மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை -2009

விவகாரங்கள்: தேசிய, அரசியல்

மாவட்டம்: ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Sun, 19/04/2009

மறுமலர்ச்சி செயல்திட்டம்

நுழைவாயில்

காலத்தின் அருட்கொடையால் திராவிட இயக்கத்தின் புதிய பரிமாணமாக, 1994 மே 6 இல் உதயமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியங்களை இதயத்தில் ஏந்தி, அவர் வகுத்த பாதையில் பயணித்து, அத்தமிழ்த்தாயின் தலைமகனின் நூற்றாண்டு விழா ஆண்டில் நடைபெறவிருக்கும், இந்தியாவின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான, கொள்கை, குறிக்கோள், செயல்திட்ட அறிக்கையை, தமிழக மக்களின் நல் ஆதரவை நாடி முன் வைக்கிறது.

1998-ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கடந்த 11 ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் உயர்வுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றது. இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காத்து பொலிவூட்டவும், தமிழ் மொழி, இன, பண்பாட்டு மேன்மைக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், உலகத் தமிழர் நலனுக்காகவும் மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில், அகில இந்தியாவில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது. கழகத்தின் 12 ஆவது பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெறவில்லை.

2004 மே 27 ஆம் தேதி அன்று புதுதில்லியில் வெளியிடப்பட்ட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைத்த முக்கியமான கருத்துகள் இடம் பெற்றன.

1998 இல் மறுமலர்ச்சி தி.மு.க. சென்னையில் நடத்திய, பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா- மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில், கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்திய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அண்ணாவின் கனவாகிய சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல் முறையாக அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஏற்றுக்கொண்டதை நினைவூட்டி, ம.தி.மு.க. வலியுறுத்தியதன் அடிப்படையில் அத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்த்தது.

இந்தியாவில் மிகத்தொன்மையான மூத்த மொழியாம் தமிழ் மொழியை, செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும்; இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும்; அதன் முதல்படியாக, திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமுதல் மொழியான தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப் பெறல் வேண்டும்; எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படும்வரை, ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடர வேண்டும்;

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஐ.நா. மன்றம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் நார்வே அரசு முன்னெடுத்துச் செல்லும் இலங்கைத் தமிழர் சமாதானப் பேச்சுகளில், இந்திய அரசு முழு ஈடுபாடு காட்ட வேண்டும்; ஈழத்தமிழர்கள் உரிமையோடும், மானத்தோடும் வாழ்வதற்கு உரிய அமைதியும், விடியலும் ஏற்பட வழிகாண வேண்டும்;

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஒடுகின்ற நதிகளை இணைப்பதற்கு உரிய செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்; தென்னிந்திய நதிகளின் இணைப்பை முன்னுரிமைத் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும் எனும் முக்கியமான கோரிக்கைகளுடன், மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில சுயாட்சி, சமதர்மக் கோட்பாடு, காவிரி நதிநீர் உரிமை, மகளிருக்கு இட ஒதுக்கீடு, பொடா சட்டம் நீக்கம் உள்ளிட்ட கருத்துகளை, மைய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பெறச் செய்தது.

இந்தியாவில் நிரந்தர பொருளாதார வளத்தை உருவாக்கவும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தொலைநோக்குச் சிந்தனையோடு இந்திய நாடாளுமன்ற மக்களவையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைகோ, 1999 ஆம் ஆண்டு தாக்கல் செய்த தனிநபர் மசோதா, 2000 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இம்மாசோதாவின் மீதான விவாதம் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 தேதியன்று நிறைவு பெற்றது. இந்திய நாடாளுமன்ற மக்களவை வரலாற்றிலேயே, நதிநீர் இணைப்புக்குறித்த மசோதா மீதான விவாதம், இதுவே முதலும் கடைசியும் ஆகும். இந்த விவாதத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் நீங்கலாக, இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கு ஏற்று, கருத்துகளைத் தெரிவித்தன.

அதில், மாநிலங்களுக்கு இடையே ஒடும் நதிகள் நாட்டு உடைமை ஆக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், குறிப்பாக தீபகற்ப நதிகளான தென்னக நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தென்னக நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம்பெற்றபோதும், அதைச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் எவற்றையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொள்ளவில்லை.

2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே, இலங்கை அரசுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்து, அத்தகைய ஒப்பந்தம், தமிழ் இனத்துக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் வரலாற்றுப் பிழையாகி விடும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, 2004 நவம்பரில் இந்திய இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தநிலையில் தடுக்கப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற இருந்த திட்டங்களை, இந்திய அரசு மறைமுகமாகச் செயல்படுத்தத் தொடங்கியது. ஈழத்தமிழர்கள் மீது இனக்கொலை இராணுவத் தாக்குதல் நடத்த, இலங்கை விமானப்படையை இயக்குவதற்காக, பலாலி விமான தளம் இந்திய அரசின் செலவில் பழுது பார்த்துக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை, 2005 டிசம்பர் 9 ஆம் தேதி, இலங்கையின் விமானப்படை துணைத் தளபதி டொமினிக் பெரைரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் கொடூரக் குண்டுவீச்சில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாளன்று, செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள் கோரமாகக் கொல்லப்பட்டபோதும், ஆழிப்பேரலை பேரழிவு மறுவாழ்வு முகாமில் பணியாற்றிய, ஒரு முஸ்லிம் இளைஞர் உள்ளிட்ட 17 தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், தமிழ்த் தேசியக் கூட்டு அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும், அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல்நாள், தேவாலயத்தில் வழிபாடு நடத்திக்கொண்டு இருந்தவேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்தபோதும், இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவே இல்லை.

இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயே நுழைந்து, 900 க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுட்டு, 500 க்கும் மேற்பட்ட தாய்த்தமிழகத்து மீனவர்களைச் சுட்டுக்கொன்று, அவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து, படகுகளை உடைத்து நொறுக்கி, மீனவர்களைக் கடத்திக்கொண்டுபோய், நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து வாட்டி வதைத்த அக்கிரமத்தை, இந்திய அரசு எந்தக் கட்டத்திலும் தடுக்க முற்படவில்லை.

அதைவிடக் கொடுமை யாதெனில், இந்திய இறையாண்மையையே காவு கொடுத்துவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைக் கடற்படை நம் கடல் எல்லையில் கண்ணிவெடிகளை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தது.

நான்குமுறை இந்தியாவோடு யுத்தத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாடு கூட, நம் கடல் எல்லையை அடுத்து, கண்ணிவெடிகள் வைக்க முற்பட்டது இல்லை. ஒரு இந்திய மீனவரைக்கூடச் சுட்டுக் கொன்றது இல்லை.

ஈழத்தமிழர்களின் அவலத்தையும், இன்னலையும் போக்குவதற்காக, சிங்கள அரசின் இனக்கொலை யுத்தத்தைத் தடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவர முனைந்தபோது, அந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கே எடுக்கவிடாமல், இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு தடுத்து, இந்திய அரசு துரோகம் இழைத்தது.

இலங்கை விமானப்படைக்கு, இந்திய அரசு ராடார்களைக் கொடுக்கக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர், இந்தியப் பிரதமரைச் சந்தித்து, எழுத்துமூலமாகக் கோரிக்கையும் கொடுத்து, எவ்வளவோ மன்றாடியும்கூட, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், 2005 இல் இரண்டு ராடார்களையும், 2006 இல் இரண்டு ராடார்களையும் வழங்கியது. குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்ததாம் என்பதுபோல், அந்த ராடார்களை இயக்குவதற்கு, இந்திய விமானப்படை நிபுணர்களையும், இலங்கை அரசுக்கு உதவிட அனுப்பி வைத்தது.

2008 செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று, விடுதலைப்புலிகளின் வான் படையினர் ஜேசன், சிங்கள இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில், இந்திய நிபுணர்களான சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாகுர் ஆகியோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, மேற்கூறிய உண்மை வெட்டவெளிச்சம் ஆகியது.
மறுநாள், இந்தியத் தூதரகத்தின் அதிகாரி இதுபற்றிக் கூறுகையில், ‘265 இந்திய நிபுணர்கள், சிங்கள அரசு நடத்தும் போருக்கு உதவி செய்து வருகின்றனர்’ என்று கூறினார்.

இலங்கை இராணுவத்தினருக்கும், விமானப்படை, கடல் படையினருக்கும், இந்தியா தொடர்ந்து பயிற்சி கொடுத்து வந்தது.

இலங்கைத்தீவில் சிங்கள இராணுவம், யானைஇறவு போரில் தோற்றதற்குப்பிறகு, 2001 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், தாங்களாகவே முன்வந்து 30 நாள்களுக்கு போர்நிறுத்தம் அறிவித்தனர். 2002 ஆம் ஆண்டு, ஜனவரி 24 ஆம் நாள், மேலும் 30 நாள்களுக்கு போர்நிறுத்தத்தை நீட்டித்தபின்னரே, நார்வே உள்ளிட்ட உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால், இலங்கை அரசும் போர்நிறுத்தத்தை அறிவித்தது.

தற்போது இனக்கொலை யுத்தத்தை முழுமூச்சாக நடத்துவதற்காகவே, போர்நிறுத்தத்தை இலங்கை அரசுதான், 2006 ஆம் ஆண்டில் முறித்துக் கொண்டது.

இலங்கைத்தீவில், தமிழ் இனப் படுகொலையும், கொடுந்துயரும், பேரழிவாக நிகழ்ந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2008 அக்டோபர் 14 ஆம் நாள் அன்று, ‘இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட, மத்திய அரசு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைத் தொட்டியில் வீசியது.

தமிழக சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்துக்கு உள்ளாக, இந்தியத் தலைநகரில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ‘போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை;விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை’ என்று ஆணவத்துடன் கொக்கரித்தார்.

2008 அக்டோபர் 2 ஆம் தேதி அன்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில், ‘இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகள் செய்கிறது’ என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள், சென்னைக்கு வந்து தமிழ்நாட்டு முதல் அமைச்சரைச் சந்தித்துவிட்டு, ‘போர்நிறுத்தம் கேட்பது இந்தியாவின் வேலை அல்ல’ என்று எகத்தாளமாகக் கூறினார்.

‘இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து இராணுவ உதவிகள் செய்யும்’ என்று, 2008 அக்டோபர் 16 ஆம் நாள், இந்தியாவின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம்ராஜூ தெரிவித்தார்.

‘இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து இராணுவ உதவிகளையும் செய்வதாக,’ இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். தமிழ் இனக்கொலைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினார்.

தமிழகத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. 2009 ஜனவரி 29 ஆம் நாள் அன்று, வீரத்தியாகி முத்துக்குமார், ஈழத்தமிழர்களைக் காக்கத் தீக்குளித்து மடிந்தார். தமிழக மக்கள் உள்ளம், கொந்தளிக்கும் கடலாய், சீறும் எரிமலையாய்க் குமுறத் தொடங்கியது. முத்துக்குமாரைத் தொடர்ந்து மேலும் 11 தமிழர்கள் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து மடிந்தனர்.

இரத்தவெறி பிடித்த சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் தமிழகத் தலைவர்களை, ‘கோமாளிகள்’ என்று வசைபாடியதோடு, திரு வைகோ அவர்களையும், திரு பழ. நெடுமாறன் அவர்களையும், விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள்’ என்று இழிமொழி வீசினார்.

