சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் (1)

விவகாரங்கள்: சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், கடிதங்கள், தலைப்பு செய்திகள்

Date: 
Sat, 15/04/2017

 

 

 

 

சிறை சென்றது ஏன்?

வைகோ கடிதம் (1)

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

சென்னை புழல் மத்தியச் சிறை, .தொகுதி 18 ஆம் எண் கொட்டடியில் இருந்து, ஏப்ரல் 11 ஆம் நாள், செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு இதனை எழுதுகிறேன்.

கடந்த காலம் நிகழ்காலத்தில் ஊடுருவுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது. ஆம்; வேலூர் மத்தியச் சிறை நினைவுக்கு வருகின்றது.

மார்ச் 30 ஆம் நாள், சென்னை காமராசர் அரங்கில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் நூற்றாண்டு விழாவை எவரும் கற்பனைகூடச் செய்யாத வகையில் மகோன்னதமாக நடத்தினோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1917 ஜனவரி 17 இல் பிறந்தார். இந்த ஆண்டு ஜனவரி 17 இல் நூறாண்டுகள் நிறைவுற்றதால், திராவிட இயக்கத்தின் சார்பாக நாம் நடத்திய சாதனை, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

அடுத்த சில நாள்களிலேயே, ஏன் சிறைச் சாலைக்கு வந்தேன்? என்பதற்கான விளக்கத்தை நீதிமன்ற வளாகத்திலேயே நான் செய்தியாளர்களிடம் சுருக்கமாகக் கூறினேன். உலக வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனமும், பிறிதோர் இனத்தவரால் படுகொலைக்கு ஆளானால், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், மரண பூமியில் துடிதுடித்துப் பாதிக்கப்பட்ட இனம், நீதிக்குப் போராடுவதையும், ஐம்பது ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் வரலாறு பதிவு செய்து இருக்கின்றது.

நெஞ்சத்தை நடுநடுங்கச் செய்யும் கோரமான படுகொலைகளைத் தமிழ் இனத்தின் மீது ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசு ஏவியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், மூதாட்டிகள் ஈவு இரக்கம் இன்றி அழிக்கப்பட்டனர்.

இந்தக் கொடிய இனக் கொலை புரிந்தோரைக் குற்றக் கூண்டில் ஏற்ற வேண்டாமா? சுதந்திரத் தமிழ் ஈழத்தை நிர்மாணிக்கும் கடமையில் இருந்து நம் கவனம் சிதறலாமா?

2009 ஜனவரி முதல் மே 18 வரை ஈழத் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்ட கொலைகார சிங்கள அரசுக்கு முழு உதவியும் செய்து ஆயுதங்கள் வழங்கி, தனது முப்படைத் தளபதிகளையும் அனுப்பி ஆலோசனைகள் தர வைத்து, அந்த யுத்தத்தைத் தானே இயக்கி வீராதிவீர விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவையும் அழிவையும் ஏற்படுத்திய துரோகத்தைச் செய்தது தி.மு..வும், பா...வும் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கிய இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அல்லவா?

இக்கொடும் துரோகத்தைச் செய்து, தமிழகத்தை ஆண்ட தி.மு.. தலைமைக்கு வரலாற்றில் மன்னிப்பு கிடைக்காது.

ஆனால், அதனை மறக்கடிக்கச் செய்து விட்டு ஈழ விடுதலைக் கனலையும் அணைத்து விடலாம் என்று தி.மு..வின் செயல் தலைமை பகல் கனவு காண்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நான் முன்னெடுத்ததன் மூல நோக்கம் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்குச் செய்த பேருதவிகளை நினைவூட்டுவதற்கும், தி.மு.. தலைமையின் துரோகத்தைச் சொல்லாமலே விளங்க வைப்பதற்கும் தான்!’

திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என்று ஜென்ம வைரிகள் திட்டமிடுகிறார்கள். பா...வை இயக்கும் ஆர்.ஸ்.ஸ். கும்பல் தன் நச்சுக்கரங்களால் தமிழகத்தை வளைக்க முயல்கிறது. இதனை எதிர்கொள்ளக் கூடிய நெஞ்சுரமும் கொள்கைத் தெளிவும் போர்க்குணமும், தியாக சித்தமும் கொண்டுள்ள திராவிட இயக்கத்தின் ஒரே பரிமாணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

அதனால்தான், என் மீது தி.மு.. தலைமை, அதன் ஆட்சிக் காலத்தில் தொடுத்த தேசத் துரோக வழக்கை மக்கள் மன்றத்திற்குக் கவனப்படுத்தி, அதன் வஞ்சக முகத்திரையைக் கிழிப்பதற்காகத் தான் சிறை ஏகினேன்.

குற்றம் சாட்டுகிறேன்

2009 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சென்னை இராணி சீதை மன்றத்தில் கூட்டம். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்ய முனைந்த, செய்த உதவிகளைத் தடுக்கவும் அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து தந்த கோரிக்கை மடல்களையும், அஞ்சலில் அனுப்பிய கடிதங்களையும் இணைத்து, “குற்றம் சாட்டுகிறேன்என்ற தலைப்பில் நூலாக்கினேன். ஆங்கிலத்தில் I ACCUSEஎனும் நூலாக்கினேன். இந்தத் தலைப்பு - பிரெஞ்சு நாட்டின் வரலாற்றில் மாபெரும் எழுத்தாளன் எமிலி ஜோலா பிரெஞ்சு மக்களிடம் பரப்பிய பிரசுரத்தின் தலைப்பு.

 

என் தலையில் இடி விழுந்த சம்பவம் 1993 அக்டோபர் 3-இல் நடந்தது. வைகோவின் அரசியல் உயர்வுக்காக தி.மு.. தலைவர் கலைஞர் கருணாநிதியை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் கொலை செய்யத் திட்டம் என்ற ஊர்ஜிதமாகாத தகவலை மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்ததாகவும், அதனை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்தின் அ.தி.மு.. அரசுக்கு அனுப்பியதாகவும், .தி.மு.. அரசு தி.மு.. தலைவருக்கு அச்செய்தியை அனுப்பி, போலீஸ் பாதுகாப்பு தர முன்வந்ததாகவும் சொல்லி, அந்தத் தகவலை, அக்டோபர் 3-இல் தி.மு.. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியூர் சென்று இருந்த வேளையில், செய்தியாளர்களைக் கூட்டி இச்செய்தியைத் தி.மு.. தலைவர் தந்தார். ‘தன்னைக் கொலை செய்யப் புலிகள் திட்டமிட்டதற்கான காரணம் அத் தகவலிலேயே இருப்பதாகவும்கூறினார்.

