புதிய சரித்திரம் படைத்திட வாருங்கள்! திருச்சி மாநகரில் சங்கமிப்போம்!

Category: Letters, Headlines

Region: Trichy - Urban, Tamil Nadu

Date: 
Thu, 10/09/2009

‘அண்ணாவின் தம்பியரே!’ என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்று இருக்கின்ற- எண்ணற்ற தியாகங்களுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, கண்ணினும் மேலாகக் கழக மறுமலர்ச்சியைக் கருதி உழைத்து வரும் ஆற்றலின் ஊற்றுகளே!

மாற்றாரும் போற்றும்படி பொதுவாழ்வில் தூய்மையையும், அரசியலில் நேர்மையையும் கொண்டு இலட்சியத்தில் உறுதியுடன் பாடுபடும் எழுச்சிச் சுடர்களே!

என் எண்ணங்களை வண்ணமாக்கி வடிவு கொடுத்து வரும் இலட்சிய வேங்கைகளே!

நம் அத்தனை பேர்களையும் மொத்தமாக ஈன்றெடுக்க ஓர் அன்னையின் தங்க மணி வயிறு தாங்காது என்பதால், தனித்தனித் தாய்மார்கள் பெற்றெடுத்த தங்கங்களே! தம்பிகளே!’ என்று நமை விளித்து, தாழ்ந்த தமிழகத்தின் தலை நிமிர்த்தப் பாடுபடும் இலட்சியப் பணிக்கு நம்மை வார்ப்பித்த நம் அண்ணனாம், தென்னகமாகிய திராவிட நாட்டின் முடிசூடா மன்னவனின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அம்மட்டோ! இதயத்தில் கனன்று கொண்டு இருக்கின்ற இலட்சியத் தழலை விழிகளில் ஒளியென வெளிப்படுத்தும் உங்கள் திருமுகங்களை ஒட்டுமொத்தமாகக் காணும் திருநாளாய்-வண்ணமணிப் பெருநாளாய்-அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நாம் முக்கடலின் சங்கமமாய்ப் பாசறை காணும் பொன்னாளாம் நன்னாள் நெருங்கி விட்டது.

மன்றல் நாளை என்று காண்போம் என்று ஏங்கும் காதலர்களைப் போல், நம் இயக்கத்து இளைஞர்கள் கனாக் காணும் நன்னாளாம் செப்டெம்பர் 15, என்று வரும்? என்று ஏங்கிக் கிடக்கும் அந்த நாளுக்காக, மாநாட்டுப் பணிகளில் உண்ணாமல், உறங்காமல், தன்னலம் எண்ணாமல், தமிழ்ச்சமுதாயத்தின் ஒளிமிக்க எதிர்காலம் காணும் உறுதியோடு, என் கண்ணின்மணிகள் கடமை ஆற்றும் காட்சியைக் கண்ணாரக் கண்டு, களிப்போடு இம்மடலை எழுதுகிறேன்.

காவிரிக்கரையில், நம் கழகம் சூல் கொண்ட திருச்சி மாநகரில், அண்ணன் பட்டுக்கோட்டை அழகிரி தமிழர் சேனை திரட்டி, இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமை ஏற்று நடைப்பயணம் தொடங்கிய பெருநகரில், ‘தீரர் கோட்டமாம் திருச்சி அழைக்கிறது; வீரர்களே வாரீர்!’ என்று அழைத்து மாநாடு கூட்டி, ‘தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் காத்து இருக்கிறோம்!’ என்று நாவலரை அழைத்த ஜனநாயகக் காவலர் அண்ணா, திராவிட இயக்க வரலாற்றில், திருப்புமுனை படைத்துத் தம்பியரின் கருத்து அறிய வாக்குப் பதிவு நடத்தி, அரசியலில் களமாடப் புகுந்த காப்பிய நகரில், கண்ணீர்த் துளிகள் என்று காலமெல்லாம் தம்மை வசைபாடிய தந்தை பெரியாரைச் சந்தித்து, தமிழக ஆட்சியை அவருக்குக் காணிக்கையாக ஆக்கி, ஐயாவின் கண்கள் குளமாக, அவருடன் ஊர்வலம் வந்த திருச்சியில் அணிவகுத்துப் பணி முடித்த அழகு நகரில், இன்னும் 10 நாள்கள் இருந்திருந்தால் என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்திருக்க முடியாது என்று அண்ணாவே கூறியதுபோல், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஒன்றாய்ச் சிறை இருந்த வரலாற்றுப் பெருமைமிகு திருநகரில், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை நடத்துவது மெத்தவும் பொருத்தமான ஒன்றன்றோ!

