கேரள அரசே! புதிய அணையைக் கட்ட நினைத்து இந்திய ஒருமைப்பாட்டை உடைக்காதே! தேனி கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை.

Issues: Farmers, National

Region: Theni, Tamil Nadu

Category: Headlines, Speeches

Date: 
Fri, 13/11/2009

முல்லைப் பெரியாறு உரிமை காக்கவும் - கேடுசெய்யும் கேரளத்துக்கும்,
துணை போகும் மத்திய அரசுக்கும், கடமை தவறிய தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும் - 8.11.2009 அன்று தேனியில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமான கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை...

கொட்டுகிற மழையில் இந்தக் கூட்டம் நடைபெறுமா என்று மாலையில் பலரும் என்னிடம் வினவினார்கள். கூட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று பேசிக்கொள் கிறார்கள் என தேனி மாவட்டக் கழக பொறுப்பாளர் சந்திரன் என்னிடத்தில் சொன்னார்.

‘ஆயிரம் இடிகள் முழங்கினாலும், பெருமழை பெய்தாலும் இந்தக் கூட்டம் நடந்தே தீரும். மழை கொட்டினாலும் வைகோ உரையாற்றி விட்டுத்தான் இந்தத் தேனியை விட்டுச் செல்வான்’ என்று நான் சொன்னேன். நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். நான் விவசாயத் தோழர்களுக்குச் சொல்வேன். மழை பெய்கின்ற இரவில், உங்கள் கிராமத்தில் உங்கள் கிராமத்துக் குளங்கள், ஏரிகள் பெருமழை காரணமாக கரை உடைந்து விடுமோ என்கின்ற ஆபத்து நேர்கிறபோது, மழை பெய்கிறதே என்று யாரும் வீட்டில் முடங்குவது இல்லை. மண் வெட்டியும் கூடையுமாக, கொட்டுகிற மழையில் என் விவசாயத் தோழன் கண்மாய்க்குச் செல்கிறான், ஏரிக்கரைக்குச் செல்கிறான்.

தெப்பமாக நனைந்துகொண்டு, அந்தக் கரையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்பதற்காகத் தன் மேனியை வருத்திக்கொண்டு, மழை இரவில் அங்கே நிற்கின்றான்.
அதுமட்டும் அல்ல, காணி நிலம் இருந்தாலும், அரை ஏக்கர் பூமி இருந்தாலும், பாம்பு கடிக்கக்கூடும், தேளும் நட்டுவாக்காலியும் கொட்டிவிடக் கூடும் என்ற இரவுச்சூழலில், விளக்கின் வெளிச்சம் இல்லாத வேளையில், வானத்து நட்சத்திரங்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் கருமேகங்கள் திரண்டு காரிருள் சூழ்ந்து இருக்கிற நேரத்தில்கூட, விவசாயி நள்ளிரவு நேரத்தில் கையில் டார்ச்லைட்கூட இல்லாமல் அவன் ஓடித் திரிந்த காணி, அவன் தேடி விதைத்த பூமி, அவன் எந்த வாய்க்கால்களில் நடந்தானோ, எந்த வரப்புகளில் நடந்தானோ அவனுக்குப் பழகிப்போன பாதங்கள் என்பதனால் அங்கேபோய் தண்ணீர் உடைந்துவிடக் கூடாது - தன் அரை ஏக்கர் பூமி அழிந்து விடக்கூடாது என்று மண்வெட்டியும் கையுமாக இரவெல்லாம் இருக்கிறான்.

ஒருசில வேளைகளில், தண்ணீர் வாய்க்கால் உடைந்து, அவனது நிலத்துக்கு உள்ளே பாய்ந்துவிடும் என்ற நிலை வருகிறபோது, அந்த உடைப்பைச் சரி செய்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறான்.

இப்படித்தான் விவசாயிகள் தங்கள் வாழ்வில் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளை ஏற்றுக்கொண்டு, மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவுப் பொருளை பயிர்ப்பொருளை உருவாக்கிக் கொடுப்பதற்கு, தன்னையே வருத்திக்கொண்டு மாடாக உழைக்கின்றனர்.

ஒரு பரபரப்பான சூழலில், இந்தக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து இருக்கின்ற நேரத்தில், தேனி மாநகரிலே, இந்தப் பிரமாண்டமான கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மலையாள பூமியான கேரளத்தில் இருந்தும், மதிப்புக்குரிய செய்தியாளர்கள் பலர் இங்கு வந்து இருக்கிறார்கள். கேரள மாநிலக் காவல்துறையின் உளவுத் துறைப் பிரிவினரும், இங்கே வந்து இருக்கின்றார்கள்.

என் அருமைச் சகோதரர்களே, எங்கோ இங்கிலாந்து நாட்டில் பிறந்த பென்னி குயிக், இங்கே வந்து, நமக்காகக் கட்டிக்கொடுத்த அணையை உடைக்கக் கேரளத்துக் காரன் திட்டம் போட்டுவிட்டான். எதிர் காலத்தில் நம் வருங்கால சந்ததிகள் வாழ்வு பாழாகிவிடுமே என்பதை ஒரு கணம் எண்ணுங்கள். அரசியலை விடுங்கள். இந்தக் கூட்டம் இந்த மண்ணின் உரிமையைக் காப்பதற்கும், நம் சந்ததிகளின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும் உறுதி எடுத்துக் கொள்வதற்காகக் கூட்டப்பட்டு இருக்கிற கூட்டம்.

நேற்றைக்கும், இன்றைக்கும் பலத்த மழை பெய்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு அடி தண்ணீர் ஒரேநாளில் முல்லைப் பெரியாறில் உயர்ந்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். கண்ணியமிக்க அப்பாஸ் அவர்களிடம் அதைத்தான் பேசிக் கொண்டு இருந்தேன்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்ற பொய்யான குற்றச்சாட்டு ஆவணத்தைத் தயாரித்து, இன்றுவரை அந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிற கேரள முதல்வர் மதிப்பு மிக்க தோழர் அச்சுதானந்தனுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். 1924 ஆம் ஆண்டு பிரளயம் வந்ததைப் போன்ற ஒரு மழைவந்தது. அம்மாதிரி மழை நூறு ஆண்டு களில் பெய்ததே கிடையாது. அப்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தில், ஒரு வினாடிக்கு ஒரு இலட்சத்து இருபத்தி னாலாயிரம் (1,24,000)கன அடி தண்ணீர் முல்லைப் பெரியாறுக்கு வந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 155 அடி. அதில் 152 அடி உயரம் தண்ணீர் தளும்பிய உடன், அதற்குமேல் 3 அடி மட்டமாக நிற்கும். பூமியில் அடியில் தோண்டப் பட்ட மொத்தக் கணக்கு எடுத்தால் 176 அடி உயரம். 1,24,000 கன அடி தண்ணீர் பாய்ந்தபோது, அணை மட்டத்தைத்தாண்டி 155 அடியைத் தாண்டி மேலும் 7 அடி உயரத்துக்கு 162 அடிக்குத் தண்ணீர் நின்றது. எல்லோரும் பயந்து போனார்கள். வெள்ளைக்காரன் ஆட்சி. பிரிட்டிஷ் பொறியாளர்கள் அணை உள்ளே உடைந்து போய்விட்டது என்று பயந்தார்கள்.