அதன்பிறகு, கொழும்புக்குச் சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தபோதும், போர்நிறுத்தத்தைப் பற்றி, பிரணாப் முகர்ஜி பேசவே இல்லை.

ஆனால், 48 மணி நேரம் சிங்கள அரசு கெடு விதித்து, தமிழர்களை வெளியேறுமாறு கூறியதை, ‘48 மணி நேர போர்நிறுத்தம்’ என்று, இந்திய அரசு மோசடி அறிவிப்புச் செய்தது.

2009 பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று, இந்திய நாடாளுமன்றத்தில், வெளி விவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், அறிக்கை தந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்து வருவதை, தொடக்கத்தில் இருந்தே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக எதிர்த்து வந்தார்.

18.9.2004, 10.11.2004, 04.06.2005, 11.06.2005,
23.12.2005, 26.05.2006, 19.7.2006, 02.08.2006,
30.03.2006, 06.11.2006, 24.11.2006, 10.03.2007,
16.07.2007, 06.08.2007, 09.12.2007, 18.12.2007,
03.01.2008, 12.01.2008, 06.03.2008, 18.03.2008,
17.04.2008, 09.06.2008, 23.06.2008, 11.09.2008

ஆகிய நாள்களில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, வைகோ நேரில் சந்தித்து, ஒவ்வொருமுறையும் இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டி, எழுத்துமூலமாகவே ஆட்சேபணைக் கடிதங்களைத் தந்து, எதிர்ப்புத் தெரிவித்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர் இன அழிப்பு யுத்தத்தை, ஈவு, இரக்கம் இன்றிக் கொடூரமாக நடத்தும் சிங்கள அரசுக்கு, ஆயுதங்களும் தந்து, அனைத்து உதவிகளும் செய்து, மன்னிக்கவே இயலாத துரோகம் இழைத்த, மத்திய அரசின் கொள்கைதான், தன்னுடைய கொள்கை என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்ததை, எவ்விதத்திலாவது தடுக்க வேண்டும் என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன சூழலில், 2007 மார்ச் 16 ஆம் நாள் கோவை மண்டல ம.தி.மு.க. மாநாட்டில், ‘ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக’ அறிவித்தது.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள இனவெறி அமைப்பான ஜே.வி.பி கட்சியின் தலைவர், இந்தியாவின் இராணுவ மருத்துவக் குழுவை, இலங்கையில் எப்படி அனுமதிக்கலாம்?’ என்று கேள்வி கேட்டபோது, அதற்குப் பதில் அளித்து இலங்கையின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டி சில்வா பேசுகையில், ‘இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தத்தில், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இந்திய அரசு இராணுவ ரீதியாக செய்த உதவிகள்தான் முக்கியக் காரணம் என்றும், அதனால், இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கு எப்போதும் நன்றி காட்ட வேண்டும் எனக் கூறியது, இந்திய அரசு தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை, எவரும் மறுக்க இயலாத சாட்சியமாக ஆகிவிட்டது.

மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டுமெனில், இனி இந்தியாவில், காங்கிரஸ் தலைமையிலான ஒரு மத்திய அரசு, எவ்விதத்திலும் அமையக்கூடாது என்பதோடு, அமைகின்ற அரசுகள், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் சிந்தனைக்கே இடம் அளிக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கித் தீர வேண்டும் என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்க்கமான முடிவுக்கு வந்து உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காவிரி நதி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துதல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல், பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்தல் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகளில், தமிழகத்தை வஞ்சித்துத் துரோகம் செய்தது. அந்தத் துரோகங்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் துணையாக இருக்கிறது.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட கடுமையான விலைவாசி ஏற்றம், நடுத்தர மக்களையும் அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைத்தது. இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கேடு விளைவிக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுவிசை ஒப்பந்தம் செய்தது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைவிட மிகப்பெரும் ஊழலாக, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்று உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கத்தில், அவர் கட்டிக் காத்து வளர்த்த குடும்ப பாசம் எனும் உயரிய பண்பாட்டை, தற்போதைய தி.மு.க. தலைமை அடியோடு சிதைத்து, கட்சியையும், ஆட்சியையும் தன்னுடைய சொந்தக் குடும்ப நலன்களுக்காகப் பயன்படுத்தி, முதல் அமைச்சரின் குடும்பத்தின் அதிகார மையங்கள், தமிழகத்தின் வளத்தையும் நலனையும் சுரண்டுகின்ற முகாம்களாக ஆக்கப்பட்டன.

தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பாழ்படுத்தி, எதிர்காலத்தை இருளில் ஆழ்த்தும் விதத்தில், ஆற்று மணல் கொள்ளை தமிழகத்துக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய தீங்கு தரும் கேடு ஆகும். கறுப்புப் பண முதலைகள் தமிழ் நாட்டின் விவசாய விளைநிலங்களை அபகரித்துக் கொள்ளையிடும் நிலை, தி.மு.க. அரசின் ஆதரவுடன் தொடர்ந்து நடக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் மேற்கூறிய நடவடிக்கைகளால் தமிழகம் வீழ்ச்சியுற்று, இருளில் சிக்கியது.

எனவே, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து வஞ்சித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், அத்துரோகத்துக்கு முழுக்கமுழுக்க உடந்தையாகச் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சரியான பாடம் புகட்டவும், இனி வரும் காலத்தில் இத்தகைய துரோகத்தைக் கனவிலும் கருத முடியாத நிலையை ஏற்படுத்தவும், நடைபெற இருக்கின்ற 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்று இருக்கின்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வாக்காளப் பெருமக்கள் தங்கள் நல்லாதரவை வழங்கி, வெற்றி தேடித் தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டு, இந்தத் தேர்தல் அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன் வைக்கிறோம்.

செயல்திட்டம்

1. சமூக நீதி

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடானுகோடி மக்களுடைய வாழ்வின் விடியலுக்காக உருவானதுதான் சமூகநீதிக் கோட்பாடு ஆகும். வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி, கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் காண, வகுப்பு உரிமை ஆணையை முதன்முதலில் பிறப்பித்த பெருமை, தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்துக்கே உண்டு.

மைய அரசின் கல்வித்துறையிலும், வேலை வாய்ப்புகளிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட மண்டல் குழு பரிந்துரை செய்தது. அதை, நடுவண் அரசு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இருக்கின்ற மொத்த இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு அளிப்பதற்கு மாறாக, புதிதாக இடங்களை உருவாக்கி, மூன்று ஆண்டுக்ள் தவணை முறையில், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், நடுவண் அரசு பிறப்பித்து உள்ள உத்தரவு மோசடித் திட்டம் ஆகும்.

எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைத்திட, மைய அரசை வலியுறுத்துவோம்.

மேலும், இட ஒதுக்கீடு வழங்கும்போது, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை ( Creamy Layer ) நீக்குவதற்கு, நீதிமன்றங்கள் அளித்து உள்ள உத்தரவுகளை, உரிய சட்டத்திருத்தத்தின் மூலம் முறியடித்து, இட ஒதுக்கீடு முழுமையாகக் கிடைத்திடக் குரல் கொடுப்போம். பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு, சட்ட அதிகாரங்கள் கிடைக்க வகை செய்வோம்.

காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த, “தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பணி இடங்களில் இடஒதுக்கீடு மசோதா 2008”, இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 47 நிறுவனங்களில், இட ஒதுக்கீடு வழங்குவதை, இந்த மசோதா தடை செய்கிறது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழங்களில், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை, மேற்கண்ட மசோதா தடை செய்கிறது.

இது, காங்கிரஸ் கூட்டணி அரசின் சமூக நீதிக்கு எதிரான கொள்கையைக் காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மேற்கண்ட நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாகக் கிடைத்திட, சட்ட திருத்தம் கொண்டுவர மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்தும்.

2. சிறுபான்மையினர் நலன்:

இஸ்லாமிய மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சச்சார் குழு அளித்து உள்ள பரிந்துரைகளை, முழுமையாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கக் குரல் கொடுப்போம்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்போம்.

அருந்ததியர் இட ஒதுக்கீடு

சமுதாயத்தில் மிகமிக பின்தங்கிய நிலையில், துயர இருளில் வாடும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான அருந்ததிய மக்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இடங்கள் பெற முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, அருந்ததியர்களுக்கு 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கிடைத்திட ஆவன செய்வோம்.

3. தலித் கிறித்தவர் நலன்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் விளைவாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் உரிமைகள் இழந்து தவித்தனர். அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார், ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களும், திராவிட இயக்கமும் போராடியதன் விளைவாக தலித் மக்களுக்கு சமூக நீதியின் வெளிச்சம் கிடைத்தது. கல்வி, வேலை வாய்ப்புகளிலும், அரசியல் தளத்திலும் உரிமை பெற ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டியல் வகுப்பினராக அறிவிக்கப்பட்டு அவர்களின் சமூக நீதிக்கு அரசியல் சட்டம் உத்திரவாதம் வழங்கியது.

ஆனால், அந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இந்து மதம் அல்லாத பிற மதத்தினராக இருப்பின், அவர்களுக்கு பட்டியல் வகுப்பினர்க்கு உரிய உரிமைகள் மறுக்கப்பட்டது. சீக்கிய, பெளத்த மதங்களைச் சார்ந்தவர்களுக்கும், இந்து பட்டியல் வகுப்பினர்க்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டன.

எனவே, கிறித்துவ மதத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கும் அதே உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலித் கிறித்துவ மக்களும், அமைப்புகளும் போராடி வருவதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை வாதாடி இருக்கிறார். இதற்கான தனி நபர் மசோதவையும் நாடாளுமன்றத்தில் வைகோ தாக்கல் செய்து இருக்கிறார்.

தலித் கிறித்துவர்களுக்கும், தலித் இந்துக்களுக்கு வழங்கப்படும் அதே உரிமைகளை வழங்குவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அண்மையில், 2009 ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன்படி, தலித் மக்கள் கிறித்துவ மதத்தில் இருந்து விலகி, மீண்டும் இந்து மதத்தில் சேர்ந்தால் அவர்களுக்கு தலித் இந்துக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும் என்றும், இதற்கான ஆதாரமாக உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பையும் அந்த ஆணை சுட்டிக் காட்டுகிறது.

ஆனால், அதே உச்சநீதிமன்றத்தில், அப்படி மீண்டும் மதமாற்றம் செய்கிறவர்களுக்கு அத்தகைய உரிமைகள் கிடைக்காது என்றும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.

மதமாற்றத்தைத் தடை செய்வது கருத்து உரிமைக்கு மாறானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், கிறித்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினால், அவர்களுக்கு தலித் இந்துகளுக்கு உரிய முழு உரிமைகளும் வழங்கப்படும் என்ற நிலையை ஏற்படுத்துவது, மதமாற்றத்தைத் தூண்டுகின்ற செயலாகவே கருதுகிறோம்.

எனவே, இந்தப் பிரச்சினையில் உண்மையான சமூக நீதி மலர வேண்டுமெனில், தலித் கிறித்தவர்களுக்கும் பட்டியல் வகுப்பு இந்துக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

படுகர் இன மக்கள்

1933 ஆம் ஆண்டு வரை ஆதிவாசி பழங்குடியினர் பட்டியலில் இருந்து வந்த, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள், அந்த உரிமையை சுதந்திர இந்தியாவில் இழந்தனர். எனவே, அம்மக்களுக்கு சமூகநீதி வழங்கும் வகையில், படுகர் இன மக்களை, ஆதிவாசி பழங்குடியினர் பட்டியலில் ( Scheduled Tribes) சேர்க்க ஆவன செய்யப்படும்.