சாதி, மத, வேதங்கள் ஏற்படுத்திய வேற்றுமைகளால், நாதி அற்றவர்களாய், தமக்கு உள்ளே மோதிப் பாழ்பட்டுக் கிடந்தவர்களை, படை திரட்டி, பாசறை அமைத்து, சமூகப் பார்வை அளித்து, இயக்கம் கண்டு, அதையே ஒரு குடும்பமாகக் கொண்டு, ஆயிரம் காலத்துப் பயிராக நம்மைக் கண்ணீரும் செந்நீரும் கொண்டு வளர்த்த பைந்தமிழ்த் தலைவரின் புகழ் பாடும் வானம்பாடிகள் வலம் வரும் மாநாடு!

1964 இல், தமிழர் ஈக உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத் தம் தேக்குமரத் தேகத்தைத் தீயின் நாக்குகளுக்கு இரையாக ஆக்கிக் கொண்டு, நம் நெஞ்சங்களில் இந்தி எதிர்ப்பு என்ற பெருநெருப்பை ஏற்றுவித்த சிங்கத் தமிழன் சின்னச்சாமியின் தியாகத்தால் சிறந்த திருச்சியில் மாநாடு!

1989 இல் ஈழம் சென்று மீண்டபின்னர் நடைபெற்ற மாநாட்டில், ‘உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற நான் எழுந்தபோது, அலைகடலின் ஓசையை மிஞ்சி, அண்ணாவின் தம்பிகள் ஆர்ப்பரித்த மாநாடு நடைபெற்ற திருச்சி மாநகரில், 1995 இல், இதுவரை தமிழகத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்தது இல்லை, இனி நடக்கப் போவதும் இல்லை’ என்ற புதிய புறநானூறு படைத்த திருச்சியில், எந்த மண்ணில் இருந்து வடபுலப் படையெடுப்புக்குப் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கக் கரிகால் பெருவளத்தான் அணிவகுத்தானோ, அந்தக் காவிரிக் கரையில் தமிழர் நாகரிகத்தின் காவல் அரணாய் கழகப் படை திரட்டிப் பாடி வீடு அமைக்கின்றோம்.

43 ஆண்டுகளுக்கு முன்னர், அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிமார்களுக்குச் சொன்ன வாசகங்கள் இதோ:

‘கழகம் என்ன கட்டளை பிறப்பிக்கக் காத்து இருக்கிறது? என்பதை அறிந்து செல்வதற்காக வந்து இருக்கிறார்கள்;ஆற்றல் மிக்கவர்கள் வந்து இருக்கிறார்கள்; அஞ்சா நெஞ்சர்கள் வந்து இருக்கிறார்கள்; சிறைக்கும், வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் வந்து இருக்கிறார்கள்; இவர்களை எல்லாம் பார்த்து நாம் பெருமை அடைகின்றோம் என்றபோதிலும், நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருப்பவர்கள் நம்முடைய கழகத்தைப் பற்றி வைத்து இருக்கின்ற தப்புக் கணக்கு, தவறான கணக்கு என்பதை உணர்ந்து கொள்வதற்கு, இந்த மாநில மாநாடாவது வழி காட்டியாக இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.

நாம் கொடுத்த விலை கொஞ்சம் அல்ல! சிந்திய கண்ணீர் கொஞ்சம் அல்ல! கொட்டப்பட்ட இரத்தமும், சாமானியமானதல்ல! கொடுக்கப்பட்ட பலியும் சாதாரணமானதல்ல! எத்தனையோ தாங்கிக் கொண்டோம், எத்தனையோ தியாகத் தழும்புகளை ஏற்றுக்கொண்டோம்.

தடியடியைத் தாங்கலாம், உடல் வலிவுடன் இருக்கின்றவர்கள். ஆனால், ஏச்சுப்பேச்சுகளைக் கேட்பது என்பது, உடல் வலிவு இருந்தால் மட்டும் போதாது, உள்ளத் திண்மையும் இருந்தால் மட்டும்தான் முடியும்.

