மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து 29.03.2008 அன்று வைகோ ஆற்றிய உரை
விவகாரங்கள்: பொருளாதாரம், அரசியல்
மாவட்டம்: ஈரோடு, நாமக்கல், விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: சொற்பொழிவுகள்
நாமக்கல் மாவட்டம் -கொமாரபாளையம் நகர மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து 29.03.2008 அன்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளின் நடுவே பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
மருங்குவண்டு சிறம் தார்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்தி
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி
என சேரன் தம்பி இளங்கோ வர்ணித்த காவிரி ஆறு கரைபுரண்டு ஓடிய காலமும் உண்டு. அந்தக் காவிரியின் கிழக்குக் கரையில் அமைந்து இருக்கின்ற இந்த அழகிய திருநகரமாகிய கொமார பாளையத்தின் மேற்குத் திசையில் பாய்ந்து ஓடுகிறது கொங்குச் சீமையின் பலபகுதிகளை வளமாக்கும் பவானி நதி. இப்படி காவிரி-பவானி என்ற இரு நதிகளின் கரைகளில் அமைந்து இருக்கும் கொமாரபாளையம் நகரத்தில், என் அருமைத் தம்பி சிவகுமார் பேரார்வத்துடன் ஏற்பாடு செய்து இருக்கின்ற மாநாடு நிகர்த்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், உரை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நகரச் செயலாளருக்கும், தம்பி சிவகுமாருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட கழகக் கண்மணிகளுக்கும், மாவட்டத்தில் இயக்கத்தை வலுவுடன் நடத்துகின்ற, இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் ஊக்கமும், உந்துதலும் தந்த மாவட்டச் செயலாளர் டி.என்.குருசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இனிய தோழமை நாளும் நேசக்கரம் நீட்டி வளர்ந்து வருவதற்கு அடையாளமாக, நம் பொதுக்கூட்டத்துக்கு வருகைதந்து சிறப்பித்து உரையாற்றி அமர்ந்து இருக்கின்ற அண்ணா தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருக்கும் அவரோடு வந்து இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நகரத்தில் இருக்கின்ற தொழிலாளர்கள், நலிந்து வருகின்ற விசைத்தறியை நம்பி தங்கள் வாழ்க்கையையே போராட்டமாக நடத்திவருகின்ற தொழிற்கூடங்களை நடத்துகிறவர்கள், வணிகப் பெருமக்கள், நாளும் வேதனைகளைச் சுமந்து வரும் விவசாயப் பெருங்குடி மக்கள், வாலிபப் பட்டாளத்தின் அடையாளமாகக் காணுகின்ற மாணவக் கண்மணிகள், இந்தச் சமுதாயத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
‘‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” இந்தக் கருத்து காவியங்களிலும், இதிகாசங்களிலும்கூட சொல்லப்படுகிறது அப்படிக் கடமையாற்றுகின்ற ஒரு மகத்தான இயக்கம் தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கம் 14 ஆண்டுகளைக் கடந்து இருக்கின்றது. நான் மேடைக்கு வந்து அமர்ந்தவுடன் தம்பி சிவகுமார் சொன்னார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைகளில் நீங்கள் பேசிய காலத்தில் பள்ளி மாணவனாக வந்து உங்கள் உரைகேட்டவன் என்று. அவர் சொன்னார். 14 ஆண்டுகளுக்கு முன் புயல்வீசிய வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எந்தத் தவறும் செய்யாத நான் கொலைப்பழி சுமத்தப்பட்டு வீதியில் தூக்கி எறியப்பட்டபோது அது அநீதி என்று அதைத் தடுப்பதற்குப் போராடியவர்கள் தான் இந்த மேடையிலும், எதிரிலும் இருக்கிறார்கள்.
இந்த 14 ஆண்டுகளில் நாம் கடந்துவந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனையோ சோதனைகள். அவை அனைத்திலும் உறுதியாக இருந்து இருக்கிறீர்கள் உங்களை அண்ணன் மார்களாக தம்பிமார்களாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தூக்கி எறியப்பட்ட வேளையில் - தொலைந்தான், இவனின் அரசியல் வாழ்வு புதையுண்டு புல் முளைத்துப் போய்விடும் என்று நினைத்த நேரத்தில், தாயின் மடியென என்னைத் தாங்கிப் பிடித்து எல்லா சோதனைகளிலும் என்னோடு கஷ்டங்களைச் சுமந்து கொண்டு தொடர்ந்து வருகின்றீர்களே!
சிவகுமாரை, குருசாமியை நினைக்கிற போது என் மனதில் பீறிடுகின்ற நன்றி உணர்ச்சி அதுதான். நேற்று முன்தினம் மழை பெய்தது. நெடுநாட்களுக்குப்பிறகு வைகோவின் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம்; ஒருவேளை பெருமழை தொடர்ந்தால் கூட்டம் நடத்த முடியாமல் போய் விடுமோ என்று கவலைப்பட்டதாக தம்பி சிவகுமார் சொன்னார்.
இந்த நகரத்து வீதிகளில் தொழில் முனைவோரிடம், சிறுகடை வியாபாரி களிடம், வணிகப் பெருமக்களிடம் நாங்கள் நிதி கேட்டுச் சென்றபோது எவரும் முகம் சுளிக்கவில்லை; யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை; எவரும் எதிர்ப்பான வார்த்தைகளைச் சொல்லவில்லை; அன்பு கனியப் பேசினார்கள்; ஆர்வம் கொண்டு வரவேற்றார்கள்; கூட்டம் எந்த இடத்தில் எந்தத் தேதி என்று வினவினார்கள்; தங்களால் இயன்றதையும், சக்திக்கு மீறியதையும் தந்தார்கள்’’ என்று சிவகுமார் சொன்னார்.
