“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர்களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்! ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் வைகோ

Issues: Human Rights, Law & Order

Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu

Category: Articles, Headlines, Speeches

Date: 
Mon, 14/10/2013

 
 
 
 
 
 
 
 
“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம்,
தமிழர்களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!
 
 
ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் வைகோ
 
 
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா 05.10.2013 சனிக்கிழமை அன்று சென்னையில் ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:
 
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்
அரசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
 
தமிழகத்தில் எழுத்தால், பேச்சால், தொண்டால், தியாகத்தால், போராட்டங்களால், அழியாப் புகழ் பெற்று இருக்கின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களுடைய 18 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவுக்கு தலைமை தாங்குகிற உலகத் தமிழர் பேரமைப்பினுடைய தலைவர் ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, பாரதிய ஜனதா கட்சியினுடைய தமிழ் மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களே, தொழிலதிபர்-கலைமாமணி-இந்தப் புவியின் பல நாடுகளில் வான்புகழ் வள்ளுவப் பெருந்தகையினுடைய திருஉருவச் சிலையை நிறுவுகின்ற அரும்பணியைச் செய்து வரும் மதிப்புக்குரிய வி.ஜி. சந்தோஷம் அவர்களே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடிய சகோதரி முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களே, தொகுத்துத் தந்த செந்தில்குமார் அவர்களே, நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றிருக்கின்ற கவிஞர் தாமரைச் செல்வன் அவர்களே, இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கின்ற அன்புக்குரிய சகோதரி-சிலம்புச் செல்வரது பெயரால் இருக்கின்ற அறக் கட்டளையை நடத்துகின்ற மாதவி பாÞகரன் அவர்களே, அன்புடைய சகோதரிகளே, தமிழன்பர்களே, பத்திரிக்கையாளர்களே, ஊடகவியலாளர்களே வணக்கம்.
 
1906 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் நாள், இந்தத் தலைநகரின் ஒரு பகுதியில், நினைவிலே வாழுகின்ற பொன்னுசாமி கிராமணியார்-சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்து, காவியம் படைத்து இருக்கின்ற பெருமகன், சிலம்புச் செல்வர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு, அக்டோபர் 3 ஆம் நாள், இந்த மண்ணை விட்டு மறைந்தார். அவரது நினைவு நாளை, அக்டோபர் 3 ஆம் நாளிலேயே நடத்தத் திட்டமிட்டபோதும், தவிர்க்க இயலாத காரணங்களால், இன்று அக்டோபர் ஐந்தாம் நாளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. 
 
என்னுடைய வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்தி விடும். அந்த வகையில், முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழாவில், அந்த ஊடகத்தைத் தொடங்கி வைப்பதற்கும், உரை ஆற்று வதற்கான பொன்னான வாய்ப்பைத் தந்தமைக்காக, அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல அக்டோபர்த் திங்களில், இருசப்ப கிராமணி தெருவில் வாழ்ந்த சிலம்புச் செல்வரை, ஒருநாள் காலை 9.00 மணி அளவில் அவரது இல்லத்துக்குச் சென்று  நான் சந்தித்தேன். அப்போது, நான் மாநிலக் கல்லூரியின் மாணவன்; அக்கல்லூரியின் விக்டோரியா விடுதியின் தமிழ் மன்றத்தின் தலைவர். அவர்களிடம் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘ஐயா, எங்கள் மன்றத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றோம்; சிலம்பு விழா நடத்த விழைகின்றோம்; தாங்கள் பங்கு ஏற்க வேண்டும் என வேண்டினேன். தலையை அசைத்தார். அடுத்த விண்ணப்பத்தைத் தொடுத்தேன். ‘ஒரு பட்டி மன்றத்தை, சிலப்பதிகாரப் பட்டிமன்றமாக அமைத்து, நீங்கள் அதற்கு நடுவராகப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று கேட்டேன். சிரித்தார். 
 
‘தம்பி, பட்டிமன்றத்தில் பேசுகின்ற பழக்கம் எனக்கு இல்லை’ என்று சொன்னார். 
 
‘அதனால்தான் கேட்கிறேன், எங்கள் தமிழ்மன்றத்தில் பட்டிமன்றத்துக்கு நடுவராகத் தலைமை ஏற்றுப் பேசுங்கள்’ என்று கேட்டேன். ஏதோ ஒரு விதத்தில் என் வேண்டுகோள் அவர் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். என்னை மறுக்க முடியாத உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.
 
ஒரு நிமிடம் பார்த்தார். ‘சரி’ என்றார். 
‘ஐயா அவர்களே ஒரு தலைப்புத் தரவேண்டும்’ என்றேன். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. 
உடனே சொன்னார். “கோவலன் குறை உடையவனா? நிறை உடையவனா?” இதுதான் தம்பி பட்டிமன்றத்தின் தலைப்பு’ என்று சொன்னார்.
 
சிலப்பதிகாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமை, வாழ்ந்த அறிஞர்களுள் வேறு எவருக்கும் கிடையாது என்பது எனது திட்டவட்டமான கருத்து.
 
குறித்த நாளில் தமிழ் மன்றத்திற்கு வந்தார். அம்மன்றத்தின் தலைவர் என்ற முறையிலே,  இந்த எளியவனுக்கு இருக்கக்கூடிய ஒரு எளிய நுனிப்புல் மேய்ந்த தமிழ் அறிவிலே, சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் முன்னிறுத்தி வரவேற்புரை ஆற்றினேன். இருதரப்பிலும் தமிழ் அறிஞர்கள் வாதாடினார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம், அவர் தீர்ப்பு உரையாக நடுவர் உரை ஆற்றினார். 
 
‘புகார்க் காண்டத்திலே கோவலன் குறை உடையவன்; மதுரைக் காண்டத்திலே குறை நீங்கி, நிறை உடையவனாகத் திகழ்கிறான், இதுதான் தீர்ப்பு’ என்று அறிவித்தார்.
 
49 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இன்று இந்த விழாவில் அவருடைய பெருமைகளைப் பேசுகிறேன்.
 
ஐயா சிலம்புச் செல்வருடைய ‘எனது போராட்டம்’ என்ற வரலாற்று நூலில் ஒரேயொரு இடத்தில் குறிப்பிடுகிறார். 
 
வாழ்நாள் எல்லாம் சிலம்பின் சிறப்பை எடுத்து உரைத்து, தான் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் முதல் நாள் மாநாட்டை சிலப்பதிகார விழா மாநாடாக நடத்திய அப்பெருமகனார், தில்லையிலே இளங்கோ மன்றத்தில் முதன் முதலாக சிலப்பதிகாரத்தினுடைய சிறப்பைப் பற்றி உரையாற்றிய பெருமகனார், நாகர்கோவில் தமிழ்ச் சங்கத்திலே சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களால் “சிலம்புச் செல்வர்” என்ற விருது பெற்ற பெருமகனார், விழா நடைபெற்றது காவிரிப் பூம்பட்டினத்திலே, ‘எனக்கு விருப்பம் இல்லாத முறையில் என்னை ஒரு பட்டிமன்றப் பேச்சாளராக ஆக்கி, பட்டிமன்றத்தில் பேச வைத்தார்கள்’ என்று எனது போராட்டத்தில் எழுதி இருக்கிறார். 
 
அதைப் படிக்கின்றபோது நான் நினைத்தேன், ஒரு மாணவனான நான் போய் அழைத்தபோது, விரும்பி ஒரு தலைப்பைக் கொடுத்து, எங்கள் மத்தியிலே வந்து அந்தத் தலைப்புக்கு நடுவராக இருந்து பேசுகிறபொழுது மகிழ்ச்சியோடு செய்தவர், இந்தப் பட்டிமன்றத்திலே ஒரு பேச்சாளனாக ஆக்கிய வருத்தத்தைச் சொல்கிறார்.
 