நம்மை ஏசியவர்கள் தொகை ஏராளம். அவர்கள் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள், தமிழ் அகராதிகளிலும் இருக்க இலாயக்கற்றவை. அப்படிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை எல்லாம் தாங்கிக்கொண்டு நாம் முன்னேறி வந்து இருக்கிறோம் என்றால், நம்முடைய குறிக்கோளில் நமக்கு இருக்கின்ற நம்பிக்கையும், அந்தக் குறிக்கோளை நாம் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவோம் என்பதில் நமக்கு உள்ள நம்பிக்கையும், நாட்டு மக்கள் நமக்குப் பேராதரவு அளிப்பார்கள் என்ற பெருநம்பிக்கையும்தான் அதற்குக் காரணம்.

பணபலத்தைப் பொறுத்தவரையில் பிறர் பார்த்து, ‘இவர்களிடத்தில் ஏராளமாகப் பணம் இருக்கிறது என்ற எண்ணத்தைப் பெறுவதற்காக வேண்டுமானால் நாம் பயன்படலாமே தவிர, ஒரு பெரிய இயக்கத்தை நடத்திச் செல்வதற்குத் தேவையான பணம் படைத்தவர் எவரும் நம்மிடத்தில் இல்லை.

பத்திரிகை பலத்தை நம்பியல்ல நமது இயக்கம் நடந்து கொண்டிருப்பது. பத்திரிகைகள் எவ்வளவு இருட்டடிப்புச் செய்தாலும் நமக்குக் கவலை இல்லை. நீங்கள் எல்லாம் நடமாடும் பத்திரிகைகள், நடமாடும் பத்திரிகைகள் என்று நான் கூறுவது தவறு; நீங்கள் எல்லாம் நிரந்தரக் காவியங்கள்! என்றார் அண்ணா.

இன்றைக்கும் அப்படியே எழுத்துக்கு எழுத்து எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது அண்ணாவின் பொன் எழுத்துக்கள் பார்த்தீர்களா!

தரணியெங்கும் வரலாற்றுத் தலைவர்களின் புகழ்பாடும்வண்ணம், அவர் வழிவந்தோர் தம் தலைவர்களுக்கு விழாக்கள் எடுப்பதும், அவர்களின் நூற்றாண்டு விழாக்களில் நெஞ்சில் பெருமிதம் கொஞ்சப் பீடுநடை போடுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

நாம் வாழும் காலகட்டத்திலும், இந்தியத் திருநாட்டில், அண்ணல் காந்தி அடிகள், பண்டித நேரு, டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்களும், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் போன்றோர்தம் நூற்றாண்டு விழாக்களும் கொண்டாடப்பட்டு உள்ளன. ஆனால், இதே காலகட்டத்தில், கலாச்சாரப் புரட்சியின் காவிய நாயகன் தோழர் மாவோவின் நூற்றாண்டைக் கொண்டாடிய கையோடு, கம்யூனிசத்தையும் கைகழுவி விட்டு, உலகமயமாதலில் நீர்த்துப்போனது செஞ்சீனம்.

மாவீரன் லெனின் நூற்றாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சோவியத் ரஷ்யாவின் நிலை, இன்றைக்குச் சொல்லுந்தரமாக இல்லை. பதினைந்து தனித்தனி நாடுகளாகச் சிதறிவிட்டது.

இந்தியத் துணைக்கண்டத்தின் நிலையோ, இன்னும் வெட்கக்கேடானது. அண்ணல் காந்தி பிறந்த புண்ணிய மண்ணில், மதத்தின் பெயரால் அரங்கேறிய அக்கிரமங்களும், வக்கிரங்களும், மனிதகுலத்தின் மனச் சாட்சியை உறையச் செய்தது கண்கூடு. வினோபா நூற்றாண்டைக் கொண்டாடிய பின்னரும், விவசாயிகளுக்கு விமோசனம் கிட்டவில்லை.

பண்டித நேருவின் நூற்றாண்டில் பஞ்சசீலத்தைப் பறக்க விட்டுவிட்டு, அமெரிக்கப் பருந்திடம் அணுசக்தி ஒப்பந்தம் செய்து அடைக்கலம் தேடி உள்ளது இந்தியா.

