இலட்சியங்கள்தான் நிரந்தரம்; மனிதர்கள் அல்ல இறுதி மூச்சு வரை கொள்கைக்காக வாழ்வேன்! கணேசமூர்த்தி இல்ல விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ

Issues: Human Rights, Politics

Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu

Category: Articles, Headlines, Speeches

Date: 
Fri, 07/11/2014


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இலட்சியங்கள்தான் நிரந்தரம்; மனிதர்கள் அல்ல இறுதி மூச்சு வரை 

கொள்கைக்காக வாழ்வேன்!

கணேசமூர்த்தி இல்ல விழாவில்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ
 
லட்சியங்கள்தான் நிரந்தரம்; மனிதர்கள் அல்ல இறுதி மூச்சு வரை கொள்கைக்காக வாழ்வேன் என்று கணேசமூர்த்தி இல்லைத் திருமண விழாவில் 02.11.2014 அன்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:
 
எழிலார்ந்த மணவிழா அரங்கத்தில், தேவார திருவாசக மறைமொழிகள் அமுதத் தமிழில் ஒலிக்க, 
 
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
 
என வள்ளுவர் வகுத்த மனை அறத்தை, மணமக்கள் கபிலன்-திவ்யா இணையரின் இனிய இல்லறத்தைத் தொடங்கி வைக்கின்ற மன்றல் விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். 
 
என் ஆருயிர்ச் சகோதரர் கணேச மூர்த்தி அவர்களுடைய இல்லத் திருமணம். மனமெல்லாம் மகிழ்ச்சியால் திளைக்கின்றது. என் உயிரனைய சகோதரர் கணேச மூர்த்தி, நினைவில் வாழுகின்ற திருமதி பாலாமணி ஆகியோரின் அருமைப் புதல்வன் திருவளர்ச் செல்வன் கபிலன் அவர்களுக்கும், பெருமதிப்பிற்குரிய திரு பழனிச்சாமி-திருமதி இராதை ஆகியோரின் அன்புமகள் திருநிறைச்செல்வி திவ்யா அவர்களுக்கும், குமரலிங்கம் அவர்கள் தமிழ் மறை ஓத, வெகு விமரிசையாகத் திருமணம் நிறைவேறி இருக்கின்றது. 
 
வருகை தந்து சிறப்பித்து இருக்கின்ற பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொழில்துறை விற்பன்னர்கள் அனைவரையும் நான் வரவேற்கின்றேன். நன்றி தெரிவிக்கின்றேன்.  அனைத்து அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர்கள் இங்கே வருகை தந்து இருக்கின்றார்கள்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய நடராசன் அவர்களுடைய அரங்கம் இது. திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, நம்முடைய பொன்னையன், பேராசிரியர் கண.குறிஞ்சி போன்றவர்கள் நடத்துகின்ற பல்வேறு தமிழ் உணர்வு அமைப்புகள், பெஸ்ட் இராமசாமி போன்ற சமுதாயப் பெரியவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்து இருக்கின்றார்கள். 
 
இன்று நிறைந்த திருமண நாள். ஏழு மணிக்கெல்லாம் அரங்கத் திற்கு வந்து விட்டார்கள். அரங்கம் நிரம்பி வழிகின்றது. வெளியிலும் மக்கள் திரண்டு இருக்கின்றார்கள். இது எங்கள் குடும்ப விழா. அருமை மகன் கபிலன் பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு முன்னால் சற்றுத் தயக்கமும் தடுமாற்றமும் இருந்தபோது,  சென்னை அண்ணா நகரில் என் இல்லத்தில் வைத்துத்தான் இந்தப்பிள்ளையை நானும், என் துணைவியாரும் பராமரித்தோம் என்பது பலருக்குத் தெரியாது. 
 
இங்கே நீங்கள் வாழ்த்துகின்றீர்கள். இந்தத் திருமணத்திற்கு வர இயலாத இலட்சக்கணக்கான கழகக் கண்மணிகள் ஆங்காங்கு இருந்தவாறு வாழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். விண்ணில் இருந்து சகோதரி பாலாமணி வாழ்த்து கின்றார்; செல்வராஜ் வாழ்த்து கிறார், பூங்கொடி சாமிநாதன் வாழ்த்துகிறார், வெள்ளகோவில் பெரியசாமி வாழ்த்துகிறார். வாழ்க்கையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் கணேசமூர்த்தி. துன்பங்கள் உண்டு, துயரங்கள் உண்டு. உங்கள் துணைவியரை இழந்தபோது துன்பத்தால் துடித்தீர்கள். 50 வயதான பிறகு வருகின்ற இத்தகைய இழப்புகள், வாழ்க்கைத்துணையைப் பிரிவது என்பது சூனியப் பெருவெளியில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்பதை நான் உணர்வேன்.   ஆனால், உங்களுக்கு வாய்த்து இருக்கின்ற பிள்ளைச் செல்வங்களைப் போல வேறு யாருக்குக் கிடைக்கும்? எனவே, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். 
 
அருமை மகள் தமிழ்ப்பிரியா- மருமகன் சஞ்சீவ்குமார் இனிய இல்லறத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். உங்களுக்குப் பெயரையும் புகழையும் தேடிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  
கபிலனைப் போன்ற ஒரு பிள்ளை யாருக்குக் கிடைக்கும்? நீங்கள் எத்தனை பிறவி தவம் இருந்திருக்க வேண்டும்? நான் மிகைப் படுத்திச் சொல்லவில்லை. உயர்வு நவிற்சியாகச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட தங்கக்கம்பி கபிலன். நான் பக்கத்திலேயே இருந்து இந்தப் பிள்ளையைப் பார்த்தவன். 
 
நம்முடைய பழனிச்சாமி அவர்கள் மிகுந்த பண்பு உடையவர். கொங்கு வேளாள சமுதாய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று இருப்பவர். அருமைச் சகோதரர் ராஜ்குமார் மன்றாடியார் அவர்கள் நேற்றைய தினம் வரவேற்பு விழாவுக்கு வருகை தந்தபோது என்னிடம் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். நம்முடைய கணேசமூர்த்தியைப் போலவே பழனிச்சாமி அவர்களும் மிக உயர்ந்த பண்பாளர், அற்புதமான மனிதர்  என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்குப் பேரானந்தமாக இருந்தது. அவருடைய குலக்கொடி நம் வீட்டுக்கு மருமகளாக வந்து இருக்கின்றார். அவர் கவி படைக்கின்ற ஒரு கவிதாயினி. அவர் எழுதி இருக்கின்ற புதுக் கவிதைகளைப் படித்துப் பார்த்தேன். 
 
மழை பொழிகின்றது. குன்றத்தின் மீது மஞ்சுக் கூட்டங்கள் தவழ் கின்றன. 
 
பனி போர்த்திக் கொள்கிற மலை; 
மழையில் நனைந்த குளியல் 
என்று ஒரு கவிதை.  வானத்தைப் பற்றி எத்தனையோ கவிஞர்கள் சித்தரித்தவற்றை நான் படித்து இருக்கின்றேன். 
 
கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல 
 
என்ற வள்ளுவன் குறளைப் படித்து இருக்கின்றேன். வானத்து நட்சத் திரங்களின் ஒளி உன் விழிகளில் வந்து உறைந்து இருக்கின்றது என்று ரோமியோ ஜூலியட்டைப் பார்த்துச் சொல்வதாக சேக்ஸ்பியர் வருணிக்கின்றார். ஆனால் மகளே, கபிலன் இந்தக் கவிதையைச் சொல்லுவது போல நீ எழுதி இருக்கின்றாய். 
 
இரவின் உறக்கத்தைத் தொலைத்து
நிலவின் வெளிச்சத்தில் உன்முகம் காண்கிறேன் 
கண் இமைக்கும் நேரம்கூடக் கனக்குதடி 
உன்னைப் பார்க்கத் தடுப்பதால் 
கலைந்து போகும் மேகம்
உன்னை உரசிச் செல்லும்நேரம்
பதறிப் போகிறேன் நானும்
நீ கலைந்து போகட்டும் என்று
சலிக்காமல் உன்னைக் காணத் துடிக்கிறேன்
விழிமூடிக் கொள்கையில் நான் 
என் நித்திரைக்குள் சித்திரமாய் நீ
கண்விழித்துப் பார்க்கையில் 
வெண்ணிலவுக்குள் பத்திரமாய் நீ
யார் சொல்வது? கபிலன் சொல்லு கிறார். ஏன்? 
அந்த நொடிப்பொழுதில் உன்னைப் பார்ப்பதை 
இந்த இமைகள் தடுப்பதால் கனக்கின்றன. 
 
இப்படி ஒரு கவிஞன் எழுதியதாக இதுவரை நான் படிக்கவில்லை.  திவ்யா எழுதி இருக்கின்றார். 
 
‘மேகங்கள் உன்னை உரசிச் செல்லுகின்றபோது பதறிப் போகிறேன் நானும்  
எங்கே நீயும் கலைந்து போய்விடுவாயோ என்று கலங்குகிறேன்
என்று கபிலன் சொல்லுகிறார். 
நான் கண்மூடித் தூங்குகையில் என் நித்திரைக்குள் நீ சித்திரமாய்...
விழி திறந்து பார்க்கையில் நிலவில் நீ சிரித்துக்கொண்டு இருக்கின்றாய்
இவ்வளவு அருமையாக எழுதியதோடு நிறுத்தவில்லை. 
களங்கம் இல்லாத எதைப் பார்க்க முடியும்?
உறக்கத்தில் தன்னை அறியாமல் மெல்லச் சிரிக்கும்போதும் சரி
உள்ளத்தில் ஏதும் இல்லாமல் 
நம் உணர்வை மட்டும் புரிந்து கொண்டு சிரிக்கும்போதும் சரி 
துளியும் களங்கம் இல்லாதது சிரிப்பு
குழந்தையின் சிரிப்பு
 
என்று ஒரு கவிதை! அத்தகைய மழலைச் செல்வத்தைப் பெற்று உங்கள் பெற்றோர் தம் பேரக் குழந்தையை எடுத்துக் கொஞ்சி மகிழ்கின்ற வகையில் உங்கள் மனை அறம் தழைப்பதாக! வாழ்வாங்கு வாழ்வீர். உங்களது இல்லற வாழ்க்கை உயர்ந்ததாக இருக்கும்; மனிதநேயத்தோடு அமைந்து இருக்கும். ஒரு இலட்சியத்திற்காகத் தமது வாழ்க்கையைக் கணேசமூர்த்தி அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றாரே, அதற்கு உறுதுணையாக உங்கள் இல்லற வாழ்க்கை அமைந்திட வேண்டும். 
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் முன்னோடிகள், இந்த மாநிலத்தின் நாலாத் திசைகளில் இருந்தும் இங்கே வருகை தந்து இருக்கின்றார்கள். 
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநான்கும் 
கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் 
சங்கத் தமிழ் மூன்றும் தா 
 
என்று கணேசனை வணங்கி விட்டுத்தான் வைதீகர்கள் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கு வார்கள். அப்படி இந்த இயக்கத்தில் பல நிகழ்வுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது கணேசமூர்த்தி வீட்டு நிகழ்வுகள்தாம். 
நாங்கள் ஒரே ஹாஸ்டலில் இருந்தோம். அது எந்த ஹாஸ்டல் தெரியுமா ? ரொம்பக் கட்டுப் பாடான இடம். ஆறு மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது; விடியற்காலை ஆறு மணி வரையிலும் அதற்கு உள்ளேயேதான் அடைந்து கிடக்க வேண்டும். நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்கும்.  மணி அடிச்சா சோறு, மாலையானால் விளையாட்டு. 
 
இப்படி ஒரு ஹாஸ்டல் உங்களுக்கு வேறு எங்கே கிடைக்கும்? எங்களுக்கு வேலூரில் கிடைத்தது. சிறையில் கிடைத்தது. (பலத்த சிரிப்பு). அங்கே எனக்குப் பக்கத்து அறைத்தோழர் கணேசமூர்த்தி. புலவர் செவந்தியப்பனும் அவருடன் இருந்தார். அதற்கு அடுத்த அறையில் பூமிநாதன், இளவரசன், அழகுசுந்தரம், கணேசன் என வரிசையாக அடுத்தடுத்த அறைகளில் இருந்தோம். 
 