என் உலகமே இருண்டு சூன்யமானது. ஓராயிரம் நச்சுப்பாம்புகள் என்னைக் கொத்தியதுபோல் துடிதுடித்தேன். அச்சமயம் ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை தலைமை ஆணையர் திரு. இலட்சுமி நாராயணன் அவர்கள் தினமணிஏட்டில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இராணுவத்தின் விசுவாசமிக்க தளபதியான டிரைபஸ் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி, ஜெர்மனிக்கு இராணுவ இரகசியங்களை அனுப்பியதாகக் குற்றக் கூண்டில் நிறுத்தி, பூதத் தீவில் ஆயுட் கைதியாக சிறை வைத்தனர். அன்று டிரைபஸ் மீது பழி சுமத்தியதுபோல், குற்றமற்ற கோவலன் மீது பழிசுமத்தியது போல் வைகோ மீது பழி சுமத்தப்பட்டுள்ளதுஎன அக்கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார் அப்பெருமகன்.

புகழ்மிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரின் சகோதரர் தான் இப்படி எழுதியவர். அவர் எனக்குப் பரிச்சயமே கிடையாது. அந்த டிரைபசுக்காகப் போராடிய எழுத்தாளன் எமிலி ஜோலா, “உண்மையை ஊருக்குச் சொல்ல வெளியிட்ட பிரசுரம்தான் I Accuse.” அதே சொற்றொடரைத்தான் நான் பயன்படுத்தினேன் எனது நூலின் தலைப்பாக. இதனை அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்டார்கள். “ஒடுக்கப்பட்டவர்களின் விலங்குகளை உடைத்து எறியும் சம்மட்டியாகவும், தமிழ் ஈழ விடுதலைக்கனலைக் காலக் கடைத் தீயாகவும், கவிதைகளில் தொடுத்த இலட்சியக் கவிஞன், மண்ணை விட்டு மறைந்தாலும், தனது படைப்புகளால் வாழ்கின்ற கவிஞர் இன்குலாப் அவர்கள் நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை எனக்குக் கிடைத்த பட்டயம் ஆகும்.

 

திருவாளர் தேசியம்பிள்ளை தொடுத்த வழக்கு

இந்திய அரசு செய்த துரோகத்தை - ஆணித்தரமான ஆதார சாட்சியங்களுடன் என் உரையில் வெளிப்படுத்தினேன். “தனி நாடு கேட்ட இயக்கத்தில் வளர்ந்தவர், தன்னைத் தீவிரவாதியாகக் காட்டிக் கொண்ட கலைஞர் கருணாநிதி2009-இல் புதிய தேசியம்பிள்ளை ஆகிவிட்டார். சர்தார் வல்லபாய் படேலுக்குக் கூட ஏற்பட்டு இருக்க முடியாத தேசபக்த வெறியுடன், இந்தியத் துணைக்கண்டத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று வெகுண்டெழுந்த வேட்கையால் என்மீது தேசத் துரோகிஎனக் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்க நான் முயன்று விட்டதாகவும், இறையாண்மையைத் தகர்க்க நான் போர்க்கோலம் பூண்டு விட்டதாகவும் என் மீது வழக்கு. ஆபத்தான பிரிவு இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் உயிர்ச் சேதமானால் மரண தண்டனையும், இல்லையேல் ஆயுள் தண்டனையும் வழங்கும் குற்றப் பிரிவு 124-A என் மீது வழக்கு.”

என்னுடைய உரையைக் காற்றலைகள் கொண்டு சென்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கல்லறையில் எதிரொலிக்கச் செய்தால், அக்கல்லறைகள் எனக்கு வாழ்த்துச் சொல்லும். நடேசனாரின் குரல், பிட்டி தியாகராயரின் குரல், டி.எம். நாயரின் குரலின் எதிரொலி தான் வைகோவின் குரல்.

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடந்தது என்ன?” என்று நான் ஆற்றிய உரைக்காக இதே கொடிய சட்டப் பிரிவுகளில் தேசத் துரோக வழக்கினை என் மீது ஏவிய பெரிய மனிதரும் இதே கலைஞர் கருணாநிதி தானே!”

அந்த வழக்கு நடந்தது. நாடு போற்றும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் கூட கவலைப்பட்டார். நமது சட்டத்துறைச் செயலாளர் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தேவதாஸ்தான் அந்த வழக்கை நடத்தினார். நீதிபதியின் அனைத்துக் கேள்விகளுக்கும் நான் ஆமாம்என்றுதான் பதில் தந்தேன். மரண பூமியில் தேசியத் தலைவரிடம் பயிற்சி பெற்றவன். மரணத்தை மிக அருகில் கண்டு திரும்பியவன். காயம் பட்ட 37 விடுதலைப்புலிகளை என் வீட்டில் வைத்து என் வீரத் தாய் மாரியம்மாளும், வீரத் தம்பி வை. ரவிச்சந்திரனும் பராமரித்து, அதனால் ஓராண்டு சிறை பெற்றவன் என் தம்பி. இந்த வழக்கிலும் நான் பேசியது எதையும் மறுக்கப் போவது இல்லை. அதனால் சில ஆண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வந்தாலும் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னேன்.

இப்போது சிறை புகுந்தது ஏன்?

இப்போது நான் சிறைக்கு வந்ததன் நோக்கம் இதுதான். “கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். கட்சி அரசியலைக் கடுகு அளவும் கூறாமல் தமிழ் ஈழம்பற்றிப் பேச வேண்டும். திலீபன்களைத் தயாரிக்க வேண்டும் - தங்களை அழிக்க அல்ல; ஈழ விடுதலை வேள்வியை வளர்க்க. முத்துக்குமார்களை இளையோர் நெஞ்சில் நிறுத்த வேண்டும். இரண்டு தேசத் துரோக வழக்குகளில் என் உரைகளையும், நீதிமன்றப் பதில்களையும் சிறு பிரசுரங்களாக்கி இளைய தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவன்தான் இலட்சியத்தில் வெற்றி பெறுவான்.”

