மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், விவசாயம், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, வறுமை, புறநகர், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (18.08.2010 புதன் கிழமை) காலை சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண். 1
பேரறிஞர் அண்ணா அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காஞ்சி மாநகரில் திறந்தவெளி மாநாடாகக் கொண்டாடுவதால், தமிழகம் முழுவதும் இருந்து கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண். 2
கழக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், கழகத்தின் நான்காவது அமைப்புத் தேர்தல்களை, வருகிற நவம்பர் மாதத்துக்கு உள்ளாக நடத்தி முடிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண். 3
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, நான்கு ஆண்டுக் காலமாக ஜனநாயக விரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. முதல் அமைச்சர் குடும்பத்தினரின் அதிகார மையங்கள் அன்றி, தமிழகத்தில் எவரும் பெருந்தொழில்களை நடத்திட இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. எந்தத் தொழிலையும், எவரும் அச்சம் இன்றிச் செய்திட முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றது. ஆற்று மணல், கிரானைட் கற்கள் போன்ற தமிழகத்தின் இயற்கை வளங்கள் அளவின்றிச் சுரண்டப்படுகின்றன. தமிழ்நாட்டின் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
அரிசி, காய்கறி, பருப்பு வகைகளின் கடுமையான விலைவாசி உயர்வு மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மைய அரசிலும் பதவி வகித்து வரும் தி.மு.க., பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் எரிவாயு விலை உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழலாலும், மின்சார உற்பத்தி குறைந்து, மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மின்வெட்டால் மக்கள் அல்லல்படுகிறார்கள்; தொழில்கள் முடங்கி உள்ளன. இந்த நிலையில், மின்கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது.
தமிழகத்தின் நதிநீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் தி.மு.க. அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர் இன்றி விவசாயிகள் வாடுகின்றனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை அன்றாட நிகழ்வாக ஆகி விட்டது. இதைத் தடுத்து நிறுத்திடவும், தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், மத்திய-மாநில அரசுகள் தவறி விட்டன.
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தயாராக இல்லாத தி.மு.க. அரசு, நாள்தோறும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது.
தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையால் கண்ணீர்க்கடலில் தமிழர்கள் தத்தளித்திடும் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால், மக்கள் வரிப்பணத்தைப் பாழாக்கி, முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளம்பர வெளிச்சம் தேடும் மாநாடாக நடத்தி முடித்து உள்ளனர்.
தமிழகத்தில் கருத்து உரிமைக்குப் பலத்த அச்சுறுத்தலைத் தி.மு.க. அரசு கட்டவிழ்த்து விட்டது. எதிர்க்கட்சிகளின் சொற்பொழிவாளர்கள் தாக்கப்படுகிறார்கள்; அவர்கள் மீது பொய்வழக்குப் போட்டுக் கைது செய்கிறார்கள். அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாற்றுக்கட்சியினரை ஒடுக்க முயன்று வருகிறார்கள். மேடையில் என்ன பேச வேண்டும் என்பதைக் காவல்துறையினர் வரையறுத்துக் கூறுகின்றனர். மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே, மேடை ஏறிக் கைது செய்யவும் முனைகின்றனர். நெருக்கடி நிலை காலத்தில்கூட இத்தகைய கொடுமைகள் நடைபெறவில்லை.
எனவே, மக்கள் விரோத, பாசிச தி.மு.க. அரசை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்திட, மக்கள் சக்தியை திரட்டும் களப்பணியில் முனைப்பாக கழகம் ஈடுபடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
‘தாயகம்’
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
சென்னை-8.
18.08.2010