இளமைப்பருவம்
 
எளிய குடும்பத்தில், வறிய குடும்பத்தில் அவர் பிறந்ததைக் குறிப்பிட்டார்கள். மூன்றாவது வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல், கட்டடங்களுக்கு செங்கல் சுமக்கின்ற சிற்றாளாகத் தொடங்கி, பாவு போடுகிற நெசவுத் தொழிலாளியாக வாழ்ந்து, அச்சுக் கோர்க்கின்ற தொழிலாளியாகத் திகழ்ந்து, வாழ்நாள் எல்லாம் ஒரு தியாகப் பெருவாழ்வு நடத்திய அந்தத் தமிழ்ச் செம்மல், ‘கிராமணி குல’ ஏடு நடத்துகிறார்.
 
1923 ஆம் ஆண்டு, காங்கிரசினுடைய உட்பிரிவாகிய சுயராஜ்யக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில்   முதன் முதலாக ஈடுபடுகிறார். அதன் பிறகு 1927 ஆம் வருடம் காங்கிரÞ கட்சியில் ஆண்டுச் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆகிறார். 1928 ஆம் ஆண்டு, சைமன் கமிசன் எதிர்ப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார். 1930 இல், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில், இதே திருவல்லிக்கேணி கடற்கரையிலே ஆந்திர கேசரி பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட போராட்டத்தில் பங்கு ஏற்கிறார்.
 
அவர் தொடக்க காலத்தில் வடசென்னையில் வாழ்ந்த போது, கள்ளுக்கடைகளை எதிர்க்கின்ற போராட்டத் தீரராகத் திகழ்ந்தபோது, அதனால் அவர் நிந்திக்கப்பட்ட வேளையில், முதன் முதலாக அவர் ஆற்றுகிற உரை, கள்ளுக்கடை மறியலை எதிர்க்க வேண்டும் என்று சமூக மக்கள் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தகிறார்கள், அந்தக் கூட்டத்திலே பேசப் போகிறார். 
 
‘கள்ளுக்கடை மறியல் கூடாது; கள் வேண்டும்.’ இது அவர்களுடைய கோரிக்கை. 
 
இவர் பேசச் செல்கிறார். ஒரு தீர்மானம் போட்டு, கள்ளுக்கடை மறியலைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்ற கூட்டத்தில் இவர் போய் உரையாற்றுகிறபொழுது, ‘கள் விற்பனை செய்கின்ற கிராமணிகள், அங்கே இருக்கின்ற தொழிலாளக் கிராமணிகளுக்கு எப்படி நீங்கள் அவர்களுக்குத் துன்பங்களை விளைவிக்கின்றீர்கள்? முதலில் அவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பதற்கு வாருங்கள்’ என்று பிரச்சினையை இப்படிக் கொண்டுபோனதன் காரணமாக, அன்றைக்குத் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்று, எனது போராட்டத்திலே குறிப்பிடுகின்றார் ம.பொ.சி.
 
 
தமிழன், தமிழ் முரசு, செங்கோல் ஆகிய இதழ்களுக்கு அவர் ஆசிரியராக இருக்கின்றபொது, தமிழ்முரசு ஏட்டுக்கு இராஜாஜியிடம் வாழ்த்துச் செய்தி கேட்கிறார். 
 
‘நீங்களே தமிழ் முரசு, வேறு ஒரு முரசு வேண்டுமா?’ என்று இரண்டே வரியிலே இராஜாஜி வாழ்த்து எழுதி அனுப்பினார்.
 
தான் வறுமையோடு போராடியதை, தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அவலங்களை, பட்டினி கிடக்க நேரிட்டதை, பசியோடு போராடியதை தன் குடும்பம் துன்பத்தில் சிக்கியதை அத்தனையும் தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்கிறார் ம.பொ.சி. ‘எனது போராட்டம்’ என்ற நூலிலே தெரிவிக்கின்றார்.
 
வெள்ளைக்காரன் ஆட்சியில் ஆறு முறை சிறை சென்றார். சுதந்திர இந்தியாவில் மூன்று முறை சிறை சென்றார். எல்லை காக்கும் போரிலே சிறை சென்றார். அவர் முதல் கட்டத்திலே ஆறு மாத காலம் கடுங்காவல் தண்டனை. சென்னை மத்திய சிறைக்குச் செல்கிறார். காங்கிரÞ கட்சியினுடைய காரிய தர்சியாக இருந்து, சென்னை மாவட்ட காங்கிரÞ கட்சியின் தலைவராக உயர்கிறார். 
 
செய்; அல்லது செத்து மடி என்று, மும்பை நகரிலே  1942 ஆம் ஆண்டு ஆகÞடு 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. 9 ஆம் தேதி காலையில் மகாத்மா காந்தி கைது செய்யப்படுகிறார். புரட்சி வெடிக்கிறது.
 
அந்த வேளையில், சென்னை மாகாணத்தில் ஆங்காங்கு ரகசியச் செய்திகளைக் கொண்டுபோய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தருகின்ற வேலையை பெருந் தலைவர் காமராஜர், ம.பொ.சி. அவர்களுக்கு தருகிறார்.  
 
1942 ஆகÞடு 13ஆம் தேதி ம.பொ.சி. கைது செய்யப் படுகிறார். வேலூர் சிறைக்குக் கொண்டு போகிறார்கள். பிரகாசம், காமராஜர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் அனைவருமே அங்கே இருக்கின்றார்கள். அவர்களுள் 30 பேர் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, 30 ஆம் தேதி வேறு இடத்திற்குக் கொண்டுபோகிறார்கள். சென்னைக்குக் கொண்டுவந்து, கிராண்ட் ட்ரங்க் ரயிலிலே ஏற்றுகிறார்கள். நாகபுரியில் இருந்து 98 மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற, மராட்டிய மாநிலத்தின் அமராவதி சிறையில் கொண்டு போய் அடைக்கின்றார்கள்.
 
அங்கே, வி.வி.கிரி, ஆந்திர கேசரி பிரகாசம், வைத்திய நாத அய்யர், தியாகப் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் இருக்கின்றார்கள். உடல் நலக் கேடு ஏற்பட்டது. குடல் புண் வருகிறது. நோய்வாய்ப் படுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படுகிறது. முதல் திருமணமாக திலோத்தமையைத் திருமணம் செய்து கொள்கிறார். ஐந்தே நாட்கள்தான். ஐந்தாம் நாளில் மிகத் துயரமான நிகழ்ச்சி, முதல் மனைவி திலோத்தமை மறைந்து விட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாமன் மகள் ராஜேÞவரியைத் திருமணம் செய்கிறார். அப்பொழுதும் வறுமை. பசியோடு போராட வேண்டிய நிலைமை. 
 
பெரும் செல்வந்தர் குடும்பத்தில், வசதியான குடும்பத்தில் வைர வைடூரியம் தங்கங்கள் குவிந்து இருக்கக்கூடிய அளவுக்குச் செல்வம் நிறைந்து இருக்கக்கூடிய ஐÞவரியக் குடும்பத்திலே பிறந்தவர் தான் அவருடைய துணைவியார் ராஜேÞவரி அவர்கள்.
 
ஆனால், அவருக்குரிய சொத்துகள் கைக்கு வராத சூழலிலே அவர் சட்டத்துறையை நாடுகிறார். உடன் பிறந்த தமையன், தமக்கை, மாமனார் செய்த வஞ்சகத்தின் காரணமாக, வீடு தவிர எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மனம் உடைந்து போனார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிப்புலன் இழந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடிய இந்தச் சூழலில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
 
இதற்கு மத்தியிலே அவர்களுக்குத் தலைக் குழந்தை பெண் குழந்தை பிறக்கிறது. அழகான குழந்தை. ‘சந்திர காந்தா’ என்று பெயர் சூட்டுகிறார்கள். பத்து மாதத்திலே அந்தக் குழந்தை இறந்து போயிற்று. இந்தத் துயரத்தை என் மனைவி தாங்கிக்கொள்ள முடியாமல், அவள் மேலும் நோய்வாய்ப்பட்டாள் என்கிறார். மகன் திருநாவுக்கரசு. கண்ணகி, மாதவி என இரண்டு புதல்வியர். 
 