ஏனெனில் வெள்ளத்துக்குள்அணை நெகிழ்ந்து விட்டது. 176 அடி உயரத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ஆனால், ஒரு இம்மி அளவு கூட அந்த அணையில் சேதம் ஏற்படவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கரிகாலன் கட்டிய கல்லணையைப் போல, சுருக்கியும் செங்கல்லும் கருப்பட்டியும் கலந்து பென்னி குயிக் கட்டிய அணை வலுவாக இருக்கிறது. உலகில் எங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் போன்ற கீழ்மட்ட அகலம் கிடையாது. அடித்தளம் மட்டுமே 144 அடி ஆறு அங்குலம் அகலத்துக்குக் கட்டி இருக்கிறார்கள்.

கேரளத்துக்காரர்கள் இடுக்கிக்குத் தண்ணீர் கொண்டு போவதற்காக, வஞ்சகமாக முல்லைப் பெரியாறு அணை உடையும் ஆபத்து இருக்கிறது என்று 1979 இல் ஒரு பொய்க்கூச்சலைக் கிளப்பினார்கள். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் முல்லைப் பெரியாறுக்குப் பார்வையிட வந்தபோது, கூச்சலிட்டுக் குழப்பம் செய்தார்கள். நவம்பர் 25 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிகாரிகளும் கே.சி.தாமஸ் முன்னால் உட்கார்ந்து பேசினார்கள். அணை உடைந்துவிடும் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் தாமஸ் முன்னிலையில் வாதிக்கப்பட்டன. அணையை மூன்று கட்டமாகப் பலப்படுத்துங்கள்; 21 கோடியே 50 இலட்சம் தமிழக அரசு செலவழிக்கட்டும் என்று சொல்லி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் அந்த வேலையைக் கேரளத்துக்காரர்கள் இழுத்தடித்தார்கள்.

பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி, பாதுகாப்புக்காக பக்கவாட்டு அணையைத் தமிழக அரசு கட்டியது. அதனுடைய கீழ்மட்ட அகலம் 56 அடி. மொத்தத்தில் 200 அடி 6 அங்குலம் கீழ்மட்ட அகலம் உள்ள அணை உலகத்திலேயே கிடையாது. உலகத்தில் மிகப்பெரிய வலுவான அணை என்று சொல்லப்படுகின்ற அஸ்வான் அணை, பாய்ந்து ஓடும் நைல் நதிக்கு குறுக்கே கட்டப்பட்டு இருக்கிறது. அந்த அணையின் அடிமட்ட அகலம் 136 அடி நீளம்தான். முல்லைப் பெரியாறோ 200 அடி அடிமட்டம் அகலம். உலகிலேயே வேறு எங்கேயும் கிடையாது.

கேரளத்துக்காரன் கட்டி இருக்கிற இடுக்கி அணை 555 அடி உயரம். ஆனால், அதற்கே 116 அடிதான் அடித்தளம் போட்டு இருக்கிறார்கள். எதனாலே இந்த முல்லைப் பெரியாறு அணைக்கு வேட்டு வைக்க நினைக்கிறார்கள்?

இடுக்கி அணையில் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறான். கிட்டத்தட்ட, 29,000 சதுர ஏக்கர் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடுக்கி அணையில் 78 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி நிற்கிறது இதன்கீழ்மட்ட அகலம் வெறும் ஐம்பத்தாறு அடிதான். அந்த அணைக்குத் தண்ணீர் வேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆகவே, முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீரை உயர்த்த விடாமல் செய்தால் அவனுக்குத் தண்ணீர் வரும்.

இதைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சபர்வால் கேட்டார். இடுக்கி அணைக்குத் தண்ணீர் கொண்டு போக வேண்டும் என்பதற்காகத்தானே முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று வழக்குமன்றத்திலே கேட்டார்.

பென்னி குயிக் தமிழ்நாட்டை நேசித்தான். இந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தான். அன்றைக்கு சென்னை இராஜதானியில் கவர்னர் ஆட்சி. முல்லைப் பெரியாறு அணை கட்ட வேண்டும் என்று நினைத்தபோது, அந்த இடம் திருவாங்கூர் சமÞதானத்துக்கு உட்பட்ட இடம் என்று தவறாகக் கருதினார்கள். ஆனால், அது சென்னை இராஜதானிக்கு உட்பட்ட இடம்.

அணை கட்டுவதற்கு ஒப்புதல் வேண்டும் என்று, திருவாங்கூர் ராஜாவுக்குக் கடிதம் எழுதினார்கள், மகாராஜாவின் தரப்பில் இருந்து திவான் பதில் எழுதவில்லை. இது நம் இடமே இல்லையே. நாளைக்குப் பிரச்சனை வருமே? சென்னை இராஜதானிகாரர்கள் கலாட்டா செய்வார்களே என்று கருதிக் கொண்டு பதில் எழுதவில்லை. இரண்டாவது கடிதம் எழுதினார்கள். விதி விளையாடியது. சரி, அவர்களாக கேட்கிறார்கள் என்று ஒப்பந்தம் போட்டார்கள். இங்கே இருந்த கவர்னர் பெயர் கன்னிமரா. சென்னையில் கன்னிமரா நூலகம் இருக்கிறது அல்லவா, அவர்தான் அன்றைக்குக் கவர்னர்.

அதன்பிறகு பென்னிகுயிக்கின் கடுமையான முயற்சிகளால் பத்து ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டு, 1895 இல் அக்டோபர் 10 இல் அணை திறக்கப்பட்டது.
எங்கோ 6000 மைல்களுக்கு அப்பால், தேம்Þ நதிக் கரையில் பிறந்த பென்னிகுயிக், இலண்டனுக்குச் சென்று தன் சொத்துகளை எல்லாம் விற்று, மனைவியின் சொத்துகளை விற்று ஏன், அவன் வீட்டில் இருந்த கட்டில் முதற்கொண்டு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, அணையைக் கட்டினான்.

999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு, 1000 ஆண்டுகளுக்கு இந்தத் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.

அணை கட்டுகிற காலத்தில் பல ஆங்கிலப் பொறியாளர்கள் இறந்து போனார்கள். காலராவுக்கு, மலேரியாவுக்குப் பலியானார்கள். பாம்பு கடித்துப் பலர் இறந்தார்கள். நன்றி உணர்வோடு அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். ஆனைவிரட்டி ஆங்கத் தேவர் என்ற பேயத்தேவரும், காடுவெட்டி கருப்பத்தேவரும், அவர்களுக்கு லைசென்ஸ் துப்பாக்கி வாங்கிக் கொடுத்து இரண்டு பேரும் பென்னி குயிக்குக்கு மெய்க்காவலாக ஆறு ஆண்டுகள் இருந்தனர்.

