பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது தாக்குதல்; உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் போக்கு! வைகோ கடும் கண்டனம்!

விவகாரங்கள்: சட்ட ஒழுங்கு, இலக்கியம்

மாவட்டம்: திருநெல்வேலி - மாநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Tue, 10/08/2010

பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது தாக்குதல்; உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது பழிவாங்கும் போக்கு!
வைகோ கடும் கண்டனம்!

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளியப்பன் அவர்களை, ஆளுங்கட்சியின் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, கடந்த 7 ஆம் தேதியன்று அடித்துத் தாக்கிய சம்பவம், ஆளுங்கட்சியினர் நடத்தி வருகின்ற அராஜக வெறியாட்டத்தின் பிரதிபலிப்பு ஆகும்.


அப்பல்கலைக்கழகத்தில் துணை முதல்வர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில், தனக்குத் தனி மரியாதை செய்யவில்லை என்று, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், துணைவேந்தர் அறைக்குள் சில குண்டர்களுடன் சென்று, அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளைச் சொல்லி, துணைவேந்தரைத் தாறுமாறாக ஏசியதோடு, அவரது தலையிலும், கன்னத்திலும் அடித்து இருக்கிறார்.


தடுக்க முயன்ற உடல்கல்வி இயக்குநர் தேவதாஸ் அவர்களையும், சட்டமன்ற உறுப்பினருடன் சென்ற குண்டர்கள், கடுமையாக அடித்து உள்ளனர். அடிபட்ட அதிர்ச்சியில் உறைந்துபோன துணை முதல்வர், தான் அடிபட்ட சம்பவத்தை வெளிக்காட்டாமல் செயல்பட்டு இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள், நடந்ததை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து, சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதை வெளிப்படுத்தி விட்டனர்.


ஆனால், இந்தச் சம்பவத்தை அறிந்த துணை முதல்வரும், உயர்கல்வித்துறை அமைச்சரும், பிரச்சினையை மூடி மறைத்து விட முயன்று, துணைவேந்தருக்கு நிர்பந்தத்தையும், அழுத்தத்தையும் தந்து உள்ளனர். இதன் காரணமாகவே, துணைவேந்தர் புகார் கொடுக்கவில்லை.


மதித்துப் போற்ற வேண்டிய ஒரு கல்வியாளரை, துணைவேந்தரை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர், சகிக்க இயலாத வார்த்தைகளால் வசைபாடித் தாக்கிய சம்பவம், கல்வித்துறை வரலாற்றிலேயே இதுவரை ஏற்படாத ஒரு களங்கம் ஆகும்.


சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அரசை நடத்துகின்ற ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே, பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தாக்கியதால், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நியாயமான வேதனையும் தலித் சமூக மக்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டு உள்ளது.


சட்டமன்ற உறுப்பினரின் தரக்குறைவான இந்தச் செயலுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


தி.மு.க. மாவட்டச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இன்றைய முதல் அமைச்சருடைய மகன் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டபோது, அந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகள் ஆக்கப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்கில், மேல் முறையீடு செய்ய வேண்டிய கடமையை அரசு செய்யவில்லை.


மதுரையில் தினகரன் செய்தித்தாள் அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது, அங்கு பணிபுரிந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட அனைவரும் பிறழ் சாட்சிகள் ஆக்கப்பட்டு, வழக்கு தள்ளுபடி ஆனது. அதிலும் அரசு மேல் முறையீடு செய்யவில்லை.


எனவே, ஆளுங்கட்சியினர் பட்டப்பகலில் கொலை செய்தாலும், அவர்களைச் சட்டத்தின் கரங்கள் நெருங்காதவாறு, நீதியின் குரல் வளையையே நெரிக்கலாம் என்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விட்டதால், துணைவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்தைப் போன்ற வன்முறை நிகழ்வுகள், சர்வசாதாரணமாக நடக்கின்றன.


அரசாங்கத்தின் ஊழல்களுக்கும், தவறுகளுக்கும் உடன்படாமல், அவற்றை எதிர்த்து, நேர்மையாகச் செயல்பட்ட ஒரே காரணத்துக்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், தி.மு.க. அரசால் பழிவாங்கப்பட்டு உள்ளார். பொய்யான குற்றச்சாட்டில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். நேர்மையான அந்த அதிகாரி மீது, சொத்துக்குவிப்பு வழக்கு என்ற ஒரு பொய் வழக்கையும் அரசு போட்டு உள்ளது.


ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் இருந்து, தன் அறிவாற்றலாலும், உழைப்பாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாகத் தேர்வு பெற்று, நேர்மையாகப் பணிபுரிந்த உமாசங்கர் மீது, தி.மு.க. அரசு மேற்கொண்டு உள்ள, பழிவாங்குகின்ற, மிரட்டுகின்ற நடவடிக்கைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.


அவரது பணி இடைநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்து, பொய்யாக அவர் மீது புனையப்பட்டு உள்ள வழக்கையும் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)