மே - 12: உலக செவிலியர்கள் தினம் வைகோ வாழ்த்து

Issues: Healthcare, International, National

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Thu, 11/05/2017

 

 

 

 

மே - 12:  உலக செவிலியர்கள் தினம்

வைகோ வாழ்த்து

 

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு மனிதநேயத்துடன் ஆற்றும் மகத்தான சேவை. இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள்தான். இதை நினைவு கூற வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேலையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல்என்று பெயர் வைத்து அழைத்தனர். அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறதுஎன்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நவீன தாதியியல் முறையை உருவாக்கி, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைகளை செய்து சிகரங்களைத் தொடுவதற்குப் பதிலாக ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

 1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும், இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியரில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமிய போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

 விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் தங்களைக் காக்க வந்துள்ளது என்று இராணுவ வீரர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். விளக்கேந்திய பெருமாட்டி’ (Lady with the lamp) என்று வர்ணித்தனர். அதைத் தொடர்ந்து 1883 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், 1907 ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்த தினப் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ஆர்டர் ஆ~ப் மெரிட்என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாகக் கௌரவிக்கப்பட்டார்.

 13.08.1910 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது உலக வாழ்க்கைப் பயணத்தை முடித்து மரணத்தைத் தழுவினார். அவர் மறைவிற்கு பின்பு அவரின் தன்னலமற்ற பணியை நினைவு கூற ஆண்டுதோறும் மே 12 ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப் பூர்வமான தருணமாகும். புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை தேர்வு செய்து மே 12 ஆம் நாளில் மத்திய, மாநில அரசுகள் அவர்களை கௌரவிப்பதே நாம் வழங்கும் நன்றியாகும்.

 உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்திய நர்சிங் கவுன்சில் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணி நியமனம் செய்திட வேண்டும்.

 சித்திரை மாதக் கத்திரி வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கால கட்டத்தில் அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவக் கருவிகளும் இருப்பில் வைத்திருக்க ஆவன செய்திட வேண்டுகிறேன்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

தாயகம்                                                        தலைமை நிலையம்
சென்னை - 8                                                 மறுமலர்ச்சி தி.மு.க.
11.05.2017

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)