4. தனித்தமிழ் ஈழ நாட்டை அங்கீகரித்தல்

வரலாற்றுக் காலம்தொட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களை, சிங்கள இனவெறி அரசு இரண்டாந்தரக் குடிகளாக நடத்தியது. தமிழர்கள், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வு உரிமைக்காகவும், தொன்மையான தமிழர் பண்பாடு, மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் போராடி வந்தனர்.

தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்களை, சிங்கள இனவாத அரசு அடக்குமுறையால் நசுக்கியது. தமிழ் மக்கள் இராணுவம், காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகினர். எனவே, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே, தமிழர்கள் ஆயுதங்களை ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கடந்த 25 ஆண்டுகளாக ஈழத்தமிழ்த் தேசிய இனம், தங்கள் அரசியல் தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்காக, ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றது.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களைப் புரிந்து களத்தில் நின்று போராடிவரும் விடுதலைப்புலிகளை, தங்களின் ஒரே பிரதிநிதியாக ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். புலிகள் ஏந்திய ஆயுதம்தான், தமிழ் மக்களின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கி வருகிறது. தமிழர் தாயக மண்ணை விடுதலைப் புலிகள் காத்து நிற்கின்றனர்.

போரின் மூலம் ஈழத்தமிழர்களை வெற்றி கொள்ள முடியாது என்பதை சிங்கள இனவாத அரசு உணர்ந்து கொண்டதால், 2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அறிவித்த போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டது. சர்வதேச, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட்டு வந்தது. நார்வே நாட்டின் முன் முயற்சில் நடைபெற்ற அமைதிப் பேச்சுகளில், ஐந்துமுறை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண, திட்டங்களை முன்வைத்தனர்.

ஆனால், 2006 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் பொறுப்புக்கு வந்த மகிந்த ராஜபக்சே, அமைதிப் பேச்சுகளை, ஒருதலைப்பட்சமாக நிராகரித்ததுடன், பன்னாட்டுப் போர்க் கண்காணிப்புக் குழுவையும், அமைதிப் பேச்சுகளில் பங்கேற்ற நார்வே நாட்டின் பிரதிநிதிகளையும் அவமதித்து வெளியேற்றினார். அமைதிப் பேச்சுகளை ரத்து செய்த ராஜபக்சே, போர் நிறுத்த உடன்பாட்டையும் தன்னிச்சையாக முறித்துக் கொண்டு, ஈழத்தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

சிங்கள இனவாத அரசின் விமானப்படைக் குண்டுவீச்சில், செஞ்சோலையில் அடைக்கலம் பெற்று இருந்த, நிராதரவான 61 குழந்தைகள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். வாகறை அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில், 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஈழத்தமிழர்கள் சார்பில் அமைதிப் பேச்சுகளை முன்னின்று நடத்திய, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், சிங்கள விமானப்படை குண்டுவீச்சில் பலியானார்.

தமிழர் பிரதிநிதிகளான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜ சிங்கம், நடராஜா ரவிராஜா, மகேஸ்வரன், சிவநேசன் ஆகியோர், சிங்கள அரசின் கூலிப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதும், இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தீர்மானித்தது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த மறுமலர்ச்சி தி.மு.க., இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதைக் கடுமையாக எதிர்த்தது. இலங்கை அரசுக்குச் செய்யப்படும் இராணுவ உதவிகள் அனைத்தும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் போரில், தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படும். பலாலி இராணுவதளத்தை இந்தியா புதுப்பித்துத் தருமானால், அங்கிருந்துதான் சிங்கள விமானங்கள் புறப்பட்டு, தமிழர்கள் மீது குண்டுகளை வீசிக் கொல்லும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனால், இந்திய அரசு, ஈழத்தமிழர்களைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், இலங்கை அரசுக்கு இராணுவத் தளவாடங்களையும், ராடார் உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிகளையும் வழங்கியது. மேலும் 500 மில்லியன் டாலர் நிதி உதவியையும் அளித்தது. இந்திய அரசு கொடுத்து உதவிய இராணுவத் தளவாடங்கள், ராடார் கருவிகளை, தமிழ் ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசு பயன்படுத்தி வருகிறது. இந்திய அரசு செய்துவரும் ஆயுத உதவிகள் குறித்து, சிங்கள அரசே அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

இலங்கையில் தமிழ் இனத்தைப் பூண்டோடு கரு அறுக்க, சிங்கள இனவெறி பிடித்த ராஜபக்சே அரசுக்கு இந்திய நடுவண் அரசு, எல்லாவகையிலும் உதவி அளிப்பதை கண்டும் காணாமலும் வேடிக்கை பார்த்துவரும் தி.மு.க., மத்திய அரசிலும் ஒரு அங்கமாக இருந்து, தமிழ் இனப் படுகொலையை நடத்தும் ராஜபக்சேவுக்குத் துணையாக நின்று, தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து இருக்கின்றது.

தமிழ் இனப்படுகொலையைத் தடுத்துக் நிறுத்தக்கோரியும், போரை நிறுத்தக்கோரியும், தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. தமிழர் என்ற உணர்வோடு தமிழகம் எங்கும் குமுறி எழுந்த தமிழ் மக்கள், இந்திய அரசையும், மாநில தி.மு.க. அரசையும் கண்டித்து போராட்டக்களத்தில் குதித்தனர். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்குக் கபட நாடகங்களை அரங்கேற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி, ‘இந்திய வெளி உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்குச் சென்று போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பார்’ என்று கூறினார். ஆனால், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 14.10.2008 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், போரை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மூன்று முறை நிறைவேற்றிய தீர்மானங்களையும், மத்திய அரசு குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இலங்கைக்குச் சென்ற மத்திய வெளி உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில், 18.02.2009 அன்று, ‘போரை நிறுத்துமாறு இந்தியா கட்டாயப்படுத்த முடியாது’ என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறி விட்டார். இன்னொரு நாட்டின் இறையாண்மை மீது இந்தியா தலையிடாது என்று மத்திய அரசு தெரிவித்த கருத்தை, தமிழக முதல்வரும் வழிமொழிந்தார்.

ஆக, மொத்தத்தில் இலங்கையில் தமிழ் இனம் பூண்டோடு அழிக்கப்படுகிற வேளையில், தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிறுதுரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல், இலங்கை அரசுக்குத் துணையாக இருந்து, இந்திய அரசு போரை நடத்துகிறது.

இலங்கை இராணுவத்தினருக்குப் போர்ப்பயிற்சி தருவதோடு மட்டுமின்றி, இந்திய இராணுவமே நேரிடையாக சண்டையில் சிங்கள இராணுவத்துடன் கைகோர்த்து, தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

இது தமிழக மக்களுக்கும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் இந்திய அரசு செய்துவரும் அப்பட்டமான துரோகம் ஆகும்.

தமிழ் மக்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியையும், அதற்குத் துணைபோகும் தி.மு.கவையும் மன்னிக்க மாட்டார்கள்.

உலக நாடுகள் தடைசெய்த கிளஸ்டர் குண்டுகளை சிங்கள விமானப்படை வீசி, தமிழர்களைக் கொன்று குவித்து வருவதையும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும், மருத்துவமனைகளிலும், தமிழ் மக்களை எரிகணை வீசித் தாக்கிக் கொன்றொழிப்பதையும் ஐ.நா. மன்றம் கண்டித்து இருக்கின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா வெளிஉறவு அமைச்சர்கள், சிங்கள அரசுக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து உடனே போர் நிறுத்தம் செய்து, விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதே கருத்தை நார்வே, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளும் தெரிவித்து உள்ளன.

ஆனால், இலங்கை அரசு இந்த கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனிதஉரிமை நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகள் வழங்குவதையும் தடைசெய்து விட்டது.

உலகநாடுகள் பலவும் வலியுறுத்துவதைப்போன்று, இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்திடவும், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுகளை மீண்டும் துவக்கி, ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.

உலகில் நடைபெற்ற பல்வேறு தேசிய இன விடுதலைப் போராட்டங்களில், ஐ.நா. மன்றம் உள்ளிட்ட அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எவ்வகையான தீர்வை முன்வைத்தனவோ, அதையே முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வதுடன், ‘தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு’ என்பதையும் இந்திய அரசு ஏற்க வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்

இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் மக்களின் உரிமை வாழ்வுக்காக, மகத்தான தியாகங்களைச் செய்து யுத்தகளத்தில் போராடி வருவேதாடு, ஈழத் தமிழ மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று இருக்கின்ற தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இந்திய அரசு நீக்க வேண்டும்.

5. மாநில சுயாட்சி

இந்தியாவில் உண்மையான கூட்டு ஆட்சி மலர, ‘மாநில சுயாட்சிக் கொள்கையே தீர்வு’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்தினார்கள். அண்ணா வழியில் நடைபோடும் மறுமலர்ச்சி தி.மு.க., மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதுடன், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் குறித்து மறுஆய்வு செய்திடவும் வலியுறுத்துவோம்.

ஆங்கில அரசாட்சியின் எச்சமாக உள்ள ஆளுநர் பதவியை ஒழிக்கவும்,

மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி பூஞ்ச் குழு, தனது பரிந்துரைகளை விரைந்து சமர்ப்பித்திடவும்,

மாநில அரசுகளை தங்கள் விருப்பம்போல் மத்திய அரசு கலைப்பதற்கு வழிவகுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 356 ஐ, நீக்குவதற்கும்,

மத்திய அரசு வரி வருவாய்ப் பங்கீட்டில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு அளித்திடவும், கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும்,

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்ற பாகுபாடு இன்றி, மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

தென்மாநிலங்களின் கூட்டு அமைப்பு

தென்மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவை நிலைநாட்டி, நதிநீர்ச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சுமூகமான உடன்பாடு காணவும், தென் மாநில மக்களின் மொழி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு புரிதலுடன் சேர்ந்து பணியாற்றவும், தென்மாநிலங்களின் கூட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்திட ஆவன செய்வோம்.

6. பொருளாதாரம்

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காட்டைத் தாண்டியபோதும், வளர்ச்சியின் பயன் சமச்சீராக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேரவில்லை.

உலக அளவில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியாலும், குறிப்பாக அமெரிக்க நிதிச்சந்தை நெருக்கடியாலும், இந்தியாவின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்தது. இந்திய ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டு, வணிகத்தில் பாதிப்பு, ஆட்குறைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம், 0.44 விழுக்காடாகக் குறைந்து இருக்கிறது. இருப்பினும் விலைவாசி சிறிதும் குறையவில்லை.

விலைவாசி உயர்வைத் தடுக்கவும், பன்னாட்டுப் பொருளாதார நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்காதவாறு புத்துயிர் ஊட்டும் திட்டங்களைச் செயல்படுத்தவும் வலியுறுத்தப்படும்.

7. வேளாண்மைத்துறை

நாட்டின் பொருளாதாரம் மற்றும் இந்திய சமுதாயத்தின் அடித்தளமான விவசாயத்துறையின் நிலைமை மேலும்மேலும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் ( GDP ), வேளாண்மைத் துறையின் பங்கு, 1950 களில் 56 விழுக்காடாக இருந்தது. தற்போது 23 விழுக்காடாகக் குறைந்து விட்டது. இந்தியாவில் 73 விழுக்காடு மக்களின் வாழ்வாதரமாக உள்ள வேளாண்மைத் துறையின் வளர்ச்சி, வெறும் 2 விழுக்காடாகவே உள்ளது.

