2004 ஆம் ஆண்டு விலையில் பெட்ரோல், டீசல் வழங்குக! மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், அரசியல்

மாவட்டம்: விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 05/12/2008

டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது முப்பத்து ஐந்து ருபாய் என்ற அளவில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, கடந்த நான்கு ஆண்டுகளில், ஆறு முறை உயர்த்தியதால், இன்று லிட்டர் விலை ரு 55 முதல் 59 வரை உயர்ந்து விட்டது. சுமார் 100 விழுக்காட்டுக்கும் கூடுதலாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். ‘பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால், இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை’ என்று மன்மோகன் சிங் அரசு கூறிவந்தது.

2006ஆம் ஆண்டு ஜூனில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு விலை 70 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.4 உயர்த்தப்பட்டு, ரூ.51.70 எனவும். டீசல் ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.35.95 எனவும், நிர்ணயம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு ஜூனில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு விலை ரூ.147ஆக உயர்ந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.ஐந்தும், டீசல் விலை லிட்டர் ரூ.மூன்றும் உயர்த்தப்பட்டது.

இதனால், வாகனக் கட்டணங்கள் உயர்ந்தன; தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன; உணவுப்பொருள்களையும், காய்கறிகளையும் சந்தைக்குக் கொண்டு செல்லும் கட்டணமும் கடுமையாக உயர்ந்ததால், எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்தது.

மத்திய அரசால் ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுமையைத் தாங்க முடியாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகித் தத்தளித்து வருகின்றனர். அதுமட்டும் இன்றி, திடீர்திடீரென பெட்ரோல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுவதாலும், டீசல் விற்பனை இல்லை என்றே கைவிரிப்பதாலும், பெருங்குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தும்போதும், உலக அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை உயர்வையே மத்திய அரசு காரணம் காட்டி வந்தது. ஆனால், கச்சா எண்ணெயின் விலை, ஒரு பீப்பாய்க்கு 160 டாலர்கள் வரையிலும் குறைந்து, 47 டாலராக உள்ளது. மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா? என்று கடந்த மாதம் பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அடுத்த சில வாரங்களுக்கு இதே நிலைமை நீடித்தால், விலைக்குறைப்பு’ குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்தார். அவர் இவ்வாறு தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், விலை உயர்வின்போது, உடனடியாக விலையை உயர்த்துகின்ற மத்திய அரசு, விலை குறையும்போது அதே வேகத்தில் விலையைக் குறைப்பது இல்லை. தெற்கு ஆசியாவில் உள்ள நமது அண்டை நாடுகளைவிடவும், குறிப்பாக பாகிஸ்தானை விடவும், இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

பெட்ரோலிய நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி ருபாய்கள் லாபம் ஈட்டுவதற்கு மத்திய அரசு துணைபோவதால், மக்கள் ஆத்திரம் அடைந்து உள்ளனர்.

எனவே, இனியும் தாமதம் இன்றி, பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உடனடியாகக் குறைத்திட வேண்டும்; தட்டுப்பாடு இன்றிக் கிடைக்க வழி செய்திட வேண்டும்; குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு, இந்த அரசு பொறுப்பு ஏற்றபோது இருந்த விலையிலேயே பெட்ரால், டீசல் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொதுச் செயலாளர் வைகோ 24.11.2008 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)