விஷ அம்பை வீசும் ‘தினமணி’ நடுநிலைக் கண்ணோட்டம் தவறுவது ஏன்!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Thu, 02/04/2009

விஷ அம்பை வீசும் ‘தினமணி’
நடுநிலைக் கண்ணோட்டம் தவறுவது ஏன்!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

நிமிர்ந்த நடை - நேர்கொண்ட பார்வையுடன் செய்தி வெளியிடுவதாக தம்மை அறிவித்துக் கொண்ட ‘தினமணி’ நாளேடு, தமது கட்டுரை ஒன்றில் (2.4.2009) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனப்பட்டு நிற்பதாகக் காட்டுவதற்கு வெகு சிரத்தை எடுத்துள்ளது ஏன்?

1996ஆம் ஆண்டு ம.தி.மு.க. பிரளயமாய் எழுந்து நின்ற காலகட்டம். தமிழ்நாட்டின் பல கட்சிகளும் கலகலத்துப் போய் கிடந்த நேரம். களத்தில் நின்று நாடே உற்று நோக்கத் தக்க வாக்குகளைப் பெற்றது. விளாத்திகுளத்தில் போட்டியிட்ட வைகோ 300 வாக்கு குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் 12 ஆயிரம் வாக்கு வித்தியாசம் காரணமாக வெற்றி பெற முடியவில்லை. இவ்விரண்டு தொகுதிகளிலும் முறையே இரண்டு நாட்கள், நான்கு நாட்கள் மட்டும் கிராமங்களில் சென்று வாக்கு கேட்பதற்கு ஒதுக்கியிருந்தால், அவரது வெற்றியைத் தடுத்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியிருக்கக் கூடும். தேர்தல் பணியில் ஈடுபட்ட தோழர்கள் சந்திக்க வேண்டிய அடிப்படைச் செலவுகளை எதிர் கொள்வதற்குக் கூட நிதி வசதி இல்லை.

போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளுக்கும் இருந்த வாய்ப்பையும், நேரத்தையும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்த, மனசாட்சி உள்ள தலைவராக வைகோ விளங்கிய காரணத்தினால்தான் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படவில்லை, தன்னலம் கருதவில்லை. சிவகாசி நாடாளுமன்றத் தொகுதிக்கு வெறும் 4 மணி நேரமும், விளாத்திக் குளம் சட்டமன்றத் தொகுதிக்கு 2 மணி நேரமும்தான் வேட்பாளரான வைகோ ஒதுக்கினார்.

தமிழ்நாட்டிலேயே சிறு தொகுதியான சேப்பாக்கத்தில் வேட்பாளரான கலைஞர் கருணாநிதி அவர்கள் 6 நாட்கள் வாக்குச் சேகரித்தார் என்பதை நினைவில் கொள்வோம்.

கட்சி தொடங்கிய உடன் நடந்த பெருந்துறை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மூன்றாவது இடத்துக்கு தள்ளி ம.தி.மு.க. இரண்டாவது இடம் பெற்றது. ம.தி.மு.க. இதே வேகத்தில் பொதுத் தேர்தலைச் சந்தித்தால் "நமது கதி அதோ கதிதான்" என்பதை புரிந்துக் கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள், அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி, ‘மூப்பனார் - ரஜினி’ என்று அன்றைய அணி ஒருங்கிணைப்பின் விளைவாக நாங்கள் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் வேரூன்றிவிட்ட கட்சி ம.தி.மு.க. என்பதற்கு அந்தத் தேர்தல் முடிவுகள் முதல் சான்றானது.

2001 தி.மு.க.வுடன் நம்பத் தகுந்த தோழமையாக இருந்த வேளையில் ம.தி.மு.க.வை அழிக்கத் திட்டமிட்டு கடைசி நிமிடத்தில் காலை வாரினர். நாங்கள் கேட்ட நியாயமான தொகுதிகளைக் கூட ஒதுக்கித் தர முன்வரவில்லை. அரசியலில் மான உணர்ச்சி பட்டுப்போய்விடவில்லை. அதைக் காக்கின்ற கட்சி மறுமலர்ச்சி தி.மு.க. என்பதை நிரூபிக்கின்ற வகையில் தனியாக களத்தைச் சந்தித்தோம். ராட்சச பலம் பொருந்திய இரண்டு கட்சிகளையும் களத்தில் எதிர்த்து நின்றோம்.

அடிப்படைச் செலவுக்குக் கூட நிதி வசதி இல்லை என்றாலும் 35 தொகுதிகளில் மறுமலர்ச்சி தி.மு.க. வாங்கிய ஓட்டுக்களின் விளைவாக மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டிருந்த தி.மு.க. ஆட்சியை இழந்து தவித்தது என்பதை ‘தினமணி’ வெளியிட மறந்துவிட்டது. பெற்ற வாக்குகள் குறைவுதான். ஆனால், பணபலம், படைபலம் ஆகியவற்றோடு களம் இறங்கிய தி.மு.க., ஆட்சியை இழப்பதற்கு ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டதே காரணமாயிற்று.

பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகள் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களில் வியாபித்திருக்கின்றன. திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை அத்தகைய கட்சிகளுக்கு அமைப்பு உண்டா? செயல் வேகம் கொண்ட தொண்டர் குழாம் உண்டா? நாட்டின் நாலா திசைகளிலும் அதிர்வலைகளை உருவாக்கி கோடிக்கணக்கான வாக்காளர்களின் மனங்களில் மாறுதலை ஏற்படுத்தக் கூடிய எழுச்சி நாயகன் வைகோவை போன்ற சக்தி வாய்ந்த தலைவர்தான் உண்டா? இவை எல்லாம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேதான் தமிழ்நாட்டு அரசியலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்து முறையான வலுவான அமைப்பு பலம் கொண்ட சக்தி வாய்ந்த கட்சி மறுமலர்ச்சி தி.மு.க. என்று நெஞ்சு உயர்த்திச் சொல்கிறோம்.

ஓட்டுக்கணக்கைச் சொல்கின்ற ‘தினமணி’க்கு ஒரு கேள்வி. சங்கரன்கோவில் தொகுதியில் ‘தினமணி’ கணக்குப்படி,

1996இல் மறுமலர்ச்சி தி.மு.க. வாங்கிய வாக்கு 30,893

2001இல் வாங்கிய வாக்கு 20,610

2006இல் ம.தி.மு.க. கூட்டணியில் வென்ற கட்சி அ.தி.மு.க. அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப ம.தி.மு.க.வின் ஓட்டுக் கணக்கில் கூடுதல் குறைவு இருக்கலாம். ஆனால், இந்த மூன்று தேர்தல்களிலும் தி.மு.க. அந்தத் தொகுதியில் தோற்றதற்கு ம.தி.மு.க.வின் வாக்கு பலம் காரணமாகும் என்பதை வசதியாக மறைத்துவிட்டது தினமணி.

ஆளும் கட்சியின் அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும் என்ற வேகம் மக்களிடம் எழுகின்ற போது அதற்கு இணையான பலம் கொண்ட எதிர்க் கட்சியைத் தேர்வு செய்வது தமிழ்நாட்டு வாக்காளர்களின் பொது மனநிலையாக விளங்குகிற காரணத்தினால்தான், ம.தி.மு.க. தனித்து நின்ற காலகட்டங்களில் வாக்குகள் கூடி, குறைந்திருக்கலாம்.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் பிரச்சாரத்தை முன் வைக்கின்ற ஆற்றலும், தெம்பும் உள்ள கட்சி மறுமலர்ச்சி தி.மு.க.. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாக இல்லை என்பது கண்கூடு.

ம.தி.மு.க.வுக்கு மூன்று இடங்கள் கொடுத்தால் போதும் என்ற நிலையை நியாயப்படுத்தி அதிக இடங்கள் அதற்கு கிடைத்துவிடக் கூடாது என்று கருதுகிற தீய சக்திகளுக்கு தீனி போடுகிற வேலையைத்தான் ‘தினமணி’ செய்துள்ளது.

மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு கூடுதல் இடங்கள் கொடுத்து தக்க வைத்துக் கொள்வதன் மூலம்தான் ஒரு ‘வெற்றிக் கூட்டணி’ என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்த முடியும், நிறைவான வெற்றியும் பெற முடியும் என்று நடுநிலையில் நின்று சிந்திப்போர் கூறுகின்றனர். அந்த சிந்தனைக்கு மாறாக கலைஞர் கருணாநிதிக்கு இலாபம் கிடைக்கத்தக்க வகையில், மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு மதிக்கத்தக்க ஒதுக்கீடு அ.தி.மு.க. கூட்டணியில் கிடைத்துவிடக் கூடாது என்று கருதுகிற வஞ்சக நோக்கம் கொண்டோருக்கு உதவுவது சரிதானா?

கலைஞர் கருணாநிதி வீசுகின்ற அஸ்திரங்களை எதிர்கொண்டு வீழ்த்துவதற்கு உறுதியுடன் எழ வேண்டிய கரங்கள் கல்லெறிவது கூட காலத்தின் கோலம்தான்.

மகாபாரதக் கதையில், நாலாபுறத்திலும் அபிமன்யுவை பகைவர்களின் பாணம் சுற்றி வளைத்து தாக்கியது. அங்கே அபிமன்யு வதைபட்டான்.

அரசியல் களத்தில் அபிமன்யுவாக நிற்கின்ற மறுமலர்ச்சி தி.மு.க..வை பகைக் கூட்டம் அழித்திட இதுபோன்ற பாணங்களை வீசுகின்றன. இவற்றை சுக்கல், சுக்கலாக உடைத்துத் தகர்த்து வெற்றிச் சங்கொலிக்கும் மறுமலர்ச்சி தி.மு.க.

ஆம்... தமிழ்நாட்டு அரசியலில் ஃபீனீக்ஸ் பறவை மறுமலர்ச்சி தி.மு.க. என்பதை காலம் உணர்த்தும்.

தி.மு.இராசேந்திரன்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)