வேளாண்மைத் துறையை நெருக்கடியில் இருந்து மீட்டு, வளர்ச்சி அடையத் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும்.

தனி நிதிநிலை அறிக்கை

வேளாண்மைத் துறையை மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் சேர்த்து, வேளாண்மைத் துறை வளர்ச்சிக்குத் தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட வலியுறுத்துவோம்.

விளைநிலங்கள் பாதுகாப்பு

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகள், சாலை அமைத்தல், நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவற்றுக்காக விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்துவதும், விளைநிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படுவதும், விளைச்சலைப் பெரிதும் பாதிக்கின்றன. எனவே, விளைநிலங்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் வகுக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் உள்ள செழுமையான விளை நிலங்களை, பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தோரும், வட நாட்டினரும் ஏராளமாகக் கைப்பற்றி உள்ளனர். தமிழகத்தில் முதலீடு செய்யப்படும் கோடிக்கணக்கான கருப்புப் பணம், விளை நிலங்களைச் சீரழிக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்த, ‘விளை நிலங்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டம்’ கொண்டு வரப்படும்.

விவசாயத்துறைக்கு மானியம்

விவசாயத்துறைக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் மானியக் கொள்கையில், நடுவண் அரசு உறுதியாக இருக்க வலியுறுத்துவோம்.

உரத்தட்டுப்பாடு

உர மானியங்கள் ரத்துச் செய்யப்பட்டதால், உர நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. உரத்தட்டுப்பாட்டைப் போக்கிடவும், உள்நாட்டில் யூரியா, உரங்கள் உற்பத்தியைப் பெருக்கவும், அரசின் மானியங்கள் தங்குதடையின்றிக் கிடைக்கவும் ஆவன செய்யப்படும். எளிதில் அழுகும்தன்மை உடைய வேளாண் விளைபொருள்களை விளைவிக்கும் சிறு விவசாயிகளுக்கு, 50 விழுக்காடு மானியத்தில் உரங்கள் வழங்கப்படும்.

உணவுக் கிடங்குகள்

விளைபொருள்களைப் பாதுகாக்க, பன்னாட்டுத் தரத்துடன்கூடிய, ஒருங்கிணைந்த, குளிர்பதனக் கிட்டங்கிகள் ஒன்றியங்கள்தோறும் அமைக்கப்படும். ஓசூரில் மலர்க் கிடங்கு, நீலகிரியில் காய்கறிக் கிடங்கு ஆகியவை அமைக்கப்படும்.

நீர்ப்பாசனத் திட்டங்கள்

நீர் மேலாண்மை மற்றும் புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள், நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க ஏரி, குளங்களைச் சீரமைத்தல், தடுப்பு அணைகள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான, அரசின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கும், கோடை வறட்சியால் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. மழை நீரைச் சேகரிக்க சிறிய தடுப்பு அணைகளும், புதிய ஏரிகளும் அமைக்கப்படும்.

வேளாண் விளைபொருட்களுக்கு விலை உறுதி

வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சீரமைக்கவும், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடம் பெறவும் வலியுறுத்தப்படும்.

தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக, நெல் ஒரு குவிண்டால் விலை ரூபாய் 1500 ஆகவும், கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூபாய் 2500 ஆகவும் உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காபி, தேயிலை, ரப்பர் போன்ற விளைபொருட்களுக்கும், கட்டுப்படியான விலையை உறுதி செய்திட ஆவன செய்யப்படும்.

வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

விளைபொருட்களைப் பாதுகாத்திடக் கிடங்குகள் அமைத்தும், வேளாண் சார்ந்த அனைத்துத் துறைகளை உள்ளடக்கியும், விளைபொருட்கள் ஏற்றுமதிக்கு உகந்த விதத்திலும் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மைத்துறை வளர்ச்சிக்குக் கடன் உதவி

விவசாயிகள், இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு, மிகுந்த சிரமங்களுக்கு இடையில் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் கடனாளி ஆகி தற்கொலை செய்து கொண்டு மடியும் அவல நிலையைப் போக்கிட, கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வேளாண்மைத் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து, மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், கடன் வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்கவும் வலியுறுத்தப்படும்.

நடுவண் அரசு அறிவித்த கடன் தள்ளுபடியால், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, அனைத்து வங்கிகளிலும் நிலுவையில் உள்ள வேளாண் சார்ந்த கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.

விவசாயத்துக்கு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த மூன்று மாதங்களுக்கு உள்ளாக, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

பயிர்க்காப்பீடு

பயிர்க்காப்பீடு, கால்நடைக் காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்தி, பாதிப்பு ஏற்படும்போது உடனடி இழப்பீடு கிடைத்திட ஆவன செய்யப்படும். மேற்கண்ட காப்பீட்டுத் திட்டங்களுக்கு, காப்பீட்டுச் சந்தாத் தொகையை அரசே செலுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

மரபு அணு மாற்று விதைகளுக்குத் தடை

வேளாண்மையில், ‘மரபு அணு மாற்றம்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை, மேற்கத்திய நாடுகள் புகுத்தி உள்ளன. உலகமயமாக்கல் என்ற பெயரில், இந்தியாவின் பாரம்பரிய வீரிய விதைகளை அழித்துவிட்டு, மரபு அணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைக்க, அரசு உதவியுடன் பன்னாட்டு நிறுவனங்களான மஹைக்கோ, மான்சென்டோ போன்றவை செயற்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் ஆராய்ச்சிகளுக்கு, அரசு வேளாண் பல்கலைக் கழகங்கள் உதவி வருகின்றன.

மரபு அணு மாற்ற பி.டி. பருத்தி விதைகளை வாங்கி விதைத்த, ஆந்திரா, மராட்டிய மாநில விவசாயிகள், கடும் இழப்புக்கு உள்ளாகி, ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர்.

மரபு அணு மாற்று உணவை உண்பதால், உடல் உறுப்புகள் பாதிப்பு, திசுக்கள் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, ஒவ்வாமை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல்களில் நச்சுத் தன்மை போன்ற உடல்நலக் கேடுகள் நேரும் என்பது, ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், இப்போது அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், மரங்கள் என அனைத்து வகை செடி,கொடிகளிலும், மரபு அணு மாற்றுப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

மண்ணையும் மக்களையும் மலடாக ஆக்கும் மரபு அணு மாற்று விதைகளுக்கும், மரபு அணு மாற்றுத் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் தடை விதிக்க வலியுறுத்துவோம்.

கள் இறக்க அனுமதி

முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும் வரையில், கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். மதுபானங்களின் பட்டியலில் இருந்து கள்ளை நீக்கி, பெப்சி, கோக் பானங்களுக்கு மாற்றாகப் பருகவும், ஏற்றுமதிக்கும் வழிவகை செய்து, தென்னை, பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் காப்போம்.

8. சேதுக் கால்வாய்த் திட்டம்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் கடந்த 130 ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் கோரிக்கை ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளுள் ஒன்றான இந்தத் திட்டத்தை நடுவண் அரசு நிறைவேற்ற, 1998 ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தவுடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார்.

1998 செப்டம்பர் 15 இல் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய பெரியார் அண்ணா பிறந்தநாள் விழா மறுமலர்ச்சிப் பேரணிப் பொதுக்கூட்டத்தில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், வைகோவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், மத்திய அரசு சேதுசமுத்திரக் கால்வாய்த்திட்டம் நிறைவேற்றும் என்றும் பிரகடனம் செய்தார். திட்டத்தின் தொடக்கப்பணிகளுக்காக, வாஜ்பாய் அரசு நிதியும் ஒதுக்கியது.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோதும், வைகோ அவர்களின் முயற்சியால்தான் அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேதுக் கால்வாய்த் திட்டம் இடம் பெற்றது. திட்டத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டபோது, கடலில் இராமர் பாலம் அமைந்து உள்ளதாகவும் அதற்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்றும் எதிர்ப்பு உருவாயிற்று. மத உணர்வுகளைப் புண்படுத்தாமலும், தமிழக மீனவர்களின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படாமலும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தற்போது, 40 மெட்ரிக் டன் எடைக்கு மேற்பட்ட கப்பல்கள் பயணிக்க இயலாத வகையில் குறுகிய கால்வாயாகவே அமைய இருப்பது, அண்ணாவின் கனவை நிறைவேற்றாது. எந்த நோக்கத்துக்காக இத்திட்டம் வேண்டும் என்று நெடுங்காலமாகத் தமிழர்கள் கோரி வந்தார்களோ அந்த நோக்கமும் நிறைவேறாது என்பதால், பெரிய கப்பல்களும் பயணிக்கும் விதத்தில் திட்டத்தை மாற்றி அமைத்து வெற்றிகரமாக நிறைவேற்றிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

9. நதிகள் இணைப்பு

மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில், உணவு விளைச்சலில் தன்னிறைவு காண, புதிய விளைநிலைங்களில் பாசன வசதிகளைப் ளைப் பெருக்க, இந்திய நதிகளில் பாய்ந்தோடும் நீரைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியாவில் ஓடுகின்ற நதிகளை நாட்டு உடைமை ஆக்க வேண்டும்.

தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள காவிரி ஆற்றின் துணை ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். மகாநதி முதல் தாமிரபரணி வரையிலான தீபகற்ப ஆறுகளை இணைக்க வேண்டும்; முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

10. நதிநீர்ச் சிக்கல்களுக்குத் தீர்வு

மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் பொறுப்பு வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர்ச் சிக்கல்களுக்கு நியாயமான தீர்வு காணாமல் ஒதுங்கிக்கொண்டு, தமிழகத்தை வஞ்சித்தது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தவும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திடவும், பாலாறு, பெண்ணையாறு மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் நீர்வரத்தைத் தடுத்து நிறுத்தி, ஆந்திர மாநில அரசு தடுப்பு அணை கட்டுவதை நிறுத்தவும், பவானி நதிநீர் பங்கீடு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டங்களை நிறைவேற்ற கேரள மாநிலத்துடன் ஏற்பட்டு உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், ஒகேனக்கல் திட்டத்துக்குக் கர்நாடக மாநிலம் ஏற்படுத்திவருகின்ற தடைகளை அகற்றவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்!

நதிநீர் வாரியம்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்களுக்குத் தீர்வு காண, 1956-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நதிநீர் தாவா சட்டப்படி, நடுவர் மன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ‘நதிநீர் வாரியம்’ அமைக்க வலியுறுத்துவோம்.

11. கச்சத்தீவு

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து சுட்டுக் கொன்று குவித்திடும் நிலைமை தொடருகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில், 900 தடவைகளுக்கும் மேல், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது; ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஆனால், இந்திய அரசு ஒருமுறை கூட இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை. இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை.

இந்திய இறையாண்மைக்கு எதிராக, பன்னாட்டுக் கடல் பரப்பில், கண்ணிவெடிகளை சிங்களக் கடற்படையினர் வைத்ததுடன், தமிழக மீனவர்களை மிரட்டி, எச்சரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவை, இந்திய அரசு 1974 ஆம் ஆண்டு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. அப்போது, இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவில் மீன்பிடிக்கவோ, வலைகளை உலர்த்தவோ, அங்குள்ள அந்தோணியார் கோயில் தேவாலயத்தில் வழிபாடு நடத்தவோ, இலங்கை அரசு தமிழக மீனவர்களை அனுமதிப்பது இல்லை. மீறிச்சென்றால், நமது மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்கிறது.
ஆகவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்து, மீண்டும் நமது கட்டுப்பாட்டில் கச்சத்தீவைக் கொண்டுவரக் குரல் கொடுப்போம்.

