கொலைபாதகன் நடத்தும் சினிமா கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பீர்! அமிதாப்பச்சன் பாகிஸ்தானிலே நடத்துவாரா? வைகோ அறிக்கை!
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
கொலைபாதகன் நடத்தும் சினிமா கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பீர்!
அமிதாப்பச்சன் பாகிஸ்தானிலே நடத்துவாரா?
வைகோ அறிக்கை!
தமிழர்களின் மரணபூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைபாதகன் இராஜபக்சே இராஜாங்கம் நடத்தும் தலைநகர் கொழும்பில், ஜூன் மாதத்தில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்ற செய்தி ஆகும்.
இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும், வீசும் காற்றையே ஓலக்காற்றாக ஆக்கிவிட்ட நிலையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை, மூன்று நாள்கள் நடத்த, இந்த அமைப்பின் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்தது, தமிழர்களின் தலையிலே மிதிக்கின்ற அக்கிரமம் ஆகும்.
இந்தியாவில், அனைவராலும் மதிக்கப்படுகின்ற கலையுலக நட்சத்திரமான அமிதாப் பச்சன், இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது, கண்டனத்துக்கு உரியது ஆகும். இந்த முயற்சியை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும். அவர் வசிக்கும் மும்பையிலே தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மடியக் காரணமான பாகிஸ்தானியர்களின் தலைநகரில், இஸ்லாமாபாத்தில், இந்த விழாவை அவர் நடத்தத் தயாரா? அப்படி அறிவித்து விட்டு மும்பை நகரில் அவர் நடமாட முடியுமா?
தமிழர்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கொண்டாடப் போகிறார்களா?
இப்படியெல்லாம், இவர்கள் செயல்படுவதற்குத் துணிச்சலைத் தந்ததே இந்திய அரசுதானே? கொலைபாதகன் ராஜபக்சேயை இந்தியாவுக்கு அழைத்து வந்து, திருப்பதியில் அவனுக்குப் பூரண கும்ப வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ததால்தானே, இந்தத் துணிவு அனைவருக்கும் வந்து விட்டது?
கொழும்பிலே உத்தேசிக்கப்பட்ட விழாவை, இந்தியத் திரைப்படத் துறையின் சார்பில் நடத்தக் கூடாது. இந்த விழாவில் தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கப் போவது இல்லை எனத் தெரிவித்து இருப்பதாக அறிகிறோம்.
தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும், அதில் கலந்துகொள்ளக் கூடாது என்பதோடு, இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும்; அமிதாப் பச்சன் தனது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.04.2010

