திராவிட இயக்கக் கொள்கை சுடர் ஏந்தி வருங்கால தலைமுறையை வார்ப்பிப்போம்! வைகோ அறிக்கை

Issues: Human Rights

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Mon, 20/11/2017

 

 

 


திராவிட இயக்கக் கொள்கை சுடர் ஏந்தி
வருங்கால தலைமுறையை வார்ப்பிப்போம்!

வைகோ அறிக்கை

வம்பர் 20, தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய விடியல் தோன்றிய நாள்; அமைப்பு ரீதியாக திராவிட இயக்கம்உருப்பெற்ற திருநாள். ஆம்! 1916 நவம்பர் 20 ஆம் நாளில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்தொடங்கப்பெற்றது. பின்னர் நீதிக்கட்சியாக அறியப்பட்ட திராவிட இயக்கம்நூற்றாண்டு கடந்து 101 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய முப்பெரும் திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்துகிறோம். சமூக சமத்துவத்திற்கான விதையை இந்த மண்ணில் ஊன்றியது நீதிக்கட்சி. நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டு, சமூக நீதிக்கான வாசல் முதன் முதலில் திறக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் தமது உரிமைகளைப் பெறவும், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முற்போக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணுரிமைகளைப் பேணிய மகத்தான ஆட்சியாக நீதிக்கட்சி அரசு திகழ்ந்தது. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மருத்துவக் கல்வி பயில்வதற்கு சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி தேவை என்ற விதிமுறைகளைத் தகர்த்து, அனைத்துத் தரப்பினரும் மருத்துவக் கல்வி பெற வழி வகுத்தது.

திராவிட இயக்கத்தின் ஈடில்லா தலைவர் சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயர் பொறுப்பு வகித்தபோதுதான், ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளிகளில் இலவச மதிய உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதுதான் பின்னர் மதிய உணவுத் திட்டமாக, சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.

கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை, இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. அரசுப் பணிகளை முறைப்படுத்திட முதன் முதலில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அமைத்ததும் நீதிக்கட்சி அரசுதான்.

சிறுபான்மை மக்களுக்கு உரிய பங்கை வழங்க ஆணையிட்டதும், இந்து சமய அறநிலையச் சட்டத்தை அறிமுகம் செய்ததும் நீதிக்கட்சி அரசுதான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியது சமூக நீதிக் கொள்கை இலட்சியத்துக்காகத்தான் என்பது வரலாறு. அவர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியபோது, சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வேறுபாடு காட்டப்பட்டதை எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்டோர் சமூக சம உரிமையை நிலைநாட்ட புகழ்பெற்ற வைக்கம் போராட்டத்தை நடத்தினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டுவர முயன்றார். 1919 இல் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 25 ஆவது மாநாடு, 1920இல் நெல்லை மாநாடு, 1921 இல் தஞ்சை, 1923 இல் திருப்பூர், மதுரை, இராமநாதபுரம், சேலம் மாநாடுகள், 1924 இல் திருவண்ணாமலை, 1925 இல் காஞ்சிபுரம் ஆகிய மாநாடுகளில் வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததால்தான் தந்தை பெரியார், காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறினார்.

தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தது. தமிழ் சமூகத்தை அறிவும் மானமும் உள்ள சமூகமாக மாற்ற அருந்தொண்டாற்றியது. அதனால்தான் தந்தை பெரியார் ஒரு சகாப்தம்என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் போற்றினார்கள்.

சமூக நீதித் தத்துவத்தைச் சட்டபூர்வமாக்கிய நீதிக்கட்சி அரசுக்கு ஆதரவு அளித்த தந்தை பெரியார், பின்னாளில் நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பேரறிஞர் அண்ணா நீதிக்கட்சி பொதுச்செயலாளர் ஆனார். ஆரிய பண்பாட்டு படையெடுப்பான வடமொழி இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டம் தலைவர் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

1938 லேயே தமிழ்நாடு தமிழருக்கேஎன்று முழங்கியவர் பெரியார். திராவிடர்களின் மொழி, இன, பண்பாடு, கலாச்சாரத்தைப் பேணிக் காக்க திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தது நீதிக்கட்சி.

பின்னர் 1944 இல் திராவிடர் கழகம்என்று பெயர் மாற்றம் கண்டது.

1949 செப்டம்பர் 17 இல் பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 18 இல் இராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் உரைமுழக்கமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், “சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை, பொருளாதாரத் துறையிலே சமதர்மம்இவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம் என்று குறிப்பிட்டார்.

