மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா? இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கருணாநிதி அரசு!வைகோ கண்டனம்!
விவகாரங்கள்: மருத்துவம், சட்ட ஒழுங்கு
மாவட்டம்: சேலம், தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தவறுதலாக இடித்துத் தள்ளி விட்டால், சட்டம் சும்மா விடுமா?
இராசிபுரம் நகராட்சி கழிப்பிடம் இடிப்பு.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கருணாநிதி அரசு!
வைகோ கண்டனம்!
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி 4 ஆவது வட்டத்தில், சாமுண்டி தியேட்டருக்கு அருகே நகராட்சியால் கட்டப்பட்ட நவீனக் கழிப்பிடம், 8, 9, 10 மற்றும் 4 ஆவது வட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன் அளித்து வந்தது.
இந்நிலையில் இக்கட்டடத்தை, 18.03.2010 அன்று நள்ளிரவு 1 மணி அளவில், ஜேசிபி இயந்திரத்தின் துணையோடு சிலர் இடித்து அப்புறப்படுத்தி விட்டனர்.
இந்த அக்கிரமச் செயலைக் கண்டித்தும், கழிப்பிடத்தை இடித்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்களும், மறுமலர்ச்சி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., சி.பி.ஐ.(எம்)., சி.பி.ஐ., விடுதலைக் களம், தமிழர் தேசிய இயக்கம், த.மு.மு.க., புரட்சிகர தொழிலாளர் கட்சி, புதிய வாழ்க்கை கட்டடத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும் சாலை மறியல், பிரச்சார இயக்கம், உண்ணாநிலை அறப்போர் என்று தொடர் போராட்டங்களை முன்னின்று நடத்தினர். ஆனாலும், அரசு சொத்தான இந்நவீன கழிப்பிடத்தை இடித்த “உண்மைக்” குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இக்கழிப்பிடத்தை ஒட்டியுள்ள நிலம் ஆளும் கட்சியினரால் ‘பினாமி’ பெயர்களில் வாங்கப்பட்டு உள்ளதாகவும்; அந்த இடத்தை வீட்டுமனைகளாக்கி அதிக விலைக்கு விற்பதற்கு இக்கழிப்பிடம் ஒரு தடையாக இருப்பதாகக் கருதியே, திட்டமிட்டு நள்ளிரவு நேரத்தில் இடித்துத் தகர்த்து உள்ளதாகவும், ஆளும்கட்சி நகராட்சித் தலைவரின் மகனே கழிப்பிடத்தை இடிக்கும் போது உடன் இருந்ததாகவும் நேரில் பார்த்த சாட்சியே, நகராட்சி நிர்வாகத்திடமும், காவல்துறையினரிடமும் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் சொல்லி உள்ளார்.
அதற்குப்பின்னரும், குற்றவாளிகள், அதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. ஏன் ஒரு கண்துடைப்பு விசாரணைகூட நடத்தப்படவில்லை.
உண்மை இவ்வாறு இருக்க, ஜே.சி.பி இயந்திர உரிமையாளர் தாமே தவறுதலாகக் கழிப்பு இடத்தை இடித்துவிட்டதாகக் கடிதம் கொடுக்கச் செய்து ஆளும்கட்சியினர் பிரச்சனையை திசைதிருப்பிவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
இதேபோன்று, வட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசுக் கட்டடங்களை இடித்துத் தகர்த்துவிட்டு, தவறுதலாக இடித்து விட்டேன் என்று சொன்னால் சட்டம் விட்டு விடுமா?
உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஆளும்கட்சியினரும், காவல்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட செயல்தான் ஜேசிபி இயந்திர உரிமையாளர் அளித்த கடிதம் ஆகும்.
‘வேலியே பயிரை மேய்வதைப் போல’ அரசுச் சொத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாக்கத் தவறியதையும், இந்த நிகழ்வில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியதையும், ஆரம்பம் முதலே மக்கள் நலனுக்காக ஆர்வமுடன் அறப்போரில் ஈடுபட்டு உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட போராட்டக்குழு உறுப்பினர்களை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கும் அதிகாரவர்க்கத்தின் செயலையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வருங்காலத்தில் அரசு சொத்துகளுக்கு இதுபோன்ற ஆபத்துகள் வராமல் பாதுகாக்க, இராசிபுரம் நவீனக் கழிப்பு இடத்தை இடித்துத்தள்ளிய உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