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விபரமே எனக்கு அண்மைக்காலம் வரை தெரியாது; நமது தேவதாசுக்கும் தெரியாது.

உங்களில் சிலருக்குத் தெரியுமே? நான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. 2008-க்குப் பின்னர், நான் அமெரிக்கா சென்று என் அருமைப் பேத்திகளைக் காண ஆசைப்பட்டாலும் எனக்கு விசா கிடையாது. சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரியாக 2008, 2009-இல் இருந்த ஹம்சா (தற்போது பிரிட்டனில் தூதராக உள்ளான்) நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று ஒரு கோப்பினைத் தயாரித்தான். கிளிநொச்சியில் புலிகளின் தளம் வீழ்த்தப்பட்டபின் சிங்கள இராணுவம் கைப்பற்றிய ஆவணங்களில், 1989 பிப்ரவரியில் நான் தலைவர் பிரபாகரன் அவர்களோடு இருந்த புகைப்படங்கள், பிஸ்டலைக் கையில் ஏந்திக் குறிபார்க்கும் புகைப்படம் உட்பட, வீடியோக்கள், எனது புலிச் சீருடை, அனைத்தையும் சேர்த்து நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று அனைத்து நாட்டுத் தூதரங்களுக்கும் அக்கோப்பினை அனுப்பி விட்டான்.

அதுகுறித்து அமெரிக்க அரசின் அதிகாரிகள் என்னிடம் இரண்டரை மணி நேரம் 2009-இல் விளக்கம் கேட்டனர்.

பாஸ்போர்ட் கிடையாது; பயணம் செல்லத் தடை

1989-இல் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அங்கம் அல்ல. ஆனால், அதன் தீவிரமான ஆதரவாளன் என விளக்கினேன். 1989-க்குப் பின் பலமுறை அமெரிக்கா சென்று உள்ளேன். 1998-இல் அமெரிக்க அரசின் அழைப்பால் சர்வதேசப் பார்வையாளராக 45 நாட்கள் அமெரிக்காவில் பங்கேற்றவன் என்று கூறியும் எனக்கு விசா கொடுக்கப்படவில்லை. கனடா மறுத்து விட்டது; சுவிட்சர்லாந்து இரண்டு முறை மறுத்து விட்டது; பிரிட்டன் இரண்டு முறை மறுத்து விட்டது. 2008-இல் நார்வே செல்ல அன்றைய அமைச்சர் எரிக் சோலேம் தலையிட்டதால் விசா கிடைத்தது. 2011-இல் பெல்ஜியம் செல்லத்தான் விசா கிடைத்தது. அதனால்தான் பிரெஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த ஈழத் தமிழர் மாநாட்டில்சுதந்திரத் தமிழ் ஈழம் காண பொது வாக்கெடுப்பு என்ற தீர்வினை முதன்முதலாக நான் பிரகடனம் செய்தேன்.” அதற்கு முன்னர் இந்தத் தீர்வினை எவரும் முன் வைத்தது இல்லை.

மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்கள் நடத்திய உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க இரண்டாம் முறை சென்றபோது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்தே என்னைத் திருப்பி அனுப்ப அந்த அரசு முனைந்ததை முன்னரே கூறி இருக்கின்றேன்.

இம்முறை ஜெனிவாவுக்கு நான் வந்தால் மிகவும் பயன் தரும் என்று தம்பி திருமுருகன் காந்தி கூறினார். ‘எனக்கு விசா கிடைக்காதுஎன்றேன். அந்தத் தம்பி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மே 17 இயக்கத்தின் பிரதிநிதியாக ஜெர்மனியின் பிரெமன் தீர்ப்பு ஆயத்தில் சாதித்தது போல் இம்முறை ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலுக்குச் சென்று கடமை ஆற்றினார். எனது ஆங்கில உரையை வீடியோவில் பதிவு செய்து அங்கே ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார்.

இம்முறை பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பித்த போதுதான் இப்படியொரு தேசத் துரோக வழக்கில் என்மீது 2010 ஆம் ஆண்டிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட செய்தியே தெரிய வந்தது.

சிறைவாழ்க்கை

சிறை வாழ்க்கை எனக்குப் பழகிப் போனதாகும். இங்கே இந்தத் தொகுப்பில் 28 பேர் சிறைவாசிகள் என்னையும் சேர்த்து. 17 பேர் ஓரளவு மன நோய்க்கு ஆளானவர்கள். அவர்கள் சாப்பிடும் நேரம் தவிர முழு நேரமும் கொட்டடியில் பூட்டப்படுகின்றார்கள். வேலூர் சிறை அறையை விடச் சிறிய அறைதான். ஒரு கட்டில் இருக்கிறது. எழுதுவதற்காக சிறிய மேசை, நாற்காலி உள்ளது. அறையில் டி.வி. கிடையாது. தற்போது சிறைச்சாலைகளில் அனைவருக்கும் மின்விசிறி தரப்பட்டு விட்டது. சிறையில் நான் முட்டை சாப்பிடுது இல்லை. மூன்று நாள் அசைவம் அனுமதி உண்டு. அதையும் நான் தவிர்த்து விட்டேன். காலையில் உப்புமா. பகலில் சோறு சாம்பார், ஒரு கூட்டு, ரசம், மோர். இரவில் மூன்று சப்பாத்தி. பழகிவிட்டது.

வேலூர் சிறை அறையை விட சிறிய அறைதான்.

தொலைக்காட்சி கிடையாது.

நான் முட்டை சாப்பிடுவது இல்லை. மூன்று நாள் அசைவம்; அனுமதி உண்டு.

அதையும் தவிர்த்து விட்டேன்.

