உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கண்முன்னாலேயே கருணாநிதி கூட்டத்தின் வன்முறை தாக்குதல்! வைகோ கடும் கண்டனம்!
விவகாரங்கள்: சட்ட ஒழுங்கு, தேசிய
மாவட்டம்: சென்னை - தெற்கு, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கண்முன்னாலேயே கருணாநிதி கூட்டத்தின் வன்முறை தாக்குதல்!
வைகோ கடும் கண்டனம்!
ஜனநாயக உரிமைகள் தி.மு.க ஆட்சியில் நசுக்கப்படுவதற்கு நேற்றையதினம் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக ஆளுங்கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்ட அராஜகம் சரியான அத்தசாட்சி ஆகும்.
ஜனநாயகத்தில் அநாகரிகத்தை நுழைக்கவிடமாட்டோம் என்று முதலமைச்சர் கருணாநிதி உபதேசமும் செய்துள்ளார். ஈழத்தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் தொடர்ந்து அறவழியில் போராடுகிறார்கள் என்ற ஒரேகாரணத்துக்காக காவல்துறையை ஏவிவிட்டு, வழக்கறிஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கும் எழுபது வழக்கறிஞர்கள் கையும் காலும் முறிக்கப்பட்டதற்கும் முதலமைச்சர்தான் பொறுப்பாளி ஆவார்.
இந்த வன்முறை வெறியாட்டம் நடத்திய காவல்துறையினர்மீது நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துத்தான் நேற்றையதினம் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மனித உரிமைகள் மைய வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைப்படி கறுப்புத் துணியைக்காட்டி முழக்கம் எழுப்பி உள்ளனர். ஆனால், முன்கூட்டியே ஆளும்கட்சி திட்டமிட்டு வழக்கறிஞர்கள் அல்லாத குண்டர்களைக் குவித்துவைத்து, நீதிகேட்ட வழக்கறிஞர்களை கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
இந்தச் சம்பவத்தைப் பதியசெய்ய முயன்ற லைவ் இந்தியா என்.டி.டி.வி., இந்து, ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை குறிவைத்துத் தாக்கியதோடு, கேமராக்களையும் உடைத்து நொறுக்கி உள்ளனர்.
பத்திரிகைத் துறையை தொலைக்காட்சித் துறையை மிரட்டுவதற்காகவே இந்தத் தாக்குதலை ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் மீதே காவல்துறை வழக்கும் பதிவுசெய்து உள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறையும் ஆளுங்கட்சிக் குண்டர்களும் மாநகராட்சித் தேர்தலில் நடத்திய வன்முறை வெறியாட்டம் மேலும் மேலும் தொடர்ந்து முதலமைச்சரின் அனுக்கிரகத்தோடு உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கண்முன்னாலேயே நடத்திக்காட்டப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. இத்தகைய காட்டுத்தர்பாரை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதி ஜனநாயகம் பற்றிப் பேசுவது பித்தலாட்டமாகும். சாத்தான் வேதம் ஓதுகிறது.
இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கறிஞர்களைத் தாக்கிய ஆளுங்கட்சி ரவடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஏற்கனவே கேள்விக்குறியாகிவிட்ட காவல்துறையின் நம்பகத்தன்மை அடியோடு நொறுங்கிப் போகும் என எச்சரிக்கிறேன்.
மக்கள் விரோத மனிதநேயமற்ற ஜனநாயகத்துக்கு எதிரான மைனாரிட்டி தி.மு.க. அரசை எதிர்த்து மக்கள் சக்தி திரளவேண்டும்.