நான் பெருமைப்படுகிறேன். தம்பி இதை நான் உங்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்குப் பெரும் பதவிகளைத் தேடிக்கொடுக்காமல் போய் இருக்கலாம். நீங்களும் அதை எல்லாம் எதிர்பார்த்து வரவில்லை. இங்கே நீங்கள் நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். தகுதி வாய்ந்தவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக வரக்கூடிய எல்லா தகுதியும் ஆற்றலும் உண்மையும் உழைப்பும் தியாகமும் கொண்டு இருக்கிற அரசியல் களத்தின் கொள்கைவீரர்கள். என்னோடு இருந்தவர்களுக்கு அதிகாரப் பதவிகளைப் பெற்றுக் கொடுக்காமல் போய் இருக்கலாம். ஆனால் தம்பி சிவகுமார், கழகத் தோழர்களோடு கொமாரபாளையம் கடைவீதிகளுக்குச் சென்று, ‘எங்கள் இயக்கத்துக்கு நிதி தாருங்கள்’ என்று கேட்டபோது முகம் சுளிக்காமல், அன்பு காட்டிவரவேற்று உபசரித்து. சக்திக்கு உட்பட்டதையும் அப்பாற்பட்டதையும் இந்த மக்கள் தந்தார்கள் என்கிறீர்களே, அதுதான் மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு மக்கள் மன்றம் கொடுத்து இருக்கின்ற அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம்.
தேர்தல் களங்களில் சிலவேளைகளில் நாம் தோல்விகளைச் சந்தித்து இருக்கலாம் ஆனால், மக்களின் அங்கீகாரத்துக்கான அடையாளம்தான் இந்தக் கூட்டம். அழிந்துவிட்டான் வைகோ. எங்கே இருக்கிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்? என்று கேட்ட முதல் அமைச்சர் அவர்களே, உங்கள் தூதர்களை அனுப்பிப் பாருங்கள். உங்கள் புலனாய்வுப் பிரிவின் துப்பறியும் சி.ஐ.டி. ஏஜெண்டுகளிடம் கேளுங்கள். இந்தக் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. தானாகத் திரண்டு வந்த கூட்டம்.
இந்தக் கூட்டத்தின் தொலைவில் இருக்கும் நண்பர்கள் பலர் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் அல்லர். வந்து இருக்கும் அனைவரும் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனால், தொலைவிலும் பெருமளவில் திரண்டு இருப்பவர்கள், வைகோ என்ன பேசுகிறார், எந்தக் கருத்தை முன்வைக்கிறார் என்று கேட்க வந்து இருக்கிறார்கள் என்றால், நாங்கள் இந்த நாட்டுக்காகப் பாடுபடுகிறோம், அண்ணாவின் கொள்கைக்காக தன்னலம் இன்றி பாடுபடுகிறோம், ஒரு இலட்சிய உறுதியோடு எந்தத் தியாகத்துக்கும் எங்களை உட்படுத்திக் கொண்டு பாடுபடுகிறோம்.உயிர் வெல்லமல்ல என்று கருதுகிற கூட்டம். வெறும் உதட்டளவில் அல்ல, உண்மையிலேயே போராடுகிற கூட்டம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். 14 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறோம். இனி நமக்கு சோதனைகள் கிடையாது. இதை விட என்ன சோதனை வரப்போகிறது? வரவேண்டிய சோதனைகள் அனைத்தும் வந்து விட்டது.
வாடி வதங்குகின்ற மக்களைப் பற்றிய கவலை, இந்த அரசுக்கு இல்லை என்று இங்கே உரையாற்றிய கணேசமூர்த்தி, தண்டபாணி அவர்களும் சொன்னார்கள்.
கொமாரபாளையம் நகரத்துக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு என்பதை, அருமையான, இனிமையான கவிதையை உணர்ச்சி ததும்புகின்ற உன்னதமான கவிதைகளைத் தருகின்ற என் அன்புக்குரிய அன்னையார் நீலாம்பிகை சுப்பையன் அவர்கள் கவிதை வரிகளில் சொன்னார். இந்த நாட்டிலும், கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்கும் துணிகளை அனுப்புகிற நகரம்தான் இந்த நகரம் என்று சொன்னார். இன்று அதன் நிலைமை என்ன?
காவிரி ஆறு கரைபுரண்டு ஓடிய காலங்களில் ஆடி 18 ஆம் பெருக்கு அன்று இந்தக் கொமார பாளையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இன்று ஆடி 18 ஆம் பெருக்கில் காவிரியில் நீராடுவதற்கு வருகிற கூட்டத்தைப்போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு தமிழ் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து இருக்கிறார்கள். எல்லாம் பழங்கதைதானா? இனி வருங்காலத்தில் காவிரியில் நீர் கரை புரண்டு ஓடாதா? உரிமை பறிபோய் விடுமா? இருக்கின்ற உரிமைகளைத் தக்க வைக்க முடியுமா? என்று தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கின்ற சூழலில் இன்று நான் கொமாரபாளையம் மேடையில் உங்கள் முன் நிற்கிறேன்.
திராவிட இயக்கத்தில் இந்த நகருக்கு தனிச்சிறப்பு உண்டு. பேரறிஞர் அண்ணாவை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை - இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரை என அன்பால் அனைவரையும் அரவணைத்த ஊர்தான் இந்தக் கொமாரபாளையம். விருந்தோம்பும் பண்புக்கு எடுத்துக் காட்டான நகரம் இந்தக் கொமாரபாளையம். அப்படிப்பட்ட நகரில் இன்று தொழிலாளர்களின் வாழ்வு இருண்டதற்கு யார் காரணம்?
அண்மையில் நிதிநிலை அறிக்கை வந்தது. தமிழக அரசு பட்ஜெட்டை அறிவித்தவுடன் அந்த பட்ஜெட்டைப் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டபோது நான் சொன்னேன்: ‘‘இந்த நிநிதிலை அறிக்கை ஒரு ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுகின்ற மாய்மால அறிக்கை என்று சொல்கிறபோது, ஒன்றை வலியுறுத்தினேன். ஜவுளித் துறை முழுக்க முழுக்க நலிந்து வருகிறது தமிழ்நாட்டில். ஆலைகள் மூடப்படுகின்றன. மத்திய அரசின் அணுகு முறையும் - கொள்கையும், வீழ்ந்து வருகிற டாலர் மதிப்பும், இதன்விளைவாக எண்ணற்ற ஜவுளி ஆலைகளின் எதிர்காலம் இருண்டுவிடும் என்ற சூழல் உருவாகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்து அதிகமாக விசைத்தறிகள் இருப்பது தமிழகத்தில்தான்.