திருமங்கலத்தில் பேசியதற்காக மட்டும் அல்ல; 2002 ஏப்ரல் மாதம் இங்கே கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினார் கணேச மூர்த்தி. அதில் நான் இரண்டு மணி நேரம் பேசினேன். எங்கள் மீது குற்றப்பத்திரிகையில் அந்தப் பேச்சைத்தான் முதன்மையான குற்றச்சாட்டாக வைத்து இருந்தார்கள். ஆகவே, ஈரோட்டில் எது நடந்தாலும் அதற்குப் பிறகு ஏதாவது நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
நான் மாநிலக் கல்லூரியில் முதுகலை பொருளியல் மாணவன்; அவர் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை மாணவர். 1964 ஆகஸ்ட் 4 ஆம் நாள், பேரறிஞர்  அண்ணா அவர்கள் முன்னிலையில் கோகலே அரங்கில் நான் பேசினேன். ஆண்டுகள் ஐம்பது ஓடி மறைந்து விட்டன. இன்றைக்கு நான் திரும்பிப் பார்க்கிறேன். கணேசமூர்த்தியும் நானும் இன்று வரையிலும் ஒன்றாகவே பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். கொள்கைக்காக, இலட்சியத்திற்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். தன்னலம் அற்றவர். அண்ணாவின் கொள்கைகளைத் தம் நெஞ்சில் தாங்கி இருப்பவர்.  அதனால்தான் 93 இல் அப்படி ஒரு முடிவை எடுத்தார். 
 
இந்த நிகழ்ச்சியில் நான் சிலவற்றைச் சொல்லியாக வேண்டும். என்னோடு அவர் கரம் கோர்த்து வந்தது ஏதாவது பதவிகளில் போய் உட்கார்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. நீதிக்காக, இலட்சியங்களை நேசித்ததனால் அத்தகைய ஒரு முடிவை எடுத்தார். அப்போது எங்களோடு வந்தவர் களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து வர முடியாதவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. கல்லிலும், முள்ளிலும், காட்டிலும் மேட்டிலும் துன்பத்திலும் துயரத்திலும்  நடக் கின்ற ஒரு பயணத்தில் தொடர்ந்து வருவது மிகவும் கடினமானது. ஆகையினால் அவர்கள் வர முடியவில்லை. 
 
எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது. 89 ஆம் ஆண்டு நான் வன்னிக்காடுகளுக்குச் சென்று, தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து விட்டு வந்த நேரம். கணேசமூர்த்தி என்னை வந்து சந்தித்தார். ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரி மாணவர் பேரவையில் நீங்கள் பேச வேண்டும் என்று என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமர்ந்து இருந்த அரங்கில் எனக்கு முன்பாக அவர் உரை ஆற்றினார். 
 
நான் ஒரு இலட்சியவாதியை இந்தக் கல்லூரிக்கு அழைத்துக் கொண்டு வந்து இருக்கின்றேன். கொள்கைக்காகப் போராடுகின்ற ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து இருக்கின்றேன். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். பரிந்துரைக் கடிதங்களைத் தூக்கிக் கொண்டு அமைச்சர்களின் அறைகளுக்கு அலைந்து கொண்டு இருக்கின் றோம். ஆனால் என் சகோதரன் வைகோ, குண்டு மழைக்கு நடுவே காட்டுக்குள் நுழைந்து பிரபாகரனைச் சந்தித்து விட்டு வந்து இருக்கின்றார். அந்த இலட்சியவாதியைத்தான் இங்கே அழைத்து வந்து இருக்கின்றேன் என்று சொன்னார். 
 
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நல்ல காரியங் களுக்காகத்தான் பரிந்துரை செய்வார். தவறாகச் செல்ல மாட்டார். கையூட்டுக்குப் பரிந்துரை செய்கிறவர் அல்ல. அதன் நிழல் கூட அவரைத் தீண்ட முடியாது. உத்தமர், நேர்மை யானவர். 
வேலூர் சிறைக் கொட்டடியில் நாங்கள் அடைபட்டுக் கிடந்த நேரத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. அந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இரண்டு முறை சிறைக்கு வந்து பார்த்தார். பூவிருந்தவல்லி நீதிமன்றத்துக்கும் வந்து பார்த்தார்.  
 
இது அரசியலில் பரபரப்பான நேரம். கடந்த மூன்று நாள்களாகப் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் உலவிக் கொண்டு இருக்கின்றன. எனவே, உளவுத்துறையினரும் வந்து இருக்கின்றார்கள். அது வழக்கமான ஒன்றுதான். அந்த இயக்கத்தோடு உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் ஏற்றுக்கொண்ட சூழலில், அருமைச் சகோதரர் கணேசமூர்த்தி, பழநி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். 98 ஆம் ஆண்டு அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு 11 மாதங்கள் பணி ஆற்றியவர். 99 இல் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே, 2004 இல் அவர் போட்டியிட வேண்டும் என்று கருதினேன். தொகுதிகள் பட்டியலில் முதலாவதாக திருச்செங்கோடு தொகுதியை எழுதிக் கொடுத்தேன். அதற்கு வாய்ப்பு இல்லை. மனம் வருந்தினேன். பூவிருந்தவல்லி நீதிமன்றம் செல்வதற்காக வேலூர் சிறை வாயில் வழியாக வெளியே வருகிறேன். இரண்டு மூன்று பேருந்துகளில் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் வந்து இருந்தார்கள். மனம் கலங்காத மாவீரன் வெள்ளகோவில் பெரியசாமி, சண்முகம் கண்களில் கண்ணீர். கலக்கத்தோடு நின்று கொண்டு இருந்தார்கள். எங்கள் கணேசமூர்த்திக்கு சீட் இல்லையா? என்று அவர்கள் கேட்டபோது, அந்தக் கேள்வி என் மனதிற்குள் ஈட்டியாகப் பாய்ந்தது. 
 
1993 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள், நினைவில் வாழுகின்ற அருமை அண்ணன் மலர்மன்னன், மண்ணச்சநல்லூர் நடராசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து இருந்த காவிரிக்கரையில் திருச்சி மாநகரில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நான் உரை ஆற்றுகையில் சொன்னேன். ‘இனி எனக்கென்று ஒரு தனி வாழ்வு இல்லை. இது உங்களால் கொடுக்கப்பட்ட வாழ்வு’ என்று சொன்னேன். அதனைப் போல மூன்று ஆண்டுகட்கு முன் நடந்த - அண்ணாநகர் மண்டபப் பொதுக்குழுவில் பேசியபோது என் மனம் திறந்து உணர்ச்சிகளைக் கொட்டியபோது எதற்கும் மனம் கலங்காத அண்ணன் திருப்பூர் துரைசாமி, ஆர்.டி.எம். போன்றவர்கள் எல்லாம் கண்கலங்கியதை அன்றைக்கு நான் பார்த்தேன்.   அண்ணா நகரில் நடந்த பொதுக் குழுவில் நான் பேச வேண்டும் என்று திட்டமிடவில்லை. இயற்கை என்னைப் பேச வைத்தது. சில வேளைகளில் அப்படி நேர்ந்துவிடும். 65 மொழிப் போர்க்களத்தின் போது, விக்டோரியா மாணவர் விடுதியின் மொட்டை மாடியில் திரண்டு இருந்த மாணவர்கள் இடையே என்னை அறியாமல் நான் பேசினேன். அதைப்போல சாஞ்சிக்குப் படை எடுத்துச் சென்ற போது அண்ணா சதுக்கத்திற்கு முன்பு ஆற்றிய உரை. அது நான் பேசவில்லை; அண்ணா என்னைப் பேச வைக்கிறார் என்று சொன்னேன். இதோ சாஞ்சிக்குச் செல்லுகிறோம்.கொடியவன் இராஜபக்சே வருகையைத் தடுக்க விந்திய சாத்புரா மலைகளை நோக்கிச் செல்லுகிறோம் என்று நான் குறிப்பிட்டேன். 
 
அதைப்போல அன்றைய பொதுக் குழுவில் பேசும்போது, இனி எனக்கென்று ஒரு வாழ்வு இல்லை. உங்களுக்காகத்தான் என் வாழ்வு என்று சொன்னேன். அது உதட்டில் இருந்து வந்த வார்த்தை அல்ல; உள்ளத்தின் அடிவாரத்தில் இருந்து பீறிட்டு வந்த சொற்கள் என்பதால் தான் அந்த உரையைக் கேட்ட நீங்கள் அனைவருமே அன்றைக்குக் கண்ணீர் சிந்தினீர்கள். 
 
எங்கோ ஒரு பட்டிக்காட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மாணவப் பருவத்திலேயே அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தாமிரபரணி ஆற்றங்கரை மணலில் டாக்டர் நாவலரின் பேச்சைக் கேட்டு, கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைக் கேட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் அண்ணாவின் பேச்சை முதன் முதலாகக் கேட்டு, பச்சையப்பன் கல்லூரியில் அவரது ஆங்கிலப் பேச்சைக் கேட்டு, கிறித்துவக் கல்லூரியில் அவரது ஆங்கில உரை கேட்டு, 64 ஆம் ஆண்டில் என்னை முழுமையாகத் திராவிட இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டேன்.
 
அண்ணா முன்னிலையில் பேசிய அன்று இரவில் அண்ணா அவர்களுடைய நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு அண்ணன் எல்.ஜி. அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ச் சந்திக்க வைத்தார். அப்போது அண்ணா அவர்கள் நீ நன்றாகப் பேசினாய் என்று சொன்னார். நான் ஒரு பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் என்ற பின்னணியில் இருந்து வந்தவன். என் பாட்டனார்கள் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவழித் தார்கள். 
 
தமிழ் மீது கொண்ட நேசத்தால், இந்த மண்ணின் மீது கொண்ட பற்றால், அண்ணாவின் கொள்கைகள் என் கருத்தைக் கவர்ந்ததால், மனதுக்குப் பிடித்ததால், இலட்சியங்களுக்காக வாழ்வது என்று முடிவு எடுத்துக் கொண்டதால் நான் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன். என்னுடைய தோழர்களே என்னிடம் கூறுவது உண்டு, நான் உணர்ச்சிவயப்படுகிறேன் என்று. உணர்ச்சிவயப்படவில்லை. வள்ளுவரே சொல்லுகிறார், அன்பு, பாசம் என்ற உணர்ச்சிகள் கொண்டவன்தான் மனிதன். அதனால்தான் அவனது விழிகளில் இருந்து கண்ணீர் தெறிக்கின்றது. பிறர் துன்பப்படுவதைக் கண்டு நம் விழிகள் கசிகிறது என்றால், மனதுக்குள் மனிதநேயம் இருக்கின்றது என்று பொருள். அது கோழைத்தனம் அல்ல. நான் எதிரிகளுக்கு அஞ்சுகிறவன் அல்ல, பகையைக் கண்டு நடுங்குபவன் அல்ல, ஆபத்துகளைக் கண்டு விலகுவதும் இல்லை; எதிர்கொள் வேன். ஆனால், என் தோழர்களைப் பற்றித்தான் நான் கவலைப் படுவேன்.  அவர்கள் துன்பப் பட்டால் நான் வருந்துவேன்.  இது அவர்கள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாழ்க்கை. 
 
ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து, தரைப்படையில் சேர்ந்து, கொடி கட்டுகின்ற தொண்டனாக உலவி, கிளைக்கழகத்தில் பணி ஆற்றி, மேடை ஏறிப் பேசி, மாநிலம் முழுவதும் சுற்றி படிப்படியாக இயக்கத்தில் வளர்ந்தேன். எந்தக் கனவுகளையும் மனதுக்குள் வளர்த்துக் கொண்டது இல்லை. ஒரு கட்சிக்குத் தலைவன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாமல், இந்த நாட்டின் உயர்ந்த பதவியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று கருதாமல், அந்த எண்ணங் களுக்கே இடம் இல்லாமல்தான் அரசியல் களத்தில் இயங்குகிறேன். ஒருபோதும் வைகோ அப்படிக் கருதியது இல்லை. (கைதட்டல்). அப்படிப்பட்ட எனக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது, நான் துடித்தபோது, என்னை அரவணைத்துக் கொண்டவர்கள் இவர்கள். 
 