இப்படிப்பட்ட வேதனைகளுக்கு மத்தியில் அவரும் நோயுடன் சிறையில் இருக்கிறார். தக்க சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பிரகாசம், காமராஜர் உள்ளிட்ட அனைவருமே துடிக்கிறார்கள். உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படும் என்று எல்லோரும் கவலைப் படுகிறார்கள். அதே வேளையில் மனைவிக்கு உடல்நலம் இல்லை; ராஜேÞவரி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று செய்தி வருகிறது. மனைவிக்கு மரணம் நேர்ந்துவிடும் என்ற நிலையிலே, ம.பொ.சிக்கு பரோல் கொடுப்பதற்கான கடிதத்தைத் தீட்டுவதற்கு, வி.வி.கிரிதான் உடன் இருந்து ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
 
மரணப் படுக்கையில் கிடக்கின்ற மனைவியைப் பார்ப்பதற்காக 15 நாள் பரோல் விடுதலை கிடைக்கிறது. அங்கே இருந்து வருவதற்குக்கூட போதிய பண வசதி இல்லாமல் துன்பப்படுகிறார். வரணாவுக்கு வந்து, அங்கிருந்து கிராண்ட் ட்ரங்க் இரயிலில் ஏறி சென்னைக்கு வந்தவரை, உடன் பிறந்த தம்பி ம.பொ.பரசுராமன்தான் அழைத்துப்போகிறார். வீட்டுக்கு வருகிறார். 
 
அம்மானைப் பாடல்கள் மூலமாக தமிழுக்கு உணர்வு ஊட்டிய அவரது அருமைத் தாயார் சிவகாமி அருகிலே அழைத்துக்கொண்டு போகிறார்கள். வீட்டில் உட்காருவதற்கு நாற்காலி இல்லை. பழம் பாயிலே உட்காருகிறார். அங்கே ஒரு பெண் எலும்பும் தோலுமாகப் படுத்துக் கிடக்கிறார். 
 
இவர் தாயிடம் கேட்கிறார், தன் மனைவி ராஜி எங்கே? என்று. 
 
அதைக்கேட்டு பதறிப்போன தாய், ‘இதுதானப்பா ராஜி; அவள்தான் இங்கு படுத்து இருக்கிறாள்’ என்று கூறுகிறார். 
 
தன் மனைவியை அவருக்கு அடையாளம் தெரிய வில்லை. அந்தச் சகோதரிக்குக் கணவனை அடையாளம் தெரியவில்லை. காரணம், அவரும் எலும்பும் தோலுமாக மிகவும் மோசமாக வந்து இருக்கிறார். 
 
எப்படிப்பட்ட தியாக வாழ்க்கை இது!
 
பரோல் மேலும் பத்து நாள்கள் நீட்டிக்கப்படுகிறது. அவரை, தமிழ்நாட்டிலே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று, பிரகாசமும், காமராஜரும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு போகிறார்கள். அங்கிருந்து, தஞ்சை இளங்குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப் படுகிறார். அங்கும் மிகுந்த நோய்வாய்பட்ட நிலையில், ஏழு எட்டு கம்பளிகளைக் கொண்டு வந்து போர்த்தி, உடன் மற்ற தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அநேகமாக உயிர் முடிந்துவிடும் என்கிற அளவுக்குத் துன்பப்படுகிறார்.
 
1942 ஆகÞடு 13 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ம.பொ.சி. பதினெட்டு மாதம் கழித்து உயிருக்கு ஆபத்தான நிலையிலே இருக்கின்றபோது, இங்கே இருக்கக்கூடிய காங்கிரÞ நண்பர்களுக்கு ஒரு தகவல் சொல்லுங்கள் என்று, சிறையில் இருப்பவர்கள் எல்லாம், சிறைக் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்கள்.  அவர், ஆமோதித்துவிட்டு தகவல் சொல்லாததால், தஞ்சையில் யாருமே அவரைப் பார்க்க வரவில்லை.
 
நலிந்த நிலையில் இருக்கிறார் ம.பொ.சி. நடக்க முடியாது. Þட்ரெசரிலே வைத்துத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். அப்போது, ‘ஏதோ பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள்’ என்று அருகில் இருந்தவர்கள் கூறியது அவர் காதிலே விழுகிறது. ஒரு காங்கிரÞ நண்பர் அதைத் தெரிந்துகொண்டுவந்து உதவுகிறார். அன்பின்னர் சென்னை வந்தபிறகு, ராஜாஜி அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை தரப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் இவ்வளவு துயரங்களையும் அனுபவித்துப் போராடினார் சிலம்புச் செல்வர். 
 
தமிழ் உணர்வுக்காக தமிழ் இலக்கியங்களைப் படித்து தமிழுக்குத் தொண்டு செய்து வந்த சிலம்புச் செல்வர், 1946 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி, காங்கிரசுக் கட்சியில் இருந்துகொண்டே தமிழரசுக் கழகத்தைத் தொடங்குகிறார். ‘சுதந்திர சோசலிச சுயநிர்ணய தமிழ் குடியரசு பிரகடனம்’ செய்கிறார். 1954 இல் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார்.
 
நான் முதன் முதலாக புறநானூறைப் படித்தேன்; தமிழனுடைய தன்மான உணர்வை என் எண்ணத்திலே ஊட்டியது. பின்னர் சிலப்பதிகாரத்தைப் படித்தேன்; அது தமிழர்களின் பெருமையை என் உள்ளத்துக்கு வழங்கியது என்கிறார்.
 
தொடக்கத்தில் அவர் மனம் கவர்ந்த பாடல் வரிகளைச் சொன்னேன். 
நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்,
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு 
 
என்ற இந்த வரிகள், அவர் உள்ளத்துக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக,  வேங்கடம் முதல் குமரி வரை ஒரு அங்குல மண்ணைக்கூட நாம் இழந்துவிடக்கூடாது என்று, வடக்கு எல்லைப்போரை முன்னின்று நடத்தியதன் விளைவாகவே, திருமுருகன் குடிகொண்டு இருக்கின்ற திருத்தணி கிடைத்தது; நமக்கு உரிமையுள்ள திருப்பதி பறிபோயிற்று. அவர் இல்லையேல், திருத்தணியும் இல்லை.
 
அடுத்து, தெற்கு எல்லையிலும், கன்னியாகுமரியிலும் போய்ப் போராடினார். அங்கே மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிப் போராடுகிற களத்தில், மண்ணை மீட்கப் போராடியவர், இந்த இனத்துக்கு உணர்வு ஊட்டிய பெருமகன் ம.பொ.சி., 1946 ஜூன் மாதம் “இலங்கைத் தீவில் தமிழர்கள் சிங்களவர்களிடம சீரழிகிறார்களே, இது தமிழ் இனத்துக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்’ என்று, அவர் பத்திரிகையில் எழுதுகிறார்.
 
சிலம்புச் செல்வரின் படைப்புகள் 
 
140 நூல்கள் எழுதி இருக்கிறார் ம.பொ.சி. 
 
முதல் நூல் 1944 இல் ‘கப்பலோட்டிய தமிழன்’. கடைசி நூல், ‘எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு’, 1995 ஆம் ஆண்டு எழுதியது. 
 
பதினான்கு நூல்கள் சிலப்பதிகாரத்தைப் பற்றி, பதின்மூன்று நூல்கள் திருக்குறளைப் பற்றி, வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி நான்கு நூல்கள், பாரதியைப் பற்றி எழுதுகிறார். சாகித்ய அகாதமி பரிசு பெற்று வந்ததே, அந்த ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதினார். ஒவ்வொரு பாடலிலும் நுணுக்கமான பொருளைத் தந்து, எண்ணற்ற நூல்களை வெளியிட்டு இருக்கின்றார். 
 