மூன்று இலட்சம் விசைத்தறிகளுக்கு மேலே இயங்க வேண்டிய தமிழகத்தில் பாதிக்கு மேல் மூடப்பட்டு வருகின்றன. இனி, மீதம் இருக்கின்ற ஆலைகளையும் நடத்த முடியுமா என்ற அபாயச்சூழல் உருவாகி இருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன? அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விசைத்தறி வைத்து இருப்பவர்களும் மூடுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் - தொழிலாளர்களும் வீதிக்கு வருகிற நிலைமை ஏற்படுகிறது.
மின்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்? தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று கடந்த நவம்பர் மாதத்தில் சொன்னார். ஆனால், நாடு முழுவதும் மின்வெட்டு. தலைநகரில் மின்வெட்டு இல்லை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு, கணினி நிறுவனங் களுக்கு, அமைச்சர்களது வீடுகளுக்கு, தக்க முறையில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகின்ற சூழலை ஏற்படுத்திக் கொண்டு, ரோமாபுரி தீப்பற்றி எரிகிறபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக தமிழகம் எங்கும் மின்வெட்டு கிடையாது என்று ஆலாபணை பாடுகிறார்கள்.
ஆனால், கழனியில் நிற்கின்ற விவசாயி கண்ணீர் வடிக்கிறான். பம்புசெட் ஓடவில்லை - ஜெனரேட்டர் வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை - டீசல் விற்கும் விலையில் கட்டுப்படியும் ஆகாது. என் பயிர் பாழாகிறது. பம்புசெட்டை ஓட்டினால், ஓடுகிற தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடி பாத்தியில் போவதற்குள் தண்ணீர் நின்றுவிடுகிறது. சிலவேளைகளில் பம்புசெட் மோட்டார் தீய்ந்துவிடுகிறது. கடன் வாங்கிப் போட்டு கடைசியில் எதுவும் மிச்சம் இல்லாமல் இந்த மண்ணில் நான் மடிவதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமைக்கு விவசாயிகள் ஆளாகிறார்கள். ஆனால், மின்வெட்டே கிடையாது என்கிறார் அமைச்சர். இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மகசூல் கிடைக்காமல் போயிற்று. உரம் தக்க விலையில் தக்க நேரத்தில் கிடைக்கவில்லை. ஆக, அடிப்படையில் விவசாயிகள் வாழ்வு பாழானது.
அதைப்போலவே தொழிற்சாலைகள் மூடப்படுகின்ற நிலைமை. இப்பொழுது வாரம் ஒரு நாள் தொழிற்சாலை மூடவேண்டும் என்கிறார். கேட்டால், எப்படியும் ஒருநாள் மூடித்தானே தீர வேண்டும்? என்று விளக்கம் தருகிறார். வாரத்தில் ஒருநாள் மட்டும் அல்ல, அந்தி சாய்ந்ததற்குப் பிறகு, இரவு 11 மணிவரையில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கிடையாது என்கிறீர்களே, இதனால் இருண்டு கிடக்கிறது தமிழகத்தின் தொழிற்கூடங்கள் - இருண்டு கிடக்கிறது தமிழர்களின் வீடுகள். இதற்கெல்லாம் காரணம் இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடு. இந்த அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகு தமிழகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் திட்டமிடலே கிடையாது.
இங்கே பேசிய அண்ணா தி.மு.க. மாவட்டச் செயலாளர் சொன்னார். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை, தழைத்தது தொழிற் கூடங்கள். தழைத்தது விவசாய நிலங்கள் - மகிழ்ந்தன மக்கள் மனங்கள் என்றார். இதை நான் இன்று காலை புள்ளிவிபரத்தோடு செய்தியாளர்களிடம் சொன்னேன். நான் மின் துறை அமைச்சரைக் கேட்கிறேன். கடந்த ஆட்சியில் மின்உற்பத்தி10,300 மெகாவாட் என்று நான் சொல்ல வில்லை, உங்களுடைய அரசு ஆவணங்கள் சொல்கின்றன. இன்றோ வெறும் 7500 மெகாவாட் மின்உற்பத்திதான் நடக்கிறது.
இதை இந்த அரசே ஒப்புக் கொண்டு இருக்கிறது.
10,300 அதிகமா? 7,500 அதிகமா? என்ற கேள்வியை பள்ளிக்குச் செல்லாதவர்களிடம் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 2800 மெகாவாட் மின் உற்பத்தி இழந்ததற்கு தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம். மின்சார நிலையங்களைப் பராமரிக்கவில்லை, தேவையான புதிய கருவிகளைப் பொருத்தவில்லை, காலியான பணி இடங்களை நிரப்பவில்லi. தமிழக மின்வாரியத்தில் சரிபாதி, சுமார் 43,000 பணி இடங்களை நிரப்பவில்லை. காலியாகக் கிடக்கிறது- ஊழியர்கள் இல்லை. நிர்வாகத்தைச் சீர்படுத்தாததும் காரணம். இந்தக் காரணங்களால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்த அரசின் மீது பொதுமக்களுக்குக் கோபம் கொதித்துக் கொண்டு இருக்கிறது. நான் இன்னும் சொல்கிறேன், முதல் அமைச்சர் அவர்களே நீங்கள் மனப்பால் குடிக்கவேண்டாம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி கூட்டணியின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். எண்ணற்ற கட்சிகள். ‘பார் பார் இது ஒரு மிகப்பெரிய கூட்டணி - பலமான கூட்டணி இவ்வளவு பெரிய கூட்டணியை யார் எதிர்க்க முடியும்?’ என்றீர்கள். இதுவரை இந்தியாவில் எவரும் சொல்லாத இலவச அறிவிப்பெல்லாம் சொன்னீர்கள். இத்தனைக்குப் பிறகும் நீங்கள் பெற்று இருக்கின்ற வெற்றி நூல் இழையில்தான். வெறும் 13 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. அணி வெற்றி பெற்று இருக்கிறதே தவிர, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கும் ஏராளமான கட்சிகளை அமைப்புகளையும் சேர்த்துக் கொண்ட அந்தக் கூட்டணிக்கும் உள்ள இடைவெளி இவ்வளவுதான். ஆறரை இலட்சம் வாக்குகளுக்குமேல் சற்று மாறி இருக்குமானால், நீங்கள் கோட்டையில் அமர்ந்து இருக்க முடியாது.
