களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்! தமிழ்ச் சமுதாயத்தின் நலன் காப்போம்!

Issues: Human Rights, International, Law & Order, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Speeches

Date: 
Mon, 14/10/2013

 

 

 

 

களப்பணி ஆற்றுவோம்; காங்கிரசை அகற்றுவோம்!
தமிழ்ச் சமுதாயத்தின் நலன் காப்போம்!

மதுரையில் தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வணக்கத்திற்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளரும், 2016 இல் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு பெரு வெற்றியைப் பெற்று, கோட்டையில் முதல்வராக வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ள, நெறிசார்ந்த தூய்மையான அகத்திலும் புறத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத, எந்த மனிதனாலும் எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாத, யாருக்கும் தரகுவேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத, வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன்.

உரிமைக்குரல் முழங்கும்

நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்கவிழாவில் வேறு யாரையும் அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் தலைவர்களுக்கா பஞ்சம்? தலை உள்ளவர்கள் எல்லாம் இங்கே தலைவர்கள்தான். ஆனால், அத்தனை பேரிலும் ஒவ்வொருவரையும் நாங்கள் விலக்கி வைத்துவிட்டு, தமிழகத்தில் இன்றைக்கு நெறிசார்ந்த அரசியலை, போர்க்கு™த்தோடு மக்கள் நலனுக்காக நடத்திக்கொண்டிருக்கின்ற வைகோ வரட்டும். அவர் ஒருவர் வந்தால் போதும், ஒட்டுமொத்தத் தமிழர் சாதியினுடைய உரிமைக்குரலும் இங்கே முழங்கும் என்ற அடிப்படையில், அவரை மட்டும் நாங்கள் அழைத்திருக்கிறோம்.

காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில், நான் ஒரு பகிரங்கமான வாக்கு மூலத்திற்குத்தான் இந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஊசி விழுந்தாலும் ஓசை எழுவது போன்ற ஒரு மௌனமான நிலையில் நீங்கள் இதை உள்வாங்க வேண்டும் என்று யாசிக்கிறேன். நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கம் என்பது அரசியல் இல்லை. காந்திய மக்கள் இயக்கம் என்பது தேர்தலில் நின்று வெற்றி பெற்று பதவி நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதும் இல்லை.

ஆனால், இது காந்திய மக்கள் இயக்கம். அரசியல் களத்திலே இருந்து காந்தியடிகள் தனித்து விலகி நின்றவர் இல்லை. வெறும் சமூக சீர்திருத்தங் களை மட்டுமே முன்னெடுத்துச் சென்ற மனிதன் இல்லை காந்தி. காந்தி என்கின்ற நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்த தேசத்திற்கு சுதந்திரக் காற்று வந்து வீசுகிறாற்போல், வாசல் கதவுகளைத் திறந்து வைப்பதற்காக நடத்திய வேள்வி. நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். காந்தியடிகளுடைய நெடிய அரசியல் பயணத்தில், அவர் நடத்திய மாபெரும் போராட்டங்கள் மூன்று. 1920, 21 இல், அவர் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அதற்குப் பின்னர் அவர் நடத்திய பிரம்மாண்டமான போராட்டம் என்பது பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகுதான்.

1930, 31 இல், சட்ட மறுப்பு இயக்கம். அதற்குப் பிறகு பத்தாண்டு காலம் கடந்து 1941 இல், தனிநபர் சத்தியா கிரகத்தை நடத்தினார், 1942 இல், வெள்ளையனே வெளியேறு என்கிற ஆகஸ்டு புரட்சியை உருவாக்கினார். 1947 இல் நாடு விடுதலை பெற்றது. பத்து ஆண்டு களுக்கு ஒருமுறைதான் அவர் வெள்ளையனுக்கு எதிராகப் போராடி இருக்கிறார். அது அரசியல் போராட்டம்.

இடைப்பட்ட பத்தாண்டுகளில் இளைப் பாறினாரா? இடைப்பட்ட பத்து ஆண்டு களில் ஓய்வு பெற்றாரா? இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் எந்த செயலிலும் ஈடுபடாமல் தனித்துத் துறவியைப் போல் இருந்தாரா? இல்லை. ஒவ்வொரு பத்தாண்டுகால இடைவெளியிலும் இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்துகின்ற பணியிலே அவர் முனைந்தார். கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு வழி என்ன? தீண்டாமையை அறவே இந்த மண்ணிலே இருந்து அகற்று வதற்கு வழி என்ன? இந்துவும், முஸ்லிமும், பிற சமயங்களைச் சார்ந்தவர் களும் இணக்கமாக இதயம் இணைந்தும் பிணைந்தும் வாழ்வதற்கான வழி என்ன? இவற்றிற்காகவே ஒவ்வொரு பத்தாண்டு கால இடைவெளியிலும், சமூகத் தளங்களில் இயங்கினார்.

காந்திய மக்கள் இயக்கப் பணி

எனவே காந்தியம் என்பது இரண்டு பக்கங்களைக் கொண்டது. ஒரு பக்கம் அரசியல் பணி, இன்னொரு பக்கம் சமுதாயப் பணி. தமிழ்நாட்டில் எத்தனையோ காந்திய அமைப்புகள் இருக்கின்றன. எத்தனையோ சர்வோதய சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த காந்திய அமைப்புகளும், சர்வோதய சங்கங்களும் மதுக்கடைகளை மூடுவது நல்லது என்று சொல்லும். மதுக்கடை களை வீதிதோறும் திறந்து வைத்து இருக்கிற அரசுக்கு எதிராக ஒரு குரலைக் கூட அது எழுப்பாது. அரசின் தவறு களைச் சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைக்கு காந்தியவாதிகள் தமிழ் நாட்டிலே இல்லை. இது நடந்தால் நல்லது. இதைச் செய்தால் நல்லது. இதை காந்தியடிகள் சொன்னார். காந்தியடிகளைப் பொறுத்தவரையில், ஒரு பக்கம் சமூகப் பணியையும் இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் பேராண்மையோடு அவர் ஆற்றிய பணியையும் நான் உங்களிடம் சொன்னேன். இன்றைக்குத் தமிழ் நாட்டில் அந்த வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது காந்திய மக்கள் இயக்கம் என்பதைத் தெளிவாக என்னால் சொல்ல முடியும்.

ஒரு பக்கம் மதுவுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இன்னொரு பக்கம் தீண்டாமை எதிர்ப்புக்கு எதிராகப் போராடுகிறோம். ஒரு பக்கம் தலித்துகள் சமுதாயத்தில் மேல்நிலைக்கு வர வேண்டும் என்று போராடுகிறோம்.

ஒரு பக்கம் இந்துவும்-முஸ்லிமும்-கிறித்து வரும், பிற சமயங்களைச் சார்ந்தவர்களும் இணக்கமாகவும், சமஉரிமையும், சம வாய்ப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுவோம்.

அதே நேரத்தில், எந்த மனிதர் அல்லது பெண்மணி அதிகார நாற்காலியில் அமர்ந்தாலும் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை தருகண் ஆண்மையோடு சுட்டிக்காட்டுவோம். யாருக்கும் அஞ்சக் கூடியவர்கள் காந்திய மக்கள் இயக்கத்தில் இல்லை. யாருக்கும் விலை போகக்கூடிய அளவுக்கு மலினமான மனிதர்களும் இங்கே இல்லை. யாருக்கும் புரோக்கர் வேலை செய்ய வேண்டிய தரம் தாழ்ந்தவர்களும் இங்கே இல்லை. நான் உங்களிடம் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தவறாக அறியப்பட்ட காந்தி

ஒரு மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. மகாத்மா காந்தி அவர்களை இந்த மண் அவர் வாழ்ந்த காலத்திலேயே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. மகாத்மாகாந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் கோட்சே என்கிற ஒரு மாபாதகனால் கொலை செய்யப்பட்டார் என்பதை அடுத்தவர் சொல்லி அறியக்கூடிய நிலையில் வரலாற்று ஞானம் இல்லாதவன் இல்லை நான். கோட்சே தான் கொன்றான். நண்பர்களே, ஒன்று புரிந்து கொள்ளுங்கள். தான் வாழ்ந்த காலத்திலேயே தவறாக அறிப்பட்ட ஒரு ஆத்மா உண்டு என்றால், அது காந்தியடிகள்தான். காந்தியடிகளை கோட்சே கொன்றான். விசாரணை நடக்கிறது. கோட்சேயின் வாக்கு மூலத்தைப் படித்துப்பாருங்கள்.
கோட்சே சொல்கிறான், “மகாத்மா காந்தியை மகாத்மா என்று நான் ஒப்புக் கொள்கிறேன். தன்னலமற்ற ஒரு துறவி காந்தி என்பதை நான் தலைவணக்கத் தோடு ஒப்புக்கொள்கிறேன். சுயநலமே இல்லாத ஒரு அரசியல் தலைவன் இந்த மனிதன் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும் இந்த மனிதரை நான் கொன்றேன். கொன்றதற்காக நான் இன்றுவரை வருத்தப்படவில்லை. தூக்கில் தொங்குவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்புக் கேட்க தயாராக இல்லை. ஒரு இந்துவாக இருக்கிற நான், ஒரு இந்துவாகப் பிறந்த காந்தி எங்களுக்கு ஆதரவாக இல்லாமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றான்.

இஸ்லாமியர்கள் காந்தியை எப்படிப் பார்த்தார்கள் என்ற இன்னொரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். முகமது அலி ஜின்னா காந்திக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்தாரா? கடைசிவரை காந்தியை ஒரு வெறி பிடித்த இந்துவாகவே அவர் சித்தரித்தார். ஆக இஸ்லாமியர்கள் பார்வையில் மகாத்மா காந்தி இந்துவாகவே தெரிந்தார். இந்துகளின் வெறிபிடித்த பார்வையில் மகாத்மா காந்தி இஸ்லாமியர்களின் ஆதரவாள ராகவே தெரிந்தார். இதைவிட கொடுமை வேறு ஏதாவது உண்டா?

தலித்துகளுக்காகப் பாடுபட்டு, தீண்டாமையை ஒழிப்பதற்கு வேள்வி நடத்திய, தன்னுடைய பத்திரிகை யங் இந்தியாவை அரிஜன் என்று பெயர் மாற்றி நடத்தியது சனாதனத்துக்கு எதிரானது. நண்பர்களே சனாதனக் கூட்டத்தினருக்கு எதிராக வெளியே இருந்து போராடிய பெரியார் ஒரு பக்கம், சனாதனத்தின் இடையில் இருந்து கொண்டு, உயர்சாதிக்காரர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே, தீண்டாமையை அவர்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கு உழைத்தார் காந்தி. அவரை உயர் சாதி இந்துகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. பூனா ஒப்பந்தத்தைத் தவறாகச் சொல்லி, தலித்துகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, காந்தி எல்லா வகையிலும் தவறாக அறியப்பட்ட மனிதர். ஆனாலும் காந்தி இந்த மண் இருக்கிற வரை இருப்பார். காந்தியே இப்படி தவறாக அறியப்பட்டார் என்றால், சாதாரண தமிழருவி மணியன் தவறாக அறியப் படுவதில் எந்தவிதமான ஆச்சரியத்துக்கும் இடமே இல்லை.