இந்த சிலப்பதிகார முதலாம் ஆண்டுத் தொடக்க விழாவில் நீங்கள் என்னைப் பேசக் கேட்டுக் கொண்டதற்காகப் பெருமைப்படுகிறேன். என் வாழ்வில் பெரும் பேறு எனக்கு. இம்மாதிரியான விழாக்களில் நான் இம்மி அளவும் அரசியலுக்குள் செல்ல மாட்டேன்.  அதனால்தான், பெயரையோ இயக்கங்களையோ குறிப்பிடாமல் சொல்கிறேன். வாழ்க்கை கடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விநாடியும் நம்மை விட்டுக் கடந்துகொண்டே இருக்கும். இந்த நாள் திரும்ப வராது. வாழ்வில் ஒரு நாள் கழிந்துபோகும். அப்படித்தான் நான் பிரச்சினைகளைப் பார்க்கிறேன்; அப்படித்தான் கருத்துகளை வைக்கிறேன்.
 
மனிதகுலத்துக்கே மறை திருக்குறள். அதற்கு நிகரான நூல் எந்த மொழியிலும் எவரும் படைத்தது இல்லை.
 
சிலப்பதிகாரம்தான் தமிழரின் காவியம். சிலம்புதான் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். உயிர்க் காவியம். தமிழர்களுடைய மானம், வீரம், கலாச்சாரம், பண்பு அனைத்தும் உள்ளது சிலப்பதிகாரம்தான்.
 
புகழேந்தி புலவர் பெயரால் இருக்கின்ற கோவலன் என்ற கதையில், எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. ‘மாண்புறு மாதவி’ நூலை வெளியிட்டு இருக்கின்றீர்கள். அந்த மாதவியை, அவள் வரைவின் மகளிர்  வகையிலே பிறந்தவர் என்று இழிவுபடுத்துகின்ற விதத்திலே அப்பொழுது எழுதப்பட்டது. அதை உடைத்துத் தகர்த்து எறிந்தவர் ம.பொ.சி.
 
சங்கரதாÞ சுவாமிகள் நடத்திய நாடகம் கோவலன் கண்ணகி. அதிலும், ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகள். ஏன், ‘கோவலனும் கண்ணகியும் திருமணத்திற்கு முன்னதாகவே களவு வழியிலே கலந்து கருவுற்று, அதன்பிறகு திருமணம் நடந்ததாக, உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த பஞ்சாபகேச அய்யர், எழுதியதை மெட்ராÞ மெயில் ஏடு வெளியிட்டது. கடுமையாகச் சாடினார் ம.பொ.சி. 
 
கா.நா.சு. பெரிய எழுத்தாளர். மணிக்கொடி வட்டாரத்திலே புகழ் பெற்றவர். சிலம்பில் உள்ள பாத்திரங்களைப்   பற்றிக் குறிப்பிடுகிற பொழுது, கொச்சையாகவே ஒருசில செய்திகளைச் சொல்கிறார். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடைய பிள்ளைகள் மூத்தவன் செங்குட்டுவன், இளையவன் இளங்கோ. அரசு உரிமை இவனுக்கு என்றால் வேண்டாம் என்று நிமித்திகன் சொன்னதாகத்தான்  சிலம்பிலே செய்தி இருக்கிறது. குறத்தி ஒருவர் என்று சொல்வதாக கா.நா.சு எழுதுகிறார்.
 
ஏன் தெ.பொ.மீ. எழுதுகிறார், களவு வழியிலே திருமணத்திற்கு முன்னரே உறவு ஏற்பட்டு விட்டது; அதற்குப் பிறகுதான் திருமணம் என்பதைப் போல, நான் மதிக்கின்ற தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதுகிறார். நாவலர் சோமசுந்தர பாரதியார் அதை ஆதரிக்கிறார். அந்த இருவருக்கும் மறுப்புத் தந்து விளக்கம் தருகிறார் ம.பொ.சி.
 
கோவலனும் கண்ணகியும் களவு வழியிலே திருமணம் தவறல்ல. களவியல், கற்பியல் இருக்கிறது. தவறல்ல. ஆனால் உண்மை அது அல்ல. சிலப்பதிகாரத்தில் அப்படிச் சொல்லப்படவில்லை. இருவருக்கும் இடையில் காதல் வாழ்வு சரியாக இல்லை. கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையில் இன்ப வாழ்வு இல்லை என்று சிலர் கூறுவர். அதனாலே வடு நீங்கிச் சிறப்பின் தன் மனையகம் மறந்து சென்றான் என்பதையும் மறுக்கிறார். அதற்கு அழகான வெண்பாவை எடுத்துச் சொல்கிறார்.
 
வள்ளுவப் பெருந்தகை எப்படி இன்பத்துப் பாலில் நுணுக்கமான செய்திகளைச் சொல்வாரோ அதைப்போல இளங்கோவின் மனையறம் படுத்த காதை. அடுத்து வரக் கூடிய இடத்தில் அவர்கள் எப்படி ஒன்றிப் போனார்கள்? அரவங்கள் ஒன்றுவதைப்போல் ஒன்றிப் போனார்கள் என்று எழுதினார். ஆக, இன்ப வாழ்வு நடத்தினார்கள்.
 
முத்தமிழ்க் காப்பியம், முதன்மைக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என அத்தனைக்கும் விளக்கம் தருவது மட்டும் அல்ல, சிலப்பதிகார ஆய்வு, சிலப்பதிகார திறனாய்வு, சிலம்பு பற்றி அனைத்தும் எழுதிவிட்டு, முழுமையாக சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை என்ற நூலைப் படைத்துத் தந்து இருக்கின்றார். அரங்கேற்று காதைக்கு மட்டும் அவர் விளக்கம் எழுதவில்லை. 
 
பூ.சா.கோ. கல்லூரியிலே தமிழ்த்துறைத் தலைராக இருந்து தமிழுக்குத் தொண்டு ஆற்றிய ம.ரா.போ. குருசாமி அவர்கள். அரங்கேற்று காதைக்குரிய விளக்கத்தை எழுதினார்கள். சிலப்பதிகார பதிகத்துக்கும், உரைநடையிட்ட செய்யுளுக்கும், ம.பொ.சி.க்கு ஐயப்பாடு இருந்ததனால், அதில் மட்டும் அவர் விளக்கம் எழுதவில்லை. 
 
மொத்தம் 15 வெண்பாக்கக்கள். 30 காதைகள். இந்த 30 காதைகளில், 15 வெண்பாக்கள் இளங்கோ எழுதி இருக்கிறார். வழக்காடு மன்றக் காதைதான் இருப்பதிலேயே குறைந்த வரிகளைக் கொண்ட காதை. 
 
புகார்க் காண்டம் முன்னுரை. வஞ்சிக் காண்டம் முடிவுரை. மதுரைக் காண்டம்தான் கருவுரை. 
 
வழக்காடு காதைக்கு மட்டும் மூன்று வெண்பாக்கள். பத்துக் காதைகளுக்கு ஒவ்வொரு வெண்பா. ஒரேயொரு காதைக்கு இரண்டு வெண்பாக்கள். இந்த மூன்றையும் சேர்த்தால் பதினைந்து வெண்பாக்கள்.
 
வாயிலோயே, வாயிலோயே 
அறிவுஅறை போகிய பொறியறு நெஞ்சத்து,
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
என்று சீறி வருகிறாளே கண்ணகி வழக்குரை காதையிலே, அந்த வெண்பாவைச் சொல்கிறார். 
 
காவி உகுநீரும், கையில் தனிச்சிலம்பும்
ஆவிகுடி போன அவ்வடிவும்
கண்டஞ்சிக் கூடலான் கூடாயினான்
கருங்குழலைக் கண்டு கூடலான் கூடுஆயினான். கையிலே ஒற்றைச் சிலம்பு, ஆவி குடி போன வடிவம், காவியுகிநீரும் கையில் தனிச்சிலம்பும். 
கையிலே சிலம்போடு உள்ளே வருகிறாள் கண்ணகி. அதைப் பார்த்த மாத்திரத்திலே, நொடிப்பொழுதிலே பாண்டியனுக்குப் புரிந்துவிட்டது. அவன் உயிர் அப்பொழுதே போய்விட்டது.
‘ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார், அண்ணன் நெடுமாறன் அவர்கள் சொன்னார்கள்.
 