நீங்கள் ஏற்கனவே அமைத்து இருக்கின்ற கூட்டணியை வைத்துக்கொண்டே மக்களைச் சந்தித்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நவம்பரில் வாக்காளர்களின் வீட்டுக் கதவைத் தட்டினாலும் சரி நீங்கள் வெற்றி பெற முடியாது. இதே நிலைமை தொடர்ந்து, ஒருவேளை இந்த ஆண்டைக் கடந்து அடுத்த ஆண்டு வரையிலாவது அரசாங்கத்தை நீட்டித்துக் கொள்வோம், திரும்பவும் செங்கோட்டைப் பக்கம் கொடி ஏற்ற வாய்ப்பே இல்லை என்று தள்ளிப்போட்டாலும் சரி, என்றைக்கு வந்தாலும் சரி, நீங்கள் வெற்றி பெற முடியாது.
தொகுதிகள் சீரமைப்பின் அடிப்படையில், இது கொமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆகிறது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகிறது. மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளுக்கு புதிய வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட்டில் தயாராகிவிடும். எந்தக் கட்டத்திலும் தேர்தல் வரலாம் என்று அதை எதிர்கொள்வதற்கு அண்ணா தி.மு.க.வும் - மறுமலர்ச்சி தி.மு.க.வும் தயாராக இருக்கின்றன.
கலைஞரின் கூட்டணியில் நாளும் குத்துவெட்டுதான். மக்களின் பேராதரவு எங்கள் அணிக்கு இருக்கிறது. அரசுக்கு எதிராக மக்களின் கோபம் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது. நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில், பெரும்பாலான தொகுதிகளை அண்ணா தி.மு.க. கூட்டணி உறுதியாகக் கைப்பற்றும்.
கொமாரபாளையமும் எங்கள் அணிக்குத்தான் வெற்றியைச் சூட்டித்தரும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. உங்களது ஏமாற்று அறிவிப்புகள் மக்களை உங்கள் பக்கம் திருப்பமுடியாது. நீங்கள் கொடுத்த அறிவிப்புகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகின்ற முயற்சியில் அவர்கள் தோற்றார்கள். விலைவாசி ஏற்றத்தால், மத்திய வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் அடித்தட்டு மக்களும் படுகின்ற அவதிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் மாத பட்ஜெட் கட்டுப்படியாவது இல்லை. எனவே தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
கட்டுமானப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது. புதிதாக வீடு கட்டுவதற்கு எவரும் இப்போது சிந்திக்கவே முடியாது. இரும்புக் கம்பி விலை, சிமெண்ட் விலை, செங்கல் விலை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் நாள்தோறும் அடிக்கிற மணல்கொள்ளையின் காரணமாக ஏறியிருக்கின்ற மணல் விலை. 2 யூனிட் மணலின் விலை 627 ரூபாய்க்கு கிடைக்கும் என அரசாங்கக் குறிப்பில் தந்து இருக்கிறீர்களே, இந்தக் கூட்டத்தில் தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் நண்பர்கள் சொல்லட்டும்.
எங்காவது 2 யூனிட் மணலின் விலை 627 ரூபாய்க்கு வாங்கமுடிகிறது என்று சொல்லட்டும். எவரும் பேச முடியாது. மணல் கொள்ளையினால் கோடிக் கணக்கான பணம் ஆளும்கட்சியின் அதிகார மையங்களுக்குப் போய்ச் சேர்கிறது. நாள்தோறும் கப்பம் கட்டப்படுகிறது. இது ஊர் அறிந்த உண்மை. விதிகளின் அடிப்படையில் மணல் எடுக்கப்படுகிறதா? எங்காவது விதிகள் பின்பற்றப்படுகிறதா? ஆற்றுப்படுகைகளில் இயற்கை வளம் அடியோடு சுரண்டப்படுகிறது.
இயற்கை வளம் சுரண்டப் படுமானால் நமது எதிர்காலம் அடியோடு பாழ்பட்டு விடும். அந்தக் கவலை நமக்கு வேண்டாமா? இந்த அரசுக்கு அதைப்பற்றிய அக்கறை இருக்கிறதா? தி.மு.க. வின் தலைவருக்கு அதைப்பற்றிய கவலையோ அக்கறையோ இருக்கிறதா?
ஆகவேதான் மணல் கொள்ளையும், மின் வெட்டும், ஏறியிருக்கிற விலைவாசியும் மக்கள் மனதில் எழுப்பி இருக்கிற கோபத்தின் காரணமாக அரசுக்கு எதிரான பொதுக் கூட்டம் எங்கே நடந்தாலும் திரண்டு வருகிறார்கள். உண்ணாநிலை அறப்போருக்கு பல்லாயிரக்கணக்கில் வருகிறார்கள்.
ஸ்பாட்டாவின் வீரர்களைப்போன்ற தீரர்களை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் நான் பெற்று இருக்கிறேன். இன்று காலை முதல், நாமக்கல் மாவட்டத் தொண்டர் அணித் தேர்வு நடைபெற்றது. நானே நேரடியாகச் சந்தித்து, இளைஞர்களைத் தேர்வு செய்தேன். நமது மாவட்டச் செயலாளர் சொன்னதைப்போல 300 இளைஞர்கள் வந்து இருந்தார்கள். 125 பேர்களைத் தேர்ந்து எடுத்து இருக்கிறேன். கட்டிளம் காளைகள் கல்லூரி மாணவர்கள் வந்தார்கள். நான் அவர்களிடம் கேட்டேன் தம்பி நீங்கள் கல்லூரிகளில் படிக்கிறீர்கள். பிறகு ஏன் தொண்டர் அணிக்கு வருகிறீர்கள்? - நாட்டில் எவ்வளவோ கட்சிகள் இருக்கின்றன புதிய கட்சிகள் உருவாகின்றன எங்களை ஏன் தேடி வருகிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள்: ‘‘நீங்கள் தமிழகத்துக்கு உண்மையாக உழைக்கிறீர்கள். உங்களுடைய தியாகம் எங்கள் மனதைத் தொடுகிறது. எனவேதான் இந்தக் கட்சியை நாடி வருகிறோம்’’ என்றார்கள்.