மனிதம் சார்ந்து இயங்குபவர்

இந்த நாள் ஒரு புனித நாள். முதலில் அதைச் சிந்தியுங்கள். ஏன் மாற்று அரசியல் மலர வேண்டும்? யாருக்கும் பல்லக்குத் தூக்கி வாழ வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு சாகும் வரை இருக்காது. இந்தத் தோள்களில் நான் வைகோவைத் தூக்கி உட்கார வைத்து பல்லக்குத் தூக்கி சுமக்க வேண்டும் என்கிற கட்டளை கிடையாதே. ஆனால், வைகோ வைகோ என்று சொல்கிறேனே! எனக்கு என்ன ஆதாயம்? எத்தனையோ தலைவர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எங்களை யெல்லாம் விட்டுவிட்டு எதற்காக வைகோவைப் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று ஒரு தலைவர் என்னிடம் நேரிடையாகவே கேட்டார். வைகோவை விட வாக்கு வங்கி எனக்கு அதிகமாக இருக்கிறதே! நான் மாற்றத்தை உருவாக்கிக் காட்டமாட்டேனா? ஏன் என்னை நீங்கள் ஆதரிக்கக் கூடாது? என்றார்.

நான் சொன்னேன், வைகோ ஒரு நாளும், ஒரு மேடையிலும் பேச்சிலும், எழுத்திலும் சாதி சார்ந்து எதையும் சொன்னது கிடையாது. மதம் சார்ந்து எதையும் சொன்னது கிடையாது. மனிதம் சார்ந்து இயங்குகிற தலைவராக, தமிழ் இனம் சார்ந்து போராடுகிற போராளியாக தன்னைக் காட்டுகிற ஒரு காரணத்தினால் ஆராதிக்கிறேன். இன்றைய அரசியல் உலகத்தில் திறமையானவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கருணாநிதியைவிட திறமையாளன் ஒருவன் இல்லை. கருணாநிதியிடம் திறமை இருக்கிறது. அதில் இரண்டு கருத்துக்கு இடமே இல்லை. நேர்மை இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. தூய்மை இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. நேர்மையும், தூய்மையும் உடைய ஒரு தலைவன் எங்கே? ஊழல் கறை படியாத ஒரு மனிதன் எங்கே? தேடுகிறேன் நான். என் தேடலில் கிடைத்த மனிதன் வைகோ.

வந்தபொழுது இங்கேயும் பார்த்தேன். தமிழருவி தாலாட்டும் தமிழினக் காவலரே வருக! வருக! என்று போடுவதற்கு பதிலாக, தமிழருவி தாழாட்டும் தமிழினக் காவலரே வருக! வருக! என்று போட்டிருக்கிறார்களே என்று பார்த்தால், அர்த்த அடர்த்தியோடு செய்திருக்கிறார்கள். வைகோ அந்த கோட்டை நாற்காலியில் போய் அமர்வதற்கு இடையில் தடுப்பாக இருக்கிற அந்தக் கதவின் தாழை ஆட்டி ஆட்டித் திறப்பதற்காகவே இந்தத் தமிழருவி இருக்கிறான் என்பதைத்தான் அதில் சூசகமாகச் சொல்கிறார்கள்.

நண்பர்களே, இந்த வைகோவிடம் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமே கிடையாது. எந்த மனிதரிடமும் ஆகப்போவது ஒன்றும் கிடையாது. ஓராண்டுக் காலம் கருணாநிதிக்கு எதிராகத் தொடர்ந்து யுத்தத்தை நான் நடத்தினேனே, என் எழுத்திலும், பேச்சிலும். அதன் மூலம் பயன்பெற்றது யார்? ஜெயலலிதா. அண்ணா தி.மு.க. மந்திரியில் இருந்து கடைநிலை ஊழியன் வரை அந்தக் கட்சியில் இருக்கிற அனைவரும் இன்றைக்குப் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்று இருக்கக்கூடிய பயனுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து இருக்கக் கூடியவர்களில் தமிழருவி மணியனும் ஒரு காரணம் என்பதற்காக போயஸ் தோட்டத்தின் கதவுகளைப் போய் தட்டிப் பல் இளிக்கக்கூடிய பிறவி நான் இல்லை. எந்த அமைச்சருடைய அலுவலகத்திற்கு முன்னாலும் இன்று போய் விண்ணப்பம் கொடுக்கக்கூடிய நிலையில் நான் இல்லை.

என் நாற்பதாண்டுக் காலத்திற்கு மேற்பட்ட பொதுவாழ்வில், ஒரே ஒரு காரியத்திற்குக்கூட ஒருவரிடமும் சென்று நிற்காத கம்பீரம் எனக்கு இருக்கிறது. எனவே, வைகோவை என் நலத்திற்காக, காந்திய மக்கள் இயக்கத்தின் நலனுக்காக நான் பார்க்க வில்லை. எனக்கு நேர்மையும் தூய்மையும் உள்ள ஒரு தலைமை வேண்டும்.

பொற்கால ஆட்சி தந்தவர்

நான் மாநிலக் கல்லூரியில் படித்தபோது, காமராஜர் காலடியில் அரசியலைத் தொடங்கினேன். இன்று காமராஜர் நினைவு நாள். காந்தி பிறந்த நாள். எத்தனை ஊடகங்களில் காமராஜரையும் காந்தியையும் காட்டுகிறார்கள். நண்பர்களே காந்தியத்தைப் பேசி, காந்தியத்தின்படியே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளிலேயே கண்மூடிய அத்வைதி காமராஜ். 15 ஆண்டுக்காலம் சட்டமன்ற உறுப்பினர். 12 ஆண்டுக் காலம் நாடாளுமன்ற உறுப்பினர். 9 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியைத் தந்த முதலமைச்சர். 14 ஆண்டுக் காலம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தொடங்கி பின்பு வரையில் தமிழ்நாடு காங்கிரசின் தனிப்பெரும் தலைவர். ஐந்தாண்டுக் காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இரண்டு முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழன்.

இவ்வளவு பெருமைக்குரியவர். பத்து வேட்டி, பத்து சட்டை, 63 ரூபாய் சொத்து என்று வைத்துவிட்டுப் போனாரே? அவரிடம் அரசியல் கற்ற நான் அதுபோன்ற ஒரு மனிதனைத் தேட வேண்டாமா? அந்தப் பொறுப்பு எனக்கு இல்லையா? பெருந்தலைவர் காமராஜரைப் போல் ஒரு மனிதனைத் தேடுகிறேன். வைகோ அவர்கள் பெரியாரைப் பார்த்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அண்ணாவின் தொண்டராக அவர் அரசியலுக்கு வந்தார். அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது வாரிசு அரசியலை வளர்த்தாரா? அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது அதிகார நாற்காலியைப் பயன்படுத்தி ஒரு செப்புக் காசையாவது ஊழல் செய்து சம்பாதித்தார் என்று எவராலும் சொல்ல முடியுமா? அந்த எளிமை, அந்த நேர்மை, அந்தத் தூய்மை இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் எங்கே? என் விழிகள் எல்லா திசைகளிலும் தேடிப் பார்க்கிறபொழுது, ஒரு தனி மனிதன் கிடைத்தான். அதனால் அவனைத் தூக்குகிறேன்.

மாற்று அரசியல் என்பது என்ன? எனது அன்புக்கு இனிய சிறுபான்மை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் அத்துணை பேரும் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது இந்தத் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள், தமுஎச என்று வைத்து இருக்கக்கூடிய, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய எல்லா கூட்டங்களிலும் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நானும்தான் பேசினோம். ஒரு இடம் விடாமல் தமிழகம் முழுவதும் பேசினோம். பாபர் மசூதி இடித்ததை தமிழருவி மணியன் ஆதரிக்கிறானா? பாபர் மசூதி இடித்ததை வைகோ ஆதரிக்கிறாரா? யார் ஆதரிக் கிறார்கள்? பாரதிய ஜனதா கட்சியும், ம.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இன்னும் வைகோவிடம் இருந்து அதற்கு முழு சம்மதம் வரவில்லை. விஜயகாந்திடம் இருந்து முழுமையாக சம்மதம் வர வில்லை. பாரதிய ஜனதா கட்சி என்னிடம் வந்து இன்னும் முழுமையாக நிற்கவில்லை. ஜெயலலிதா வினுடையை போயஸ் தோட்டத்துக் கதவு கொஞ்சமாவது திறக்காதா? என்றுதான் பாரதிய ஜனதா கட்சி இன்னமும் தவம் இருக்கிறது. அந்தக் கதவு முற்றிலும் மூடப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்த பிறகுதான் வேறு பக்கமே முகம் திருப்புவார்கள். அரசியல் அறியாதவனா நான்?

மாற்று அணி அமைய வேண்டும்!

எனக்கு என்ன பாரதிய ஜனதா கட்சியின் மீது காதல். இடதுசாரிகளின் தலைமையின் கீழ் இதுமாதிரி ஒரு மாற்று அரசியல் மலர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்று காந்திய மக்கள் இயக்கத்தினுடைய நான்காவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். காந்திய மக்கள் இயக்கத்தின் மூன்றாவது ஆண்டுத் தொடக்க விழாவில் மாற்று அரசியலுக்கான அடித்தளத்தை இப்பொழுதே அமைக்க வேண்டும் என்று சொல்லி, இடதுசாரிகளுடைய தலைமையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்று சொல்லி, நான் ஜி.இராமகிருஷ்ணனிடம் போய் மண்டியிடவில்லையா? தா. பாண்டியனிடம் போய்ப் பேச வில்லையா? தோழர் நல்லகண்ணுவிடம் போய் திரும்பத் திரும்ப நான் வற்புறுத்தவில்லையா? வைகோவிடம் போய் நான் கேட்கவில்லையா? திருப்பூரில் பிரம்மாண்டாக கூடிய மக்கள் கடலில் இப்படி ஒரு அணி அமையுமா? இடதுசாரிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் முதலில் ஒரு அணி அமைக்கட்டும்.

நான் அங்கே தெளிவாகச் சொன்னேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இடதுசாரிகளாக இருக்கிற நீங்கள் ஆட்சி நாற்காலிக்கே வரவில்லை. எனவே உங்கள் கரங்கள் களங்கப்படவில்லை. வைகோ ஆட்சி நாற்காலிக்கு வர வில்லை. எனவே அவருடைய கரமும் களங்கப்படவில்லை. களங்கம் நிறைந்த ஊழல் மலிந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்றால், ஊழலற்ற ஒரு மாற்று அணி அமைய வேண்டும். அதற்கு இதுவரை ஊழல் செய்யாத நீங்கள் முதலில் ஒரு அணியில் நில்லுங்கள் என்றேன். ஒரு மேடையில் இந்த மூன்றுபேரைக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு நான் எவ்வளவு முயன்றேன் தெரியுமா? எனக்கு என்ன ஆதாயம்? ஒவ்வொரு வருடைய அலுவலகத்திற்கும் சென்று மண்டியிடவேண்டிய அவசியம் எனக்கு என்ன? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்திலே போய் உட்கார்ந்து கொண்டு ஜி.ராம கிருஷ்ணனிடம் நான் பேசவில்லை? சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலே போய் உட்கார்ந்துகொண்டு நல்ல கண்ணு அய்யாவிடமும், தா.பா.விடமும் நான் பேசவில்லை? தாயகத்திலே போய் அமர்ந்து வைகோ அவர்களிடம் போய் நான் மன்றாடவில்லை?