ஒரேயொரு பாடலில்தான் மூன்று மன்னர்கள் ஒற்றுமையாக இருந்ததாக நான் படித்து இருக்கிறேன். சேரனும், சோழனும், பாண்டியனும் ஒன்றாக இருந்தது குறித்து ஒரு பாடல்தான் இருக்கிறது சங்க இலக்கியத்தில். 
 
இது தமிழர்கள் இயல்பு. அதிகமான தன்மான உணர்ச்சி, தன்முனைப்பு. அவர்கள் என்றைக்கும் ஒன்றாக இருந்ததே கிடையாது. நான் வரலாறைச் சொல்கிறேன், எதையும் குறைத்துச் சொல்லவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை மற்றவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்.
 
முடியுடை மூவேந்தர்களையும் சமமாகவே வைக்கிறார் இளங்கோ. சமயங்களையும் சமமாகவே வைக்கிறார். அவர் சமணரா? சமண ஈடுபாடு உடையவரா? அன்றைக்கு இருந்த சமய நம்பிக்கைகள் அனைத்தையும் சமமாகவே மதிக்கிறார். வழிபடுகிற கோயில்களை வரிசைப்படுத்துகிறார்.
 
இளங்கோ வஞ்சி மூதூரில் பிறந்தவர். சேரன் நாட்டில் பிறந்தவர். ஆனால், மூன்று மன்னர்கள் வாழ்ந்த சோழவள நாட்டை, பாண்டிய வளநாட்டை, சேர வளநாட்டை ஒவ்வொரு விதத்திலும் உயர்த்தி, ஒன்றுக்கொன்று முன்பின் இல்லாமல் சொல்கிறார்.
 
சிலவேளைகளில் ஒருசில பத்திரிகைகளைப் பார்த்து, ‘என் பெயர் எங்கய்யா இருக்கு? சரியாகப் போட வில்லையே’ என்ற மனப்பான்மை அரசியல் கட்சிகளில் அனைவருக்கும் வந்து விடுகிறது. தமிழர்கள் இப்படியெல்லாம் நினைப்பார்கள் என்று அப்பொழுதே இளங்கோவுக்குத் தெரிந்து இருக்கிறது. (சிரிப்பு) 
 
நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள்: ஒரு வரிசையில் புலி, வில், கயல் என்பார்; இன்னொரு வரிசையில் வில், புலி, கயல் என்று வருவார்; இன்னொரு வரிசையில் கயல், வில், புலி என்று வருவார். ஆக, ஒருவருக்கு ஒருவர் ஏற்றம் அதிகமாகிவிடாது கொண்டு வருகிறார். இந்த மூன்று நாடுகளுடைய மன்னர்களின் பெருமையைச் சொல்கிறார்.
 
அதாவது, அம்மானை வரியில் சோழனின் பெருமை பேசுகிற இளங்கோ, கந்துக வரியில் பாண்டியன் பெருமை பேசுகிற இளங்கோ, ஊசல் வரியில் சேரன் பெருமை பேசுகிற இளங்கோ சொல்லுகிறார், அங்கே காவிரிப்பூம்பட்டினத்திலே, சோழவளநாட்டிலே அந்தப் பெண்கள் கரும்பு உலக்கையைப் பயன்படுத்தினார்கள்; பாண்டிய நாட்டில் பவள உலக்கையைப் பயன் படுத்தினார்கள்; சேரன் நாட்டில் யானைக் கொம்பை உலக்கையாகப் பயன்படுத்தினார்கள் என்று, முத்தமிழ் காப்பியம் என்பதற்குச் சொல்கிறார். 
 
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரத்தைக் கூறுவற்கு என்ன காரணம்? 
 
இசைப்பாடல்கள் இருக்கின்றன; கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, இவையெல்லாம் சந்தத்தோடு உள்ள இசைப் பாடல்கள்.
 
ஏழு இசை என்பது என்ன?
 
ச ரி க ம ப த நி அழகாகச் சொல்வார். அது தமிழ் இசை. அதுதான் மூலம். அந்த தமிழ் இசை பற்றி சிலப்பதி காரத்திலே எத்தனையோ செய்திகளைச் சொல்லலாம். மதுரை மூதூரின் இயற்கையின் செழிப்பை எல்லாம் வருணிக்கின்றாரே இளங்கோ! 
 
கனைசுடர் கால்சீயர் முன்
 
கோவலனும், கண்ணகியும் புகாரைவிட்டு வெளியேறுகின்றனர்
 
மாநாய்கனும், மாசாத்துவனும் பெரும் செல்வந்தர்கள். அலைகடல் தாண்டி பல நாடுகளுக்கு வணிகம் செய்யக்கூடிய அளவுக்குச் செல்வந்தர்கள். மாநாய்கன் மகள் கண்ணகி. மாசாத்துவன் மகன் கோவலன். அவர்கள் செல்வச் செழிப்பைப் பற்றி கவுந்தி அடிகள் சொல்லுகிறார். இந்தக் கோவலனும் கண்ணகியும் மதுரை மூதூருக்குள்ளே வந்தது தெரிந்தால் இங்கே உள்ள பெரும் செல்வந்தர்களின் மாளிகைக் கதவுகள் திறந்து கொள்ளும். 
 
‘ஆ! மாநாய்கன் மகளா வந்திருக்கிறாள்? மாசாத்துவன் மகனா வந்திருக்கிறான்? காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தா வந்திருக்கிறார்கள்? என்று அவர்களே அழைத்துச் சென்று சிறப்புச் செய்வார்கள், அத்தகைய பெரும் சிறப்புக்குரியவர்கள்.’ யாருக்கும் தெரியாமல் மதுரைக்கு வருகிறார்கள்; பெற்றோருக்குத் தெரியாமல் வருகிறார்கள்.
 
குலம் தருவான் பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு
 
என்று சொல்லுகிறபோது,  ‘சிலம்பு உள கொண்’ என்கிறாள். மூன்றே சொற்கள்தாம் கண்ணகி பேசுகிறாள். சிலம்பு இருக்கிறது.
 
ஏன், தேவந்தி கேட்டாளே? சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கி வந்தால், காமவேள் கோட்டத்துக்குப் போனால், மன்மதன் கோட்டத்துக்குப் போனால், உன் கணவன் திரும்ப வருவான என்கிற போது, ‘பீடு அன்று; அது பெருமை தராது’ என்று சொல்கிறாள், எப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்ற கண்ணகி; மேகலை இல்லை; கூந்தலில் நறுநெய் பூசப்படவில்லை; கண்ணீரோடு வாழக் கூடியவள்; நான் கானல் வரிக்குள்ளே செல்ல விரும்ப வில்லை. ஆனால், கனக விசயர் முடித்தலை நெரித்தது ‘கானற் பாணி.’
 
காப்பியத்தின் திருப்பமே, காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரைதான். தான் ஒன்றின் மேல் மனம் வைத்து, மாயப்பொய் பல கூட்டி மாதவி பாடினாள் என்று கோவலன் நினைக்கிறான். அவளுடையக் குடும்பப் பின்னணி அப்படி அவனை நினைக்க வைத்து விட்டது.
 
அவன் பாடிய பொழுது, கங்கையைச் சேர்ந்தாலும், குமரியைச் சேர்ந்தாலும் காவிரி பொறாமை கொள்ள மாட்டாள் என்று பாடுகிறபோது, வேறு என்ன நோக்கத்திலும் பாடவில்லை;
 
ஆனால், மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் சலம்புணர் கொள்கைச் சலதியோடு என்று பின்னாலே கோபித்துக்கொண்டு உடன் செல்லாமல், அதே கூலத்தெரு வழியாகவே வருகிறான்.
 
மாலை வராராயினும் காலை வருவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள். அவள் கொடுக்கின்ற கடிதத்தை அவன் பெற்றுக் கொள்ளவே இல்லை. வசந்தமாலை கொண்டு வந்த கடிதத்தைக் கோவலன் பெற்றுக் கொள்ளவே இல்லை.
 
மனம் உடைந்து கண்ணகியிடம் வருகிறான். அப்போது கண்ணகி, சிலம்பு இருக்கிறது, வாழலாம் என்கிறாள். நம்பிக்கை ஊட்டுகிறாள்.
 