12. மின்சாரத் துறை

நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கும் மின்சாரத் துறை, தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

80 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 11 1/2 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வரலாறு காணாத மின்வெட்டால் நலிவுற்றன. தமிழகத்தின் மின்தேவை 9576 மெகாவாட்டாக உயர்ந்து இருப்பது மட்டுமின்றி. ஆண்டுதோறும் மின்தேவை 500 மெகாவாட் கூடுதலாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுத் திட்டங்களின் வழியாகக் கிடைக்கும் மின்சாரம், வெறும் 6048 மெகாவாட் மட்டுமே. மின் தேவையையைத் துல்லியமாகக் கணிக்காததும், மின் உற்பத்தியை பெருக்காததும் தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடு 1ஆகும்.

இந்த நிலையில், பன்னாட்டு நிறுவன;;களுக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குவதாக அறிவித்து, தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்வதற்கு, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின்சார திட்டத்தையும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் ஆயுட்காலம் முடிவடைதால், புதிய மின் நிலையம் அமைக்கவும் ஆவன செய்வோம்.

மரபுசாரா எரிசக்தித் திட்டங்களுக்கு முதன்மையான இடம் அளிக்க வலியுறுத்துவோம். சூரிய ஒளி, குப்பைக் கழிவுகளில் இருந்து மின்விசை பெறும் திட்டங்களைச் செயல்படுத்திடவும், தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கும், காற்று ஆலை மின் உற்பத்திக்கும் அரசு உதவிகள் கூடுதலாகக் கிடைக்கவும் வலியுறுத்துவோம்.

மின்சாரம் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் மின்சார வாரியச் சீர்கேடுகளைக் களைய, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துப்படும்.

தடையில்லா மின்சாரம்

வேளாண்மைக்குத் தேவையான அளவு தடையில்லா மின்சாரம் வழங்கவும், மானிய விலையில் மோட்டார் பம்ப்செட் மற்றும் விவசாயக் கருவிகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சொந்தப் பயன்பாட்டுக்காக, மரபுசாரா எரிசக்தியால் மின்விசை பெறும் விவசாயிகளுக்கு, முழு மானியத்துடன் கூடிய கடன் உதவி அளிக்கப்படும்.

13. மீனவர் நலன்

மத்திய அரசு கொண்டுவந்து உள்ள கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம், மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கடல்பரப்பில் 24 கி.மீ. தொலைவில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டுக் கடற்கரையின் 1076 கி.மீ. நீளப்பகுதியில், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ள ஒரு கோடி தமிழக மீனவர்களின் வாழ்வு உரிமைகளைப் பறிக்கும் கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடலோர முறைப்படுத்துதல் சட்டத்திற்கு உட்பட்ட நிலங்களின் பயன்பாட்டையும், சுனாமியால் கடல் தரைக்கு ஏற்பட்ட மாற்றங்கள், கடலோர பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அரசு நிலை அறிக்கை வெளியிடப்படும். கடலோர முறைப்படுத்துதல் சட்டத்தின் முதல் பகுதியில் உள்ள, உணவு விடுதிகள், ஓய்வு இல்லங்கள், இறால் தொழிற்சாலைகள் போன்ற ஆக்கிரமிப்புகளை நீக்கி, அப்பகுதியை மீட்டுச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள, கடற்கரையில் கடலோர தடுப்புச்சுவர் கட்டுவதற்குப்பதிலாக, அலையாத்திக் காடுகள், மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகள் வளர்க்க வலியுறுத்துவோம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பாக அரியவகை மணல் தோண்டப்படுவதால், கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ கிராமங்கள் அழிந்து வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆழ்கடல் பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்குவது ரத்து செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப்போல், மீனவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை, முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்துவோம். மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்தும் டீசல், மண்ணெண்ணெய்க்கு, மத்திய அரசின் அனைத்து வரிகளும் நீக்கப்பட வேண்டும்.

மீனவர் நல வாரியத்துக்குத் தனி அலுவலகம் அமைத்து, வாரியப் பணிகள் துரிதமாக நடைபெற ஆவன செய்யப்படும். மீன் பிடி தொழிற்சார்ந்த பணிகளில் உள்ள மீனவப் பெண்களை, தொழிலாளர்களாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி துறைமுகங்கள்

தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிறு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். அவற்றுக்கு அருகாமையில் மீனவக் குடும்பங்கள் வசிப்பதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

14. கல்வித்துறை

அரசியல் சட்டத்தின் பிரிவு 21(அ), 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக, அனைவருக்கும் கல்வி என்பது கானல் நீராகவே இருக்கிறது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் உள்ள 3.4 கோடி பெண் குழந்தைகள் உள்ளிட்ட, 6 கோடி குழந்தைகள் பள்ளிக்கே செல்வது இல்லை. தமிழகத்தில் தொடக்கக் கல்வி முற்றாகச் சீரழிந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கான மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

அடிப்படைக் கல்வி பெறுவதை குழந்தைகளின் உரிமையாக ஆக்க வேண்டும்; ‘கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி இறுதித் தேர்வு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைக் கல்வி இலவசமாக அளிக்க வேண்டும்.

ஏழை எளிய நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசுப்பள்ளிகளையே நாட வேண்டிய நிலையில், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து இருக்கின்றன. தனியார் நடத்தும் பள்ளிகளில் இருக்கும் தரமும் கட்டமைப்பு வசதிகளும் அரசுப்பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியா முழுவதும் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வலியுறுத்துவோம்.

சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டம் வகுக்க வலியுறுத்துவோம்.

நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில், 8 விழுக்காடு கல்வித்துறைக்கு ஒதுக்கிட வலியுறுத்துவோம்.

கல்வி வணிகமயமாகிடும் போக்கைக் கட்டுப்படுத்தி, அரசுக் கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி மருத்துவக்கல்வி மற்றும் உயர்கல்வி கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும். மேலாண்மையியல், தொழில் நுட்பவியல் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடைபெறும் பொது நுழைவுத் தேர்வுகளில், தேர்ச்சி முறை கடுமையாக இருக்கிறது. தரமான கல்வி அடித்தளம் உள்ளவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். ஆகவே உயர்கல்வி பயிலும் வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பெறும் வகையில், கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் விதிமுறைகளை எளிதாக்கிடவும் ஆவன செய்வோம்.

புதிய கல்வி நிறுவனங்கள்

தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத கீழ்காணும் கல்வி நிறுவனங்களை அமைத்திட வலியுறுத்துவோம்.

மதுரை - தமிழ்நாடு வங்கி மற்றும் நிதி மேலாண்மைக் கல்வி நிறுவனம். ( Institute of Banking and Finance )

கோவை - இந்திய அறிவியல் கழகம்

( Indian Institute of Finance )

தஞ்சாவூர் - பன்னாட்டு உயிரித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

( International Institute of Bio-technology )

திருப்பூர் - பன்னாட்டு பனியன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

( International Institute of Knitwear Technology )

சேலம் - சுரங்கம் மற்றும் செயற்கை வைரம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

( Tamil Nadu Institute of Mining and Gemology )

தேனி - உயிரி மருத்துவப் பொறியியல் புல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

( Research for Development of Bio-Medical Engineering )

கன்னியாகுமரி - ஆசிரியர் பயிற்சிக் கழகம்

( Academy of Teacher's Training )

திண்டுக்கல் - விமானப் பயிற்சிக் கல்வி நிறுவனம்

( Tamil Nadu Institute of Aviation )

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம்

புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (A.I.I.M.S.) மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை சென்னையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

15. மகளிர் நலன்

நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில், பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கிடும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாக் கடன், உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, புதிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும்.

நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கையில், மகளிர் நலத் திட்டங்களுக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளையும், பெண் கருக் கொலையையும் தடுத்து நிறுத்த, சட்டம் கடுமையாக்கப்படும்.

பெண் கல்வி / தொழில் முனைவோர்

பெண்கள் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி இலவசமாகப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்திட, வங்கிகள் நீண்ட கால தவணையில் நிபந்தனை அற்ற கடன் உதவி வழங்கப்படும்.

16. குழந்தைகள் நலன்

குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்டவும், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம் போன்று தேசிய, மாநில அளவில் ‘குழந்தைகள் ஆணையம்’ அமைக்க வலியுறுத்துவோம்.

17. தொழிலாளர் நலன்

உலகமயமாக்கல் மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவில் சுமார் 20 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். ஆலைகள் மூடல், ஆட்குறைப்பால், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். கனரகத் தொழில் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் சந்தித்துவரும் தொழில் நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு, தொழிலாளர்களைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போம்.

உலக பொருளாதார நிதி நெருக்கடியின் எதிரொலியாக உருக்கு, சிமெண்ட், தகவல் தொழில்நுட்பம் ( I.T.), அயல்பணி ஒப்படைப்பு ( BPO ), நிதித்துறை, சேவைத்துறை, கட்டுமானத்துறை மற்றும் தனியார் போக்குவரத்துத்துறைகளில் 30 விழுக்காடு வரையிலும் ஆட்குறைப்பு செய்ய, தொழில் முனைவோர் கூட்டு அமைப்பு தீர்மானித்து உள்ளது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்போம். வேலை இழப்புக்கு ஆளான தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

தொழிலாளர் அடிப்படை உரிமைகள்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை ஆகியவை உறுதி செய்யப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றக் குரல் கொடுப்போம். என்.எல்.சி, பெல் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் மற்றும் தனியார்த் துறையிலும் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்துவோம்.

பெண் தொழிலாளர்களுக்கும் ஆண்களுக்கு நிகரான ஊதியம், ஓய்வு ஊதியப் பலன் மற்றும் இதர சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வாக, கடைநிலை ஊழியர்களின் சம்பளத்தை வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யவும், விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்போம். அரசு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வு ஊதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வருங்கால வைப்பு நிதி வட்டி உயர்வு

அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 2.75 கோடி பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி வட்டிவிகிதத்தை, மீண்டும் 12 விழுக்காடாக உயர்த்த முயற்சி எடுப்போம்.

இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கடுமையாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.

பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம் ( I.L.O ) வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தொழிற்சாலை விபத்துக்கள் மற்றும் ஆலைகளால் ஏற்படும் நோய்களால், சுமார் 4 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பையும், உடல் நலத்தையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

18. ஊனமுற்றோர் நலன்

அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களிலும் கல்வி வேலை வாய்ப்புகளில் உடல் ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடு கட்டாய இட ஒதுக்கீடு வழங்கிடக் குரல் கொடுப்போம். உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் இலவசமாகக் கல்வி வழங்கிடவும், தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தவும் ஆவன செய்யப்படும்.

19. அரசு ஊழியர் நலன்

அரசு ஊழியர்கள், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு, மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

வருமான வரி விலக்கு பெறுவதற்கு வருமான வரி சட்டப் பிரிவு 80 ( C )-இன்கீழ், சேமிப்பு உச்ச வரம்பு ரூபாய் ஒரு இலட்சத்தில் இருந்து ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்படும்.

பிரிவு 80 ( L )-இன்கீழ் உச்ச வரம்புத் தொகை ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர் மற்றும் தனியார் ஊழியர்களின் இதர சலுகைகள் மீதான வரி ( Fringe Benefit Tax ) அறவே ரத்து செய்யப்படும்.