இருபது ஆண்டுகள்; ஆம்; இரத்தத் துளிகள் பொங்கிய இருபது ஆண்டுகள், கண்ணீர்த்துளிகள் சிதறிய இருபது ஆண்டுகள், வியர்வைத் துளிகள் கொட்டிய இருபது ஆண்டுகள். துன்பங்கள் தோல்விகள் ஏளனங்கள் ஏகடியப் பேச்சுகள் களங்கக் குற்றச் சாட்டுகள் பழிச்சொற்கள் அனைத்தையும் தாங்கியவர்கள் நாங்கள். நானும் இங்கே இருப்பவர் களும் நாடெங்கிலும் இருக்கின்ற என் தோழர்களும் சகாக்களும். நாங்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் காப்பதற்குப் போராடுகின்றவர்கள். திராவிட இயக்கத்தை நேசிக்கின்ற தோழர்கள்தான் அண்ணா தி.மு.க.விலே, தி.மு.க.விலேயும் இருக்கின்றார்கள்.  திராவிடர் கழகத்திலே, பெரியார் திராவிடர் கழகத்திலே, பெரியார் விடுதலைக் கழகத்திலே, தேசிய முற்போக்கு திராவிட கழகத்திலே இருப்பவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தை உண்மையாக நேசிக்கின்றவர்கள். அண்ணாவை நேசிக்கின்றவர்கள், பெரியாரை நெஞ்சிலே போற்றி சுயமரியாதையோடு வாழத் துடிப்பவர்கள்.  இவர்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நாங்கள் ஒரு உன்னதமான இடத்தைப் பெற்று இருக்கின் றோம். (பலத்த கைதட்டல்).
 
காரணம் என்ன? நாம் சொல்லத் துணியாத போது, பேசத் துணியாத போது, துணிந்து பேசுவதற்கும் போராடுவதற்கும் ஒரு படை இருக்கின்றதே, ஸ்பார்ட்டா வீரர் களைப் போல, அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அல்லவா? (கைதட்டல்) என்று மனதுக்குள் நினைக்கின்றார்கள். அந்தத் தகுதியை நாங்கள் பெற்று இருக்கின்றோம்.
 
என்னுடைய அருமைச் சகோதரர் களே, 
 
நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2004 நாடாளு மன்றத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. அது என்ன பெரிய தியாகமா? இல்லை. தகுதி உள்ள எத்தனையோ பேருக்கு வாய்ப்பு இல்லை. அந்தத் தேர்தலில் இலட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று இருப்பேன். நாடாளுமன்றப் பணி என்பது எனக்கு மிகவும் இனிப்பானது அல்லவா? மனதுக்கு உவப்பானது அல்லவா? நான் விரும்புவது அல்லவா? ஒரு அமைச்சராக வேண்டும் என்று நான் ஆசைப் பட்டது இல்லை. ஆனால் நாடாளு மன்றத்தில் பணி ஆற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. காரணம், அங்கே தமிழ் இனத்திற் காகக் குரல் கொடுக்க முடியும் (கைதட்டல்). மக்கள் பிரச்சினை களைப் பேச முடியும். கடல் கடந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழர் களுக்காகக் குரல் கொடுக்க முடியும். ஈழத்தில் மரண பூமியில் துடித்துக் கொண்டு இருப்பவர் களுக்காக நீதி கேட்க முடியும். ஜனநாயக்திற்காகக் குரல் கொடுக்க முடியும். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் பேச முடியும். சமூக நீதிக்காகப் பாடுபட முடியும். தவறான கருத்துகளை அமைச் சர்கள் சொன்னால், அவர்கள் முகத்தில் அறைந்தாற்போலக் கேள்வி கேட்க முடியும். (பலத்த கைதட்டல்) 
 
இதற்கெல்லாம் வாய்ப்புக் கிடைக் கின்ற இடம் நாடாளுமன்றம் அல்லவா? அதை நான் நிரூபித்து இருக்கின்றேன். அதற்காக நான் ஒன்றும் பெரிய நாடாளுமன்றவாதி அல்ல. பட்டிக்காட்டுப் பள்ளியில் படித்து வளர்ந்த நான், எனக்குத் தெரிய என் சக்திக்கு ஏற்றவாறு நாடாளுமன்றத்தில் நீதிக்காகப் போராடி இருக்கின்றேன். அந்தச் சுவர்களுக்குப் பேசுகின்ற சக்தி இருக்குமானால், தமிழர்களுக்காக வாதங்களை எழுப்பி இருக்கின் றான்; உள்ளக் குமுறலைக் கொட்டி இருக்கின்றான் என்பதைச் சொல்லும். அன்றைக்கு அந்த வாய்ப்பு இருந்தும் நான் போட்டி யிடவில்லை.  அது போயிற்று. 
 
இப்பொழுது என்ன? ஒரு பெரிய கேள்வி எழுந்து இருக்கின்றது. அதுவும் கடந்த மூன்று நாட்களாக. அதைப்பற்றிய வாழ்த்துகள், விமர்சனங்கள், மின்னல் வேகத்தில் இணையத்தில் பரவு கின்ற கருத்துகள்,  நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 
 
இத்தனை காலம் இல்லாமல் இனிமேலா ஏதாவது ஒரு பெரிய பதவியைப் பிடித்து விட வேண்டும் என்று நான் ஆசைப்படப் போகிறேன்? (கைதட்டல்). 
 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சி களோடு தோழமை கொண்டு போட்டியிட்டோம்.  ஈரோடு தொகுதியில் என் சகோதரன் கணேசமூர்த்தி உறுதியாக வெற்றி பெறுவார் என்று நான் நம்பினேன். இங்கே அமர்ந்து இருக்கின்ற டாக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, சதன் திருமலைக்குமார், அழகுசுந்தரம், ஜோயல் எல்லோருமே வெற்றி பெறுவார்கள்  என்று நம்பினேன். வெற்றி பெற வில்லை.   
 
நினைவு இருக்கின்றதா? காரிலே பயணித்துக் கொண்டு இருந்த போது, மலர்மன்னனுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தபோது உடன் இருந்த தலைமைக் கழக நிர்வாகி களுக்கு அண்ணன் திருப்பூர் துரைசாமி, மாசிலாமணி, இமயம் ஜெபராஜ் உள்ளிட்டவர்களுக்கு நினைவு இருக்கும். என் மீது இருக்கின்ற பாசத்தால், கட்சிக்கு நல்லது என்று கருதியதால் நீங்கள் என்ன சொன்னீர்கள்? ஏதாவது ஒரு வாய்ப்பு  வருவதாக இருந்தால் தயவுசெய்து நீங்கள் அதைப் புறக்கணித்து விடாதீர்கள் என்று சொன்னீர்கள். அவைத்தலைவரும் நானும் தனி அறைக்குள்ளே. எப்படி இங்கே அதிகமாக அவர் பேச வில்லையோ அப்படித்தான் எங்கேயும் அவர் அதிகமாகப் பேசுவது கிடையாது. சொல்ல வேண்டிய கருத்துகளைத் தவறாமல் எடுத்து உரைப்பார். அப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. இந்தக் கட்சிக்கு    அவர் அவைத்தலைவராக இருப்பதற்கு நாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். (கைதட்டல்). 
 
நான் உங்களைத் தனியாகச் சந்திக்க வேண்டும்; ஒரு பத்து நிமிடங்கள் பேச வேண்டும்  என்றார். எதற்காக வருகிறார் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அறைக்கு உள்ளே வந்தார். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கின்ற சூழ்நிலை இருந்தால், அதை நீங்கள் தவிர்க்கக் கூடாது என்றார். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அப்போது பேசிக் கொள்வோம் என்றேன். இல்லையில்லை.  நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். எந்த மறுப்பும் சொல்லக்கூடாது என்றார். சரி அண்ணே அதுபற்றி அப்போது பேசிக் கொள்வோம் என்றேன். 
 
அந்தக் காலகட்டத்தில் தில்லியில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில ஏடுகளே எழுதின. மாநிலங்கள் அவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன; நரேந்திர மோடியின் நேசத்திற்கு உரியவர்; வடபுலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் அவர் மீது அளவற்ற அன்பு கொண்டு இருக்கின்றார்கள் என்று.  
 
தோழர்களே, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள், நான் நாடாளு மன்ற மக்கள் அவையில் கடைசி யாகப் பேசிய பேச்சு, குஜராத் கலவரங்கள் மீதான விவாதம்தான். நான் பேசி முடித்தவுடன் நிதீஷ் குமார் எழுந்து நின்று, The hero of the debate Vaiko; இந்த விவாதத்தின் நாயகன் வைகோ என்று சொன்னார். (கைதட்டல்). அற்புதமான உரை என்று வாஜ்பாய் பாராட்டினார். அத்வானி ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். எனக்கு நன்கு நினைவு இருக்கின்றது. அவைக்கு வெளியே உள்ள நடைபாதையில் (லாபி) இதற்கு மேல் விவாதம் எதற்கு? வாக்கெடுப்புக்கு விட வேண்டியது தானே? என்று டி.ஆர். பாலு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களிடம் சொன்னார். 
 
அன்று இரவு 10 மணிக்கு, குஜராத்தில் இருந்து முதல் அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் என்னிடம் தொலை பேசியில் பேசினார். Thank you Mr Vaiko. இன்றைக்கு நாடாளு மன்றத்தில் அருமையாகப் பேசியதற்கு நன்றி என்று சொன்னார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதை நான் எங்கேயாவது சொல்லி இருக்கின்றேனா? 
 
தோழர்களே, நானும் கணேச மூர்த்தியும் யஷ்வந்த் சின்கா அவர்களைச் சந்தித்து உரையாடி விட்டு வீட்டுக்கு வெளியே வருகின்றோம். டாக்டர் மாசிலாமணி அலைபேசியில் கணேசமூர்த்தியை அழைக்கிறார். கொலைகார ராஜபக்சே நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றான், டெல்லிக்கு வருகிறான் என்று சொன்ன மாத்திரத்தில் நான் துடித்துப் போனேன்.  கணேச மூர்த்தி அவர்களுடைய வீட்டுக்கு வந்தோம். அந்த வீட்டை உடனே காலி செய்து அரசிடம் ஒப்படைத்து விட்டோம். இன்றைக்கும் காலி செய்யாத பல பேருக்கு நோட்டீஸ் வந்து கொண்டு இருப்பதை ஏடுகளில் பார்க்கின்றோம். ஆனால் அன்றைக்கு முதல் ஆளாக ஒப்படைத்து விட்டோம்.  (கைதட்டல்). அன்றைக்கு  அந்த வீட்டுக்கு வந்தபோது கொதித்துப் போயிருந்தோம். அந்தக் கொலை காரன் வருகையை எதிர்த்து சாஞ்சிக்கே சென்று அறப்போர் நடத்தினோமே, தில்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இட்டோமே? 
 
எதிர்மறையாக வாழ்த்தக்கூடாது என்பது தமிழ் மரபு. சிலப்பதிகாரத்தில்,
 
காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல், தீது அறுக 
 
என்று எதிர்மறையாக இளங்கோ ஏன் சொன்னார் கண்ணகி திருமணத்தை என்று நான் விளக்கிப் பேசி இருக்கின்றேன். தன்னுடைய கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என்ற மனிதநேயம் கணேசமூர்த்திக்கு இருப்பதனாலே, நம்முடைய திவ்யா வீட்டாருக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையால் குமரலிங்கம் இங்கே வந்து தமிழ் மறை ஓதுகிறார். நாங்கள் அதைத் தடுப்பது இல்லை. ஒலிக்கட்டும் தேவாரம். ஒலிக் கட்டும் திருவாசகம். ஒலிக்கட்டும் அமுதத் தமிழ். நாங்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். சிலவற்றை அதனால் இங்கே சொல்லியாக வேண்டும். 
 
கொலைகாரனை அழைப்பதா? அவன் இங்கு வருவதா? அதை எதிர்த்துக் கருப்புக் கொடி ஏந்து வோம்; கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித் தோம். சாஞ்சிக்குச் சென்று போராடினோமே? நாம் ஒரு சிறிய கட்சி என்று சொன்னார்கள். ஆனால் நம்மைப் போல நான்கு மாநிலங்களைக் கடந்து சென்று போராட்டம் நடத்துகின்ற துணிவு வேறு எந்தக் கட்சிக்கு இருந்தது? யாருக்கு இருக்கின்றது? (பலத்த கைதட்டல்). அந்தப் போராட்டக் களத்திற்கு எங்களுடன் வந்த பொன்னையனுக்குத் தெரியும், எங்களுடைய உணர்ச்சிகள் எப்படிப்பட்டது என்று.  நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல, வன் முறையின் மீது காதல் கொண்டவர்கள் அல்ல. ஆனால் தமிழ் இனத்தைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பவர்கள். 
 