தவறு செய்து விட்டான்; அது வினை விளை காலம் ஆதலின் என்கிறார். அதற்கு வினைதான்  காரணம் என்கிறார். அப்படி மனம் உடைந்து வந்தபோது, கண்ணகி அவனைப் புண்படுத்தவில்லை. ஒன்றும் சொல்லவில்லை. என் காற்சிலம்பு இருக்கிறது. போவோம் என்கிறாள். 
 
‘மதுரைக்குப் போகிற பாதை எது? எந்த வழியாகப் போகலாம்?’
கவுந்தி அடிகள் சொல்லுகிறார்.
இந்தப் பாதையிலே போகாதீர்கள். இவ்வழியில் பலா மரங்களில் இருந்து பலாப்பழங்கள் தொங்கிக் கொண்டு இருக்கும். காற்று பலமாக வீசும்போது, பலாக்கனிகள் வந்து மோதும்போது, அதன் கூரிய முட்கள் குத்திக் கிழிக்கும்; இந்த இளந்தளிர் கண்ணகிக்கு அது துன்பத்தை விளைவிக்கும். எனவே, கவனமாகச் செல்லுங்கள். அடுத்து வள்ளிக்கிழங்குகள் விளைகின்ற குழிகள் இருக்கும். கால் இடறி விடக்கூடும். கவனமாகப் போங்கள். தமிழகத்தின் செழிப்பு, காவிரி பாய்ந்த செழிப்பு. 
 
மருங்கு வண்டு சிரந் தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்திக்
கருங்கயற் கண் விழித் தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
என்றானே, அப்படிப்பட்ட பொன்னி நதி, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நமக்கு உரிமை உள்ள நதி. 
 
அடுத்துச் சொல்லுகிறார்: வரப்புகளின் வழியாகச் செல்லுகிறபோது, ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு வாளை மீன்கள் தாவிச் செல்லும். அதைப் பார்த்துக் கண்ணகி பயந்து விடக் கூடும். இப்படி எல்லாம் எடுத்துக்கூறுகிறார். 
 
மதுரையை நெருங்குகிறார்கள். இங்கே வராதீர்கள் என்று மீனக் கொடி அசைகிறதாம். இங்கே துன்பம் காத்திருக்கிறது, வராதீர்கள் என்று சொல்வதுபோல அசைகிறதாம். தீக்கனவு மூன்று முறை வருகிறது. அதைத் தேவந்தியிடம் சொல்லுகிறாள். அதேபோல, கோப்பெருந்தேவியும் கனவு காண்கிறாள். என்ன அற்புதமான காவியம்!
 
ஆயர்பாடியில் மாதரி வீட்டில் அடைக்கலம் ஆகின்றார்கள். சமையல் செய்வதற்கு, கிழங்குகள், கனிகள், மாம்பழங்கள் கொண்டு வந்து தருகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணகி சமைக்கிறாள். 
 
நமது கிராமத்து வீடுகளில், பனை ஓலைகளில் பின்னப்பட்ட சின்னத் தடுக்குகள் இருக்கும். அதைப் போட்டுத்தான் உட்காருவோம். நான் ஒரு பட்டிக் காட்டில் பிறந்து, இன்றைக்கும் அந்தப் பட்டிக்காட்டு வாழ்க்கையையே உலகத்தின் உயர்ந்த வாழ்க்கையாகக் கருதுகிறவன். நான் ஒரு விவசாயி. (கைதட்டல்)
 
குமரி வாழையின் குறுந்தகம் விரித்துத் தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி விடுகிறாள் அந்தத் தலைவாழை இலையை. அமுதம் உண்க அடிகள் என்கிறாள். 
 
அப்போது கோவலன் வருந்துகிறான். 
 
மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே என்று முதலில் பாராட்டியவன். உலமாக் கட்டுரை பல சொல்லிப் பாராட்டியவன்; அலையிடை பிறவா அமிழ்தே என்கோ; மலையிடைப் பிறவா மணியே என்கோ; யாழிடைப் பிறவா இசையே என்கோ என்றெல்லாம் பாராட்டிய கோவலன், இப்படி நீ வருந்தும் படி நடந்து கொண்டேனே என்று சொன்னபோது, குன்றம் போன்ற செல்வத்தைத் தொலைத்து விட்டேனே என்று வருந்தியபோது, கடிந்து சொல்லாத, குற்றம் சொல்லாத கண்ணகி, இப்பொழுது சொல்லுகிறாள். 
 
நான் வருந்தும்படி நடந்து கொண்டதற்காக நீங்கள் சொல்லாதீர்கள். என் மாமனும், மாமியும் வருந்தும்படி நீங்கள் நடந்து கொண்டீர்கள். உங்கள் தந்தையும், தாயும் கவலைப்படும்படி நடந்து கொண்டீர்கள் என்கிறாள். அவர்தம் உள்ளகம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்கிறாள்.தன் தாயும் தந்தையும் வருந்தும்படியாக நடந்து கொண்டீர்கள் என்று சொல்லவில்லை. இதுதான் குடும்ப வாழ்க்கை என்பது. 
 
அவன் மனதில் ஏற்பட்ட ஐயம் எப்போது நீங்குகிறது? மீண்டும் மாடலன் வருகிறான். மாதவியின் மடலைக் கொண்டு வருகிறான். இந்த மடலில் காதல் இல்லை. மாதவியின் இன்ப உணர்ச்சியின் ஏக்கம் இல்லை. 
 
அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொழல் வேண்டும் 
குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும். 
 
உயர்ந்த குலத்தில் பிறந்த உங்கள் துணைவி கண்ணகியோடு போவதற்கு, நான் காரணம் அல்ல. நான் தவறு செய்யவில்லை. உங்கள் காலடிகளில் விழுகிறேன் என்கிறாள். இதே கடிதத்தைக் கொண்டு போய், என் தாய் தந்தையரிடத்தில் கொடுத்து விடு, கண்ணகியின் தாய் தந்தையரிடத்தில் கொடுத்து விடு என்கிறான். அவன் உள்ளத்தில் இருந்த சந்தேகம் நீங்கியது. 
 
கடக்களிறு அடக்கிய கருணை மறவன் அல்லவா? செல்வத்தை வாரி வழங்கியவன் அல்லவா? இப்பொழுது குற்றம் நீங்கியவனாக வருகிறான். 
 
இதுதான் சிலம்புச் செல்வருடைய படைப்பு. 
 
மதுரைக்குள் வருகிறான். அங்கேயும், வரைவின் மகளிர் வாழுகின்ற தெருக்கள் இருக்கின்றன. அழகிய மாதர்கள் நடமாடுகின்றனர். இப்போது, கோவலன் உள்ளத்தில் காமச் சிந்தனை இல்லை. அவன் கண்கள், எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை.  குறைகள் நீங்கியவனாகி விட்டான். சிலம்பை எடுத்துக் கொண்டு போகிறான். கொலை செய்யப்படுகிறான். 
 
அந்தத் தெருவில் இருந்த ஒரு பெண்மணி ஓடிவந்து, பதறிப் பதறிச் சொல்லுகிறபோது, கிளர்ந்து எழுகிறாள் கண்ணகி. காய்கதிர்ச் செல்வனே, என் கணவன் கள்வனா? என்று கேட்கின்றாள்.  
 
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? 
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? 
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில், 
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? 
 
என்று கேட்கிறாள். மதுராபுரித் தெய்வம் வந்து மறிக்கிறது.
 
மறை நா ஓசை அல்லாது மணி நா ஓசை கேட்காத மதுரை என்கிறாள். இதில் எவ்வளவு பொருள் இருக்கிறது தெரியுமா? உங்கள் ஊரைப் போன்றது அல்ல இந்த மதுரை. உங்கள் ஊரில், ஆராய்ச்சி மணியின் ஓசை கேட்டு இருக்கும். ஆனால், இந்த மதுரையில் மறை நா ஓசை அல்லாது, மணி நா ஓசை கேட்டது இல்லை என்று சொல்லித் தடுக்கப் பார்க்கிறாள். 
 
