ப.சிதம்பரத்தின் காகிதப்பூ மணக்காது!

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், அரசியல்

மாவட்டம்: ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 14/03/2008

மு.செந்திலதிபன்
அரசியல்ஆய்வு மய்ய உறுப்பினர்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பிப்ரவரி 29 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அநேகமாக, ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையே, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் இறுதி அறிக்கையாக இருக்கலாம். ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்ள ப.சிதம்பரம், இந்த நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கையை ஒரு ‘ஆயுதமாக’ப் பயன்படுத்திட முயன்றுள்ளார். ஆனால், இந்த ஆயுதம் முனை மழுங்கி இற்று விழுமே தவிர, வெற்றியைத் தராது என்பதை நிதிநிலை அறிக்கையை ஊன்றி கவனிக்கும்போது உணரலாம்.

ஏனெனில், 2004 இல் மன்மோகன்சிங் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நான்கு ஆண்டுக் காலம் இந்திய விவசாயிகளை ஏறெடுத்துப் பார்க்க நாதி இல்லாமல், விவசாயிகளின் தற்கொலை சோகம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. நடுவண் அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் 30.11.2007 இல் மக்களவையில் பேசும்போது, 1997-2007, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர் என்று தெரிவித்தார். கடன்சுமை, வறட்சி வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை ஆகியவை விவசாயிகளை சாவின் விளிம்புக்குத் தள்ளிவிட்டன. சென்னையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று ( Madras Institute of Development Studies ) விவசாயிகள் நிலைகுறித்து மராட்டியம், ஆந்திரா மற்றும் ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு நடத்தியபோது, இந்திய விவசாயிகளில் ஒவ்வொரு 32 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்தது. (The Hindu 7.12.2007).

இந்திய நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் - அதாவது, 65 கோடி மக்களுக்கு மேல் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தபோதும், இதில் விவசாயத் துறையின் பங்கு 0.4 விழுக்காட்டுக்கும் குறைவாகத் தான் இருந்து வருகிறது. தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் 10 சதவிகிதம். ஆனால், விவசாயத் துறையில் ஆண்டு வளர்ச்சி 2 சதவிகிதம் மட்டுமே. பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் இலட்சக்கணக்கான கிராமங்களைச் சென்றடையவே இல்லை என்பதுதான் எதார்த்த நிலை.

இவை குறித்து கடந்த நான்கு ஆண்டுக்காலமாகக் கவலைப்படாத நடுவண் அரசு தற்போது தேர்தலை மனதில்கொண்டு விவசாயிகளுக்காகவே நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து உள்ளதாக ப.சிதம்பரம் மூலம் விளம்பரம் செய்து கொள்ள நாடாளுமன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் 4 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் ஆரவார செய்தி ஆக்கி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்று சிலாகித்துள்ளனர். ஆனால், உண்மை நிலைமையோ வேறு.

ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளும், இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளும், அரசுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள வேளாண் கடன் தொகை 50 ஆயிரம் கோடி ரூபாய், டிசம்பர் 31, 2007 வரை உள்ள நிலுவைத் தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். இரண்டு ஏக்கருக்கு அதிகமான நிலம் உடையவர்கள் தாங்கள் வாங்கிய கடனில் மீதி 75 சதவிகிதம் திருப்பி செலுத்தினால் மீதி உள்ள 25 சதவிகிதம் தொகை ரத்து செய்யப்படும். இந்த வகையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து செய்யப்படுகிறது. ஆக, 60 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிகளில் கடனாக பெற்றுள்ள விவசாயிகளுக்காகத் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆர்ப்பாட்டமான அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பச்சை மோசடி அறிவிப்பு என்பதை ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ( Reserve Bank of Inadia -RBI ) வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில், அரசுத்துறை வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு, திரும்பப் பெறப்படாத வேளாண் கடன் வெறும் 7,367 கோடி ரூபாய் மட்டுமே. (ஆதாரம் : Business Line , 02.03.2008). ஆனால், ப.சிதம்பரம் 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று எவ்வாறு அறிவித்தார் என்பதற்கு நடுவண் அரசுதான் விளக்கம் தரவேண்டும்.

கடன் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டு மடிந்த விவசாயிகள் பெருமளவில் மராட்டிய மாநிலம் விதர்பா மாவட்டத்தில்தான் அதிகம் என்று ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. வறட்சி பாதித்துள்ள விதர்பா பகுதி விவசாயிகள் 4 ஏக்கருக்கும் மேலே நிலம் வைத்து உள்ளவர்களும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், நிதி அமைச்சரோ இரண்டு ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை.