பென்னிகுயிக் அந்த நன்றியை மறக்காமல், அணை கட்டி முடித்து வாய்க்கால்கள் அமைக்கிறபோது, இது பேயத்தேவர் அணை என்று பெயர் சூட்டினான். ஆங்கத் தேவர் யானையையே கொன்றுவிடுகிற அளவுக்கு வலுவானவர். அவர் பெயரைச் சூட்டியதோடு மட்டும் அல்ல, அவர்கள் குடும்பத்தாருக்கு, தலைமுறையினர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காக இதில் மடையே கிடையாது. தொடர்ந்து தண்ணீர் பாய்ந்து கொண்டே இருக்கும். 572 ஏக்கர் பூமி இதில் பாசனமாகும் என்று உறுதி கொடுத்து விட்டுப் போனான்.

அன்புத் தோழர்களே, அணை கட்டியது மட்டுமல்ல, நெடுந்தொலைவுக்குப் பாறைகளை உடைத்து, திறந்தவெளி வாய்க்கால்களை அமைத்தான். 5756 அடி நீளத்துக்குத் திறந்தவெளி வாய்க்கால் அமைத்ததற்குப் பிறகு, 7000 அடி மலையைக் குடைந்து சுரங்கம் அமைத்து, அதற்குள் தண்ணீரைக் கொண்டு வந்து வைரவன் கால்வாய்க்கு வந்து சேர்ந்து, பிறகு 17 வாய்க்கால் சிறு சிறு அணைகளுக்குத் தண்ணீர் வந்தது. அப்பொழுது வைகை அணை கிடையாது. தொண்டி வரையிலும் இந்தத் தண்ணீர்பாய்ந்து கொண்டு இருந்தது. 1958இல்தான் வைகைஅணை வந்தது.

அந்த அணை உடையும் என்று கேரளம் சொன்னபோது, மிட்டல் தலைமையிலும் எஸ்.எஸ்.பிரார் தலைமையிலும் வந்த குழுவினர் ஆய்வு நடத்திவிட்டு அணை வலுவாக இருக்கிறது, பலமாக இருக்கிறது, எந்தச் சேதமும் ஏற்படாது என்று சொல்லி விட்டார்கள்.

இந்த அடிப்படை ஆதாரங்களில்தான் பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு விவசாயிகளும் சேர்ந்து போராடி, அனைத்திந்திய அண்ணா தி.மு.க. ஆட்சியின் போது, பிப்ரவரி 27 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. முதலில் 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம்; அணையைப் பலப்படுத்துகின்ற எல்லா வேலைகளையும் தமிழ்நாடு அரசு செய்யலாம்; கேரளா தலையிட முடியாது; முட்டுக் கட்டை போடமுடியாது என்று சபர்வால் உள்ளிட்ட மூன்றுசுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தார்கள்.

இந்தத் தீர்ப்பு பிப்ரவரி மாதம் வந்தது. கேரளாவில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளும் சேர்ந்து, சட்டமன்றத்தை அவசரமாகக் கூட்டி அயோக்கியத்தனமாக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். நான் வார்த்தையை அளந்துதான் பயன்படுத்துகிறேன். ஆத்திரத்தாலோ, அவசரப்பட்டோ சொல்லவில்லை. அது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கின்ற சட்டம்.

அணைகள் பாதுகாப்புச் சட்டமாம். கேரளாவுக்கு உள்ளே இருக்கிற எல்லா அணைகளின் பராமரிப்பும் பாதுகாப்பும் கேரள அரசுக்கு என்று சட்டம். எதற்காக? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் குப்பைத் தொட்டியிலே போட. பிப்ரவரி 27 ஆம் தேதி தீர்ப்பை எதிர்த்து மார்ச் 17 ஆம் தேதி சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

ஏனென்றால், கருணாநிதி என் பெயரைச் சொல்லாமல் கடுமையாக கேலி செய்து பரிகாசம் செய்து ஒரு அறிக்கை விட்டு இருக்கிறார். நான் கருணாநிதி அவர்களுக்குச் சொல்கிறேன். மலிவான அரசியல் நடத்துவதற்காக முல்லைப் பெரியாறை வைகோ பேசவில்லை. நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். உங்கள் குடும்பத்துக்காகத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறீர்கள். உங்களுடைய மந்தகாச வாழ்வு, உங்கள் மகுடாபிஷேகம், பிள்ளைக்குப் பட்டாபிஷேகம், ஒரு மகனுக்கு மத்திய மந்திரி பதவி, குடும்பமே கொலுமண்டபத்தில். உலகக் கோடீஸ்வரக் குடும்ப வரிசையில் நீங்கள் முதல் இடத்தில், ஆசியாக் கண்டத்தில் பெரிய பணக்காரர், ஐஸ்வரியவான்.

ஆனால், உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுக்குப் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தில்லியை மிரட்டினீர்களே, நான் கேட்ட இலாகா கொடுக்கவில்லை என்றால், பதவிப் பிரமாணம் எடுக்கமாட்டார்கள், எங்கள் மந்திரிகள் என்றீர்களே, இந்தத் தமிழ்நாட்டின் எதிர்காலமே பாழாகப் போகிறது. அதற்கு உங்களுக்கு ஆத்திரம் வரவில்லையே? உங்களுக்கு அதைப்பற்றிய கவலை இல்லையே?

மார்ச் 17 ஆம் தேதி கேரளக்காரன் சட்டம் கொண்டு வருகிறான். 31 ஆம் தேதி அண்ணா தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் அதை எதிர்த்து வழக்குப் போடுகிறது. நேற்றைக்கு முன்தினம் விட்ட அறிக்கையில் என்னைப்பற்றி, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரின் கைப்பாவையாக ஒருவர் மதுரையில் ஏதோ ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறா னாம் என்று கேலி பேசியிருக்கிற முதல்வர் அவர்களே, நான் கேட்கிறேன்.

மார்ச் 17 ஆம் தேதி கேரள அரசு சட்டம் போட்டது. மார்ச் 31 ஆம் தேதி அண்ணா தி.மு.க. அரசு அதை எதிர்த்து வழக்கு தொடுத்தது. உங்கள் அறிக்கையில் என்ன சொல்கிறீர்கள்? 14 நாள்கழித்து தான் இவர்கள் சுப்ரீம் கோர்ட் சென்றார் கள் என்கிறீர்கள். நான் கேட்கிறேன். 14 நாட்களுக்குள் ஒரு அரசின் சட்டத்தை எதிர்த்து ஆவணங்களைத் தயாரித்து, சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, பொறியியல் நிபுணர்களோடு கலந்து பேசி, வேண்டிய நடவடிக்கை எடுத்து அன்றைய அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அருமைச் சகோதரி டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் கடமையைச் செய்து இருக்கிறார்.