வித்தியாசமானவர்கள்

முதலில் மூன்று பேர் ஒன்றாக நில்லுங்கள். நாங்கள் அதற்கு மேடை போடுகிறோம். திருப்பூரில் என் நண்பர்கள் தெருத் தெருவாக துண்டு ஏந்தி வசூலித்து பிரம்மாண்டமாக ஒரு கூட்டத்தை நடத்தினோம். நான் சொன்ன அடுத்த கணமே வைகோ மிகுந்த விருப்பத்தோடு மேடைக்கு வந்தார். எந்தத் தயக்கமும் இல்லை. அண்ணே, இடதுசாரிகளோடு நானும் சேர்ந்து ஒரு மாற்று அரசியலை உருவாக்குவது என்றால், இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கிறது? வருகிறேன் என்றார். உங்களிடம் நான் வந்து பேசினேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் வித்தியாச மானவர்கள். அவர்கள் மண்ணில் வலம் வருவதைவிட, விண்ணிலேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கக் கூடியவர் களாக இருக்கிறார்களே என்பதில்தான் எனக்கு வருத்தம்.

இன்றும் அவர்கள் சொல்கிறார்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேதான் ஈழத்தமிழனுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று. அது சாகும்வரை நடக்காது. எது சாத்தியம் இல்லையோ அதை அவர்கள் சொல்வார்கள். வைகோ தனி ஈழம் வேண்டும் என்று சொல்கிறார். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்று எங்களை மேடையில் வைத்துக் கொண்டே சொல்வார். எங்களுக்கு அதில் சங்கடம் இருக்கிறது என்றார்கள். நான் சொன்னேன், தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசையே இல்லையா? என்று. நீங்கள் என்ன உத்திரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் தான் மக்களைச் சந்திக்கப்போகிறீர்களா? தயவு செய்து அதை மூட்டைகட்டிவிட்டு வாருங்கள். ஒரு அணி அமைக்கிறபொழுது நூறு விழுக்காடு ஒத்த கருத்துள்ளவர்கள் சேரவே முடியாது. தமிழ் ஈழத்தை அவர் மீட்கட்டும். அங்கே இலங்கைக்கு உள்ளேயே அரசியல் தீர்வு வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். வைகோ தன் கருத்தை அவர் மேடையில் சொல்லுவார். உங்கள் கருத்தை நீங்கள் உங்கள் மேடையில் சொல்லுங்கள். நான் போடுகிற மேடையில் இந்தப் பிரச்சினை வேண்டாம். தமிழ்நாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து நாம் ஒன்றுகூடுவோம் என்றேன்.

வைகோ அவர்கள் வந்தார். கடைசி நாள் வரை ஜி.இராமகிருஷ்ணனை நான் வேண்டி வேண்டி அந்த மேடைக்கு வர வழைத்தேன். நல்லகண்ணு அய்யா தயக்கத்தோடு, என்மீது இருக்கின்ற அன்பினால் வந்தார். மேடைக்கு வருவதற்கு முன்பு திருப்பூரில் இருக்கின்ற இரண்டு அலுவலகங் களுக்கும் நான் சென்று பேசினேன். ஐயா ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர் களிடைய இருக்கிறது. தயவு செய்து ஒரு மாற்று அணியை நாங்களும் வைகோவும் சேர்ந்து அமைக்கப்போகிறோம் என்று நீங்கள் வாய் மலர்ந்தால் நல்லது என்றேன். மேடை போடப்பட்டது. ஜி.இராமகிருஷ்ணன் பேசுகிறார். ஒரு வார்த்தை, ஒரு வரி மாற்று அரசியல் குறித்து அவர் சொல்வாரா? என்று செவிகளைத் தீட்டியபடி நான் உட்கார்ந்திருக்கிறேன். கடைசிவரை சொல்லவேயில்லை.

என் தந்தையை விட மேலாக நான் நேசிக்கிற ஐயா நல்லகண்ணு அவர்கள் இது குறித்து ஏதாவது சொல்வாரா? 85 வயதை எட்டிப்பிடித்திருக்கிற தூய்மை மிகுந்த அரசியல் துறவி. அவர் இதை ஆசிர்வதித்து எதையாவது சொல்வாரா? என எதிர்பார்த்தேன் அவரும் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

பிறகு வைகோ மேடையில் இருந்த படியே என்னிடம் சொன்னார், அண்ணே, இரண்டு பேரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நானாக வலியுறுத்தி இந்த அணி அமைய வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டார். அப்படியெல்லாம் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன். இரண்டு பேரும் இதற்கு தயாராக இல்லை என்கிற பொழுது தலைவனும், தலைவியும் மனம் ஒன்றுபட்டு இணைந்தால்தானே அதற்குப் பெயர் இல்லறம். நடுவிலே ஒருவன் நின்று கொண்டு இரண்டு பேர் கையையும் பிடித்து இழுத்து ஒப்பந்தமா போட முடியும்? போட்டாலும் அந்த ஒப்பந்தம் ஒரு நாள் நிலைக்குமா? அடுத்தநாளே விவாகரத்துதானே? எனவே நான் வற்புறுத்தவில்லை. வைகோ அவர் கருத்துகளை பேசினார்.

தமிழ் இனம் அழித்த காங்கிரஸ்

ஓராண்டு காலமாக நான் சொன்னேன், நாடாளுமன்றத் தேர்தல் நடுவில் வரும். தயவு செய்து தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டோடும் நீங்கள் போய் நிற்காதீர்கள். ஒரு அணியை அமையுங்கள். சிவப்புச் சிந்தனைகளுக்கு இதயத்தைப் பறிகொடுத்துவிட்ட தியாகம் நிறைந்த தோழர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங்களே ஒரு வேள்வி நடத்துவதற்குத் தயாராக இல்லை என்றால், நான் தி.மு.க.வில் இருப்ப வரையும், அ.தி.மு.க.வில் இருப்ப வரையுமா தியாகம் செய்வதற்கு அழைக்க முடியும்? மாற்று அரசியலுக்காக இவன் ஏன் பாரதிய ஜனதாவிடம் போனான்? என்னுடைய நோக்கம் ஒன்று தான். என் இனம் ஈழத்தில் அழிவதற்குக் காரணமாக இருந்த காங்கிரசை தமிழ் மண்ணில் கருவறுக்க வேண்டும்.

வாழ்க செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! பாரதி எனக்குக் கற்றுக்கொடுத்த வேதம் அதுதான். முதலில் என் தமிழ். என் தாயின் கருவில் இருக்கிறபொழுது, நான் முதன் முதலில் காதுகொடுத்துக் கேட்டது என் தமிழ். என் தமிழ் வாழ வேண்டும். தமிழால் ஒன்றுபட்டிருக்கிற என் இனம் வாழ வேண்டும். அந்த இனம் இருக்கக்கூடிய இந்திய தேசம் வாழ வேண்டும். இதுதான் என் நோக்கம்.

என் இனம் அங்கே அழிக்கப்பட்டது. நான் கேட்கிறேன், வகுப்புவாதம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு நீங்கள் பேசுகிறீர்களே, காமராஜருடைய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. தெளிவாகச் சொல்கிறேன். 1971 இல் பெருந் தலைவர் காமராஜர் அவர்கள் இன்றைக்கு இருக்கிற பாரதிய ஜனதா கட்சிதான் அன்றைக்கு ஜனசங்கமாக இருந்தது. அந்த ஜனசங்கம், சுதந்திரா கட்சி அன்றைக்கு இருக்கக்கூடிய இந்தக் கட்சிகளை வைத்துக்கொண்டு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜ் கிராண்ட் அலையன்ஸ் என்ற ஒன்றை வைத்தார். ஜனநாயகத்தைக் காப்போம். இந்தியாவைக் காப்போம் என்றார்.

காமராஜர் மதவாதியா?

இந்திராகாந்தியிடமிருந்து இந்தியாவைக் காக்க வேண்டும் என்று கருதிய காமராஜர், அந்த ஜனசங்கத்தோடுகூட போய் நின்றார். அதற்காக பெருந் தலைவர் காமராஜர் மதவாதியா? வகுப்புவாதியா? இசுலாமியர்களுக்கு எதிரியா? சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டவரா காமராஜ். நோக்கம் அன்றைக்கு ஒன்றுதான். இந்திராவை பதவியில் இருந்து இறக்க வேண்டும்.

1977 இல் ஜனதா உருவானது. அதன் தொடக்க கால உறுப்பினராக இருந்த நான் பேசுகிறேன். 1977 இல் உருவான ஜனதா கட்சி, அதில் இந்த பாரதிய ஜனதா கட்சி ஜனசங்கமாக இருந்தது. சோசலிஸ்டுகள் அத்தனைபேரும் அதில் இருந்தார்கள். நண்பர்களே, சோசலிஸ்டுகள் மதவாதிகளா? மதுலிமயி மதவாதியா? ஜார்ஜ் பெர்ணான்டஸ் மதவாதியா? இசுலாமிய சிந்தனைகளுக்கு எதிராக உள்ளவன் தான் ஒரு சோசலிஸ்டா? ஆனால், அன்றைக்கு ஒன்றாக நின்றது ஏன்? 1975 இல் நெருக்கடியைக் கொண்டு வந்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த இந்திராகாந்தியிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்றைக்குச் சேர முடியாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார்கள்.

நண்பர்களே, வி.பி.சிங் ஆட்சிக்கு வந்தார். வி.பி.சிங்கை ஆட்சியில் உட்கார வைக்கக்கூடிய சூழலை எப்படி உருவாக்கினார்கள்? ஒரு பக்கம் இடது சாரிகளும், இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியும் முட்டுக்கொடுத்த தனால்தானே வி.பி.சிங் ஆட்சி நடந்தது. இந்த இடதுசாரிகள் பாரதிய ஜனதா கட்சியோடு ஒருபக்கம் இருந்து ஒரு அரசை அமைத்தார்கள் என்பதற்காக அவர்களை மதவாதிகள் என்று பேச முடியுமா? யோசியுங்கள்.

என் அன்பிற்கினிய இசுலாமியத் தோழர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி இது ஒரு அணியில் இருக்கட்டும் என்பதற்காக என்னை நீங்கள் வகுப்புவாதி என்று நினைத்தால், இந்தத் தமிழ்நாட்டில் அடையாளமற்றுக் கிடந்த பாரதிய ஜனதா கட்சியை முதன் முதலில் தமிழகத்தின் கிராமங்கள் வரையில் சென்று சேர்த்த பெருமை ஜெயலலிதாவுக்குத்தான் உண்டு. 1998 இல் ஜெயலலிதா இந்த பாரதிய ஜனதா கட்சியோடுதான் கூட்டணி வைத்தார். ஜெயலலிதாவை இசுலாமிய தோழர்கள் வகுப்புவாதி என்று கண்டித்தீர்கள். என் வாழ்நாள் வரையில் நான் எந்த நிலையிலும் இந்த பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு வைக்க மாட்டேன் என்று பிறகு உங்களிடம் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தாரா? சென்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த இசுலாமியர்கள் கணிசமான இளைஞர்கள் இருக்கக்கூடிய அந்த அமைப்பு எதனால் போய் ஜெயலலிதா வோடு கூட்டணி வைத்தது? ஏன் நீங்கள் கூட்டணி வைத்தீர்கள். ஒருமுறை எங்களுக்கு எதிரான மதவாதத்தை வளர்க்கக்கூடிய பாரதிய ஜனதாவுடன் நின்ற உன்னோடு ஒருநாளும் நிற்க மாட்டோம், எந்தப் பயனும் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னீர்களா? அங்கே நின்றீர்கள். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றீர்கள். சட்டமன்றத்திற்குள்ளே போனீர்கள்.