1951 இல் சமூக நீதியைப் பாதுகாக்க இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவர தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டனர்.

1957 சட்டமன்றத் தேர்தலில் 15 உறுப்பினர்களுடன் தமிழக சட்டமன்றத்தில் நுழைந்த தி.மு.க., 1962 இல் 50 உறுப்பினர்களாக வளர்ச்சி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்திய நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா நாட்டுப் பிரிவினை முழக்கத்தை எழுப்பியபோது, திடுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு பிரிவினைவாத தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும், “பிரிவினைக் கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றனஎன்று பிரகடனம் செய்தார் பேரறிஞர் அண்ணா.

50 களில் திராவிட இயக்கம் நடத்திய மொழி உரிமைக் கிளர்ச்சியால், “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்என்று பிரதமர் நேரு வாக்குறுதி வழங்கும் நிலை உருவானது.

1965 ஜனவரி 26 முதல் இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தி அரியணை ஏறும் என்று டெல்லி அரசு அறிவித்ததை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டம் அதுவரையில் கண்டிராத மொழி உரிமைப் போராட்டத்தை தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினார்கள். திராவிட இயக்கம்தான் மொழி உணர்வுக் கனலை ஏற்றியது.

1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் செல்வாக்குடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். நம் மண்ணுக்கு தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டினார். இந்திக்கு இங்கு இடம் இல்லை; தமிழ்நாட்டில் இருமொழித் திட்டம்தான் நடைமுறையில் இருக்கும்என்று சட்டம் இயற்றினார். தந்தை பெரியார் அறிமுகம் செய்த சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்வழங்கினார்.

1967 இல் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆட்சிதான் கோலோச்சுகிறது. இதை மாற்ற இனியும் எந்த சக்தியாலும் முடியாது. அறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்ற அண்ணன் டாக்டர் கலைஞர் ஆட்சியில்தான் கல்வி, வேலைவாய்ப்பில் 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு 49 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் 69 விழுக்காடாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, பின்னர் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பெறுப்பேற்க வகை செய்து சமூக நீதியை நிலைநாட்டியவர் கலைஞர். பேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சி கோரிக்கைக்காக வலுவாகக் குரல் எழுப்பிய கலைஞர், சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். எண்ணற்ற சமூக நலத் திட்டங்களைக் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.  இவையெல்லாம் திராவிட இயக்கத்தின் புகழ்மிக்க அத்தியாயங்கள்.

ஏழ்மையும், வறுமையும் ஒழிந்த தமிழ்நாடு உருவாவதற்கு 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சிதான் அடித்தளமிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இன்றி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பினரும் உரிய பங்கைப் பெறுவதற்கு வழிவகைகளை சட்டமாக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை. பெண்ணுக்கு சொத்து உரிமை, உள்ளாட்சியில் 50 விழுக்காடு ஒதுக்கீடு என்று புரட்சிகர திட்டங்களும் திராவிட இயக்க ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் மாபெரும் சிறப்புமிக்க திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால ஆட்சியில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தினாலும், இன்று சிலர் திராவிட இயக்கத்தின் மீது கல்லெறிகின்ற நிலைமையும் உருவாகி இருக்கிறது என்பதும் வேதனை. பொதுநலம் மாய்ந்து, தன்னலம் ஓங்கியதாலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தோர் அனுமதித்த ஊழல்களாலும் திராவிட இயக்கம் சிறுமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மீது வீசப்படும் பழித்தூற்றைத் துடைத்து எறியவும், திராவிட இயக்க இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும்தான் 1994 இல் உருவான எமது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றுக் கடமையை ஆற்றி வருகிறது.

திராவிட இயக்கம் வழங்கிய வெளிச்சத்தில் சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாக்கவும், தமிழ், தமிழர் நலன், தமிழக வாழ்வாதரங்கள் பாதுகாப்பு, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்த் தேசிய இனத்திற்கு என்று தமிழ் ஈழ நாடு உருவாக்கம் போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தும்.

திராவிட இயக்கத்தின் கொள்கைச் சுடரை ஏந்திச் செல்ல வருங்காலத் தலைமுறையை வார்ப்பிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற திராவிட இயக்கத்தைச் சார்ந்த அனைவரும் திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு நாளில் உறுதி ஏற்போம்!

தாயகம்                                                           வைகோ
சென்னை - 8                                          பொதுச்செயலாளர்,
20.11.2017                                                  மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)