திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்க! முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 06/09/2017

 

 

 


திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்ட
 குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்க!

முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

மிழகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை ஏற்படும் விதத்தில் காவல்துறையின் தலைமை அதிகாரிகள் துளியும் உண்மை இல்லாத தவறான தகவல்களைத் தந்து குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்ற வழக்குகளைத் தொடுக்கின்ற வகையில் நீதி அற்ற பாதையில் தமிழக அரசை இட்டுச் செல்கின்றனர்.

தமிழகத்தினுடைய வாழ்வாதரங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் அபாயமாக வரப்போகிற ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக விவசாயிகளும், பொதுமக்களும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்காக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாய சங்கத்தின் சார்பில் நான் வழக்குத் தொடுத்திருக்கிறேன்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துத் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் வழங்கியதற்காக வளர்மதி என்கின்ற கல்லூரி மாணவி நக்சலைட் இயக்கத்தில் தொடர்பு இருப்பவர் என்று பொய்யான ஒரு காரணத்தைக் காட்டி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது. இதனைக் கண்டித்து நானும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்தோம்.

தற்போது கல்லூரி மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செல்வம் அவர்களும், நீதியரசர் பொன்.கலையரசன் அவர்களும் ரத்து செய்து அறிவித்த ஆணை நீதித்துறை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை தமிழக அரசுக்குக் கண்டனமாகவும், எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூர்த்த மதி படைத்த பொதுநலப் போராளி ஆவார். ஈழத் தமிழர்கள் துயர் துடைப்பதற்காக ஜெர்மனி நாட்டில் பிரம்மன் நகரில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த தீர்ப்பாயத்தில் ஆணித்தரமான வாதங்களை முன்னெடுத்து வைத்து, இலங்கையில் நடைபெற்றது ஈழத்தமிழர் இனப்படுகொலை என்று தீர்ப்பாயம் அறிக்கை தர காரணமானார். கடந்த ஆண்டும் அதற்கு முன்னய ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் ஈழத்தமிழர்களின் அதிகாரப்பூர்வமான அமைப்பின் பிரதிநிதியாக வலுவான வாதங்களை எடுத்து வைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரினா கடற்கரையில் தமிழ் உணர்வாளர்கள், பெண்கள், மாணவர்கள், அரசியல் கட்சி அடையாளம் இன்றி படுகொலையான ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் வீரவணக்கம் செலுத்த மெழுகுவர்த்திகளை ஏற்றி, மலர்களைத் தூவி அமைதியான முறையில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நான் அதில் பங்கேற்று இருக்கிறேன். இந்த ஆண்டும் அதே போல மே மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமை அன்று மே 17 இயக்கத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முற்பட்டபோது, புழல் மத்திய சிறையில் நான் அடைபட்டு இருந்ததால் பங்கேற்க முடியவில்லை.

காவல்துறையினுடைய நியாயமற்ற அணுகுமுறையால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தடுக்கப்பட்டனர். திருமுருகன் காந்தியும், தோழர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் அவர்களைக் கைது செய்து புழல் மத்திய சிறையில் கொண்டுவந்து அடைத்தனர். சிறையில் இருந்த நான் அவர்களைச் சந்தித்து, நடந்த விவரம் முழுவதையும் கேட்டு அறிந்தேன்.

பிணையில் நான் விடுதலையாகி வந்தவுடன், மே 17 இயக்கத்தினர் கைதுக்கு கண்டன அறிக்கை தந்தேன். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்ததாம் என்ற வகையில், வெந்த புண்ணில் வேல் வீசுவது போல் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் தோழர் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்து, சிறையிலிருந்து பிணையில் வெளிவர இயலாத வகையில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தேன்.

ஈழத்தமிழர்களின் நலனுக்கு விரோதமாகவும், ஜனநாயக உரிமைகளை நசுக்கும் விதத்திலும் தமிழ்நாடு அரசு காவல்துறையைப் பயன்படுத்துவது பாசிச நடவடிக்கை ஆகும் என்பதை உணர வேண்டும்.

எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தாயகம்                                                                        வைகோ
சென்னை - 8                                                       பொதுச்செயலாளர்
06.09.2017                                                               மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)