இசைக்கலைஞர், நாடகக் கலைஞர் நலன்

திறமையான இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் வயது முதிர்ந்த நிலையில் நெடுந்தொலைவு பயணித்து நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்க இயலாத நிலைமை உள்ளது. இரயில்களில் தற்போது, 300 கி.மீ. தொலைவு பயணம் செய்திட இசைக்கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகையைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைவோம். நலிந்த இசைக்கலைஞர்களுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் கிடைப்பது இல்லை. இசை, நாடகக் கலைஞர்களின் வயது, திறமை, இயலாமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிட வலியுறுத்துவோம்.

20. பங்குச் சந்தை

பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தால், ஏழை, எளிய மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அளவுக்கு அதிகமாக அயல்நாட்டு முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தையில் புகுந்ததால், குறியீட்டு எண் தாறுமாறாக உயர்ந்தது. திடீரென ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்தது. இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பங்குச் சந்தை உள்ளிட்ட வேறு எந்தத் துறைகளிலும், அயல்நாட்டு நேரடி முதலீடுகள் புகுந்து விடாமல் வரைமுறைப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்படும்.

வங்கித் துறை

நிதித்துறையில் தாராளமயத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்துவோம். வங்கிகள், காப்பீட்டுத் துறைகளில் தனியார்மயமாவதைத் தடை விதிக்கக் கோரப்படும். அயல்நாட்டு முதலீடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், நிதி மற்றும் தொழில்துறைகளில், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுத்துறை வங்கிகள், பாரத மாநில வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்ய, ‘வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பயன்படுத்த வலியுறுத்துவோம்.

இணையதள வணிகம், ஊக வணிகம்

நிதி மற்றும் வணிகத்துறை சூதாட்டத்துக்கும், விலைவாசி ஏற்றத்துக்கும் காரணமான இணையதள வணிகம் ( On Line Trading ) ஊக வணிகம் ( Future Trading) ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய ஆவன செய்யப்படும்.

சில்லரை வணிகத்தில் அயல்நாடுகளின் முதலீடு

காங்கிரஸ் கூட்டணி அரசின் நேரடி முதலீட்டுக் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்துக்கும், சமூக நலனுக்கும் பெருங்கேடு விளைவித்து உள்ளது.

இந்திய வணிகத்தில் 98 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்ற சில்லரை வணிகத்தில், சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் கடைகள் உள்ளன. விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக, சுமார் 4 கோடி குடும்பங்களுக்கு, சில்லரை வணிகத்தால் வேலைவாய்ப்பு கிடைத்து வருகின்றது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சில்லரை வணிகத்தின் பங்கு 14 விழுக்காடு ஆகும். சமுதாயம் சார்ந்த சில்லரை வணிகத்தை, அயல்நாட்டு நிறுவனங்களைச் சார்ந்ததாக மாற்றி அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம்.

சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அடித்தட்டு மக்களின் பாதுகாப்பான சேமிப்பை ஊக்கப்படுத்தவும், வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவும் வலியுறுத்துவோம்.

21. தொழில், வணிகத்துறை

தகவல் தொழில் நுட்பத் துறையில் ( IT ) இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்தது என்றாலும், உலகமயமாக்கலின் விளைவாக, இறக்குமதியை நம்பிய உற்பத்தி சார்ந்த தொழில்துறை எந்தப் பயனையும் பெறவில்லை. தொழில் துறையும் விவசாயத் துறையும் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற துறைகள் ஆகும். தங்குதடையின்றிப் பாயும் அயல்நாட்டு நிதி முதலீடுகள், உற்பத்தியையோ அல்லது உற்பத்திகள் மூலதனத்துக்கோ தொடர்பு இல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இது எந்தவிதத்திலும் தொழில் துறை வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை. எனவே, நமது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றம் தந்த உற்பத்தித் தொழில்களைப் பாதுகாத்து மேம்படுத்த வலியுறுத்துவோம்.

தொழில், வணிகத்துறைக்கு வங்கிகள் அளித்திடும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும். வங்கிகள் வழங்கி உள்ள கடன்கள், நீண்ட காலத் தவணையாக மாற்றப்படும்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டால் பாதிப்பு அடைந்து உள்ள தொழில் வணிகத் துறைக்கு, மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்துவோம்.

வரி, வட்டி மற்றும் அபராதத் தொகைகள், பாக்கிகள் குறித்து மேல்முறையீட்டு மன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட அனைத்துத் தாவாக்களையும் சமரசமான முடிவுக்குக் கொண்டுவர, ‘புதிய சமாதானத் திட்டம்’ ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்த வலியுறுத்துவோம்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய சேவை வரி ( Service Tax ) வணிகத் தொழில்துறைக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கிறது. எனவே, சேவை வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

22. பொதுத்துறை

நாட்டின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்கு ஆற்றிய பொதுத்துறை நிறுவனங்கள், சுரங்கம் மற்றும் கனிம வளங்களையும், தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், சேலம் இரும்பு ஆலைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம்.

மூடப்பட்டும் கிடக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களைச் செம்மைப்படுத்த, அரசின் முதலீடுகளைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

23. நெசவுத் தொழில்

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, வேலைவாய்ப்புகளை வழ குவது நெசவுத்துறை. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி ரூ 90,000 கோடி. அதில் பின்னல் மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி ரூ 45,000 கோடி.
தமிழகத்தில் துணி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியால், ஆண்டுக்கு ரூ 11 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. நூல் விலை ஏற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சேவை வரி விதிப்பு போன்றவற்றால் துணி ஏற்றுமதி வீழ்ச்சியுற்றது. இதனால் துணி ஆலைகள் மூடப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சுமார் 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் கேடு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு பெருமளவு அயல்நாட்டுச் செலாவணியை ஈட்டித் தருகின்ற நெசவுத்தொழிலைக் காப்பாற்ற, நடுவண் அரசு சலுகைகள் வழங்கவும், நெசவுத் தொழிலில் புதுமையான கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய வணிக உத்திகள், உயர் தொழில் நுட்பப் பயிற்சிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காக்கள் அமைப்பதை விரைவுபடுத்துவோம். தமிழ்நாட்டில் மின்சார வெட்டால் பாதிக்கப்பட்ட துணி நெசவு ஆலைகளுக்கு, கடன் வட்டி தள்ளுபடி மற்றும் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிப்பு அளித்திட நடவடிக்கை எடுப்போம். திருப்பூரில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக்கு மானியம் வழங்கி, நெசவுத்தொழிலைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போம்.

24. தீப்பெட்டித் தொழில்

தீப்பெட்டித் தொழிலின் மூலப் பொருள்களான வேக்Þ, சல்பர், குச்சி போன்றவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, தானியங்கிக் கருவிகளின் வருகை போன்ற சூழல்களால், கையினால் செய்யப்படும் சிறு தீப்பெட்டித் தொழில் தற்போது தடுமாற்றத்தில் உள்ளது. சிறு தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க, இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிக்கு, உற்பத்தி வரியை உயர்த்த ஆவன செய்வோம்.

வேலையில்லாத் திண்டாட்டம்

கடந்த பத்து ஆண்டுகளாக, ஒருங்கமைக்கப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகின்றது. தாராளமயமாக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு வேலைவாய்ப்பு 2.7 விழுக்காடு அளவாக இருந்தது. ஆனால், தாராளமயம் நடைமுறைக்கு வந்த பின்னர் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு ஒரு விழுக்காடாகக் குறைந்து விட்டது. ஆண்டுக்கு 7.6 லட்சம் புதிய வேலைவாய்ப்பு என்பது வெறும் 3.5 இலட்சமாகச் சுருங்கிப் போய்விட்டது. இது பெரும் வீழ்ச்சியாகும்.

நாட்டின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. இந்தியாவில் 5 கோடி படித்த இளைஞர்கள் வேலை தேடும் நிலைமை தொடருகிறது. தமிழ்நாட்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டி விட்டது.

ஆகவே வருங்காலத்தில் ஆண்டுக்கு 20 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை, அரசு மற்றும் தனியார் துறைகளில் கிடைத்திட ஆவன செய்வோம்.

25. சுற்றுச்சூழல்

சுற்றுச் சூழலைப் பாதிக்காத தொழில்துறை வளர்ச்சிதான் பயன் அளிக்கும். ஆனால் பெருகி வரும் இரசாயன ஆலைகள், சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன. சோடியத்தைப் பயன்படுத்தும் ஆலைகள், பெருமளவில் பாதரசத்தை பயன்படுத்துகின்றன. பாதரசம் ஒரு உயிர்க்கொல்லி. சிறுநீரகங்கள் மற்றும் பெண்களின் கருப்பைகள் பாதரசத்தால் பாதிக்கப்படுகிறது. காற்றில் பாதரச நச்சுத்தன்மை கலப்பதைத் தடை செய்யவும், பாதரசப் பயன்பாட்டை அறவே ஒழித்து புதிய உற்பத்தி முறைகளைக் கொண்டு வரவும் சட்டம் இயற்ற வலியுறுத்தவோம்.

உலகையே அச்சுறுத்தும் புவி வெப்ப உயர்வு, இயற்கையின் சமன்பாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காற்றில் கரிமத்தின் அளவு பெருகி வருவதால், வெப்பம் உயருகிறது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் நிலை உள்ளதாக சுற்றுச் சூழல் மதிப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது. ஆகவே, தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு வெளியேறுவதைக் குறைக்கும் செயல் திட்டங்களை வகுக்க ஆவன செய்வோம்.

தமிழகத்தின் நதிநீர்ப் படுகைகளில் மணல் தோண்டப்படுவதால், ஆறுகளின் போக்கு மாறி, பாசனக் கட்டுமானங்கள் அழிகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, நிலத்தடிநீர் உப்பாக மாறுகிறது. விளைநிலங்கள் தரிசாகும் கேடு ஏற்பட்டு உள்ளது. ஆற்றுமணலைக் கொண்டு செல்லும் வண்டிகளால், நெடுஞ்சாலைகள் விரைவில் பழுதாகின்றன. ஆகவே, மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த, கடுமையான சட்டத்தை கொண்டுவர வலியுறுத்துவோம்.

தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மட்டுமன்றி, ஆறுகளின் கரைகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் தினசரி சந்தைகள் அனைத்தும் வெளியேற்றும் கழிவுகள், பொது இடங்களிலும் குவியும் கழிவுகள், இவை அனைத்தும் நதிகளில் கலந்து விடுகிறது.

இவ்வாறு மாசுபடுத்தப்பட்ட நீரை, மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகிறார்கள். கழிவுகளின் அளவு அதிகமாகி நதிநீர் மாசு அடைவது மட்டும் இன்றி மக்கள் பயன்படுத்தும் குடிநீரால் மக்கள் பல்வேறு நோய்க்கு ஆளாகின்றனர். விவசாயிகளும், மாசுபட்ட நீரால் வேளாண்மைத் தொழிலை இழக்கும் அபாயம் வளர்ந்து வருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு நதிநீரை பாதுகாக்கவும், தூய்மைபடுத்தவும் அரசு அதிகாரம் படைத்த ஆணையம் அமைத்திட ஆவண செய்வோம்.

தண்ணீர் வணிகமயம்

மனித சமூகத்திற்கு இயற்கை வழங்கும் கொடையான தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றி, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். காவிரி, பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகைகளிலும், செழுமையான நீர்வளம் உள்ள இடங்களிலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தண்ணீரை விற்க வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்வோம்.

