சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களுக்கு சட்டமன்றத்தைத் திறக்கும் அருகதை கிடையாது! ஜூனியர் விகடனில் வைகோ.

விவகாரங்கள்: தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Sat, 03/04/2010

சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களுக்கு சட்டமன்றத்தைத் திறக்கும் அருகதை கிடையாது! ஜூனியர் விகடனில் வைகோ.

 

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும்போது பட்டென்று ஜூ.வி.யில் பேட்டியாக வீசிவிட்டுப்போன கோபவெடி.... தி.மு.க.வில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களம் முழுவதிலுமே பரபர பண்ணிவிட்டது! ‘கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன்!’ அவர் சொன்னது, ‘அரசல் புரசலாக தி.மு.க.வுக்குள் இருந்த சகோதர யுத்தத்துக்கு அதிகாரபூர்வமான முதல் ஒப்புதல்’ என்றே டெல்லி வரையிலான மீடியாக்களால் இப்போது வர்ணிக்கப்படுகிறது.

அழகிரியின் பேட்டி தாங்கிய ஜூ.வி. கடைகளுக்கு வந்த ஒருசில மணி நேரங்களில் கோபாலபுரம் இல்லத்திலிருந்து பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி. அவரை எதிர்கொண்ட நிருபர்கள், அழகிரியின் தீர்மான வார்த்தைகளைச் சொல்லி கருத்துக் கேட்க... ‘அதைப்பற்றி அவரிடமே போய்க் கேளுங்கள் என்றார் தி.மு.க. தலைவர் முதலில். விடாப் பிடியாக கருத்துக்கேட்ட நிருபரிடம், ‘எனக்குப் பிறகுன்னா...? எந்த வருஷம்? எனக்கே தெரியலையே...’என்று

இறுக்கமாகக் கூறிவிட்டு வாகனத்தில் ஏறிக் கிளம்பினார். பென்னாகரம் பிரசாரத்தில இருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதுபற்றி கருத்து சொல்லாமல் தவிர்த்தார்! ஆனால், கட்சியின் அஸ்திவாரமான லட்சோப லட்சம் தொண்டர்கள் நடப்பவற்றின் பின்னணி பற்றி காரசாரமாக விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள் இப்போது! ‘அடுத்து என்ன?’ என்று அரசியல் நோக்கர்களும் உன்னிப்பாக கவனிக்கும் நிலையில், ‘தி.மு.க.வின் தலைமையைக் கைப்பற்ற நினைக்கிறார்’ என்ற நெருக்கடியுடன் அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட (வெளி யேறிய?) ம.தி.மு-வின் பொதுச் செயலாளர் வைகோ விடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


“அழகிரி கருத்தின் பின்னணி என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”


“அறிஞர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு திராவிடர் இயக்கத்துக்குள் வந்தவன் நான் என்பதாலும், முன்னொரு காலத்தில் இதே தி.மு.க-வின் உயிர்த்தொண்டனாக இருந்து அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவன் என்பதாலும், கலைஞரின் நயவஞ்சகச் சூழ்ச்சியால் வெளியேற்றப் பட்டு கொடும்பழி சுமந்தவன் என்பதாலும், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு சில விஷயங்களை விரிவாகப் புரிய வைக்க வேண்டியுள்ளது!


தமிழர் உரிமை வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு, திராவிடர் கழகத்திலிருந்து விலகி பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மகத்தான இயக்கம் தி.மு.க! உலகில் எத்தனையோ இயக்கங்கள் தோன்றியிருந்தாலும், இயக்கத்தினர் அனைவரும் ஒரு குடும்பமாக அண்ணன் தம்பி என்ற உறவுமுறை பாச இழையில் வளர்ந்த இயக்கம் தி.மு.க மட்டுமே!

அதனால்தான் அண்ணா, தன் இயக்கத்தினரை ‘தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் -தம்பிகள்’ என்றார். அவர் வளர்த்த பாச உணர்வால் தழைத்த அந்த இயக்கம்... பலரது தியாகத்தால் இந்திய அரசியலையே திகைக்கவைத்த திருப்பங்களை உண்டாக்கியது.


அண்ணாவின் மறைவுக்குப் பின்... கட்சியின் மூலபலமாக விளங்கிய எம்.ஜி.ஆரை, தன் சூழ்ச்சியாலும், ஏமாற்றுத் திறமையாலும் தன்வயப் படுத்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றி ஆட்சிக்கும் தலைவரானார் கலைஞர். அதன்பிறகு குறுகிய காலத்தில் எம்.ஜி.ஆரை வெளி யேற்றினார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்... தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...! என கலைஞரைப் பற்றிப் பாடினார். எம்.ஜி.ஆரை வெளியேற்றியதில் இருந்து தொடங்கியதுதான் கலைஞரின் குடும்ப ஆதிக்கச் சிந்தனை. அதன்பிறகு தன் பிள்ளைகளுக்காக கட்சி, ஆட்சி இரண்டையும் குடும்பச் சொத்தாக்கி விட்டார்..!


