தமிழகத்தில் மின்வெட்டு... கையாலாகாத தி.மு.க. அரசு! வைகோ கடும் கண்டனம்
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், அரசியல்
மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி 21.7.2008 முதல் சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற மாநகரங்களிலும், புறநகர்களிலும் இரண்டு மணி நேரமும், கிராமங்களில் வாரத்தில் இரண்டு நாள்கள் நான்கு மணி நேரமும் மின்வெட்டு இருக்கும் என்று நேற்று (18.7.2008) அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பே பல மணி நேரம் மின்வெட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்துள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மின்வெட்டைக் குறித்து மின்வாரியத் தலைவரிடம் முறையிட்டபோதுகூட எவ்வித திருப்தியான பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை.
மின்வெட்டு எதிர்வரும் காலத்தில் கடுமையாக இருக்கும் என்று பலர் அறிவுறுத்தியும், எச்சரித்தும் தமிழக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை.
மின்வெட்டு வராது என்று அறிவித்த வீராசாமியே மின்வெட்டுக்கு உத்திரவு போட்டு உள்ளார். இந்தப் பித்தலாட்டத்தனமான கையாலாகாத அரசு மக்களை வாட்டும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
ஏற்கனவே விவசாயத்தையும், தொழிற்சாலைகளையும், பொது மக்களையும் பாதிக்கும் வகையில் மின்வெட்டு இருப்பதைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டம் நடத்தியுள்ளது.
மின்துறையில் பழுதுபட்ட சாதனங்களைப் புதுப்பிக்காமலும், சரிபாதி காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய பணியாளர்களை நியமிக்காமலும், தூத்துக்குடி, உடன்குடி, ஜெயங்கொண்டான் போன்ற புதிய திட்டங்கள் மட்டுமில்லாமல் வடசென்னை, மேட்டூர், குந்தா போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைளை விரைவாக மேற்கொள்ளாததாலும் இந்த மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
மரபுசாரா எரிசக்தி மூலம் கோயம்பேட்டில் மின் உற்பத்தி செய்யும் திட்டம் இருந்தும், அதையும் இந்த அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தமிழகத்தில் 2 கோடியே 95 இலட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
பொறுப்பு ஏற்ற நாளில் இருந்தே இந்தப் பிரச்சினையின் தன்மை அறியாமல் மின்துறை அமைச்சராக ஆர்க்காடு வீராசாமி உண்மைக்கு மாறான அறிக்கைகளையே தந்து வருகிறார்.
தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாலும் மின்சாரத் தேவை அதிகரிக்கிறது. அதற்கான திட்டங்களைத் தீட்டாமல் வெறுமனே இருந்துவிட்டு இன்று மின்வெட்டு என்று அறிவிப்பது அரசின் கையாலாகத்தனமே ஆகும். பொறுப்பு அற்ற இந்த அரசுக்குக் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
பொதுச்செயலாளர் வைகோ 19.7.2008 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

