஆம் நாள் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து என் அன்னையிடம் பரிவுடன் பேசினார்கள். பெரிய வீட்டுத் தாயி; போர்க்குணம் இரத்தத்திலேயே இருக்கிறது,” என்று பாராட்டி விட்டுச் சென்றார்கள். சரியாக தொன்னூற்றி ஆறாம் நாள் நவம்பர் 6-ஆம் தேதி என் வீரத்தாய் மாரியம்மாள் இந்த உலகை விட்டு மறைந்தார்கள். நான் மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உயிர் பிரிந்ததாம். தேர்தல் அரசியலில் நான் தோற்றதில் மனதிற்குள் வேதனைப்பட்டு இருப்பார்கள். அவர்கள் கண் மூடுவதற்குள்  நமது இயக்க  வெற்றியை அவர்கள் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.

மறக்க முடியுமா?

வீரமும் துணிச்சலும் கொண்டவர் என் அன்னை. 2008-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு உழவர் சந்தையில் நடந்தபோது, கொட்டும் மழையிலும் குடையைத் தவிர்த்து விட்டு அமர்ந்து இருந்தார்கள். 2000-இல் ஈரோட்டில் நடந்த நமது தமிழக எழுச்சி மாநாட்டில் மேடைக்கு முன் முதல் வரிசையில் என் தாயார் மாரியம்மாள் அமர்ந்து இருந்ததை அறிந்த காஷ்மீர் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களும், மத்திய இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களும் தடுப்பு வேலிகளைத் தாண்டிச் சென்று அவர்களைப் பணிந்து வணங்கியதும், 2005-இல் செப்டம்பர் 3-இல் சிறையில் விரிந்த மடல்கள்ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்ட அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் என் அன்னையைத் தேடிச் சென்று வணங்கியதும், சகோதரி ஜெயலலிதா 2006-இல் என் வீட்டில் என் அன்னையைப் பார்த்துவிட்டு, “என்னைப் பெற்ற தாயைச் சந்தித்ததுபோல் உணர்ந்தேன்என்று கூறியதும், 2000 ஜனவரி 1-ஆம் நாள் புத்தாயிரம் மலர்ந்த நாளில் காலை 7.30 மணிக்கு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் அன்னையின் நலம் விசாரித்து வாழ்த்து சொன்னதும் மறக்கக் கூடியவைகளா?

சரி! மீண்டும் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு வருவோம்.

அற்புத மனிதர் அஜ்மல்கான்

முழு அடைப்புப் போராட்டம் நடந்த அதே 2015 ஆகஸ்டு 4-ஆம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவர் வை.ரவிச்சந்திரன் தலைமையில் கூடி டாஸ்மாக் கடை எண். 10862 அகற்றப்பட வேண்டும்என்று ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரிட் மனு எண். 14059/2015 தாக்கல் செய்தார் ஊராட்சித் தலைவர் திரு. வை.ரவிச்சந்திரன். தலைசிறந்த வழக்கறிஞர் (உயர் நீதிமன்ற நீதிபதியாக முன்னரே பதவி ஏற்றிருக்க வேண்டியவர்) உயர்திரு அஜ்மல்கான் அவர்கள் வழக்கை நடத்தினார்கள்.

நியூட்ரினோ வழக்கைத் தயார் செய்து தந்தபோதும், செண்பகவல்லி தடுப்பு அணைக்காக என் தம்பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்காடியபோதும், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக உயர் நீதிமன்றத்தில் இடைவிடாது வழக்காடி வெற்றியைத் தேடித் தந்த போதும் தட்டச்சுச் செலவுக்குக் கூட ஒரு ரூபாய் கட்டணம் பெற்றுக் கொள்ளாத அற்புத மனிதநேயர் வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள்.

இத்தகையோரின் நட்பை நான் தேடிக் கொண்டதுதானே எனது பொதுவாழ்வுச் சம்பாத்தியம்!

மாவட்ட ஆட்சியரின் ஏமாற்று வேலை

2015 ஆகஸ்டு 13-ஆம் நாள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுதாகரன், நீதிபதி வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு, “கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான வாய்ப்பைப் பரிசீலிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணையின் நகல் ஊராட்சித் தலைவருக்கு ஆகஸ்டு 25-இல்தான் கிடைத்தது. ஆனால், நீதிமன்ற ஆணையைத் தெரிந்து கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகஸ்டு 22-ஆம் தேதியே விசாரித்து விட்டதாகவும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் பிரிவு 202 (1) (உ) படி கலிங்கப் பட்டி ஊராட்சித் தீர்மானத்தை ரத்து செய்து விட்டதாகவும்ஆணை பிறப் பித்தார்.

