ஸ்பெக்ட்ரம் ஊழல்...அமைச்சர் ராசா பதில் சொல்ல வேண்டும்! நாடாளுமன்றத்தில் டாக்டர் சி.கிருஷ்ணன்
விவகாரங்கள்: பொருளாதாரம், அரசியல்
மாவட்டம்: நீலகிரி
செய்தித்துறை: தொகுப்புகள்
நாடாளுமன்ற மக்கள் அவையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன் 18.12.2008 அன்று பூஜ்ய நேரத்தில் குறுக்கீடுகளுக்கு இடையே கேள்விக் கணைகளைத் தொடுத்தார். விவரம் வருமாறு:-
டாக்டர் சி.கிருஷ்ணன் : தகவல் தொடர்புத் துறையில் தவறான (முன் உதாரணமாக) நிர்வாகத் தலையீட்டின் காரணமாக ஸ்பெக்ட்ரம் பேரத்தில் பெரும் ஊழல் நடந்து உள்ளது. (குறுக்கீடுகள்).
உலகளாவிய ஏலத்துக்கு பதிலாக முதலில் வருபவர்களுக்கு முன் உரிமை என்ற அடிப்படையில் 2-ஜி, அலைவரிசை தொலை தொடர்புத் துறையில் அனுபவமே இல்லாத புதிய (Swan,Unitech என்ற) தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆச்சரியத்துக்கும், சந்தேகத்துக்கும் இடம் அளிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த அலைவரிசை குறைந்த தொகையான 1,650 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதை வாங்கிய நிறுவனங்கள் மிக அதிகத் தொகை இலாபத்துக்கு இந்த அலைவரிசை பங்குகளை விற்று உள்ளன. இந்த பேரத்தின் காரணமாக சுமார் ரூபாய் அறுபது ஆயிரம் கோடி முதல் ஒரு இலட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கணக்கிடப்பட்டு பத்திரிகைகளும், ஊடகங்களும் பரவலாக செய்திகளை வெளிப்படுத்துகின்றன.
திருமதி. பவானி இராசேந்திரன் : மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எத்தனை முறை இதே கருத்தை அவையின் கவனத்துக்கு கொண்டு வருவார்?
டாக்டர் சி.கிருஷ்ணன் : அய்யா, மத்திய புலானாய்வு ஆணையம் - Central (Government)Vigilance Commission - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து, மத்திய தகவல் தொடர்புத் (Department of Telecommunication ) துறை அமைச்சகத்தை எந்த சட்ட விதிகளின் அடிப்படையில், இவ்வாறு தவறான முறையில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று வினா எழுப்பி உள்ளது (குறுக்கீடுகள்)
அவைத்தலைவர் : (வர்கலா இராதாகிருஷ்ணன்) : பிரச்சனைக்குரிய கருத்துகளை இந்த அவைக்குக் கொண்டுவர வேண்டாம். அவ்வாறான கருத்துகளை அவை குறிப்பில் ஏற்க இயலாது.
மதுசூதன் மிஸ்திரி : இது குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு உள்ளது. எப்படி டாக்டர் கிருஷ்ணன் சபைக்கு மறுபடி கொண்டு வருகிறார்?
அவைத்தலைவர் : நான் என்ன செய்ய முடியும்?
டாக்டர் சி.கிருஷ்ணன் : ஒப்பந்த அளவுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை அதே நிறுவனங் களுக்கு, எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதற்கேற்ற கூடுதல் கட்டணம் ஏன் அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கவில்லை, கேட்கவும் இல்லை என்றும் Department of Telecommunication நிறுவனத்தை Central Government Vigilance Commission மத்திய புலனாய்வு ஆணையம் கேட்டு உள்ளது. இதற்கும் மதிப்பிற்குரிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா இந்த சபைக்கு தக்க விளக்கம் அளிக்க வேண்டும் (குறுக்கீடுகள்)
டாக்டர் சி.கிருஷ்ணன் எம்.பி. இவ்வாறு உரையாற்றினார்.