26. நலவாழ்வு

எந்த ஒரு நாடும் தம் குடிமக்களின் உயிர்களைக் காக்கும் நல்வாழ்வுத் துறைக்கே முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நமது நாட்டின் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு, சுகாதார வசதிகள் மிகமிகக் குறைந்த அளவில்தான் கிடைக்கிறது. மக்கள் நல்வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 5 இலட்சம் பேர் மரணம் அடைகிற வகையில்,மலேரியா, யானைக்கால் நோய், காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
காசநோயாளிகளும், உலகில் உள்ள 3 கண்பார்வையற்றவர்களுள் இருவரும், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுள் 10 இல் 8 பேரும் இந்தியாவில் உள்ளனர்.

மேலும் ஆண்டுதோறும் மலேரியாவால் 20 இலட்சம் பேரும், வயிற்றுப் போக்கால் 6 இலட்சம் குழந்தைகளும் மடிகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக, இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் நல்வாழ்வில், உலகில் இந்தியா 47 ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

இந்திய அரசு ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு சதவிதம் மட்டுமே மக்கள் நல்லவாழ்வுக்குச் செலவிடுகிறது. மக்கள் தொகையைக் கணக்குக்கு, இது மிகவும் குறைவு ஆகும். ஆகவே, நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் 7 விழுக்காடு தொகையை, மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்போம்.

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு உரிய வசதிகளுடன் கூடுதலான நல்வாழ்வு மையங்கள் அமைப்பதற்கு ஆவன செய்வோம். இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல், நடுத்தர மக்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்ட மக்களும் அல்லல்படுவதைத் தடுத்திட உயர்ந்த தரத்துடன் கூடிய மருத்துவமனைகளை உருவாக்கிட நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமாகச் செயல்பட்டு வந்த தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிறுவனங்களான, சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி. தடுப்பூசி உற்பத்தி மையம், குன்னூரில் உள்ள வெறி நாய்கடி தடுப்பூசி உற்பத்தி செய்யும் பாஸ்டியர் நிறுவனம் ஆகியவற்றை மூடுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதைத் தடுத்து நிறுத்துவோம்.

நாகர்கோவிலில் செவிலியர் பயிற்சி மற்றும் மருத்துவமனை மேலாண்மைக் கழகம் ( Academy of Nursing and Hospital Management ) அமைக்க வலியுறுத்துவோம்.

27. விளையாட்டுத் துறை

நூறுகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலக அரங்கில் விளையாட்டுத்துறையில் பளிச்சிட முடியாத நிலை இன்னமும் தொடருகிறது. பீகிங் ஒலிம்பிக்கில் ஒரேயொரு தங்கப்பதக்கமும், இரு வெண்கலப் பதக்கங்களும் மட்டுமே பெற முடிந்தது. துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், சதுரங்கம் போன்ற தனிநபர் விளையாட்டுகளில்தான் அவ்வப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் வெளிப்படுகின்றன. ஆனால், அணி விளையாட்டுக்களில் நாம் வெற்றி பெற முடியவில்லை. ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமும், உதவியும் அளிக்க மத்திய அரசு, விளையாட்டுதுறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்துவோம்.

மாணவர்களிடம் மறைந்து இருக்கும் விளையாட்டுத் திறமையை பள்ளிப்பருவத்திலேயே கண்டறிந்து ஊக்குவிக்கவும், விளையாட்டுத் திடல்கள், மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அளத்தங்கரையில், நடுவண் அரசின் சார்பில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைப் பயிற்சி மையம் அமைப்பதாக, நடுவண் அரசு அறிவித்த திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடைக்கானலில் விளையாட்டுக் கழகம் ( Sports Academy ) அமைக்க வலியுறுத்தப்படும்.

28. சட்டம் மற்றும் நீதித்துறை

சட்டம் இயற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவைகளே நாட்டைத் தாங்கிப்பிடிக்கும் மூன்று தூண்கள் ஆகும். சட்டம் இயற்றும் துறையிலும் நிர்வாகத்துறையிலும் அவ்வப்போது சீர்திருத்தங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நீதித்துறைச் சீர்திருத்தங்கள் இன்னமும் முழுமை பெறவில்லை. இந்திய நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ‘தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகும்’ என்பது ஆங்கிலப் பழமொழி. இந்திய நீதித்துறையின் சக்கரங்கள் மெதுவாகச் சுழல்கின்றன. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 175 ஆண்டுகளாக ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அயல்நாடுகளில், வழக்குகள் வேகமாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஏழைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இதனால், உள்நாட்டில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு, கொலை, கொள்ளை, வன்முறை மோதல்கள் பெருகி வருகின்றன.

ஆகவே, நீதித்துறையில் தாமதம் நேரிடுவதைத் தடுக்க, சீர்திருத்தங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், அலுவலக அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை.

பிப்ரவரி மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 23.7 விழுக்காடு, அதாவது 1,41,703 கோடி ரூபாய்கள், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், நீதித்துறைக்கு, .078 விழுக்காடு, அதாவது வெறும் 500 கோடி ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து 4.3 விழுக்காடு, அமெரிக்கா 1.5 விழுக்காடு தொகையை நீதித்துறைக்கு ஒதுக்கி உள்ளது. இந்தியாவில் குறைந்தது ஒரு விழுக்காடு கூட நீதித்துறைக்கு ஒதுக்கப்படவில்லை என்பது வேதனைக்கு உரியது.

எனவே, நீதித்துறைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திட மறுமலர்ச்சி தி.மு.கழகம் குரல் கொடுக்கும்.

நீதிபதிகள் நியமனத்தை வெளிப்படையாகச் செயல்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற நிலைக்குழு செய்த பரிந்துரையை, நடுவண் அரசின் சட்டத்துறை நிராகரித்து உள்ளது. நீதிபதிகள் நியமனத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையைச் செயல்படுத்தக் குரல் கொடுப்போம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளையும் கொண்டுவர வற்புறுத்துவோம்.

உச்சநீதிமன்றத்தின் கிளைகளை, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைக்க வலியுறுத்துவோம்.

29. சுற்றுலா மேம்பாடு

இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கு, தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கினால், சுற்றுலா வளர்ச்சி பெறும்; அயல்நாட்டுச் செலாவணி வருமானம் பெருகும். உலகத் தொல்லியல் வரைபடத்தில் ( World Heritage Center ) இடம் பெற்று உள்ள தமிழக சுற்றுலா மையங்களுக்கு, தனி சுற்றுலா தொடர்வண்டி இயக்கிட வலியுறுத்துவோம்.

30. வறுமை ஒழிப்பு

நாட்டில் 80 விழுக்காடு மக்கள், நாளொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக, நடுவண் அரசின் புள்ளியியல் துறை அறிவித்து உள்ளது. இந்தியாவில், வறுமை ஒழிப்புக்காக, நடுவண் அரசு பத்து ஐந்து ஆண்டுத் திட்டங்களில், பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியும்கூட, கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர். எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, கிராம உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசுத் துறை, தனியார் துறை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

வேளாண்மை சார்ந்த தொழில்கள், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, வேளாண் பதனிடும் தொழில், கதர் கிராமத் தொழில்கள் தொடங்க முழு மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்கவும், கிராமப்புற சிறுதொழில் கூடங்களை அமைக்கவும் வலியுறுத்துவோம்.

31.தி.மு.க.வின் தொலைத்தொடர்புத் துறை ஊழல் (ஸ்பெக்ட்ரம்) குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ள தி.மு.க. அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், தொலைத் தொடர்புத் துறையில் அலைபேசி இணைப்பு வழங்க 2 ஜி அலைக்கற்றைகள் ( Spectrum ) ஒதுக்கீடு செய்ததில், இந்திய அரசுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்தியாவின் வரலாற்றில் காண முடியாத அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளாமல், தனது கூட்டாளியான தி.மு.க.வை, ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கத் துணைபோன காங்கிரஸ் கூட்டணி அரசைக் கூண்டில் நிறுத்தி, இந்தியாவின் இமாலய ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, ஊழலில் தொடர்பு உடையவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்தியர்களால், சுவிஸ் வங்கியில் போடப்பட்டு உள்ள தொகை 108 இலட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, அந்த வங்கியின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். கோடானுகோடி ஏழை மக்கள் வறுமையில் வாடும் இந்திய நாட்டில் கொள்ளையிடப்பட்ட அந்தக் கறுப்புப் பணத்தை, சுவிஸ் வங்கிகளில் இருந்து கைப்பற்றிக் கொண்டு வர நடுவண் அரசை வற்புறுத்துவோம்.

32. இரயில்வே

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இரயில்தட நிர்வாகம், மதுரை கோட்டத்தில் இருந்து வந்த நிலையை மாற்றி, கேரளத்தின் பாலக்காடு கோட்ட நிர்வாகத்தில் சேர்த்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட வஞ்சகம் ஆகும். அந்தப் பகுதியை மீண்டும் மதுரை கோட்ட நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும். அதேபோல், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வழியாக தமிழகத்தின் எல்லை வரை உள்ள அகல ரயில்பாதை கேரளத்தின் திருவனந்தபுரம் கோட்ட நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மதுரை கோட்ட நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும். இதற்காகக் குரல் கொடுப்போம்.

சென்னை - மதுரை - கன்னியாகுமரி இடையே துரித இரயில் போக்குவரத்துக்கும் அப்பாதையில் பல புதிய இரயில்களை அறிமுகப்படுத்துவதற்கும் வசதியாக அப்பாதையை இரட்டை அகல இரயில் பாதை அமைத்து மின்மயமாக்குதல்;

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகள் முன்னேற்றம் அடைய மதுரை - கோட்டயம், திண்டுக்கல் - சமபரிமலை பாதை அமைத்தல்;

நிலுவையில் உள்ள மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்களைச் செயற்படுத்தவும், தமிழகத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும் புதிய வழித்தடங்களை அமைத்தல்;

தொழிற்சாலைகள் உருவாக்கம், பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னையின் புறநகர் பகுதிகளையொட்டி புதிய இரயில் வழித்தடங்கள் அமைத்தல்;

திருபெரும்புதூரில் இருந்து ஏகாட்டூர் வழியாக காஞ்சிபுரம் வரையிலும், கோவையிலிருந்து சேலம் வரையிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலும், வெள்ளக்கேட் வழியே மீண்டும் ஆற்காடு, திருவண்ணாமலை வரை செல்ல புதிய வழித்தடம்;

தொழிற்பேட்டைப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, திருபெரும்புதூர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகியவற்றை இணைக்கும் புதிய வழித்தடம்;

மேட்டுப்பாளையம்-மைசூர் இடையே புதிய ரயில் தடம் அமைத்தல்;

சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரம் ரயில் நிறுத்தம் போல் ஆவடி மற்றும் திருவள்ளூரில் அதிவிரைவு வண்டிகள் நிறுத்தம்;

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும், நாள்தோறும், முற்றிலும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட தொடர்வண்டிகளை இயக்குதல் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த வலியுறுத்துவோம்.