அரசியல் சட்டம் 226-ஆம் பிரிவின்கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தார் என் தம்பி ஊராட்சித் தலைவர். ரிட் மனு எண். 20063/2015. கழக வழக்கறிஞர் தம்பி சுப்பாராஜ் பெரிதும் உதவியாக இயங்கினார்.

நீதியரசர் திரு. நாகமுத்து, நீதியரசர் முரளீதரன் அமர்வில், முன்னைய தீர்ப்பு களை மேற்கோள்காட்டி வழக்கறிஞர் அஜ்மல்கான் மிகச் சிறப்பான வாதங்களை முன்வைத்தார். அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்றான பிரிவு 21-இன்படி மனித உயிருக்கும் உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதை ஆணித்தரமாகச் சொன்னார்.

அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில்,

மனுதாரர் ரவிச்சந்திரனின் சகோதரர் வைகோ அரசியல் நோக்கத்துக்காகப் போராட்டம் நடத்தினார். ஏராளமானவர்களைத் திரட்டி வந்து கலவரம் செய்தார். ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் நொறுக்கப்பட்டன. ரௌடித்தனம் செய்தனர். போலீஸ்காரர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மீது கரிவலம் வந்த நல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ள இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை மூடினால் மற்ற இடங்களிலும் இந்த நிலை ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் போய்விடும்.

எனக் குறிப்பிட்டார். நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பிரமாண வாக்குமூலத்தில் மனுதாரர் அவர் சகோதரர் வைகோவின் தாயாரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தீர்ப்பு என்ன?

நீதியரசர் மாண்புமிகு நாகமுத்து அவர்களும் நீதியரசர் மாண்புமிகு முரளீதரன் அவர்களும் தந்த தீர்ப்பு புதிய வரலாறு படைத்து விட்டது. உள்ளாட்சி அமைப்புக்கு மணிமகுடம் கூட்டி விட்டது.  தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு:

மனுதாரர் மீதான கிரிமினல் வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், மனுதாரர் சார்பில் வழக்கு உரைத்த வழக்குரைஞரின் வாதங்கள்  கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ஊராட்சி மன்றம், ஊராட்சி மக்களின் உணர்வுகளை எண்ணங்களைப் எதிரொலிக்கும் அமைப்பு ஆகும். மக்களின் சிரமங்களை, துன்பங்களைக் கருதியே ஊராட்சி மன்றம் டாஸ்மாக் கடையை அகற்ற தீர்மானம் போட்டுள்ளது.

இந்த நீதிமன்றம் 2015 ஆகஸ்டு 13-இல் தந்த ஆணையின்படி கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான வாய்ப்பைப் பரிசீலிக்குமாறுதான் கூறியது. ஊராட்சி மன்றம் தீர்மானம் போட அதிகாரம் இருக்கின்றதா? தீர்மானம் செல்லுமா? என்று கருத்துக் கேட்க வில்லை. ஆனால் நீதிமன்றம் கேட்ட கருத்தின் எல்லையை மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணை பிறப்பித்து உள்ளார். உள்ளாட்சித் தீர்மானத்தை கலெக்டர் ரத்து செய்தது செல்லாது.

பஞ்சாயத்துச் சட்ட விதிகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் தீர்மானத்தை ரத்து செய்வதாகக் கூறுவது அந்த விதி களுக்கு உட்படாதது.

உள்ளாட்சி சட்ட விதி 202 (1)(சி) இது பற்றி என்ன கூறுகின்றது? சம்பந்தப்பட்ட ஊராட்சித் தீர்மானம் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்துமானால்,  மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமானால் பெரும் கலகம் வரக் காரணமாக இருக்குமானால், உள்ளாட்சித் தீர்மானத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்து செய்யலாம். ஆனால், கலிங்கப்பட்டி ஊராட்சித் தீர்மானத்தின்படி அம்மாதிரி மக்கள் உயிருக்கு ஆபத்தோ கலகமோ ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதால், ஊராட்சித் தீர்மானத்தை ஆட்சித் தலைவர் ரத்து செய்தது செல்லாது.

2015 ஆகஸ்டு இரண்டாம் தேதியில் இருந்தே கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டே இருக்கிறது. எனவே, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை எண் 10862 நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று 2016 நவம்பர் 16 ஆம் நாளில் இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றது.

நீதியரசர்களுக்கு நானும் என் தம்பியும் கலிங்கப்பட்டி ஊராட்சி மக்களும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம்.

தமிழ்நாடு அரசு தீர்ப்பைப் புரிந்து கொண்டு இருக்கும்; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்ய வில்லை.