தன் மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக எண்ணி திரையுலகில் திணித்தது முதல், குடும்ப வாரிசுகளுக்கு இடையூறாக வைகோ இருப்பானோ என எண்ணி கொலைப்பழி சுமத்தியது வரை சொல்லிக்கொண்டே போகலாம். அன்று எம்.ஜி.ஆர். சொன்ன காரணங்கள்தான், இன்று தி.மு.க-வினுள் விஸ்வரூப பிரச்சனைகளாக வடிவம் எடுத்துள்ளன. தேவைப்படும் போது தான் பயன்படுத்திக் கொண்டவர் களை, தேவை முடிந்ததுமே தூக்கி எறிவது கலைஞரின் வழக்கம். கட்சிக்கு ஒருவர் பொருளாளராக நியமிக்கப் பட்டார்... அதன்பிறகு அவரை நீக்கி விட்டு மகனையே பொருளாளராக நியமித்தார் இவர். கட்சிக்கு தகப்பனும், மகனும்தான் தலைவரும், பொருளாளரும். பின்பு அதே மகனையே துணை முதல்வர் ஆக்கிவிட்டார்..! ஒரு முறை ‘உங்கள் வாரிசுகளை கட்சியில் திணிக்கிறீர்களா?’ என்ற கேள்வி வந்தபோது, ‘கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லை’ என்று சொன்னார் கலைஞர். ஆனால், கட்சியை தன் குடும்பத்தின் ‘லிமிடெட் கம்பெனி’ ஆக்கினார்.


மதுரையில் இருக்கும் முதல்வரின் மகன் மு.க. அழகிரி 2001 தேர்தலில் தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி, தி.மு.க-வை தோற்கவைத்தார். அப்போது பேராசிரியர் அன்பழகன், ‘அழகிரி தி.மு.க-விலேயே இல்லை’ எனச் சொன்னார். அதே அழகிரி, இன்றைக்கு மத்திய அமைச்சராக பவனி வருகிறார்...!

கலைஞரின் புதல்வி மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு இருக்கிறார். ‘முதல்வரின் குடும்பத்தில் மட்டும் ஆறு அதிகார மையங்கள் தமிழகத்தின் ஆட்சியை ஆட்டிப் படைக்கின்றன’ என்பது உயரதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஊழல் பணத்தால், ஓட்டுகளை விலைக்கு வாங்கித் தற்காலிகமாக வெற்றி பெறலாம் தி.மு.க! ஆனால், திராவிட இயக்கக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்து, கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதால் தி.மு.கழகம் உள்ளுக்குள் சிதிலமடைந்து பெரும் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது. 93ஆம் ஆண்டு காரைக்குடியில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டே வந்த பேராசிரியர் அன்பழகன், ‘கருணாநிதிக்குப் பிறகு கட்சி எட்டு துண்டுகளாகும்..! என்றொரு வார்த்தையைச் சொன்னார். அன்றைய சூழலில் அவர் எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னாரோ... இன்றைக்கு பேராசிரியரேகூட அதை மாற்றிப் பேசலாம். ஆனால், அவர் சொன்னதுதான் இனி நடக்கப் போகிறது! 16 துண்டுகளாக உடைந்தாலும்கூட ஆச்சர்யப்பட முடியாது. அந்தளவுக்கு குடும்ப ஆதிக்கம் என்ற நஞ்சினால் கட்சியைப் பாழ்படுத்தி வைத்திருக்கிறார் கலைஞர்.


‘எனது வாரிசுகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்’ என்று, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, புகைப்படத்துக்கூட போஸ் கொடுக்க வைப்பார் கலைஞர். ‘நேற்றுவரை ஒன்றாக இருந்தார்களே, இவர் வீட்டு விசேஷத்துக்கு அவர் போனார். அவர் வீட்டுத் திருமணத்துக்கு இவர் போனார். ஒன்றாக கைகோத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்களே. இன்றைக்கு அழகிரி இப்படி பேசுகிறாரே...! என சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். ஆனால், உள்ளங்கையை விரித்துக் காட்டி, உள்ளுக்குள் என்ன இருக்கிறதென்று அழகிரி வெளிப்படையாக பேட்டி கொடுத்திருப்பதற்கு காரணமே கலைஞர்தான்!!”
என்று சொன்ன வைகோவிடம்,


“கருணாநிதி இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும்?”


“கலைஞர் என்ன முடிவெடுக்க முடியும்? முடிவெடுக்கும் கட்டமெல்லாம் தாண்டி வெகு தூரம் வந்தாகிவிட்டது. கலைஞர் நினைத்திருந்தால் தி.மு.கழகத்தை உயர்ந்த சிகரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்க முடியும். ஆனால், குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிற அவரது ஆசையால் எல்லாமும் பாழாகி விட்டது.