பாண்டியன் அவைக்குச் சென்றாள். வ.சுபா. மாணிக்கனார் ஒரு அழகான விளக்கத்தைத் தருகிறார்.  கையிலே ஒரு சிலம்பைக் கொண்டு போனாளே கண்ணகி, அந்தச் சிலம்பைத்தான் உடைத்தாளா?  கோப்பெருந்தேவியிடம் ஒரு சிலம்பு இருக்கின்றது; மற்றொன்று காணாமற் போய்விட்டது. அதைத் திருடிக் கொண்டு போய்விட்டான் என்று அதைக் கொண்டு வந்து தருகிறான் கொடியவன். 
 
இப்பொழுது எந்தச் சிலம்பைக் கண்ணகி உடைக்கிறாள்?
 
அவன் திருடிக் கொண்டு போனதாகக் கொண்டு வந்த சிலம்பு. இவள் கையில் ஒரு சிலம்பு. ஒருவேளை கோவலன், கண்ணகியின் ஒரு சிலம்பை எங்கோ விற்றுவிட்டு, ஏதோ செலவழித்து விட்டு, முன்பு எல்லாச் செல்வத்தையும் தொலைத்தவன்தானே, அப்படிச் செலவழித்து விட்டு, இந்தச் சிலம்பு போய்விட்டதே என்று கருதி, ஒருவேளை அவன், அரசியின் காற்சிலம்பை எடுத்து இருந்தால்? 
 
எனவேதான், இப்படி ஒரு ஐயத்துக்கே இடம் இல்லாத வகையில் இளங்கோ வார்த்தைகளைத் தருகிறார். கண்ணகி தன் கையில் கொண்டு போன சிலம்பை உடைக்கவில்லை. 
 
திருடப்பட்டதாக் கொண்டு வந்து தரப்பட்டதே, அந்தச் சிலம்பைத் தருக என்கிறான் மன்னவன். அதைத்தான் கண்ணகி உடைக்கிறாள். மன்னவன் வாயில் பட்டுத் தெறித்தது மாணிக்கப் பரல்கள். 
 
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் 
என்று சொல்லிக் கீழே விழுந்து உயிர் துறக்கிறான். 
 
அப்படி அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களை இந்தத் தீ தாக்க வேண்டாம். பசு, பெண்டிர், மறையோர், குழந்தைகளை இந்த அனல் தாக்காமல் தவிர்க்கட்டும் என்கிறாள் கண்ணகி. 
 
இப்பொழுது சிலர், ஆணாதிக்கம், பெண் ஆதிக்கம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, கண்ணகியையே பழிக்கிறார்கள். ம.பொ.சி.யை விட, வ.சுப. மாணிக் கனாரை விட, இந்த இனத்தைப் பற்றி, தமிழர்களைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி அறிந்தவர்களா நாம்?  வேறு எதையெல்லாமோ பேசலாம்; உலகத்தில் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எதுவும் உண்டா? குடிமக்களுள் ஒருத்தியாகிய ஒரு பெண், அரசன் அவைக்குச் சென்று நீதி கேட்டுப் போராடிய வரலாறு உண்டா?  தன் கணவன் மீது சாட்டப்பட்ட குற்றம் தவறானது என்று நிரூபித்தாளே? 
 
இதன்பிறகுதான் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. வஞ்சிக் காண்டத்தில் சொல்லுகிறான் மாடல மறையோன். 
 
வலம்படு தானை மன்னவனை, சிலம்பில் வென்ற சேயிழை. ஆம்; மன்னவனைத் தன் சிலம்பால் வென்று விட்டாள் கண்ணகி என்று சொல்லுகிறான். 
 
மதுரைக் கூல வாணிகன் சாத்தனார், செங்குட்டுவனிடம் சொல்லுகிறார். நடந்ததைச் சொல்லுகிறார். 
 
தவறை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் கீழே சாய்ந்து விட்டான். பக்கத்தில் அமர்ந்து இருந்த கோப்பெருந்தேவி, அவன் மயக்கம் அடைந்து விழுந்தான் என்று கருதி, பாதங்களைப் பற்றுகிறாள். என்ன அழகாக எழுதி இருக்கிறார் இளங்கோ!
 
அதன்பிறகு, மன்னவன் செல்லுழி, யானும் செல்க என்று, தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடுதல் போல. பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள். கோப்பெருந்தேவி, தன் உயிர் கொண்டு, அவன் உயிரைத் தேடிச் செல்லுகிறாள்.
 
வடதிசை சென்று, குயில் ஆலுவத்தில் கனக, விசயரை வீழ்த்தி, தமிழரின் மானத்தை, வீரத்தை வடக்கே நிலைநாட்டிய செங்குட்டுவன், இதைக் கேட்டு மனம் உடைகிறான். உடனே சொல்லுகிறான். அந்த மன்னவனுக்கு ஏற்பட்ட முடிவை எண்ணி, இந்த மன்னவன் வருந்துகிறான். துன்பத்தில் துடிக்கிறான். என்ன சொல்லுகிறான் தெரியுமா? 
 
பாண்டிய மன்னன் தவறு செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒரு தவறு நேர்ந்தது, நீதி பிழைத்தது என்ற செய்தி, எம் போன்ற மன்னவர் செவிகளுக்குப் போய்ச் சேருவதற்கு உள்ளாகவே தன் உயிரைக் கொடுத்து விட்டான் என்கிறான். வல்வினை வளைத்த கோலை, மன்னவன் செல்லுயிர் செல்கையில் நிமிர்த்திச் செங்கோல் ஆக்கி விட்டது என்று செங்குட்டுவன் சொல்லுகிறான். 
 
மழை வளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழையுயிர் எய்தின், பெரும்பேர் அச்சம்;
குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல் 
 
இம்மாதிரியான  மன்னர் குடிப்பிறப்பு மிகவும் துன்பமானது. அரச பதவி என்பது, முட்களால் சூட்டப்பட்டது என்று சொல்லுகிறான். 
 
என்ன தோழர்களே, இதையெல்லாம் கேட்பது ஒரு கனவாக இருக்கிறதா? இப்படி ஒரு அரசா? இப்படி ஒரு காலம் இருந்ததா? மன்னர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா?  இன்று போல குடியாட்சியில் அல்ல, ஜனநாயகக் காலத்தில் அல்ல, மன்னர் ஆட்சியில். அப்படி அறம் சார்ந்த அரசோச்சியவர்கள் தமிழ் மன்னர்கள். 
 
சேரமான் மனைவி வேண்மாள் பக்கத்தில் இருக்கிறாள். செங்குட்டுவன் கேட்கிறான்.  
 
கோப்பெருந்தேவி அந்த இடத்திலேயே உயிர் துறந்தாள். கண்ணகிப் பெருந்தேவி விண்ணகம் சென்றாள். இவர்களுள் யார் சிறந்தவர்? என்று செங்குட்டுவன், தன் மனைவி வேண்மாளிடம் கேட்கிறான். என்ன அருமையான பதில் விளக்கம் தருகிறார் இளங்கோ தெரியுமா? 
 
வேண்மாள் வழியாகச் சொல்லுகிறார். ‘பாண்டியப் பெருந்தேவி உயிர் துறந்தபோது, அவளுக்கு அமரர் உலகத்தில் பெரும்புகழ் கிடைத்து விட்டது. கண்ணகிப் பெருந்தேவி நம் மண்ணுக்கு வந்தாள். அவளுக்கு நாம் பெருமை சேர்ப்போம்’ என்கிறாள். 
 
இதுதான், சிலம்பு எனும் வீரகாவியம்; தமிழ்ப் பண்பாட்டைப் போதிக்கும் காவியம்.
 
