உலகை அச்சுறுத்தும் புவி வெப்பமயம். மு.செந்திலதிபன் கழக அரசியல் ஆய்வுமய்யச் செயலாளர்
1990 களில் இருந்து உலகை மிரட்டத் தொடங்கிய வார்த்தை, ‘உலகமயமாக்கல்’ (Globalisation).
2000 இல் இருந்து உலகை அச்சுறுத்தி வரும் இன்னொரு வார்த்தை, ‘உலகம் வெப்பமயமாதல்’ ( Global warming)
உலகமயத்தின் வேகமான வளர்ச்சியின் பரிசுதான் புவி வெப்பம் அதிகரிப்பு. கற்பனை செய்யமுடியாத அளவுக்கு ‘அறிவியலில்’ மனிதன் முன்னேற்றம் அடைந்துவிட்டான். இயற்கையை வென்றுகாட்டி விட்டதாக இறுமாப்புக் கொண்டான். ஆனால், இயற்கையை வெற்றிகொள்ள எந்தச் சக்தியாலும் இயலாது என்பதை, தற்போதுதான் உணரத் தொடங்கி இருக்கிறான்.
ஆம்; அறிவியல் வளர்ச்சியின் பயன், இயற்கையின் சமன்பாட்டை உடைக்கத் தொடங்கிய உடன், சீறி எழுகிறது இயற்கை.
இதன்விளைவாக, புவியின் வெப்பம் மேலோங்கி சூடாகிறது. சூறாவளி, சுனாமி மற்றும் நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படு கின்றன. பருவநிலைகளில் ‘திடீர் திடீர் என்று’ மாற்றங்கள் உருவாகி வரு கின்றன. பருவ காலத்தில் பொழிய வேண்டிய மழை, பொய்த்துப் போகின்றது. நிலத்து அடி நீரோட்டம், ஆயிரக் கணக்கான அடிகளுக்குக் கீழே போகிறது. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, உலகின் பல பகுதிகள் சீரழிந்து வரு கின்றன. சோலைவனங்கள் பாலை வனங்கள் ஆகின்றன.
இன்னொரு பக்கத்தில், வரலாறு காணாத மழை,வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மனிதவாழ்க்கைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் வேளாண்மைத் தொழில் நசிந்து விடும் பேராபத்து துரத்துகிறது.
புவியை அச்சுறுத்தும் இத்தகைய மாற்றங்களுக்கு என்ன காரணம்?
அறிவியலின் துணைகொண்டு மனித குலம் பெற்றுள்ள முன்னேற்றங் களும், சாதனைகளும் இயற்கையின் சம நிலையை, கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கியதே, இயற்கையின் சமன்பாட்டைச் சீராக இயங்கச் செய்ய சுற்றுச்சூழல் முக்கியக் காரணியாகிறது.
மனிதகுலம், இயற்கையை மதித்துப் போற்றி, தெய்வமாக வணங்கி வழிபட்ட காலகட்டத்தில், இயற்கையோடு இயைந்த சுற்றுச்சூழல் இருந்தது. பின்னர் இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனது ஆளுமைக்குள் மனிதகுலம் கொணர்ந்த பிறகு, சுற்றுச்சூழல் சிதையத் தொடங் கிற்று. இதனால் இயற்கையின் சமன்பாடு சீர்குலையத் தொடங்கியது.
நிலம், நீர், காற்று, ஆகாயம் மாசுபடர்ந்து, சுற்றுச்சூழல் கெடத்தொடங்கிய உடன், இயற்கை சீற்றம் கொள்ளத் தொடங்கிற்று; அதனால்தான் இயற்கைப் பேரிடர்கள் தொடருகின்றன.
சுற்றுச்சூழல்தான் அரணாக இருந்து மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்குச் சொன்னவர் திருவள்ளுவர்.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’ (குறள் 742)
‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டுக்கு உறுப்பு’ (குறள் 737)
தெள்ளிய நீரினை உடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், அழகிய நிழலால் செறிந்த காடும், ஒரு நாட்டுக்குப் பாதுகாப்பான நல்ல அரண்கள் ஆகும்.
ஊற்று நீரும், மழைநீரும் ஆகிய இருவகை நீர்வளமும் தக்கவாறு வளமாய் அமைந்த மலையும், அந்த மலையில் இருந்து வரும் ஆற்றுநீர் வளமும், வலிய அரணும் நாட்டுக்கு உகந்த நல்ல உறுப்புகள் ஆகும்.
இயற்கையின் படைப்பில் நிலம், நீர், காற்று, ஆகாயம் ஒன்றோடு ஒன்று உயிரியல் தொடர்பில் பின்னிப் பிணைக்கப்பட்டு உள்ளது. ஒன்று அழிந்தாலும், பாதிக்கப்பட்டாலும், அது மற்ற அனைத்தையும் பாதிக்கும்.