இளைஞர்கள் சிலர் சொன்னார்கள். ‘‘நாங்கள் இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லை ஆனால், உங்கள் கட்சியில் சேரவேண்டும் என்று வருகிறோம்’’ என்றனர். தொண்டர் படையாயிற்றே. தம்பி, ஓடியாடி வேலை செய்ய வேண்டுமே? பட்டினி கிடக்க வேண்டியது வருமே? இரவு 11 மணிக்கு பொதுக் கூட்டம் முடியும். அதற்குப்பிறகு பேருந்து நிலையத்துக்குச்சென்று விடியற் காலை 3 மணிக்கு பேருந்து பிடித்து ஊர்போய்ச் சேர வேண்டுமே, முடியுமா? ஒத்து வருமா? என்றபோது, ‘‘விரும்பி வருகிறோம் அண்ணா. உங்கள் படையில் சேரவேண்டும் என்று விரும்பி வருகிறோம்’’ என்றார்கள்.
முதல் அமைச்சர் அவர்களே, தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன, உங்களது ஆட்சியில். இல்லாவிடில் கர்நாடகத்துக்காரன் நம் எல்லைக்கு உள்ளே நுழைந்து காவிரி ஆற்றில் பரிசலில் வந்து ஒகேனக்கல் எல்லைக்குள் நுழைந்து, இது எங்களுக்குச் சொந்தம் என்று குரல் கொடுக்கிறான். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பதைப்போல நம் வீட்டுக்கு உள்ளே நுழைந்து இந்த வீடு எனக்குச் சொந்தம் என்று சொல்வதைப்போல, அக்கிரமத்தோடு நம் எல்லைக்குள் நுழைந்து ஒகேனக்கலில் எங்களுக்கு உரிமை உண்டு, குடிநீருக்குத் தண்ணீர் எடுக்காதே என்று சொல்லத்தக்க துணிச்சலைத் தந்தது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கருணாநிதி என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
இந்தத் துணிவு கடந்த ஆட்சியில் பக்கத்து மாநிலங்களுக்கு வரவில்லையே - அண்ணா தி.மு.க. ஆட்சியில் பக்கத்து மாநிலத்துக்கு தைரியம் வரவில்லை. உங்கள் குடும்பத்தைக் கொண்டுவந்து கொலுமண்டபத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் குடும்ப ஆதிக்கத்தை அண்ணா உருவாக்கிய இயக்கத்தை கபளீகரம் செய்வதற்காக தமிழக உரிமைகளை நீங்கள் காவு கொடுக்கிறீர்கள் என்று நான் இந்த மாபெரும் கூட்டத்தில் குற்றம் சாட்டுகிறேன்.
தந்தை பெரியாரின் எண்ணங்களை சட்டமாக ஆக்கியவர் தமிழ்த்தாயின் தலைமகன், நம்மை எல்லாம் இந்த மண்ணில் உலவச் செய்த பேரறிஞர் அண்ணாவை நேசித்த ஊர் கொமாரபாளையம். அந்த ஊரில் இருந்து கேட்கிறேன். மதிப்புக்கு உரிய முதல் அமைச்சர் அவர்களே, அண்ணாவின் பிள்ளை டாக்டர் பரிமளம் நான்கு நாட்களுக்கு முன் இறந்தார். நீங்கள் மலர் வளையம் வைத்தீர்கள், இரங்கல் தெரிவித்தீர்கள், கவிதையும் எழுதினீர்கள். உங்களது அகடவிகட சாமர்த்தியம் எவரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியும் என்ற துணிச்சல், அது எளிதில் யாருக்கும்வராது. எனக்கு என்ன சந்தோசம் என்றால் இப்படி சகலவிதமான அதிகாரத்தையும் கொண்டு அராஜகத்தோடு சூழ்ச்சியோடு அதிகார பலத்தோடு நம்மை அழிக்க நினைக்கிறாரே - எதிரி பலமாக இருந்தால்தான் ஒரு வீரனுக்கு மகிழ்ச்சி இருக்கும். இவ்வளவும் செய்தும் எங்களை அழிக்க முடியவில்லையே? முடியாது, ஒருக்காலும் முடியாது.
பேரறிஞர் அண்ணாவின் அருமைத் திருமகன் டாக்டர் பரிமளம், கடந்த 15 நாட்கள் அப்போலோ மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தாரே, இது முதல்வருக்குத் தெரியாதா?
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற பிரபலமானவர்கள் யாராக இருந்தாலும் வி.ஐபி. என்றால் அந்த மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டு இருக்கும் மாநில போலிசின் உளவுப் பிரிவுக்குத் தெரியும். அவர்கள் உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வில்லையா? அப்படியானால் முதல்வர் பதவியில் இருக்க நீங்கள் லாயக்கு இல்லை என்று அர்த்தம்.
மருத்துவமனையில் டாக்டர் பரிமளம் இருந்தபோது நீங்கள் ஏன் போய்ப் பார்க்கவில்லை? அண்ணாவை நெஞ்சில் பூஜித்த நாங்கள், தொலைவில் இருந்து பார்த்தோம். நீங்கள், டாக்டர் புரட்சித் தலைவர், நாவலர், பேராசிரியரும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களும் அண்ணாவின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். அண்ணா திறமைசாலிகளை ஊக்கு வித்தார். பாராட்டினார். தட்டிக் கொடுத்தார். அவரைக் கேட்காமலேயே சிலகாரியங்களை நீங்கள் செய்தபோதும் அதை கட்சிக்குப் பெருமையாக்கினார். நீங்கள் உங்கள் விளம்பரத்துக்கு என்று சில வேலைகளைச் செய்தாலும், அண்ணா அதை விளம்பரத்துக்கு என்று சொல்லவில்லை. கட்சிக்கென்று பயன்படுத்தினார்.