சமூக நலனில் இயங்குபவர்

சரி, அதற்குப் பிறகு கனிமொழிக்கு நீங்கள் இரண்டுபேரும் ஆதரவு கொடுத் தீர்களே, 1998 இல் தான் செய்தது தவறு என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியே வந்து கை கழுவியபோது, 1999 இல், அடுத்து கருணாநிதி போய் கைகோர்த்து நின்றாரே? பண்டாரங்கள் என்றும், பரதேசிகள் என்றும், ஆக்டோபஸ் கைகளைக் கொண்ட வகுப்பு வாதிகள் என்றும், 1998 இல் ஜெயலலிதா பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தபோது கடும் விமர்சனங்களை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வைத்தவர் கலைஞர். ஒரு ஆண்டு கூட முடியவில்லை. ஆட்சி கவிழ்ந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 1999 இல் கருணாநிதி போய் அங்கே கூட்டணி வைத்தார். வகுப்பு வாதத்தை வளர்த்தெடுத்தவர்களோடு போய் உட்கார்ந்தாரே! ஐந்து ஆண்டுகள் வாஜ்பாய் நடத்திய ஆட்சியில் அமர்ந்து இந்தக் கொள்ளை அன்றும் நடந்ததே. அது உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா? அவருடைய திருமகள் கனிமொழி எப்படியும் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என்று கலைஞர் துடித்தார். 2ஜி அலைக்கற்றை ஊழல் கடுமையாக அவரை பாதித்திருக்கிறது இப்பொழுது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளியாக அவர் நிற்கிறபோது சாதாரண கலைஞர் கருணாநிதியின் பின்னால் இருப்பதைவிட, ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது என்றால், பாதுகாப்பாக இருக்கும் என்று தானே முயன்றார். ஜெயலலிதாவோடு சேர்ந்து நின்று இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நீங்கள் ஊழல் மலிந்த வகுப்புவாதத்தை வளர்த்தெடுத்ததாக நீங்கள் சொல்லுகிற பாரதிய ஜனதா கட்சியோடு 1999 முதல் 2004 நான்கு வரை கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட கருணாநிதியின் திருமகளுக்கு ஏன் ஓட்டுப்போட்டீர்கள்? நீங்கள் செய்தால் எதுவும் சரி. நாங்கள் செய்தால் எல்லாம் தவறா? ஒன்று புரிந்துகொள்ளுங்கள் தெளிவாக நான் சொல்கிறேன். எந்த நலனிலும் நாட்டம் இல்லாத - சமூக நலனில் இயங்குகிற நான் சொல்கிறேன். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒருநாளும் இசுலாமிய சமுதாயத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

12 கோடிக்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் இந்திய மண்ணிலே வாழ் கிறார்கள். உலகத்திலேயே அதிகமாக இசுலாமியர்கள் வாழ்கிற பெருமை இந்தியாவுக்கும், இந்தியாவிற்கு அடுத்து இந்தோனேசியாவுக்கும்தான். இசுலாமிய நாடுகள் என்று சொல்லிக்கொள்கிற நாடுகளிலேகூட இவ்வளவு மக்கள் தொகை கிடையாது. 12 கோடி இசுலாமியரை ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரு இந்திய தேசத்தை கனவு காண முடியுமா என்ன? முடியவே முடியாது. ஆனால், அதே நேரத்தில் என் இசுலாமிய தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். மதவாதம் என்ற ஒரே ஒரு முகமூடியை வைத்துக்கொண்டு உங்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருப்பது காங்கிரஸ். மதச்சார்பற்ற தன்மை என்கிற ஒரு வார்த்தை அரசியல் வார்த்தையாக இன்றைக்கு காங்கிரஸ்காரனால் பயன் படுத்தப்படுகிறதே தவிர, உங்களுக்காக உண்மையில் அவன் இல்லை. இன்றைக்கு உங்கள் வாக்கு வங்கியை மையமாக வைத்து அரசியலை நடத்தத் துடிக்கிறான் அவன்.

மோடியை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் என்று அறிவித்த அடுத்த கணமே, காங்கிரஸ் கூடாரம் கலகலத்து விட்டதே. இந்த ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பதற்றம்; நான் கேட்கிறேன் உங்களை. ஐநூறுக்கும் மேற்பட்ட என்னுடைய தமிழ்ச் சமூகத்தின் மீனவர்கள் அன்றாடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுது அதற்கு எதிர்த்துக் கேட்பதற்கு திராணி இருந்ததா இந்த காங்கிரஸ் அரசுக்கு?

மதம், சாதி இல்லை...

எனக்கு சாதி கிடையாது. நான் எல்லா சாதிகளையும் நேசிக்கிறேன். எல்லா மதங்களையும் நேசிக்கிறேன். ஒரு இசுலாமிய தோழன் திருமறையை வாசித்ததைவிட கூடுதலாக வாசித்து இருப்பவன் தமிழருவி மணியன். உலகம் முழுவதும் முகமது நபிகளின் பெருமைகளைப் பேசக்கூடியவன் நான். இதே தமிழன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு தலைவரும் முகமது நபிகள் பெருமானாரின் பெருமைகளைப் பற்றி பேசி அதை வெளிப்படுத்தினார்கள். ஒரு மணி நேரம் நான் பேசினேன். இசுலாமிய தோழர்கள் கடல் கடந்து இருக்கக் கூடியவர்கள் எல்லாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார்கள், அய்யா ஒரு இசுலாமியனேகூட இப்படி பேசியிருக்க முடியாது அய்யா, பெருமானாரின் பெருமைகளைப் பற்றி என்று சொன்னார்கள். நான் பேசுவேன். நான் கீதையைப் படிப்பதோடு முடிப்பவன் இல்லை. நான் கீதையை எப்படிப் படிக்கிறேனோ அதைவிடக் கூடுதலாக திருமறையைப் படிப்பவன். அதைப்போன்று பைபிளையும் நான் வாசிப்பேன்.

எனக்கு மதம் இல்லை. எனக்கு சாதி இல்லை. வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகிற ஈனப்பிறவி நான் இல்லை. என்னுடைய மகன் வேற்று சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளை நான் காதலிக்கிறேன் என்றான். காதல் செய்வீர் உலகத்தீரே என்று சொன்னவன் பாரதியடா, அந்த பாரதியிடம் நெஞ்சைப் பறிகொடுத் தவன் நான். நன்றாக வாழ்ந்தால் சரி. அவர்கள் ஓடிவிட வில்லை நான் நின்று செய்து கொடுத்தேன்.

என் மனைவி எதிரே அமர்ந்திருக்கிறார். என்னுடைய மகள் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறபொழுது, உடன் படித்த ஒரு கிறித்துவ இளைஞனை அவள் காதலித்தாள். அப்பா நான் இந்தக் கிறித்துவ இளைஞனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றாள். ரொம்பச் சரி. மதங்களை மீறி மனிதம் தழைக்க வேண்டும் என்று மேடை தோறும் முழங்கிக்கொண்டிருக்கிறேன். உனக்கு நான் நன்றி பாராட்டுகிறேன் என்று என் மகளிடம் சொன்னேன். சாதி கடந்து இருவரும் அற்புதமான இல்லற வாழ்க்கையை ஒரு பக்கம் என் மகனும் மருமகளும் நடத்துகிறார்கள். மதம் கடந்து அற்புதமாக வாழ்க்கையை ஒரு பக்கம் என் மகளும் மருமகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.

எனக்கு சாதி இல்லை. எனக்கு மதவெறி இல்லை. மனிதம் மனிதம் அதுதான் முக்கியம். இன்றைக்கு இங்கு ஒரு பாரதிய ஜனதா கட்சியும், ம.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு கூட்டணி அமைப்பதாக இருந்தால் அதற்கு என்ன அடிப்படையில் இந்தக் கூட்டணி அமையவேண்டும் என்று நான் இப்பொழுது ஜூனியர் விகடனிலே எழுதியிருக்கிறேன்.

எந்த நிலையிலும் ஜம்மு காஷ்மீருக்கு என்று வழங்கப்பட்டிருக்கிற விசேச சலுகை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கை வைக்கக் கூடாது. காமன் சிவில் கோடு என்று சொல்லி, அவர்களுடைய உணர்வுகளை துன்புறுத்துகிற வேலையில் ஈடுபடக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டும், ஒவ்வொரு இந்துவும், ஒவ்வொரு இசுலாமியனும். பாபர் மசூதியைப் பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புதான் முடிவு. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இப்பொழுது விசுவ ஹிந்து பரிசத் அங்கே நடத்திய சர்வபரி யாத்திரை என்ற ஒன்றை நீங்கள் நடத்தக்கூடாது.
காங்கிரசின் தவறுகளை வெளிப்படுத்துங்கள்

பாரதிய ஜனதா கட்சி, ம.தி.மு.க., தே.மு.தி.க. இவை மூன்றும் ஒரு அணியாக அமைய வேண்டும் என்று ஒருபக்கம் முயன்று கொண்டிருக்கிற பொழுதே, என்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தின் மாத இதழ் ரௌத்திரத்தில் தலையங்கம் எழுதினேன். பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் உண்மையிலேயே மாற்று அரசியலை நம்புவதாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை முதலில் வெளிப் படுத்துங்கள். ஊழலை வெளிப் படுத்துங்கள். நிர்வாகத் திறமையற்ற நிலையை வெளிப்படுத்துங்கள். அவற்றை முன் வைத்து மக்களிடம் செல்லுங்கள். ஒரு நாளும் மதத்தை முன்வைத்து மக்களிடம் செல்லாதீர்கள். சென்றால், நீங்கள் இந்த மண்ணில் வாழ முடியாது. 80 விழுக்காடு இந்துக்கள் போல உலகம் முழுவதிலும் தேடினாலும் நீங்கள் மக்களைப் பார்க்கவே முடியாது. அவர்கள் இரத்தம் முழுவதும் ஓடுவது மதச்சார்பற்ற தன்மைதான். காங்கிரஸ் காரன் மதச்சார்பின்மையைக் காப்பாற்ற வில்லை. எந்த அரசியல் தலைவரும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய பெரும் பான்மை இந்துக்களிடம் மதச்சார் பின்மையைக் கொண்டுபோய் சேர்க்க வில்லை. ஒவ்வொரு இந்துவாகப் பிறந்த வனும் அவன் அடிப்படையிலேயே மதச்சார்பற்றவன். அவன் மீனாட்சியை மட்டும் வணங்க மாட்டான். வேளாங் கண்ணிக்கும் போவான். நாகூருக்கும் போவான். ஆனால், நீங்கள் வர மாட்டீர்கள். உங்களைக் குறை சொல்வதற்காக இதை நான் சொல்ல வில்லை. காரணம் உங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. அதனால் உருவ வழிபாடு நடத்தக்கூடிய இடங்களுக்கு நீங்கள் வருவது நியாயமும் இல்லை. ஆனால், எங்களுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. என்னை நீங்கள் கூப்பிடுங்கள், பள்ளிவாசலுக்கு வந்து நான் தொழுவதற்குத் தயாராக இருக்கிறேன். தேவாலயத்திற்குக் கூப்பிடுங்கள், இயேசு பிதாவே நான் ஏதாவது இந்தப் பிறவியில் பாவம் செய்திருந்தால் என்னை மன்னித் தருளும் என்று மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தயாராக இருக்கிறேன். காலையில் மீனாட்சி கோயிலுக்குப் போனேன்.

மதத்தை வைத்து அரசியலா?

