500 ஆண்டுகள் ஆனாலும் அழியாது... கல்பாக்கத்தில் இருந்து அதிர்ச்சி குண்டு!
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், சுற்றுச்சூழல், மருத்துவம், மனித உரிமை, சர்வதேசம், தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்
Date:
Sun, 14/08/2011 500 ஆண்டுகள் ஆனாலும் அழியாது...
கல்பாக்கத்தில் இருந்து அதிர்ச்சி குண்டு!
அணு குண்டு வீசப்பட்டதால் கடும் பாதிப்பு அடைந்த ஜப்பான், அணுக் கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புக்கும் உலகத்துக்கே உதாரணமாகி இருக்கிறது. இந்தச் சூழலில் கல்பாக்கம் அணு மின் நிலையம் உண்டாக்கப் போகும் பாதிப்பு பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஒரு குழு, களம் இறங்கி இருக்கிறது. 'கல்பாக்கம்... ஒரு கொல்பாக்கம்’ என்று ஆவேசமாகப் போராட்டத்தில் இறங்கி இருக்கும் அந்த அமைப்பின் பெயர் 'அணுக்கதிர் வீச்சு பாதுகாப்பு மக்கள் இயக்கம்’.
இந்த அமைப்பில் ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் ஆகியவை கைகோத்து உள்ளன. கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார். ஜப்பானின் நாகசாகி நகரில் அணு குண்டு வீசப்பட்ட நாளான ஆகஸ்ட் 9-ம் தேதி, அணுக் கதிர் வீச்சுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கியது, இந்த அமைப்பு. கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தி, அணுக் கதிர் வீச்சு பாதிப்பு குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்தனர். புதுப் பட்டினம் பஸ் ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சி மூலமும் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொன்னது, விடுதலை நடவு இயக்கம்.

இது குறித்து, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசினோம். ''சமீபத்தில் ஜப்பான் நாட்டில் சுனாமி ஏற்பட்ட போது, அங்கு இருந்த அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அணு உலைகளால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும், இந்தியாவில் புதிதாக அணு மின் நிலையங்களை அமைத்து வருகிறது இந்திய அரசு. அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு உணர்ந்து இருந்தும் மரண வியாபாரத்துக்கு இந்தியா தயாராகிறது என்பதுதான் வேதனை. இதற்காக, மக்கள் வரிப் பணத்தில் இருந்து பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கிறது. 40 ஆண்டு அணு உலைக் கழிவுகளை 500 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. அணுக் கழிவுகளை கல்பாக்கத்தில் பாதுகாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய அணு உலைகளை கட்டக்கூடாது. அமெரிக்காவில் அணு உலைகள் விபத்து ஏற்பட்டதால் உண்டான பாதிப்புகளை உணர்ந்தும், இந்தியா படிப்பினை பெறவில்லை. கல்பாக்கம் அணு மின் நிலையத்தால், அதன் அருகில் உள்ள தொன்மை நகரமான மாமல்லபுரத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.

காற்று, தண்ணீர், இயற்கை அம்சங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு இருக்கும்போது, மத்திய அரசு விஷப் பரீட்சை நடத்திக் கொண்டு இருக்கிறது. அணு உலைகளால் ஏற்படும் கதிர்வீச்சு சுற்று வட்டாரப் பகுதிகளை தாக்கினால் அந்த மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவது இல்லை. குறைந்த பட்சம் அந்த மக்களுக்கு காப்பீடு செய்யவாவது அரசு முன்வர வேண்டும்...'' என்றார்.
மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, ''தொழில் நுட்பத்தில் முன்னோடி நாடாக இருக்கும் ஜப்பானில் கூட அணு உலை பாதிப்புகளை சரி செய்ய முடிய வில்லை. அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பாது காப்பு ஏற்பாடுகள் செய்வது சந்தேகம்தான் என்று ஜப்பான் பிரதமரே சொல்லி இருக்கிறார். பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்பதை நன்கு உணர்ந்தும் புதிது புதிதாக யூனிட்டுகளைத் தொடங்கி வருகிறார்கள். ஒரு அணு மின் நிலையத்தின் ஆயுட்காலமே 35 ஆண்டுகள்தான். அதையும் தாண்டி அணு மின்நிலையங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ஆயுட்காலத்தை தாண்டி இயங்கிக் கொண்டு இருக்கும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தை உடனே மூட வேண்டும். புதிய அணு உலைகளை திறக்கக் கூடாது!'' என்றார் ஆவேசமாக.
கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி, ''அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கிறது என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியுமா? கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ள பகுதி, பூகம் பத்தின் ரிக்டர் அளவில் 6-க்கு மேல் தாண்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது. ரிக்டர் அளவு 8- என்றால் பெரும் ஆபத்து ஏற்படும். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்பாக்கத்தில் மேலும் மேலும் அணு உலைகளைக் கட்டி வருகிறார்கள். கதிர்வீச்சால் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பின் அளவை ஒவ்வோர் ஆண்டும் அளவு மானியை வைத்துக் கணக்கிட வேண்டும். அணு மின் நிலையங்களைப் பார்வையிட சுயேச்சை அமைப்புக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்!'' என்கிறார்.
மத்திய அரசின் தூக்கத்தை, இவர்களின் குரலாவது தட்டி எழுப்பட்டும்!
- பரக்கத்அலி
நன்றி ஜூனியர் விகடன்