அவர் எல்லோரையும் நேசித்தார். எல்லோரும் வளரவேண்டும் என்று நினைத்தார். அப்படி ஒரு தலைவரை உலகத்தில் வேறு எங்கேயும் பார்க்கமுடியாது. இந்த நாட்டில் ஜாதிமத வேறுபாடு இருக்கக்கூடாது என்ற குரல் எழுகிறதே. இந்தச் சாதிச் சண்டை, மதச் சண்டை இல்லாமல் சாதிமத எண்ணங்களுக்கு இடம்கொடுக்காத ஒரேதலைவர் அண்ணா ஒருவர்தான்.
அனைவரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளை என்றார். நாம் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்தாலும் அண்ணன் தம்பி என்றார். அதிலேயே எல்லாமே அடிபட்டது. சாதிச் சுவர்கள் நொறுங்கின. மதக்கெடுபிடிகள் நொறுங்கின. எல்லைச் சுவர்கள் நொறுங்கின, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடுதான் நிலவியது. அந்த உணர்வை ஊட்டியவர் அண்ணா. அவரோடு வளர்ந்த நீங்கள். அந்த அண்ணாவின் பிள்ளைக்கு உடல்நலம் இல்லை என்றால் போய்ப் பார்க்க வேண்டாமா?
15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. நீங்கள் போவதற்கு நேரம் இல்லை என்றால் உங்களது அமைச்சர்களை அனுப்பி இருக்கலாமே? பேராசிரியர் இருக்கிற சூழலில் ஒருவேளை அதிக அலைச்சல்கூடாது என்றால், ஆர்க்காட்டை அனுப்பக் கூடாதா? வீரபாண்டியாரை அனுப்பக் கூடாதா? ஏன் அனுப்பவில்லை?
அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கிக்கொண்டேன். அங்கு வருகிறபோது தருவேன் என்று சொன்னீர்களே, இதுவா இரவல் வாங்கிய இதயம்? அதைப்பற்றிய எண்ணம் துளியளவும் இல்லையே. கவலைப்பட வேண்டாமா? போய்ப் பார்க்க வேண்டாமா? அவர் மருத்துவமனையில் இருக்கின்ற தகவலை அறிந்தபோது வெளியூரில் இருந்த நான், சென்னைக்குத் திரும்பிய உடனே சென்று டாக்டர் பரிமளத்தை பார்த்தேன். ஆக்சிஜனுக்குப் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்ற முயன்றார். நான் வேண்டாம் வேண்டாம் என்று சைகையின் மூலம் காண்பித்தேன். இருந்தாலும் எடுத்து விட்டார்.
என்னிடம் புன்முறுவலோடு சிரித்துப் பேசியவர் சொன்னார். ‘அப்பா 60 வயதில் இறந்துவிட்டார். நான் 70 வயது வரை இருந்து விட்டேன். இனி விடைபெற வேண்டியதுதான்’ என்றார். ‘அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். நூறுவயது வரை வாழ வேண்டும். நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் நிரம்ப இருக்கின்றன. எனவே அந்த வார்த்தையைச் சொல்லாதீர்கள் என்றேன். மேலும் சொன்னார். ‘‘நான் சங்கொலி படிக்கிறேன். அப்பாவைப் பற்றிச் சொல்லி அப்பாவின் வெள்ளைமாளிகையை நீங்கள் நினைவூட்டி, இப்பொழுது அமெரிக்கத் தேர்தலைப் பற்றியும் பாரக் ஒபாமாவைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள், ரொம்ப நன்றாக இருக்கிறது’’ என்றார்.
டாக்டர் பரிமளம் ஒரு சிறந்த எழுத்தாளர். மொகஞ்சதோரா, ஹரப்பாவுக்குள் புதைந்து கிடந்ததை வெளியே கொண்டு வருவதைப்போல, அண்ணாவின் எழுத்துகள் அனைத்தையும் வெளியே வராதவற்றை படைப்புகளாகக் கொண்டு வந்து இன்று இணைய தளத்திலும் வெளியிட்டவர் டாக்டர் பரிமளம். அவர் வாயால் அந்த வார்த்தையைக் கேட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மறைந்தார் என்ற செய்தி கேள்விப் பட்டபோது வேதனை நிறைந்தது.
கலைஞர் அவர்களே, நீங்கள் மருத்துவனைக்குச் செல்லவில்லை. சரி. வீட்டுக்கு வந்து மாலை வைத்தீர்கள். இரங்கல் அறிக்கை எழுதினீர்கள், ஒரு கவிதையும் எழுதினீர்கள். அந்த நுங்கம் பாக்கம் வீட்டில் இருந்து லயோலோ கல்லூரிக்கு எதிரே இருக்கும் சுடுகாடு வரையிலும் ஒரு அமைச்சரையாவது அனுப்பிவைத்து மரியாதை செய்யக் கூடாதா? இரண்டு மாவட்டச் செயலாளரும் மேயரையும் தவிர, ஒரு 25 தி.மு.க. தோழர்களைத் தவிர வேறு யாரும் வரவில்லையே? மந்திரிமார்கள் வரவில்லையே? சட்டமன்ற உறுப்பினர்கள் வரவில்லையே? பகுதிச் செயலாளர்கள்கூட வரவில்லையே?
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவைத்தலைவரும் மற்றவர்களும் வந்து இரங்கல் தெரிவித்து விட்டு காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட தோழர்களும் எங்களுடன் வந்தார்கள். அமைச்சர் மாதவன் உள்ளிட்ட, அதைப்போல அண்ணன் இரா.செழியன் உள்பட பலரும் நடந்தே சுடுகாடு வரைசென்றோம்.
உள்ளம் எல்லாம் புலம்பித் தவிக்கிறது என்று அண்ணாவின் பிள்ளைக்கு கவிதை எழுதி எட்டுக்காலம் போட்டு மறுநாள் தினத்தந்தி முதல் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்திபோட்டு நீங்கள் அழுது புலம்புவதாக உலகம் முழுவதும் செய்தியை அனுப்பினீர்களே. அப்படி நாட்டு மக்களின் மத்தியில் அண்ணாவின் பிள்ளைக்காக துயரப்படுவதைப்போல நாட்டுமக்களை நம்பவைக்க முடிகிறது. உங்களுக்கு அத்தகைய திறமை இருக்கிறது. எங்கு எங்கோ சென்று விழா நடத்துவதற்கு மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறீர்களே?