எல்லா இடத்திலும் ஒரு பரம்பொருளைப் பார்க்கிற பக்குவத்தை நான் பெற்று இருக்கிறேன். எனவே, இது அல்ல அரசியல். மதத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். ஒருசிலர் மட்டுமே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். சிறுபான்மை மக்களின் உணர்வு காயப்படக்கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போன்றுதான் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் காயப்படுவதற்கும் நீங்கள் இடம்தரலாகாது. இதை வைகோ சொல்லத் தயங்கலாம். வேறு யாரும் சொல்லத் தயங்கலாம். எனக்கு அதுகுறித்து கவலை இல்லை. இந்தியாவில் இருக்கிற ஒவ்வொருவனும் இந்தியன். என் வீட்டில் நான் இந்து. நீ முஸ்லிம், அவன் கிறித்துவன், அவன் பார்சி, அவன் சீக்கியன். வீதிக்கு வந்து விட்டால், நீ இந்தியன். நான் இந்தியன். அனைவரும் இந்தியர்கள் தான். இந்தியனாக இருப்பதிலே என்ன தடை. இந்தியனாக இருப்பதற்கு தடையை பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருமானால், அந்த பாரதிய ஜனதா கட்சியை இல்லாமல் ஆக்குவது எனது முதல் கடமையாகும்.

ஆனால், உங்களை நான் கேட்கிறேன். 6 ஆண்டு காலம் வாஜ்பாய் ஆட்சி நடத்தினார். ஒருமுறை வாஜ்பாய் ஆட்சியில் ம.தி.மு.க.வும் இருந்தது. அதே வாஜ்பாய் ஆட்சியில் ஒருமுறை தி.மு.க.வும் இருந்தது. கலைஞர் சொல்லுவார், நான் ஏன் அங்கே இருந்தேன் தெரியுமா? நாளைக்கே சொல்கிறேன் உங்களுக்கு. மோடிக்கு இங்கே பெரிய ஆதரவு அலை வீசுகிறது என்பது உண்மை என்று கலைஞர் கருணாநிதி தெரிந்துகொண்டால், அடுத்த கணமே பாரதிய ஜனதா கட்சியின் கதவை அவர் தட்டுவார். அவருக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. பெரியார் உருவாக்கிய, அண்ணா வளர்த்தெடுத்த அத்தனை கொள்கைகளையும் கைகழுவி விடுவது ஒன்றுதான் அவர் வைத்திருக்கிற ஒரே கொள்கை. அவருக்கு இருக்கிற ஒரே கொள்கை அதுதான். அவர் வாழ வேண்டும். அவர் குடும்பம் வாழ வேண்டும். அதற்குப் பிறகு போனால் போகட்டும் கொஞ்சம் இந்த சமுதாயமும் வாழ்ந்து தொலையட்டும். அவருக்கு முன்னுரிமை இருக்கிறது. முதல் முன்னுரிமை என்ன? அவர்தான்.

இன்றைக்குக்கூட ரௌத்திரத்தில் ஒரு கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறேன், உலகத்திலேயே உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்? என்று கருணாநிதியைக் கேட்டிருக்கிறார்கள். கேட்டார்களோ இல்லை, அவரே கேட்டுக் கொண்டாரோ? அவரே கேள்வி அவரே பதில்தானே! அதற்கு அவர் எழுதுகிறார், பிடல் காஸ்ட்ரோ. என்னிடம் ஐயா, கருணாநிதி இப்படிச் சொல்லி இருக்கிறாரே, பிடல் காஸ்ட்ரோவின் எந்த குணமாவது இவரிடம் இருக்கிறதா? என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நான் அதற்கு பதில் எழுதியிருக்கிறேன். பிடல் காஸ்ட்ரோ போராளி. ஆதிக்க எதிர்ப் பாளன் அவன். பாடிஸ்டாவினுடைய முதலாளித்துவ அமெரிக்க அடிவருடி ஆட்சியை ஒழித்து ஒரு புரட்சிகரமான சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதற்காகப் போராடிய போராளி அவர். கலைஞர் கருணாநிதி வாயில் மட்டுமே வீரத்தைப் பேசிக்கொண்டிருக்கிற வாய் வீரர். அவரது பக்கத்திலே இருந்த கண்ணதாசன் மிக அழகாகச் சொல்வார். கலைஞர் கருணாநிதியும், கருணாநிதி பரிவாரமும் எப்படி என்பதைப் பற்றி அவன் சொல்வான், கலைஞர் கருணாநிதி மேடை போட்டால் சொல்வார், படை இங்கே, தடை எங்கே? படை தயாராக இருக்கிறதாம். உடனே இந்திய அரசு தடை இங்கே, படை எங்கே? அவ்வளவுதான். ஒரு படையும் காணவில்லை. உடம்பில் வேண்டு மானால் படை இருக்குமே தவிர, ஒரு படையும் இருக்காது. வெறும் வார்த்தை வாய் வீரர். எந்த வகையிலும் பிடல் காஸ்ட்ரோவை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறபொழுது, ஒன்றில் அவரை ஒப்பிட முடியும் என்றேன். என்ன தெரியுமா? ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகாலம் சலிப்பில்லாமல் அந்த அதிகார நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோவுக்குப் பதவியில் இருப்பது பிடிக்கும். கருணாநிதிக்கும் பதவியில் நீண்ட காலம் இருப்பது பிடிக்கும். ஆனால், அதிலேகூட ஒரு வேற்றுமை இருக்கிறது. என்ன தெரியுமா? பிடல் காஸ்ட்ரோ வயது முதிர்ந்த நிலையில் இனி நம்மால் முடியாது என்று தன்னுடைய தம்பியை அதிபராக கியூபாவின் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு விலகிக்கொண்டார். ஆனால், கருணாநிதி சக்கர வண்டியில் சக்தியற்றுப் பயணம் செய்தாலும் ஸ்டாலினை முதலமைச்சராக்கவோ, தலைவராக்கவோ தயாராக இல்லை. இதுபோன்ற மனிதர்களைத்தான் நாம் பார்க்கிறோம்.

தமிழனுக்குத் துரோகம்

நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். எனக்கு ஒரு அணி வேண்டும். நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் நியாயம் சொல்லுங்கள். அவ்வளவுதான். இங்கே கூடியிருக்கிற இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து நான் கேட்கிறேன் நீங்கள் நியாயம் சொல்லுங்கள். எனக்கு காவிரிப் பிரச்சினையில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஐந்தாண்டு காலம் மத்திய அரசு கெஜட்டில் போடாமல், அரசிதழில் வெளியிடாமலே தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததா? இல்லையா? ஒரு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு உடனே அரசிதழில் வெளியிட வேண்டுமா? இல்லையா? ஏன் வெளியிடவில்லை? கர்நாடகத்திற்கு ஆதரவாக தமிழனுக்குத் துரோகமாக இந்த மன்மோகன்சிங் அரசு நடந்ததா இல்லையா? கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

இரண்டு மலையாள மீனவர்கள் கொல்லப்பட்டபொழுது, இத்தாலி அரசை நிர்பந்தப்படுத்திப் பணியச் செய்ததே? ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் செத்தார்களே, சுட்டுக் கொல்லப்பட்டார்களே! இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? ராஜபக்சேவுக்கு எதிராக மன்மோகன் சிங் வாயிலிருந்து ஒரு கண்டனம் வந்ததுண்டா? ஐநூறுக்கும் மேற்பட்ட என் தமிழ் மீனவர்கள் செத்தார்கள். ஆனால், நீங்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரே நாளில் முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட என் குலமக்கள் கொன்றொழிக்கப் பட்டார்களே ராஜபக்சே அரசினால், அதற்குப் பின்னாலே இருந்து எல்லா கரும காரியங்களையும் செய்தது இந்த மன்மோகன்சிங்கினுடைய அரசுதானே!

கச்சத்தீவு யார் சொத்து?

கச்சத் தீவு எவனுடையது. மோதிலால் நேரு தானாகச் சம்பாதித்து, தான் சம்பாதித்த பணத்தில் வாங்கியதுதான் ஆனந்த பவனம். அந்த ஆனந்த பவனத்தை, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்துகிறபொழுது உப்புச் சத்தியாகிரகம் நடத்தி ஒரு ஆட்சியை மாற்றிவிட முடியுமா? என்று மோதிலால் நேரு சிரித்தார். ஆனால், காந்தி தொடங்கிய அந்தப் பயணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தார்கள். இந்தத் தேசமே அவர் பின்னால் நின்றது. பார்த்து வியந்தார்கள். அந்த மனிதனுடைய அரசியல் வியூகத்தை உணர்ந்து, என்னுடைய சம்பாத்தியத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆனந்த பவனத்தையே நான் தேசத்திற்கு அர்ப்பணிக்கிறேன் என்று மோதிலால் நேரு சொன்னார். அது சரி, அது அவர் சம்பாதித்தது. கச்சத் தீவு என்ன நேருவின் குடும்பம் சம்பாதித்த சொத்தா? மோதிலால் நேரு சம்பாதித்து கச்சத் தீவை நேருவுக்கு வைத்துவிட்டுப் போனாரா? நேரு அதை அப்படியே எடுத்துப் பாதுகாத்து மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்துவிட்டுப் போனரா? இந்திராகாந்தி தன்னிடம் இருக்கும் சொந்தச் சொத்து கச்சத் தீவு என்று சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கு சீதனமாக எடுத்துக்கொடுத்தாரே, யார் சொத்து? சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்து இல்லையா அது?

மாநிலங்கள் அவையில் எப்படி வைகோ அவர்கள் 18 ஆண்டு காலம் வீர முழக்க மிட்டாரோ, அதுபோல் சிலகாலம் எஸ்.எஸ்.மாரிசாமி என்று ஒரு மனிதர் இருந்தார். சுதந்திரா கட்சியில் இருந்தவர். அந்த எஸ்.எஸ். மாரிசாமி காண்டீபம் என்று ஒரு பத்திரிகை நடத்தினார். அந்த காண்டீபம் பத்திரிகையில் கச்சத் தீவை இந்திரா காந்தி தாரை வார்த்தபொழுது, இது முழுக்க முழுக்க சேது சமஸ்தானத்திற்குச் சொந்தமானது என்று ஆவணங்களை எல்லாம் வெளியிட்டார். மாநிலங்கள் அவையிலும் பேசினார்.

அந்தக் கச்சத் தீவை இன்றைக்கு நீங்கள் திரும்பப் பெறவேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிற பொழுது, கச்சத் தீவுக்கும் இந்தியாவுக்கும் சம்மந்தமே இல்லை என்று கைகழுவிவிட்ட மன்மோகன் சிங் அரசுதானே. நண்பர்களே வரிசையாக நான் சொல்லிக்கொண்டே போகலாம் காங்கிரசும், மத்திய அரசும் இந்த தேசத்திற்கு இழைத்தத் தீமைகளைப் பற்றி!