நான் உங்களைக் கேட்கிறேன். அச்சுதா னந்தன் முதலமைச்சர் ஆனவுடன் ஜூலை 3 ஆம் தேதி தன் மந்திரிகளோடு தில்லிக்குச் சென்று, பொய்யான ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டு, எல்லாம் பொய்யான கிராபிக்ஸ் வேலை, போலித்தனமான சி.டி.களைத் தயார் செய்து, அணை உடைவது போல, வெள் ளம்பாய்வதுபோல, வெள்ளத்தில் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் செத்து மிதப்பதைப்போல, மக்களெல்லாம் செத்து மரக் கிளைகளில் பிரேதங்களாகத் தொங்குவதுபோல, போலித்தனமாக மாயமந்திரக் காட்சிகளாக, 5 இலட்சம் சி.டி. தயார்செய்து, கேரளா முழுவதும் அனுப்பி, கேரள மக்களுக்கு பயத்தை உண்டுபண்ணினார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் செத்து அரபிக் கடலில் மிதப்பார்கள் எனப் பொய்யைச் சொல்லி, இதேபோல அணை உடைந்துவிடும் என்று பிரதம மந்திரி மன்மோகன் சிங்கை சந்தித்துச் சொன்னார்கள். அணையின் பராமரிப் பையும் பாதுகாப்பையும் எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டார்கள்.

நான் கருணாநிதி அவர்களைக் கேட் கிறேன். ஜூலை 3 ஆம் தேதி சந்தித்தார் அல்லவா? அங்கம் பதற வேண்டாமா? அடிமடியில் கை வைக்கப் பார்க்கிறான் என்று கோபம் வரவேண்டாமா? தென் தமிழ்நாடு அழிந்துவிடும் என்று பயம் வர வேண்டாமா? தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டாமா? நீங்கள் தானே முதல் அமைச்சர்? உங்களுக்கு தானே ஆறுகோடி மக்களின் நலனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை இந்த நாட்டு மக்கள் தந்து இருக்கிறார்கள்.

வீட்டின் காவலன் வீட்டைக் காப்பாற்ற வேண்டும். நாட்டின் காவலன் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நாட்டின் காவலன் பொறுப்பைத்தானே தேர்தலில் நீங்கள் பெற்று இருக்கிறீர்கள்? யாருக்கும் வராத அக்கறையும், யாருக்கும்வராத கோபமும் ஆத்திரமும் உங்களுக்கு அல்லவா வந்து இருக்கவேண்டும்? ஏன் தில்லிக்குப் போகமுடியாதா?

உங்கள் பிள்ளைகளுக்குப் பிரச்சனை என்றவுடன் தில்லியில் ஒருவாரம் முகாம் அடித்த கருணாநிதி அவர்களே, 14 நாட்கள் கழித்துத்தான் அண்ணா தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம்கோர்ட்டில் மனு போட்டது என்று சொல்லும் முதல்வர் அவர்களைக் கேட்கிறேன்.

ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் வரை நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இதைத்தான் நான் கேட்டேன். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் ஏன் பிரதமரைச் சந்திக்க வில்லை? அச்சுதானந்தன் சந்தித்த மறுநாள் நீங்கள் போய் நிற்க வேண்டாமா? தில்லிக்கு என்ன விமான சர்வீஸ் இரத்தாகிவிட்டதா? இரயிலும் கிடையாதா? நீங்கள் செல்ல முடியாதா?

அவர்கள் சொல்வதுபோல் அணை உடைகிற வாய்ப்பு ஒன்றும் கிடையாது. அணையின் பராமரிப்பு பாதுகாப்பை எல்லாம் அவன் கேட்பது தவறு என்று ஏன் சொல்லவில்லை? அடுத்து இரண்டாவது தடவையாக, ஆகஸ்ட் 30 இல் அச்சுதானந்தன் அனைத்துக் கட்சித் தலைவர்களோடு செல்கிறார். அணையை உடைப்போம் என்று மந்திரிகள் பேசுகிறார்கள். பிரதமரிடத் தில் மனு கொடுக்கிறார்கள். பிரதமர் வஞ்சகம் செய்கிறார். மன்மோகன் சிங் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார்.

என்ன செய்கிறார்? மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கும் நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும் கேரள முதலமைச்சர் கொடுத்த மனுவைப் பரிசீலனைக்கு அனுப்பினார். பச்சைத் துரோகம் மன்மோகன் சிங் செய்தது. ஏன்? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றியது மன்மோகன் சிங்குக்குத் தெரியாதா? மன்மோகன் சிங்கிடம் ஐ.பி. இல்லையா? ஒரு மாநில அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்து, அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியது, இந்தியப் பிரதமருக்குத் தெரியதா? தகவல் வரவில்லையா?

அப்படியென்றால், பிரதமர் நாற்காலியில் உட்கார்வதற்குக் கடுகு அளவு தகுதியும் மன்மோகன் சிங்குக்குக் கிடையாது.

இவ்வளவு நடந்த போது, கொதித்து எழவேண்டிய கடமையை தமிழக முதலமைச்சர் செய்யத் தவறினார்.

கேரள நண்பர்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேரள மக்களுக்குப் பொய்யைச் சொல்கிறீர்கள்.நாங்கள் தருகிற பால், நாங்கள் அனுப்புகிற காய்கறி, நாங்கள் வழங்குகிற அரிசி, உங்களுக்கு இறைச்சிக்குப் பயன்படுகின்ற கால்நடைகள் எல்லாம் எங்கள் வீதிகள் வழியாக எங்கள் மக்களால் அனுப்பப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் கட்டுகிற வீடுகூட இங்கு கொள்ளை அடிக்கப்படுகிற, சுரண்டப்படுகிற மணலில் கட்டுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
கேரளாவில் ஆற்றுப் படுகைகளில் ஒரு கூடை மணல்கூட அள்ளவிட மாட்டாய்.

கேரள நண்பனே, உன்னுடைய ஆறுகளில், 2000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாகக் கலக்கிறது. எங்கு பார்த்தாலும் நதிவெள்ளம். எங்கும் மணல் படுகைகள். நம் தமிழகத்தைவிட ஆயிரம் மடங்கு மணல் படுகை வளம் அங்கே இருக்கிறது. ஆயினும், ஒரு கூடை மணல் அங்கே அள்ளமுடியாது. அதி காரிகள் அனுமதிக்க மாட்டார்கள். அரசி யல்கட்சிகள் அனுமதிக்காது. பொது மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இது கேரளம்.