33. வெளியுறவுக் கொள்கை

உலகின் மிகப்பெரிய குடி அரசான இந்தியா, அணிசேரா நாடுகள் கூட்டு அமைப்பை உருவாக்கி, அணிசேரா கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற பெருமைக்கு உரிய நாடு ஆகும். பண்டித ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் கட்டிக்காத்து வந்த அணிசேராக் கொள்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு முற்றிலுமாகச் சிதைத்து விட்டது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, அமெரிக்க நாட்டின் நலனுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, நமது ஜனநாயக மரபுகளை காங்கிரஸ் கூட்டணி அரசு தகர்த்து எறிந்து இருக்கிறது. இந்திய அமெரிக்க அணுவிசை உடன்பாடு, இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு, அணுமின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று நடுவண் அரசு கூறி வருகிறது. ஆனால், அணுவிசை உடன்பாட்டால், இந்திய நாட்டின் வெளி உறவுக் கொள்கைகளில் அமெரிக்கா தலையிடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பன்னாட்டு அணுசக்தி நிறுவனக் கூட்டத்தில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா மூன்று முறை ஆதரித்து வாக்கு அளித்தது.

ஐ.நா. மன்றத்தின் உத்தரவையும் மீறி, ஈராக் நாட்டின் மீது படையெடுத்துச்சென்று, அந்நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொண்டு, இறைமை மிக்க ஈராக் நாட்டைச் சீரழித்த அமெரிக்கா, அதே பாணியில் ஈரான் நாட்டையும் கபளீகரம் செய்திட வகுக்கும் சதித்திட்டங்களுக்கு இந்தியாவையும் துணையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா உருவாக்கி உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசின் இத்தகைய நடவடிக்கைகள், நமது பாரம்பரிய வெளி உறவுக் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

எனவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்காமல், சுயேட்சையான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கவும், அணிசேரா நாடுகளின் கூட்டு அமைப்பை வலுப்படுத்தி, மூன்றாவது உலக நாடுகளில் நிலவும் உலகமயமாக்கல் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் நடுவண் அரசை வலியுறுத்துவோம்.

34. மதச்சார்பின்மை

பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில், சமூக, மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம் உறுதி பூண்டு உள்ளது. இஸ்லாமியர், கிருத்துவர் மற்றும் இதர சிறுபான்மை மக்களுக்கு அரசு அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை நிலைநாட்ட, மறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள், கொடூரமான கொலை வெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்க வகை செய்வோம்.

35. பன்னோக்கு குடி உரிமை அட்டை

தற்போது அரசின் சார்பில் பல்வேறு அடையாள அட்டைகளும் சான்றிதழ்களும் குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அடையாள அட்டை, சிறு-பெரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை, தொழில் முனைவோர்க்கு அடையாள அட்டை, பிறப்பு, இறப்பு, வாரிசு மற்றும் சாதி சான்றிதழ், அமைப்புசாரா தொழிலுக்குத் தனி அட்டை முதலியன வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அத்துடன், வருமான வரி விபரங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறும் விபரங்கள், வசிப்பிட விபரங்கள் உள்ளிட்ட பதிவுகளுடன் அடையாள அட்டை எண்ணும் தரப்பட்டு ‘பன்னோக்கு குடி உரிமை அட்டை ( Multipurpose Citizen Card )’ வழங்க வலியுறுத்துவோம்.

36. அயல்நாடுகளில் வாழும் இந்தியர் நலத்துறை

அயல்நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று உள்ள இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நடுவண் அரசு அயல்நாடு வாழ் இந்தியர் நலத்துறையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இருந்து ஏராளமான படித்த இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று உள்ளனர்.

அயல்நாடுகளில் பணியாற்றுவோர் அந்நாடுகளில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காணவும், இந்தியத் தூதரக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், சென்னையில் அயல்நாடு வாழ் இந்தியர் நலத்துறை மண்டல அலுவலகத்தை திறந்திட வலியுறுத்துவோம்.

37. தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் நடைமுறைகள், விதிமுறைகளை மறு ஆய்வு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேவை ஏற்பட்டு இருக்கின்றது.

தற்போது ஜனநாயக நடைமுறையில், கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் 50 முதல் 70 விழுக்காடு வரையில்தான் மக்கள் வாக்கு அளிக்கும் நிலைமை இருந்து வருகின்றது. அதிலும், 30 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றவர்கள் வெற்றி பெறும் நிலை உள்ளது.

எனவே, தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு ஏற்ப, சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ ( Proportional Representation ) பெறுவதற்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

38. விமான நிலையங்கள் விரிவாக்கம்

மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களை பன்னாட்டு விமான நிலையங்களாகத் தரம் உயர்த்தி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு வழி காணுதல். சென்னையில் புதிதாக மற்றுமோர் பன்னாட்டு விமான நிலையத்தை, உலகத்தரத்தில் உருவாக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வலியுறுத்துவோம்.

துhத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அருகே உள்ள வாகைக்குளம் விமான நிலையத்தை மேம்படுத்தி, அங்கிருந்து சென்னைக்கும் பிற முக்கிய நகரங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் விமானங்களை இயக்கிட வலியுறுத்துவோம்.

39. துறைமுக மேம்பாடு

தூத்துக்குடி துறைமுகத்தை மேலைநாட்டுத் துறைமுகங்களுக்கு ஏற்ப மேம்படுத்தி, பன்னாட்டு சரக்குப் பெட்டகப் போக்குவரத்துக்கான “தெற்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக” மாற்றவும், நாகப்பட்டினம், இராமேஸ்வரம், குளச்சல், தொண்டி, வாலிநோக்கம் போன்ற சிறு துறைமுகங்களை மேம்படுத்தி, தமிழகத்தை ஒட்டிய கடல்வழி சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கிடவும் ஆவன செய்வோம்.

தூத்துக்குடியில் கப்பல்கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் தளம் அமைத்தல்

தூத்துக்குடி துறைமுகத்தில் பன்னாட்டுக் கப்பல்கள் வருகின்றன. அவற்றில் பழுது ஏற்பட்டால், கொழும்பு துறைமுகத்தில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் தளத்துக்குத்தான் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

எனவே, தூத்துக்குடியிலேயே கப்பல் பழுதுபார்த்தல் தளம் அமைக்கவும், மேலும், தூத்துக்குடியிலேயே கப்பல் கட்டும் தளம் அமைக்கவும் வலியுறுத்துவோம்.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டு, தென் மாவட்டங்களுக்குப் பெரும் பயன் அளிக்கும். நமது நாட்டின் அயல்நாட்டுச் செலாவணியும் பெருகும்.

40. இந்திய-அமெரிக்க அணு விசை உடன்பாடு

இந்திய அணு விசை விஞ்ஞானிகளும், பாதுகாப்புத் துறை வல்லுநர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின், இந்திய-அமெரிக்க அணுவிசை உடன்பாட்டைக் கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்திய எரிசக்தித் துறையின் தன்னிறைவுக்கு, அணுவிசை உடன்பாடு பயன்படும் என்று கூறுவது, ஏற்கத்தக்கது அல்ல.

ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே, இந்த உடன்பாட்டினால் நிறைவு செய்ய இயலும். அனல், புனல் மற்றும் இதர மின் உற்பத்திகளை ஒப்பிடுகையில், அணு விசை பெறுவதற்கு பெரும்பொருட்செலவு ஆகும்.

இந்திய அணு விசை நிலையங்களுக்கு, அமெரிக்கா மற்றும் அணு விசைப் பொருள்கள் வழங்கும் நாடுகளில் இருந்து, யுரேனியம் இறக்குமதி செய்ய முழு உத்தரவாதம் வழங்கப்படவில்லை. இந்தத் துறையில் வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, கடந்த முப்பது ஆண்டுகளில், புதிய அணு விசைத் திட்டங்களுக்கு இசைவு அளிக்கவில்லை.

ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணு விசைத் தொழில்நுட்பம் அளிக்கிறோம் என்று கூறி, அமெரிக்கா உருவாக்கி உள்ள அணு விசை உடன்பாடு இந்திய இறையாண்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆகவே, இந்திய-அமெரிக்க அணு விசை உடன்பாட்டை, மறு ஆய்வு செய்ய வலியுறுத்துவோம்.

41. மலேசியத் தமிழர்கள் நலன்

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்துவரும், இந்திய வம்சாவழியினரான மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, மலேசிய அரசு அடக்குமுறையால் ஒடுக்க முயன்றது. தமிழர்களுக்கு எதிரான மலேசிய அரசின் நடவடிக்கைகளை, காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டும் காணாமல் இருந்தது, தமிழர்களுக்குச் செய்த இன்னொரு துரோகம் ஆகும். மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க, நடுவண் அரசை வலியுறுத்துவோம்.

42. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு

அருங்காட்சியக வளாகம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழ்வு ஆய்வில் கிடைத்த தடயங்களைக் கொண்டு, தமிழரின் மிகத் தொன்மையான நாகரிகத்தைப் பற்றி அறியவும், ஆய்வு செய்யவும் விரும்புவோர் பயன்படுத்தும் வகையில், கி.பி. 1876 1904 மற்றும் 2003 முதல் 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட தடயங்களைத் திரட்டி, ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள, அகழ்வு ஆய்வு இடத்திலேயே, ‘ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அருங்காட்சியக வளாகம்’ அமைத்திட, நடுவண் அரசை வலியுறுத்துவோம்.

ஆதிச்சநல்லூரை, உலகப் பாரம்பரியச் சின்னமாக, உலக நாடுகள் அவையின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) அறிவிக்க, இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

புதுச்சேரி

மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக உள்ள புதுச்சேரியை தனி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

புதுவை மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், புதுவை மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சுங்கவரி இல்லாத துறைமுகம் அமைய மறுமலர்ச்சி தி.மு.க. குரல் கொடுக்கும்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் ஊரகத் தொழிற்சாலைகள் உருவாக்கிட, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்திட வலியுறுத்துவோம்.

சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கிழக்குக் கடற்கரையை ஒட்டி, புதுவைக்கு மின்சார ரயில் பாதை அமைத்திட வலியுறுத்துவோம்.

சென்னை தரமணியில் அமைந்து உள்ளதைப்போன்று, தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் உயிரி தொழில்நுட்பப் பூங்கா புதுவை மாநிலத்தில் அமைந்திட வலியுறுத்துவோம்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு 7 டி,எம்.சி. தண்ணீர் இதுரை கிடைக்கவில்லை. .4 டி.எம்.சி தண்ணீர்தான் கிடைத்து வருகிறது. காவிரியின் கடைமடையான காரைக்கால் பகுதி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் குடிநீருக்கே அல்லல்படும் நிலை உருவாகி உள்ளது. ஆகவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம்.

புதுச்சேரி அரசில் தமிழ்மொழியை முழுமையாக ஆட்சி மொழியாக்கிட நடவடிக்கை எடுப்போம்.

வேண்டுகோள்

“மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற அறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தை மனதில் தாங்கி, இத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும், மக்கள் மன்றத்தில் களப் பணி ஆற்றவும் வாய்ப்பு அளித்திட

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
வேட்பாளர்களுக்கு
பம்பரம் சின்னத்திலும்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு,
இரட்டை இலை சின்னத்திலும்,

கூட்டணியில் இடம் பெற்றுள்ள
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு
மாங்கனி சின்னத்திலும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு) வேட்பாளர்களுக்கு
‘அரிவாள் - சுத்தியல் - நட்சத்திரம்’ சின்னத்திலும்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு
‘கதிர் அரிவாள்’ சின்னத்திலும்

வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு தமிழகம் மற்றும் புதுவை வாக்காளப் பெருமக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தாயகம், சென்னை

Photos: 
Attachments: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)