கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வைகோ கடிதம்

Issues: Human Rights

Region: Tamil Nadu

Category: Articles, Letters, Headlines

Date: 
Mon, 17/10/2016

 

 

 

பெறுநர்

     மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்
     நிதி அமைச்சர்.
     புனித ஜார்ஜ் கோட்டை,
     சென்னை - 600 009

அன்புடையீர் வணக்கம்.

சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் வட்டம், கீழடிக்கு அருகில் உள்ள சிலைமான் என்ற ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியம் என்பவரின் 10 ஆண்டுக் கhல ஆய்வில், கீழடி கிராமத்தில் கி.மு.2050 முதல் கி.மு.5000 வரையிலான கhலத்தைச் சேர்ந்த பழந்தமிழர் வாழ்வியல் குடியிருப்புகள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மண்ணுக்குள் புதைந்து இருக்கின்ற விவரம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து, பெங்களூரில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.

இந்தப் பகுதி முழுவதும் தனியார் சிலருக்குச் சொந்தமான தென்னந் தோப்பாக உள்ளது. அங்கு உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர் பாலசுப்ரமணியத்தின் மாணவர்களாக இருப்பதால், அவருக்கு எல்லோரும் உதவி செய்து வருகின்றார்கள்.

மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்னை மரங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் குழிகளை அமைத்து ஆய்வு செய்வதாகவும், பின்னர் அந்தக் குழிகளை முன்பு இருந்தது போலவே மூடிக்கொடுத்து விடுவதாகவும் தொல்லியல் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி, அங்கேயே முகhம் அமைத்துத் தங்கி இருந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 43 குழிகள் அமைத்தும், இந்த ஆண்டு 59 குழிகள் அமைத்தும்,  தொல்லியல் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்னை மரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் 10 அடி அகல நீளம் கொண்ட குழிகளை 20 அடி ஆழம் கொண்டதாக அமைத்து ஆய்வு செய்கின்றார்கள். ஒரு சில இடங்களில் நூறடி வரை இந்தக் குழிகள் நீண்டு செல்கின்றது.

இங்கு மண்பானைகள், தட்டுகள், நெசவு செய்யப் பயன்படும் தக்கிளி ஓடம், யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட தாயக்கட்டை, உதிரன், சேந்தன் முயன் என்ற பெயர்கள் கொண்ட மண் சட்டிகள் போன்றவை கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் கிடைத்த பொருட்களில், ஆய்வுக்குத் தேவையான சிலவற்றை பெங்களூரில் உள்ள தொல்லியல் ஆயவு மையத்திற்கு எடுத்துக்கொண்டு போனதுபோக மீதம் இருந்த பொருட்களை அந்தக் குழிகளிலேயே வைத்து, திரும்பவும் எடுக்கத் தக்க வகையில் மேலே மணலையும், பிளாஸ்டிக் சீட்டுகளையும் போட்டு மூடி விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைத்து விட்டனர்.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தோண்டப்பட்ட குழிகளில் நில மட்டத்தில் இருந்து பத்து அடிக்குக் கீழே சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சிறியதும், பெரியதுமான தண்ணீர்த் தொட்டிகள், பெரிய அடுப்புகள், பெரிய மண் பானைகள், அடுப்புக்குப் பக்கத்தில் இருந்து சுடுநீர் வெளியேறும் வகையில் எட்டு அங்குல விட்டமும், மூன்றடி நீளமும் உடைய ஒன்றுடன் ஒன்று இணைக்கத்தக்க வகையில் அமைந்த பல சுடுமண் குழாய்கள், அதன் வாய்க்கால் சுற்றுகளைக் கொண்ட உறைகிணறு, அதில் இருந்து எடுத்த தண்ணீரை நிரப்பி வைக்கப் பல தொட்டிகள் என தமிழர்களின் பல வரலாற்றுச் சான்றுகள் இன்னும் அப்படியே உள்ளன.

ஆய்வாளர்களின் கணிப்பில் இப்போது அவர்கள் ஆய்வு செய்துள்ள இடம் ஒரு நெசவுக் கூடமும், அதன் அருகில் இருந்த சாயத் தொழிற்சாலையாகவும் இருக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அந்த அமைப்பைப் பார்க்கும்போது, தற்கhலத்தில் உள்ளதைக் கhட்டிலும் சிறப்பான வாழ்க்கை முறையை அம்மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது.

தொல்லியல் துறையினர், இந்த இடத்தில் இருந்து கட்டம் கால்வாய் தண்ணீர் தொட்டிகள், அடுப்பு உள்பட குழியில் கிடைத்த எந்தப் பகுதியையும் எடுக்கhமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். ஆய்வுக்கhக சில செங்கல்களை மட்டும் எடுத்துள்ளனர். சில இடங்களில் தென்னை மரங்கள் குறுக்கே இருப்பதால் அவற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. இன்னும் கூடுதலான குழிகளை அமைத்து ஆய்வு செய்யும்போது இதுபோலவே பல கட்டடங்கள் உள்ளே இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும், இதுவரையிலும் கிடைத்துள்ள  பொருட்களை எல்லாம் தொல்லியல் துறையினர் பெங்களூர் கொண்டு செல்வதை ஆய்வாளர்கள் விரும்பவில்லை.