இங்கே தமிழகத்தில், வறண்டு இருக்கின்ற ஆறுகளில் மண் சுரண்டப் பட்டு லாரி லாரியாகப் போகிறது. இங்கே அள்ளு கின்ற மணலின் கொள்ளைப் பணம் பலரின் கஜானாக்களுக்குப் போய்ச் சேர்கிறது. இப்பொழுது புதிய அணை கட்டப்போவதாகச் சொல்கிறாரே, அதற்கும் தமிழ்நாட்டில் இருந்து தான் இப்பொழுதே மணலைக் கொண்டு போய்ச் சேகரித்துக் கொண்டு இருக்கிறான்.

கடல் மட்டத்தில் இருந்து 2670 அடி உயரத்தில் இருக்கிற முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், தண்ணீர் ஆகாயத்தை நோக்கி ராக்கெட் போல பறக்குமா? யாரை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? 3500 அடி உயரத்தில் இருக்கிறார்கள் அந்த ஊர்களில்.

இந்த அணையைக் கட்டும்போதே பென்னி குயிக், தண்ணீர் வழிந்து ஓடுவதற்காக, இன்னொரு வாய்க்கால் போட்டு இன்னொரு அணையைக் கட்டினான். அதுதான் பேபி அணை. அதுவும் வலுவாக இருக்கிறது. அதை வலுப்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் ஆகும். அதற்குக் கேரள அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது.
இவர்கள் போடுகிற திட்டப்படி 550 கோடி ரூபாயில், புதிய அணை கட்டப்படுமானால், நமது முல்லைப் பெரியாறு அணையை உடைக்கின்ற ஆபத்து ஏற்படும். புதிய அணையை நீ பத்துகிலோ மீட்டருக்கு அப்பால் கட்டிக்கொள்.

இப்பொழுது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அணை கட்டப் போகிறாய். அப்படி நீ 375 அடி தூரத்தில் அணை கட்டுகிறபோது, பத்து கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைத்து, பதினைந்து மீட்டர் அகலத்துக்கு மூன்று பாலம் கட்டி, 86 ஏக்கரில் கட்டடம் அமைக்க, அந்தப் பகுதிகளில் இருக்கின்ற காடுகளை அழித்து, சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, 1,20,000 டன் பாறைகள் உடைக்கப் போகிறீர்கள். அதற்கு, 1020 கிலோ கரி மருந்து பயன்படுத்தப்படும்.

அப்படிப் பாறைகளை உடைக்கும்போது, நமது முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்துவரும். லேசாகக் கீறல் விழுந்தால் போதும். அவ்வளவுதான் இந்த அணை உடைந்துவிட்டது என்று சொல்லி, இவனே உடைத்து விடுவான்.

நமது பொதுப் பணித்துறை பொறியாளர்களை பார்வையிட அனுமதிக்க மறுக்கிறான். நம்மை உள்ளேயே விடுவதில்லை. நமது அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது. இப்பொழுது அங்கு மின்சாரமே கிடையாது. நம் பராமரிப்பு இருக்கின்ற இடத்தில் மின்சாரம் கிடையாது. மின்சாரத்தைப் பிடுங்கி விட்டான். யாரையும் உள்ளே விடுவது இல்லை.

புதிய அணை கட்ட வேண்டும் என்று எப்பொழுது ஆரம்பித்தார்கள்? தமிழக முதலமைச்சர் இன்றைக்குக் கூட ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்தக்குரல் எப்பொழுது வலுத்தது தெரியுமா? முதலமைச்சர் கருணாநிதி அவர்களே நீங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான். 2006 இல் தான், ‘புதிய அணா புதிய கறார்’ என்றான் மலையாளத்தில். அதற்கு அர்த்தம், ‘புதிய அணை, புதிய ஒப்பந்தம்’ என்ற கோஷத்தைக் கிளப்பினார்கள். ஓமன்சாண்டி, அச்சுதானந்தன் எல்லோரும். இப்பொழுது புதிய கறார் என்ற வார்த்தையை விட்டுவிட்டார்கள்.

புதிய அணை கட்டினால், பென்னி குயிக் கட்டிய அணையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நமக்குக் கிடைத்த சட்டபூர்வமான உத்தரவாதம் உடைந்து நொறுங்கிப்போகும். நம் உரிமையை இழப்போம். புதிய அணையில், நமக்கு எந்த உரிமையையும் தர மாட்டான். இடுக்கிக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக தண்ணீர் மட்டத்தை உயர்த்தமாட்டான். நமக்குத் தண்ணீர்கிடைக்காது.

இப்பொழுது ஆண்டுக்கு 2,40,000 ரூபாய் கட்டுகிறோம். புதிய அணை என்றால் 200 கோடி கட்டு என்பான். 200 கோடி தமிழ்நாடு கொடுத்தாலும் நீர் கொடுக்க மாட்டான். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. ஐந்து மாவட்ட விவசாயி களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 2,17,000 ஏக்கர் நிலம் தரிசு நிலங்களாகும். பிறகு வாழ்வது எப்படி?

உழவுத் தொழில் அழியும். பாசனம் அழியும். நிலங்கள் அழியும். குடிக்கத் தண்ணீர் இல்லாமல்போகும். இவ்வளவு ஆபத்தை கேரளம் ஏற்படுத்துகின்ற வேளையில், முதலமைச்சர் கருணாநிதி கடமை ஆற்றவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். முதல்வர் அவர்களே, நீங்கள் மத்திய அரசின் காவல் பாதுகாப்பு முல்லைப் பெரியாறு அணைக்கு வேண்டும் என்று கேட்டதாக நேற்றைக்குச் சொல்கிறீர்களே, 2006 ஆம் ஆண்டிலேயே எவ்வளவு பெரிய தவறை தமிழக அரசு செய்து இருக்கிறது தெரியுமா?

இந்தியாவின் உளவுத்துறையான ரா (RAW) வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும். உள்நாட்டில் அனைத்தையும் கண்காணிக்கின்ற உளவுத்துறை தான் ஐ.பி. அந்த ஐ.பி. 2006 ஆம் ஆண்டு நவம்பரிலேயே ஒரு ரிப்போர்ட் அனுப்புகிறது. அது தமிழக அரசுக்கு வருகிறது. தமிழக அரசில் இருக்கின்ற சி.ஐ.டி. இன்டலிஜன்ட் விங்க், அதை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. 2006 ஆம் ஆண்டு இன்டலிஜன்ட் பீரோ அனுப்பிய அறிக்கையில், இந்த அணையைப் பற்றிய பூர்வாங்க சரித்திரம் இருக்கிற நிலைமை எல்லாம் சொல்லிவிட்டு, இந்த அணைக்குப் பாதுகாப்பு வேண்டும். இந்த அணையை மட்டுமல்ல, பெரியாறு நீர்மின் திட்டத்தையும், பெரியாறு அணையையும் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் உளவுத்துறை ஒரு பரிந்துரையைப் பதிவு செய்கிறது.