கலைஞர் அவர்களின் எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஓயாத உழைப்பு பலரை மலைக்க வைத்தாலும் அவரது சுயநல குடும்ப வாரிசு ஆதிக்கத் திணிப்பால் இயக்கம் முற்றிலும் பாழாகிவிட்டதை எண்ணி அவருக்காக வருந்துகிறேன். இந்த புதை மணல் சூழலில் இருந்து இனி கலைஞர் விடுபடுவது கடினம்.”


“யார்தான் தி.மு.க-வின் தலைமை பீடத்துக்கு அடுத்தபடியாக வருவார்கள்?”


“கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வின் தலைமைப் பீடத்துக்கு யார் வருவார்கள், வரவேண்டும் என்பதெல்லாம் நான் பதிலளிக்கக்கூடாது. அது இன்னொரு கட்சி சார்ந்த விஷயம். அதில் நான் தலை யிடுவது நாகரிகமானதாக இருக்காது. அதேநேரத்தில், ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறேன்...


தற்போது, கட்சி பலமாக இருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஆட்சி யும் அதிகாரமும் தருகின்றன. உண்மை யில், தி.மு.க-வில் ரத்தமும் சதையுமாக இருந்த தொண்டர்களின் பாசப் பிணைப்பு நொறுங்கிப்போய்விட்டது.”


“ஸ்டாலின் மற்றும் அழகிரியின் இந்தக் கருத்துவேற்றுமையினால்தான் தி.மு. க-வுக்கு பாதிப்பு வரும் என்கிறீர்களா?


“நான் அப்படிச் சொல்லவில்லை. சகோத ரர்கள் இருவருக்கும் சண்டை வரலாம். வராமலும் இருக்கலாம். அல்லது மாறன் சகோதரர்களுடன் சண்டை ஏற்பட்டு, சமாதானம் ஆன மாதிரி ஒரே நாளில் கைகோத்து நிற்கலாம்.


ஆனால், இதையெல்லாம் தாண்டி தி.மு.க-வின் அடிப்படை கொள்கைகளும் கோட்பாடுகளும் சிதைந்துவிட்டதுதான் நிஜம். தி.மு.கழகத்தில் பொதுக்குழுதான் உயர்ந்த இடம். அதில் உறுப்பினராவது, தொண்டர்களுக்கு இதய பீடம்.


ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பின ராக இருந்தால்தான் பொதுக்குழு உறுப்பினராகவே ஆக முடியும். இன்றை க்கு அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர். தி.மு.க-வின் பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருக் கிறார்கள்.


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அ.தி. மு.க. மனு கொடுத்தால், ‘நாங்கள் அ.தி. மு.க-வில்தான் இருக்கிறோம்’ என்கிறார் கள். இப்படி தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளையே சிதைத்து விட்டது தான் பாதிப்பை பன்மடங்காக்கப் போகிறது!”


“புதிய சட்டப் பேரவை கட்டடத் திறப்பு விழாவுக்கு சோனியாவும் பிரதமரும் வருகை புரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் கடுமையாக விமர்சித்தீர்களா...?”


“இந்த சட்டமன்றத்தில் 2008-இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்ட ஆபூர்வமான ஒரு முடிவை ஒப்புக்காகக் கூட செயல்படுத்த முனையாதவர் மன்மோகன்சிங்!


லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கொத்துக் கொத்தாக செத்து மடிந்தபோதும், தமிழக சட்டசபையில் அதுகுறித்து கதறல் எழுந்தபோதும்... காதில் விழாததுபோல் இருந்து எந்த சலனமும் காட்டாதவர் சோனியா.


சட்டமன்றத்தின் குரலை மதிக்கத் தெரி யாதவர்களுக்கு, அந்த சட்டமன்றத் துக்கான புதிய கட்டடத்தைத் திறக்கும் அருகதை மட்டும் எங்கிருந்து வந்தது? அதைத்தான் நான் கேட்டேன்!”


“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எம்.எல்.ஏ-வாகி சட்டசபைக் குள் நுழையப் போவதாக ஒரு செய்தி பரவியிருக்கிறதே?”


“தேர்தல் அறிவிப்பு வரட்டும், அப்போது சொல்கிறேன்..!


“கடந்த முறை அ.தி.மு.க. வழங்கிய ராஜ்யசபா ஸீட்டை திருப்பி வழங்கிய நீங்கள், இந்த முறை அ.தி.மு.க-விடம் அந்த ஸீட்டை கேட்கப் போகிறீர் களா?”


“இதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை. எங்கும் பேசவும் இல்லை..! என பேட்டியை முடித்துக்கொண்டார் வைகோ.

ஜூனியர் விகடன் (31-03-2010)

 

நன்றி:ஜூனியர் விகடன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)