மன்மோகன்சிங் மனிதப் புனிதர். ஆனால், மூன்று ஊழல்களும் எங்கே நடந்து எங்கே முடிந்தது என்று ஆய்வு செய்துகொண்டே போனால், அது பிரதமர் அலுவலகத்திலேதான் போய்ச் சேருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் அதைத் தடுத்திருக்க முடியும் மன்மோகன் சிங்கால். தடுக்க வில்லையே? நிலக்கரி ஊழல் 2006 இல் இருந்து 2009 இல் நிலக்கரி சுரங்கங்களில் இட ஒதுக்கீடு கொடுத்த பொழுது இவருடைய பொறுப்பிலேதான் இருந்தது. அந்த நிலக்கரி ஊழலை அவரால் தடுக்க முடியவில்லையே! ஏன்? இப்பொழுது நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் ரயில்வே வாரியத்தில் நடைபெற்ற ஊழல் பவன் பன்சால் யார்? அவர்தான் இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் அடம்பிடித்துப் போட்டவர் மன்மோகன்சிங். சி.பி.ஐ. மூலமாக நாம் சிக்கி விடுவோம் என்பதற்காக ஆவணங்களையே திருத்துவதற்கு முயன்ற சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் யார்? அவர்தான் சட்ட அமைச்சராக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் சண்டையிட்டு கொண்டு வந்து உட்கார வைத்தவர் மன்மோகன்சிங்.

ஊழல் என்பது சகிக்கக்கூடியதா? என் இனத்தை அழிக்கக்கூடியது என்பது சகிக்கக்கூடியதா? என் இனத்துக்குச் சொந்தமான நிலத்தையே இன்னொரு வனுக்குக் கொடுத்துவிட்டு, அது எனக்கு உரிமையே இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்வது சகிக்கக் கூடியதா? காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் நகலை ஐந்தாண்டு காலம் மறைத்து வைத்து அரசிதழில் வெளியிடாமலேயே தமிழ்நாட்டின் தஞ்சை விவசாயிகளின் முதுகெலும்பை முறித்தீர்களே, அது சகிக்கக்கூடியதா? பெருந்தலைவர் காமராஜரின் கனவுத் திட்டம்தானே நெய்வேலி நிலக்கரி சுரங்கத் திட்டம். ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய் இலாபம் தருகிற நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலே இருந்து 5 விழுக்காடு தனியாருக்குத் தாரை வார்க்க முயன்றீர்களே, இது சகிக்கக்கூடியதா? வரிசையாகச் சொல்லலாம்.

எனக்கும் ஒரு கனவு....

இந்த அணி அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உண்மை. நீங்கள் என்னை வகுப்புவாதி என்று சொன்னாலும் சரி, மதவாதி என்று சொன்னாலும் சரி, சொல்லிக் கொள்ளுங்கள். என் இருதயம் சுத்தமாக இருக்கிற வரையில் எவன் குறித்தும் நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதை எனக்குக் கற்றுக் கொடுத்தது காந்தி. ஆயிரம் பழிகளைச் சுமப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும் எனக்கு எதிராகக் கோபப் பார்வை வீசக்கூடிய அளவுக்கு இந்தக் காரியத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இதனால் எனக்கு என்ன இலாபம்? என் காந்திய மக்கள் இயக்கத்திற்கு என்ன இலாபம்? ஒன்றும் கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் ஐம்பதாண்டு காலம் ஆகிவிட்டது.

1969 இல் அண்ணா கண் மூடினார். இன்றைக்கு 2013 இந்த இடைப்பட்ட காலத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு ஊழலற்ற ஆட்சியை நீங்கள் பார்த்தீர்களா? மார்ட்டின் லூதர் கிங் அன்றைக்கு இலட்சக் கணக்கான கருப்பர்களைத் திரட்டி, “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்றார். எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. ‘ஊழலற்ற ஒரு அரசு. மது அற்ற ஒரு மாநிலம்’. இது என் கனவு. இந்தக் கனவை நனவாக்கக்கூடிய சக்தி இந்தத் தமிழ்நாட்டில் வைகோவை நீங்கள் தேர்ந்தெடுத்தால் இருக்கும் என்பது எனது எண்ணம், நம்பிக்கை இதைத்தவிர வேறொன்றும் இல்லை.

ஜெ.பி.சொன்னது....

ஆனால், வைகோ மட்டுமே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே 234 தொகுதிகளில் தனியாக களம் கண்டு ஒரு பெரும்பான்மை அரசை உருவாக்கக்கூடிய சூழல் நாளைக்கே வந்துவிடாது. நாளைக்கு வராது. ஏற்கனவே இருபதாண்டுக் காலம் அவர் களப்பணியைச் செய்திருக்கிறார். இன்னும் இருபதாண்டுக் காலம் எங்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அப்படியென்றால், இந்த தேசத்தின் மீது நாட்டம் உள்ள, தமிழ்ச் சமுதாயத்தின் மீது நாட்டமுள்ள மனிதர்கள் ஒன்றுசேர வேண்டும். எப்படி இந்திராகாந்தியின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு ஜனசங்கத்தோடு காமராஜர் நின்றாரோ, இந்திராவின் நெருக்கடி கால கொடுமை களில் இருந்து நாட்டை விடுவிப்ப தற்காக, சோசலிஸ்ட்டு ஜெயப்பிரகாச நாராயணனை விட இந்த தேசத்தை நேசித்தவர் யார்? பீகார் கலவரம் நடந்தபொழுது ஜெ.பி. சொன்னதை இந்த மாத ரௌத்திரத்தில் நான் போட்டிருக்கிறேன். படிக்கிறேன் கேளுங்கள், “பாரத தாயின் முகத்தில் நீங்கள் அனைவரும் கரியைப் பூசி விட்டீர்கள். உங்கள் காட்டுமிராண்டித் தனத்தை என் கண்களால் பார்த்துக் கலங்கினேன். இவ்வளவு கொடுமை யான காட்சிகளை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டது இல்லை. இந்த முஸ்லிம் மக்கள் பல நூற்றாண்டுகளாக உங்களோடு இணைந்து வாழ்ந்து வருபவர்கள். சித்தப்பா என்றும், மாமா என்றும், மகனே என்றும், மகளே என்றும் நேற்றுவரை சொந்தம் கொண்டாடிய வர்களை இன்று இரக்கமின்றிப் பழிவாங்கிவிட்டீர்கள். ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளையும், பெண் களையும், முதியவர்களையும் எப்படி உங்களால் மனம் வந்து தாக்க முடிந்தது? திடீரென்று ஏன் இப்படி வெறி பிடித்த விலங்குகள் ஆனீர்கள்? வீடுகளிலும், தெருக்களிலும் பிணக் குவியல். பழிவாங்கும் கோழைத்தனத்தில் மனிதர்கள் திரண்டுபோவதைக் கண்டு என் இதயம் வலிக்கிறது” ஜெ.பி.. ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை நான் தமிழ்படுத்தி போட்டிருக்கிறேன்.

அப்படி இசுலாமியர்களுக்காக இரத்தக் கண்ணீர் வடித்த ஜெ.பி. 1977 இல் இந்திராகாந்தியை வீட்டுக்கு அனுப்பு வதற்கு அந்த ஜனசங்கத்தோடு கூட்டு வைத்தாரா இல்லையா? அப்படி என்றால், ஜெ.பி. இசுலாமியர்களுக்கு எதிரியா? மாற்று சொல்லுங்கள் நீங்கள்.

சிவப்புச் சிந்தனையாளர்கள் நிலை

தமிழ்நாட்டில் எங்கே மாற்று. இடதுசாரி களுக்கு பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இரண்டு இடங்களுக்காக நாடாளுமன்றத் தேர்தலில் போய் காத்துக்கிடக்கிறீர்கள். இரண்டு தொகுதி களுக்கு மேல் சி.பி.ஐ.க்கும், சி.பி.எம். க்கும் கொடுத்துவிடுவாரா ஜெயலலிதா? இந்த இரண்டு இடங்களைப் பெறுவதன் மூலமாக இரண்டுபேரை நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதைத் தவிர இந்தத் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கும். ஒரு ராஜாவை மீண்டும் நீங்கள் மாநிலங்களவைக்கு அனுப்புவதற்காக என்ன பாடுபட்டீர்கள்? சுதாகர் ரெட்டி யார்? இளம் பருவத் திலேயே போர் குணத்தோடு புறப்பட்டவன். கரும்பலகை பள்ளிக் கூடத்தில் இல்லை என்பதற்காக அந்த மாவட்டம் முழுவதும் மாணவர் கிளர்ச்சியை உருவாக்கியவன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய இன்றைய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் யார்? ஏ.பி.பரதனும், சுதாகர் ரெட்டியும் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் ராஜாவுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் காத்துக் கிடந்தார்களே! ஜெயலலிதா பார்க்க வில்லையே, அப்பாயிண்டமென்ட் கொடுக்கவில்லையே!

அதற்குப் பிறகும் இந்தச் சிவப்புச் சிந்தனையாளர்கள் விடவில்லையே. டெல்லியில் போய் ஜெயலலிதா உட்கார்ந்து இருக்கிற பொழுது, அங்கே தமிழ்நாடு இல்லத்தில் போய் காத்துக் கிடந்தார்களே, அங்கு ஜெயலலிதா என்ன சொன்னார். ஐந்து இடங்களில் நாங்கள் போட்டி இடுகிறோம். ஆறாவது இடத்தில் வேண்டுமானால், நீங்கள் நில்லுங்கள் என்றார். ஆறுhவது இடத்தில் நின்றால் வெற்றிபெற வாய்ப்பே கிடையாது. கேலி செய்தார்கள் அல்லவா? அந்த ஜெயலலிதாவிடம் மீண்டும் இரண்டு இடங்களைப் பெறுவதற்குப் போய் நிற்கிறீர்களே, உங்களை வைத்துக் கொண்டு மாற்று அணியை எப்படி உருவாக்க முடியும்.

இன்று சொல்கிறேன், இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இதற்கு மாற்று, ஒரு மூன்றாவது அணியை உருவாக்கு வதற்கான முயற்சியை நீங்கள் மேற் கொண்டீர்களா? கேட்டால் பிரகாஷ் காரத்தும், ஏ.பி.பரதனும் சொல்கிறார்கள், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு மூன்றாவது அணியை உருவாக்கப் பார்ப்போம் என்று. அசிங்கமாக இல்லை. தேர்தலுக்கு முன்பு ஒரு சிந்தாந்த அடிப்படையில் ஒரு அணியை உருவாக்குகிற சக்தி உங்களுக்கு ஏன் இல்லை. ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஒன்றாக நீங்கள் சேர்த்துவிட முடியுமா? மாயாவதியையும், முலாயம் சிங்கையும் ஒன்றாக நீங்கள் சேர்த்துவிட முடியுமா? சந்திரபாபு நாயுடுவையும், ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒன்றாக சேர்த்துவிட முடியுமா? எங்கே அமையும் ஒரு மாற்று அணி?

2004 தேர்தலில் இடதுசாரிகள் இலட்சணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1.4 விழுக்காடு வாக்குகள் பெற்று 10 நாடாளுமன்றத் தொகுதி களைப் பெற்றது. 2009 இல் அதே சி.பி.ஐ. 1.43 விழுக்காடு வாக்குகளை வாங்கி 4 நாடாளுமன்ற உறுப்பினர் களைத்தான் பெற்றது. 2004 இல் வாங்கியதைவிட 0.02 விழுக்காடு கூடுதலாகக் கிடைத்தாலும், பத்து பேர் இருந்த இடத்தில் நான்கு பேர் உட்கார்ந்தீர்கள்.