இதில் பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. இந்தப் பாதுகாப்புக்கு எப்படிப் பட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நீர்மின்திட்டத்துக்குப் பக்கத்தில் பிளாட்பார்ம் உயர்த்தப்பட வேண்டும். அந்தப் பகுதிக்கு வருகிற எல்லா வாகனங்களும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க அவர்கள் பதினோரு பரிந்து ரைகள் செய்து இருக்கிறார்கள். நான் நேரம் இல்லாததால் எல்லாவற்றையும் வாசிக்க இயலாது. முக்கியமான பரிந்துரை,

பரிந்துரை 8 :

கேரளக் காவல்துறை முல்லைப் பெரியாறில் இருந்து அகற்றப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற சென்டிரல் ரிசர்வ் போலிஸ் - மத்திய காவல்துறை அல்லது தொழிற்கூடங்களை பாதுகாக்கின்ற படையணி இது அங்கே நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

முதலமைச்சர் கருணாநிதி அவர்களே, இது 2006 நவம்பரில் ஐ.பி. அறிக்கை. 2007 இல் தமிழக காவல்துறை இன்டலிஜன்ட் சி.ஐ.டி. இதுகுறித்து ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். அதுமட்டும் அல்ல, 2006 இல் ஐ.பி. தயாரிக்கிற போது, ஒருவேளை தீப்பிடிக்கிற ஆபத்து ஏற்பட்டால், உடனடியாகத் தீயை அணைக்கின்ற சாதனங்களும், தீ அணைப்புப் படையும் அங்கே நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை அறிக்கை சொல்லுகிறது.

இதுகுறித்து, 2007 மார்ச் 1 ஆம் தேதி, செக்யூரிட்டி பிராஞ்ச் சி.ஐ.டி., தேனி எஸ்.பி.க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப் பாளருக்கு கடிதம் எழுதுகிறார்.

மந்திரிமார்களுக்கு மந்திரிமார்களின் எடுபிடிகளுக்கு ஆயிரம் போர்டு வைத்தாலும் சரி, அது சாலையை மறித்தாலும் சரி, பாதசாரிகள் கீழே விழுந்தாலும் சரி, வைக்கின்ற கட்அவுட் கீழே விழுந்து மதுரையில் இருவர் உயிர் இழந்தார்களே. அதுபோன்ற அக்கிரமம் நடந்தாலும் சரி, அந்தக் கட் அவுட்டுக்கு காவல் பணி செய்கின்ற எடுபிடி காவல்துறை அதிகாரிகள் இங்கே எங்களைப் பொறுத்த மட்டில் ஒருபோர்டுகூட வைக்கக் கூடாது என்று காலையில் இருந்து மிரட்டினீர்களாமே, எங்கே சம்பளம் வாங்குகிறீர்கள்?

தமிழ்நாட்டு உரிமைக்காக போராடு வதற்கு, அன்றைக்கு இருந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு செக்யூரிட்டி பிராஞ்ச் சி.ஐ.டி. கடிதம் எழுதுகிறார். அதில் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பொதுப் பணித் துறை பொறியாளரையும், நீர்மின் நிலையத்தில் இருக்கின்ற பொறியா ளரையும் தொடர்பு கொண்டு, இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற் குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை மேற்கொள்ளவும், என்று 2007 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி அனுப்பப்பட்ட, தமிழ்நாடு காவல் துறையின் சி.ஐ.டி.யின் தேனி மாவட்ட எஸ்.பிக்கு அனுப்பப்பட்டது.

இப்பொழுது எழுதுகிறார் தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு, எங்களுக்கு மத்திய அரசின் காவல்துறை வேண்டும் என்று. யாரை ஏமாற்று வதற்கு? என்ன பித்தலாட்டம்? என்ன மோசடி? எக்கேடு கெட்டுப்போனால் என்ன?

தேனியில், கம்பம், கூடலூர், இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கிறவன், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரையில் இருக்கிறவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்றுதானே நினைத்தீர்கள்?

முதலமைச்சர் அவர்களே, உங்களுடைய திறமை என்னதெரியுமா? எதிராளிகள் தொடுக்கின்ற தாக்குதலில், எங்காவது ஒரு சிறுபிசகு இருந்தால், பிசகு மாதிரி தெரிந்தால் அதை பூதாகரமாக்கி, அதைப் பெரிதுபடுத்தி, அதற்குப் பதினைந்து பக்கத்துக்கு விளக்கத்தை எழுதி, முக்கியக் குற்றச்சாட்டைத் திசை திருப்பி விடுவீர்கள். ஈழப் பிரச்சனையில் இதைத்தான் செய்தீர்கள்.

ஈழத்தில் இலட்சக்கணக்கான மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறபோது, இங்கே மக்களை ஏமாற்ற, தமிழரை ஏமாற்ற முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளின் தியாகத்தை கொச்சைப் படுத்தி, இருட்டடிக்க அன்றைக்கு நீங்கள் செய்த துரோகம் தமிழ்நாட்டில் மன்னிக்கவே முடியாதது.

நான் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், அந்தக் கேள்வியை விட்டுவிட்டு, நான் ஒன்பதாவது மாதத்தில் இருந்து இத்தனை கடிதம் போட்டேன் என்கிறீர்களே, என் குற்றச்சாட்டை விட்டு விட்டீர்கள். புதிய அணை கட்டுவதற்கு அச்சுதானந்தன் அரசு வனத்துறை சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்துக்கு அன்றைக்கு மனு போடுகிறபோது, சுற்றுப் புறச்சூழல் வனத்துறையை காபந்து செய்கின்ற மந்திரியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஆண்டிமுத்து ராசா மந்திரியாக இருந்தார். அவர் தி.மு.க. மந்திரியாக சுற்றுப் புறச் சூழல் வனத்துறை மந்திரியாக இருந்தார். கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி கேட்கிறது.

கேரள அரசின் விண்ணப்பத்தை நீ ஏன் நிராகரிக்கவில்லை? கேரள மந்திரி அணையை உடைப்போம் என்கிறான். அனைவரும் சேர்ந்து சென்று பிரதமரிடம் பொய்யான ரிகார்டுகளைத் தருகிறான். நமது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மந்திரி இலாகாவுக்கு மனு வருகிறது. ஆய்வுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்க வேண்டாமா?

இதுவரை இலட்சம் தடவை சொல்லி இருப்பார், இந்த நாட்டுக்காகவே உயிரைக் கொடுக்கப்போகிறேன், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று. கின்னஸ் சாதனைப் பட்டியலில் எழுதலாம், கருணாநிதி கொடுத்து இருக்கிற அறிக்கைகளை.

