உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயம் - பாகம் 3 . மு.செந்திலதிபன் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் - பருவநிலை மாற்றம்! climate change

உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயம் - பாகம்  3

மு.செந்திலதிபன்
அரசியல் ஆய்வு மையச் செயலாளர்

பருவநிலை மாற்றம்! climate change

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன், குளோரா புளோரா கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள்தான் காரணமாகும். சென்ற இதழில் கார்பன் டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயுவைப் பற்றிப் பார்த்தோம். மற்ற வாயுக்களின் தன்மைபற்றி இப்போது அறிந்துகொள்வோம் :


மீத்தேன் (CH4)

தற்போது காற்றுமண்டலத்தில் மீத்தேனின் அளவு 1783 PPM உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 PPM அதிகம். வெப்பத்தை உண்டாக்குவதில், இது கரியமிலவாயுவை விட இருமடங்கு சக்தி கொண்டதாகும். 60 விழுக்காடு, மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும், நெல்வயல்களில் இருந்தும், கால்நடைகளின் கழிவுகளில் இருந்தும், அழுகிய நிலையில் இருக்கின்ற குப்பைக்கூளங்களில் இருந்தும் உற்பத்தி ஆகின்றது. மீதமுள்ள 40 விழுக்காடு, சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கிய ஈரமான நிலத்தில் இருந்தும், கரையான்களில் இருந்தும் உற்பத்தியாகின்றது. காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை மீத்தேன் தங்கியிருக்கும்.


நைட்ரஸ் ஆக்சைடு (N2O)

காற்று மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு 318.6 ppm உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளைக் காட்டிலும் 9 ppm அதிகமாகும். கரியமில வாயுவைவிட 200 மடங்கு, வெப்பத்தை உண்டாக்கும் தன்மை நைட்ரஸ் ஆக்சைடுக்கு உண்டு. வாயுமண்டலத்தில் இதன் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகளாகும்.

குளோரா புளோரா கார்பன் (CFC)

குளேரா புளோரா கார்பன் என்பது ஒரு வகையான வேதியியல் பொருளாகும். இதில் பலவகை உண்டு. இருப்பினும் CFC11 மற்றும் CFC12 ஆகியவைக் குறிப்பிடத்தக்கவை.

குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியன. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் ஓசோன் படலத்தை அழித்து, புற ஊதாக் கதிர்களை பூமியின் மீது விழச்செய்து உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட் மற்றும் குளேரா புளோரா கார்பன் போன்ற பசுங்குடில் வாயுக்களால் புவிவெப்பநிலை உயர்வு, அதன்விளைவு குறித்து பார்ப்போம்.

பூமி வெப்பம் அடைவதை மனித உடலுக்கு காய்ச்சல் வருவதோடு ஒப்பிடலாம். மனித உடலுக்கு சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட் அதாவது 36.9 செல்சியஸ். உடலின் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டுக்கு மேலே 102, 103 என்று உயரும்போது, காய்ச்சல் அதிகரிக்கின்றது. உடலின் அதிக வெப்பநிலை மனிதனின் சராசரி இயக்கத்தை தடுப்பதுடன் உடல்வலி கடுமையாகிறது. கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் சில நேரங்களில் மரணம்வரை போவதைப் பார்க்கிறோம். மனித உடலில் காய்ச்சல் ஏற்படுவதற்கு வெளிவெப்பம் காரணம் அல்ல. நாம் உட்கொண்ட உணவு, இழுக்கும் காற்று, குடிநீர் போன்றவற்றாலும், கொசுக்கள், வைரஸ் போன்ற காரணங்களாலும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருகிறது.

இதேபோன்றுதான் பூமியும்.

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் கூடுதலாகவும், துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த வெப்பநிலை கூடினாலும் குறைந்தாலும் பூமிக்கு ஆபத்தாகப் போய்விடும்.

பூமி வெப்பம் அடைவதற்கு சூரியன் மட்டும் காரணம் அல்ல. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்களை நாம் அதிக அளவு இயற்கைக்கு மாறாக உற்பத்தி செய்து வளிமண்டலத்திற்கு அனுப்பிக் கொண்டே இருப்பதால். பூமி சூடாகிறது.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். எந்த ஒரு பொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்பத்தை முதலில் தாங்கிக் கொள்ளும். பிறகு சூடாகும். அதன்பின்னர் எரியத்தொடங்கும். ஒருபொருள் குறிப்பிட்ட அளவு வெப்பத்தைத் தன் அடர்த்தி, பருமனுக்கேற்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ‘வெப்ப ஏற்புத்திறன்’ என்று அறிவியல் கூறுகிறது. நீர் 100 செல்சியஸ் வெப்பம் அடைந்த பின்னரே கொதிக்க ஆரம்பிக்கும். அதை நீரின் கொதிநிலை என்பர்.