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டில் திண்ணியம் வன்முறைகள், தலித்துகளின் துயரமான வாழ்நிலைக்கு எடுத்துக்காட்டு. தந்தை பெரியாரின் நூற்றாண்டுக்குப் பின் அன்னைத் தமிழகத்தில் அரங்கேறி உள்ள சாதி, மத மோதல்கள் ஏராளம். கல்விக்கண் திறந்த காமராசர் நூற்றாண்டில், இங்கே கல்வி என்பது தனியார்மயமாகி, கொள்ளை லாபக்காரர்களின் வேட்டைக்காடாகி விட்டது.

இவைபோலவே, ஜனநாயகக் காவலர் அண்ணாவின் நூற்றாண்டில், தமிழகம் பணநாயகத்துக்குப் பாய் விரித்து உள்ளது.

இந்த நிலையில்தான், உலகெங்கும் வாழும் தமிழர் உரிமைக்கு உரம் ஊட்டி, உள்ளத்தில் உணர்வை ஊட்டிய பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா, உலகத் தமிழர் வாழ்வு உரிமைக்குப் பிரகடனம் வெளியிடப்பட்டு உள்ள சூழலில், தமிழ் இனம் ஈழத்தில் ஒட்டு மொத்தமாக இனப்படுகொலைக்கு உள்ளான சூழலில், மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலிக்கு உள்ளே அகதிகளாய்- அடிமைகளாய் ஒடுக்கி முடக்கப்பட்டு உள்ள வேளையில், வஞ்சினம் கூறி ஒரு வரலாற்றுக் களம் காணவும், வாகை சூடிடவும், தம் ‘உயிராயுதத்தை ஏந்துங்கள்’ என்று முத்துக்குமார் முதலாகப் பதினாறு சிங்க இளைஞர்கள் தீக்குளித்த தியாகத்தில், தமிழர் எழுச்சிக்கு வழி காண வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு நம்மை ஆளாக்கி உள்ளது.

எனவேதான், ஆகாயம் போல் விரிந்த அன்பு உள்ளம் கொண்ட அண்ணனாம் தமிழ் மன்னவனின் நூற்றாண்டு நிறைவில், உலகத் தமிழர் உள்ளங்களில் உரிமைக் கனலை ஏற்றிடுவோம்.

1964 இல் சின்னச்சாமியின் தீக்குளிப்பு, 67 இல் ஆதிக்க சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்தியதைப்போல, 2009 இல் முத்துக்குமார் தம் உயிராயுதத்தை ஏந்துமாறு தீக்குளித்து அழைப்பு விடுத்த தமிழர் உரிமைப் போரில் வெற்றியை ஈட்டிட நாம் அமைக்கும் பாடி வீடுதான் திருச்சி மாநாடு!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளம் சுக்குநூறாக உடைந்து, துன்பத்திலும், துயரத்திலும் பரிதவிக்கும் காலகட்டத்தில், திருச்சியில் மாநாடு கூட்டுகிறோம். நானிலத்தில் தமிழ் இனம் நாதி அற்றுப் போனதோ? என்ற வேதனையால் தமிழர்கள் விம்மியழும் வேளையில், அண்ணா அன்று காட்டிய வழியும், தீட்டிய எழுத்தும், முழங்கிய சொல்லும், நம்மைச் சூழ்ந்துவிட்ட காரிருளைப் போக்குவதற்கு வழி அமைக்காதா? என்ற ஏக்கப் பெருமூச்சுடன்தான் அண்ணனுக்கு விழா எடுக்கிறோம்.

ஈழத் தமிழ் வாலிபர்களை, கைகளுக்கு விலங்கு பூட்டி, ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, சிங்களச் செந்நாய்கள் காலால் மிதிக்கவும், துப்பாக்கி ரவைகளை ஏவிச் சுட்டுக் கொல்லவும், நம் ஈழத்துச் சகோதரிகளை சிங்களக் கொடியோர் படுநாசம் புரியவும், இவை அனைத்தும் நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்தபோதும், அக்கொடுமையைத் தடுக்கக் கதியற்றுப் போனோமே நாம் என்ற துன்பம் நம் இதயத்தைப் பிளக்கும் நேரத்தில், இனி ஆக வேண்டியது என்ன? நாம் ஆற்ற வேண்டியது என்ன? என்று திடமாக ஒரு முடிவு எடுத்து, அதனைச் செயல்படுத்த சபதம் ஏற்கக் கூடுகிறோம் திருச்சியில்!