மாலை 6 மணிக்குக் கொட்டடியைப் பூட்டிக் காலை 6 மணிக்கு திறப்பார்கள். நான் 50 நிமிடம் நடைபயிற்சி செய்வேன். இத்தொகுப்பு சுற்றுச்சுவர் ஓரமாகவே நடக்கலாம். இரண்டு ஈரானியர்கள். ஒருவர் ருசியாக்காரர். இரண்டு பேர் பம்பாய் வாசிகள். நெல்லை மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வன்னிக் கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நம் இயக்கத்தின் தூணாக விளங்கும் பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமியின் நெருங்கிய உறவுக்கார இளைஞர் அமிர்தராஜ் - சிறப்புக் காவல்படையில் பணியாற்றுகிறவர் - டில்லி திகார் சிறைக் காவலராக 5 ஆண்டுகள் பணி - பின்னர் சென்னைக்கு மாற்றம். “மது போதையில் நால்வர் (காவல்துறையைச் சேர்ந்தவர்கள்) இந்தத் தம்பியைக் கொலை செய்ய முயன்றபோது அவர்களை எதிர்த்துப் போராடியதில் ஒருவன் இறந்து விட்டான். கொலைக்குற்றம் சாட்டப்பட்டதால் மனம் உடைந்த அந்தத் தம்பிக்கு தைரியம் ஊட்டியுள்ளேன்.

சிறைக்கு யாரும் என்னை நேர்காணல் பார்க்க வர வேண்டாம் என்று நமது அவைத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் கூறி விட்டேன். ஒருவரைப் பார்த்தால் அனைவரையும் பார்க்க வேண்டும். வருகிறவர்களுக்கும் சிரமம். என் கொட்டடிக்கும் நேர்காணல் அறைக்கும் நான் அலைவதற்கே நேரம் போதாது. தினமும் மாலை 4.30 மணிக்கு நமது சட்டத்துறைச் செயலாளர் உள்ளிட்ட நான்கு வழக்கறிஞர்கள் பெயரை மட்டும் எழுதிக் கொடுத்து உள்ளேன். நேர்காணலுக்கு - தகவல் தெரிந்து கொள்ள - அனுப்பி வைக்க.

சாத்தான் வேதம் ஓதுகிறது!

தமிழ்நாட்டு அரசியலில் பல காட்சிகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் அனைத்திந்திய பார்வைக் களம் ஆயிற்று. அண்ணா தி.மு..வில் இரு பிரிவினர் தங்கள் தரப்பு வாதங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்தனர். புரட்சித்தலைவர் தேர்ந்தெடுத்த இரட்டை இலைச் சின்னம் யாருக்கு உரியது என்பதே மையக் கேள்வியாகும். நாம் எந்தத் தரப்புக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை.

இடைத்தேர்தல் குறித்து நான் ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். தமிழக அரசியலைப் போல் கேடுகள் மலிந்த நிலை வேறு எங்கும் இல்லை. நல்லவர்களையும், நாணயமானவர்களையும், நேர்மையானவர்களையும் களங்கப் படுத்தி - அரசியலில் அனைவரும் அயோக்கியர்கள் என்ற கருத்தைத் திணிக்க அக்கறையுள்ள சக்திகளை சமூக வலைதளம்என்ற இன்றைய காலக்கண்ணாடி பிரதிபலிக்கின்றது.

நல்லவன்என்று கருதப்படுவோனையும் கேடானவன் என்று காட்ட முயலும் வக்கரித்த மனம் கொண்டோர் ஒரு பக்கம்; எந்தக் கவசம் ஒருவனைக் காக்கிறதோ அதனையே உடைத்து விட்டால் பின்னர் களத்தில் வீழ்த்துவது சுலபம் என்ற கணக்குப் போட்டுப் பணத்தை வாரி இறைத்து, “லைக்குகள், “மீம்ஸ்கள் போடுவதற்கே தனித்திட்டம் தீட்டிச் செயல்படும் வீணர் கூட்டம் ஒரு பக்கம்.

காவேரி மருத்துவமனைக்குத் தன் தகப்பனைப் பார்க்க வருவான் என்று ஊகித்து இரண்டு நாட்கள் அவசியம் இல்லாத நிகழ்ச்சிகளை நாமக்கல்லிலும், நாகையிலும் (அண்ணன் கோ.சி. மணி அவர்களுக்கு இரங்கல் கூட்டம் அவர் இறுதிச் சடங்கில் நடத்த வேண்டாம் என்று தடை செய்தவர்) ஏற்பாடு செய்து கொண்டு, ‘வைகோ வருவான்; செருப்பால் அடியுங்கள், கல்லால் அடித்துத் துரத்துங்கள்என்று ஓரிரு கைக்கூலிக் கைத்தடிகள் மூலம் சில போக்கிரிகளைக் கொண்டு அராஜகம் நடத்த வைத்து விட்டு, அடுத்த பத்தாம் நிமிடம் வருத்த அறிக்கைதரும் மேதாவி கட்டளையிட்டால் புத்திரன்கள்முகநூல், டுவிட்டரில் விஷத்தைக் காக்குவார்கள்

சிறுதாவூர் பங்களாவில் இரண்டு கன்டெய்னர்கள், கோடானுகோடி கள்ளப் பணம். கலெக்டர், ஸ்.பி.யை நம்பாதே - மத்திய அரசே, தேர்தல் ஆணையமே உடன் நடவடிக்கை ஏன் இல்லை?” என்று முதல் குரல் எழுப்பியவன் இந்த வைகோ என்பதை நாடு அறியும். காசு வாங்கிக் கொண்டு எழுதும் மீம்ஸ்பாய்சுக்குப் புரியாது.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு (Secret Ballot) என்பது ரகசிய வாக்கு அல்ல என்று கடந்த கால நிகழ்வுகளை, நாடாளுமன்ற நிகழ்வுகளை நிரல்படுத்தி அறிக்கை தந்தேன்.

இந்த உண்மை தெரிந்தும் பல அறிவு ஜீவிகள் இதுபற்றி தொலைக்காட்சிக் கச்சேரிகளில் வாய் திறக்கவே இல்லை.” தோட்டத்தில் இருந்து மேலும் பணம் வந்தது போலும்என்று புதல்வன்நஞ்சைக் கொட்டினான். யாராவது கண்டித் தார்களா? வைகோ ஏன் இப்படிச் சொன்னார் என்று வாதிடும் உட்கட்சி ஜனநாயகம் நமது கட்சிக்குப் பெருமை தானே?” நாலாத் திசைகளில் இருந்தும் என் மீது பாயும் நச்சுப் பாணங்களை தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் எனக் குண்டு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

சரி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு வருவோம். “அதிமுக தரப்பும், திமுக தரப்பும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்தன என்ற செய்தி தினத் தந்திஏட்டிலும், ‘தினமலர்ஏட்டிலும் பிரசுரமாயின. அதிமுக தரப்பு ஓட்டுக்கு 4000 ரூபாய், திமுக தரப்பு ஓட்டுக்கு 2000 ரூபாய் என்று தினமலரிலேயே செய்தி.