சகோதரர்களே, பத்திரிகையாளர்களே, ஊடகங்களில் கருத்துகளைப் பரப்புகின்ற என் நெஞ்சிற்கினிய தம்பிமார்களே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சிலர் என்னிடம் சொன்னார்கள். பாரதிய ஜனதா கட்சியினர் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் பதவி ஏற்கின்ற நாளில் கருப்புக்கொடி என்றால் அதை ஒரு அபசகுனமாக நினைப்பார்கள். எனவே கருப்புக் கொடிப் போராட்டம் வேண்டாம் என்றார்கள்.  நரேந்திர மோடி அவர்களை எதிர்க்கின்ற பல அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்றன.  அவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றார்களே? அதைப்போல நாமும் ஒரு அறிக்கையை விட்டுவிட்டுக் கண்டுகொள்ளாமல் பேசாமல் இருந்து விடலாமே? என்று சிலர் சொன்னபோது என் மனதில் ஏற்பட்ட போராட்டம் கொஞ்சமா? இயக்கத்தின் எதிர்காலத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். ஆனால் நாம் இதுவரை கடைபிடித்து வந்து இருக்கின்ற கொள்கை, இலட்சியங் களுக்கு ஆபத்து வந்து விடக் கூடாதே? 
 
இரண்டு முறை என்னை அறியாமல் என் உடல் விதிர்த்தது உண்டு. அங்கம் பதறியது உண்டு. ஒன்று, 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி காலையில். அதிகாலை ஐந்தரை மணிக்கு வீட்டுக்கதவைத் தட்டிய ஒருவர் சொன்னார். அதைக் கேட்டவுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் என் உடல் எல்லாம் பதறியது. என்னை அறியாமல் நடுங்கியது. உடனே என் வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.
 
அதன்பிறகு இப்போது வந்த செய்தி. நான் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் நரேந்திர மோடி அவர்கள் மீது? வாஜ்பாய் அவர்களுடைய அணுகுமுறையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர் பார்த்து இருந்தேனே? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத் தமிழ் இனத்தையே கரு அறுப்பதற்குத் துணை போகிறதே என்று குமுறி இருக்கின்றேன். 
 
2011 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி, பேரறிவாளன், சாந்தன், முருகனுக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது என்று கேள்விப் பட்டபோது நடக்க முடியாமல் என் கால்கள் தடுமாறின. மாடிப்படி களில் ஏற முடியவில்லை. அப்போதும் கணேசமூர்த்தி அருகில் இருந்தார். 
 
இப்போது மோடி பதவி ஏற்பு விழா. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். யாரையும் வற்புறுத்த நான் விரும்பவில்லை. பாசமலர் படத்தில் ராஜசேகரன் சொல்வான் அல்லவா? 
 
I am the sole proprietor of this concern I can do whatever l like;  என்று சொல்லுவார் சிவாஜி. 
 
Those days are gone; now all for each and each for all என்று ஜெமினி பதில் சொல்வார். 
இங்கே இருக்கின்ற மின்சார பல்புகள் எல்லாவற்றையும் நீ அடித்து உடைத்து நொறுக்கி விட்டுப் போனாலும் ஒரேயொரு உருவம் ஓடியாடி, ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு வெளிச்சத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும்; அவன்தான் இந்த ராஜூ கெட் அவுட்’ என்பார் சிவாஜி. 
 
அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அதைப்போல இப்போது யாரையும் நான் வற்புறுத்த விரும்பவில்லை. ஒரேயொரு தனி ஆளாக ஜந்தர் மந்தர் வீதிகளில் போய் நின்று கொண்டு, கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்துக் கருப்புக்கொடியோடு வைகோ நிற்பான் என்று நான் சொன்னேன். அது தப்புதான். அப்படிச் சொல்லக் கூடாது. ஆனால் அன்று நான் என்னை அறியாமல்  சொன்னேன். 
 
எனக்கா சுயநலம்? தனிப்பட்ட முறையில் ஏதாவது பட்டம் பதவி பவிசு என்று எதையாவது எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின் றேனா? 
 
ராஜ்யசபா எம்.பி. பதவி ஒருவேளை கொடுப்பார்களோ? ஏதாவது ஒரு வகையில் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்களோ? அப்படிக் கிடைத்தால் நன்றாக இருக்குமே? கட்சியையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வரவில்லையே? இனி மேலா வரப்போகிறது? என்னிடம் பிழைகள் இருக்கலாம். என்னிடம் குறைகள் இருக்கலாம். குறைகள் இல்லாத மனிதன் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் மகாத் மாக்களாக மாமனிதர்களாக இருக்க முடியும். நான் ஒரு சாதாரண மனிதன், எளியவன். நான் மாமனிதனாக அல்ல, ஒரு முழு மனிதனாக இருப்பதற்கு முயற்சித்துக் கொண்டு இருப்பவன். (பலத்த கைதட்டல்) எனக்கு என்ன பதவி ஆசை? 
 
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; எதையும் தீர விசாரித்து ஆராய வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். 
 
ஒரு திருமண வீட்டுக்குப் போகிறேன். மருத்துவர் ஐயா இராமாஸ் அவர்களுடைய பேரப் பிள்ளைகள் திருமணம். அவரே நேரில் என் வீட்டுக்கு வந்து அழைத்து விட்டுச் சென்றார். அவரது அன்புமகன் மருத்துவர் அன்புமணி வந்து அழைத்தார். குடும்பத்தோடு செல்கிறேன். அதற்கு முன்பு இரண்டு நாள்களாக குன்னூரில் நடைபெற்ற தீர்ப்பு ஆய விசாரணையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வாதாடினேன். 
 
ஒன்றை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். தில்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்துக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஆங்கிலத்தில் 20 நிமிடங்கள் பேசினேன். நம்முடைய குழந்தைவேலு அருகில் வந்து, இப்படியொரு பேச்சை நான் கேட்டதே இல்லை என்று சொன்னார். காரணம் அது என் இருதயத்தில் இருந்து வருகின்ற சொற்கள். 
 
Are we orphans? நாதி அற்ற அநாதைகளா தமிழர்கள்? என்று கேட்டேன். இரண்டு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து இங்கே நீதி கேட்கிறோம் என்று பேசினேன். அந்த உணர்வுதானே இருக்கும்? 
 
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர்தான் போராடுகிறான். மற்றவர்களை நான் குறை சொல்லவில்லை. நானும் அங்கே சென்று வாதிடா விட்டால், கேள்வி கேட்பார் யாரும் இல்லை என்று அந்த நீதிபதி தம் அறைக்கு உள்ளே உட்கார்ந்து எதையாவது எழுதிவிட்டுப் போய் விடுவார். இல்லை எதிர்ப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம். முத்துக்குமார் ஊட்டிய உணர்ச்சி எங்கள் குருதியில் ஊறிக் கிடக் கின்றது. அந்த உணர்வோடுதான் வைகோ அங்கே போய் வாதாடினான். நூற்றுக்கணக்கான என் தோழர்கள் அன்றைக்குக் குன்னூர்   நீதிமன்றத்திற்கு வந்து இருந்தார்கள். என் வாதத்தைக் கேட்டார்கள். அவர்களுக் கெல்லாம் மிக்க மகிழ்ச்சி.  அருமையாக வாதங்களை எடுத்து வைத்தீர்கள் என்று பாராட்டி னார்கள். அப்படி நான் வாதாடிய தால் தடை உடைபட்டுப் போகும் என்று நான் நினைக்கவில்லை. தமிழர்கள் நாதி அற்றுப் போக வில்லை; அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள் நாட்டிலே என்பதை நிலைநாட்டு வதற்காகத்தான் நாங்கள் எங்கள் கடமையைச் செய்கின்றோம். 
 
அன்றைக்கு தேவதாஸ் என்னிடம் சொன்னார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப் பரீட்சை என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி கொடுக்கின்றார். என்றார். அதை நானும் பார்த்தேன். பொடா வழக்கில் இருந்து விடுதலை பெற்றதற்காக வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன் என்றார். மறுநாள் திருவாரூருக்குப் போகிறார். அங்கே செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லுகிறார்: வைகோவின் உழைப்பை, பேச்சை நான் ரசிப்பவன் என்கிறார். 
 
இதுகுறித்து, ஸ்டாலின் இப்படிக் கூறி இருக்கின்றார். டாக்டர் இராமதாஸ் அவர்களுடைய இல்லத் திருமண விழாவுக்கு அவர் வருகின்றபோது நீங்கள் சந்திப்பீர்களா? என்று ஸ்டாலினிடம் கேட்டேன். திருமண வீடு என்ன? எங்கிருந்தாலும் அவரை நான் சந்திப்பேன் என்று சொன்னார். இதுபற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று மறுநாள் காலையில் இந்து ஏட்டின் செய்தியாளர் அலைபேசியில் என்னிடம் கேட்கிறார்.
 
நான் மனிதநேயம் உள்ளவன், நாகரிகம் தெரிந்தவன், பண்பாடு உள்ளவன். அவர் இப்படிக் கேட்ட போது சொன்னேன்: Thank him for the kind words he uttered in the television interview. தொலைக் காட்சி நேர்காணலில் என்னைப் பற்றி நல்ல வார்த்தை சொன்னதற்கு நன்றி.  என்றேன். 
 
அடுத்து அவர் கேட்டார்: இது கூட்டணிக்கு ஏதாவது வாய்ப்பாக இருக்குமா? என்று. 
 
தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன. இப்போது கூட்டணியைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை நான் என்றேன். இது செய்தி ஆயிற்று. 
 
அன்று மாலையில் திருமண வீட்டுக்குச் செல்கின்றோம். டாக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, சோமு, மணிமாறன், செங்குட்டு வன், இமயம் ஜெபராஜ் எல்லோரும் உடன் இருக்கின்றார்கள். டாக்டர் இராமதாஸ் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருக்கின்றோம். மேடைக்கு வந்த ஸ்டாலின் அவர்கள் தம் குடும்பத்தினரோடு மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். 
 
இருபது நிமிடங்கள் கழித்து நாங்கள் மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துச் சொன்னோம். உணவு அருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அங்கே சென்றோம். நம்முடைய ஜி.கே. மணி அவர்கள் ஒரு சிறிய அறைக்கு உள்ளே அழைத்துச் சென்று அங்கே உணவு அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  
 
வெளியில் சோமு நின்றுகொண்டு இருக்கின்றார். அப்போது அங்கே வந்த ஸ்டாலின் அவர்கள், அண்ணன் எங்கே இருக்கின்றார்? என்று கேட்கிறார். உள்ளே இருக்கின்றார் என்று சொல்லுகிறார். உடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து விடுகிறார். உடனே நான் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தேன். அவரும் வணக்கம் தெரிவித்தார். அம்மாவும், அப்பாவும் நன்றாக இருக்கின்றார்களா? என்று கேட்டேன். எத்தனையோ நாள்கள் தயாளு அம்மையார் கையால் உணவு பரிமாறி நான் சாப்பிட்டு இருக்கின்றேன். அவர்கள் நலமாக இருக்கின்றார்களா? என்று கேட்டார். ஸ்டாலின் அவர்களுடைய துணைவியார், சகோதரி செல்வி எல்லோரும் உள்ளே வருகின்றார்கள். 
 
குற்றாலத்தில் நடந்த என்னுடைய திருமணத்திற்கு கலைஞர் அவர்கள் வர முடியவில்லை. டாக்டர் நாவலர் அவர்கள் வந்து நடத்தி வைத்தார்கள். என் தம்பி இரவி திருமணத்தைக் கலைஞர் வந்து நடத்தி வைத்தார். அப்போது தயாளு அம்மையாரும் உடன் வந்தார்கள். கலிங்கப்பட்டி வீட்டுக்கு வந்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அதே நாளில், தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஆற்றுகிறார். அப்போது கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். 
 