நான் கேட்கிறேன். உங்களது மந்திரி உங்களிடம் சொல்லவில்லையா? வனத்துறை ஆய்வகத்துக்கு இப்படி முல்லைப் பெரியாறில் அனுமதி கேட்டு மனு வந்து இருக்கிறது என்று சொல்லவில்லையா? அப்படி மந்திரி சொல்லவில்லை என்றால் பச்சைத் துரோகி என்று அர்த்தம். உங்களுக்கும் துரோகி. தமிழ்நாட்டுக்கும் துரோகி. அவர் உங்களுக்கு எல்லாவிதத்திலேயும் வேண்டியவராயிற்றே? ரொம்ப வேண்டியவராயிற்றே? இலட்சம் கோடியல்ல. தங்க.தமிழ்ச்செல்வன் போன்ற ஆட்களை எல்லாம் காலி செய்வதற்கு வீட்டுக்குவீடு பணம் கொடுப்பதற்கு, அந்தப் பணம்தானே வந்தது.

இவர் அனுமதி இல்லை என்று மறுக்கவில்லை. அடுத்த மந்திரி யார்? மதுரையில் தீப்பிடித்தது தினகரன். பேரனைத் தூக்கி எறிந்துவிட்டார். இலாகா மாறியது. டி.ஆர்.பாலு வனத்துறைக்கு மந்திரி. ஏன் டி.ஆர்.பாலு அந்த அனுமதியை மறுக்கவில்லை? இது என்னுடைய கேள்வி. இதற்குப் பதில் சொல்ல வக்கில்லை, வகையில்லை. பெரிய வீராதிவீரர்போல அறிக்கை விடுகிறீர்களே, இப்பொழுது ஜெயராம் ரமேஷ் அனுமதி கொடுத்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடனே, நம் தலையில் இடிவிழுந்ததைப்போல பயந்தோம், அய்யோ அணையைக் கட்டுவானே என்று. அனுமதி கொடுக்காவிட்டாலும் கேரளத்துக்காரன் புதிய அணை கட்டுவதற்குத் தயாராகிவிட்டான். அவன் மத்திய அரசை மதிக்கப் போவதில்லை. அனுமதி இல்லை என்றாலும் கட்டுவான்.

அப்பொழுது என்ன வழி? வழி இருக்கிறது, நான் சொல்கிறேன். நம்மிடம் வழி இருக்கிறது. தமிழர்கள் உணர்ச்சியோடு ஒன்றாகத் திரண்டால் போதும். ஒன்றும் வேண்டாம், நாம் பொருளாதார முற்றுகையைப் போட்டால் ஒழுங்காக வழிக்கு வருவான். ஏன் முடியாது? தேர்தலை மறந்து விடுவோம். தேர்தலைப்பற்றி நினைக்கவேண்டாம். தென்னாட்டு மக்களின் உரிமையைக் காக்க அந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைக்கு இத்தனை ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்களே, இடி இடிக்குது மின்னல் அடிக்குது வெள்ளம் வருகிறது தேனியே பிரளயம்போல வரப்போகிறது எனச்சொல்லி வராமல் இருந்து விடாமல் வந்துவிட்டார்களே, தானாகத் திரண்டுவந்த கூட்டம் பல்லாயிரக்கணக்கான கூட்டம். இப்படி மக்கள் கூட்டம் திரளும்.

இவர் முதலில், ஆய்வுக்கு மைய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்றுவிட்டோம், நமக்கு அனுமதி கிடைத்துவிட்டது என்று கேரள முன்னாள் முதல்வர் உமன்சாண்டி சொல்கிறார். அடுத்து கேரள இந்நாள் முதல்வர் சொல்கிறார். நமக்கு அனுமதி கிடைத்துவிட்டது, எதைப் பற்றியும் கவலையில்லை என்று அச்சுதானந்தன் சொல்கிறார். அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது என்ற செய்திவந்து தமிழக மக்களிடம் கொந்தளிப்பு வருகிற ஒரு கட்டத்தில், இதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ராசா மந்திரி அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்தியப் புலனாய்வுத்துறை ராசா அலுவலகத்தில் ரெய்டு செய்தது. காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் ரெய்டு நடந்தது. ஒரு மத்திய மந்திரி அலுவலகத்துக்குள் ரெய்டு நடந்தபின்னும், அந்தப் பதவியில் மானம் உள்ள எவனும் மந்திரியாக நீடித்தது இல்லை. சோதனை நடந்த உடன், ஏன் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை? மந்திரி அலுவலகத்தில் இல்லாமல் வேறு அலுவலகத்தில் நடந்ததா?

மந்திரி ராசாவோ ‘இதைப் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை, எல்லாவற்றையும் பிரதமரைக் கேட்டுத்தான் செய்தேன்’ என்கிறார். என்னுடைய அலுவலகத்துக்கு வந்து ரிகார்டை எடுத்துவிட்டுச் சென்றார்கள் என்கிறார். உங்களைத் தலை கீழாக நிற்க வைத்து சவுக்கால் அடிக்கவில்லை என்கிறீர்களா? ரெய்டு நடந்தது இல்லையா? அந்த ரெய்டு அங்கோடு நிற்காது. வேறு இலாக்காகள் சிப்பிங்வரை போகிறது என்று ஒரு செய்தி வந்தது.

ராசா அலுவலகத்தோடு நிற்கவில்லை. சி.பி.ஐ. ரெய்டு வேறு இடங்களுக்கும் வரப்போகிறது என்ற தகவல் வந்தபோது, நம்ம அண்ணன் எப்படி என்றால் மிரட்டிப் பார்ப்பார். தனக்கு ஆபத்து வரும் என்றால் படார் என்று பல்டி அடித்து விடுவார். இவரது வேலையே இதுதான். ஒரு மிரட்டல்விட்டார், மதுரையில் கண்டனக் கூட்டம் என்று.

ஆக சூராதி சூரர் கிளம்பிவிட்டார். இதோ மதுரையை நோக்கிப் புறப்பட்டார். மாநகர் மதுரையில் கண்டனக் கூட்டம், கருணாநிதி முழங்குவார். மத்திய இணை அமைச்சரை எதிர்த்து கண்டனக் கூட்டம். அடேயப்பா, மதுரை முழுவதும் கட்அவுட். மதுரை முழுவதும் போஸ்டர். விளம்பரம். அக்டோபர் 22 ஆம் தேதி முரசொலியில் முதல்பக்கத்தில் இந்த அறிவிப்பு. மத்திய இணை அமைச்சரை எதிர்த்து மதுரையில் மாபெரும் கண்டனக் கூட்டம் என்று, யார் தலைமையில்? தினகரன் பத்திரிகை அலுவலகம் தீ எரிப்பு புகழ் மகன் தலைமையில், யார் பேசுவது?

தமிழ்த்தலைமகன் என்று நேற்றைக்கு தம்பிரான்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள். தினம் ஒரு பாராட்டு மழை. பாராட்டு இல்லாமல் இருக்க முடியாது. நிலைய வித்துவான்கள் பத்துப்பேர் இருக்கிறார்கள். தினமும் இவரைப் பாராட்ட வேண்டும். பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விமர்சனம் வந்துவிட்டால் இவரால் தாங்க முடியாது.