2004 இல் சி.பி.எம். 5.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, 43 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். 2009 இல் 5.3 விழுக்காடு வாக்கு, 0.3 விழுக்காடு குறைந்துவிட்டது. நிலைமை என்ன ஆயிற்று 16 நாடாளு மன்ற உறுப்பினர்கள். 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்தில் வெறும் 16 பேர் உட்கார்ந்தீர்கள். உங்களுக்கு இருப்பது ஐந்து விழுக்காடு வாக்கு. சி.பி.ஐ.க்கு இருப்பது ஒரு விழுக்காடு வாக்கு. இந்த 6 விழுக்காடு வாக்கை வைத்துக்கொண்டு இந்தியாவில் மாற்று அரசியலை உங்களால் உருவாக்க முடியுமா? ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக் கூடிய வலிமை மிக்க மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து மாற்று அணி அமைப்பது என்று நீங்கள் முடிவெடுத்தால் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நீங்கள் ஒன்றாக்கு வீர்களா? சந்திரபாபு நாயுடுவையும் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒன்றாக்குவீர்களா? லாலுபிரகாஷ் யாதவையும் நிதீஷ்குமாரையும் ஒன்றாக்குவீர்களா? மாயாவதியையும் முலாயம்சிங்கையும் ஒன்றாக்குவீர்களா? மம்தா பானர்ஜியும் நீங்களும் ஒன்றாக நிற்பீர்களா? பிறகு எப்படி மூன்றாவது அணி அமையும்?

நான் ஜெயலலிதாவை ஆதரித்தேன். ஓர் ஆண்டு முழுவதும் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினேன். ஏன்? கருணாநிதி யிடம் இருப்பது 20 விழுக்காடு வாக்கு. அவர் கூட்டணி சேர்த்துக்கொண்டால் 25 விழுக்காடு வாக்கு வைத்திருப்பார். அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், 30 விழுக்காடு வாக்குகள் வேண்டும். அந்த 30 விழுக்காடு வாக்கு ஜெயலலிதா அமைக்கக்கூடிய கூட்டணிக்கு இருக்கிறது. கருணாநிதியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், ஜெயலலிதாவை விட்டால் வேறு வழி கிடையாது.

அடிப்படைப் பண்புகள் மாறாது

அதே நேரத்தில் ஜூனியர் விகடனில் நான் ஜெயலலிதாவிற்கு எழுதிக் கொண்டிருக்கிறபொழுதே, ஜூனியர் விகடனில் எழுதுகிறேன், ஆதரித்து. ஆனந்த விகடனில் என்னுடைய கேள்வி பதில், வைகோவினுடைய கேள்வி பதில் எல்லாம் வந்தது. படித்திருப்பீர்கள். என்னை அப்பொழுது ஒரு வாசகர் கேட்கிறார், ஜெயலலிதாவை ஆதரிக்கிறீர்களே, ஜெயலலிதா குணம் மாறிவிட்டது என்று நம்புகிறீர்களா? என்று கேட்கிறார். அப்பொழுதே பதில் எழுதியிருக்கிறேன். ஒரு பக்கம் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். இன்னொரு பக்கம் ஒரு சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள் எப்படி சாகும்வரை மறையாதோ, அதே போன்றுதான் ஜெயலலிதாவின் அடிப்படை பண்புகள் மாறவே மாறாது. ஆனாலும் ஜெயலலிதாவை ஆதரித்தேன் ஏன்? திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இருந்து இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவரை விட கொஞ்சம் வலிமையுள்ளதாக ஒரு அணி இருக்க வேண்டும் என்பதாகும்.

வேறு வழி தெரியவில்லை

மோடி மீது எங்களுக்கு ஒன்றும் காதல் இல்லை. குஜராத் கலவரத்தை நியாயப் படுத்துகிற வேலையும் எங்களுக்கு இல்லை. அந்த வேலையைச் செய்யப் போகின்றவர்கள் நானும் இல்லை. வைகோவும் இல்லை. விஜயகாந்தும் இல்லை, யாரும் இல்லை. ஆனால், தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவை விட்டால் நாதி இல்லையோ, அது போல் இந்திய அரசியலில் என் இனத்தைக் கொன்று குவித்த இந்திரா காங்கிரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற பாரதிய ஜனதா கட்சியை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழி சொல்லிக்கொடுங்கள். இந்த ஒரு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு நீங்கள் மாற்றுவீர்களா?

இந்திய அரசியல் சட்டத்தைப் படித்தவன். முறையாக வழக்கறி ஞருக்குப் படித்து முறையாக வழக்கறிஞர் பணி ஆற்றியவன் நான். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைச் செய்திகளை 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாக்களித்தாலும் மாற்ற முடியாது. ஆகவே, மோடி ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக ஒரு காயைக்கூட அசைக்க முடியாது. உங்கள் உரிமைகளைப் பறிக்க முடியாது.

அதனால் நான் யோசித்தேன், சரி மோடியின் மீது இளைஞர்களுக்கு இன்றைக்கு ஆசை வந்திருக்கிறது. முதன் முதலில் வாக்களிக்கப்போகும் வாக்காளனுக்கு ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. வாக்கு வழங்கும் படித்த வர்க்கம், நடுத்தர வர்க்கம் எல்லாம் கோத்ராவுக்குப் பின்பு நடந்த கலவரத்தை நினைக்கவில்லை. ஏதோ மோடி வந்தால் ஒரு நல்லாட்சி நடக்கும். காரணம், ஒவ்வொரு ஊழல் செய்தியைக் கேட்டுக் கேட்டு சலித்து விட்டான் வாக்காளன். இந்த காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால், இந்த மோடி இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள். மோடியை ஆதரிப்பது என் வேலை இல்லை. இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் கூட 144 தடை உத்தரவு போடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்குப் போக முடியவில்லை. ஆனால், மோடி சொல்கிறார், 2002 க்குப் பிறகு 2013 இல் 11 ஆண்டு காலத்தில் என்னுடைய ஆட்சியில் ஏதாவது ஒருமுறை இந்து-முஸ்லிம் கலவரம் என்று நான் 144 தடை உத்தரவு போட்டேன் என்று சொல்ல முடியுமா? என்றார்.

இன்றைக்கு 15 விழுக்காடு வாக்குகள் அவர்களுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறதா? பயன்படுத்துவோம். ம.தி.மு.க.வின் கடுமையான உழைப்பின் காரணமாக இன்றைக்கு 10 விழுக் காடுக்கு மேல் வாக்குகளை வளர்த்து வைத்திருக்கிறார் வைகோ. விஜய காந்தை நம்பக்கூடிய வாக்காளர்கள் 10 விழுக்காடு இருக்கிறார்கள். மூன்று பேரும் சேருகிறபொழுது 30 விழுக் காடுக்கு மேலே போகிறது. எனக்குத் தேவை தி.மு.க. ஆட்சி இனி வரக் கூடாது. எனக்குத் தேவை அ.தி.மு.க.வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2014 இன்றல்ல. அப்படி என்றால் இதுவரையில் மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தது. மூன்றாவது அணி என்பதை நீங்கள் பார்த்தால், கருணாநிதியிடம் போய் பிச்சை கேட்டு, கேட்ட பிச்சை கிடைக்க வில்லை என்ற கோபத்தோடு வெளியே வந்தவர்கள், ஜெயலலிதாவிடம் பிச்சைப் பாத்திரத்தோடு சென்று கேட்ட தொகுதி பிச்சையாகக் கிடைக்கவில்லை என்று கோபத்தோடு வந்தவர்கள் தேர்தல் நேரத்தில் திடீரென்று ஒரு கூட்டணியை வைப்பார்கள். அது மூன்றாவது அணி. அந்த மூன்றாவது அணியை நீங்கள் பார்த்தால், 1 சதவீத ஓட்டு, 2 சதவீத ஓட்டு, 3 சதவீத ஓட்டு வைத்து இருப்பார்கள். கூட்டிப் பார்த்தால் 10 சதவீதம் இருக்காது. வாக்காளர் வாக்குச் சாவடிக்குப் போகிற போதே முடிவு எடுக்கிறார், அது ஏற்கனவே மூன்றாவது அணி. மொத்தமே 10 சதவீதம் இல்லை. இதற்கு ஓட்டுப் போட்டுப் பயனில்லை என்று முடிவெடுத்துவிடுகிறான்.

மாற்று அணி

அதனால்தான் நான் தெளிவாகச் சொல்கிறேன், நான் விரும்புவது மூன்றாவது அணி அல்ல. மாற்று அணி. இதுவரைக்கும் தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே 1966 இல் மாநிலக் கல்லூரியில் மாணவனாக அடியெடுத்து வைத்தபொழுது பெருந்தலைவர் காமராஜரின் காலடியில் போய்ச் சேர்ந்தவன் நான். நாற்பதாண்டு காலத்திற்கு மேல் இந்த அரசியல் நடவடிக்கைகளை தேர்தல் முடிவு களைப் பார்த்தவன் நான். ஒரு நாளும் மாற்று அணி இந்த மண்ணில் அமையவே இல்லை. காரணம், 30 விழுக்காடு வாக்குகளைக் கொண்ட ஒரு அணி அமையவில்லை. இப்படி ஒரு அணி அமைந்தால், தமிழகத்தின் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முதலில் 30 விழுக்காடு வாக்குகள் வருவதற்கான அணி அமையும். இந்து பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வந்து, தமிழருவி மணியன் முயற்சியினால், 30 விழுக்காடு வரக்கூடிய ஒரு மாற்று அணி அமைய இருக்கிறது என்று வந்த கணமே அ.தி.மு.க. வட்டாரம் அதிர்ந்துபோய் இருக்கிறது. தி.மு.க. வட்டாரம் திகிலுடன் கிடக்கிறது. இந்த மாற்றம் வரவேண்டாமா?

நாங்கள் என்ன பாரதிய ஜனதா கட்சியின் சம்பந்திகளா? மோடியுடன் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு, மோடியுடன் வாழ்வதற்காக இப்பொழுது புறப்பட்டவர்களா? ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் இதை வைத்து நடக்கட்டும். ஒரு மாற்றம் நிகழட்டும். தேர்தல் முடியும். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என் தோள் களில் வைகோவைத் தூக்கி வைக்கப் போகிறேன்.

வைகோவின் தம்பிகள்

இந்த மதுரை மண்ணில் ஏன் நாங்கள் இந்தக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம்? வைகோ அவர்கள் இதுவரை என்னிடம் சொல்லவில்லை நான் தேர்தலில் எங்கே நிற்கப் போகிறேன் என்று. பலமுறை நான் அவரிடம் பேசுகிறேன். மணிக் கணக்கில் பேசுகிறேன். நீங்கள் எங்கே நிற்கப் போகிறீர்கள் என்று நானும் கேட்ட தில்லை. அவரும் சொன்னதில்லை. ஆனால், அவர் எங்கே நிற்பார் என்பது போல அவருடைய தம்பிகளுக்கு, தொண்டர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படி அவர் எங்கோ நிற்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மனிதன் இந்த முறை நாடாளுமன்றம் நிச்சயம் சென்றாக வேண்டும். இப்படி ஒரு கூட்டணி அமைகிறபொழுது எந்தச் சிரமமும் இல்லாமல் அந்த மனிதன் நாடாளுமன்றம் போக முடியும். அந்த மனிதனை மீண்டும் நீங்கள் தனியாக விட்டுவிட்டால் என்ன நடக்கும்?

கலைஞர் ஜெயலலிதாவைப் பற்றிக் கவலைப்படுகிறார் என்று நினைக் கிறீர்களா? கலைஞருக்குத் தெளி வாகவே தெரியும். ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதா தான் என்று. கலைஞரை வீழ்த்துவதற்குத்தான் ஆயிரம் வியூகங்களை நாம் சேர்ந்து எடுக்க வேண்டும். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முறை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஐந்தாண்டு காலம் கைகட்டி உட்கார்ந்து கொண்டு இருங்கள் அடுத்த முறை தான் வரக்கூடாது என்று அவரே முடிவெடுத்து காரியங்களைச் செய்து கொண்டே இருப்பார். எனவே, ஜெயலலிதாவை அவர் பார்க்கவில்லை.

