உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயம் - பாகம் 2 - மு.செந்திலதிபன் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் - பசுமை இல்ல விளைவு!

 

 

 

உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயம் -  பாகம் 2

மு.செந்திலதிபன் அரசியல் ஆய்வு மையச் செயலாளர்

பசுமை இல்ல விளைவு!

பூமியில் உயிரினங்கள் வாழ இன்றியமையாத தேவை காற்று. அந்தக் காற்றுதான் மனிதனையும், விலங்குகளையும் தாவரங்கள் மற்றும் மரங்களையும் வாழவைக்கின்றது. உயிர்க்காற்றே நச்சுக்காற்றானால் மனிதனும் வாழமுடியாது. மனிதனை வாழ வைக்கும் தாவரங்களும், மரங்களும், விலங்கினங்களும் மரித்துப் போகும். புவி காற்று மண்டலத்தில் நஞ்சு கலப்பதால் இயற்கைச் சூழல் படிப்படியாக சீர்கேடு அடைந்து வருகின்றது. உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் பேரழகு குலைந்து வருவதற்குக் காரணம் அருகில் மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகைதான் என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. நச்சுப்புகையினால் தாஜ்மகாலின் சலவைக்கற்கள் பளபளப்பு குன்றி, அதன் அழகும் குறைந்து வருகின்றது.

மனிதன் உணவில்லாமல் ஐந்து வாரமும், நீர் இல்லாமல் ஐந்து நாட்களும் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது. ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு 26,000 முறை மூச்சு இழுக்கிறார். நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு 14 கிலோ கிராம் ஆகும். சுத்தமான காற்றில் 78.09 விழுக்காடு நைட்ரஜனும், 20.94 விழுக்காடு ஆக்ஸிஜனும் இருக்கின்றது. கார்பன்டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு 0.03 விழுக்காடு உள்ளது. மேலும் ஆர்கான், நியான், கிரிப்டான், செனான், ரேடான், ëலியம், மீத்தேன் போன்ற வாயுக்களும் குறைந்த அளவில் காற்றில் கலந்துள்ளன. பலவிதமான வாயுக்கள் பூமியைச் சூழ்ந்து போர்த்திக்கொண்டு இருக்கின்றன. இதற்குத்தான் வளி மண்டலம் (Atmosphere) என்று பெயர்.

பூமியைச் சுற்றியுள்ள பகுதி அடி வளிமண்டலமாகும். இது பூமியின் பரப்பளவில் இருந்து செங்குத்தாக 11 கி.மீ வரை இருக்கிறது. 11கி.மீ தூரத்திலிருந்து 50கி.மீ வரை இருப்பது மீவெளி மண்டலம். 30 கி.மீ தூரத்திலிருந்து 80கி.மீ வரை இடைவெளி மண்டலம். 80கி.மீ உயரத்திற்கு மேல் இருப்பது வெப்ப வெளி மண்டலம். பூமிக்கு 120கி.மீ உயரம் வரை வளி மண்டலமாக இருக்கிறது. இந்த வளிமண்டலம் வாயுக்களால் நிரம்பிஉள்ளது. பூமியிலிருந்து 11கி.மீ உயரத்திலேயே, வளி மண்டலத்தில் 5 குவின்டில்லியன் கிலோ எடையுள்ள(ஒரு குவின்டில்லியன் = 1&19பூஜ்ஜியங்கள்) (அதாவது ஒன்றுக் குப் பின் 19 பூஜ்ஜியங்கள்) வாயுக்கள் இருக்கின்றன. அதற்கு மேலே போகப் போக வாயுக்களின் அளவு குறைந்து கொண்டே போகிறது. அந்த வாயுக்களில் 78 விழுக்காடு மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆச்சிஜன், 0.038 விழுக்காடு கார்பன்டை ஆக்சைட் இருக்கிறது. இந்த கார்பன் டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயு, அளவு வளிமண்டலத்தில் கூடிக் கொண்டே போவதால்தான் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அது எவ்வாறு என்பதைக் காண்போம்.

சூரியனிலிருந்து பூமிக்கு வெளிச்சமும் அதனுடன் சேர்ந்து வெப்பமும் வருகின்றது. சூரியன் பூமியை விட அளவில் 109மடங்கு பெரியது. ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. பூமி, சூரியனிடமிருந்து சுமார் 15கோடி கி.மீ தொலைவு(அப்பாடா!) தள்ளிதான் இருக்கிறது. ஆனால் என்ன விந்தை தெரியுமா? சூரியனிடமிருந்து புறப்படும் ஒளி, பூமிக்கு 8 நிமிடம் 19நொடிகளில் வந்து சேர்ந்து விடுகிறது. என்னே, இயற்கையின் ஆற்றல்!

சூரிய ஒளி கிரணங்கள்தான் பூமியில் உயிர்களை வாழ வைக்கின்றன.