நாளை நம்முடைய வருங்கhலத் தலைமுறை மாணவர்கள் ஆய்வுக்குச் சென்றாலும்கூட, பெங்களூரில் உள்ளவர்கள் நமக்கு நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்களைக் கhட்டுவார்களா? அதுவரை இந்தப் பொருட்களை எல்லாம் பாதுகhப்பாக வைத்து இருப்பார்களா? என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில்தான் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கீழடியில் கிடைக்கும் கணக்கில் அடங்காத் தொல்லியல் பொருட்களை மேலே எடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கும், அதை எதிர்காலத் தமிழ் சமூகத்தின் மாணவர்களுக்கு காட்டுவதற்கும் ஒரு வரலாற்று ஆய்வகம் அமைக்க வேண்டும்;  அதற்குக் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், மாநில அரசுக்குக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதற்குச் சரியான பதில் இல்லாத நிலையில், 16.09.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதி உதவி கேட்டுள்ளார். உடனடியாக ஆசிரியர் பாலசுப்பிரமணியின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலாளருககு உத்தரவு வந்த பின்னர்தான், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வகம் அமைக்கத் தேவையான நிலத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்.

இதற்கு இடையில், சங்கம்-4 என்ற அமைப்பைச் சேர்ந்த கனிமொழி என்பவர் தமிழர்களின் பண்பாட்டு தடையங்களை பெங்களூர் கொண்டு செல்லக்கூடாது; ஆய்வுக்காக வெட்டப்பட்ட குழிகளை மூடாமல், பொதுமக்கள் பார்வைக்காக அப்படியே வைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

பெங்களூரில் உள்ள தொல்லியல் ஆய்வுத்துறையில் உள்ள அமர்நாத் இராஜேஸ், வீரராகவன் போன்ற சில தமிழ்நாட்டு ஆர்வலர்கள்தான் இந்த ஆய்வைச் சிறப்பாக மேற்கொண்டனர். அவர்களால் வழக்கு, நீதிமன்றம் என அலைய முடியவில்லை. இதுபோன்ற சிக்கல்களைக் கையாண்ட அனுபவம் இல்லாதவர்கள்.

பெங்களூரில் உள்ள தொல்லியல் துறையின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு அரசும், மக்களும் ஆர்வம் கhட்டாத நிலையில் உங்களுக்கு என்ன அக்கறை? பேசாமல் ஆய்வை விட்டுவிடுங்கள் என இவர்களிடம் சொல்வது போலத் தெரிகின்றது.

நீதிமன்றத் தடையால், செப்டம்பர் மாதமே மூடிக் கொடுக்க வேண்டிய குழிகளை இன்னும் மூடாமல் இருப்பதால், நிலத்தின் உரிமையாளர்கள் தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வழியில்லாமல் இருக்கின்றார்கள்.

மழைக் கhலம் துவங்க உள்ள நிலையில், முழுவதும் மணல் பகுதியான இந்தத் தென்னந்தோப்பில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கும்போது மண் சரிவு ஏற்படும். சில இடங்களில் தென்னை மரமும் சாயலாம். அப்படி நடந்தால் குழிக்குள் உள்ள பழந்தமிழர் கட்டட அமைப்புகள் சேதம் அடையும்.

இப்போதுள்ள குழப்பமான நிலையில், அங்குள்ள மக்கள் அடுத்த ஆண்டு ஆய்வுக்கு மீண்டும் தங்களின் நிலத்தைக் கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

தமிழக அரசு இரண்டு ஏக்கர் நிலத்தை விரைவாக ஒதுக்கிக் கொடுத்து விட்டாலும்கூட அதைத் தொல்லியல் மத்தியத் துறையினரிடம் ஒப்படைத்து, அவர்கள் ஆய்வுக்குப் பின்னர் கட்டடம் கட்டி முடித்து அதன் பின்னர்தான் பெங்களூருக்கு கொண்டு சென்ற பொருட்களையும், இப்போது நிலத்தில் உள்ள பொருட்களையும் அங்கே கொண்டுவந்து வைக்க முடியும். இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது. அதுவரை தொல்லியல் ஆய்வுகளையும் நிறுத்த முடியாது.

எனவே சிக்கலான நிலையில் உள்ள கீழடி தொல்லியல் ஆய்வுப் பணிகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் மாநில அரசு தலையிட்டு வழக்கை விரைந்து முடித்திடவும், தமிழக அரசின் சார்பில் தேவையான இடமும், நிதியும் ஒதுக்கிக் கொடுத்திடவும் ஆவன செய்திடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

அன்புள்ள

 (வைகோ)

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)