“4000 ரூபாய்தந்ததாகச் சொல்லப்படும் அதிமுகவினருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை என்போர்ஸ்மென்ட்அதிகாரிகள் அமைச்சர் வீட்டுக்குப் பாய்ந்தனர். பல இடங்களில் சோதனை. தங்களுக்குக் கிடைத்தாக சொல்லும் சாட்சியங்கள் - விசாரணை : இடைத் தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் அதிரடி - அதன் உண்மை என்ன என்ற ஆராய்ச்சிக்கு நான் செல்ல இயலாது.

திமுக தரப்பு 2000 ரூபாய் என்றார்களே, அந்தப் பணம் கோடிகள் கொண்ட பணம் எங்கிருந்து புறப்பட்டது என்று துப்பு துலக்க அதே என்போர்ஸ்மெண்ட் துறை முயன்றதா?’ ஏன் இல்லை.”

வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக பணம் கொடுப்பது என்பது புதிய செய்தி அல்ல. தமிழக வாக்காளர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் பழகிப்போன அனுபவத்தால் கண்ட செய்தி ஆகும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக திமுக போலீசைக் கொண்டே வீடு வீடாகப் பணம் விநியோகித்தது.” 15000 வாக்குகளில் நான் தோற்றேன். அப்போது திமுக ஆட்சி. 2014 அதே தொகுதியில் அதிமுகவும், திமுகவும் வீடு வீடாக பணம் விநியோகத்தன. நான் தோற்றேன். திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

திருவாளர்திமுக செயல் தலைவர் புதிய உபதேசியாக புறப்பட்டு இருக்கின்றார். தயாரித்துக் கொடுக்கப்படும் அறிக்கைகளை, செய்தியாளர்கள் சந்திப்புக்கும் சொல்ல வேண்டிய பதில்களை திருவாய் மொழியாக அருள்கிறார்.

இடைத் தேர்தல் நடந்திருந்தால் வெற்றி முகட்டில் கொட்டி முழக்கி இருப்பாராம்!”

மந்திரிவீட்டில் ரெய்டு என்பது தமிழ் நாட்டுக்கே கேவலம். அவமானம், ஊழல் பண விநியோகத்தால் தமிழகம் தலை குனியும் வெட்கம் - அனைத்து மந்திரிகளையும் விட்டு வைக்கக்கூடாதுபொரிந்து தள்ளுகிறார்.

தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பல் ஏற்றிய தி.மு..,

செயல் தலைவர் அல்லவா? அவர் உதிர்க்கும் ஒவ்வொரு முத்துக்களையும் பக்கம் பக்கமாக்கும் நடுநிலைஏடுகள் தங்கள் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் இருக்கும் போதேஇன்னொரு பக்கம் CBI விசாரணை நடந்ததே? தலைவர் குடியிருக்கும் வீட்டுக்கு உள்ளேயே CBI விசாரணை நடந்ததே? இதை விட வெட்கக்கேடும் அவமானமும் இருக்க முடியுமா?

இதெல்லாம் போகட்டும். “தமிழ்நாட்டில் வாக்குகள் விலைக்கு விற்கப்படுகின்றனஎன்ற தகவலை தனது அறிக்கையில் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனில் உள்ள ஸ்டேட் டிபார்ட்மெண்ட் எனப்படும் அரசியல் கேந்திர மையத்துக்கு அனுப்பி வைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட வாசகம் THIRUMANGALAM FORMULA” திருமங்கலம் பார்முலா. தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பல் ஏற்றி அட்லாண்டிக் கடல் தாண்டி அனுப்பி வைத்த அசகாய சூரத்தனம் திமுக தலைமைக்குத்தானே வரும்? இதனை துக்ளக்தலையங்கம் கூடச் சுட்டியுள்ளதே?

திருமங்கலம் தொகுதியில் 2006 சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வென்றது. என் ஆரூயிர்ச் சகோதரர் நினைவில் வாழும் தியாக வேங்கை வீர.இளவரசன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2008 ஆம் ஆண்டு இதே புழல் சிறையில் அன்றைய தேசத்துரோக வழக்கில் அடைபட்டு இருந்தேன் - அக்டோபர் 27 ஆம் தேதி என்னை நேர்காணலில் சந்தித்த வீர.இளவரசனிடம், ‘அக்டோபர் 30 இல்பசும்பொன்னுக்கு தேவர் திருமகனார் புகழ் விழாவிற்கு சென்று வாருங்கள்எனச் சொல்லி அனுப்பினேன். அவ்விதமே சென்று வந்தார்.

நவம்பர் 4 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். அந்த ஆண்டு ஜூலை 12 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவைச் சந்தித்து Yes; We can’ என்று அவர் பற்றி நான் எழுதிய புத்தகத்தில் அந்த சொற்களையே அவர் எழுதி கையொப்பம் இட்டதும் உங்களுக்கு நினைவு இருக்கும். நவம்பர் 5 ஆம் தேதி பகலில் வானொலியில் பாரக் ஒபாமா வெல்கிறார்என்ற தித்திப்பான செய்தியால் மகிழ்ந்தவன் நான்.

வீர. இளவரசன் மறைவும், திருமங்கலம் இடைத்தேர்தலும்

மாலை 5 மணிக்கு வழக்கறிஞர் தேவதாஸ் குழுவினரிடம் இத்தேர்தல் முடிவு குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது, “பேரதிர்ச்சியாக இளவரசனுக்கு மாரடைப்பு. நிலைமை மோசம். மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைஎன்று புழல் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜன் தகவல் அனுப்ப, “உள்ளம் உடைந்து நொறுங்கினேன்.” இரவெல்லாம் தூக்கம் இன்றித் தவித்தேன். நீதிமன்றத்தில் இருந்து மீனாட்சி மிசன் சென்றேன்.