ஆனால், சூரிய ஒளி சக்தி முழுவதும் பூமிக்கு வந்துவிடுவது இல்லை. மொத்த சூரிய சக்தியும் வெப்பமும் பூமியில் விழுந்தால் கருகி சாம்பல் ஆகிவிடுவோம். அப்படி ஆகிவிடாமல் சூரிய ஒளியைத் தடுத்தாட்கொண்டு, வளிமண்டலம் நம்மைப் பாதுகாக்கிறது. வளிமண்டலம் தடுக்கும் வெப்பம் போக மீதிதான் பூமிக்கு வருகின்றது. ஆனால், பூமியோ, தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது. ஆனால், வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன( Green house gases) என்று பெயர். “பசுங்குடில் வாயுக்கள்” என்று பெயர் வரக்காரணம், ஒரு சிறிய குடில்(Shed) போன்று, கண்ணாடியால் கூரை அமைக்கப்பட்டு வெப்பம் வெளியேறிவிடாமல் தடுத்து, அந்தக் குடியில் தாவர ஆராய்ச்சிகள் செய்வார்கள். இதனை பசுங்குடில்(Green house) என்று அழைப்பர். அதைப் போலவே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள், கண்ணாடிக் கூரை போன்றே வெப்பம் வெளியேறிவிடாமல் தடுப்பதால் அவற்றுக்கு “பசுங்குடில் வாயுக்கள்” என்று பெயர். பூமியிலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை அண்டவெளிக்குள் கடத்தாமல், அதனை தடை செய்து பூமிக்கு மேலே போர்வை போல நிலைகொள்ளச் செய்கிறது. பசுங்குடில் வாயுக்களால் ஏற்படும் இந்த வினைக்கு‘பசுங்குடில் விளைவு’ (Green House Effect ) என்று பெயர்.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு இந்தப் பசுங்குடில் வாயுக்கள் காரணம். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் (CO2), நைட்ரஸ் ஆக்சைட் (N2O), மீத்தேன் (CH4), குளோரா புளோரா கார்பன் (CHF) ஆகிய வாயுக்கள் தான் பழங்குடில் வாயுக்கள் ஆகும். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக் கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டு, வெப்பத்தைத் தேக்கி வைப்பதால், வாயுமண்டலம் வெப்பமாகிறது. இதன் விளைவாக, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதற்குத்தான் ‘புவி வெப்பமயம்’( Global Warming ) என்று பெயர். புவி எவ்வாறு வெப்பமயமாகிறது என்பதற்கு முன்பு, பசுங்கூட வாயுக்கள் பற்றி சிறிது காண்போம்.

கரியமில வாயு (CO2)

கார்பன்டை ஆக்சைட் எனப்படும் இந்தக் கரியமில வாயுதான் பூமியை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கரியமில வாயு, காற்று மண்டலத்தில் அதிகரித்துக் கொண்டே போவதுதான் பிரச்சினை, 1957ல் 350 ppm (parts per million) அளவாக இருந்த கார்பன் அளவு 2000 ஆண்டில் 400 ppm அளவாக அதிகரித்தது.

தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர், அதாவது 18ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம்வரை நமது வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 280 ppm மட்டுமே. அதாவது பத்துலட்சத்தில் 280 பங்காக இருந்தது. புவியின் வெப்பநிலை அதிகமாகாமல் இருக்க வேண்டுமானால், கார்பன் அளவு 350 ppm அளவுக்குள் இருக்கவேண்டும். ஆனால், தொழிற்சாலைகள் வெளி ஏற்றும் புகை, போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் அளவு கூடிக்கொண்டே போகிறது.


இதே நிலை தொடருமானால், 2100ஆம் ஆண்டில், காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540முதல் 970 ppm அளவு உயர்ந்துவிடும். அவ்வாறு நேர்ந்தால் பூமிக்கு ஏற்படும் அழிவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. கரியமில வாயு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகும். மொத்த வாயு மண்டலத்தில் வெறும் 0.03விழுக்காடு மட்டுமே உள்ள கரியமிலவாயு, பசுங்குடில் வாயுக்களில் 63.5 விழுக்காடாக உள்ளது. ஆகவே அகிலம் இன்று சந்திக்க வேண்டிய முக்கிய சவால், இந்தக் கரியமிலவாயு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும்? என்பதே.

மனிதன் மற்றும் விலங்கினங்கள் சுவாசித்தலின்போது கார்பன் டை ஆக்சைடை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும், தாவரங்கள் பெருமளவு தங்களின் ஒளிச்சேர்க்கையின் உணவு தயாரிக்கும்போது கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொள்கின்றன. அதனால் கார்பனின் அளவு வளி மண்டலத்தில் ஓரளவு சமன்பாட்டுடன் இருந்து வந்தது. பல இலட்சம் ஆண்டுகளாக தாவரங்கள் சேமித்து வைத்து புதையுண்ட கார்பன்கள்தான் நிலக்கரியாகவும், பெட்ரோலியப் பொருட்களாகவும், நமக்கு எரி பொருள்களாகப் பயன்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளாக கார்பனின் அளவு 280 ppm அளவை தாண்டாமல் சற்றேறக் குறைய சமஅளவில் இருந்து வந்தது. ஆனால், நாடுகள் தொழில் மயமாக ஆரம்பித்த பின்னர் கார்பன் டை ஆக்சைட் காற்றுமண்டலத்தில் அதிகரிக்கத் தொடங்கி, தற்போது 400 ppm அளவுக்கு உயர்ந்து விட்டது. இதன் விளைவாக புவியின் சராசரி வெப்பநிலை 15டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து மேலும் 6டிகிரி செல்சியஸ் வரை உயரும் அபாயம் உள்ளது என்று IPCC, (Inter Government Panel on Climate Change) பருவநிலை மாறுபாடு குறித்து ஆராயும் அரசாங்கங்களுக்கிடையிலான குழு, 2007இல் வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.

(தொடரும்)
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)