நடுவண் அரசின் இரயில்வே வரவு-செலவுத் திட்டம் தமிழகத்துக்கு தொடரும் அநீதி! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: பொருளாதாரம், அரசியல்

மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Wed, 27/02/2008

மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி அனைத்துப் பண்டங்களின் விலை ஏற்றத்துக்கும், அதனால் மக்களை அவதிக்கும், அல்லலுக்கும் ஆளாக்கி உள்ள நேரத்தில் பயணிகள் கட்டணத்தைக் குறைத்தும், சரக்குக் கட்டணச் சலுகை தந்தும், இரயில்வே நிதிநிலை அறிக்கையைத் தந்த அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதைப்போலவே, பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கும், ப்ளஸ் டூ வரை மாணவர்களுக்கும் இலவச இரயில் பயண வசதி, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களக்கும் 50 விழுக்காடு கட்டணச் சலுகை, செல்போன் மூலம் முன்பதிவு, ஆள்இல்லாத இரயில்வே கேட் என்பதை மாற்றி, விபத்துகளைத் தவிர்க்க இரயில்வே கேட்டுகளில் பணி ஆள்கள் முறை, சுமை தூக்கும் போர்ட்டர்களை கேங்மென் ஆக பணி உயர்த்தியது ஆகியவை பாராட்டுக்கு உரியது ஆகும்.

ஆனால், உயர் வகுப்புப் பயணிகளுக்குக் கொடுத்த சலுகையைவிட இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்குச் சலுகையை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் முறையாக இருந்திருக்கும்.

தூங்கும் வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளிலும், இரண்டாம் வகுப்பு சாதாரணப் பெட்டிகளிலும், கூடுதலாக மேலும் ஒரு படுக்கையை அதிகப்படுத்துவது, பயணிகளுக்கு மிகுந்த இட நெருக்கடியையும், தொல்லையையும் ஏற்படுத்துவதோடு, பாதுகாப்புக் குறைவு ஏற்படவும் காரணமாகிறது. எனவே, இந்த ஏற்பாட்டைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில், இதுவரை மதுரை கோட்டத்தில் இருந்து வந்த கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதியில் 79 கி.மீ. இரயில் பாதையை அதில் இருந்து நீக்கி, கேரள மாநிலத்தின் பாலக்காடு கோட்டத்தில் சேர்த்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட வஞ்சகமான அநீதி ஆகும். அதை மீண்டும் மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும், அதுபோலவே முன்பே அளித்த உறுதிமொழியின்படி நெல்லை - கன்னியாகுமரி அகல இரயில்பாதையை திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து விடுவித்து மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்காததும். தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதோடு, தமிழகத்துக்குத் தொடரும் அநீதியாகவே கருதுகிறேன்.

நீண்டநாள் எதிர்பார்ப்பான செங்கோட்டை - கொல்லம் அகல இரயில் பாதைத் திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்காததும், விழுப்புரம் - திண்டுக்கல் இடையேயான இரட்டைப் பாதைக்கும், மதுரை - போடி நாயக்கனூர் அகல இரயில் பாதைக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

பொதுச் செயலாளர் வைகோ 27.02.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)