பெயிலிலா?” என்று எழுதிக் காட்டினார் இளவரசு. ‘இல்லை, நீதிமன்றமே அனுப்பி விட்டதுஎன்று கூறினேன். மருத்துவக் கோப்புகளுடன் சென்னை வந்து டாக்டர் தணிகாசலம் அவர்கள் ஆலோசனை பெற்ற அன்று இரவே இளவரசு காலமானார். அந்தத் தொகுதிக்குத்தான் இடைத்தேர்தல்.

அதிமுக பொதுச்செயலாளர் சகோதரி ஜெயலலிதா, “நாங்கள் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்என்று கடிதம் அனுப்பினார். இசைந்தேன். ‘தேர்தல் களத்தில் நீங்கள் முழு அளவில் எங்களுக்கு உதவ வேண்டும்என்றார். அப்படியே களத்தில் நின்றேன். போலீஸ் உதவியுடன் திமுக வாக்காளர்களுக்கு வீடு வீடாகப் பணத்தை வாரி இறைத்தது.

தொகுதி முழுக்க அமைச்சர்கள் முற்றுகை. தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் அதிமுவும் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தரப்போகிறார்களாம்என்ற செய்தியைத் திமுகவே பரப்பியது. அதிகாலை 4 மணி அளவில் தொகுதி நெடுகிலும் அண்ணா திமுகவினர் திமுக குண்டர்களால் கொடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் மண்டை உடைந்தது. எம்.எல்..க்கள் பலர் காயமுற்றனர். பல் உடைந்தோர், கரம் ஒடிந்தோர் பலர். கார்கள் நொறுக்கப்பட்டன. மேலூர் எம்.எல்.. சாமி கை ஒடிக்கப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கும் அராஜகம். திமுக நடத்திய ரணகளம். அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் முக்கியமானவர்கள் யாரும் இல்லை. எங்கும் அச்சம் பீதி. நான் 20 கார்களில் தோழர்களுடன் அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு விரைந்தேன். மாலை வரை அங்கேயே இருந்தேன். மாலை 5 மணிக்கு பிரச்சாரத்துக்குப் புறப்பட்டேன். “எந்த இடம் திமுக ரௌடிகளின் கேந்திரம் எனப்பட்டதோ? அங்கே கொண்டுபோய் பிரச்சார வேனை நிறுத்தினேன்.

வேன் மீது ஏறி நின்று, “திமுக காலிகளைக் கடுமையாக எச்சரித்தேன். கொலைகாரர்கள் கூட்டமே என்றேன்; ஒலிபெருக்கியில். என்னைத் தாக்குவதற்கு தயாராக ஆயுதங்களுடன் வந்தனர் திமுகவினர். நமது சகோதரர்கள் அனைவர் கைகளிலும் திருப்பாச்சேத்தி அரிவாள் மின்னியது. பின்வாங்கிப் போனார்கள் திமுகவினர். அன்று மட்டும் 42 இடங்களில் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு இடத்திலும் அதிமுக எம்.எல்..க்கள், முன்ணியினர், நிர்வாகிகள் என்னைக் கட்டித் தழுவி கண்களில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.” கை கால் முறிக்கப்பட்ட அதிமுகவினர் அனைவரையும் மருத்துவமனைகளில், அவர்களது வீடுகளில் போய்ப் பார்த்துத் தைரியமும், ஆறுதலும் கூறினேன். மத்தியச் சிறைச்சாலையில் மேலூர் சாமி எம்.எல்..வைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.

திருமங்கலம் நிறைவுப் பிரச்சாரக் கூட்டத்தில் சகோதரி ஜெயலலிதா எனக்கு நன்றி சொன்னார்.

கடைசி இரண்டு நாட்கள் திமுக பண விநியோகம் உச்சகட்டத்தில் நடந்தது. ஓட்டுக்கு 5000 ரூ தந்தனர். அத்துடன் மிக்சி, கிரைண்டர், வாசிங் மெசின்களை வாரி இறைத்தனர். பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றியை விலைக்கு வாங்கியது தி.மு..”

எனது கேள்வி, “திமுக அமைச்சர்கள், முன்னணியினர் மீது மத்திய அரசு நிதித் துறை அமைச்சகம் பாய்ந்ததா? ஆர்.கே. நகரில் பண விநியோகம் மட்டும் தான் - அதுவும் அதிமுக மீது மட்டும் தான் குற்றச்சாட்டு. ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலில், “திமுக ஓட்டுக்களை 5000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது மட்டும் அல்ல, எதிர்க்கட்சியான அண்ணா திமுகவினரை கொடூரமாகத் தாக்கி, கைகளை, மண்டையை உடைத்தார்களே? இப்படி ஒரு அராஜகம் தமிழ்நாட்டில் எந்த இடைத்தேர்தலிலாவது நடந்தது உண்டா?”

இன்றைய செயல் தலைவர் அப்போது வேறு கிரகத்தில் வாழ்ந்தாரா?” அவரும் சேர்ந்துகொண்டுதானே அட்டூழியம் நடத்தினார்? அதன் தொடர் விளைவுதான் சென்னை மாநகராட்சித் தேர்தல். வாக்குச் சாவடிகளுக்குள் திமுகவினர் ஆயுதங்களுடன் புகுந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களையும், நியாயம் கேட்ட அதிகாரிகளையும் தாக்கி, வாக்குச் சாவடிகளையே கைப்பற்றிக்கொண்டு வெற்றிஎன்றனரே? அதனால்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நரகத்தை சென்னை மாநகரத்திற்கே திமுக கொண்டு வந்ததுஎன்று சாட்டையடி தந்தனர். அந்தத் தேர்தலையும் ரத்து செய்தனர்.

இவ்வளவு அராஜகத் தாண்டவம் ஆடச் செய்த கூட்டத்தின் செயல் தலைவர்’ ‘ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தால் தமிழ் நாட்டின் மானமே போய்விட்டதுஎன்கிறார். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டுமாம். உபதேசம் செய்கிறார். இவரைப் போன்றவர்களுக்காகவே ஒரு சொற்றொடர் அமைந்துள்ளது. ஆம், “சாத்தான் வேதம் ஓதுகிறது.”

எப்படி மீள்வது?

