கண்ணீரில் கரும்பு விவசாயிகள்...
விவகாரங்கள்: விவசாயம்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
கரும்பு தித்திக்கிறது; ஆனால், அதைப்பயிரிட்டு அதற்கு உழைத்து வியர்வை சிந்தி, கடன் வாங்கி சீராட்டி வளர்த்த கரும்பு விவசாயிக்கு கட்டுப் படியான விலை இல்லை. ஆண்டுகள் பலவாக கோரிக்கைகளை முன் வைத்துப் போராடும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தீர்வு ஏற்படவில்லை.
கண்ணீர் விடும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள்:
வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை நிர்ணயக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ 1550 யும் அத்தோடு தமிழக அரசு கூடுதலாக சேர்த்து மொத்தம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 2,000/- விலையாக உடனே வழங்க வேண்டும்.
பட்டுவாடா தொகையை ஒரு தவணையில் வழங்க வேண்டும்
மற்ற மாநிலங்களைப் போன்று கொள்முதல் மற்றும் சாலை வரியினை ரத்து செய்ய வேண்டும்.
கரும்பு வெட்டுக்கூலியை சர்க்கரை ஆலை நிர்வாகமே கொடுக்க வேண்டும்.
புதிதாகத் தொடங்க இருக்கின்ற புதிய சர்க்கரை ஆலைகள் கரும்பு வழங்கும் பகுதிகளைப் பிரிக்கும்போது சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளின் கருத்துகளை அறிந்து முடிவு மேற்கொள்ள வேண்டும்.
மொலாஷஸ், எத்தனால், ஸ்பிரிட், மின்சாரம் போன்றவை மீதுள்ள தடையை நீக்கி அதற்கான தொகையைக் கூடுதலாக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட தொடர் போராட்டங்கள் நடைபெறு கின்றன. இந்தப் போராட்டங்கள் டெல்லி வரை எட்டிவிட்டது. ஆனால், நிலைமையோ ‘செவிடன் காதில் சங்கு ஊதிய’ கதையாகி விட்டது.
கரும்புத் தண்டு விதைகள், அதன் இடுபொருள்களான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலைகள், கூலி, ஊதியங்கள் உயர்ந்த அளவுக்கு கரும்பு விலை இல்லை. உரமும் சரியாகக் கிடைப்பது இல்லை.
விதைக் கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு 4 டன் ஆகும், அதன் விலை ரு. 4,200/-; ஆறு முறை உழவு செலவு ரூ. 2,250/-; பார் பிடிக்க ரூ. 1,050/-; நடவுக்கு ரூ. 1,000/-; களை எடுக்கவும், மருந்து தெளிக்கவும் தலா ரூ. 1,000/- வீதம் மொத்தம் ரூ. 2,000/-; மண்ணைக் கொத்தி, அணைத்து சரிசெய்ய ரூ. 3,000/-; உரங்கள் ரூ. 4,000/-; நீர் பாய்ச்சுதல் கூலி ரூ. 2,000/-; மோட்டார் பம்ப் செலவு பராமரிப்பு ரூ. 1,000/-; சரிகை உரிக்க ரூ.2,000/- மற்றும் வெட்டுக் கூலி டன் ஒன்று ரூ.500/- வீதம் ரூ.20,000/-; மருந்து தெளிக்க ஆண் கூலி 1,000/- என்ற செலவு போக, வாகன வாடகை ரூ. 2,600/-; கடன் வட்டி 7 சதவீத அளவில் சுமார் ரூ. 1,750/-; போட்ட முதலுக்கு வட்டி 1 சதவீதம் ரூ.6,250/-.
மொத்தம் 40 டன் கரும்பு விளைவிக்க வரவு ரூ.42,000/- ஆகும். செலவு ரூ.56,100/- ஆகும். நஷ்டம் 14 ஆயிரம் ஆகும். ஒரு டன்னுக்கு நஷ்டம் ரூ.352/- ஆகும். மேலும் தமிழகத்தில் கரும்பு பயிரிடப்படும் நில அளவு குறைந்து கொண்டு வருகிறது.
கரும்பு விலை, அதில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையின் பிழிதரத்தைக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மத்திய அரசு 9 சதவீதம் பிழிதரம் உள்ள கரும்புக்கு ரூ.681.18 என்றும், அதற்கு மேல் பிழிதரம் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் கூடுதலாக 0.90 காசு தரப்படுகிறது.