ஒரு பேப்பரை தீக்குச்சியால் கொளுத்தினால் உடனே எரிய ஆரம்பிக்கும். ஆனால், ஒரு மரத்துண்டை தீக்குச்சியால் கொளுத்தினால் அது உடனே எரியாது. இரண்டுமே எரியும் பொருள் என்றாலும் மரத்துண்டைவிட காகிதத்தின் வெப்ப ஏற்புத் திறன் குறைவு. ஆதலால் உடனே சூடாகி பின்னர் எரிகிறது. இதில் இருந்து நாம் அறிவது, எந்தப் பொருளும் சூடடையும்போது முதலில் பொருளில் மாற்றங்கள் நிகழும். பூமியும் சூடடைவதால் மாற்றங்கள் நிகழ்கிறது.

பூமிக்கு சூரியனிடம் இருந்து வெப்பம் வருகிறது. வெப்பத்தை முதலில் பூமி உள் வாங்குகிறது. பிறகு வெளிவிடுகிறது. வெப்பத்தை BMT (Billion Metric Tonne ) என்ற அலகில் அளவிடப்படுகிறது.

பூமியில் வெப்பம் உள்வாங்கும் அளவு எவ்வளவு என்று கணக்கிட்டால், தோராயமாக, கடல்மூலம் 93 BMT, காடுகள் மற்றும் நிலத்தின் மூலம் 110 BMT ஆக மொத்தம், 203 BMT வெப்பத்தை சூரியனிடம் இருந்து பூமி உள்வாங்கிக் கொள்கிறது. சரி, பூமியில் இருந்து வெளியாகும் வெப்பம்?

கடல் மூலம் 90 BMT, மனிதன் விலங்குகள் மூலம் 55 BMT, பெட்ரோல், எரிபொருள்கள் வகை மூலம் 5 BMT, காட்டுத் தீ மற்றும் தாவரங்களால் 3 BMT மற்றும் இதரவகைகளில் 1 BMT ஆக மொத்தம் பூமி வெளியிடும் வெப்பத்தின் அளவு 207 BMT.

பூமி உள்வாங்கும் வெப்பத்தின் அளவு 203 BMT, அதேநேரத்தில் பூமிவெளியேற்றும் வெப்பம் 207 BMT, பூமியில் இருந்து வெளியேற்றப்படும் இந்த அதிகப்படியான 4 BMT வெப்பம், வளி மண்டலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விண்வெளிக்குக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு மாற்றமும் ஏற்படாது. ஆனால், இந்த 4 BMT, வெப்பம், விண்வெளிக்கு கடத்தப்படாமல், நாம் முன்புபார்த்த பசுங்குடில் வாயுக்களால் தடுக்கப்பட்டு மீண்டும் பூமியை நோக்கி அனுப்பப் படுகிறது. இதனால்தான் புவியின் வெப்பநிலை அதிகமாகி, சூடேறுகிறது. புவியின் வெப்பநிலை இயற்கை நிலைக்கு மாறாக 2 டிகிரி செல்சியஸ் கூடிக்கொண்டே போய்விட்டது.

இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? உலகம் மூன்றாவது உலகப் போரை சந்திக்கப் போகிறது என்று சொல்லிவந்தார்கள். அப்படி மூன்றாவது உலகப்போர் மூண்டால் அதனால் ஏற்படும் அழிவைக் காட்டிலும், பேரழிவு புவிவெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டு விடும். அதனால்தான் அண்மையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி புவிவெப்பமயமாவதைத் தடுப்பது குறித்து விவாதித்தனர். இதுகுறித்து பின்னர் காண்போம்.

பூமி சூடாவதற்கு முக்கிய காரணமான பசுங்கூட வாயுக்கள் எப்படி உருவாகின்றன?

பிளாÞடிக், அறிவியலின் நவீன கண்டுபிடிப்பாகும். இன்று மனிதன் பயன்படுத்திவரும் மிகமிக இன்றியமையாப் பொருளாகிவிட்ட ‘பிளாÞடிக்’ தான் வெப்பவாயுக்களின் உற்பத்திக்கு முக்கிய கரணியாக இருக்கிறது. மனிதனோ, விலங்குகளோ அல்லது தாவரங்களோ மண்ணில் உற்பத் தியாகி முடிவில் மீண்டும் மண்ணிலேயே சிதைந்து பல மூலக்கூறுகளாக மாறி இப்புவியின் காற்று மண்டலத்தில் கலந்துவிடுவது, இயற்கையின் சுழற்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. கோடானுகோடி ஆண்டுகளாக புவியில் உயிரினங்கள் உற்பத்தியாவதும் மடிவதும் காற்றில் கரைவதும் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது.

ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக், பாலிதின் பொருட்களுக்கு அழிவே இல்லை. அவை மக்குவதும் இல்லை; எரித்தால் அதன் மூலக்கூறுகள் சிதைவதும் இல்லை. ஏனெனில், அவை கார்பன் மூலக் கூறுகளால் ஆன பொருட்கள். பிளாஸ்டிக், பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது அதனால் உருவாக்கப் படும் கார்பன் டை ஆக்சைட்தான் வளிமண்டலத்திற்கு சென்று பசுங்குடில் வாயுக்களில் முதலிடம் பிடித்துக் கொள்கிறது.

