ஈரோடு நாடாளுமன்ற மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி
மாவட்டம்: ஈரோடு
விவகாரங்கள்: அரசியல்
அ.கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை அருகில் உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில், அவினாசி கவுண்டர்-சாரதாம்பாள் ஆகியோரின் மகனாக 10.6.1947 இல் பிறந்தார் . உடன்பிறந்தவர்கள் அண்ணன் விவேகானந்தன், அக்கா பர்வதவர்த்தினி.
பெருந்துறை அரசு உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்தபின்னர், சென்னை தியாகராயர் கல்லூரியில் பி.ஏ. (பொருளியல்)பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் பி.ஜி.எல். படித்து, பி.எல். வகுப்பில் சேர்ந்தார். தியாகராயர் பேரவை கல்லூரி மாணவர் பேரவைத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அண்ணாவின் பேச்சு, எழுத்துகளால், தி.மு.க.வின்பால் ஈர்க்கப்பட்டதால், மாணவப் பருவத்தில் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு ஏற்றார். 1967 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாவுடன் சந்திப்பு. அண்ணா முதல் அமைச்சரானபின், சென்னை கல்லூரிகளில் முதல் நிகழ்ச்சியாக தியாகராயர் கல்லூரி மாணவர் பேரவை ஆண்டுவிழாவுக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தார்.
சென்னை மாவட்ட மாணவர் தி.மு.க. துணைச் செயலாளர். மாநில மாணவர் அணியின் இணை அமைப்பாளர். 1977 சட்டமன்றத் தேர்தலில், முதன்முறையாக மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டார் . 1979 இல் கலைஞர் தலைமையில் ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது . தாராபுரம் அருகில் நஞ்சுண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாமணி, வாழ்க்கைத் துணைவி ஆனார். மகன் கபிலன், மகள் தமிழ்ப்பிரியா.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர். 1984 இல் கோவை மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., முதல் பொறுப்பாளர் ஆனார். ஈரோடு ஒரே மாவட்டமாக இணைக்கப்பட்டபின்பு, தொடர்ச்சியாக மூன்று முறை மாவட்டச் செயலாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1989 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1993 இல் வைகோ மீது கொலைப்பழி சுமத்தியதைக் கண்டித்ததால், தி.மு.க. வில் இருந்து வெளியேற்றப்பட்டார். ம.தி.மு.க.வைத் தொடங்கிய முன்னணியினருள் ஒருவர் ஆனார். 1998 பழநி தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார். பழநி காங்கயம், நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம்களும், மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை எரியோடு, நத்தம், ஒட்டன்சத்திரம், காங்கயம் ஆகிய இடங்களிலும் நடத்தி, மக்கள் மன்றத்தில் நற்பெயர் ஈட்டினார்.
1993 ஆம் ஆண்டு முதல், இன்றுவரையிலும் ஈரோடு மாவட்ட ம.திமு.க. செயலாளராகவும், தற்போது ஆட்சிமன்றக் குழுச் செயலாளராகவும் பொறுப்புகள் வகித்து வருகிறார்.
2001 இல், ஈரோடு மாவட்ட ம.திமு.க மாநாட்டை, தமிழக எழுச்சி மாநாடாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றுச் சாதனை படைத்தார். அகிலஇந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் முதலாவது நிதி அளிப்பு நிகழ்ச்சியில் 60 இலட்சம் திரட்டிக் கொடுத்தார். கழகத்தின் 10 ஆம் பொதுக்குழுவை ஈரோட்டில் சிறப்பாக நடத்தினார்.
தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு ஏற்று, பலமுறை சிறை சென்ற கணேசமூர்த்தி, 1981 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 65 நாள்கள் கோவை சிறையில் இருந்து விடுதலையான நாளில்தான் மகள் தமிழ்ப்பிரியா பிறந்தார். பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
‘தமிழ் இன, மொழி விடுதலைக்காவும், முன்னேற்றத்துக்காவும் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் அரசியலில் நுழைந்தேன். அதற்காக இறுதிவரை உழைப்பேன். 1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள், ‘இன்னும் ஐம்பதாண்டுக் காலத்துக்குத் தி.மு.க. பணி தேவை’ என்றார். அந்தப் பணியைத் தொடர்ந்து நடத்தும் தகுதியும், ஆற்றலும், இலட்சிய உறுதி கொண்டவராக வைகோ இருப்பதால், அவரோடு இணைந்து பணியாற்றுகிறேன்’ என்கிறார் கணேசமூர்த்தி.
கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் .கடும் உழைப்பாளி.இவரை ஈரோடு மக்களவைத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்தால் வைகோவைப் போன்று தன் தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவார் .

