முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து நெருங்கி விட்டது! வைகோ அறிக்கை!
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், மனித உரிமை, தேசிய, புறநகர்
மாவட்டம்: திண்டுக்கல், மதுரை - மாநகர், மதுரை - புறநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து நெருங்கி விட்டது!
வைகோ அறிக்கை!
தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்ற முல்லைப்பெரியாறு அணையில், ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக, 152 உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கி வைத்து, தமிழகத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசனத் தண்ணீரும், இலட்சக்கணக்கான மக்களுக்குக் குடிதண்ணீரும் பெற்று வந்தோம். கேரள அரசு, இடுக்கி அணைக்குத் தண்ணீர் கொண்டு போவதற்காக, முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கச் செய்தது. அதனால், நாம் 80,000 ஏக்கர் பாசன உரிமையை இழந்தோம்.
அதை எதிர்த்துத் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் போராடியதால், ‘142 அடிக்குத் தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம்; பின்னர் 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம்; இதற்குக் கேரளம் எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்று, 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றம் நியாயத் தீர்ப்பை வழங்கியது.
ஆனால் அந்தத் தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசியதோடு மட்டும் அல்லாமல், ‘முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரளத்துக்கு அதிகாரம் உண்டு; இதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது’ என்று, இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுத்து, கேரள அரசு 2006 மார்ச் 17 இல் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தை எதிர்த்த வழக்குதான், தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 33 வாய்தாக்களுக்கு கேரள அரசு இழுத்தடித்துவிட்டு, கடைசியில், ‘இந்த நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது; உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்’ என்று, சூழ்ச்சியாக ஒரு முறையீட்டை வைத்தது. அந்த நியாயம் அற்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே, அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது.
ஏற்கனவே இரண்டு முறை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மிட்டல் குழுவும், பிரார் குழுவும், ‘முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது’ என்று திட்டவட்டமான அறிக்கை தந்து உள்ளன. அதற்குப்பின்பும், அணையின் வலுவைப் பற்றிக் கருத்து அறியவும், புதிய அணை கட்டும் வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது, தமிழகத்துக்கு மிகவும் பாதகமான அறிவிப்பு ஆகும்.
அந்தக் குழுவின் தலைவராக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரைவிட மூத்த நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் விளங்கிய, கேரளத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ் என்பவரை, திட்டமிட்டே கேரள அரசு குழு உறுப்பினராக அறிவித்து இருக்கிறது. மேலும், கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுநிலை தவறி, நியாயத்துக்கு விரோதமாக, ‘முல்லைப்பெரியாறு அணை உடையக்கூடும்; அதனால், பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும்’ என்று, தில்லியில் உள்ள ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வெளியிடச் செய்வது, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மனதில், கேரள சார்பு நிலையை ஏற்படுத்துவதற்காகத்தான்.
‘முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம்’ என்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல கட்டங்களில், கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழப்பது போலவும், துன்பமான காட்சிகளை, கிராஃபிக்ஸ் மூலமாக, குறுந்தகடுகளாகத் தயாரித்து, ஐந்து இலட்சம் சி.டி.க்களை, கேரள அரசே வினியோகித்தது. கொடுமை யாதெனில், முதல் அமைச்சருடைய வலைத்தளத்திலேயே, இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பாகின.
தற்போது, ‘முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம்’ என்ற முழக்கத்தோடு, கைகளில் சம்மட்டி, கடப்பாரைகளோடு, கூட்டம்கூட்டமாக வண்டிப்பெரியாறு பகுதிகளில் ஊர்வலம் நடத்த கேரள போலீஸ் அனுமதிக்கிறது. கடந்த ஒரு வார காலமாக, வண்டிப்பெரியாறு பகுதிகளில் உள்ள திரை அரங்கங்களில், முல்லைப்பெரியாறு அணை உடைவதாகவும், அதனால் எண்ணற்ற மக்கள் மடிவதாகவும் தயாரிக்கப்பட்ட அந்தப் பித்தலாட்டமான படத்தைத் திரையிட்டு, கேரள மக்களிடம் பீதியை, அச்சத்தை, கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலமாக, அணையை மக்களே உடைக்க வேண்டும் என்றவகையில், போராட்டங்களை நடத்த, கேரள அரசு தூண்டுகிறது.
இப்படி நடத்தப்படும் போராட்டங்களை ஆவணங்களாகத் தயாரித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ‘கேரள மக்கள் மிகுந்த கொதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பது போன்ற கருத்தை, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் உருவாக்க, கேரள அரசு மிக வஞ்சகமாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
பூகம்பமே வந்தாலும் முல்லைப்பெரியாறு அணை உடைய வாய்ப்பு இல்லை. ஆனால், கேரள அரசு உடைத்து விடுமானால், 2,17,000 ஏக்கர் பாசனத்தை இழப்பதுடன், 65 இலட்சம் மக்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லாமல் போய், மதுரை மாநகர் உள்ளிட்ட தென் தமிழ்நாடு, தமிழகத்தின் சஹாரா பாலைவனமாக ஆவதை, யாராலும் தடுக்க முடியாது.
இந்தப் பேராபத்து, நம் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்குகிறது.
எனவே, கேரள அரசின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகும் என்பதை, உச்சநீதிமன்றத்துக்கு உணர்த்துகின்ற நிலையை, தமிழகம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
முல்லைப்பெரியாறு உள்ளிட்ட தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கவே, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஓர வஞ்சகமாகச் செயல்படும் மத்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும், மே 28 இல் நடத்த இருக்கும், கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகள் முற்றுகைப் போராட்டத்துக்குத் தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2010