தொலைவில் இருந்து கேட்கின்ற அண்ணாவின் அன்புத்தம்பிகளே! அண்ணாவின் அருமைப் பிள்ளை பரிமளம். அவருடைய எழுத்துகளில் சொல்கிறார் அண்ணா அவர்கள் அடையாறு மருத்துவ மனைக்குச் செல்வதற்கு முன்பு தன் மகன் பரிமளத்திடம் ஒரு நாள் ‘பரிமளம் என் முதல்வர் அறைக்கு நீ - என்றைக்காவது தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற முதல்வரின் அறையைப் பார்த்து இருக்கிறாயா? என்று கேட்டார்’ அதற்கு பரிமளம் சொன்னார் ‘முதல் அமைச்சர் அறையை இதுவரை நான் பார்த்தது இல்லை’ என்றார். அப்படி அண்ணாவின் குடும்பத்துக்கு முதல்வரின் அறைகூட தெரியாது.
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். தொலைவில் இருக்கின்ற திராவிட இயக்கத் தோழர்களே, சிறைக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் உழைத்த திராவிட முன்னேற்றக் கழக தோழர்களே, அண்ணாவின் இயக்கம்தான் உயிர் என்று தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த தீரர்களே, உங்களைக் கேட்கிறேன்.
அண்ணாவின் மகன், முதல்வர் அறையைக்கூட பார்த்தது கிடையாது. என்ன காரணம்? அண்ணா அப்படி வளர்த்தார். தன்பிள்ளைகளை கட்சிக்குக் கொண்டுவரவில்லை. பரிமளத்துக்கு ஆற்றல் இருந்தது, எழுத்துத் திறமை இருந்தது, படிப்பு இருந்தது, சிந்திக்கும் ஆற்றலும் இருந்தது, அரசியல் ஈடுபாடும் இருந்தது. ஆனால், அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. அதிகார பீட நாற்காலிக்குக் கொண்டுவர அண்ணா ஆசைப்பட வில்லை. அதிகார மண்டபத்தின் தாழ்வாரத்தில் தன் பிள்ளைகள் உலவுவதற்குக்கூட அண்ணா அனுமதிக்கவில்லை.
இன்று உங்கள் நிலைமை என்ன? உங்கள் பிள்ளைகளுக்காக ஆட்சி. உங்கள் பிள்ளைகளுக்காக கட்சி. இதுதான் இன்றைய நிலைமை. அந்த இயக்கத்தில் திறமைசாலிகள் கிடையாதா? உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீரர்கள் கிடையாதா? உண்டு. இந்தக் கேள்விகள் எழும் என்பதற்காகத்தான் குற்றமற்ற என்னைப் போன்றவனை தூக்கி எறிந்தார். கட்சியை உயிராக நினைத்து கட்சிக்கும் தலைமைக்கும் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த என் போன்றவர்களைத் தூக்கி எறிந்தீர்கள்.
நான் கேட்கவில்லை. வருங்கால இளைஞர்கள் கேட்பார்கள். நீங்கள் உங்களது கடமையைச் செய்கிறீர்களா? கிடையாது. ஆக, தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக இவரது காலத்தில் காவு கொடுக்கப்படுகின்றன. முல்லைப் பெரியாறிலும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். காவிரியிலும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். பாலாற்றிலும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். ஒகேனக்கலிலும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். எதற்கு ஒருமைப்பாடு? எங்களுக்கு எதற்கு தில்லி?
தமிழகத்தில் மட்டுமா? இதோ நமது கடல் எல்லையில், நமது தமிழக மீனவர்கள் நாள்தோறும் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படு கிறார்கள். எந்தக் கடல்வழியே ராஜராஜனின் கடற்படைகள் சென்றதோ அதே கடலில் நமது மீனவர்களின் இரத்தம் சிந்தப்படுகிறது. சுடுவது யார்? சிங்களத்துக்காரன். அங்கும் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான்.
ஆறரைக் கோடி தமிழர்கள் இருக்கின்ற தமிழக எல்லையில் வந்து சுடுகின்ற திமிர் அவனுக்கு இருக்கிறது. 940 தடவை சுட்டு இருக்கிறான். நான் பிரதமருக்குக் கடுமையான கடிதங்களை எழுதினேன். கடந்த ஐந்தாம் தேதி அவர் எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு நீண்ட கடிதம் எழுதிஇருக்கிறார். சர்வதேச எல்லை இலங்கை கடல் எல்லைக்குப் போவதால் சுடுகிறார்கள் என்று பிரதமர் எழுதி இருக்கிறார். நான் வருத்தப்படுகிறேன், பிரதமர் அவர்களே!
இங்கே இருக்கக்கூடிய கங்காணி அதிகாரிகள், இந்தியக் கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் - தமிழ் இனத்துரோகிகள். இதை நான் பகிரங்கமாகச் சொல்வேன். இலங்கைக்குப் போவது, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விருந்து சாப்பிடுவது, அவர்களுடன் கூடிக்குலாவுவது. அப்படி இன்னும் நிரம்ப இருக்கிறது அவற்றைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்கிறேன். இவ்வளவையும் செய்துவிட்டு, அவர்களுக்குச் சாதகமாக நாளும் அறிக்கை விடுவது, நம் மீனவர்கள் இலங்கைக் கடற் பகுதிக்குள் செல்வதனால் சுடப்படுகிறார்கள் என்கிறார்கள்.