இன்றைக்கு ஆளுநர் உரை. நான் சட்டமன்றத்தில் இருந்தாக வேண்டும். அதைவிட முக்கியம் என் தம்பியின் வீட்டுத் திருமணம் என்பதற்காக இங்கே வந்து இருக்கின்றேன் என்று பேசினார். சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன், அண்ணன் அன்பில், ஆர்க்காடு வீராசாமி எல்லோரும் வந்து இருந்தார்கள். 
 
அதேபோல இந்தத் திருமண வீட்டில் எல்லோரும் சந்திக்கின்றோம். யார் வந்தாலும் எழுந்து நிற்பேன். தந்தை பெரியாரிடம் கற்ற பாடம் இது. மூத்திரச் சட்டியைக் கட்டிக் கொண்டு தள்ளாத வயதிலும் அந்தக் கிழவன் நாடு முழுவதும் அலைந்தாரே, சாக்ரடீசை விட உயர்ந்த அந்தக் கிழவன், அவனது மண்ணில், திராவிட இயக்கத்தின் கரு அறையான ஈரோட்டில் நின்று கொண்டு நான் பேசுகிறேன். சின்னப்பையன் வந்தாலும் எழுந்து நின்று ஐயா வாங்க என்று வரவேற்பாரே, அவரிடம் கற்றேன் அந்தப் பண்பாட்டை. அதேபோலத்தான் சேக் அப்துல்லாவும். நான் அவரைச் சந்திக்கச்சென்றபோது, மை டியர் யங்மேன் என்று கூறி இருக்கையை விட்டு எழுந்து வந்து வரவேற்றார்.  அதைப்போல, என்னைப் பார்க்க வந்தவர்களை, ஸ்டாலினை வாசல் வரை சென்று வழி அனுப்புவதுதானே என்னுடைய கடமை? அப்போது அவர் வேண்டாண்ணே வேண்டாம் என்று சொன்னார். இல்லை நான் வருகிறேன் என்று சொல்லி வந்தேன். 
 
அங்கே நின்று கொண்டு இருந்த செய்தியாளர்கள் கேட்டார்கள். எதிரும் புதிருமாக இருக்கின்ற தலைவர்கள் சந்திக்கின்றபோது நலம் விசாரிப்பது, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது நல்லது. நாகரிக அரசியலுக்கு அடையாளம். அதுபோலத்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடைய சந்திப்பு என்று நான் சொன்னேன்.
 
இதன்பிறகு, உங்களைப் பற்றிக் கலைஞர் மிகவும் சிறப்பாகக் கூறி இருக்கின்றாரே? என்று கேட்டார்கள். அப்படியா, அன்பாகச் சொல்லி இருப்பதால் மகிழ்ச்சி என்று சொன்னேன்.
 
இவ்வளவுதான் நடந்தது. உடனே இதற்குக் கண், காது, மூக்கு வைத்து, ஒரு பெரிய படத்தை வரைந்து, இவர் அங்கே போகிறார் இரண்டு நாளில் சந்திப்பு நடக்கப் போகிறது என்று பரபரப்பான செய்திகள் ஏடுகளில். 
 
நமது தோழர்களுக்கு என்ன வென்றால், நம்முடைய பெயரே பத்திரிகைகளில் வருவது இல்லையே? என்ன பாடு பட்டாலும் நம்முடைய செய்திகள் வருவது இல்லையே? என்ற கவலை. நம்முடைய மாநாடுகளில் இலட்சம் பேர் கூடி இருப்பார்கள். மறுநாள் ஏடுகளில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதைப்பற்றி செய்தியைக் கண்டு பிடிக்க முடியாது. ஒரு இரண்டு வரியாவது இருக்குமா? என்று பார்த்தால், பெரும்பாலும் அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைப்பது இல்லை. மூன்று நாட்களாய் வைகோவின் பெயர் ஊடகங்களில் பெரிதாக வருகிறதே என்று ஒரு மகிழ்ச்சி. 
 
நம்ம மணி கரூரில் மாநாட்டை நடத்தினார். எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள்! அப்படி ஒரு மாநாட்டைப் பார்க்க முடியுமா? அதை இயக்கியவர் கணேசமூர்த்தி. 
 
அங்குதான் பேசினேன். வாள் ஏந்திப் போரிட்டானே? வளரி ஏந்திப் போரிட்டானே? பிரித் தானியப் படைகளைச் சிதறடித் தானே தீரன் சின்னமலை, அந்த மாவீரனின் கொடிவழித் தோன்றல் தான் எங்களுடைய கணேசமூர்த்தி என்று நான் பேசினேன்.
 
‘வைகோ அங்கே போய்விட்டார், இங்கே போகப் போகிறார்’ என்று எழுதுகிறார்களே, நான் கேட்கிறேன். சந்திக்க வந்தவரிடம் பண்பாடோடு பேசுவது தவறா? 
 
நாடாளுமன்றத்தில் என்னைப் போலக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தவர் வேறு எவரும் இல்லை. ராஜீவ் காந்தியை அவ்வளவு கடுமையாக விமர்சித்து இருக்கின்றேன். எவ்வளவோ பெரிய தலைவர்கள், நாடாளுமன்ற மேதைகள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோருமே இது எதற்கு வம்பு? என்று சிலவற்றைத் தவிர்த்து விடுவார்கள். போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து விவாதம். எனக்கு முன்னால் 39 பேர் பேசி விட்டார்கள். நான் 40 ஆவதாகப் பேசுகிறேன்.
 
சுவிட்சர்லாந்தில் இருந்து சித்ரா சுப்பிர மணியம் அனுப்பி இருந்த ஆவணங்களில் மார்ட்டின் ஆர்ப்டோ எழுதிய டயரியில் - நாட்குறிப்பில் என்ன இருந்தது என்பது எல்லா ஏடுகளில் வெளிவந்து இருக்கின்றது. அதில் பல பெயர்களை எழுதி இருக்கின்றான். ஒரேயொரு பெயரில் மட்டும் முதல் எழுத்தை மட்டும் எழுதி, இந்தப் பெயர் ரகசியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றான். அது ஜி என்று ஒரு எழுத்து. எனக்கு முன்னால் பேசிய தலைவர்கள் யாருமே இதைப் பற்றிக் கேட்கவில்லை. நான் பேசும்போது இரவு 11.40 மணி. 
 
இன்னும் 20 நிமிடங்களில் கடிகாரத்தின் இரண்டு முட்களும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் நேரத்தில் நான் நிற்கிறேன் என்றுதான் பேச்சைத் தொடங்கினேன். மார்ட்டின் ஆர்ப்டோவின் டைரியில் உள்ள ஜி என்ற எழுத்து யாரைக் குறிக்கின்றது? 
 
உடனே சிதம்பரம் குறுக்கிட்டார். அவர் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். நம்ம சாதாரணப் பட்டிக்காட்டு இங்கிலீஷ்தான். அவர் சொன்னார், ‘ஜி’ என்றால் கோபால்சாமி என்றார்.    எங்கிட்ட யாரும் வாயைக் கொடுத்து மாட்டிக்கிடக் கூடாது. ‘ஜி’ என்றால் காட்- கடவுள் என்றும் சொல்வீர்களா? என்றேன். நான் பகிரங்கமாகச் சொல்கிறேன் ‘ஜி’ என்றால் அது பிரதமர் ராஜிவ் காந்தியைத்தான் குறிக்கின்றது என்றேன். காங்கிரஸ் தரப்பினர் அதிர்ந்து போனார்கள். இப்படிச் சொல்லக்கூடிய உணர்வோடு இருக்கக்கூடியவர் நாங்கள்.
 
இப்படிப் பேசினாலும்கூட, அவையை விட்டு வெளியே வந்தால் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னை முறைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? திட்ட வேண்டும் அல்லவா? அதுதான் இல்லை. என்ன இன்னக்கி எங்களைப் போட்டு இப்படி வதக்கிட்டீங்க? வாங்க ஒரு டீ குடிப்போம் என்று சிரித்துக் கொண்டே அழைப்பார்கள். திட்டியவனுக்கு டீ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா? சில வேளைகளில் மூப்பனார் எனக்கு குலோப் ஜாமூன் வாங்கிக் கொடுத்து இருக்கின்றாரே. (சிரிப்பு). 
 
இதுதான் இந்திய நாடாளு மன்றத்தின் பண்பாடு. இன்று வரைக்கும் அது மாறவில்லை. 
 
குஜராத் விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சியைத் தாளித்து விட்டேன். காங்கிரஸ் கட்சி நடத்திய தில்லி சீக்கியர்கள் படுகொலை, அஸ்ஸாமின் டெல்சி படுகொலைகளைப் பற்றி நான் பேசியதைக் கேட்டு சோனியா காந்திக்கு அப்படியே முகம் சிவந்து போயிற்று. ஏற்கனவே அவர் நல்ல சிவந்த நிறம். அவரது கண்கள் கோபத்தில் கொப்பளித்தன. அப்படியே பின்னால் திரும்பிப் பார்த்தார். என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்? இன்னும் இவனைப் பேச விட்டுக்கொண்டு இருக்கின்றீர்களே? என்பதுதான் அதற்கு அர்த்தம். அதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருசேர எழுந்து கூப்பாடு போட்டார்கள். மணிசங்கர் ஐயர் என்னைப் பார்த்து நீ ஒரு பயங்கரவாதி (You are a terrorist) என்றார். உடனே அத்வானி எழுந்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வைகோவைப் பார்த்து இப்படிச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.  உடனே அண்ணா தி.மு.க. செல்வகணபதி எழுந்து, இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றார். இதுதான் விவகாரம். 
 
‘என்னைப் பயங்கரவாதி என்கிறீர்கள்; விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்கிறீர்கள். ஆமாம்; நான் விடுதலைப் புலிகளின் ஆதர வாளன்தான். நேற்றைக்கும் ஆதரித்தேன்; இன்றைக்கும் ஆதரிக்கின்றேன்; நாளைக்கும் ஆதரிப்பேன்’ என்றேன். (பலத்த கைதட்டல்). 
 
கணேசமூர்த்தி, செவந்தியப்பன் எல்லோரும் என்னோடு சிறைக்கு உள்ளே வந்து உட்காருவதற்கு இதுதான் காரணம். (பலத்த சிரிப்பு).
 
இவ்வளவுக்கும் பிறகு, மறுநாள் காலை நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறேன். காங்கிரஸ்காரர்கள் என்னைப் பார்த்து, விவாதம் எங்களுக்குச் சாதமாகப் போய்க் கொண்டு இருந்தது. நீங்கள் பேசி நிலைமையைத் தலைகீழாக மாற்றி விட்டீர்களே? என்றார்கள். இப்படிப் பேசிக்கொள்கின்ற உறவு அங்கே இன்றைக்கும் நிலவுகின்றது. 
 
கருத்துகளைச் சொல்லுகின்றோம். அது கொள்கை. தனிப்பட்ட மனிதர்களை விமர்சிப்பது அல்ல. இந்தப் பண்பாடு இங்கேயும் வளர வேண்டும் என்றுதானே நினைக் கின்றோம்.  அவசரப்படக்கூடாது. ஆராயாது முடிவு எடுக்கக்கூடாது. ‘காதால் கேட்டது பொய்’ என்று உணராததால் பாண்டியன் நெடுஞ் செழியன் உயிரைப் பறிகொடுத்தான். ஆராயவில்லை; ஆராய்ந்து முடிவு எடுக்கவில்லை. 
 
இப்படி எந்த ஒரு பிரச்சினையாக இருக்கட்டும். குடும்பப் பிரச் சினையாக இருக்கட்டும். அண்ணன்-தம்பிக்குள், மாமன்-மச்சானுக்குள், பங்காளிகளுக்குள் பிரச்சினைகளா? ஏதோ சில சங்கடங்கள் இருக்கலாம். அப்போது உங்களுக்குப் பிடிக்காத இருவர் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு தனியாகப் பேசிக் கொண்டு இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றித்தான் புரளி பேசிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கக்கூடாது. ஆனால், இதுதான் எல்லா இடங்களிலும் நடக்கின்றது.  இது தவறு. இதைத் தான் மகாபாரதம் சொல்லுகிறது.  
 