மாநில அரசுகள் தனது தொகுப்பாக விலை நிர்ணயம் செய்து வழங்குகின்றது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் கொள்முதல் கூலி ரூ.60/-யை திருப்பி தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை 61.5 சதவீதம் குளிர்பான உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மருந்துகள் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு செல்கின்றது. சர்க்கரையை மத்திய தர குடும்பத்தினர் மாதம் ஒன்றுக்கு 4 கிலோவும் அதிக வசதி படைத்தவர்கள் 10 கிலோவுக்கு மேலும் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கரும்பு விவசாயியின் அவலங்கள் பல வருடங்கள் தொடர்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கரும்பு விவசாயி நன்கு விளைந்த தனது தோட்டத்தில் உள்ள கரும்பை இலவசமாக வெட்டிக் கொண்டு போனால் மிகவும் உதவியாக இருக்க தண்டோரா போட்டார் என்ற செய்தி.
அப்படியாவது தன் கரும்பு வெட்டப்பட்டு நிலம் காலியாகி அடுத்து வேறு ஏதாவது பயிர் செய்யலாம் என்ற வேதனை குரல்தான் எவ்வித செலவும், பராமரிப்பும் இல்லாமல் கிடைக்கும் மரங்களின் விறகுகூட ஒரு டன் ரூ.3000/- விலை போகிறது.
கரும்பிலிருந்து எரிபொருள், கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். தற்போது ஆண்டுக்கு இரண்டு இலட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதற்கு மாற்று முறையாக கரும்பிலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு நிலைகளை ஆய்ந்து மத்திய - மாநில அரசு தெளிவான பார்வையுடன் கரும்பு விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கலாம். இதையெல்லாம் யோசிக்காமல் ஏதோ அரசு பரிவாரங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. நாட்டின் முதுகெலும்பு விவசாயிகளே என்று கூறிக்கொண்டு அவர்கள் முதுகெலும்பு முறிக்கக்கூடிய நிலையில் மத்திய - மாநில அரசுகள் செயல்படுகின்றன. நெல்லுக்கு விலை இல்லை, கரும்புக்கு கட்டுப்படியான விலை இல்லை.
இந்நிலையில் விவசாயிகளின் வாழ்வில் எப்படி விடியல் ஏற்படும்.
குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் கரும்பு உற்பத்தி அதிகம். இன்று நிலைமை மோசமாகி விட்டதால் கரும்பு விவசாயம் சார்ந்த பெண்கள் உளுந்தூர்பேட்டை இரயில்வே லெவல் கிராசிங் அருகில் உள்ள நெடுஞ் சாலையில் கொய்யாப்பழம், வெள்ளரிக் காயை ஓடி ஓடி விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களிடம் ஏனென்று கேட்டால் முன்பெல்லாம் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு அனுப்பி வருமானம் ஈட்டி வந்தோம். இப்போது எங்களை இந்த வெள்ளரிக்காய், கொய்யாப்பழம் காப்பாற்றுகிறது என்று வருத்தத்துடன் சொல்லும்போது நமது கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது.
கரும்பு தின்னக் கூலியா? என்று சொல்வது உண்டு. கரும்பு என்பது அப்படியான சிறப்புப் பெற்றது. ஆனால், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை இனிக்கவில்லையே?
அமரகவி பாரதி பிஜீ தீவு கரும்புத் தோட்டத்திலும் தமிழர்படும் துயரத்தை அன்றே பாடினார். அதே துயரத்தை இன்று கரும்பு விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.
ஒரு கரும்பு விவசாயி சமீபத்தில் ஒரு ஏட்டில் ஒன்றே ஒன்று எங்கள் பிரச்சனை தீர்க்கும். அது தற்கொலை என ரண வேதனையுடன் சொன்னதைப் படிக்கும் போது மிகவும் கவலையும், வேதனையும் ஏற்பட்டது.
விவசாயிகளின் பெருமை பற்றி வள்ளுவரும், சங்ககாலப் புலவர்களும், கண்ணதாசன் மற்றும் இன்றைய கவிஞர்கள் வரையிலும் பாடியுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘விவசாயி’ எனும் திரைப்படத்தில் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..... விவசாயி” என்ற பாடல் வரிகளுக்கும்,
மக்களைப் பெற்ற மகராசி எனும் திரைப்படத்தில் இன்றும் விரும்பி கேட்கும்,
“மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி ................................ பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு விற்று, பணத்தை அம்மா கையிலே கொடுத்துபோடு செல்லக்கண்ணு”
என்ற பாடல் வரிகளுக்கும் இன்று இடம் இல்லை; விவசாயிகளுக்கு வருமானமும் இல்லை.
அல்லல்படும் விவசாயிகளுக்கு என்று தான் மகிழ்ச்சி தோன்றுமோ!

