தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு... தொடர்ந்து நடத்த அவசரச்சட்டம் தேவை! வைகோ

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Sun, 13/01/2008

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது நியாயம் அற்ற முடிவு ஆகும். சீறிவரும் காளைகளின் திமிலைப் பற்றி ஏறு தழுவும் வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை ஆகும்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களின் வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு மொகஞ்ச தாரோ - அரப்பா அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட திராவிடர்களின் சிந்துவெளி நாகரீகக் கல்வெட்டுச் சித்திரத்தில் இருந்து நிரூபிக்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் தேசியத் திருவிழாவான தைக்பொங்கலை முன்னிட்டு, நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை, இந்த ஆண்டு தைப் பொங்கலுக்கு நேர்ந்து உள்ள நிந்தனையாகவே, தமிழர்களை எல்லையற்ற வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

ஸ்பெயின் நாட்டு மைதானங்களில் நடைபெறுகின்ற மாட்டுச் சண்டையில், எருதுகளின் கழுத்தில் கூரிய ஈட்டிகளைப் பாய்ச்சி சாகடிக்கும் துன்பமான காட்சியை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து இரசிக்கும் அவலம் நடந்துக் கொண்டே இருக்கிறது. உலகின் பல நாடுகளில் இத்தகைய போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு என்றால், தமிழர்களின் வீரக்கலையைக் காண உலகத்து யாத்ரீகர்கள் குவிகின்றார்கள். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. காரணங்கள் ஏற்க இயலாதவை. தமிழகத்தில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டில், கலந்து கொள்ளும் காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை - வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக்காளையர் காயமுறுவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும், எந்த வீரப் போட்டியிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், பனிச்சறுக்கு, மலை ஏறுதல் போன்ற எத்தனையோ வீரப்போட்டிகளிலும் ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேனாட்டுக் கலாச்சாரமும் தமிழர் பண்பாட்டை நாகரிகத்தை, சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்ற இன்றையச் சூழலில் தமிழர்களின் புராதனக் கலாச்சாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு, தொடர்ந்து நடைபெற்றே ஆக வேண்டும்.

இதற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதனை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே, தைப்பொங்கல் பண்டிகை வேளையில், இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்து உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அவசரச் சட்டத்தை உடனடியாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மய்ய அரசும், உச்சநீதிமன்றமும் கவனத்தில் கொள்ளட்டும்.

பொதுச் செயலாளர் வைகோ 13.1.2008 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)