ஒன்றையொன்று சார்ந்து உயிரியல் தொடர்புகொண்ட சுற்றுச்சூழலை, இருவகைகளாகப் பகுத்து அறியலாம்.
இயற்கைச் சூழலும், உயிரினச் சூழலும் ஒன்றோடு ஒன்றிப் பின்னிப்பிணைந்து உள்ளன. இவை இரண்டும், ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன. இந்தச் சூழல் பாகுபாட்டில், இயற்கைச் சூழல் இன்றி உயிரினச் சூழல் உருவாகி இருக்க முடியாது. உயிரினச் சூழலிலோ, தாவரங்கள், விலங்குகள் இன்றி மனித இனம் தோன்றி இருக்க முடியாது.
சுற்றுச்சூழல் சூழ்நிலைத் தொகுப்பு (Eco - system ) இருவகைப்படும். ஒன்று, இயற்கைச் சார்ந்த சூழ்நிலைத் தொகுப்பு, மற்றொன்று செயற்கையைச் சார்ந்த சூழ்நிலைத் தொகுப்பு. இயற்கையையும், செயற்கையையும் சார்ந்து, அய்ந்து வகையான சூழ்நிலைத் தொகுப்புகள் விளங்குகின்றன.
1. கடலைச் சார்ந்த சூழல் தொகுப்பு (Marine Eco - system) (எடுத்துக்காட்டு : கடல்)
2. நன்னீர் நிலையைச் சார்ந்த சூழல் தொகுப்பு ( Limnie Eco- system ) (எடுத்துக்காட்டு : நன்னீர் நிலைகள்)
3. நிலத்தைச் சார்ந்த சூழல் தொகுப்பு (Terrestrial Eco - system ) (எடுத்துக் காட்டு : நிலம், காற்று)
4. நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலையைச் சார்ந்த சூழல் தொகுப்பு ( Urban/Industrial eco - system) (எடுத்துக்காட்டு : விளைநிலம், நகரம், தொழிற்சாலை).
5. மேல்நிலை அளவிலான சூழல் தொகுப்பு ( macro Eco-system ) உதாரணம் : காடுகள்
மேற்கண்ட அய்ந்து சூழல் தொகுப்பு களும், இயற்கையை ஒரு சமச்சீரான முறையில் இயங்கச் செய்வதற்கு, அவை சீர்கேடு அடையாமல் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் மாபெரும் பொறுப்பு ஆகும்.
ஆனால், என்ன நடக்கிறது? மனிதகுலம், இயற்கையை மீறி செயல்பட்டு, இயற்கையைச் செயற்கையான முறையில் கட்டுப்படுத்தத் தொடங்கிய உடன், சுற்றுச்சூழல் நாசமாகி, இயற்கையின் சீற்றம் அதிகரிக்கத் தொடங்கிற்று.
மனிதகுலத்தின் வாழ்வு, இயற்கைச் சூழல், உயிரினச் சூழலைச் சார்ந்துதான் இருக்கின்றது. இயற்கைச் சூழல் சீர் கெட்டால், மனித இனம் பாதிக்கப்படும். மனித இனம் மற்ற எவற்றுடனும் தொடர்பு இன்றி, தனித்து வாழவே முடியாது.
‘இயற்கையில், ஒவ்வொருவருடைய தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். ஆனால், ஒரு சிலரின் பேராசையை நிறைவு செய்யமுடியாது’ என்றார் மகாத்மா காந்தி.
மனித இனத்தின் பேராசை, இயற்கையை விழுங்கிக் கொண்டு இருக்கின்றது.
சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து வருவ தால், இயற்கைச் சமன்பாடு அழிந்து, புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. புவி வெப்ப மயமாகி வருவதுதான் இன்று உலகின் முன்னே இருக்கும் இன்றியமையாத பிரச்சனை ஆகும்.
கடந்த 140 ஆண்டுகளில், 2001 ஆம் ஆண்டு முதல்தான் புவிவெப்பம் அதிகரி த்து வருவதாக, உலக தட்ப வெப்பநிலை அமைப்பு (World meteorological Organisation ) தெரிவித்து உள்ளது. 1860 இல் இருந்து, புவியின் வெப்பநிலை, இயல்பு நிலையைத் தாண்டி, 10 முறை உயர்ந்து உள்ளது. ஆனால், அவற்றுள், 9 முறை 1990 ஆம் ஆண்டுக்குப்பிறகே என்பது அதிர்ச்சிதரத்தக்கது ஆகும். 1900 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மட்டும் புவியின் வெப்பநிலை மூன்று மடங்காகி உள்ளது.
புவிவெப்பமயமாகி வருவதற்குக் காரணம் என்ன? புவிவெப்பம் அதிகரிப் பால் ஏற்படும் விளைவுகள் என்ன? மனிதகுலம் இயற்கையின் இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? தொடர்ந்து ஆராய்வோம்....
(தொடரும்)
Mr. Senthilathipan's article in Sangoli.