கலைஞர் நினைக்கிறார், நாம் 90 வயதைத் தொட்டுவிட்டோம். நம்முடைய பிள்ளையை நாம் பார்த்துப் பார்த்து பராமரித்து வளர்த்து வைத்து இருக்கிறோம். நாம் கண்மூடிய பிறகு இந்தக் கழகத்தில் ஸ்டாலின் இருந்து செங்கோல் ஏந்த வேண்டும். கோட்டைக்கு வரவேண்டும் என்றால், இருந்த பொழுதும் உள்ளே ஒருவன் தடையாக இருந்தான். வெளியே அனுப்பிய பிறகும் இவன் ஒருவன்தான் நாளைக்கும் தடையாக இருப்பான் என்று அவர் பார்வை வைகோ மீது விழுகிறது. தி.மு.க. கூட்டணி அமைக்கிறபோது அது ஒரு சக்தியோடு வைகோவைத் தோற்கடிக்க வரும். பண மூட்டையோடு வரும்.

போயஸ் தோட்டத்தில் எவனெல்லாமோ வந்து நிற்கிறான். ஆனானப்பட்ட காம்ரேடுகள் எல்லாம் வந்து காவடி எடுக்கிறார்கள். இந்த வைகோ இதுவரை நம்மிடம் வரவில்லையே? என் ஆதரவு இல்லாமல் நீ நின்று வெற்றி பெற்று விடுவாயா? பார்த்துவிடுகிறேன் ஒரு கை எனறு ஜெயலலிதா வியூகம் அமைக்கலாம். நண்பர்களே ஒரு பக்கம் ஜெயலலிதாவின் அதிகார பலம். அஇதி.மு.க.விடம் இருக்கிற பண பலம். இன்னொரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இருக்கிற பண பலம். திராவிட முன்னேற்றக் கழகத் தோடு கூட்டணி வைக்கக்கூடிய காங்கிரசின் மத்திய ஆட்சியிலே இருக்கிற அதிகார பலம். இவ்வளவுக்கும் இடையில் வைகோ நின்றாக வேண்டும். சுற்றிலும் பகை இருக்கும். அந்தப் பகை ஆயிரம் வசதிகளோடு வந்து முற்றுகை இடும். உள்ளே தனி மனிதனாக வைகோ நிற்பார். அந்த வைகோ அபிமன்யு ஆகிவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. ஒருநாளும் ஆகி விடக்கூடாது. அர்ஜூனன் காண்டீ பத்தை ஏந்திப் பெற்ற வெற்றியை வைகோ பெறவேண்டும். அர்ஜூனன் காண்டீபத்தை ஏந்தி அவன் பெற்ற வெற்றி என்பது அர்ஜூனனால் மட்டும் வந்து வாய்த்தது அல்ல. அதில் தேரோட்டியாக வந்து உட்கார்ந்த ஸ்ரீகிருஷ்ணனுக்கும் பங்கு இருக்கிறது. எதுவும் கூட்டு இல்லாமல் நடக்காது.

இறைவனே இராமனாகத்தான் மண்ணில் பிறந்தான். ஆனால் அந்த இராமன் குரங்குகளோடு கூட்டணி வைத்துத் தானே பகையை வெல்ல முடிந்தது. குரங்குகளோடு கூட்டணி வைத்த தனால் இராமனை நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்லி விடுவீர்களா? ஏதோ ஒரு வகையில் அவனுக்குக் கூட்டணி தேவைப்பட்டது அல்லவா? அது குரங்கோ எதுவோ? எனவே, நமக்கு இப்போது தேவை ஒரு வலுவான கூட்டணி இருந்தால், நான் இப்பொழுதே சொல்கிறேன். இப்பொழுதே அவர் எம்.பி.யாகிவிட்டால் தி.மு.க.வின் வியூகமும் முறியடிக்கப் படும், அ.தி.மு.க.வின் வியூகமும் தி.மு.க.வின் வியூகமும் முறியடிக்கப் படும். வைகோ நாடாளுமன்றம் போக வில்லை என்றால், அவருக்கா இழப்பு? நண்பர்களே, தெருக்கோடியில் இருப்பவன் போய் ஒரு எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்தால் ஐந்தாண்டுகளில் அவன் கோடீசுவரன் ஆகிவிடுவான். அவனுக்குத்தான் ஒவ்வொரு ஆண்டும் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுக் கிறார்களே. அதெல்லாம் பெரிய கதை. ஆனால் ஒன்று சொல்கிறேன், அதற்காக நான் கவலைப்படவில்லை. நாடாளு மன்ற மேலவையில் இருந்தாலும் சரி, கீழவையில் இருந்தாலும் சரி வைகோ என்கிற தனி மனிதன் இந்த இனத்தையே காப்பதற்கு போராடு வதற்கு இருந்த மனிதன், சென்றமுறை அந்த வாய்ப்பு இல்லை. ஈழத்தில் இவ்வளவு அவலங்களும் அரங்கேறின.

காமராஜரின் புகழ் பாடுபவன்

கொஞ்சம் கற்பனை செய்கிறேன். மன்மோகன் சிங்காவது இரவல் நாற்காலியில் உட்கார்ந்து பிரதமராக இருப்பவர். சோனியாகாந்தி ஒரு இழு இழுத்தால் முடிந்துவிடும். ஆனால், ராஜீவ்காந்தி சொந்த பலத்தில், நேரு குடும்பம் என்ற பலத்தில் பிரதமரான மனிதர். நேரு காலத்தில் நேருவுக்கே கிடைக்காத ஆதரவு ராஜீவ்காந்திக்கு 1984 இல் கிடைத்தது.

அந்த ராஜீவ் காந்திக்கு எதிரே நின்றுகொண்டு, எங்கே ஓடுகிறாய், ஓடாதே நில்! என்று சொல்லக்கூடிய துணிவு வைகோவிற்கு இருந்ததே! இந்த இனத்தின் மீதும், ஈழத்தின் மீதும் அவர்கள் பாதிப்பை உருவாக்குகிற பொழுது இந்த மனிதன் போய் இருந்தால், மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தாலோ எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ, நான்கு கப்பல்களை அனுப்புவது, ஆயுதங்களைக் கொடுப்பது பின்னால் இருந்து பாதுகாப்பு கொடுப்பது என்று யோசிக்கிற பொழுதெல்லாம் கனவிலும் நனவிலும் வைகோவின் கர்ஜனை வந்து பாதுகாத்து இருக்குமே. விட்டுவிட்டோமே நாம்.

அவருக்கு பல்லாண்டு பாடுவதா எனக்கு வேலை? காமராஜர் என்கின்ற ஒரு தேவனுக்கு மட்டும்தான் நான் தெருப்பாடகன் சாகும்வரை. இன்னொரு காமராஜரை கண்டெடுப்பதற்கு நான் தேடுகிறேன். இன்னொரு காமராஜரை தேடுகிறேன். வைகோ உண்மையில் ஒரு ஆட்சியை அமைத்தால், காமராஜர் தந்த அந்தப் பொற்கால ஆட்சியும், அண்ணா தந்த ஊழலற்ற ஆட்சியும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு ஆட்சியாக தமிழகத்தில் உருவாகும். அதற்கு ஒரு களம் அமைய வேண்டும். நான் விஜயகாந்தோடு போய் உட்கார்ந்து பேசுவதனாலேயே விஜயகாந்தை முதலமைச்சராக்குவதற்கு வந்து விட்டேனா என்ன? இல்லை. எனவே புரிந்துகொள்ளுங்கள் ஒரு வலிமைமிக்க அணி அமைய வேண்டும், தமிழகத்தில் இருக்கிற தீமைகளை அகற்றுவதற்கு. இந்தியாவைப் பற்றிப் படர்ந்திருக்கின்ற ஊழல் நோயை அகற்றுவதற்கு மாற்று அணி அமைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். திரும்பத் திரும்ப வைகோ விலகிச் சென்றாலும் நான் பிடித்துப் பிடித்து இழுப்பேன்.

விஜயகாந்த் அலுவலகம் தேடிச் சென்று பேசவேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? நான் போய் விஜய காந்திடம் பேசுகிறேனே, ஒவ்வொரு வரிடமும் பேசுகிறேனே, எனக்கு என்ன இருக்கிறது, ஒன்றும் கிடையாது. அதனால்தான் நான் எழுதினேன், ஜெயகாந்தனின் என்றோ சில நேரங்களில் சில மனிதர்கள் படப் பாட்டை நான் எழுதிக்கொண்டே வருகிறபொழுது என் மனதில் பொரி தட்டியது. அதனால்தான் எழுதினேன். வாழ்ந்ததைச் சொல்லுகிறேன், நீங்கள் வாழ்ந்திடச் சொல்லுகிறேன்; நீங்கள் தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலையெழுத்தென்றால், உம்மைத் தாங்கிட நாதியுண்டோ! என்னை நம்பவும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கையில்லையென்றால், ஒரு தம்பிடி நட்டம் உண்டோ! என்று நான் எழுதியது விஜயகாந்துக்கு. விஜயகாந்துக்கு எழுதினேன்.

முயற்சிக்கு துணையிருங்கள்

இந்த மாற்று அணி அமைய வேண்டும். மாற்று அணி அமைவதற்கு நீங்கள் அத்துணைபேரும் தயாராக வேண்டும்; ம.தி.மு.க. தொண்டர்களுக்குச் சொல்கிறேன், வைகோவை அணி அமைக்கச் சொல்லுங்கள். காங்கிரசை கருவறுப்போம் என்று மேடையில் முழங்கினால் போதாது. அணி களத்தில் வரவேண்டும். அவர் தெளிவாக இருக்கிறார், என்னிடம் பேசும்போதே சொன்னார், அண்ணே 370 ஆவது பிரிவில் கை வைக்கக்கூடாது பி.ஜே.பி., காமன் சிவில்கோடு என்று சொல்லி விட்டு இசுலாமியர்களுடைய தனிப் பட்ட உரிமைகளில் அவர்கள் தலை நீட்டக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி சம்பந்தப்பட்ட தீர்ப்பு வருகிற வரையில் அந்தப் பிரச்சினையை அவர்கள் கையில் எடுக்கக்கூடாது. அவர் எனக்கு வைத்த நிபந்தனையைத்தான் நான் ஜூனியர் விகடனில் கட்டுரை எழுதினேன். எனவே, நிபந்தனைகள் இல்லாமல் ஒப்பந்தம் போடுகிற கொத்தடிமை அல்ல வைகோ. நல்ல நிபந்தனையின் அடிப்படையில் சிறுபான்மை சமுதாயத்தின் நலனையும் காத்து, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் நலனையும் காத்து, ஒட்டுமொத்த இந்திய சமுதயாத்தின் நலனையும் காக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், என் முயற்சிக்கு நீங்கள் துணை நில்லுங்கள்.

வைகோவுக்குத் தேர்தல் பிரச்சாரத்தை காந்திய மக்கள் இயக்கம் இன்று இந்த இடத்தில் தொடங்கிவிட்டது. நாடாளு மன்றத்தில் வைகோ போய் அமருகிற வரையில் காந்திய மக்கள் இயக்கத் தினுடைய களப்பணி தொடரும்.

தமிழருவிமணியன் இவ்வாறு உரை ஆற்றினார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)