மகாபாரதத்தின் 18 நாள் போர்ச் சருக்கத்தில் நூற்றுவரான துரியோதனர் படை தோற்றதற்கு, வீரம் காரணம் அல்ல. கண்ணனின் சூழ்ச்சிதான் காரணம். நான் மிசா கைதியாக பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த போது, ஒரு பட்டிமன்றம் நடத்தினோம். மகாபாரதத்தில் வென்றது வீரமா? சூழ்ச்சியா? என்று தலைப்பு. வீரம் என்ற அணிக்கு ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சூழ்ச்சி என்ற அணிக்கு நான் தலைமை தாங்கினேன். பாளை சண்முகம் நடுவர்.  ஒரு நாள் அல்ல; ஏழு நாள்கள் தொடர்ந்தது இந்த விவாதம். முடிவில், சூழ்ச்சிதான் வென்றது என என் தரப்புக்கு நடுவர் தீர்ப்பு அளித்தார். 
 
பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்ந்தார், அடுத்து துரோணர் வீழ்ந்தார், கர்ணன் வீழ்ந்தான், சல்லியன் வீழ்ந்தான். இவர்களுடைய வீழ்ச்சிக்கு வீரம் காரணம் அல்ல; கண்ணனின் சூழ்ச்சிதான் காரணம். அவனது யோசனைப்படிதான் சிகண்டியை முன்னிறுத்தி பாணங்களைத் தொடுத்தான் அர்ச்சுனன். பீஷ்மர் வீழ்ந்தார். தர்மர் பொய் சொன்னார்; துரோணர் வீழ்ந்தார். அதேபோலத்தான் கர்ணனும், சல்லியனும் வீழ்ந்தார்கள். 
 
எல்லாம் இழந்து தோற்றுப் போய், 99 தம்பிமார்களையும் பறி கொடுத்துவிட்டு ஒரு தடாகத்திற்குள் புகுந்துகொண்டு தவம் செய்கிறான் துரியோதனன். அவனிடம் பல அயோக்கியத் தனங்கள் உண்டு. ஆனால் அவன் கடைசிவரையிலும் சுத்த வீரனாக இருந்தான். நான் தஞ்சையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விழாவில் பூண்டி பெரிய வாண்டையார் அவர்கள் தலைமையில் பேசும்போது சொன்னேன்,  துரியோதனன் சுத்த வீரனாக உயிர் துறந்தான். எப்படி இராவணன் கடைசி நேரத்தில் ஊழி காலத்திற்கும் உலகத்தில் இராமன் பெயர் இருந்தால், இந்த இராவணனின் பெயரும் நிற்கும் என்று சொன்னானோ, இந்திரஜித் மறைந்ததற்குப் பிறகு, காதல் மயக்கத்தை காம விருப்பத்தைத் துறந்தவனாக, 
 
‘மன்றலங்குழல் ஜானகி தன் மலர்க்கையால் வயிறு கொண்டலைந்து துடிப்பாள் 
 
ஒன்று அவனுக்காகனும் அல்லது எனக்கு ஆகனும் என்று சொன்னானே, அப்படிச் சுத்த வீரனாக இராவணன் மறைந்தான். அதுபோலத்தான் துரியோதனனும். அவன் கீழே கிடக்கின்றான். உயிர் போகப் போகிறது. அவன் தலைக்கு மேல் ஏறி பீமன் குதிக்கிறான். அதைப் பார்த்துப் பலராமனுக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னடா இப்படி அக்கிரமம் செய்கிறாய்? என்று கேட்கிறான்.  
 
அந்த நிலையிலும் துரியோதனன் சொல்லுகிறான். ஏன் கோபப்படுகிறாய்? இன்னும் சற்று நேரத்தில் என் உயிர் பிரியப் போகிறது. இப்போது பீமன் காலால் என் தலையில் மிதிப்பதால் எனக்கு என்ன குறைந்து விடப்போகிறது? இன்னும் சற்று நேரம் கழித்து காக்கை, கழுகுகளின் கால்கள் இந்த உடல் மீது அமர்ந்து கொத்திக் குதறப் போகின்றன. அதனால் நான் ஒன்றும் வருத்தப் படவில்லை என்கிறான். 
 
அப்படிப்பட்டவனிடம் அவன் நீர்நிலைக்குள் இருக்கும்போது அஸ்வத்தாமன் போய்க் கேட்கிறான். துரியோதனா, நீ படைத்தலைவராக நியமித்த ஒவ்வொருவருக்கும் ஒரு சாபம் இருக்கின்றது. அதனால் அவர்களால் கர்ணனை வீழ்த்த முடிந்தது. ஆனால் எனக்கு அப்படி ஒரு சாபமும் கிடையாது. என்னை அழிக்கக் கண்ணனால் முடியாது. நான் சாகா வரம் பெற்றவன். என்னை ஏன் நீ படைத் தலைவனாக நியமிக்கவில்லை? என்னை நீ சேனாதிபதி ஆக்கி இருந்தால், பாண்டவர்கள் தோற்று இருப்பார்களே? ஏன் இந்தத் தவறை நீ செய்தாய்? என்று கேட்டான். 
 
உடனே துரியோதனன் சொன்னான்: உன்னை நான் எப்படிச் சேனாதிபதி ஆக்குவேன்? நீதான்  ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக கண்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டாயே? என்றான். 
 
என்ன உளறுகிறாய்? நான் எப்போது சத்தியம் செய்து கொடுத்தேன்? 
 
கண்ணன் தூது வந்தானே, அன்றைக்கு அரண்மனையில் இருந்து அவன் வெளியேறுகையில் வாசலில் நின்றுகொண்டு நீ சத்தியம் செய்து கொடுக்க வில்லையா? நீ துரோகியாகி விட்டாய் என்று கருதித்தான் உன்னைச் சேனாதிபதி ஆக்க வில்லை. 
 
அடப் பைத்தியக்காரா! அவன் வெளியேறிச் செல்கையில் என்னைப் பார்த்து அஸ்வத்தாமா இங்கே வா என்று அழைத்தான். வானத்தைப் பார்த்து இன்று மழை வருமா? என்று கேட்டான். நான் அண்ணாந்து பார்த்தேன். மேகம் எதுவும் இல்லை. மழை வருவது போலத் தெரியவில்லையே? என்றேன். இப்படி நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே, கண்ணனின் கைவிரல் மோதிரம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அதை எடுத்துக் கொடுத்தேன். அவ்வளவுதான். அதை நீ தவறாகப் புரிந்து கொண்டு விட்டாயே? என்றான். 
 
தொலைவில் அமர்ந்து இருக்கின்ற துரியோதனன் பார்க்க வேண்டும் என்பதற்காக, கண்ணன் மோதிரத்தை வேண்டுமென்றே தான் நழுவ விட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே துரியோதனனும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டான். இதுதான் நடந்தது.
 
இப்படி எதையும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். (பலத்த கைதட்டல்). நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். ஆனால் இந்த நாட்டில் இப்படிப் புராணங்களைச் சொன்னால்தான் எல்லோருக்கும் புரிகிறது. (பலத்த சிரிப்பு). 
 
1964 ஆம் ஆண்டு மலேசியா சென்று விட்டுத் திரும்பிய அண்ணாவுக்கு பாராட்டுக்கூட்டம், சென்னைக் கடற்கரையில் நடைபெற்றது. தம்பிமார்களே, அர்ச்சுனன் கண்ணுக்குப் பறவையின் கழுத்தும், அம்பின் நுனியும் மட்டும்தான் தெரிகிறது என்றானே, அதைப் போலத் தேர்தல் நெருங்குகிறது; காங்கிரசை வீழ்த்துவது ஒன்றே தான் நம் குறியாக இருக்க வேண்டும் என்று அண்ணா சொன்னாரே? 
 
நான் டெல்லிக்குச் சென்றேன் மாநிலங்கள் அவைக்கு. இந்தியைத் தமிழகம் எதிர்ப்பதாகச் சொல்லுகிறீர்கள்.உங்கள் கட்சி ஆட்சிக்கு வரவில்லையே? என்று கேட்டார்கள்.   கௌரவர்கள் திரௌபதியின் துகிலை உரிந்தபோது பஞ்ச பாண்டவர்கள் தலை கவிழ்ந்ததுபோல நான் தலைகுனிய நேரிட்டது என்றாரே? 
 
இவை எல்லாம் எதற்காக? தன் கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக, கோடிக்கணக்கான மக்கள் அறிந்த மகாபாரதக் கதையில் இருந்து இந்த எடுத்துக் காட்டுகளைச் சொன்னார். இப்படிச் சொன்னால் தான் எளிதாகப் புரியும். அதனால் தான், நான் என்ன விளக்கம் சொன்னாலும் புரியாது என்றுதான், இன்றைக்கு அஸ்வத்தாமன்-துரியோதனன் கதையைச் சொன்னேன். (பலத்த கைதட்டல்). 
 
தெளிவுபடுத்த வேண்டும் அல்லவா? நான் தெளிவானவன். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன்.  என் வாழ்க்கையில் எதையும் சாதித்து விடவில்லை. ஆனால், இலட்சியங்களுக்காக வாழ்கிறவன். இறுதி வரை, இந்த மூச்சு அடங்குகின்ற வரையில் அதற்காகவே வாழ்வேன். அந்தப் பெயர் எனக்குப் போதும்.
 
இப்பொழுதுகூட என்ன? ‘ஈழத்தில் நடந்தது என்ன?’ என்ற நிகழ்வில் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் பேசியதை நியாயப்படுத்தி நான் பேசியதற்காக என் மீது வழக்குப் போட்டார்கள். தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, அண்ணா தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பி.ஜே.பி என அனைத்து அரசாங்கத்திற்கும் என் மீது மிகவும் பிரியம். உளவுத்துறை அதிகாரி களுக்குகூட இவர் நம்முடன் வர வேண்டியவர். எப்படியோ தெரியாமல் அரசியலில் இருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் என் மீது பெரிய வழக்காக போட்டிருக் கிறார்கள்.
 
ஏழு வருடம், பத்து வருட தண்டனை எல்லாம் இல்லை. அந்த தண்டனை எல்லாம் ஊழல் நான் வழக்கில்தான். ஆயுள் தண்டனை கொடுக்கலாம் அது அவர்களை எல்லாம்விட பெரிய வழக்கு. ஆனால் நான் ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் செல்லவில்லை. 124(ஏ) பிரிவில் என் மீது வழக்குப் போட்டார்கள். அது என்ன என்றால் ராஜதுரோக வழக்கு. இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பை உண்டு பண்ணுவதற்காக, பேசு வதற்காக, செயல்படுவதற்காக, தூண்டி விடுவதற்காக இருப்ப தற்குத்தான் 124(ஏ) சட்டப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது. இந்த 124(ஏ) என்பது பிரிட்டிஷ்காரன் 1870 ஆம் வருடத்தில் அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குரலை ஒடுக்குவதற்காகக் கொண்டுவந்த கொடூரமான சட்டப் பிரிவு. என் மீது இரண்டு தேசத் துரோகர வழக்குகள் நீதி மன்றங்களில் விசாரணை நடக்கிறது.
 
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் அந்தப் பிரிவைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி தான் நான் தேசத் துரோகி என்று என் மீது வழக்கு. இதில் நமது தேவதாஸ் அருமையாக குறுக்கு விசாரணை செய்தார்.
 
பொடா வழக்கில் எப்படி 8 பேருக்கு வக்கீல் தினகரனும், தேவதாசும் ஆஜரானார்கள். எனக்கு நானே வக்கீல் என்று சொன்னதுபோன்று, சாட்சிகளை எல்லாம் விசாரித்து முடித்து விடுங்கள். நான் குற்றவாளிக் கூண்டில்தானே நிற்கிறேன். நான் கொள்கைக்காக அல்லவா கூண்டில் நிற்கிறேன். ஈழத் தமிழர்களுக்காக, தமிழ் இனத்துக்காகப் பேசியதற்காக அல்லவா கூண்டில் நிற்கிறேன். எனவே இறுதி வாதத்தை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று தேவதாஸ் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். இவரு ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று சொல்லி, பழைய படி உள்ளே  போய் விடுவாரோ என்று நமது ஆட்கள் எல்லாம் பயந்து கொண்டிருக் கிறார்கள். உள்ளே போனால் என்ன? ஆயுள் தண்டனையா? பத்து வருடம் போட்டால் என்ன? நான் சுயசரிதை எழுதும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை. இதுவரை கடந்துவந்த பாதையை எழுது வதற்கு நல்ல நேரமும், ஓய்வும் கிடைக்கும் அல்லவா? தொலை பேசி, அலைபேசி இருக்காது, சந்திப்புகள் இருக்காது, ஊடக சந்திப்பு இருக்காது. இரவு எல்லாம் அறையில் அடைத்துவிடுவார்கள். நிம்மதியாக இருக்குமே. எனவே, வழக்குகள் பற்றி நான் கவலைப்பட வில்லை.
 