உச்சநீதிமன்றம் ஒதுக்கித் தள்ளியது

ஆனால், தமிழ்நாடு அரசு இரகசியமான வேலையில் ஈடுபட்டது. கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. பிரபலமான சீனியர் வழக்கறிஞர் நாகேஷ் திரிவேதி அவர்கள் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் பாலாஜி, முத்துவேல், பழனி, குமார் ஆஜரானார்கள். எங்கே? உச்சநீதிமன்றத்தில். யாருடைய அமர்வில்? உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ஜே.எஸ்.கேகர், நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட், நீதியரசர் சஞ்சய் கிசன் கௌல் (சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) அமர்வில். எந்தத் தேதியில் 2017 பிப்ரவரி 27 ஆம் தேதியன்று.

தமிழக அரசின் மேல்முறையீடு எண் 6054/2017.

சென்னை உயர்நீதிமன்றம் தன் அதிகார எல்லையை மீறி அரசாங்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடியதுபோல பல அமைப்புகளும் முயன்றால் அரசாங்கம் வருமானம் இழக்கும் என்பது உள்ளிட்ட பல வாதங்களை முன்வைத்த மேல் முறையீடு அது.

என்ன நடந்தது தெரியுமா?

தமிழ்நாட்டு அரசின் மூக்கை உடைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

ஆம்; விசாரணைக்கே எடுத்துக் கொள்ளாமல் அறிமுக நிலையிலேயே மனுவை டிஸ்மிஸ் செய்து தூக்கி எறிந்தது.

ஆகா? என்ன மகத்தான சாதனை! எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா?

சாதித்து விட்டோம்

மதுரையில் தம்பி கௌரிசங்கர் இல்லத்தில் உணவு அருந்திவிட்டு, சற்று நேரம் தூங்கி ஓய்வு எடுக்கலாம் எனப் படுக்கையில் சாய்ந்தேன். என் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அவைத் தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களின் குதூகலம் தொனிக்கும் குரல், “கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை திறப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாம்! தொலைக்காட்சியில் பிளாஸ் நியூஸ் ஓடுகிறதுஎன்றார்.

நான் ஆகாயத்தில் ஆனந்த அலைகளில் மிதந்தேன். மிக இனிப்பான செய்தி சொன்னீர்கள் அண்ணாஎன்றேன்.

வாழ்க்கையில் பெரிதாக சாதித்து விட்டோம் நாங்கள். இல்லை  எல்லாப் புகழும் பெருமையும் வீரத்தாய் மாரியம்மாள் அவர்களுக்கே!

அவர்தானே 2015 ஆகஸ்ட் 1 ஆம் நாள் அறப்போர்க்களம் அமைத்தார்; உண்ணாமல், நீர் பருகாமல், போராடினார்; அதனால் தானே மறுநாள் கலகம் ஏற்பட்டது; அந்தப் போராட்டத்தால்தானே உடல் நலம் பாழ்பட்டு உயிர் நீத்தார்; இல்லையேல் இன்னும் ஐந்தாண்டுகளாவது உயிரோடு இருந்திருப்பாரே?

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.

வீரத்தாய்க்கு வெண்கலச் சிலை

என் அன்புத் தாயார் மாரியம்மாள் மறைந்த பின் சென்னையில் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இல்லம் சென்றேன். தம்பீ உன் தாய் ஒரு வீரத்தாய். கலிங்கப்பட்டியில் உள்ள மக்கள் அவருக்கு வெண்கலச் சிலை எழுப்ப வேண்டும்என்றார்.

இந்த செய்தியை நெல்லை மாவட்ட பொறுப்பாளர் தம்பி தி.மு.இராசேந்திரன் கவனத்துக்கும் கொண்டு போகச் சொன்னார்.

மது ஒழிப்பு வெற்றிப் பேரணி 21.03.2017 அன்று கலிங்கப்பட்டியில் நடந்தபோது, தம்பி திரு.ராஜேந்திரன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வீரத்தாய்க்கு விழா எடுப்போம்; வெண்கலச் சிலை எழுப்புவோம்என்று அறிவித்தார்.

கோடை வெயிலின் தாக்கம் தமிழர்களை வாட்டி வதைக்கின்றது. மக்கள் படும் அவதியைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்வோம்!

மறுமலர்ச்சி மோர், நீர் பந்தல் ஆங்காங்கு அமைத்து பகல் முழுக்க அதனைப் பராமரிக்கக் கண்மணிகள் தங்கள் நேரத்தை முழுமையாக ஒதுக்கிப் பணிகள் செய்ய வேண்டும்.

கடிதம் மிக நீண்டுவிட்டது. ஆற அமர சிந்தித்து எழுதுவதற்குச் சிறைக்குள் தானே நேரம் வாய்க்கின்றது?

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

சங்கொலி, 05.05.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)