தமிழ்நாட்டில் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் ஊழல் பணத்தால் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன என்பது ஊர் அறிந்த உண்மை. இதிலிருந்து எப்படி மீள்வது?

தலைமைத் தேர்தல் ஆணையர்களாக சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. கோபால்சாமி அவர்கள் ஆலோசனைகளையும், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கருத்துக்களையும் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பரிசீலனை செய்து, “இந்தப் புதைகுழியில் இருந்து தமிழகத்தை மீட்க முயல வேண்டும்.

முன் ஏர் நாம்தான்

கண்ணின் மணிகளே, உங்கள் கடமை என்ன?

தமிழகத்தின் எதிர்காலம் மிகுந்த அச்சத்தையும், கவலைகளையும் தருகின்றது. அண்டை மாநிலங்கள் நதிநீர்ப் பிரச்சினைகளில் சர்வதேச நெறி, விதிமுறைகளுக்கும் நீதிக்கும் புறம்பாக வஞ்சிக்கின்றன. மத்திய அரசும் பச்சைத் துரோகம் செய்கிறது. “வடதிசை வென்ற தமிழ்குலத்தின் வீரப் புதல்வர்களான விவசாயிகள் நீதி கேட்டுத் தலைநகர் டில்லியில், இதுவரை அந்நகர் கண்டிராத அறப்போர் நடத்துகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியாருக்கு இவர்களுக்கு பேட்டி கொடுக்க மனம் இல்லை. அகந்தை, ஆணவம், ‘வெறும் 200’ அரை நிர்வாணத் தமிழர்கள்தானே என்ற திமிர். கோடானு கோடி விவசாயிகளின் பிரதிநிதிகள்தான் வீரப்போராளி அய்யாக்கண்ணு தலைமையிலான உழவர்கள். அவர்களை அறப்போர்க்களத்தில் சந்தித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவர்களுடன் இருந்தேன். நாளை முதல் தமிழகத்தில் இருந்து தலைவர்கள் இங்கு படையெடுத்து வருவார்கள் என்று சொன்னேன். அப்படியே நடந்தது. எதற்கும் ஒருவன் Sapprsand minors ஆக முன் ஏர் பிடிப்பது பாக்கியம்தானே!

மத்திய அரக்கு என்ன மமதை இருந்தால் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஜெம் எனும் கம்பெனி (பா...காரர்கள்)யுடன் ஒப்பந்தம் போடுவார்கள்?

ஒரு நாளேட்டில், “ஹைட்ரோ கார்பனைஆதரித்து முழுப்பக்கக் கட்டுரை வந்து உள்ளது. எழுதிய மேதாவி, “போராடுகிறவர்களுக்கு, ஹைட்ரோ கார்பன் பற்றி ஒன்றும் தெரியாதுஎன்று தனது அறியாமையைக் கொட்டி இருக்கிறார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் எரிவாயு அனைத்தையும் ஒரே வளையத்துக்குள் சட்டம் ஆக்குகிறது மத்திய அரசு.

மீத்தேன் எரிவாயுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுடன் தமிழ் நாட்டில் போர்க்குரல் எழுப்பியவன் வைகோ. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினான் வைகோ. கட்சிக் கொடி கட்டாமல், வாகனப் பிரச்சாரம் செய்தவன் வைகோ. போராட்டம் நடத்தியவன் வைகோ. 158 விவசாய சங்கத்தினர்களைக் கொண்ட கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியவனும் இவனே.

அதோடு மட்டுமா? தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்து மீத்தேன், சேல் எரிவாயுத் திட்டங்களை தற்காலிகமாக விரட்டிய வனும் அடியேன்தான்.

இருட்டடிப்பு செய்யும் கட்டுரையாளர்கள்

மதுவிலக்குப் போராட்டமாகட்டும், தமிழர் நலன் காக்கும் எந்தப் போராட்டமாகட்டும் நமது பங்களிப்பை ஏடுகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, ஆணித்தரமான ஆதாரம் கொண்ட நம் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வானேன் ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறவர்கள்?

மது ஒழிப்பு பற்றி தமிழ் இந்துஏடு பயனுள்ள கட்டுரைகளைப் பிரசுரித்தது. ஆனால், அதனை எழுதிய நண்பருக்கு வைகோஎன்ற பெயர் எட்டிக் காயாகக் கசக்கிறது. நான் பொருட்படுத்தவில்லை.

இன்றைய செய்திதானே நாளைய சரித்திரம்? வரலாற்றில் உண்மைகளை மறைக்கலாமா? புதைக்கலாமா? “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்என்பர். அந்த உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது?

ஒரு மாநில அரசே மதுவைத் திணித்தாலும் ஒரு ஊராட்சித் தீர்மானம் மதுவை ஒழிக்கும் என்பதை கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை ஒழிப்பு பிரச்சினை நிரூபிக்கும். என் வீரத்தாய் மாரியம்மாள் தனது 100ஆவது வயதில் 2015 ஆகஸ்டு 1 ஆம் நாள் டாஸ்மாக் கடையை அகற்ற நடத்திய உண்ணாநிலை அறப்போர். மறுநாள் கடை உடைப்பு - எங்கள் மீது காவல்துறை தாக்குதல் - என் மீதும், ஊராட்சிமன்றத் தலைவர் தம்பி வை.ரவிச்சந்திரன் மீதும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட 56 பேர் மீது கொலை முயற்சி வழக்கு 307 பிரிவில். 60 ஆம் நாள் எனது தியாகத்தாய் மாரியம்மாள் மறைந்தார். உயிர் பிரியும்போது அவர் விழிகள் என்னைத் தேடியிருக்கும். நான் அங்கில்லை.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தீர்மானமே செல்லும் - மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும்என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் நாகமுத்து, நீதியரசர் முரளிதரன் ஆகியோரின் வரலாற்றுத் தீர்ப்பால் மாநில அரசின் மூக்கு உடைபட்டது. இத்தீர்ப்பை எதிர்த்த தமிழக அரசு டெல்லியில் புகழ் பெற்ற பெற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. அதுவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.ஸ்.கேகர், நீதிபதி சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிசன் கௌல் (சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) அமர்வில் அறிமுக நிலை யிலேயே தமிழக அரசின் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இந்தியச் சட்ட வரலாற்றிலேயே திருப்பு முனையான தீர்ப்பு - ஒரு மாநில அரசின் அதிகாரத்தை நிராகரித்து ஊராட்சிமன்ற அதிகாரத்தை நிலைநாட்டிய தீர்ப்பு. “மதுக்கடைகளை அரசு மூடாவிட்டாலும், உள்ளாட்சி அமைப்புகள் மூடலாம்எனத் தமிழ்நாட்டில் நிரந்தர மது ஒழிப்புக்கு நுழைவாயில் அமைத்தது கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றம்தான்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு நாளேடாவது இதனைப் பாராட்டியதா? தலையங்கம் தீட்டியதா? இல்லை, இல்லை.