இன்று காலையில் திருப்பூரில் இருந்து வந்த இரண்டு சகோதரிகள் என்னுடன் பேசினார்கள். கழகக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகோதரர்களின் அன்னையருக்கு, அவர்களது இல்லத்து அரசி களுக்கு, அவர்கள் வீட்டுச் சகோதரிகளுக்கு நான் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன் என்று புயல் மழைக்கு மத்தியில், பூவிருந்த வல்லி மாநாட்டின் வாயிலாக நான் நன்றி சொன்னேன். மதுவை எதிர்த்து நீங்கள் சொல்வது தாய்மார்கள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று அந்த சகோதரிகள் சொன்னார்கள். 
நாம் செய்யும் செயலை நல்ல காரியம் என்று நினைக் கின்றார்கள் அல்லவா.
மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக கோவளத்தில் இருந்து புறப்பட்டு, மல்லை சத்யா, சோமு பக்கத்தில் வர, கொளுத்துகின்ற வெய்யிலில் பையனூரில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றபொழுது, எதிரே முதல்வர் ஜெயலலிதா கார் வருகிறது. அப்படி நடந்து சென்று கொண்டு இருக்கிற நேரத்தில் சத்யாவும், மணிமாறனும் வந்து, ‘அண்ணே முதல்வர் வண்டி உங்களைப் பார்த்து வருகிறது’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.   அந்தச் சாலையில், நடுவில் தடுப்புச் சுவர் இல்லாத ஒரு இடத்தில் அவருடைய கார் திரும்பி வருகிறது. எதிரெதிரே வந்து விட்டோம். உடனே நம் தோழர்கள் அண்ணே, முதல்வர் காரிலிருந்து இறங்கி விட்டார்கள் என்றார்கள். நான் நேராக அவரைப் பார்த்து வேக மாகச் சென்றேன். அவர் இறங்கு வதற்கு படியைக் கூட கொண்டு வந்து போடவில்லை. கொளுத்து கின்றது வெயில். குடை இல்லை. கீழே இறங்கி விட்டார்கள். பாதுகாவலர் களுக்குத் தெரியாது.
 
நான் நேராகச் சென்று ‘வணக்கம்மா’ என்றேன். அவர் களும் ‘வணக்கம்’ என்றார்கள். 
 
நல்லா இருக்கீங்களா? என்று கேட்டேன். நீங்க நல்லா இருக்கீங்களா? என்றார்கள். 
நான் நல்லா இருக்கேன் என்றேன். இந்த வேகாத வெயிலில் வருகிறீர்களே, உங்கள் கோரிக்கை என்ன என்று கேட்டார்கள். 
முழு மதுவிலக்குதான் எங்கள் கோரிக்கை என்றேன். 
 
அடுத்து, வீட்டில் எப்படி இருக்கிறார்கள்? இந்த வெயிலில் இப்படி வருகிறீர்களே? சாப்பிட்டீர் களா? என்றார்கள். 
இல்லை என்றேன். 
 
இனி எங்கே போய் சாப்பிடப் போகிறீர்கள்? என்றார்கள். 
 
பக்கத்தில் ஒரு தோழர் வீட்டில் என்றேன். எங்கள் ஊருக்கு வந்து விட்டு நீங்கள் எங்கு போகிறீர்கள் என்றார்? உடனே சத்யாவை அழைத்து எங்கு என்று சொல்லுங்கள் என்றேன். அவரும் சொன்னார். முதல்வருக்குப் பிறந்த நாள் வருகிறதே என்று இன்னும் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ்க என்று  வாழ்த்துச் சொன்னேன். அதற்கு அவர்கள் நன்றி சொன்னார்கள். 
 
நான் பெரிய தலப்பாகை கட்டி இருந்தேன். நான் விவசாயி வீட்டுப் பிள்ளைதானே? கண்ணுக்கு சன் கிளாஸ்  அணிந்து இருந்தேன். என்னைப் பார்த்தார்கள். தலப் பாவைப் பார்க்கிறார்கள் என்று நினைத்து, வெயிலுக்காகக் கட்டி இருக்கிறேன் என்றேன். தற் செயலாக நான் தலப்பாவைக் கழட்டியிருந்தால் அவ்வளவுதான் தொலைந்தது. வைகோ தலப் பாவைக் கழட்டி விட்டார் என்று எழுதி விடுவார்கள். (பலத்த சிரிப்பு) உடனே நம்மவர்கள் சொல் கிறார்கள், ‘எங்காளு சிங்கம்டா’ என்று.
 
பத்திரிகைகளில் என்ன எழுதி னார்கள்? முதலமைச்சர் போகின்ற வழியில் சாலையில் இறங்கி இப்படி எவரையும் பார்த்தது இல்லை. முதலமைச்சர் வீட்டுக்கு எதிரில் காத்திருக்கின்றார்களே, எளிதில் எவரும் பார்த்துவிட முடியாது. அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி எவருக்கும் இந்த மரியாதை கொடுக்கவில்லையே? அப்படியானால் கூட்டணி ரெடியாகி விட்டது. எத்தனை சீட்டு? மூன்று தான் கொடுப்பார்கள் போலத் தெரிகிறது என்று எல்லாம் செய்தித் தாள்களில் வருகிறது. இல்லை இரண்டு என்று சொல்லி விட்டார் களாம். அதுக்கு ஒத்துக்கிட்டாராம். இது இன்னொரு செய்தித் தாளில்.
 
இவை எதற்கும் நான் மறுப்புக் கொடுக்கவில்லை. ஒரு கட்சியின் தலைவரை இன்னொரு கட்சியின் தலைவர் சந்திப்பதோ, அன்பாகப் பேசுவதோ,  மரியாதை நிமித்தம் சந்திப்பதோ ஒரு நல்ல பண்பாடு.  அந்த மாதிரி கலாச்சாரம் வளர வேண்டும். தினத்தந்தி சுகுமார், இந்தச் சந்திப்பு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டார். 
 
‘அரசியல் நாகரிகத்தின் அடை யாளமாக வெயிலில் நடந்து வந்த என்னை முதலமைச்சர் சந்தித்தார். இதற்கு மேல் எந்த உள்நோக்கமோ, அரசியல் சாயமோ பூசுவது பண்பாடு அல்ல’ என்றேன்.
 
அதுபோலத்தான் நட்பின் நிமிர்த்தம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதும் தவறு இல்லை. அடுத்த சில நாள்களில், விவசாயிகள் நிவாரணம் பெற முடியாமல் தவிக்கின்றார்கள், விரக்தியின் விளிம்பில் கிராமங் களை விட்டு வெளியேறுகிறார்கள் என்று நான் அறிக்கை விடுத்தேன். உடனே அதை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டாக வைக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு, என்னைக் கடுமையாக விமர்சித்து ஒரு அமைச்சர் பெயரில் அறிக்கை வெளியிட்டார்கள்.
 
எனவே நான் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். இயக்கம் பெரியது. Not that I love Ceasar less. but I love Rome more. ‘நான் சீசரை நேசிப்பது குறைவாக அல்ல. அதைவிட நான் ரோமாபுரியை நேசிக்கிறேன்.’ இது ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள். 
 
இந்த மண்ணை நேசிக்கிறேன். இந்த மண்ணில் பிறந்து என்னால் இயன்ற அளவுக்குத்  தமிழ் மொழிக்கு, இனத்துக்குப் பாடுபட்டு வந்திருக்கிறேன். தந்தை பெரியாரின் தலைமை மாணாக் கராக இருந்த அண்ணாவின் பட்டாளத்திலே சேர்ந்து, அண்ணாவின் கொள்கைகளுக்கு முடிந்த மட்டுக்கும் நாங்கள் போராடி வந்திருக்கின்றோம். ஆண்டுதோறும் அண்ணாவுக்கு விழா எடுக்கிறோம். அண்ணா இருந்தால் என்ன செய்வாரோ அதைச் செய்ய நினைக்கிறோம். இன்று பெரியார் இல்லை. அண்ணா இல்லை. திராவிட இயக்கத்தில் பாடுபட்டு இரத்தமும், கண்ணீரும் சிந்தி தியாகம் செய்த தீரர்கள் பலர் இன்றைக்கு இல்லை.
 
ஆனால், எத்தனை ஆண்டு கால வரலாறு கொண்டது திராவிட இயக்கம். பெத்தாம்பாளையம் பழனிச்சாமியைப் பற்றி அண்ணன் சொன்னார். ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜூனனைப் பற்றிச் சொன்னார். பழையகோட்டை குடும்பத்து அர்ஜூனனை இந்தப் பகுதி மக்களுக்குத் தெரியும். கணியூர் குடும்பத்தைப் பற்றித் தெரியும். உடுமலை நாராயணனைப் பற்றித் தெரியும். மனிதர்களைவிட இயக்கமும் இலட்சியமும் உயர்ந்தது மறந்துவிடாதீர்கள்.
 
மனிதர்கள் மரிக்கக்கூடியவர்கள். இலட்சியங்கள் மரணிப்பதில்லை. மனிதர்களை விட கொள்கைகள் உயர்ந்தது. மனிதர்களைவிட இயக்கம் உயர்ந்தது. நாங்கள் இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அதைத்தான் பொருளாளர் மாசிலாமணி இங்கே குறிப்பிட்டார். திராவிட இயக்கத்துக்கு ஆபத்து வருகிறதா? எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், யார் மூலம் வந்தாலும் எதிர்த்து நின்று முறியடித்துத் தகர்ப்போம் என்ற உணர்வோடு இருப்பவர்கள்.
 
இன்றைக்கு பேராபத்து சூழ்ந்து இருக்கின்றது. பெரியார் காலத்தில் ஏற்படாத ஆபத்து தமிழ் இனத்துக்கு ஏற்பட்டு இருக்கின்றது. அறிஞர் அண்ணா காலத்தில் ஏற்படாத ஆபத்து தமிழ் இனத்துக்கு ஏற்பட்டு இருக்கின்றது. பெரியார், அண்ணா காலத்தில் ஏற்படாத ஆபத்து திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்டு இருக்கின்றது. திராவிட இயக்கத்தை கரு அறுத்து விடலாம் என்று பலபேர் மனப்பால் குடிக்கின்றார்கள். அந்த ஆபத்து கங்கை கரையில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் சரி எதிர்ப்போம்.
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வந்தது. பத்து சட்டமன்ற உறுப்பினர் பதவி களுக்காக அரசியல் நடத்துவதாக இருந்திருந்தால் கடைசியாக வந்து 12 தொகுதிகள் வருவதாக அண்ணா தி.மு.க. சொன்னது அல்லவா? வாங்கி பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். எதையாவது கொடுங்கள் என்று பிச்சை கேட்கிற நிலையில் மறுமலர்ச்சி தி.மு.க. இல்லை. (பலத்த கைதட்டல்) 
 
அதற்காக எதிர்த்த வீட்டுக் கதவைப் போய் தட்டுவோமா? அங்கு வாய்ப்பு இருக்குமா? என்ற எண்ணமும் எங்களுக்கு ஏற்பட வில்லை. தேர்தலையே புறக்கணிப்பது என்ற முடிவை மறுமலர்ச்சி தி.மு.க.வைத் தவிர வேறு யாரால் எடுக்க முடியும்? திராவிடர் கழகம் எடுத்தது. பெரியார் தொடக்கத்தில் இருந்தே தேர்தலை ஏற்கவில்லை. ‘ஓட்டுப் பொறுக்கிகள்’ என்று ஒரே அடியாக அடித்துக் காலி செய்துவிட்டார். பணத்திற்கு ஓட்டுப்போடுவ தெல்லாம் அவருக்குத் தெரியும் போல் இருக்கிறது.
 
நாங்கள் தேர்தலில் போட்டி போடு கின்ற கட்சி. சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சி. 2001 இல் தோற்கும் என்று தெரிந்தே தனியாகப் போட்டி போட்டோம். அப்படிப்பட்ட கட்சி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுப்பதற்கு கொள்கையில் உரம் கொண்டு இத்தனை பேரும் உறுதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தான். இல்லாவிட்டால் இந்த முடிவு எடுக்க முடியாது. கட்சி சின்னா பின்னமாகிப் போயிருக்கும். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் வைரம் பாய்ந்த நெஞ்சத்தினர் அல்லவா! 
 
