தஞ்சாவூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை .பாலகிருஷ்ணன்
மாவட்டம்: தஞ்சாவூர்
விவகாரங்கள்: அரசியல்
துரை.பாலகிருஷ்ணன்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விபரம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், நாடாளுமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஒரத்தநாடு ஒன்றியம் வடக்கூர் கிராமம், இவரது சொந்த ஊர். பெற்றோர், துரைசாமி-பார்வதி அம்மையார். மனைவி பெயர் பொன்னம்மாள். மகள் சமதர்மம் பி.ஏ., மகன் ஆசைத்தம்பி எம்.இ., படித்து உள்ளனர்.
04.03.1946 இல் பிறந்த துரை.பாலகிருஷ்ணனுக்குத் தற்போது வயது 62.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில், இளம்பருவத்திலேயே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, முன்னணிக் களப்பணியாளராகத் திகழ்ந்தார். எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்பவர், பழகுதற்கு இனிய பண்பாளர். 1972 முதல் 1993 வரை ஒரத்தநாடு தி.மு.க. ஒன்றியச் செயலாளராக, நீண்டகாலம் பணி ஆற்றினார். 1986 முதல் 1991 வரை ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவராகவும், 1996 முதல் 2001 வரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, திறம்படப் பணியாற்றி, ஒரத்தநாடு பகுதியில் நற்பெயர் ஈட்டி, கழகத்துக்குப் பெருமை சேர்த்து உள்ளார். பதவிப்பித்தர்களின் ஆசைவார்த்தைகளுக்கு இணங்காமல், துரோகம் தலையெடுத்தபோது, தஞ்சை மாவட்டத்தில் கழகத்தை வலிமையுடன் கட்டிக்காத்தார். 2006 முதல், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார்.
தமது குடும்பத்தின் வளர்ச்சிக்காக, கலைஞர் கருணாநிதி, வைகோ மீது கொலைப்பழி சுமத்தியதைக் கண்டித்ததால், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். 1993 முதல் 2008 வரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும், தற்போது, மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் பணி ஆற்றி வருகிறார்.