வைகோ என்பவன் அவர்கள் எழுத்துகளுக்குத் தீண்டத்தகாதவன். நான் கவலைப்படவில்லை. ஆனால், வரும் நாட்களில் மராட்டியத்திலோ, மேற்கு வங்கத்திலோ, பஞ்சாபிலோ ஒரு ஊராட்சி அமைப்பு தன் அதிகாரத்தை, உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் தந்த வை.ரவிச்சந்திரன் -தமிழக அரசு வழக்குத் தீர்ப்பினைத்தானே மேற்கோள் காட்டும்.

அடுத்த கடிதத்தில் வை.ரவி தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு - தமிழக அரசின் முயற்சி அனைத்தையும் விரிவாக எழுதுகிறேன்.

நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையைச் சொல்ல வந்த நான், “மது ஒழிப்பு பிரச்சினையில் நாம் சாதித்த வெற்றியின் பக்கம் போய்விட்டேன்.”

சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கடமை ஆற்றுங்கள்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில் நீதியரசர்கள் மாண்புமிகு செல்வம் அவர்களும், கலையரசன் அவர்களும் தொலை நோக்குடன் தமிழகத்தைக் காக்க தீர்ப்பளித்ததோடு, அதனைச் செயல்படுத்த நீதிபதிகளே களம் இறங்கி விட்டனர்.

என் வழக்கில் பதில் சொல்ல வேண்டியவர்களாக 741 பேரை நான் சேர்த்து இருக்கின்றேன். உயர்நீதிமன்ற சரித்திரத்தில் இது ஒரு சாதனை. புகழ் வாய்ந்த மதுரை வழக்கறிஞர் திருமிகு அஜ்மல்கான் அவர்களும், வழக்கறிஞர் சுப்பாராஜ் அவர்களும் எனக்கு இவ்வழக்கில் துணை நின்றனர்.

தமிழ் நாட்டின் வருங்காலம் அபாயமாகத் தோன்றுகிறது. நமது நிலத்தடி நீரைப் பாதுகாத்து, மழை வெள்ளத்தை அணைகள், தடுப்பு அணைகள், ஏரிகள், குளங்களில் தேக்கினால் மட்டுமே நாம் தப்ப முடியும்.

சீமைக் கருவேலம் எனும் வேலிக்காத்தான், காற்றில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, 100 அடிக்குக் கீழ் வேர் பரப்பி நிலத்தடி நிரை மொத்தமாக உட்கொள்கிறது. இவற்றை அகற்றுவதைப் போர்க்கால நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, சில பேர்வழிகளின் துர்போதனைகளால் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு சீமைக் கருவேலம் ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக்கூடும் என்ற செய்தி என் செவிகளில் விழுந்ததால் முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்றத்தில் டில்லி வழக்கறிஞர் சகோதரர் திரு ஜெயந்த் முத்துராஜ் அவர்கள் மூலம் சிறையில் இருந்தவாறே கேவியட் மனு தாக்கல் செய்து இருக்கின்றேன்.

அது மட்டுமா? கொடைக்கானல் பகுதி மக்கள் என்னைச் சந்தித்து, ‘யூக்லிப்டஸ்மரங்கள் தங்கள் வாழ்வை அழிப்பதால், அவற்றை நீக்க நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதனால் முதல் கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு அதிகாரிகளுக்கு சிறையில் இருந்தவாறே கோரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பொதுநல உணர்வுடன் உங்கள் பகுதி விவசாயிகள், மாணவர்கள், நடுநிலையாளர்கள் அனைவரையும் திரட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலையில் ஈடுபடுங்கள். ஜே.சி.பி. இயந்திரம் கொண்டுதான் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற முடியும். அந்த வேலையைச் செய்யுங்கள். வருகிற 2017 மே 6 நமது இயக்கம் பிறந்து 23 ஆண்டுகளைக் கடந்து 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகுமானால்,

கொடி ஏற்றும் வேலை, புதுக் கொடிகள் அமைக்கும் வேலை, கிளைக்கழகம் இல்லாத ஊர்களில் கிளைக் கழகம் அமைத்தல், மாநகரங்கள், நகரங்கள், பேரூர்களில் வட்டங்களில் கிளைக் கழகம் இல்லாவிடில் அவற்றை அமைத்தல் ஆகிய ஆக்க வேலைகளில் ஈடுபடுங்கள்.”

இம்முறை என்னை ஏமாற்ற முடியாது. ‘மே 6’ என்ன செய்தீர்கள் என்பதை ஆதாரங்களுடன் மே 15 ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு (தாயகத்துக்கு) அனுப்பி வைக்க வேண்டும். கடந்த பொதுக்குழுவிற்கு வராதவர்கள் (நியாய மான காரணம் இல்லையேல்) இனி எந்தப் பொதுக்குழுவுக்கும் வர முடியாது.

2003 இல் வேலூர் மத்தியச் சிறையில் இருந்து இதுபோன்ற கடிதம் அனுப்பினேன். செயல்படாதவர்களை நான் நீக்க வில்லை. அடுத்த அமைப்புத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்கள். உங்களில் சிலர் சங்கொலி சந்தாதாரர்கள் ஆகவில்லை. அதுகுறித்துத் தனியாக எழுதுகிறேன்.

கடிதம் நீண்டுவிட்டது. அடுத்த வாரம் தொடர்கிறேன்.

சிறை நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல வழக்கறிஞர் நன்மாறன் இம் மடலை எழுதிக் கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

சங்கொலி, 21.04.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)