தமிழக அரசியல் அரங்கத்தில் இருப்பவர்களுக்கு, பத்திரிகை யாளர்களுக்குச் சொல் கிறேன். 10 சட்டமன்ற உறுப் பினர்கள் போதும் என்று இருந்திருந்தால் 2011 இல் நாங்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இடங்கள் வாங்கி போட்டியிட்டிருக்கலாமே! சுயமரியாதை பெரிது. தன்மானம் பெரியது!
 
சிலர் சொல்கிறார்கள், மாறி மாறி அங்கும் இங்கும் சென்றுவிட்டார் என்று. எந்தக் கூண்டில் அடைத் தாலும் எங்கள் கொள்கையை நாங்கள் கைவிட்டிருக்கின்றோமா? எங்கள் குரல் ஓய்ந்து இருக்கிறதா? எந்தக் கூட்டில் அடைத்தாலும் குயிலின் கீதம் இனிமையாகத்தான் இருக்கும். வேங்கையின் உறுமல் வேகமாகத்தான் இருக்கும். எங்கேயும் எங்கள் கொள்கையை விட்டுவிடவில்லை. இந்தக் கூட்டுதான் சிறந்தது என்று கட்சி முடிவு எடுக்கின்றபோது, அண்ணா தி.மு.க.வோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் விரும்பியபோது, மனதுக்குக் கஷ்டம்தான். 19 மாதம் சிறையில் இருந்து விட்டோமே? பழி சொல் வார்களே? என்று கருதினேன். இருந்தாலும் என் சுயமரியாதையை விட இயக்கம் பெரிதெனக் கருதி என் நம்பகத்தன்மையைக் காவு கொடுத்தேன். I sacrificed my credibility. 
 
வாழ்க்கையில் என்ன வேண்டும்? இந்த உலகத்தையே காலடியில் கொடுப்பது என்றால், பழி வரும் என்றால் ஏற்க மாட்டான் தமிழன்.
 
புகழ்எனில் உயிரையும் கொடுப்பர் பழி எனில் 
 
உலகுடன் பெரினும் கொள்ளலர். 
 
இப்படிப் புகழுக்காக உயிரையே கொடுக்கலாம்; பழிச்சொல் வரும் என்றால் இந்த உலகத்தையே காலடியில் போட்டாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஆனால் நாங்கள் பணம் வாங்கிக் கொண்டு கூட்டு வைத்ததாகப் பழிச் சொல்லுக்கு ஆளானேன். நான் இத்தனை ஆண்டுக் காலம் சேமித்து வைத்து இருந்த நேர்மை என்ற கவசத்தையே உடைப்பதற்கு முயன்றார்கள். 
 
இந்த ஒரு சொத்துதானே என்னிடம் இருக்கின்றது. அதையும் இழப்பதா? தேவதாஸ்கூட அப்படித்தான் முதலில் கருதினார். இயக்கத்தில் இருக்கக்கூடிய தோழர்கள் இத்தனை வருடம் துன்பப்பட்டிருக்கின்றார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பெரும் பாலோர் கருத்து அண்ணா தி.மு.க.வோடு தான் போய்ச் சேர வேண்டும் என்று துடியாய்த் துடித்து, திருச்சிக்குப் புறப்பட்ட வனைத் தடுத்து, தி.மு.க. மாநாட்டுக்குப் போனவனைத் தடுத்து மடை மாற்றிப் போட்ட மாபெரும் தலைவர்கள், நாம் அதிமுகவுடன் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு கடைசியில் தி.மு.க.வுடன் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
 
நான் திருச்சிக்குப் போக இரயிலில் டிக்கட் எடுத்து ரெடியாக இருக்கின்றேன். இரண்டரை மணி ஆகி விட்டது. இந்த நேரத்தில் அண்ணா தி.மு.க.வுடன் போக வில்லை என்றால், கட்சியே அழிந்துவிடும் என்றார்கள் அவர்கள். 
 
நீ ஒரு தலைவன் ஆயிற்றே, நீ ஒரு முடிவு எடுக்க வேண்டாமா? இவர்கள் சொன்னார்கள் என்று கேட்கலாமா? என்று நீங்கள் கேட்கலாம். 
 
பெரும்பாலோர் கருத்தும் அது மாதிரி வந்துவிட்டது. அப்போது இயக்குநர் பாலச்சந்தர் எடுத்த அரங்கேற்றம் படத்தின் நாயகி நிலைமைக்கு நான் ஆளாகி விட்டேன் என்று சொல்லிவிட்டுத் தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். என் நம்பகத்தன்மை தாக்கப்பட்டது. பழிச்சொல்லுக்கு ஆளானேன். 
 
எனக்கு என்று ஒரு உலகம் இல்லை, இவர்கள்தான் என் உலகம். என் தோழர்கள்தான் என் உலகம். என் சகாக்கள்தான் என் உலகம். என் சகோதரர்கள்தான் உலகம். தனிப்பட்ட வைகோ என்ற நபரின் இச்சைகளுக்காகவோ, விருப்பு வெறுப்புகளுக்காகவோ நடைபெறுகின்ற கட்சி அல்ல இது. இது என்னையும் கடந்தது.
 
அதனால்தான் சொன்னேன். men are mortals. principles are immortal என்று. என்னையும் கடந்தது இந்த இயக்கம். என்னைவிட உயர்ந்தது இந்த இயக்கம். என் காலத்துக்குப் பிறகும் இருக்கப்போவது இந்த இயக்கம். ஆகவே, இந்த இயக்கத்தில் நானாக முடிவு எடுப்பது இல்லை. என் விருப்பு வெறுப்புக்காகக் கட்சி நடத்த வில்லை. குண்டூசி முனை செய்தியாக இருந்தாலும், அவைத் தலைவரைக் கேட்காமல், பொருளாளரைக் கேட்காமல், துணைப் பொதுச்செயலாளர் களைக் கேட்காமல், முன்னோடி களைக் கேட்காமல், மாவட்டச் செயலாளர்களுடன் கலக்காமல் முடிவு எடுத்தது இல்லை. ஆனால் அப்படி சொல்லாமல் எடுத்த ஒரு முடிவுதான், நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை என்று எடுத்த முடிவு. சொன்னால் தடுப்பார்கள் என்று சொல்லவில்லை. அது தவறு தான். அந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வோடு உடன்பாடு வந்தது. நான் போட்டியிடவில்லை. என் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்த தால் நான் போட்டியிடவில்லை.
 
எனவே இப்படிப்பட்ட சூழலில், மனிதர்களைத் தாண்டி, தலைவர் களைத் தாண்டி திராவிட இயக்கத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். திராவிட இயக்கத்துக்குச் சூழ்ந்து வருகின்ற ஆபத்தைத் தடுக்கின்ற கடமை எங்களுக்கு உண்டு. அந்த விதத்திலான கருத்துக்களைப் பரிமாறி இந்த இயக்கம் முடிவு களை மேற்கொள்ளும்.  தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று நான் துளியும் நினைக்கவில்லை. அதற்கு உள்ளாகவே நான் ஏதோ முடிவெடுக்கப் போவது மாதிரி பத்திரிகைகள் எழுதுவது அவர்கள் விருப்பம். அது ஜனநாயக உரிமை.
 
ஆனால், தோழர்களுக்குத் தெளிவு படுத்தி விட வேண்டியது கடமை. இதைவிட என்ன வாய்ப்பு? ஈரோட்டில் கணேசமூர்த்தி வீட்டு திருமணத்தை விட ஒரு வாய்ப்பு எப்படி வரும். இயற்கையாக வந்து அமைகிறது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் வந்து இருக்கின் றார்கள். கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வந்து இருக்கின்றார்கள். நான் தூங்கி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. அமைதியாக இனிமையான சூழ்நிலையில் சாப்பிட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. மெலிந்து விட்டீர்களே? என்கிறார்கள். உடம்புக்குச் சரியில்லை என்கிறார்கள். கட்சியைப் பற்றிய கவலையில்தான் நான் நலிந்தேன். கட்சியைப் பற்றிய கவலையில் தான் என் உடல் மெலிந்தது. குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டிருக்கின்றேனா? வீட்டு வாசலைப் பற்றி நினைத் திருக்கின்றேனா? கட்சியைப் பற்றித்தான் நினைக்கிறேன். 
 
இத்தனை இலட்சம் தொண்டர்கள் உழைப்பில் வெயிலிலும், மழையிலும், கை காசு போட்டுச் செலவழித்து விருதுநகர் மாநாட்டைவிட பூவிருந்தவல்லி மாநாட்டுக்கு அதிகமான கூட்டம் வந்தார்களே எதற்கு? இந்தக் கட்சி தொண்டர்கள் உருவாக்கிய கட்சி. அவர்கள் கட்டி வைத்த மாளிகை  இவ்வளவு தோல்விக்குப் பிறகும் கைக்காசைச் செலவழித்து வருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கூட்டத்தைக் கூட்டி வருகிறார்கள் என்றால், காசு கொடுத்து செட்டப் செய்துதானே கூட்டி வரு கிறார்கள்? கூட்டத்திற்கு வந்தாலும் சரி, போராட்டத்திற்குப் போனாலும் சரி, தன்னலமற்று கை காசை செல வழித்துப் போய் போராடக்கூடிய அளவுக்கு இன்றைக்கு வரைக்கு மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்ற கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள்தான்.
 
எனவே, வியர்வையும், கண்ணீரும் சிந்தி கட்டி எழுப்பி இருக்கின்ற எஃகு கோட்டை மறுமலர்ச்சி தி.மு.கழகம். உலகெங்கும் உள்ள தமிழர்களிடத்தில் நம்பிக்கையைப் பெற்று இருக்கின்றோம். தன்னல மற்று இருக்கிறோம். சாதி, மதங்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க.வில் இடம் இல்லை. இங்கே இருக்கின்ற பாச உணர்வை வேறு எங்கும் பார்க்க முடியாது. 
 
அதே வேளையில் நான் நன்றி உணர்ச்சி மிக்கவன். கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும் என்று நான் எனது அறையில் எழுதி வைத்து இருக்கின்றேன். என்றோ ஒருநாள் செய்த உதவியையும் மறப்பவன் அல்ல நான். இந்த 22 ஆண்டுகளில் நான் எந்தத் திருமணத்திலும் இப்படி பேசியது இல்லை. கணேசமூர்த்தி என்ன செய்தாலும் ஒரு சூழ்நிலைக்குத் தான் கொண்டுபோய் விடும். பொதுக்குழு போட்டு சிறைக்கு அனுப்பினார். 
 
திராவிட இயக்கத்தைச் சூழ்ந்து வருகின்ற கொடும்பகையை எதிர்க்க வேண்டியதையும் மனதில் கருதித்தான் நாங்கள் முடிவுகள் எடுப்போம். நான் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நாங்கள் எடுப்போம். We will decide. 
 
கவிதை எல்லாம் சொல்லித் தொடங்கினீர்கள். இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே? கபிலன் டென்சனில் இருக்கிறார். என் பேச்சைக் கேட்டு இன்னும் டென்சன் ஆகிவிட்டார். 
 
மணமக்களே! உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நீங்கள் நூறாண்டு கடந்து வாழ்வீர்கள். எல்லா நலனும் பெற்று வாழ்வீர். இப்படிப்பட்ட பிள்ளை களைப் பெற்றதற்கு கணேசமூர்த்தி பெரிய பாக்கியம் பெற்றவர். இது நம் குடும்பத்து நிகழ்ச்சி. எல்லா நலனோடும் வளமாக வாழ்ந்து, குடும்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லக்கூடிய விதத்தில் எடுத்துக் காட்டான இல்லறத்தை நீங்கள் நடத்துவீர்கள் எனச் சொல்லி, வாழ்க நீவீர் நூறாண்டு நூறாண்டு கடந்து என வாழ்த்துகிறேன். 
 
இலட்சியங்கள் தோற்காது, அறமும் நேர்மையும் தோற்காது. மக்கள் கவனம் எங்கள் பக்கம் வரும். நாங்கள் வெல்வோம்!
 
பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)