கடன் சுமைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள் அரசுத்துறை வங்கிகளின் மூலம் கடன் பெற்றவர்கள் அல்ல. இந்திய விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு நடத்திடவும், கடன் சுமை மற்றும் விவசாயிகளை கடன் தொல்லைகளில் இருந்து மீட்கவும் உரிய பரிந்துரைகளை அளித்திட அமைக்கப் பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணா குழு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், தற்கொலைக்கு ஆளான விவசாயிகளில் 36 விழுக்காடு பேர், தனியார் கந்து வட்டிக்காரர்களிடம் 20-25 விழுக்காடு வட்டிக்கு கடன் தொகை பெற்றுள்ளனர் என்றும் மேலும் 38 சதவீதம் பேர் அதிகபட்சமாக 36 விழுக்காடு வட்டிக்கு கடன் தொகை பெற்றுள்ளவர்கள் என்றும் அதிர்ச்சி யூட்டும் தகவல்களைத் தெரிவித்து இருந்தது. மேலும், 80 விழுக்காடு சிறு விவசாயிகள் தனியாரிடம் மட்டுமே கடன் பெற்று திரும்பச் செலுத்திட வழியில்லாமல் வாழ்க்கையைத் தொலைத்து இருக்கின்றனர் என்றும் கூறி இருக்கின்றது. ஆக, தனியார் கந்துவட்டிக் கும்பல்களிடம் கடன்பெற்று மீள வழித் தெரியாமல் தவிக்கும் ஏழை விவசாயிகளுக்கு நிதியமைச்சரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு எந்த வகையிலும் உதவாது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

மேலும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போன்ற பொருளாதாரப்புலிகளால் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையால் பல்வேறு தனியார் வங்கிகள், பன்னாட்டு வங்கிகள் உருவாகி உள்ளன. இந்த வங்கிகளின் மூலம் கடன்பெற்றுள்ள விவசாயி களுக்கு நிதியமைச்சர் எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும். “கடன்தள்ளுபடி அறிவிப்பால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது” என நடுவண் அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்து உள்ளார். இதில் இருந்து நிதி அமைச்சரின் கடன் தள்ளுபடி அறிவிப்பின் “உண்மை முகம்” நாட்டிற்கு புலப்படுகிறது.

நாட்டின் பணவீக்கம் 4 - 5 அளவு அதிகரித்து விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்திட உருப்படியான திட்டம் எதனையும் நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்கள் வருமானத்தில் 55 விழுக்காடு உணவுக்காக செலவழிக்க வேண்டிய நிலை இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் ( Economic Survey , 2007 - 08) தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு அதிக அளவு மானியம் வழங்காமல் வெறும் 3.5 விழுக்காடு மட்டுமே கடந்த ஆண்டைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சமூக நலனுக்கான திட்டங்கள் மற்றும் கல்விக்கான மொத்த ஒதுக்கீடும், பொதுச் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடும் போதிய அளவில் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொது செயல்திட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்கு 6 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( Gross Domestic Product ) ஒதுக்கீடு செய்யப்படும் என்ற பிரகடனத்தை தனது இறுதி நிதிநிலை அறிக்கையில் கூட இந்த அரசு நடைமுறைப்படுத்திடவில்லை.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், சிமெண்ட் விலை உயர்வு குறித்தும் நிதி அமைச்சர் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. யூகவணிகத்தைத் தடைசெய்யவேண்டும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற கோரிக்கைகளுக்கு ப.சிதம்பரம் செவிமடுக்கவே இல்லை என்பதை நிதிநிலை அறிக்கை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவிற்கே நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அவரை அந்த நிலைக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்?

சென்னையில் கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெறும் ரூ. 300 கோடி என்று சுருங்கிவிட்டது. மய்ய அரசின் உயர்கல்வி நிறுவனங்களைத் தமிழ் நாட்டில் தொடங்கிட எந்த முயற்சியையும் நிதிஅமைச்சர் மேற்கொள்ளவில்லை.

வேளாண் விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை வேண்டும் என்று நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக விவசாயிகள், நாடாளுமன்றம் வரை சென்று நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இதுகுறித்து நிதி அமைச்சர் எந்த அறிவிப்பையும் வெளியிடாதது தமிழக விவசாயிகளைக் கொந்தளிக்கச் செய்து உள்ளது.

நதிகள் இணைப்பு மட்டுமே நாட்டின் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க் கைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். உச்சநீதிமன்றம் வழி காட்டுதல் வழங்கியும்கூட, இந்த நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஆய்வு செய்யக் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஆக, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அறிஞர் அண்ணாவின் பாணியில் கூறினால் “காகிதப் பூ மணக்காது. காங்கிரஸ் நிதிநிலை அறிக்கை இனிக்காது” என்பதை உறுதி செய்து இருக்கின்றது.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)