அக்டோபர் 22 ஆம் தேதி முரசொலியில் முதல்பக்கத்தில் இந்த அறிவிப்பு. இரண்டு நாள் கழித்து 24 ஆம் தேதியில் அப்படியே அந்தர் பல்டி அடித்து முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புப் பொதுக்கூட்டம் என்றார்.

கருணாநிதி அவர்களே, 22 ஆம் தேதி முரசொலியில் மத்திய இணை அமைச்சரைக் கண்டித்து என்றீர்களே, அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்து விட்டீர்களா? ஏன் இப்படி பல்டி அடித்துவிட்டீர்கள். சவுண்ட் குறைந்து விட்டது, குரல் குறைந்துவிட்டது. ஸ்வரம் வற்றிப்போய்விட்டது?

அதிலாவது நின்றாரா? ஐந்து நாள் கடந்தது. மதுரைக் கூட்டமே ரத்து என்று அறிவித்தார். இங்கே இடியே இடித்தாலும் கூட்டத்தை நடத்துவோம் என்று நாங்கள் நிற்கிறோம். (பலத்த கைதட்டல்) மதுரைக் கூட்டத்தை எதற்கு இரத்து செய்கிறீர்கள் என்றால், அதற்கு விளக்கம் சொல்கிறார், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்று.

அப்படியா? அப்படி என்றால் நீங்கள் கூட்டம் அறிவிக்கின்றவரை,கோர்ட்டில் வழக்கு இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

இல்லை இல்லை 142 அடி வரை தண்ணீர் உயர்த்தலாம் என்று சென்டிரல் கவர்மென்ட் கவுன்சல் கருத்துச் சொல்லிவிட்டார் என்கிறார். பிரச்சனை அதுவல்ல. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது அயோக்கியத் தனம், துரோகம் என்று சொல்லித்தான் அதைக் கண்டித்துத்தான் நீங்கள் குரல் கொடுத்து இருக்க வேண்டும். அதைச் சொல்லித்தான் நீங்கள் கூட்டம் போட்டீர்கள். 142 அடி பிரச்சனைக்கு அல்ல.

கேரள அரசுக்குச் சொல்வேன். எங்கள் குரல்வளையை நெறிக்கின்றவகையில், எங்கள் சந்ததிகளை அழிக்கின்ற வகையில், அணையை உடைக்கலாம் என்று திட்டம்போட்டு காரியமாற்றினால், இந்திய ஒருமைப்பாடு அன்றைக்குத்தான் உடைய ஆரம்பிக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கேரள சகோதரர்களே நான் என்றைக்கும் வன்முறையை நாடியதும் இல்லை. வன்முறையில் எங்கள் இயக்கம் ஈடுபட்டதும் இல்லை. வன்முறையைத் தூண்டியதும் இல்லை, அது எங்கள் நோக்கமும் அல்ல.

ஆனால், எங்களுக்கு நீங்கள் கேடு செய்ய நினைக்கிறபோது, எங்களைப் பாதுகாத்துக் கொள்ள, எங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள, நாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டாமா? ஆகவே, புதிய அணை என்ற திட்டத்தைக் கைவிடுங்கள்.

இந்திய அரசே, புதிய அணை கட்டட்டும் என்று நீ நினைத்தால், இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், அதுதான் இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அச்சாரம் போட்ட நாளாக இருக்கும்.

ஒவ்வொரு மாநிலமும் அவரவர் இஷ்டத்துக்கு அடுத்த மாநிலத்தை அழிக்கலாம் என்று நினைத்தால் எதற்கு இந்தியா என்கிற அமைப்பு? இன்றைக்குச் சீனர்கள் இலங்கையில் கால்வைத்து பாகிஸ்தானில் கால்வைத்து தென்னாடே நாளைக்கு அழியப்போகிற ஆபத்து வந்து விட்டது. நீங்கள் ஈழப் பிரச்சனையில் துரோகம் செய்தீர்கள், மத்திய அரசு. அன்றைக்கு தொலை நோக்குப் பார்வை அம்மையார் இந்திரா காந்திக்கு இருந்தது. ஆனால், சோனியா காந்தி ஆட்டி வைக்கின்ற இந்த அரசுக்கு எந்தத் தொலைநோக்குச் சிந்தனையும் கிடையாது.

காவிரிப் பிரச்சனையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தது. கர்நாடகாவில் அணைகளைக் கட்டினான். உரிமைகளை இழந்து நிற்கிறோம். பாலாற்றுக்கு குறுக்கே ஆந்திரம் அணைகட்டுகிறது. நம் உரிமையை இழந்து தவிக்கிறோம். இப்பொழுது கேரளம் கட்டுகின்ற அணையின் ஆய்வுக்குத்தானே அனுமதி? என்ன சொல்கிறீர்கள்? நீ ஆய்வுக்கு அனுமதி என்கிறாய். இப்பொழுதே கேரளாவில் அலுவலகம் திறந்துவிட்டான். குவித்து வைத்து இருக்கிறான் மணலை.

ஆக தமிழர்கள் சிந்திக்க வேண்டும். இங்கே இருந்து போகின்ற ஒரு லாரி மணல் உன் பேரப்பிள்ளை தலையில் மண்ணைப் போட என்பதை மறந்துவிடாதே. அவன் அணை கட்டுவதற்கு என்பதை மறந்துவிடாதே.

ஆகவே, இவ்வளவு துரோகத்தை இந்திய அரசு செய்துவிட்டது. தடுக்கும் கடமையில் சுயநலத்துக்காக கருணாநிதி தவறிவிட்டார்.

முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதற்காகத்தான் நவம்பர் 14 ஆம் தேதி, மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு நான் போற்றுகின்ற ஒரு மாபெரும் தலைவரின் பிறந்த நாள் அன்றுதான், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டு மானால், இந்தியாவின் ஒருமைப் பாட்டைக் காக்க வேண்டுமானால், இதோ எழுந்து நிற்கிற நேரு சிலைக்கு எதிரே இருந்து நான் அறைகூவல் விடுத்து கேட்கின்றேன்.

மதுரை மாநகரில் நவம்பர் 14 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகின்ற உண்ணாவிரத அறப்போருக்கு, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சித் தலைவி வாழ்த்துரை அனுப்புகிறார்; ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துரைக்க வருகிறார். அப்பாஸ் தொடங்கி வைக்கிறார்.

வாருங்கள்! உணர்வுள்ள தமிழர்களே மதுரைக்கு வாருங்கள்! திரண்டு வாருங்கள்!

அங்கு முடிவெடுப்போம்; அன்றைக்கு முடிவெடுப்போம் அடுத்தக் கட்டத்தைப் பற்றி. இயற்கைத்தாயே நீ மழைக்கு ஓய்வு கொடுத்து எளியவன் பேச்சுக்கு அனுமதி கொடுத்ததற்கு உனக்கும் நன்றி. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும் நன்றி.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

«  
  »
S M T W T F S
 
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)