கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறுவழிச் சாலையாக அமைத்திடுவீர் ! மனித உயிர்களைப் பாதுகாத்திடுவீர் ! வைகோ அறிக்கை !

விவகாரங்கள்: பொருளாதாரம், மனித உரிமை, போக்குவரத்து

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Mon, 05/04/2010

கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறுவழிச் சாலையாக அமைத்திடுவீர் !
மனித உயிர்களைப் பாதுகாத்திடுவீர் !

வைகோ அறிக்கை !

சென்னை முதல் குமரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி பேரூராட்சி அக்கரை துவங்கி, புதுச்சேரி கூனிமேடு வரையிலான 115 கி.மீ. சாலை, கட்டணச் சாலையாக, 2001 ஆம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.


தொடக்கத்தில், இச்சாலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக மூன்று ஆயிரம் வண்டிகள் என இருந்த நிலையில், இப்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ஏழாயிரம் என்றும், விடுமுறை நாள்களில் இது மேலும் பலமடங்காக அதிகரிக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் பன்மடங்கு உயரக்கூடும். எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தச் சாலையை விரிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை .


இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து புதிய வாகனம் வாங்கும்போதே, ஆயுள் வரியாக 8 சதவிகிதம் என பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு முறை பயணத்தின்போதும், ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒருமுறை சுங்க வரி வசூலிக்கிறார்கள்.


இவ்வளவு கொடுத்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில், பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் இல்லை. நாள்தோறும் விபத்துகள் உறுதி; உயிர் இழப்புகளும் உறுதி என்ற நிலைமைதான் உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொத்துக் கொத்தாக, குடும்பம் குடும்பமாகப் பலியாகின்ற செய்தியை நாள்தவறாமல் படிக்கும்போதே, வேதனை நெஞ்சைக் கவ்வுகிறது. அந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, அச்சாலையில் பயணிப்போர், மரணபயத்தோடுதான் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பங்கள் பல நடுத்தெருவில் நிற்கின்றன. விலை மதிப்பற்ற மனிதஉயிர்களையும் பலி கொடுத்து பல லட்சம் ரூபாய் வாகன இழப்புடன், வாழ வேண்டிய வயதில் ஊனமுற்றவர்களாகவும் ஆகி, பெற்றோருக்குப் பாரமாகி விடுகின்றனர் இளைய தலைமுறையினர்.


வார விடுமுறை, அரசு பண்டிகை, விடுமுறை நாட்கனில், கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு பசுமையான நினைவுகளைச் சுமந்து செல்ல வேண்டியவர்கள், வாழ்நாள் முழுமையும், தலைமுறைக்கும் துன்பத்தைச் சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. ‘விபத்து நடக்காத நாள் இல்லை; சாவு இல்லாத நாள் இல்லை’ என கிழக்குக் கடற்கரைச் சாலை என்பது, ஆம்புலன்சின் சைரன் ஒலி இடைவிடாமல் கேட்கின்ற மயானப் பாதையாக மாறிவிட்டது.


East Coast Road or East Ghost Road?

என்று கேட்கிற அளவுக்கு உயிர் பறிக்கும் சாலையாக மாறிவிட்டது.


எனவே, கிழக்குக் கடற்கரைச் சாலை நெடுகிலும், மையத் தடுப்புச் சுவருடன் கூடிய, ஆறு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்; பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்திட வேண்டும்.


சுங்க வரி கட்டணச் சாலையை பயன்படுத்தும்போது ஏற்படும் விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு, உயரிய இலவச மருத்துவ சிகிச்சையும் போதிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கிடும் வகையில் ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த வேண்டும்.


உடனடித் தேவையாக, இதுவரை விபத்துகள் நடந்த இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். எச்சரிக்கை அறிவிப்புகளை வைத்திட வேண்டும்.


சுங்கவரிச் சாலை நெடுகிலும் உள்ள முக்கியச் சுற்றுலா பகுதிகளான ஈஞ்சம் பாக்கம், திறந்த வெளி பிரார்த்தனா திரையரங்கம், வி.ஜி.பி., முட்டுக் காடு, எம்.ஜி.எம். பொழுதுபோக்கு பூங்கா, தட்சிண சித்ரா, தமிழக அரசின் படகு இல்லம், கோவளம் தாஜ் பீச் ரிசார்ட், தமீம் அன்சாரி தர்கா, திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், வடநெம்மேலி முதலைப் பண்ணை மற்றும் உலகப் புராதன சின்னமான மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி வரையிலான சாலையில் அதிகவேகத்தைத் தடுக்கும் விதத்தில் அறிவிப்பு பலகைகள், சாலையில் மஞ்சள், வெள்ளை கோடு அடையாளங்கள், சிறிய அளவிலான லப்பர் சாலை பகுதிவாரியாக சிறிய அளவிலான தொடர் வேகத்தடை எச்சரிக்கை விளக்குகள் ஆகியவற்றை, காலம் தாழ்த்திடாமல் உடனடியாக அமைத்து, மனித உயிர்களைப் பாதுகாத்திட வேண்டுகிறேன்.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)