அக்டோபர் ஐந்தாம் நாள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றீர்கள். சகோதரி மாதவி அவர்களே, மூன்றாம் தேதி சிலம்புச் செல்வர் மறைந்த நாள். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத, வீரர்களுக்கெல்லாம் மாவீரர் திலகமாகிய, நான் நெஞ்சால் பூசிக்கின்ற பிரபாகரனின் படைத்தளபதிகளுள் முக்கியமானவர்களாகிய குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 தளபதிகள்,  இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி சென்னை அலுவலகத்துக்கு வந்து, ஆவணங்களை எடுத்துச் செல்லத் திட்டமிட்ட வேளையில், சிங்களக் கடற்படை அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்த நாள், அந்த அக்டோபர் 3.
 
அந்த நாளில், அவர்கள் இந்தியப் படைகளை எதிர்த்துப் போராடவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ராஜீவ்காந்தி அளித்த வாக்குறுதியின்படி, தங்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களைக் கைது செய்தபோது, இந்திய இராணுவ அதிகாரிகளுக்குப் புலிகள் தகவல் கொடுத்தார்கள். ஹர்கிரத் சிங், தேவீந்தர் சிங், பிரார் இருக்கிறார்கள். உடனே அவர்கள், அந்தப் 17 பேர்களையும் பலாலி விமானதளத்தில் வைத்து இருந்த இடத்தைச் சுற்றிலும் இந்திய இராணுவக் காவல் வளையத்தை அமைத்தார்கள். சிங்கள இராணுவத்தை எச்சரித்தார்கள். இது அக்டோபர் 3 இல். தீட்சித் தில்லிக்குப் போனான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதினான். 
 
இந்தத் தளபதிகளை, ஜெயவர்த்தனா கையில் ஒப்படைப்போம். அவன் அவர்களைச் சித்திரவதை செய்வான். அதை வைத்துக்கொண்டு, நாம் நீட்டுகின்ற இடத்தில் பிரபாகரனிடம் கையெழுத்து வாங்கி விடலாம் என்று துர்போதனை செய்தான். அதைத்தான், சிவசங்கர மேனன்களும், நாராயணன்களும் பின்னாளில் செய்தார்கள். அக்டோபர் ஐந்தாம் தேதி, கட்டுக்காவலை விலக்கிக் கொண்டது இந்திய இராணுவம். டெல்லி போட்ட உத்தரவு. இந்திய இராணுவத் தளபதிகளுக்கு அதில் விருப்பம் இல்லை.
 
சிங்கள இராணுவச் சிப்பாய்கள், பயனைட் கத்திகள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளோடு பாய்ந்தார்கள். தளபதிகள் சயனைட் விஷக்குப்பிகளைக் கடித்தார்கள். நிமிட நேரத்தில் உயிர் போய்விடும். சிப்பாய்கள் ஓடிச்சென்று, வாய்களைக் கிழிக்கப் பார்த்தார்கள். அதற்குள், 12 பேர் அந்த இடத்திலேயே வீரச்சாவு எய்தினார்கள். அதற்குப் பிறகும்கூட, அவர்களது உடலில் ஏராளமான காயங்கள். குப்பிகளைப் பகிர்ந்துகொண்டு விஷம் குடித்த ஐந்து பேர் அரைகுறையாகப் பிழைத்துக் கொண்டார்கள். அவர்களுள் ஒருவரை, 89 இல் வன்னிக்காடுகளில் நான் சந்தித்தேன். மற்றொருவரை, 2008 ஆம் ஆண்டு, மாவீரர் நாளில், லண்டன் எக்செல் அரங்கில் உரை ஆற்றியபோது சந்தித்தேன். நடந்த சம்பவத்தை என்னிடம் சொன்னார்கள். 
 
இதுதான் முக்கியத் திருப்பம். தியாக தீபம் திலீபன் உண்ணாமல் இருந்து உயிர் துறந்ததற்கும் இந்திய அரசுதான் காரணம். பலாலி வரை சென்ற இந்திய அதிகாரிகள், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே உண்ணாமல், துளிநீரும் பருகாமல் கிடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை.  அப்போது அவர்கள் வேறு எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஐந்து கோரிக்கைகள், சிங்களக் குடியேற்றத்தை அகற்றுவது, இராணுவத்தை விலக்கிக் கொள்வது, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதற்கு முன்பாக வேறு எதையும் நீங்கள் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளைத்தாம் வலியுறுத் தினார்கள். இதையெல்லாம் நிறைவேற்ற நாங்கள் இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்ற அறிவிப்பைத் தான் எதிர்பார்த்தார்கள். அதைச் செய்து இருந்தாலே திலீபன் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அண்ணன் நெடுமாறன் அவர்கள் திலீபனைச் சந்தித்தார்கள். 
 
12 தளபதிகளின் உயிர் அற்ற சடலங்களை தீர்வில் மைதானத்தில் கொண்டு வந்து வைத்தபோது, இலட்சக் கணக்கான மக்கள் கதறி அழுதார்கள். தலைவர் பிரபாகரன் அங்கே வந்தார். 
 
ஓ மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத் தா 
உன் காலணிகளை எனக்குத் தா
உன் ஆயுதங்களை எனக்குத் தா
 
என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. பிÞடலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். அவர்களது பத்திரிகை தொலைக்காட்சி அலுவலகங்களை, இந்திய இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்தது. மடிவது என்றே முடிவு எடுத்து, பிரபாகரனும், புலிகளும் களத்தில் எதிர்த்து நின்றார்கள். இரண்டே நாள் சண்டையில், பாகிÞதான் போரின்போது இழக்காத எண்ணிக்கையில் இந்திய இராணுவம் டாங்குகளை இழந்தது.  
 
இதைப்பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். பிரதமர் ராஜீவ் காந்தி, வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங். திலீபன் சாவுக்கும், 12 தளபதிகள் சாவுக்கும் நீங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. காங்கிரÞ உறுப்பினர்கள் கூச்சல் போட்டார்கள். நான் தன்னந்தனியனாக நின்று கொண்டு இருந்தேன். என்னைப் பேசவிடாமல் தடுக்க முயன்றார்கள். வீரமும் மானமும் நிறைந்த மாவீரர்கள் உலவிய மண்ணில் பிறந்தவன் நான். (கைதட்டல்).
 
அப்போது நான் தமிழில் என்ன சொன்னேன் என்பதை, பண்புள்ளவர்கள் நிறைந்த இந்த மன்றத்தில் சொல்ல விரும்பவில்லை. அப்போது துடுக்காக இருந்த நான், என்னடா பேசுறீங்க? என்று தொடங்கி, என்ன பேசி இருப்பேன் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். (சிரிப்பு)
 
இந்த நாள்கள், அப்படிப்பட்டவை. அய்யா சிலம்புச் செல்வரின் நினைவு நாளும் ஆகிறது. இங்கே பெருமக்கள் நிறைந்து இருக்கின்றார்கள். நான் ஒரு காங்கிரÞ குடும்பத்தில் பிறந்து, மாணவப் பருவத்தில் அண்ணாவின் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டவன். இந்த நாளில்தான், அக்டோபர் 3 இல் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டது. இதை எப்படி நான் மறக்க முடியும்? அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. 
 
இளங்கோ எழுதிய கடைசி வரிகளைப் பாருங்கள். மதுவுக்கு எதிராக, தீங்குகளுக்கு எதிராக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறாரே, அந்த உறுதியை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் தமிழர்கள். தன்மான உணர்வோடு வாழ வேண்டும். ஒழுக்கமும், நெறிகளும் போற்றப்பட வேண்டும். சிலப்பதிகாரம்தான் நமது உயிர்க்காவியம். அது இந்த மண்ணில் முழங்க வேண்டும். அதை முழங்கியவர் சிலம்புச் செல்வர். அதற்காகவே,சிலப்பதிகார மாநாடு நடத்தியவர். எங்கு சென்றாலும், சிலம்பு சிலம்பு என்று அதன் பெருமையை எடுத்துச் சொன்னவர். அந்த முழக்கம் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.
 
தமிழகத்தின் வீதிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழக மண்டபங்களில் ஒலிக்க வேண்டும். தமிழர்களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும். அதுவே சிலம்புச் செல்வரின் தணியாத விழைவை நிறைவேற்றுவதாக அமையும். வாழ்க சிலம்புச்செல்வர் புகழ்!
 
பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)