பட்டம், பதவி, அதிகாரம் என்பதை மட்டுமே சிந்திக்கும் சுயநலச் சுழலுக்கு உள்ளே சிக்காமல், கொள்கைச் சுடரைக் கரத்தில் மட்டும் அல்ல, கருத்திலும் இதயக்கூட்டிலும் ஏந்தி இருப்போம் நாம் என்பதை, நிரூபிக்க வேண்டிய வேளை நெருங்குகிறது.

இதோ, இதயத்தில் ஈட்டியாகப் பாய்கின்ற இன்னொரு செய்தி. ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்த பத்திரிகையாளர் திஸாநாயகத்துக்கு, இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று, சிங்களக் கொலைகார அரசுக்குக் குற்றேவல் புரியும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் ஏழாம் நாள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் வாடுகிறார் இந்த எழுத்தாளர். உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்ட, இந்த ஆண்டு மே 3 ஆம் நாளில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா பத்திரிகைச் சுதந்திரம் குறித்து உரை ஆற்றும்போது, ‘இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும், பத்திரிகை யாளர்கள் கொட்டடியில் வதைபடுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், அஜர்பெய்ஜானில் இருந்து ஜிம்பாப்வே வரையிலும், பர்மாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வரையிலும், கியூபாவில் இருந்து எரித்ரியா வரையிலும் பத்திரிகையாளர்கள் துன்பப்படுவதற்கான சாட்சியங்களில் ஒருவர்தான், இலங்கையின் திஸாநாயகம் ஆவார்’ என்று சொல்லி இருக்கிறார்.

ஒருபுறத்தில் மரணபயங்கரத்தில் தவிக்கும் ஈழத்தமிழ் இனம். இன்னொருபுறத்தில், நமது தாயகமாம் தமிழகத்தில், ஜனநாயகத்தின் குரல் வளை அறுக்கப்படும் கொடுமை. இந்தத் துயர இருளில் இருந்து, மீள்வதற்கு, நமக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரே வெளிச்சம், அண்ணா அன்று காட்டிய பாதை மட்டும்தான்.

வரலாற்றுக் கடமை ஆற்றுவதற்கு, திருச்சியில் சங்கல்பம் செய்வோம். பதினாறு ஆண்டுகளாகத் தொடர்ந்து சக்திக்கு மீறிச் செலவழித்து, பொருளாதாரச் சுமைகளால் நீங்கள் சிரமப்படுவதை நான் நன்கு அறிவேன். எனினும், பசிக்கு உணவு இன்றி, நோய்க்கு மருந்து இன்றி, ஏன், வசிப்பதற்குச் சொந்த வீடும் இன்றி, நாளும் ஈழத்தில் சித்திரவதைக்குள்ளாகும் நம் சொந்தச் சோதரரை நினைக்கையில், தியாக நெஞ்சினரே, நீங்கள் சிரமங்களைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்பதால், உங்களை உயிருக்கும் மேலாக நேசிக்கும் சகோதரன் அழைக்கிறேன்.

தமிழகத்தின் நாலாத் திசைகளில் இருந்தும் அண்ணா சுடர் ஏந்தி, நமது தொண்டர் அணித் தம்பிமார்கள் மாநாட்டுக்கு ஓடி வருகிறார்கள். தொடங்கும் இடத்திலும், வழி நெடுகிலும், சுடர் ஓட்டம் வெற்றிகரமாக நடைபெறும்வண்ணம், மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

திருச்சியில் அண்ணனின் விழாவை, மண்டல மாநாட்டை எழுச்சியோடு நடத்திட ஆருயிர்ச் சகோதரர்கள் மலர்மன்னன் அவர்களும், மண்ணச்ச நல்லூர் நடராசன் அவர்களும், திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களும், முன்னணியினரும் அரும்பணி ஆற்றி வருகின்றனர்.

அண்ணா புகைப்படக் கண்காட்சியும் பாங்குடன் அமைக்கப்பட்டு வருகிறது.

வாகனங்களில் மாநாட்டுக்கு வருகிறபோதும், திரும்பிச் செல்லுகிறபோதும், பயணத்தில் வேகம் காட்டாமல், கவனத்தைக் கடைப்பிடிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

புதிய சரித்திரம் படைத்திட வாருங்கள்!

திருச்சி மாநகரில் சங்கமிப்போம்!

எழுச்சிச் சங்கொலிக்கும்
உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்
வைகோ

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)