திருநெல்வேலியில் குடும்பமே தீக்குளிப்பு; கந்துவட்டிச் சட்டத்தைக் கைவிட்ட காவல்துறை! வைகோ கண்டனம்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Mon, 23/10/2017

 

 

 

 

திருநெல்வேலியில் குடும்பமே தீக்குளிப்பு;

கந்துவட்டிச் சட்டத்தைக் கைவிட்ட காவல்துறை! 


வைகோ கண்டனம்

 

திருநெல்வேலி மாவட்டம். கடையநல்லூருக்கு அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி ஆகியோர், நெல்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு முன்பு, மண் எண்ணெயைத் தங்கள் உடலில் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டதுடன், தங்களுடைய புதல்வியர் ஐந்து வயது மதி சரண்யா, ஒன்றரை வயது அட்சய பரணியா ஆகியோர் மீதும் மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளனர். 
 
80 சதவீதத்திற்கு மேல் கருகிய நிலையில், இனி அவர்கள் பிழைக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தி,  தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகின்றது. தங்கள் இரு பெண் குழந்தைகள் மீதும் மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார்கள் என்பதை நினைப்பதற்கே நெஞ்சம் நடுங்குகின்றது.
 
இசக்கிமுத்து, அதே ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம், 1,45,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கின்றார். அதற்கு மாதம் 39000 ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார். இப்படி ஆறு மாதங்களில் 2,34,000 ரூபாய் செலுத்தி உள்ளார். அசலை விட மேலும் அதிகமாக 89000 ரூபாய் கட்டிய நிலையில், மேற்கொண்டு பணம் கட்ட முடியாத நிலையில் அவதிப்பட்டபோது, கந்து வட்டிக்காரர் பணம் கேட்டு மிரட்டி வந்ததால், அச்சன்புதூர் காவல்நிலையத்தில் இசக்கிமுத்து புகார் செய்துள்ளார்.
 
ஆனால், அந்தக் காவல் நிலையம், கந்து வட்டிக்காரருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. வேறு வழி இன்றி, இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்துப் புகார் கொடுத்துள்ளார். 
 
எந்தப் பயனும் இல்லை.  
 
சுயமரியாதையோடு வாழத் துடித்த இசக்கிமுத்து, இனி வேறு வழி இல்லை என்ற நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். 
 
2003 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள், தமிழகத்தில் கந்துவட்டித் தடைச்சட்டம் அறிமுகம் ஆனது. தொடக்கத்தில் சில மாதங்கள் கந்து வட்டிக்காரர்களின் கொடுமை அடங்கியது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் அதன்பின்னர், இந்தச் சட்டத்தைக் காவல்துறை கைவிட்டு விட்டது. பயன்படுத்துவதே இல்லை. 
 
ஒருசில காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக் கூடங்களாக ஆகி, புகார் கொடுத்தவர் மீதே வழக்குப்போட்டு அச்சுறுத்துகின்றது. இத்தகைய போக்கு, தமிழகக் காவல்துறைக்கே பெரும் களங்கம் ஆகும். அதனால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வட்டி கேட்டுக் கந்து வட்டிக்காரர்கள் மிரட்டுவது தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. 
 
இந்தச் சம்பவத்தால், தமிழகம் மாவட்டம் முழுமையும் நிலவும் கந்துவட்டிக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முடியாமல், புகார் கொடுத்தாலும் காவல்துறை அவர்களையே மிரட்டுவதாலும், ஏராளமான குடும்பங்கள் இந்தப் பிரச்சினையில் சிக்கிப் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன. 
 
தங்கள் உடலை நெருப்புப் பற்றி எரித்தபோது, கணவனும், மனைவியும், தாங்கள் ஆசையோடு பெற்று வளர்த்த இரண்டு பெண் குழந்தைகள் நெருப்பிலே கருகுவதைக் கண்டு எப்படித் துடித்து இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தக் கோரச் சம்பவத்திற்குக் காரணமான கந்து வட்டிக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அச்சன்புதூர் காவல்துறையினரை  உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்; அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இந்தக் கொடுமையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மீது, அரசு விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
நால்வரின் உயிரையும் காப்பதற்கு அரசு மருத்துவர்கள் பெருமுயற்சி செய்து வருகின்றார்கள்.  அந்த முயற்சிகள் பலன் அளித்து, அவர்களது உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்.
 
இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கின்ற வகையில், உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு தமிழக அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும். கந்துவட்டிக் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். 
 
‘தாயகம்’                                      வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
23.10.2017 மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)