அதனால்தான் பிளாஸ்டிக், பாலிதின் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

வாகனப்புகை

உலகம் முன்னேற, முன்னேற பெட்ரோலியப் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இது அறிவியலின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று மனிதன் பெருமிதம் அடையலாம். ஆனால், இவை ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானதாகும். கப்பல், விமானம், ரயில், பேருந்துகள், மகிழ்உந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என்று மனித வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துவிட்ட பெட்ரோலிய வாகனங்களால் வெளியேற்றப்படும் புகை தான் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, காரீய ஆக்சைடு போன்ற ஏராளமான வெப்ப வாயுக்களாக மாறி, புவிமண்டலத்தைச் சூடேற்றுவதில் முக்கியபங்கு வகிக்கின்றன.

தொழிற்சாலைகள்

16 ஆம் நூற்றாண்டில், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால், தொழிற்புரட்சி ஏற்பட்டது. அய்ரோப் பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக, உலகின் பல நாடுகளிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உருவெடுத்தன. தொழிற்புரட்சியால் உலகம் வேகமாக முன்னேறியது. ஆனால், பூமி மிகமோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு உள்ளானது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும், நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் டை ஆக்சைடுகள் ஆகிய யாவும் புவியின் சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், பூமியை வெப்பமடையச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இயற்கை முரண்பாடுகள்

ஒருபுறம் தொழிற்சாலைகளும், போக்குவரத்து சாதனங் களும் தொலைத்தொடர்பு சாதனங்களும் வளர்ந்து விட்டன. மறுபுறம் இவற்றின் பயனை நுகரும் மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சி இயற்கையை மீறுவதாக இருக்கின்றது இதனால் வளர்ச்சிகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்று கின்றன. இதுதான் இயற்கையின் சமன்பாடு சீர்கேடு அடைந்து புவிவெப்பமயம் ஆவதற்கு காரணமாகின்றது.

இவ்வாறு, பிளாÞடிக் பொருட்கள், போக்குவரத்து சாதனங்கள், தொழிற்சாலைகள், நாகரிக வளர்ச்சி மற்றும் இயற்கை சமன்பாடு சிதைவு ஆகியவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப வாயுக்களின் அளவு உயர்ந்து வருகிறது.

நாடுகள் தொழில்மயமாகத் தொடங்கிய 1750 ஆம் ஆண்டுகளில் இந்த வெப்பவாயுக்களின் அளவு 330 ppm ஆக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் 425 ppm ஆக உயர்ந்து விட்டன. 1750 இல் இருந்ததை விட 2005 இல் பூமியின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி உயர்ந்து உள்ளது. இதேநிலை தொடருமானால், 2030 இல் வெப்பவாயுக்களான பசுங்குடில் வாயுக்களின் அளவு 470 முதல் 490 ppm ஆக உயரும். அந்நிலையில் புவியின் வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயர்ந்துவிடும் அபாயம் துரத்துகிறது.

வளிமண்டலத்தில் வெப்பவாயுக்களின் அளவு இதேவிகிதத்தில் உயர்ந்து கொண்டே போனால் 2100 இல் 600 யீயீஅ என்ற அளவில் உயர்ந்து பூமியின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாறு பசுங்குடில் வாயுக்கள் (green house gases - ghg) அதிகரித்துக்கொண்டே இருக்குமானால் புவிவெப்பம் உயர்ந்து பருவகால நிலை மாற்றங்கள் (climate change ) ஏற்படும். புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுதான் பருவநிலை மாற்றம் ஆகும்.

பருவகால நிலை மாற்றங்களால், பூமியின் இயற்கை படைப்புகளின் பெரும்பாதிப்புகள் உருவாகின்றன. பூமியின் தட்பவெப்ப வேறுபாடு, மழைபொழியும் காலநிலையில் மாற்றம், கடலின் நீர்மட்டம் உயர்வு, பனிமலை உருகும் அபாயம், ஒருபகுதியில் வறட்சி, இன்னொரு பகுதியில் வெள்ளம், விவசாயத்தில் வீழ்ச்சி, நோய்கள் பரவும் ஆபத்து, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் காடுகள் அழிந்துபோகும் சூழல், மொத்தத்தில் இயற்கையின் சமன்பாடு அடியோடு சீரழிதல் போன்ற விளைவுகள் பருவநிலை மாற்றங்களால் உருவாகும்.

புவிவெப்பமயமாதலும் அதன்விளைவாக பருவநிலை மாற்றமும்தான், இன்று அகிலத்தின் மனித சமூகத்தின் முன் உள்ள மாபெரும் சவால் ஆகும்.


(தொடரும்)
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)