பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுக! தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 17/11/2017

 

 

 

 


பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுக!

தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சிய கண்டத்திலேயே மிகப் பழமையான ஆறு பாலாறு. கர்நாடக மாநிலம் - கோலார் மாவட்டம் சென்ன கேசவமலை நந்தி துர்க்கத்தில் உருவாகி, 90 கி.மீ. தூரம் அம்மாநிலத்தில் ஓடி, ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ. கடந்து, தமிழ்நாட்டில் 225 கி.மீ. வேலூர் மாவட்டம் புளூரில் துவங்கி காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா கல்பாக்கம் அணுமின் நிலையம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.

பாலாற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடாவிடினும், பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை துணைக் கால்வாய் மூலம் விவசாய சாகுபடிக்கும், குடிநீருக்கும் ஏரி, குளங்களில் தேக்கி வைத்தனர். இதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்ற வள்ளுவரின் குறட்பாவிற்கு எடுத்துக் காட்டாக தொன்மையான பாலாற்றில் 30 அடிக்கும் மேலாக மணல் தேங்கி இருந்ததால் வெண்ணிற மணற்பரப்பின் கீழே என்றும் வற்றாத ஜீவ நதியைப் போல, பசுவின் மடியில் பால் சுரந்து மறைந்திருப்பதைப் போன்று ஊற்று நீர் ஓடி தஞ்சைக்கு நிகராக செந்நெல் வயலும், தென்னை, வாழை, கரும்பு, மணிலா, எள், சோளம், கம்பு என்று பல லட்சம் ஏக்கர் விவசாயத்தில் மறுமலர்ச்சி கண்டனர்.

ஆனால் இன்று வான் பொழித்தாலும் சகோதர மாநிலங்கள் 1892 ஆம் ஆண்டு ஒத்துக் கொண்ட ஒப்பந்தங்களை மதியாமல் வரையறுக்கப்பட்டதற்கு மேலாக கடை மடை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் பெறாமலேயே அணைக்கட்டுகளைக் கட்டி நீர்வரத்தைத் தடை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டை ஆண்டவர்களும் சரியான புரிதலும் தெளிவும் இல்லாததால் நமது கனிம வளமான வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் மணலை வரையறை செய்து, அனுமதிக்கப்பட்ட அளவான 3 அடிக்கு அள்ளப்பட வேண்டிய மணலை 25 அடிக்கும் மேலாக வரம்புக்கு மீறி, அரசின் துணையோடு அள்ளி கொள்ளை அடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர் வற்றி செயற்கை பஞ்சம் உருவானது. இதனால் விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எடுப்பார் கைப்பிள்ளைகளாக, சவலப்பிள்ளைகளாக அரசின் இலவசங்களுக்காகவும் ஊருக்கே உணவு உற்பத்தி செய்தவன் வேலை உறுதி திட்டத்தில் பிச்சைக்காரர்களாக மாறி உள்ளனர்.

உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்ற மூதுரை உழவு தொழிலுக்கே இறுதி வணக்கம் செய்து முழுக்குப்போடும் நிலை, உழவுத் தொழிலும், விவசாயமும் அறியாத இளைய தலைமுறையினர் பெருகிவிட்டனர்.

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாய பெருங்குடி மக்களை பாதுகாத்திடத்தான் நாடாளுமன்றத்தில் நதிகள் இணைப்புக் குறித்து தனி நபர் மசோதா கொண்டு வந்து, நெடிய விவாதத்திற்குப் பின் அன்றைய பாரத பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. நதிகள் இணைப்புக் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை துவங்கி சென்னை வரை விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டேன்.

இந்நிலையில் தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் தமிழகத்திற்கு சாதகமாக இருக்கின்ற நிலையில், பாலாறு மட்டும் பாலை நிலம் போன்று காட்சியளிக்கிறது. காரணம் நீர்வழி கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் ஆதாரம் இல்லாமல் போய்விட்டது. ஊற்று நீரின் ஆதாரமான மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இயற்கை அரண் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நீர் ஆதாரம் பெருகும். விவசாயம் செழிக்கும். குடிநீர் பிரச்சினை தீரும். எனவே பாலாற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக தடுப்பணைகள் கட்டிட போதுமான நிதி ஒதுக்கி, இத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றிட தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தாயகம்                                                                          வைகோ
சென்னை - 8                                                         பொதுச்செயலாளர்,
17.11.2017                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)