நான் வாதத்துக்குக் கேட்கிறேன், வழிதவறி சர்வதேச எல்லைக்கு உள்ளே சென்றால் சுடலாமா? பாகிஸ்தானுக்கும் நமக்கும் நான்கு தடவை யுத்தம் நடந்து இருக்கிறது இன்றைக்கும் மோதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நமது மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் செல்கிறார்கள். இதுவரை அவன் சுட்டு இருக்கிறானா? கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறான். அப்படி இருக்கும் போது, சிங்களத்துக்காரன் மட்டும் சர்வதேச எல்லைக்கு உள்ளே சென்றால் எப்படி சுடுகிறான்? பட்டப்பகலில், கிட்ட வந்து, ஆயுதங்கள் எதுவும் இல்லாத மீனவர்களைக் குறிபார்த்துச் சுட்டுக் கொல்கிறானே? எப்படி? அதைவிட அக்கிரமம், சர்வதேசக் கடல் எல்லைக்கு உள்ளே கண்ணி வெடிகளை வைத்து இருக்கிறான். வைத்தது மட்டுமல்ல, தமிழக மீனவர்களே, இந்தப் பக்கம் வந்தீர்கள் என்றால் உங்கள் படகுகள் வெடித்து நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று எச்சரிக்கிறான். இந்தியக் கடற்படையும் அதை ஆமோதிக்கிறது.
நான் கேட்கிறேன். ஒரு சுண்டைக்காய் நாடு இலங்கை. அதில் இருக்கும் சிங்களவன் சர்வதேசக் கடல் எல்லையில் கண்ணிவெடி வைக்கிறான் என்றால் உங்களுக்கு மானம் மரியாதையே கிடையாதா? சோவியத் நாட்டுப் பெருங்கப்பல்கள் அட்லாண்டிக் கடலில் சென்றது. அமெரிக்கக் கடலில் செல்லவில்லை. ஜான் கென்னடி சொன்னார், ‘இது அட்லாண்டிக் கடலில் சென்றாலும் எதிர்காலத்தில் எங்களுக்கு ஆபத்து. நடுக்கடலில் மறிப்பேன்’ என்று சொன்னார். இங்கே நமது கடல் எல்லையில் வந்து கண்ணிவெடி வைக்கிறான். இந்தியாவின் இறையாண்மை என்ன ஆயிற்று?
இங்கு வந்து கண்ணிவெடி வைத்து விட்டு மீனவர்கள் வந்தால் செத்துப் போவீர்கள் என்கிறான். உங்கள் கடற்படைத் தளபதிகள் அதனை ஆமோதிக்கிறார்கள். நீங்கள் அதை எனக்குக் கடிதத்தில் எழுதி இருக்கிறீர்கள். அரசா நடத்துகிறீர்கள்? வெட்கக்கேடு. அதை எல்லாம் விட அங்கே இருக்கின்ற தமிழர்களைக் கொன்றுகுவித்துவிட்டு அந்த இரத்தக்கறை படிந்த கரங்களோடு வருகிற சிங்கள தளபதி பொன்சேகாவை சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம்.
பொதுமக்களே, இந்த நிகழ்ச்சி முடிந்து வீடுகளுக்குச் சென்றால் உங்களுக்கு சாப்பாடு தயாராக இருக்கும். வசதியானவர்களுக்கு நல்ல உணவும் இல்லாதவர்களுக்கு பழைய சோறாவது கிடைக்கும். உன் தாயோ, தங்கையோ, தாரமோ உன்வீட்டில் காத்து இருப்பார்கள் உணவு கிடைக்கும். ஆனால், பச்சைத்தமிழனே, அங்கே அப்பாவித் தமிழர்கள் பட்டினியால் சாகிறார்கள், மருந்து கிடையாது, குடிசைகளில் வன்னிக் காடுகளில் அகதிகளாக வாழுகிற தமிழர்களுக்கு மருந்து கிடையாது.
இந்த உலகின் எந்த மூலையிலும் மருந்து இல்லாமல் எந்த மனிதகுலம் தவித்தாலும் அவர்களுக்கு வாரி வழங்குகிறது செஞ்சிலுவைச் சமுதாயம், சர்வதேசச் சங்கம். தமிழனாக தமிழச்சியாக பிறந்த பாவத்தால், மருந்துகூட கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது இந்திய அரசு. வடலூர் வள்ளலாரைப்போல ஒழுக்கமாக வாழ்ந்து வருகிற பழ.நெடுமாறன் அவர்கள் திரட்டிய உணவையும் மருந்தையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கைக்கு அனுப்ப ஏன் மறுக்கிறீர்கள்?
நான் கடந்த பதிமூன்று மாதங்களுக்கு முன் பிரதமர் வீட்டிற்குச் சென்று இந்த உணவையும் மருந்தையும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். உடனே செகரட்டரியைக் கூப்பிட்டு ஏற்பாடு செய்தார். இடையில் தடுத்தது யார்? நெஞ்சுக்கு நீதியும், மனசாட்சியும் இருந்தால் தெரியும், யார் தடுத்தார்கள் என்று. எதற்காக அனுப்பவில்லை? யார் அனுப்பவில்லை?
இப்படிப்பட்ட கொடுமைகளை மத்திய அரசு செய்கிறது. இவை எல்லாம் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியே தீரும். மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு விரோதமான அரசுகள்தான்.
நாங்கள் மறுமலர்ச்சித் தூதர்கள், தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வுக்கு எங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அண்ணாவின் தம்பிகள். எவ்வளவு கஷ்ட நஷ்டங்களிலும் நாங்கள் எங்களது நேர்மையான பாதையில் ஒழுக்கமான பாதையில் செல்வோம். எங்களிடம் வஞ்சகம் இல்லை, சூது இல்லை, சூழ்ச்சி இல்லை, களங்கம் இல்லை, தவறு இல்லை. வாழும் வாழ்க்கை எதற்காக? நாம் பிறந்த மண்ணுக்கும் பிறந்த பொன்னாடாகிய தமிழக மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாங்கள். ஆகவே கொமாரபாளையத்தில் வாழு கின்ற தமிழ்ப் பெருமக்களே, எங்களுக்கு ஆசியும் வாழ்த்தும் சொல்லுங்கள்.
இந்த மாபெரும் கூட்டத்தில் இவ்வளவு நேரமாகியும் இந்த எளியவனின் பேச்சை செவிமெடுத்த அனைவருக்கும், கலந்துகொண்ட அண்ணா தி.மு.க. தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்தச் சிறப்பான கூட்டத்தை ஏற்பாடுசெய்த தம்பி சிவகுமாருக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

